(கவிதைத்
தொகுப்பு நூல்)
எழுதியவர்:
“வள்ளல் நேசன்” திருவெண்காடு
டாக்டர்
ஜெய.ராஜமூர்த்தி., M.B.,B.S.,D.C.H.,
இந்நூல் பூம்புகார்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
நாள் : 15.04.2000
இடம்: திருவெண்காடு
நூலை வெளியிட்டவர்:
"ஞானபாரதி"
திரு. வலம்புரிஜான் M.A.,B.L., அவர்கள்
முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவர்
முன்னனி திரைப்பட நடிகர்
திரு.நெப்போலியன் அவர்கள்
********
இந்நூல் பூம்புகார்த் தமிழ்ச்சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டது.
நாள் : 15.04.2000
இடம்: திருவெண்காடு
நூலை வெளியிட்டவர்:
"ஞானபாரதி"
திரு. வலம்புரிஜான் M.A.,B.L., அவர்கள்
முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டவர்
முன்னனி திரைப்பட நடிகர்
திரு.நெப்போலியன் அவர்கள்
********
இந்த மொட்டு மலரும் முன்பே உதிர்ந்தவளே!
முட்டை உடைத்து வெளிவந்த இந்த
சிட்டுக்குச் சிறகு முளைக்கும் முன்பே –
நீ
சிறகடித்துச் சீக்கிரம் சாவூர் சென்றது ஏன்?
அன்று..
உனக்குள் நான்…
இன்று ..
எனக்குள் நீ
ஆமாம்..
நஞ்சுக் கொடியும் தொப்புள் கொடியும்
நம்மை விட்டுப் பிரிந்தாலும் என்
நெஞ்சுக்குள் இருக்கும் இதயக்குடிலுக்குள்
என்றும் இருப்பாய்! என்னுள் சிரிப்பாய்!
என்னை அடிவயிற்றில் காத்து வைத்து
மண்ணில் மனிதனாக விட்டவளெ!
உன்னை நினைத்தே பெருமூச்சு விடுகின்றேன்!
விழுந்து வணங்க விழைகின்றேன்! ஒரே ஒரு முறை
எழுந்து வருவாயா… என் தாயே!
அணிந்துரை
மு.கருணாநிதி
முதலமைச்சர்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்,
செயின்ட் சார்சுக் கோட்டை,
சென்னை - 600 009
நாள் : 31.01.2000
முதலமைச்சர்
தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்,
செயின்ட் சார்சுக் கோட்டை,
சென்னை - 600 009
நாள் : 31.01.2000
திருவெண்காட்டைச்
சேர்ந்த குழந்தை நல மருத்துவர் திரு.செ.இராசமூர்த்தி அவர்கள் ஓர் அருமையான கவிதைத்
தொகுப்பினைத் தமிழுலகுக்கு அளித்துள்ளார்.
பல்வேறு
அரங்குகளில் அவர் பாடிய கவிதைகளும், நிகழ்வுகள் பலவற்றில் அவர் மூழ்கிப் புனைந்த பாடல்களும்
இணைந்து இந்த நூலை அழகு செய்கின்றன. இவர் மனிதர்களுக்கு மருத்துவம் செய்கின்றார். சமுதாயத்தில்
நிலவும் சில நோய்களுக்கும் மருத்துவம் செய்திட இவர் முனைந்ததன் விளைவாய் முகிழ்ந்துள்ளன
– கவிதைகள் பல. சுவைத்துப் பார்த்தால், அவை நம்மை சொக்க வைக்கின்றன! உணவுக்கு உப்பென,
உங்கள் உணர்வைத் தொட இவரின் வரிகளில் ஒன்றிரண்டு இதோ!
புரட்சிக்கவிஞன்
பாடல்கள் ஒவ்வொன்றும் தமிழ்ச் சமுதாயத்திற்குப் புத்துயிர் ஊட்டியவை அல்லவா! அதைச்
சுட்டிக் கூறும் இக்கவிஞர்,
“பாவேந்தனுக்கு
ஒரு கேள்வி..
உயிர்
எழுத்துகள் பன்னிரண்டு தானே
நீ
… எழுதிய எழுத்துகள் அனைத்தும்
உயிர்
எழுத்தாய் ஆனது எப்படி?
எனக்
கேட்கிறார் இப்படி!
“முடங்கி
கிடந்த மனித
மூளையின்
செல்களை
முற்போக்கு
கருத்துகளால்
முடுக்கி
விட்டவர்”
என
தந்தை பெரியார் அவர்களை வார்தைகளால் சரியாக வடிக்கும் கவிஞர்.
“நீ
அறிவின் தேக்கம்
உன்னால்
தமிழனுக்கோ ஊக்கம்
தமிழுக்கோ
ஆக்கம்”
என
பேரறிஞர் அண்ணா அவர்களை அருந்தமிழ் அருவியாக்கி, அதில் நம்மை குளிப்பாட்டுகிறார்.
உள்ளம்
கவரும் கவிதைகள் தரும் “வள்ளல் நேசன்” கவித்திறன் வளர இவர் புவிப்புகழ் குவிக்க என்
நல்வாழ்த்துகள் உரித்தாகுக.
அன்புள்ள
(மு.கருணாநிதி)
*************************
என் தமிழ்
ஆசான் இராமானுசம்…
தமிழ் என்ற சொத்தைத்
தவிர
வேறுஒரு சொத்தும்
சேர்க்காதவர்!
அச்சொத்தைக்கொண்டே
அதிலே
வித்தைகள் பல செய்த
வித்தகர்!
பேனாவுக்கு தூவல்
என்றே தூய தமிழில்
பெயர் சொல்லி நல்ல
தமிழை காவல் செய்த காவலர்!
திருவெண்காட்டில்
தமிழ் வளர்க்க
தமிழ்த்தாயே அனுப்பி
வைத்த
தலைப்பிள்ளை!
நறுக்காக கவிஎழுதும்
ஆற்றல் கொண்ட
முறுக்கான மீசைக்கவி!
என் உதிரத்தில்
தமிழுணர்வை உலாவவிட்ட
இராமானுசம் என்னும்
இன்பத்தமிழ்ப் பாவலரை
இதயத்தால் வணங்குகின்றேன்!
பள்ளி நாட்களிலேயே
என் சிந்தனையைச்
செதுக்க சிரத்தை
எடுத்துக்கொண்டவர்:
கல்லூரி நாட்களிலும்
என் கவிதை உணர்வுக்கு
கால்கோலிய கண்ணியம்
மிக்க ஆசான்:
வானத்தில் வட்ட
நிலவாய் ஜொலிக்க வேண்டியவர்
வீட்டில் முடங்கிய
தங்கத்தட்டாய் ஆகிவிட்டார்!
ஆகாயத்தில் ஒளிவிடவேண்டிய
துருவ நட்சத்திரம்
அடியில் புதைக்கப்பட்ட
வைரமாகிவிட்டது!
அந்த வைரத்தை இராமானுசம்
என்னும்
கவியின் வேந்தனை
கண்ணில் தெரிந்த கம்பனைக்
கரம் கூப்பி வணங்குகின்றேன்!
*******************
இன்று மலர்ந்து
கொண்டிருக்கும்
முற்றிலும் நாளை
மலரப்போகும்
முழுமையான சமத்துவ
நூற்றாண்டிற்கு
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயேப்
படிக்கட்டுகள்
கட்டிய
பாட்டின் வேந்தன்
ராமலிங்கரைப்
பணிந்து வணங்குகின்றேன்!
எங்கள் உடலில்
ஓடிக்கொண்டிருக்கும் உதிரமே!
எங்கள் உணர்வில்
ஆடிக்கொண்டிருக்கும் உயிரே!
உலகைக் குலுக்கும்
உஅர் மொழியே!
எனக்குள் இருக்கும்
என் விழியே!
உன்னை வணங்குகின்றேன்!
வார்தைகளில் வண்ணத்
தோரணங்கள் கட்டி
வரும் நூற்றாண்டை
வரவேற்கும் யுகம் பாடிகளே!
காணும் இடம் எல்லாம்
பேணும் தமிழால்
புவி மணக்கக்
கவிபாடப்போகும்
புதிய யுகத்தின்
வார்த்தைச் சிற்ப்பிகளே!
உங்கள் உள்ளத்தில்
உதிக்கின்ற சொல்
உளிகள்
புதிய மானுடத்தின்
மொத்தக் கூட்டத்தையும்
புனித உருவங்களாகச்
செதுக்கட்டும்!
உங்கள் தூவல் முனைகளிலிருந்து
உருவாகும் எழுத்துக்
குண்டுகள்
உலாவரும் மதப்பேய்களை
சுட்டு வீழ்த்தட்டும்..!
பகலை இரவென்று
நம்பி
ஆம்பல் பொதி அவிழ்க்கும்
புகாராம் இவ்வூருக்கு
பணம் தேடி அலையும்
சுயநலம்விட்டு
சுகம் தேடி அலையும்
சோம்பலையும் விட்டு
யுகம் பாடி பறந்து
வந்திருக்கும்
புதிய பூபாலத்தின்
உயிர்க் ‘சுரங்களே’
கவிபாடும் கவிஞர்
கூட்டமே!
வார்த்தை ஜாலங்களால்
வருங்கால வரலாற்றை
மாற்றி எழுத வாருங்கள்!
வரவேற்கின்றேன்!
வணங்குகின்றேன்!
வகை வகையாய் உணவோடு
வாய்க்கு ருசியாக
வடை, கூட்டு, பொறியல்
என்று
சாப்பாட்டு மேசையில்
சாப்பிடும்
சரிந்த தொந்திக்காரர்களுக்கு
சாப்பிடுதற்குப்
பசி இல்லை!
பசி இருந்தும்
பஞ்சைகளுக்குப்
பருக்கை இல்லை!
என்ன நூற்றாண்டு…
சென்ற நூற்றாண்டு!
கறைகள் பல படிந்த
கடந்த நூற்றாண்டு!
இதோ இந்த நூற்றாண்டு
எதிர்வரும் இன்ப
நூற்றாண்டு
எதிரி என்பவரே
எவருக்கும் இல்லாத
இனிய இருபத்தி
ஓராம் நூற்றாண்டு…
வறுமைக் கோடு என்பது
வரலாற்றின் பக்கங்களிலிருந்து
நிரந்தரமாக அழியப்போகும்
…
எல்லைக் கோடு என்பது
எதுவும் இன்றி
எல்லோரும் நம்
இனம்
என்று இன்புறப்போகும்..
ஆனந்தக் கண்ணீரைத்தவிர
எந்தக் கண்ணீரும்
இல்லாத
களிப்பு நூற்றாண்டு…
கண நேரத்தில்
கடல்நீரை குடிநீராக்கப்போகும்
கணினி நூற்றாண்டு….
பஞ்சம், பட்டினி
போர் வறட்சி இவைகளைக்
காலதேவன் கபளீகரம்
செய்து
காணாமல் போகச்
செய்யும்
கனிவான நூற்றாண்டு
எதிர்வரும் நூற்றாண்டில்
இமய மலையில் எழும்
இந்தியச் சாரல்
இங்கிலாந்தின்
தேம்ஸ் நதித்தென்றலுடன்
கைகுலுக்கும்….
காற்றுக்கூட எப்போதும்
தென்றலுக்காகவே
புன்னகைக்கும் அன்றிப்
புயலாகப் பொங்கி
எழாது!
இதயத்தின் இரண்டு
ஆரிக்கிள்
இரண்டு வெண்ட்ரிக்கிள்
இடையே சுவர் இருக்கும்
இரண்டு இதயங்களுக்கு
இடையே சுவர் இருக்காது
இதயங்கள் எத்தனை
இருந்தாலும்
துடிப்பு ஒன்றாகவே
இருக்கும்…
பணம் என்பது
பகிர்ந்தளிக்கப்படும்
பொருளாகப்
பரிணமிக்கும் அன்றி
பணவெறி இருக்காது!
மக்கள் தொகையைக்
கட்டுப்படுத்தும்
கடமையைப் போல்
பெருகியுள்ள
கடவுள் தொகையையும்
கட்டுப்படுத்தி
‘ஒருவனே தேவன்’
என ஒலிக்கும்
நூற்றாண்டாய் இருக்கும்…
இராமேஸ்வரம் சென்று
இராமர் பாதம் என்று
சொல்லி
கைத்தட்டும் கூட்டம்
எல்லாம்
அப்படியே கன்னியாகுமரியின்
அழகு கரையோரம்
கவிச்சக்கரவர்த்தி
வள்ளுவரைக் கண்டு
வணங்கி வரும்.
இதோ இந்த நூற்றாண்டு….
….
கொசுக்கள் கூட
இரத்தம் வெறுத்துப்போகும்…
பசுவதையைக் கண்டித்து
பாம்புகள் நியாயம்
கேட்கப் போகும் நூற்றாண்டு!!
அய்யன் வள்ளுவரின்
திருக்குறளை
ஐ.நா.சபை அனுதினமும்
உச்சரிக்கப்போகும்
அறிவியல் தெளிந்த
நூற்றாண்டு!
வாட்டிகன் போப்பும்
வடலூர் வந்து வள்ளலாரின்
பெருமையை
வாயாரப்பேசப்போகும்
நூற்றாண்டு..
மூடநம்பிக்கைகளை
தமிழச்சிகள் ஒன்று கூடிப்
பாடையில் ஏற்றப்போகும்
நூற்றாண்டு!
ஆச்சாரியார்கள்,
மதகுருமார்கள், பாதிரியார்கள்
வேறு வேலை தேடி
அலையப்போகும் நூற்றாண்டு!
அசம்பாவிதக் குண்டுகள்
வெடிக்காத
அமைதியான காஷ்மீரத்தின்
அழகுப்பணி முகடுகளில்
தமிழ்க்குயில்கள்
ரீங்காரமிடும்…
காவிரிப் பிரச்சனையிலும்
தட்டுப்பாடு இன்றித்
தண்ணீர் வரும்
தஞ்சை தமிழனுக்குக்
கண்ணீர் வராது….
இலங்கை பிரச்சனை
கூட
இலகுவான பிரச்சனை
ஆகி
இறுதி முடிவு ஏற்படும்.
குண்டுகள் வெடித்துக்கொண்டிருக்கும்
கோரமான கொழும்பு
நகரில்
சிங்களப் பெண்டிரும்
செந்தமிழ் பெண்டிரும்
கைகோர்த்து மகிழ்ந்து
செல்வர்…
கய்கறிகள் நறுக்கக்
கூட
கத்திகள் தேவைப்படாது.
குத்துவதற்கு குண்டூசிகள்
கூடத் தயங்கும்…
சென்ற நூற்றாண்டின்
கருப்புப் புள்ளிகளை
இந்த நூற்றாண்டில்
காண முடியாது!
செந்நீராம் இரத்தம்
சிவப்பானது என்பதை
இரத்த தானத்தின்
போது மட்டும்
தெரிந்து கொள்வார்கள்.
இரத்தம் ஒரு ‘அதியசப்
பொருள்’ ஆகும்.
உடம்புக்கு உள்ளே
மட்டும்
அது ஓடிக்கொண்டிருக்கும்…
மொழி உலகில் தமிழுக்கே
முதல் மரியாதை
கிடைக்கும்.
எதிர்வரும் நூற்றாண்டில்
எய்ட்ஸுக்கும்
மருந்து வரும்
எமனுக்கே சாவு
வரும்
(எமன் என்பவரை
பற்றி யாரும் பேச மாட்டார்கள்)
இந்துக்கள் என்போர்
எல்லாம்
உணவினால் மட்டும்
“சைவர்” ஆவார்.
சமத்துவத்தாலும்,
அமைதியாலும்
அனைவரும் “இஸ்லாம்”
என்பார்.
அன்பால் அரவணைப்பால்
அனைவரும் “கிருஸ்தவர்”
என்பார்.
பொய்யை மறுப்பதால்
அனைவரும் “புத்தம்”
என்பார்.
மனித நேயம் மலரப்போவதால்
எல்லோரும்
மனிதர் என்பார்.
இதோ இந்த நூற்றாண்டு
கோடை விடுமுறைக்குக்
குளிர்நிலவுக்குப்
பயணம் செய்யப்போகும் நூற்றாண்டு!
இமைப்பொழுதில்
எவரும்
இந்தியாவையே கடக்கப்போகும்
எந்திர நூற்றாண்டு!
இந்த நூற்றாண்டில்
பாகிஸ்தானும்
பரந்த மனத்தோடு
“பைபிள்”
படிக்கட்டும்.
இன்றைய அக்ரஹாரங்கள்
அழகு தெருக்கள்
ஆகி
அனைத்து வீடுகளிலும்
“குர் ஆர்” ஒலிக்கும்.
அனாதை இல்லங்கள்
இருந்தாலும்
ஆள் இன்றி வெறிச்சோடிக்
கிடக்கும்
துண்டு போடாத அரசியல்
வாதிகளால்
துண்டு விழாத பட்ஜெட்டுகள்
காணப்போகும் நூற்றாண்டு.
சந்தனக் கடத்தல்
வீரப்பன்களும்
சன்மார்க்கி ஆகப்போகும்…
ஆட்டோ சங்கர்கள்
எல்லாம்
அருட்பாவை படித்து
அதன்வழி நடக்கப்போகும்
ஆன்மீக நூற்றாண்டு.
எதிர்வரும் நூற்றாண்டில்
கற்பழிப்பு இல்லை,
கண்ணீர் இல்லை
கள்ளச்சாராயம்
இல்லை! கையூட்டும் இல்லை!
களவு மற்றும் கொலையும்
இல்லை! அதனால்
காவல் நிலையமும்
இல்லை..
சச்சரவு அற்ற
சலனம் அற்ற
சஞ்சலம் அற்ற
சந்தோஷ உறக்கத்தில்
நம்
சந்ததியினர் சஞ்சரிக்கப்
போகும்
சாந்தம்மிகு நூற்றாண்டு…
இதோ இந்த நூற்றாண்டு
சாத்வீகம் நிறைந்து
சமரசம் காணப்போகும்
சன்மார்க்க நூற்றாண்டு…
ஏ! மானிடக்கூட்டமே…
ஒரு வேண்டுகோள்
மதத்துண்டை எடுத்துத்
தோளில்போடும் முன்பு
உன்னை ஒருமுறை
நீயே கேட்டுள்கொள்..
நீ.. மனிதன் தானா?
*******************************
அன்பைப் பெருக்கு!
ஆணவத்தை அழி!
இறைவன் நீயே!
ஈவதில் இன்பம்
காண்!
உயிர் குலம் காக்க!
ஊன் தவிர்த்து
உண்ணு!
எளிமையைப் பேணு!
ஏழையை ஏந்து!
ஐயம் அறு!
ஒருவனே தேவன்!
ஒயாமல் ஒது!
ஔவையைப் பாடு!
ஆயுதம்(ஃ) தேவையில்லை!
***************************************
***************************************
விழித்துப்பார்
கால் கடுக்கக்
காசிக்குப் போய் ஆவதென்ன?
காண்போரைக் கவரக்
காவியுடை உடுத்துவதென்ன?
கை வருந்தக் கமண்டலம்
தூக்கி ஆவதென்ன?
மெய்வருத்தக் கடுந்தவம்
காட்டில் புரிந்ததென்ன?
சாத்திரங்கள் ஆயிரம்
ஆயிரம் சாற்றி என்ன?
உத்திராட்சங்கள்
உடம்பின் மேல் அணிந்தென்ன?
மண்ணுலகில் அறவோனாய்
வாழ்வோனே
விண்ணுறையும் தெய்வமென்றால்
ஐயமில்லை!
புலனடக்கம் காக்கின்ற
புண்ணியனே
புத்தர் நிகர்
புகழ்மிக்க தெய்வமாவான்!
ஆசைக்கு வேலியிடு
– போலிச்சாமியாரின்
புகலிடம் தேவையில்லை.
முப்பாலை முழுமையாக
படிக்காமல்
தப்பான வழிதேடி
அலைகின்றாய்!
முழுக்கரும்பை
விழுங்க நினைப்பவன் மூடன்!
சாற்றைப் பருகி
சக்கையை துப்புபவன் சரியான புத்திசாலி!
புராண,இதிகாசங்களின்
பொய்யையும் புரட்டையும்
துப்பிவிட்டு தத்துவத்தை
மட்டும் தனியாக எடுத்துக்கொள்.
தெய்வங்கள் தெய்வங்களாக
இருப்பதில் என்ன வியப்பு!
மனிதனும் தெய்வம்
ஆவதே அதிசயப்பிறப்பு!
காலையில் ஊர்கோயில்
சமபந்தி உணவு
மாலையில் தெருக்கோடியில்
சாதிசங்கம் துவக்கம்!
நெஞ்ச மைதானத்தை
சமப்படுத்தி
கொஞ்சம் சிந்தனையுடன்
விளையாடு – செருக்கறு!
மார்கழியின் காலைகளில்
மாறாத அதே பஜனைகள்
மாறுதலாக பாரதியின்
பாட்டுகளைப் பாடவிடு
அருட்பாவின் ஆறாம்
திருமுறையை
ஆழ்ந்து படி! ஆண்டவர்
தெரிவார்!
தமிழன்னையே உன்
தாய்ப்பாலில் இனி
திருக்குறளையும்
கலந்து ஊட்டு
தமிழக அரசே!
பள்ளிகள் தோறும்
ஒரு பாவேந்தனை ஆசிரியனாக்கு!
ஏழைக்குழந்தைகள்
ஒரு குவளை பாலுக்கு ஏங்க
நட்ட கல்லுக்கு
நாற்பது லிட்டரில் அபிஷேகம் ஏன்?
ஏழைப் பெண்ணின்
தாலியிலே தங்கம் இல்லை
தானே உடுத்தாத
உருவத்துக்கு தங்கக்கவசம் ஏன்?
தானே வெளிவராத
கற்சிலைக்கு வெள்ளியில் வாகனம் ஏன்?
தனக்கென வாழும்
ஆத்திகனும் நாத்திகனே!
ஊருக்கு வாழும்
நாத்திகனும் ஆத்திகனே!
தான் மட்டும் வாழ
தங்கத்தேர் இழுப்பவனா இறைபக்தன்
ஊரார் வாழ உண்ணா
நோம்பு இருப்பவனே இறைபக்தன்!
ஆயிரம் கண்ணுடையாள்
ஒரு கண்ணைக்
குருடனுக்குக்
கொடுப்பாளா?
குருடனுக்கு விழிதருவது
மனிதநேயம் கொண்ட மனிதன் தானே!
இன்னும்…
மாரி கோயிலிலே
தீயை மிதித்துக் கொண்டிருந்தால்
சேரியும் எரியும்
தீண்டாமைத் தீயை யார் மிதிப்பது?
இருகுவளை முறை
இன்னும் இருப்பதைக் கேட்டால்
இதயம் உனக்கு வெடிக்கவில்லையா?
அன்பே உருவான அருட்பெரும்சோதியை
அணைத்து விட்டு
ஆயிரத்து எட்டு
எண்ணெய் விளக்கேற்றி என்னபயன்?
உலகம் என்ற வயலில்
ஆன்மநேய வித்திடு!
கலகம் என்ற களையை
வேரொடு பிடுங்கி எறி!
சமத்துவத்தையும்
சகோதரத்துவத்தையும் அறுவடை செய்!
பிறப்பும் இறப்பும்
மனிதனுக்கு இயற்கை!
இன்பமும் துன்பமும்
வாழ்க்கையில் இயற்கை!
இறப்பைக் கண்டு
அழுவதும் துன்பம் கண்டு துவளுவதும்
எந்த வகையிலும்
நியாயம் இல்லை! எதிர்நீச்சல்போடு!
பாதகர்களை அழிக்க
பத்து முறை
எடுத்தாராம் அவதாரம்
அன்று திருமால்!
இன்று…
தெருதோறும் கள்ளச்
சாராயம்
கடைதோறும் சுரண்டல்
லாட்டரிகள்
ஊர்தோறும் மதக்கலவரங்கள்
பாழான மனித உயிர்கள்
பல்லாயிரம்!
மீண்டும் ஒருமுறை
எடுப்பாரா? அவதாரம் திருமால்!
கண்டம் விட்டு
கண்டம்தாவும் ஏவுகணை வந்த பின்பு
காண்டீபத்துக்கு
என்ன வேலை!
மகா பாதகங்கள்
மலிந்த நாளில்
மகாபாரதக்கதை ஒத்து
வருமா?
ஒருத்திக்கு ஐந்து
கணவன் என்றால்
எய்ட்ஸ் ஒட்டிக்
கொள்ளாதா?
எய்ட்ஸ் ஒட்டிக்
கொள்ளாதா?
தமிழா…
உன் அறிவுப்பாதையில்
நல்ல முன்னேற்றம்!
முற்காலத்தமிழன்
கற்புக்கரசி கண்ணகிக்கு சிலை வடித்தான்
தற்காலத்தமிழன்
தரம்கெட்ட நடிகைக்கு கோயிலே கட்டுகின்றான்.
உண்பதற்கு மட்டும்
வாழ்நாளில் ஒரு நாளைக்கு
மூன்று முறை கைகழுவும்
நீ
மூளையை ஒரு தடவை
கழுவினாய் இல்லை!
எண்ணத்தை வெளுக்காமல்
உடையை மட்டும்
சலவை செய்கின்றாய்!
சுட்டகறியில் சுவையை
நாடும் – நீ
பட்டறிவை பயன்படுத்து
உள்ளத்தை பண்படுத்து
மதியை மறந்து விதியை
ஜோதிடனிடம் நிர்ணயம் செய்கின்றாய்
சதிகாரன் அவனோ
தனரேகை, பணரேகை காட்டுவான்!
நீயோ குணரேகை எங்கே
என்று கேட்க மறந்தாய்!
கூன் விழுந்த தமிழா….
உன் கனவில் நடிகைகள்
வந்தது போதும்!
இனியாவது பாரதியை,
பாவேந்தனை எண்ணு!
மீசையை கூட மேல்
நோக்கி மட்டும் முறுக்கு!
வாதத்துக்காக தமிழை
பயன்படுத்தும்
வழக்கத்தை விட்டுவிட்டு
ஜாதிமத
பேதத்தை ஒழிக்கவும்
பயன்படுத்து!
அறிவை கூர் செய்!
அமைதியை நாடு!
உன்னையே நீ பார்!
உலகம் உன்னிடம்!
இப்பரந்த வெளியில்
பயம் எவனிடம்!
கதர் ஆடை காந்தியை
மறந்தாய்!
மதர் தெரஸாவையும்
மறந்தாய்!
பதரான நடிகைக்கு
ஏன் ரசிகன் ஆனாய்?
இனியேனும் விழித்துக்கொள்…
வெளிச்சத்துக்கு
வா! விடியலைத் தேடு!
மொத்தத்தில் ஆத்திகமும்
நாத்திகமும் தேவையில்லை
மனித நேயம் கொண்ட
மனிதனே தேவை.
*************************************
*************************************
தத்தி தத்தி நடக்கையில்
தளிர் குழவி தடம்
மாறுகிறது
தாவி ஓடும் போது
தடகள வீரனும்
தடம் மாறுகிறான்!
தண்டவாளம் விட்டுப்
புகைவண்டியும் தடம் மாறுகின்றது.
தத்துவம் உதிர்க்கும்
ஞானிகளும்
தவறான பாதைக்குச்
சிலநேரம்
தடம் புரளுகின்றார்..
ஏ…. பூமியே
அச்சு இல்லாமலேயே
நீ மட்டும் எப்படி
சூரியனை சுற்றுகின்றாய்?
*************************************
*************************************
தந்தை
பெரியார்
கற்கண்டுத் தமிழில்
சில சொற்கொண்டு
உரைநடைக்கவிதை
இதை
உங்கள் முன் வைக்கின்றேன்.
தூங்கிக் கொண்டிருந்த
எனது
தூவலிடம் சேதிசொன்னேன்
– பெரியாரைப்பற்றிக்
கவிதை எழுத வேண்டும்
எழுந்து வா என்று.
நிலைகுலைந்து நின்ற
அது இந்தச்
சகாப்தத்தின் சாதனையைச்
சாதாரண மையால்
எழுதினால்
சரிவராது என்றது!
என்ன வேண்டும்
என்று கேட்டேன்
கண்ணீரையும் செந்நீரையும்
வியர்வையையும் இட்டு
என்னை நிரப்பு
என்றது.
அந்த திருப்புமுனையின்
தியாகத்தை எனது
தூவல் முனையால்
எழுதவந்த
கத்துக்குட்டி
நான் – கவிஞன் அல்லன்!
அறிவியல் அறிஞர்
ஐன்ஸ்டினை
அகத்தினிலே காட்டுகின்ற
அற்புத முகத்தோற்றம்!
சிங்கத்தை நினைவுறுத்தும்
சிலிர்த்து நிற்கும்
புருவமுடி!
வங்கத்துத்தாகூரை
நினைவிறுத்தும் வெண்தாடி!
அங்கத்தில் கருஞ்சட்டை,
களிறுதனைக் கண்நிறுத்தும்
கண்ணில் கண்ணாடி
– கையில் கைத்தடி
காந்தியாரை கண்ணில்
காட்டும்.
இங்கர்சாலோ இங்கு
வந்து உதித்தாரோ என்னும்
சங்கொத்த பேச்சின்
முழக்கம்! அதுவோ…
எங்கெங்கும் சிந்தனையை
ஊறச்செய்யும்.
கடவுளைக்காண காசி
வரை சென்றவர்
கானல் நீரைக்கொண்டு
திரும்பினார்.
காந்தீயவழி நின்று
கள்ளுக்கடை மறியலிலும்
கதர் ஆடை விற்பனையிலும்
ஈடுபட்டுக்
கடும் சிறைவாசம்
கண்டார்!
கதர் அணிந்திருந்தவர்
கருப்பு சட்டை
போட்டதற்குக்
காரணங்கள் பல உண்டு
–
முடங்கிக்கிடந்த
மனித
மூளையின் செல்களை
முற்போக்கு கருத்துகளால்
முடுக்கிவிட்டவர்.
அடங்கிக்கிடந்த
அனாதைத் தமிழனுக்கு
அறிவுத்தேனை அள்ளித்தந்தவர்!
ஆதிக்கவர்கத்தின்
தீண்டாமைத் தீயினால்
பாதித்துப்படுத்திருந்தார்
தமிழரில் பலபேர்
நாதியற்றுக்கிடந்த
தமிழனைப் பார்த்து
ஆத்திரம் கொண்டு
ஆர்த்து எழுந்தார்
அரிமாவாய் எங்கள்
அய்யா!
சாத்திரங்கள் எல்லாம்
சாக்கடைக்கு போயின!
தோத்திரங்கள் எல்லாம்
தோற்று ஓடின!
கண்மூடி வழக்கங்களை
மண்மூடிப்போகச்செய்த
வெண்தாடி வேந்தர்
அவர்!
இருள் சூழ்ந்த
தமிழகத்தில் சுயமரியாதைச் சுடரை ஏந்திப்
பகுத்தறிவுத்தேரில்
பவனிவந்த போது
மருளொடு மாயை எல்லாம்
மாய்ந்து போனதை
மண்ணுலகம் மறந்திடுமோ!
இராகுகாலமே இராமசாமியைப்பார்த்து
பயந்தது அன்று!
எமகண்டம் எல்லாம்
அய்யாவைப்பார்த்து எட்டிநின்றது!
விதி என்று சொல்லி
வயிறு வளர்த்தனவனைத் தயங்காமல்
மிதி என்றார்.
பேச்சினிலே வெங்காயம்
வெளிவரும் – அதுவே
வெடிகுண்டாய் வெடித்து
இனவெறியை அழிக்கும் – அவர்
மூச்சினிலே எப்போதும்
தமிழ் மணக்கும்!
பிணமான திராவிடனுக்கு
இனமான உணர்வை
உணவாக ஊட்டியவர்
கண்விழித்து கதாகாலட்சேபம்
கேட்டவனின்
எண்ணம் விழிக்க
எப்போதும் பாடுபட்டார்!
டார்வினின் பரிணாமக்
கொள்கையில்
குரங்கிலிருந்து
மனிதன் வந்தான்
அனுமன் எங்கிருந்து
வந்தான்?
இதிகாசம் என்பதெல்லாம்
திராவிடனை
இழிவு செய்ய வந்த
சதிகாரன் செயல்
என்றார்!
பெரியபுராணம்,ராமாயணம்
எல்லாம்
சரியான நூல்கள்
இல்லை
உருப்படியான மனிதனாய்
மாற
திருக்குறளைப்
படி என்றார்.
மனிதனை மனிதன்
தாழ்த்தும்
மனுதர்ம சாஸ்திரம்
இனியும் இருந்தால்
ஆபத்தென்று
துணிவோடு நெருப்பினிலே
தூக்கி எறிந்தார்!
கூரோடு வாள்கொண்டு
குலம் கோத்திரம்
கிழித்தெறிந்த
தமிழ்நாட்டின்
வால்டேர் அவர்!
யாரோடும் எதிர்கொள்ளும்
பேச்சாற்றல்!
ஈரோடு இனமானத்தந்தை
தானே! தீண்டாமைத் தீப்பயிரை
வேரோடு பிடுங்கி
வெந்நீரில் இட்டார்!
அய்யாவின் அறிவுப்
பேச்சு
திராவிடனுக்கு
தித்திக்கும்
புளுகும் பொய்யனுக்கு
முகம் சிவக்கும்!
கச்சைகட்டி வாழ்ந்தவன்
வேட்டிகட்டி வெளியேவர
பச்சை தமிழால்
கொதித்தெழுந்தவர் அய்யா!
இடுப்பில் கட்டிய
துண்டைத்
தோளில் போட வைக்கத்
தொண்ணூறு வயதிலும்
தொய்வின்றி உழைத்தவர்!
பொல்லாத மனிதனின்
புளுகுகளைப் பொசுக்குதற்குத்
தள்ளாத வயதிலும்
தளராது உழைத்தவர்!
புரட்டுகளை விரட்டுவதற்குப்
பாவேந்தன் என்னும்
முரட்டுக்காளைக்கு
கொம்பு சீவி விட்டவர்!
அண்ணா என்னும்
அரசியல் ஞானிக்கு
அரிச்சுவடி தந்தவர்
பெரியார் தான்.
கருணாநிதி என்னும்
கன்னல் தமிழ்க்கலைஞரை
அடையாளம் காட்டியதும்
பெரியார் அன்றோ?
மொத்தத்தில் தமிழ்நாட்டின்
பகுத்தறிவுப் பாதையின்
ஆரம்பம்!
இதுவரை இந்த பூலோகம்
பார்த்திராத பூகம்பம்!
இராமசாமியே ஏற்றுக்கொண்ட
ஒரு சாமி
இராமலிங்க சாமியே!
பெண்ணுக்கு சுதந்திரம்
பெற்றுத்தந்தவர்
பெரியார் அன்றோ!
பால்ய விவாகத்தை
படுகோபம் கொண்டெதிர்த்தார்!
வியப்புடனே உலகம்
பார்க்க
விதவைத் திருமணத்தை
வீறுகொண்டு
நடத்தி வைத்தார்!
அவர்…
இந்த நூற்றாண்டின்(20)
ஈடற்ற புரட்சியாளர்
சிந்தனைத்தேன்
எப்போதும் ஊறும் ஊற்று!
கந்தனை, கடம்பனைப்
பற்றி பாடிய
கவிஞன் எல்லாம்
இவருக்கு பின்னால்தான்
காற்றையும் கடலையும்
கடமையையும் பற்றிப்பாடினார்கள்!
திண்ணைப் பள்ளியிலேயே
தேங்கிநின்ற படிப்பறிவு என்றாலும்
விண்ணையும் வென்றுநின்ற
பட்டறிவு!
தன்னையே அர்பணித்துப்
பொதுத்தொண்டு
கண்ணைப்போல் தமிழ்காத்த
செங்குன்று
கடுகளவும் பயமறியா
யானைக்கன்று!
பரிதியைக்கூட பகல்நேரம்
மேகம் மறைக்கும்!
இந்தப் பகுத்தறிவுப்
பகலவனின் பக்கத்தில் வருவதற்கே
பழம் பஞ்சாங்கங்கள்
பயந்து நிற்கும்!
கருத்த மேகம் கனமழை
பொழிவதைப்போல்
கருப்பு குன்றம்
அவர்
கருத்து மழை பொழிந்த
போது
வகுத்து வைத்த
வருணாசிரமக் கொள்கையெல்லாம்
வந்த வழியே ஓடிப்போயின!
உண்ணாமல் கிடக்கும்
உழைப்பாளியை எண்ணாமல்
அண்ணாமலைக்கு எதற்கு
அரோகரா?
வியர்வை சிந்துபவனின்
அயர்வை போக்குவதே
உயர்வைத் தரும்
அன்றோ! அதனால் தான்
‘’கடவுளை மற மனிதனை
நினை” என்றார்.
கனலை மிதித்தாலும்
கரகம் சுமந்தாலும்
காவடி எடுத்தாலும்
கட்டுக்கட்டாய் நோட்டுகளைக்
காணிக்கை ஆக்கினாலும்
கண்ணோட்டம் இல்லையென்றால்
கடுகளவும் பயன்
இல்லை!
கும்பல் கும்பலாய்
சேர்ந்து
குடமுழுக்கு, கும்பாபிஷேகம்
குதூகலமாய் நடத்திவைத்தீர்,
குடகில் இருந்து
தண்ணீர் தமிழ்நாட்டுக்கு வரவில்லை!
குடம் தண்ணீர்
இன்றிக் காவிரியும் காய்கின்றது.
வாடிய பயிரைக்
கண்டு வாடினார் மனிதவள்ளல்
வணங்கும் கடவுள்
வாளா இருப்பது ஏன்?
வருணபகவானுக்கு
“இண்டர்நெட்டில்” தகவல் போயும்
இதுவரையில் மழை
இல்லை.
வருணபகவான் வகைசெய்ய
மாட்டார்
கருநாடகமே கதி
என்று காத்திருப்போம்
அய்யா –
எடுத்துவைத்த விளக்கங்கள்
ஒவ்வொன்றும்
எத்தர்கள் தலையினிலே
இடியாய் இறங்கியது!
படுத்துக்கிடந்த
கோழை எல்லாம் பயம் தெளிந்து
வெளியே வந்து பகலைக்
கண்டான்!
அடிமைகளாய் இருட்டில்
கிடந்த கரப்பான்பூச்சிகளை
வெளிச்சத்துக்கு
கொண்டு வந்து
வேங்கைகள் ஆக்கியவர்!
பெரியார் என்னும்
பெரும்புயல் வீசியதால்
கூனர்கள் நிமிர்ந்தார்கள்
குருடர்கள் கண்விழித்தார்கள்!
புழுக்களும் பூனைகளும்
புதுவேகம் பெற்றுப்
புலிகளாக மாறின!
உருவத்தில் மட்டும்
மனிதனாய் இருந்தவனை
உள்ளத்தால் உணர்வால்
மனிதன் ஆக்கியவர்!
அன்னைத்தமிழுக்கு
அரக்கி இந்தியால்
ஆபத்து வந்தபோது
தம்மையே அர்பணித்துத்
தண்டனை ஏற்றுக்கொண்டார்.
“தமிழ்நாடு தமிழருக்கே”
என்று
தயங்காமல் தட்டிக்கேட்டார்!
தாழ்ந்த தமிழன்
தலைநிமிரச் செருப்பாக உழைத்தவர்
கயவர்கள் செருப்பு
வீசியும் சிரிப்போடு ஏற்றவர்!
புரையோடிய சமுதாயத்தைத்
தலையெல்லாம்
நரையாகப்போன பின்னும்
ஒப்பற்ற பெரும்
உரையால் மாற்றியவர்!
இறுதி மூச்சு இருந்த
வரை எறும்பாக உழைத்தவர்!
சுற்றுப் பயணம்
செய்த தூரமோ
சுழலும் பூமியின்
சுற்றளவில் 33 மடங்கு என்றால்
எவரானாலும் மூக்கில்
விரலை வைப்பார்!
அறிவை பயன்படுத்தி
ஆழ்ந்து சிந்தித்தார்
ஆயுள் முழுவதும்
ஆராய்ந்து செயல்பட்டார்!
அதிலே அளப்பரிய
வெற்றியையும் கண்டார்!
முகிலை கிழிக்கும்
முழுமதியாய்
அகிலத்தில் பகுத்தறிவுக்
கருத்துகளை
பரப்பி வெற்றிகண்டவர்
பெரியார் ஒருவர் தானே!
எண்ணங்கள் மலருகின்ற
எழிலார் சோலை – அவர்
ஏன்?எப்படி?எதனால்?
என்று கேட்கச்சொன்ன முடிசூடா
மன்னன் அவர்! அறிவுலக
மேதையாம் நம்
அண்ணனுக்கு தந்தை
அவர்!
இந்த யுகத்தின்
அசாதாரன மனிதர்! இறுதிவரை
யாராலும் அசைக்க
முடியாத மனிதர்!
சாதி மண்டிய சாக்கடையைச்
சமதர்மப் பூக்கடை
ஆக்கியவர்!
கானல் நீரைக்கண்டு
கடவுள் என்றவனுக்கு
அறிவுக் கங்கையை
ஆர்வமுடன் காட்டியவர்!
“இராமனை அவமதிக்கின்றீர்களே!
இராமசாமி என்று
பெயர் வைத்துள்ளீரே”, என்றான் ஒருவன்.
“நான் இராமனுக்கும்
சாமியடா” என்ற இராமசாமி அவர்
வாயடைத்து பயந்து
ஓடிப்போனான்
வந்து நின்று கேள்வி
கேட்டோன்!
அழுது நின்ற திரவிடனை
ஆறுதல் பூங்காவிற்கு
அழைத்துச்சென்று
அவனிடத்தில் மாறுதலைக் காட்டியவர்!
குலக்கல்வி திட்டத்தைக்
குருதி கொந்தளிக்கக்
குமுறும் எரிமலையாய்
எதிர்த்து நின்றார்!
வகுப்புவாத உரிமையை
ஏற்க வகைசெய்யாத
காங்கிரஸில் இருந்து
காஞ்சிபுரம் மாநாட்டில்
கனல் கக்கும் கோபத்தோடு
கர்சனை புரிந்து
காங்கிரஸை ஒழிப்பதே
தம் முதல் வேலை என்று
கங்கணம் கட்டிக்கொண்டு
காட்டாறாய்ச் சீறிப்பாய்ந்தார்!
காங்கிரஸை காணாமல்
அடிக்கக்கால்கோள் இட்டார்.
‘காங்கிரஸ்’ அதன்
பின்னர் காணாமல் போனது நாம் கண்டதன்றோ!
சமைக்கின்ற பெண்களுக்கும்
சம உரிமை பெற்றுத்தர
சலியாமல் உழைத்திட்ட
வைக்கத்தின் வீரர்
அவரை
வையகம் உள்ளவரை
வணங்கி நிற்போம்!
இருவேறு கருத்துகள்
கொண்டவரே எனினும்
இராஜாஜியும் இராமசாமியும்
இறுதிவரை
இணைபிரியா நண்பர்கள்
அதுவே
அரசியல் உலகின்
அரிய பண்பாடு!
இனமானத்தை ‘ஈ.வெ.ரா’
என்ற இமயம்
பிணமாக இங்கே சாய்ந்த
போது
இராஜாஜி மண்டபத்தில்
இலட்சக்கணக்கில்
அய்யா அய்யா என
அழுகுரல்தான்! அவலக்கூக்குரல்கள்..
உயர் அரசுபதவி
எதுவும் வகிக்காதவருக்கு
அரசாங்க மரியாதை
அடக்கம் கூடாது என்று
அரசு அதிகாரிகள்
சிலர் அங்கலாய்த்த போது
விளைவு எதுவானாலும்
ஏற்றுக்கொள்ளத்தயார் என்று
அரசு மரியாதை செய்ய
அன்றைய முதல்வர்
கலைஞர் ஆணையிட்டார்!
பெரியார் – பெரியார்
தான்! இனி
ஒரு பெரியார் எங்கும்
பிறவார்!
அந்த பெரிய ஆறு
உடைத்து எடுத்த வெள்ளத்தில்
சனாதன சாத்திரக்குப்பைகள்
எல்லாம்
சகதியிலே புகுந்தன!
அந்தச்சிங்கத்தை
சிந்தனைச்சிற்பியைச்
சீர்திருத்தவாதியை
நெஞ்சத்தில் வைத்து
ஏந்துகிறேன்
வாயெல்லாம் நற்றமிழால்
வாயார வாழ்த்துகிறேன்.
****************************
****************************
இரைச்சல்
மனிதர்கள் அவ்வப்போது
இரைகிறார்கள்!
வாழ்வதற்கு உணவு
தேடி…
வசிப்பதற்கு இடம்
வேண்டி..
உடுத்த உடையும்
கேட்டு…
அவர்களது இரைச்சலில்
நியாயம் தெரிகிறது
நீலக்கடலே…
நீ எதற்காக ஓயாது
இரைகின்றாய்?
உனது தேசத்திலும்
பட்டினியா?
உனக்கும் இட நெருக்கடியா?
அல்லது
உடுத்த உடை கேட்டு
இரைகிறாயா?
எதற்காக இரைகிறாய்
என
என்னிடம் சொல்வாயா?
*********************************************
*********************************************
பாவேந்தன்
தமிழ் எங்கு இருந்தாலும்
தலை வணங்க தயங்க
மாட்டேன்!
கவியரங்கில் கலந்து
கொள்ள வந்த
தமிழ் உள்ளங்களைத்
தலையால் வணங்குகின்றேன்
பாவேந்தனுக்கு
ஒரு கேள்வி?
உயிர் எழுத்துகள்
பன்னிரண்டுதானே?
நீ..எழுதிய எழுத்துகள்
அனைத்தும்
உயிர் எழுத்தாய்
ஆனது எப்படி?
என்னுடல், என்னுயிர்,செந்தமிழ்
மூன்றும்
நான் நான் நான்
என்றே தமிழோடு
தன்னையும் தன்னுயிரையும்
சேர்த்த
பாவேந்தனுக்கு
ஒரு பாட்டு மன்றம்.
தாய்ப்பால் கொடுத்ததற்காகத்
தாயைப் பாராட்டச்
சொன்னால்
குழந்தை என்ன செய்யும்?
தாய்ப்பால் எனக்குத்
தந்தவனுக்குத்
தமிழ்ப் ‘பா’ பாட
வந்துள்ளேன்.
சிங்கத்தின் சிறப்புதனைச்
சிற்றெறும்பு கூறுதல்
போல்
அழியாத சரித்திரத்தை
– ஒரு
அரிச்சுவடி அணி
செய்ய வந்துள்ளது.
இமயத்தின் உச்சியை
தொட்டவனை
இங்கிருந்து வாழ்த்துகின்றேன்.
ஈரோட்டுச் சிங்கம்
இனமானத் தந்தை
பெரியாருக்கும்
இணையற்ற என் தமிழுக்கும்
இணைந்து பிறந்த
இனிய பிள்ளை!
அவனது தமிழ் தொண்டுக்கு
இல்லை எல்லை!
அவனோ வாசம் அற்றுப்
போகாத தமிழ் முல்லை.
தனித்தமிழ் இயக்கம்
கண்டோரின் செல்லத்தம்பி!
ஊர் தோறும் கவித்தேனை
ஊட்டிய தமிழ்த்தும்பி!
எப்படிக்கும் முதற்
படியாய்த் தமிழ்
படிக்க வேண்டும்
– வீழ்ந்த தமிழ்நாடு
தலைதூக்க தன் உயிர்தனையே தருவேன் என்றான்.
“கொலை வாளினை எடடா
– மிகு
கொடியோர் செயல்
அறவே” என்றான்.
அந்த கவிதையிலே..
இளைத்துக் கிடந்த
தமிழன் எல்லாம்
எழுந்து நடந்தான்
கண் விழித்துப்
பார்த்தான்.
விளக்கில் விழுந்த
விட்டில் பூச்சிகளுக்கு
விடியலைக் காட்டிய
கவிஞன் – அவன்
சொரணை அற்றுக்
கிடந்தவனை எல்லாம் பாட்டாலே
சொடுக்கி விட்ட
சொல்லருவி…
புதைகுழிக்குப்
போன தமிழனைப் பார்த்து
பதை பதைத்து பாட்டாலே
வெளிக் கொணர்ந்தான்.
நரிகளின் வாலை
நறுக்க
எரிமலையை கவிதைக்குள்
அடைகாத்தான்
ஏழைகளாய் பிறந்திடினும்
தவறு இல்லை
கோழைகளாய் பிறந்திடல்
ஆகாதென்று – இனிக்கும்
வாழைகளாய் இதமான
கவிதை தந்தான்
அந்தக் கவிதைகளால்
அன்றோ
மோழைகளாய்க் கிடந்தவன்
எல்லாம்
முகம் தூக்கிப்
பார்த்தான்
தன் மெய் வருத்தி
மேதினியில்
தண்டமிழ் வளர்த்த
தமிழ்ச்சான்றோன்
சீரிய மொழியாம்
எம் தமிழில்
வீரிய சொல் எடுத்து
கூரிய வரிசெய்து
சீறிய கவிஞன்
இருள் சூழ்ந்த
தமிழகத்தில்
ஒரு கவிச்சூரியனாய்
வந்துதித்தான்
இருண்ட வீடுகளில்
குடும்ப விளக்கை
ஏற்றி வைத்த குவாயக்
கவிஞன்
மண்ணுலகில் என்னுடல்
விழும் முன்
என்னுயிர் தமிழுக்காக
இன்னுயிரையும்
தருவேன் என்றான்.
மூவேந்தர் முத்தமிழைக்
காப்பதற்கு
முனைப்புடன் பாண்டியன்
பரிசு தந்தான்!
தமிழுக்கு தொண்டு
செய்வோன்
சாவதில்லை என்றவனே!
தமிழை உடுத்தவனே
– தமிழ் வாளைக்
கையில் எடுத்தவனே
ஆழி சூழ் உலகு
உள்ளளவும்
அழியாது உன் புகழ்.
எண்ணத்தில் உதித்த
கன்னல் தமிழை ஏட்டில்
வடித்தான்! அதுவே சிலரது
கன்னத்தில் அறைந்தது
போல் இருந்தது.
மந்திரம் என்பான்
– மாந்திரீகம் என்பான்
தந்திரமாய் தமிழன்
தலையை தடவப் பார்ப்பான்
சந்தியிலே நின்றிருந்த
தமிழனின்
புந்தியிலே பெரும்
மாற்றம் நிகழ வைத்தான்
எழுதி வைத்த இலக்கியத்தில்
– தமிழின்
எதிரிகளை அலைக்கழித்தான்
ஏமாந்த தமிழன்
தலை எடுத்தான்..
கொல்லன் உலையிட்ட
புழுவானார்
கோலேச்சிய ஆதிக்கத்தார்.
நடைபிணமாய் வாழ்ந்தவனுக்குச்
– சுயமரியாதை
உடையை உடுத்தி
விட்டவன்.
பேடியாய் நின்றிருந்தான்
நம் தமிழன்
ஓடி அவனை எழுப்புதற்கு
நாடியிலே நம் தமிழைக்
கலந்து விட்டான் – அவனைப்
பாடி நானும் பரவசம்
அடைகின்றேன்.
கவிதை என்பது கடைச்சரக்கு
அல்ல
அடுக்கி வைத்த
ஏடுகளில் இருந்து
அனல் கிளம்ப வேண்டும்
– பாவேந்தன் கவிதை போல
கவிதைக்குள் இருந்து
கனல் கிளம்ப வேண்டும்!
பாவுக்குள் இருந்து
அருள் வடிய வேண்டும்
அருட் பாவைப்போல
சிந்திக்க வைப்பதற்கே
எழுத்துக்களை ஏட்டில்
சிந்த வேண்டும்.
அமிழ்தான அருந்தமிழ்
விட்டு வேறு மொழி பேசி
மகிழ்வான் தன்னை
அவன் முகம் நோக்கி
உமிழ்ந்தாலும்
தவறு இல்லை.
அரங்கத்தில் ஐம்பதுபேர்
முன்னிலையில் – தமிழகத்தில்
அயல் மொழி பேசி
மகிழ்வானை
அற்பன் என்றே அலட்சியம்
செய்ய வேண்டும்.
அருந்தமிழ் மொழி
தன்னை – நம் கண்ணின்
கருமணி போல் காத்து
நிற்றல் – நம்
பெரும்கடமை அன்றோ?
அழகிய மயில் ஒன்றின்
அங்கத்தை சிதைத்து
அழகு பார்ப்பது
போல
பழகும் நம் தமிழில்
பல தவறு செய்தோரைப்
பாங்காக அவர் தடுக்க
தனித்தமிழ் இயக்கம்
தன்னை ஆதரித்தார்.
தமிழை கெடுப்பவர்கள்
தீங்காக அதை உணர்ந்து
திருந்த வேண்டும்.
தமிழா….
உனது கைகள் வெடிகுண்டு
ஏந்த வேண்டாம்
கவிதை வெடிகுண்டுகள்
வெளி வரட்டும்
தோள்களில் துப்பாக்கி
தொங்க வேண்டாம்
தூவல்கள் எல்லாம்
துப்பாக்கி ஆக்கி
விடு!
சஞ்சீவி பர்வதத்தின்
சாரலிலே
பகுத்தறிவு வாடையை
வீச விட்டான்
இன்று… பகுத்தறிவு
மீண்டும் படுகுழி போனது.
பாடுபட்டு வளர்த்த
பகுத்தறிவு – மீண்டும்
பாழ்பட்டு போனது
எதனாலே…?
தெய்வங்கள் ஆயிரம்
கொண்டதும் இத்திருநாடு
தெருப்பிச்சைகள்
பல்லாயிரம் கொண்டதும் இத்திருநாடு.
ஆண்டுதோறும் ஐயப்ப
பக்தர்கள்
அதிகரித்தே வருவது
அன்னைத் தமிழ்நாடு
ஐயோ… அப்பா என்ற
அவலக்குரல்
அதிகரிப்பதும்
இந்தத் திருநாடு.
முப்பாலைப் போன்ற
ஒரு நூலை
எப்பால் இனி நாம்
காண இயலும்?
மழித்தலும், நீட்டலும்
வேண்டா உலகம்
பழித்தது ஒழித்து
விடின் – என்றார்
இவனோ.. தாடியை
வளர்த்துக் கொண்டான்.
காவியுடை கட்டிக்
கொண்டான்
சாமி தேடிச் ‘சரணம்’
சொல்லிப் புறப்பட்டான்.
கோயிலுக்கு போறவனே
கூக்குரல் எதற்காக!
ஆண்டவனை பார்ப்பதென்றால்
ஆர்பாட்டம் எதற்காக?
ஒரே இடத்தில் ஒரு
கோடி பேர் திரண்டால்
ஒரு நொடியில் உயிர்
போகும் மிதிபட்டால் – இந்த
பகுத்தறிவு கூட
இன்றிப்
படை எடுக்கின்றான்.
பரிதவித்து உயிர்
விடுகின்றான்.
நான்முகன் என்பானும்
உளனோ? நாயே என்றான் பாவேந்தன்
பரம்பொருள் ஒன்று
என்றே ஞானியர் வகுத்தனர்
பொருள் சேர்க்கவே
– பரம்
பொருள் என்று பல
கடவுள் தேடுகின்றான்.
ஒரு முடிவுக்கும்
வராமல் உயிரை விடுகின்றான்.
மண்டை ஓட்டுக்குள்
வெளியே
மயிரை மழித்து
சுத்தம் செய்பவனே
ஓட்டுக்குள் அழுக்கை
அகற்ற மறந்தாய்
முடிவே இல்லாதவன்
இறை என்றால்
முடி எதற்கு காணிக்கை?
“தமிழ்ப் பாடல்
சாதி மதம் மூட எண்ணம்
தரும் பாட்டாய்
இருப்பதிலும்
இல்லாமை நன்றி”
என்றான் பாவேந்தன்
“ஒரு மதமும் வேண்டாம்
தம்பி! உண்மையுடையார்க்கே
பெருமதம் என்னும்
அந்த பேய் பிடிக்க வேண்டாம்”
“ஒரு கடவுள் உண்டென்போம்
உருவ வழி ஒழிப்போம்”
என்று
சமதர்ம சமுதாயத்துக்குச்
சத்தான கவிதை தந்தான்.
“ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் காண்போம்” என்றார் அண்ணா
இறைவனை அனுபவிக்க
ஏழையை இன்புவிக்க
என்ற
வள்ளலாரின் கருத்தினை
மறந்து போயினர்.
ஏழைகள் வயிறு என்றைக்கும்
நிரம்பவில்லை
ஏழுமலையான் உண்டியல்
எட்டு நிமிடத்துக்கு
ஏழுமுறை நிரம்புகிறது.
“உலகம் உண்ண உண்
உடுக்க உடுப்பாய்
; என்று
பாரெங்கும் மனித
நேயத்தைப்
பாட்டால் பகர்ந்து
சென்றார் பாவேந்தர்.
தமிழை தனக்கு ஏற்றபடி
வளைத்தான் அன்றித்
தான் என்றைக்கும்
வளைந்ததில்லை.
எவனுக்கும் வளைந்ததில்லை.
அது பெரியார் என்ற
பெரும்புயலிடம்
பெற்ற பாடம்.
“பெண்ணடிமை தீருமட்டும்
பேசும் இந்தத் திருநாட்டு
மண்ணடிமை தீருவது
முயற் கொம்பே” என்று
பெண்மையை உயர்த்திப்
பெருமை பெற்றான்.
“சாதி ஒழித்திடல்
ஒன்று
நல்ல தமிழ் வளர்த்திடல்
மற்றொன்று
பாதியை வையம் மறந்தால்
மற்ற
பாதி துலங்குதல்
இல்லை” என்றார்.
ஆனால் இன்று…
சாதியிலே மதங்களிலே
வெறி கொண்டு
வீதியிலே அலைகின்றான்
வீணில் பொழுது
கழிக்கின்றான் – யாரோ வகுத்த
சூதினிலே கருத்தை
இழந்தான்!
ஆதியிலே சாதிகள்
ஏதும் இல்லை
பாதியிலே வந்தவையே
பாழான சாதிகள்
வேதியர் ஆயினும்
வேறு குலத்தவர் ஆயினும்
ஒன்றென்ற சொல்
கேட்போம்.
சோதியாம் அருட்பெரும்
சோதியிலே
அகம் களித்து வாழ்வோம்!
உணவில் மட்டும்
உப்பைக் கலந்து உண்டவனுக்கு
உணர்வில் உப்பை
கலந்தான்
எழுதி வைத்த எழுத்தினிலே
தமிழன் எழுச்சி
கண்டான். எத்தர்களோ
வீழ்ச்சி கண்டனர்.
புராணங்களைக் காட்டி
புளுகு மூட்டைகளை
அள்ளி விட்ட
புரட்டு மனிதர்களைப்
– பூகம்பப் பாட்டால்
புரட்டி அடித்தான்.
சமுதாய ஏற்றத்
தாழ்வைச் சமன் செய்ய
சவுக்கடி கவிதைகளால்
சமர் செய்தான்!
பள்ளிக்குத்தான்
ஆசிரியர் என்றாலும்
அள்ளித் தந்த பாட்டுகளால்
அகிலம் விழித்தது!
“துருக்கர், கிருத்துவர், சூழ் இந்துக்கள்
என்று இருப்பவர்
தமிழரே என்பது உணராது
சச்சரவு பட்ட தண்டமிழ்நாடு
மெச்சவும் காட்டுவோன்
வேண்டும் என்று
எண்ணி இராமலிங்கரை
ஈன்றதன்றோ நம் தமிழ்நாடு என்று
என் ஐயனை பாடுகின்றான்!
“எங்கள் வாழ்வும்
எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று
சங்கே முழங்கு”
வீழ்வது நாமாக
இருப்பினும்
வாழ்வது தமிழாக
இருக்கட்டும் – என்றான்
இன்று…
தடம் மாறிப்போகின்றான்
தமிழன்
நடமாடும் பிணமானான்
– அயல் மொழி மெச்சும்
ஜடமானான் – என்றைக்கு
அவன்
திடமாவான் – நீயே
சொல் என் தமிழே!
நம் மொழிக்கு உலகில்
இல்லை ஈடு
அதற்கு இடமில்லை
என்பவனை சாடு
பெண்ணடிமை ஒழிந்தது
என்று கூத்தாடு!
பெருமை சேர் இடமாகும்
உன் வீடு!
நல்லறிவை வளர்க்கின்ற
நூலைத்தேடு!
நாடு என்பது நீயே
– அதை நீ நாடு!
உன் உடம்பென்பது
நோய் சேரும் கூடு!
இந்த உண்மை தெரிந்தால்
இல்லை கேடு!
பயனில சொல்லாமல்
வாயை நீ மூடு!
பாவேந்தன் புகழினை
எப்போதும் பாடு!
*****************************************
*****************************************
காதல்
இனப்பெருக்க நோக்கோடு
இயற்கையானது
இயற்கையாக எழுப்புகின்ற
ஒரு வித இன்பம்!
நாளைய சந்ததியினரை
உருவாக்க
நம்மை அறியாமலேயே
நமக்குள்ளே ஏற்படும்
உந்துதல்!
கண்ணில் ஆரம்பித்துக்
கருப்பையை வளரச்செய்யும்
காந்த சக்தி!
பிரபஞ்சத்தோற்றம்
முதல்
பிரபஞ்ச அழிவு
வரை
இருந்து கொண்டிருக்கும்
இருந்து கொண்டிருக்கப்
போகும்
இன்பப் பிரமை!
பலரை ஆக்கியதும்
என்றாலும்
சிலரை அழிப்பதும்
இது தான்!
இது இல்லாமல் கவிதைகள்
சில நேரம் பிறக்காது.
இது இல்லாமல் குழந்தைகளும்
பிறக்காது!
இது இல்லாமல் எதுவும்
இல்லை! என்றாலும்
எதுவும் இல்லாதவர்களுக்கும்
இதுவே உணவாக வாழ
வைக்கிறது!
*****************************************************
*****************************************************
பூம்புகார்த்
தமிழ்ச்சங்கம்.
கடல் அலைகள் வந்து
வந்து முத்தமிடும்
கவின்மிகு கலைக்கூடம்
கண்ணிலாடும்
கற்புக்கரசி கண்ணகியை
உலகில் ஈந்த
சிறப்புபெற்ற பூம்புகார்
என்னும் ஊரில்
இமிழ்திரைக்கடல்
இரையும் கரையோரம்
தமிழ்ச்சங்கம்
ஒன்று கண்டார் தமிழ்ச்சான்றோர்!
சொல் எல்லாம் செயலாகக்
செயல் எல்லாம்
சொல்லாக
அல்லும் பகலும்
அரும்பாடுபட்டு
அன்னைத்தமிழை ஆர்வமுடன்
வளர்க்கும்
அருமைக்குரிய பூம்புகார்த்
தமிழ்ச்சங்கத்தின்
பெருமைக்குரிய
உறுப்பினர்களே!
இடுப்பை வளைத்து
இன்முகத்தோடு
இருகரம் கூப்பி
இனிமைத்தமிழால்
இயம்புகிறேன் வணக்கம்!
ஏற்றுக் கொள்வீர்!
முதியோர் அறிவுடன்
இளைஞரையும் சேர்த்து
மூச்செல்லாம் பேச்செல்லாம்
முத்தமிழாக்கி
முனைப்புடன் தமிழ்வளர்ப்போம்!
வாழ்க
தமிழ்! வளர்க பூம்புகார்த் தமிழ்ச்சங்கம்!!
********************************************
********************************************
இராமலிங்கர்
வாழ்க!
அருட்பாவை அனுதினம்
அடியொற்றி நடந்தால்
இருட்பாடு இல்லை
உணர்.
வள்ளல் ராமலிங்கர்
வார்த்தையில் வாழ்வோர்க்கு
எள்ளளவும் துன்பம்
இல்லை.
மதித்துவாழ் மாசறக்
கற்றவரை எந்நாளும்
துதித்துவாழ் தூய
ஞானியை.
இட்டுவாழ் இரப்போர்க்கு!
இச்சையுடன் மாயையை
விட்டுவாழ் மானிடா.
நயத்தோடு நல்லவர்
நட்பின் நல்வினைநாடின்
பயம் எதற்கு பாரில்?
*************************************
திருக்குறள்
வாழ்க!
ஈரடியில் வள்ளுவன்
போல் இவ்வுலகில்
யாரடி சொன்னார்
சொல்?
தெள்ளுதமிழன் தெவிட்டாத
தேன்பாகாம்
வள்ளுவத்தை வாயார
வாழ்த்து.
முப்பாலை ஒத்த
ஒப்பிலா முழுநூல்போல்
எப்பால் உண்டு
இயம்பு?
பாரெல்லாம் அறம்
செழிக்கத் திருக்குறளை
மறவாமை வேண்டும்
மனிதர்!
இறவாமை வேண்டுமெனில்
இசையால் திருக்குறளை
மறவாமல் வேண்டும்
மனிதர்!
பால் ஆகா; பாரில்
வெளுத்ததெல்லாம்! பைந்தமிழின்
நூல் எல்லாம் நூலாகா!
திருநூலாம் குறளைத்
தேர்ந்து தெளிந்தபின்
ஒருநூலும் வேண்டா
உனக்கு.
அறத்தோடு பொருள்
இன்பப்பாலை எக்காலும்
மறத்தமிழா மறவாமல்
குடி.
பிறப்பினால் பிரிவேதும்
இல்லையென்ற குறளின்
சிறப்பினை செகமெல்லாம்
செப்பு.
மாக்கடலில் மதிப்பற்ற
செல்வம்போல் குறள்
பாக்கடலில் படிப்பினைப்
பார்
*********************
தாய்மையை மிஞ்சிய
தயவின் உருவம்!
தூய்மையை விரும்பிய
வாய்மையின் விளக்கம்!
ஏழ்மையின் எதிரி
எளிமையின் சின்னம்
கொல்லா நெறியினை
எல்லார் நெஞ்சிலும்
ஏற்றிய காந்தியே!
நல்லோர் போற்ற
நானிலம் வாழ்த்த
நலிந்தாய் உடலில்
தெளிந்தாய் அறிவில்!
விலா எலும்பு
வெளியே தெரிந்தும்
புலாலை மறுத்த
புண்ணியர் நீர்
தான்!
எவரையும் வதை செய்யாத
சங்காரம் செய்யாத
தெய்வமும் நீ தான்!
இந்து முஸ்லீம்
ஒற்றுமை வேண்டி
நொந்து போனாய்!
நோய் வாய்ப்பட்டாய்!
வெந்து போன ஏழைக்கெல்லாம்
வெளிச்சம் தந்தாய்!
வேதனை தீர்த்தாய்!
அகிம்சையினால்
அகிலத்தையே
அக்குளுக்குள்
அடக்கக்
கற்றவர் அண்ணலே
நீர் மட்டுமே!
பெருத்த அன்பால்
புத்தன் ஏசு
இருக்கும் இடத்தை
எட்டிப் பிடித்தாய்!
இருந்தும் உன்னைக்
குறுகிய நோக்கால்
குண்டால் சுட்டான்
குறுமதியாளன்.
சரிசமம் வேண்டி
அரிசனனுக்கு ஆதரவாகக்
கரிசனம் காட்டிய
தரிசனக் கடவும்
அண்ணல் காந்தி
நீயன்றோ!
கோபத்தையும் பொய்யையும்
கொன்றதாலேயே குவலயம்
முழுதும் உன்னைக்
கொண்டாடும் அறிவாய்!
கதரைக் கொண்டே
பரங்கியர் குழாமைக்
கதற வைத்தாய்! நெஞ்சில்
கருணையே வைத்தாய்!
உன்னை என்றும்
நினைத்திடவே
சிலையை வைத்தனர்
சில ஊர்களிலே
சில உதவாக்கரைகள்
அதையும்
உடைத்ததைக் கேட்ட
போது எங்களின்
உள்ளம் உடைந்தது
உண்மை உத்தமரே!
ஏழைகளுக்காக வாழ்ந்த
ஏந்தலே!
ஏழைகள் காணாத
கரன்சி நோட்டில்
மட்டும்
கவர்ச்சியாய் சிரிப்பது
என்ன நியாயம்?
உடம்பினில் இளைத்தாய்!
உடையினில் இளைத்தாய்!
நடையினில் களைத்தாய்!
எனினும்
நாட்டையே நினைத்தாய்!
எனக்கு சபரி மலையை
விட
உனது சபர்மதி ஆசிரமே
உயர்வு!
உத்தமர் காந்தியே!
உண்மைக் காந்தியே!
உலகத்தார் உள்ளத்துள்
என்றும் சிரிப்பாய்!
******************************************
******************************************
ஏழ்மையின்
வயிற்றை நிரப்பு
சிந்திப்பதை மறந்து
மந்தி போல் மதம்
மாறும்
தந்திர மனிதா!
கணத்திற்கு ஒருமுறை
கடவுளை வணங்குகிறாய்
கன்னத்தில் கையையும்
போட்டுக் கொள்கிறாய்.
ஒருவார்த்தை சொல்வேன்
உன்னிப்பாய் கேள்!
இழுக்கும் மூச்சு
இருநொடிக்குள் போய்விடும்
உண்னும் உணவோ ஒருநாள்
குடலில் இருக்கும்
அருந்தும் நீரும்
அரைநொடியில்
பிரிந்து விடும்!
உடுக்கும் உடையோ
ஓராண்டோ? ஈராண்டோ?
நாமும் நம்மை,
அடுத்தவர் கூட்டமும்
நாடகம் பார்க்கும்
நாடகம் நடத்தும்
மனிதர் கூட்டம்
மறந்து விடாதே!
எடுத்த இந்தப்
பாழும் உடலும்
என்றைக்கும் இருக்காது!
தெளிவாய்! மதியால்.
நிலையில்லா உலகில்
நிலை தான் என்ன?
இசையாம் புகழே
உலகினில் நிலையாம்!
ஈதலால் வரும் இசையே
நிலையாம்!
“ஈதல் இசைபட வாழ்தல்”
என்ற
வள்ளுவன் வாய்மொழி
மறந்தது ஏனோ?
சிந்தைக்குள் இருக்கும்
சிவத்தை மறந்து
மந்தை மந்தையாய்
மலையில் ஏறுகின்றாய்!
சிவம் என்றால்
அன்பே அன்பென்றால் சிவமே;
இது தெரியாமல்
இன்னமும் இருக்கின்றாய்!
வெந்ததை தின்று
வாயில்
வந்ததை பேசும்
வழக்கை விடு!
“வாழ்வாங்கு வாழும்
வாழ்க்கை” வாழ்ந்த
‘வானுறை தெய்வமாய்
வாந்தோர்” வாழ்வை
மனதினில் போற்றி
மகிழ்வுடன் படி!
விருப்பம் என்பதற்கு
வேலியே இல்லை!
இருப்பதை வைத்து
இன்பமாய் வாழ்வாய்!
இருப்பதிலும் கொஞ்சம்
இல்லாதவனுக்கு ஈந்து
இன்பமாய் வாழ்வாய்!
ஏழையின் வயிற்றை
முன்னர் நிரப்பு!
இறைவன் உண்டியலை
பின்னர் நிரப்பு!
இது தான் மனித
தர்மத்தின் சிறப்பு!
***************************************
***************************************
சீதை சிதையில்
இறங்கிய
கதையைக் கேட்டே
காலம் கழித்தாய்!
காதைக் கற்பனைக்
கதைகளுக்கே தந்து
பேதையாய் வாழும்
பேடித்தமிழா! வள்ளலார்
பாதையில் நடக்க
ஏன் மறந்தாய்?
சூதை நம்பி சோரம்
போனாய்!
சுயபுத்தி கொண்டே
சிந்திக்க மறந்தாய்!
மேதையாம் இராமலிங்கர்
சொல்லைக் கேட்டால்
மோதல் வருமோ? உயிர்கள்
மாயுமோ?
“கல்லானாலும் திருச்செந்தூரில்
கல்லாவேன்”
“மரமானாலும் பழமுதிர்ச்சோலையில்
மரமாவேன்”
ஏற்கனவே கல்லாய்
மரமாய்
இருப்பவன் நீயே!
மனிதனாய் மாறும்
வகையறியாயோ?
திருப்பதி சென்று
திரும்பி வந்தால்
திருப்பம் ஏற்படுமாம்!
திருப்தியாய் உண்ணாதவனைத்
திரும்பிப்பார்
திருப்பம் ஏற்படும்!
நீ மட்டும் வாழப்
பட்டை போடுவாய்!
எதிரில் இருப்பவனுக்கு
நாமம் போடுவாய்!
கற்பனை வாழ்வைக்
கலைத்தே எழுவாய்!
உயரிய நெறியால்
உன்னைக் காத்து
உயிராய்த் தமிழை மதியில் வைத்து
உலகையே குலுக்குவாய்!
உண்மைத்தமிழா!
கலகம் இல்லா உலகினைக்காண
கடவுள் ஒன்றே என்று கதறுவாய்!
கரடிக்கு பிறந்தவன்,
கழுகுக்கு பிறந்தவன்,
கதையெல்லாம் நமக்கு
தேவையில்லை
கற்பனைப்புராணம்
கலந்தே விற்கும்
விற்பனை நூல்களை
விலைக்கு வாங்காதே
இறையுணர்வு உன்னிடம்
குறைவின்றி இருந்தால்
குற்றம் தவிர்த்தால்
இறைவன் என்பவன்
நீயாய் இருப்பாய்!
மனிதன் எல்லாம்
கடவுளாய் மாறினால்
கடவுள் என்பவர்
நமக்கெதற்காக?
சிந்தனைத் தீயில்
மடமையைக் கொளுத்தி
சிலிர்த்தே எழுவாய்!
சிங்கத்தமிழா!
***************************************
***************************************
நேருக்கு நேர்
கேட்கின்றேன்
நேருக்கு நிகரான
தலைவர் யாரு?
வரலாற்றின் பக்கத்தை
கொஞ்சம் திருப்பி பாரு
வரலாறாய் ஆனவர்கள்
ஒருசிலபேரு – அதில்
நடந்து வரும் போது
நந்தவனத்தேராய்
நேயத்தில் நிலைத்து
நிற்கும் மேருவாய்
தியாகத்தின் திருவுருவமாய்ப்
பாமரனும் போற்ற
வாழ்ந்தவரே
பண்டிதர் நேரு.
பூவின் வாசத்தை
பூத்துக் குலுங்கும்
புன்னகையால் வீழ்த்தியவன்
நீ
சாவினை நீ தொட்டாய்
எனினும் உன்
சரித்திரம் இன்னும்
சாகவில்லை.
பாவுக்குள் உன்னை
அடக்க இந்தப்
பாருக்குள் எவருமில்லை.
ஏந்திவரும் புன்னகையால்
உலகு எங்கும்
சாந்தியைத் தழைக்கவிட்ட
சரித்திர நாயகனே!
காந்தியாரையும்
கவர்ந்த கனல்கக்கும் பேச்சாளனே!
வெறிகொண்ட வெள்ளையனை
வெடிப்பேச்சால்
மோதியவன் நீ!
ஆசியாவின் ஜோதி
நீ – என்றைக்கும்
இந்தியனின் இதயத்தில்
பாதி!
அப்பழுக்கு இல்லாத
சாதி!
கங்கா, யமுனா,
சரஸ்வதி சந்திப்பில்
தங்கமகன் நேரு
நீ தவப்பயனாய் வந்துதித்தாய்!
அலகாபாத்தின் அகல்விளக்கே!
அகிலம் தெரிந்த
ஆசியாவ் இன் ஒளிவிளக்கே!
காலையில் வெளிவரும்
கதிரவன்
மாலையில் மலரும்
மல்லிகை
அந்தியில் அவிழும்
அழகுநிலா
அடிவானுக்கு அணிசேர்க்கும்
வானவில் – இவற்றின்
அழகுகளைத் தன்முக
அழகால் வென்ற
முல்லைச் சிரிப்புக்குச்
சொந்தக்காரன் நீயே!
உன் நெஞ்சில் முளைத்திருக்கும்
சிவப்பு ரோஜா
நீ பிஞ்சு மனத்தைக்
கொள்ளை கொண்ட சிவந்தராஜா
ஜகத்தை குலுக்கும்
உன் பேச்சு
ஜனநாயகத்தின் உயிர்
மூச்சு!
வெள்ளையனுக்கோ
வாள் வீச்சு!
குளிர் வடிக்கும்
வட்டநிலா – உன்
தளிர் சிரிப்பில்
தலைகவிழும்
ஓளிவிடும் சூரியனும்
உன் முகப்பொலிவில்
ஓடி விடும்!
உன்னோடு ஒப்பிட
இமயத்தை அழைத்து வந்தால்
தன் மதிப்பு உயர்ந்ததென்று
இறுமாப்பு கொள்ளும்.
உனக்கு உவமை சொல்ல
இதுவரையில்
உலகத்தில் எதுவும்
இல்லை!
உனக்கு நிகர் நீயே…
அழகிலோ நீ ஒரு
ஆண்மான்
செல்வத்தில் சீமான்
சீலத்தில் கோமான்!
பணம் சேர்க்க பலர்
அரசியல் புகுவது வாடிக்கை!
பணக்காரர் நீ பொதுவாழ்வில்
புகுந்தது வேடிக்கை!
செல்லக் குடும்பத்தில்
முளைத்தாய்
செழிப்பினிலே திளைத்தாய்
– எனினும்
நாட்டிற்க்காக
செருப்பாய் இளைத்தாய்!
தூய தொண்டின் சிகரம்
நீ!
பண்பாட்டின் அகரம்
நீ!
காங்கிரசுக்கே
ஆகாரம் நீ!
நேரு – நீ மனிதன்
இல்லை
மகத்தான வரலாறு!
மண்ணுலகில் வந்துதித்த
மகரஜோதி!
மாசற்ற மாணிக்கம்!
மணம் வீசும்
மகரந்தத் தென்றல்!
மாண்பு குறையாத
மகரயாழ்!
மனித நேயத்தின்
மறுபதிப்பு!
மழலைகளுக்கு மானசீக
மாமா!
மதிப்பால் உயர்ந்து
நிற்கும் மாமலை!
முறையான பொதுத்தொண்டால்
சிறைகள் பல கண்ட
சிந்தனையாளன்
கறைபடியாத காந்தப்
பேச்சாளர்!
எடுப்பான நாசி!
எதிர்ப்புகளோ தூசி!
நேரு என்ற நெடிய
மனிதன்
யாரும் போற்றும்
புனிதன்!
சாந்தி தழைக்க
சமாதானப்புறா விட்ட
காந்தியாரின் கண்மணி!
அரசியல் வானில்
என்றும் ஒளிவிடும் மின்மினி!
“அயோக்கியனின்
புகலிடம் அரசியல்”
என்றார் அறிஞர்
ஒருவர் – ஆனால் நீ
ஆரோக்கிய அரசியலின்
அஸ்திவாரம்!
அன்றைய அரசியலையும்
இன்றைய அரசியலையும்
ஒப்பிட்டு பார்ப்போமா?
அன்று ….
அரசியலுக்கு தேவை
உண்மை தொண்டர்கள்!
இன்று…
அரசியலுக்கு தேவை
கொலைவெறிக் குண்டர்கள்!
இன்று..
மாணிக்கம் வைரத்துக்குள்
மனிதர்கள்!
அன்று….
நாலு முழத்துண்டுக்குள்
நல்ல நல்ல மனிதர்கள்!
இன்று….
தேர்தலுக்கு அணிச்சாயம்
– அதுமட்டுமா?
காலுக்கு கீழ்
அணிய கால் லட்சம் செருப்புகள்.
கள்ளம் புரிவோன்
காப்பாற்றும் மந்திரியாம்-
கள்ளச் சாராயமே
அரசியலின் மூலதனமாம் –
உள்ளம் கொதிக்கிறது
நேரு – உன்னைப் போன்ற
உண்மைத் தலைவர்
இல்லாததால்
இடியே விழுந்தாலும்
…
கொள்கையில் பிடிப்பு
உண்டு அன்று!
அடிவயிறு வளர்க்க…
அடிக்கடி கொள்கைகளை
அடியோடு மாற்றும்
அசிங்கங்கள் இன்று!
செக்கிழுத்தது
சிறையில் ஒரு கூட்டம், அன்று
செக்குகள் கைமாறியதால்
சிறைசெல்கின்றார் இன்று
தண்டி யாத்திரைக்காகத்
தண்டனை அன்று
உண்டியல் உடைத்துத்
திருடுகின்றார் இன்று!
உப்புக் காய்ச்சியதால்
உண்ணா நோம்பு இருந்ததால்
ஊறுகளை அனுபவித்தார்
அன்று
தப்பு மட்டும்
செய்து மண்ணுக்கு மேல்
மாடிகள் கட்டி
மன்றாடுகிறார் இன்று!
கொடிகாக்க உயிர்
விட்டது அன்று! – தன்
குடிகாக்க அலையும்
கூட்டம் இன்று!
கோழிக்குஞ்சுகளின்
கூட்டத்தில்
கொடுங்கழுகு புகுந்தது
போல்
அரசியலுக்குள்ளும்
அநாகரீக உருவங்கள்!
அன்று…
பதவி உன்னைத்தேடி
வந்தது
இன்று..
பதவி சுகம் காண
அலையும் கூட்டம்!
லஞ்சச்சோற்றில்
நாளும் உழலும்
லட்சியவாதிகள்
தேர்தலுக்கு மட்டும்
வந்து
தெருப்பொறுக்கும்
திருடர் கூட்டம்!
இன்றைய சாதிச்சங்கங்கள்
நாளைய அரசியல்
கட்சிகள்!
தேர்தலின் வெற்றி
தோல்வி
சாதித் தலைவன்
கையில்!
சுதந்திர பொன்விழா
ஆண்டின்
பூரிக்கை வைக்கும்
சாதனையைக்
கண் திறந்து பார்!
கண்ணெல்லாம் குளமாகும்
பொன்னான நேருவே!
எலும்புத்துண்டுக்கு
அலையும்
இளைத்த நாய்களாக
நாளுக்கு நாள்
கட்சி மாறுவார்கள்
வாழ்க சனநாயகம்!
வளர்க பாரதம்!
கேம்பிரிட்ஜின்
வார்ப்படமே!
சுத்தத்தங்க பால்குடமே!
கலப்படம் இல்லாத தொண்டின் பிறப்பிடமே!
கண்ணியம் மிக்க
உழைப்பின் இருப்பிடமே!
நீங்கள்…
சித்தம் பொருட்படுத்தாமல்
சிந்தினீர் ரத்தம்!
இன்றோ..
மதத்தின் பெயரால்
மனிதனுக்குள் யுத்தம் –
சமுதாய சச்சரவு
சாலைமறியல் நித்தம்-
எங்கு பார்த்தாலும்
சாதிச்சண்டை சத்தம் –
என்று ஒழியும்
இந்த சிறுமைப் பித்தம் –
இந்திரா என்னும்
பெண்புலியைப்
பெற்றதனால் பெருமை
பெற்றாய்!
சுந்தர மொழி பேசி
எங்களைச்
சுதந்திரக் காற்றைச்
சுவாசிக்க விட்டாய்!
எந்திரத்தை தோற்கச்செய்யும்
இடைவிடா உழைப்பே!
ரோஜா இனத்திற்குப்
பெருமை சேர்த்த
இந்திய திருநாட்டின்
ஈடில்லா ராஜாவே!
சுதந்திரம் பெற்று
தந்தாய்!
ஆனால் இன்று..
சட்டசபைக்குள்ளே
ஆபாசப் பேச்சு!
கடையடைப்புப் போராட்டம்
கல்வீச்சு!
கலெக்டரின் முகத்திலேயே
திராவக வீச்சு!
கண்ணீர் சிந்தி
நீ பெற்ற சுதந்திரம்
கானல் நீர் ஆச்சு!
கடமை, கண்ணியம்,
கட்டுப்பாடு எல்லாம்
காற்றிலே போச்சு!
நெடிய உருவமே!
நேர்மை நெஞ்சே!
கொடிய பிரிவினைகள்
கொழுந்து விட்டு
எரிய வேண்டும்-
மடிய வேண்டும்
மனுதர்மம் மண்ணோடு மண்ணாக –
விடியலை எதிர்நோக்கும்
இந்தியனின்
வேதனைப் பெருமூச்சு
ஒழிய வேண்டும்-
நாடுகளுக்கு இடையே
நல்லுறவை நாட்டிச்
சென்ற
நவபாரதத்தின் சிற்பியே!
நவம்பரில் உதித்த
நவரச நாயகனே!
பஞ்சசீல கொள்கையைப்
பரிந்தளித்த
கொஞ்சு மொழிக்
கோமானே!
நெஞ்சத்தில் நீங்காது
நிலைத்து நிற்கும்
மிஞ்சு புகழ் நேருவே!
பூலோகம் உள்ளவரை
உனக்கு
பூமாரி பெய்திடுவோம்!
உத்தமர் காந்தியின்
உற்ற துணையாய்
நீ இருந்தாய்!
ஒத்துழையாமை இயக்கத்திற்குச்
சத்து சேர்த்தாய்!
நித்தமும் நயம்மிக்க
பேச்சால்
நாகரீக இந்தியாவுக்கு
நாற்றங்கால் அமைத்துத்
தந்தாய்!
ஆல்ப்ஸ் மலையை
ஒத்த ஒப்பிலாப் பேரறிவு!
வேல்ஸ் இளவரசரை
வியக்க வைக்கும் ஆங்கிலம்!
விடுதலை பெற்றுத்தர
வியர்வை சிந்தி
நெருஞ்சி முள்ளில்
நடந்து வந்த
குறிஞ்சி மலர்
நீ!
அழகு, அறிவு, அந்தஸ்து
அமையப்பெற்ற இந்திய
திருநாட்டின்
அற்புதத் தலைவன்
நீ!
வெள்ளையனை வெளியேற்ற
பெற்றோருடன் போரிட்ட
பிள்ளை!
அந்த சகாப்தத்தை
சத்தியனை
சாந்தத்தின் மறு
உருவை!
கலகங்கள் மூளுவதால்
கவலையே மிஞ்சும் என்று
உலக சமாதானத்துக்கு
உரக்கக் குரல்
கொடுத்த உன்னை
உலகம் உள்ளவரை
உள்ளத்தில் வைத்து
வணங்குவோம்!!!
*****************************************
*****************************************
பேரறிஞர்
அண்ணா
அருந்தமிழ் அருவி
அண்ணா என்னும்
சிந்தனைக்கருவி
நீ – அறிவின் தேக்கம்
உன்னால் தமிழனுக்கோ
ஊக்கம்
தமிழுக்கோ ஆக்கம்
நறுமலர்த் தேனை
நாக்கினால் வடித்த
நயமான பேச்சாளர்!
பழுத்து விழும்
சுவைகனிபோல் அவர்
எழுத்தில் விழுந்தன
இன்பச்சுவை இலக்கியங்கள்
அண்ணா உன் பொன்னான
முழக்கத்தால்
முன்னாள் இருந்த
மூட வழக்கத்தை
முணுமுணுத்து ஓட
வைத்தாய்!
உன் எழுத்துக்கள்….
கள் சுரக்கும்
கவின்மலர் மொட்டுகள்!
ஏட்டில் என்றைக்கும்
இருக்கும் கல்வெட்டுகள்!
வெற்றிலைக்கும்
பாக்குக்கும் உன் வாய் சிவந்தது உண்டு
கோபம் கொண்டு உன்
முகம் சிவந்தது இல்லை!
மரியாதைக்கு உரிய
பகுத்தறிவு தந்தை
பெரியார் என்னும்
பல்கலைகழகத்தின்
சரியான மாணவன்
நீ! தமிழனுக்கு
உரிமை வேண்டி உன்னையே
தந்தவன்!
சீமான்கள் இடுப்பில் சிக்கித்தவித்த தமிழகத்தை
உன் உதடுகளால்
விடுதலை செய்தாய்!
உன் நாக்கு அசைந்தால்
அடிமைத்தமிழன்
தூக்கம் கலைந்தது;
துக்கம் ஓய்ந்தது!
ஏக்கம் ஒழிந்தது,
எண்ணம் விழித்தது!
சாதி குலம் சமயம்
என்ற சந்தைக்கூச்சல்
சடங்குகளை சாய்த்திடத்
துடித்த சரித்திர நாயகன்!
மனுதர்மம் உன்
பேச்சில் மண்டியிட்டது
வருணாசிரமத்தை
வதக்கி பிழிந்தாய்!
கருணாநிதியை நீதான்
கண்டாய்!
முத்துக் குவியல்களான
தத்துவக் கருத்துகளை
தமிழில் தந்தாய்!
கத்தியைத் தீட்டாதே
புத்தியைத் தீட்டு என்ற
சத்தியத்தின் சகோதரன்
நீ!
ஆழ்ந்த நுண்ணறிவால்
வீழ்ந்த தமிழனையும்
தாழ்ந்த தமிழகத்தையும்
தலைநிமிர வைத்தவன்
நீ!
அந்தியில் வெளிவரும்
திருடனைப்போல்
இந்தி இங்கே எட்டிப்பார்க்க
நினைத்தபோது
முந்தி நின்று
முத்தமிழைக் காத்தவனே!
சந்தெல்லாம் உன்
புகழைப்பேசுவதும் நம்
சந்ததியின் கடமையாகும்.
முடமான தமிழகத்தில்
மடத்துக்கு பெயர்
போன காஞ்சியிலே
திட நெஞ்சாய் நீ
பிறந்தாய்!
புடம் போட்ட தங்கமாய்
அரசியலில் இருந்தாய்!
மடமை கொண்ட மக்களில்
சிலர்
மாக்கள் ஆக அலைந்த
நேரம்
கடமை கண்ணியம்
கட்டுப்பாடே
கண்ணாகக் காக்க
வேண்டிய உடமை என்றாய்!
பாரதத்தில் அர்ஜுனனுக்கு
ரதம் ஓட்டினாராம்
கண்ணன்
பாதங்கள் மலிந்தபோது
தமிழ் மண்ணில்
இனமான சிங்கம்
ஈ.வெ.ராவின்
பகுத்தறிவு நெருப்புத்தேரைப்
பாங்காக ஓட்டியவன்
நம் அண்ணன்!
உண்மைத்தமிழன்
உள்ளத்தை அபகரித்த மன்னன்!
காஞ்சி மடத்தையே
கலகலக்க வைத்த
காஞ்சிப் பெரியவர்
நீயே! தமிழனுக்குச்
செந்தமிழ் சிறந்தோங்க
சென்னை மாகாணத்தைச்
சீர்மிகு தமிழகமாக
மாற்றினாய்!
உன் விரல் அசைந்தால்
தமிழன்னை தலையசைப்பாள்!
ஒட்டுமொத்த தமிழனையே
பேச்சால் அசைத்தாய்!
பேச்சினிலே தமிழை
எப்படி இசைத்தாய்?
பண்ணை அரசியலை
பதுங்க வைத்தாய்
கண்ணை இமை காப்பது
போல்
தமிழைத் தமிழன்
காக்க இருமொழிக் கொள்கைக்கே
இசைவு தந்தாய்!
ஒன்றே குலம் ஒருவனே
தேவன் என்று தானே
ஒருவிரல் காட்டினாய்!
இன்றைக்கு எத்தனை
பிரிவுகள் எத்தனைச் சாதிகள்
இதயம் வெடிக்கிறது
எமது அண்ணா!
உன் நாவினிலே வந்தது
நயாகரா நீர்வீழ்ச்சி
உன் சாவினிலே தமிழனுக்கு
வீழ்ச்சி!
அப்பருக்குச் சம்பந்தருக்குச்
சைவம் போல்
எனக்கு நீ அண்ணா!
உன் சிந்தனை வானம்
சிந்தியது எல்லாம்
சீர்திருத்த மழைத்துளிகள்!
உயிர் இருக்கும்வரை
உன் உள்ளத்தோட்டத்தில்
கள்ளம் இல்லாத
கருத்துப் பூக்கள்
கணக்கின்றிப் பூத்தது
அன்றோ?
காஞ்சியில் உதித்துக்
கன்னிமராவையே கரைத்துக்
கருத்தில் இருத்திய
காலத்தை வென்ற கதிரவனே!
கவின்மிகு சென்னையில்
உறங்கும் உத்தமனே!
முறையான ஆட்சி
செய்து ஏழையின் சிரிப்பில்
இறைவனைக் கண்டவனே!
உன் புகழ் உலகெங்கும்
ஓங்குக!
********************************
********************************
முத்தமிழ் அறிஞர் கலைஞர்!
தமிழைச் சுவாசித்துத்
தமிழையே உண்டு
தமிழையே குடித்துத்
தமிழாய் ஆன தலைவன்
நீ!
நடமாடும் தமிழே
உன்
உடம்பே தமிழகம்
ஆனது எப்படி?
இனமானத் தந்தை
பெரியாராய்
இன்பத்தமிழ் அண்ணாவாய்
இன்றைக்கும் வாழும்
இனிய தலைவர்!
தலைவன் என்பதற்கே
இலக்கணம் நீ!
இன்றைய மற்ற தலைவர்
எல்லாம்
தலை உள்ள மனிதரே
உன்னோடு ஒப்பிட்டால்!
அழுது புலம்பும்
உடன்பிறப்புக்கு
எழுதும் கடிதத்தையே
இலக்கியமாக்கக்
கற்றுத்தந்து கவர்கின்ற
தமிழ்க் கலைஞர்!
முழுதாக உன்னைப்
பார்த்தால்
முத்தழின் சங்கமம்
நீ!
வழுக்கையுள்ள தலைவர்
என்றாலும் கொள்கையில்
வழுக்காத தலைவர்!
மூச்சுக்காற்றாய்
முத்தமிழை
உள் இழுத்து வெளியிடும்
முத்தமிழ் அறிஞர்!
தூவலைக் கொண்டே
தூங்கும் தமிழனை
எழுப்ப வைப்பாய்!
தமிழினம் வீழாமல்
தாங்கிப் பிடிக்கத்
தமிழையே கையில்
எடுப்பாய்!
எழுத்துகளை எங்கிருந்தோ
எடுத்து வந்து
இழுத்துச் செல்வாய்
இன்பத் தமிழ்ச்சோலைக்கு!
திருக்குறளுக்கு
உரையுடன் ஓவியம் தந்த
திருக்குவளைச்
சூரியன் நீ!
ஊனில் உயிரில்
தமிழைத் திணித்தாய்!
தேன் சொட்டும்
குறள் தந்த வள்ளுவருக்குத்
தென் குமரி முனையில்
வான் முட்டும்
சிலை கண்டாய்!
“கோன்” என்றால்
இராஜராஜன்
கொஞ்சு தமிழ் என்றால்
நீ தானே!
கொற்றப்பந்தர்
எழுநிலை மாடத்தோடு
எழிலான பூம்புகாரைக்
கண்ட
நற்றமிழின் நாயகனே!
வற்றவே முடியாத
தமிழ்ச்சுரங்கமே!
தன்னேரில்லாக்
கலையின் அரங்கமே!
விரலைக் கொண்டே
வித்தைகள் செய்வாய்!
குரலைக் கொண்டே
கூட்டம் சேர்ப்பாய்!
எழுத்தைக் கொண்டே
ஏற்றம் பெற்றாய்!
என்னரும் தமிழர்
வழுத்தும் தலைவா!
அறிவில்
பழுத்தும் அடக்கம்
கொண்டாய்!
முத்துவேலின் ஒரே
பிள்ளை
இரண்டாய்த் தமிழ்
இனம் ஆகாதிருக்க
முத்தமிழைப் போற்றி
நற்றமிழ் நாட்டை
நான்கு முறை ஆண்டாய்!
ஐந்து விரல் காட்டும்
ஆறுமுகம் நீ!
(ஆட்சியாளர், அரசியல்வாதி, பேச்சாளர், எழுத்தாளர், கவிஞர், பத்திரிக்கையாளர்)
ஏழிசையில் சங்கத்
தமிழ் தந்தாய்! காற்று
எட்டும் இடமெல்லாம்
காந்தத் தமிழை வீசவிட்டாய்!
இண்டர்நெட்டில்
இனிய தமிழை உலவ விட்டாய்!
கணினியிலும் கன்னித்தமிழை
நுழைத்து விட்ட
கன்னல் தமிழ்க்
கலைஞரே!
இனி எவனால் தமிழை
அழிக்க இயலும்?
எல்லோரும் போற்ற
வாழும்
தொல்காப்பியத்தின்
பரம்பரையே! இந்த நூற்றாண்டின்
ஒல்காப்புகழ் வள்ளுவரே!
பொன்றாப் புகழ்ப்
புறநானூறே!
வீதியில் சாதிமதம்
பேசி வீணர்கள் அலைந்த போது
சாதியும் மதமும்
சமயமும் தவிர்த்தேன் என்றே
வடலூர் வள்ளலாரின்
கனவினை நனவாக்கச்
சமத்துவபுரம் தந்தவனே
சரித்திரத்தில்
நிலைத்து நின்றவனே!
வெள்ளைச் சட்டை
மஞ்சள் துண்டில்
நீ ஒரு சன்மார்க்கி!
சன்மார்க்கம் ஒன்றே
நன்மார்க்கம் என்ற
வடலூரார் திருவருளால்
இன்னும் தலைமுறைகள் பலநீ
வாழவேண்டும் தமிழை
தரணியிலே உயர்த்த வேண்டும்.
வள்ளுவருக்கு கோட்டம்
கண்ட நீ
வள்ளலாருக்கும்
கோட்டம் காண
வேண்டுகிறேன்!
விரும்புகின்றேன்.
இழுத்துப் போட்ட
எய்ட்ஸ் நோயாளியாக
தமிழன் ஆகாமல்
இருக்க
இனமான உணர்வைச்
சிந்தையில் ஊட்டி
எழுந்து நடக்க
வைத்த
தமிழர் தலைவா!
வாழ்க நீ! வாழ்க!
******************************************
******************************************
சந்தனத்தையும்
ரோஜாவையும்
சரிபாங்காய்ச்
சேர்த்து அரைத்துச்செய்த வண்ணன்!
தேக்கையும், பொன்னையும்
சேர்ந்த உடலோ!
மனிதன் ஆன கருணைக்
கடலோ!
வெண்ணிறத் தொப்பி
அணிந்த
பொன்னிற மன்னன்!
மண்ணில் வள்ளலாக
வாழ்ந்த கர்ணன்!
அண்ணாவுக்கு இதயக்கனி!
பறித்ததெல்லாம்
வெற்றிக்கனி!
எத்திசை நாட்டவரும்
மெத்தப் போற்ற
சத்துணவுத்திட்டம்
தந்த சத்தியாவின் புதல்வன்!
திரைப்படத்தில்
நீ நடித்தாய்!
தமிழர் தம் வாழ்வையே
அதில் படித்தார்!
தருமம் செய்த தவத்தால்
தமிழ் மண்ணில்
கிடைத்த தலைவன் நீ!
தன் தமிழின் பெருமையைப்
பறைசாற்ற
தஞ்சை தரணியிலே
தமிழ்ப்பல்கலைக் கழகம் கண்ட
தங்கமானத் தலைவர்
வாழ்க!
எங்கெல்லாம் ஏழைகள்
அழுதனரரோ
அங்கெல்லாம் சென்று
அவர் துயர்
அயராது நீர் துடைத்தாய்!
தங்கும் தயவால்
தரணியை வென்ற
தனிப்பெரும் கருணை!
புரட்சி நடிகராகிப்
புரட்சித்தலைவரான
புரட்சி மனிதன்
நீ!
இன்முகச் சிரிப்போடு
பொன்முகம் காட்டி
மக்களை மயக்கிய
பொன்மனச் செம்மலே!
நீ
பொன்னிற மேனியில்
வந்த
ஏழையின் ஏணி!
படிக்காத ஞானி!
மக்களின் ஊனிலும்,
உயிரிலும், உறவிலும்
உணர்வாய் நின்று
உயரிய குணத்தோனே!
தானமும், தருமமும்
தண்ணீர் உனக்கு!
மானமும், கொள்கையும்,
வாக்கும், நாக்கும்
உடம்பினில் தோலாய்
மக்களும், நீயும்
செருப்புடன் கால்
போல்
செந்தமிழ் நாட்டு
மக்களின் மனத்தைச்
சேர்த்துப் பிடித்த
சிவந்தோன் வாழி!
சத்துணவு தந்து
சரித்திரம் படைத்த
சாகாத் தலைவா!
சந்திரனாய் வாழி!
– இராமச்
சந்திரனாய் வாழி!
கண்களைத் திறக்கும்
கலைஞரே!
திருக்குவளையில்
விழுந்த வித்து ஒன்று
திருவாரூரில் வேர்
விட்டு
தமிழகம் எங்கும்
கிளைத்துக்
தமிழ்க் கனிகளை
உலகெங்கும்
வழங்கிக் கொண்டிருக்கின்றது.
அது தான்
கலைஞர் என்னும்
கற்பக விருட்சம்!
நெஞ்சுக்கு நீதி
தந்து – தமிழர்
நெஞ்சமெல்லாம்
நிறைந்தவர்!
கலைஞர் பிறந்த
பின்
திருவாரூரில் தேருக்கு
மதிப்பு இல்லை
அவர் பேருந்துக்கு
தான் மதிப்பு!
உழவர் சந்தையைக்
கொண்டு வந்து
உழவரை உயர்த்திடும்
சொல்லேர் உழவர்!
கிழவர் என்று எவரேனும்
கலைஞரை சொல்ல முடியுமா?
சொன்னால் என் பேனா
முனையே
சொல்பவனை கிழித்து
விடும்!
எழுபத்தைந்திலும்
அவருக்கு எத்தனை சுறுசுறுப்பு!
எழுப்பும் குரலில்
அதே வித்தகக் கரகரப்பு!
கண்ணப்ப நாயனாரை
விட என்
கண்ணுக்குக் கலைஞரே
உயர்வாய்த் தெரிகின்றார்!
கண்ணப்ப நாயனார்,
ஒருவருக்குத்தான்
கண்ணைக் கொடுத்ததாக
புராணம் கூறுகின்றது.
நம் கலைஞரோ
எத்தனை ஆயிரம்
ஏழைகளின் கண்களை
நித்தமும் திறந்து
வைத்துக் கொண்டிருக்கிறார்!
கண்ணொளி தந்து
குருடர் வாழ்வில்
கண்களாய் விளங்கும்
வள்ளல் ஆனார்!
வள்ளுவர் காட்டிய
சமத்துவத்தை
வள்ளலார் உணர்த்திய
சமத்துவத்தைப்
பெரியார் விரும்பிய
சமத்துவத்தைச்
சமத்துவபுரத்தால்
சாதித்த தலைவர்!
சரித்திரம் முழுதும்
சரித்திரமானவர்!
சமத்துவபுரங்கள்
அவருக்கு சாதனைப் புரங்கள்!
புரட்சியாளர்களின்
கனவுப்புரங்களைப்
பூந்தமிழ்க் கலைஞர்
தானே நிஜப்புரங்கள் ஆக்கினார்.
வருமுன் காப்போம்
திட்டம் தந்து
மருத்துவ உலகின்
மருந்தாய் ஆனார்!
மண்டும் நோய்கள்
ஏழைகள் உடலை
அண்ட விடாமல் செய்யும்
அற்புதத் திட்டம்!
அண்ணா மறுமலர்ச்சி
திட்டம் தந்தார்!
அண்ணாவின் தம்பி!
அவரால் அன்றோ எல்லாக்கிராமமும்
முன்னாள் இருந்த
நிலையினில் மாறி
நன்றாய் உள்ளது!
நாடு செழித்தது!
கலைஞரே! நீங்கள்
“நமக்கு நாமே”
என்றாலும்
எமக்கு “நீயே”!
எமக்குள் நீயே!
உமக்கு நாமே, உமக்குள்
நாமே!
பள்ளிகள் தோறும்
கணிப்பொறி அமைத்துச்
சொல்லிக் கொடுக்கச்
சொல்பவர் நீயே!
தமிழில் இணையம்
கொண்டு வந்தவரே!
தமிழோடு உன்னை
இணைத்தே தந்தவரே!
முத்தமிழ் வித்தகரே
உங்கள் சாதனைக்கு – உமக்கு
அந்த வெண்ணிலவை
உடைத்து
மணிமகுடம் செய்து
முடிசூட ஆசை!
வானவில்லை கொண்டு
வந்து
அலங்கல் செய்து
உன் தோளுக்கு
சூட்டிட ஆசை!
வானத்தில் மின்னும்
மின்மினியை
உன் சால்வைக்கு
ஜரிகையாக்க எனக்கு ஆசை!
கோபால புரத்துக்
குறளோவியமே!
கோட்டை முதல் குடிசைவரை,
தமிழ்வளர்க்கும்
கோன் ஆன காவியமே!
வாழ்க! வாழ்க!!
*****************************************
தன்நிகர் இல்லா,
தன்னம்பிக்கை வேண்டும்!
முன்னேற வேண்டும்
முதுகில் குத்தாமல்!
விண் ஏற வேண்டும்
அறிவினில் அன்பினில்!
கண்ணை விட நம்
தமிழைக் காக்க வேண்டும்
மதியினில் தெளிவு
பெற்றோரே! இந்த
மண்ணை என்றும்
ஆளுதல் வேண்டும்!
ஆழக்குழி தோண்டி!
ஆணவத்தை புதைக்க
வேண்டும்!
ஒருவனுக்கு ஒரு
தந்தை போல
உடலுக்கு ஓர் உயிர்
போல
உருவாக்கியதும்
ஒன்றே என்று நம்
உள்ளத்தில் என்றும்
எண்ணிட வேண்டும்.
“இயற்கையே தெய்வம்”
என்று இன்புற வேண்டும்.
இல்லார் என்பவர்
எவரும் இல்லை
என்றும் நிலை இங்கே
வரவேண்டும்.
பொல்லார் எல்லாம்
பொறாமை நீங்கி
நல்லார் ஆனார்
எனும்நிலை வேண்டும்
மனிதன் காலில்
மனிதன் விழும் வழக்கம்
இனியாவது இங்கே
மாறிட வேண்டும்.
********************************************
********************************************
உருக்களைக்கும்
பெரும் பசியால்
உடல் இளைத்தோர்
நடை தளர்ந்தோர்
மெருக்குலைந்து
பெரும்பிணியால்
அவதிப்பட்டோர்
அல்லல் உற்றோர்
பெருந்துன்பம்
கலைதற்கே
பெருமானார் வந்துதித்தார்!
பெறற்கரிய பேரும்
பெற்றார்
ஒருமைக்குள் இவ்வுலகோர்
வந்து
பெருமைபெற்று வாழுதற்கும்
வழியைச் சொன்னார்.
வெறுக்காமல் எவரிடமும்
அன்பைப் பொழிந்து
மறுக்காமல் இரப்போர்க்குக்
கொடுக்கச் சொன்ன
செருக்கற்ற செந்தமிழன்
செம்மலும் ஆனார்.
இரக்கம் என்னை
விட்டுப் பிரிந்தால்
என்னுயிர் என்னை
விட்டுப் பிரியும் என்று
இவர் ஒருவர் தானே
உலகத்தில் உண்மையாய் சொன்னார்!
சாதிக்கூவத்தில்
குளித்துக் கொண்டு
சதிகள் பல செய்த
சண்டாளக் கூட்டத்திற்கும்
சமயக் குட்டையில்
ஊறி நித்தமும்
சளிக்காமல் அதையே
குடித்தவர்களுக்கும்
மரங்களாக நின்றிருந்த
மனிதக்கூட்டத்திற்கு,
வரமாக “ஒருமை”
என்ற உணர்வைத் தந்தார்.
அண்டம் அனைத்தையும்
தழுவிய
ஆன்ம நேய ஒருமைப்பாட்டை
ஞாலத்தில் அறிமுகம்
செய்தார்.
ஒவ்வோர் உயிரினத்தின்
உயிராக
உடலுக்கு உள்ளே
என்றென்றும்
ஒளிந்திருக்கும்
இறைவன் ஒருவரே என்றார்.
மனிதன் தம் அகத்தும்
மனம் தவிரப் புறத்தும்
மா நடம் புரிகின்ற
தனித்தன்மை கடவுள்
ஒருவரே என்றார்.
இயற்கை உண்மையாய்
இயற்கை விளக்கமாய்
இயற்கை இன்பக்
கடவுளை –
அறிவு பூர்வமாக
அன்பால் வழிபட்டு
“அருட்பெரும் ஜோதி”
என்றே சொன்னார்.
பாவங்கள் அனைத்தையும்
கழுவிவிட்டு
ஜீவகாருண்ய ஒழுக்கம்
கொண்டே
யாவரும் இறைவனை
அடையச் சொன்னார்.
புராணங்கள், இதிகாசங்கள்,
புகட்டும் மொழிகள்
உண்மையல்ல என்பதையும்
வேதங்கள், ஆகமங்கள்
என்றுவீண்
வாதங்கள் தேவையில்லை
என்பதையும்
விளக்கிச் சொன்னார்!
விளங்கவும் சொன்னார்!
கருமாதி என்றும்
திதி என்றும்
கரும காரியங்களை
நிறுத்தி அந்நாளில்
தருமம் என்றும்
தானம் என்றும்
உருப்படியாய்ச்
செய்யச் சொன்னார்..
*************************************************
*************************************************
வள்ளலார்
யார்?
இருள் நீக்கி இன்பம்
தர
மருதூரில் உதித்த
மாசற்ற துறவி!
பொருள் தேடாப்
பெருந்தகை
அருட்பெரும்ஜோதி
ஆண்டவரின்
அன்புப்பிள்ளை
அனைவரும் போற்றும்
அருளாளர்! ஆன்மீகத்தின்
சிகரம்!
ஆணவம், ஆடம்பரம்,
அறவே ஒழித்து
ஆன்ம நேய ஒருமைப்பாட்டைப்
போதித்த
ஆழ்ந்த சிந்தனையின்
அடக்கம்! அற்புதப் பிறப்பு!
உலகியல், அருளியல்,
வாழ்வியல் தன்னில்
உன்னதத் தத்துவங்களை
உவட்டாத
இன்முகத் தமிழில்
தந்த தத்துவ ஞானி!
பழகிச் சிவந்த
நம் தமிழில்
அழகுமிகு சொல்
கோர்த்து
குழவி முதல் கிழவர்
வரை பாடும் பாட்டாய்
அருட்பா ஈந்த ஆன்ற
புலவர்!
முக்தியுடன் சித்தியும்
பெற்றுச்
சுத்ததேகம், பிரணவதேகம்,
ஞானதேகம் பெற்ற
சத்தம் எழுப்பாத சமுதாய சீர்திருத்தவாதி!
பித்தம், வாதம்,
சிலேத்துமக் கோளாறுக்குச்
சத்தன மூலிகைகள்
கொண்டு
நித்தமும் நோய்கள்
பல தீர்த்த
சித்த மருத்துவர்! சீர்மிகு வள்ளல்!
முனைப்புடனே சென்னையிலும்,
வடலூரிலும்
முதியோர் கல்வியை
முன்னின்று
முதன் முதலில்
நடத்தி ஆங்கே
முப்பாலையும் போதித்த
முழுமதியாளர்!
சமுதாயத்தில் சச்சரவு
நீங்க
சமபந்தி காணும்
இந்நாளில்
சன்மார்க்க சீலர்
வடலூர் ஐயாவோ அன்றே
சமரச வேத பாடசாலை
கண்டார்!
சமத்துவபுரத்தின்
முன்னோடி ஆனார்
நசிந்த மக்களுக்கும்
பசித்த ஏழைகளுக்கும்
புசிப்பதற்குச்
சோறு இட்டுக் கொண்டிருக்கும்
பசிப்பிணி மருத்துவர்!
பரந்த மனத்தாளர்
பொன்மனம் போன்ற
மென்மனம் கொண்ட
என்மனக்கோ ஐயா
ஒருவரே!
பிறந்தது குழந்தையாக!
வளர்ந்தது மனிதனாக!
வாழ்ந்தது புனிதனாக!
விளங்குவது தெய்வமாக!
***************************************
***************************************
வள்ளலார் என்னும் வான்மழை
அன்பின் உருவமாய்
அறிவின் சிகரமாய்
பண்புத் தமிழ்ப்பாவலராய்
இங்கு வந்து உதித்திட்ட
ஈகையின் இருப்பிடம்!
புத்தன், ஏசு,
வள்ளுவர், பின்பு காந்தி என்று
அத்தனைபேரின் உருவமும்
அவரே!
முத்தமிழின் வித்தகர்!
எத்திசையும் அருள்
மணக்க
முத்தான தமிழால்
இங்கே
கொத்தாக அருட்பா
தந்த
சித்தாரம் இராமலிங்கரைச்
சிரம் தாழ்த்தி
வணங்கு!
சாதிப்பித்து,
மதப்பித்து
இனப்பித்து, பணப்பித்து
என்ற
ஈனப்பித்துகளை
நீக்குதற்கு
இத்தரையில் வந்துதித்த
என் இதயப்பித்து!
பணத்தில் ஆசையொன்றும்
இல்லை என்றே
பணிவோடு மறுத்துவிட்ட
குணத்தின் கோ அவரே!
கொஞ்சுதமிழ் தவம்
இருந்து பெற்ற
விஞ்சு தமிழ்க்கோ
அவரே!
தேன் வடியும் பலாவோ!
தெவிட்டாத கவிச்சாறோ!
தெள்ளமுதோ!
மூவேந்தர் தமிழின்
உலாவோ என்று
தாம் உணர்ந்த உணர்வையெல்லாம்
தமிழாக வடித்து
விட்டார் அருட்பாவில்!
அன்பும், அறிவும்
மனிதனுக்கு
என்றும் இருக்கவேண்டிய
இரண்டு கண்கள் என்று
என்பும் உருக எடுத்துச்
சொன்ன
ஏழைத்துறவி!
ஏழைகளின் ஏக்கத்தை
– பசியைப்
போக்குதற்கு உலகத்தில்
தூக்கத்தை கலைத்துவிட்ட
தூய தொண்டர்!
வில்லோடு விளையாடும்
வீரனைப்போல் தமிழில்
சொல்லோடு விளையாடிய
தீரர் அவர்!
மொத்த தமிழையும்
தன் வாழ்நாள் முழுதும்
குத்தகைக்கு எடுத்திட்ட
குவலயக்கவி!
அகத்தினில் ஒளிரும்
அன்பே
இகத்தினில் எங்கும்
சிவம் என்று
யுகத்தில் அவரே
வகுத்துச் சொன்னார்!
பள்ளிக்குச் சென்று
படிக்கவில்லை என்றாலும்
முள்ளிருக்கும்
ரோஜாவின் வாசம்போல
அள்ளிக் கொண்டு
வரும் அமுதத் தமிழை
எங்கிருந்து கற்றார்
என்று
எவருக்கும் புரியவில்லை!
வள்ளல் பெருமானே… …
மறத்தமிழர் குடியினிலே
இரக்கத்திற்கு
எவர் என்றால் உலகம்
உரக்கக் கூறுவது
உண்மைதானே!
ஈகையால் வரலாற்றில்
வாகை சூடியது உம்மை
விட்டால் வேறு யார்?
நெஞ்செலும்பும்
வெளிவர இளைத்துப்போன
செஞ்சொல் சோதியே!
சன்மார்க்க வீதியே!
சமரச நீதியே!
வெண்பாவுக்கு புகழேந்தியாம்!
விருத்தத்திற்கு
கம்பளமாம்! நான் சொல்வேன்
வருத்தத்திற்கு
வள்ளலார் என்று!
உங்கள் தமிழைப்
படித்தே
கத்துக்குட்டி
நான்
கவிஞன் ஆனேன்!
இந்த வாழிய பயிருக்கு
வான்மழையே!
உன்னை வணங்குகின்றேன்!
********************
கதிரவன் கிழக்கே
கிளம்பும் முன்னே
காலையில் கண்விழி
சின்னத்தம்பீ!
காலைக் கடனை முடித்த
உடனே
கண்டிப்பாய் பல்லைத்
துலக்கு!
முகத்தை கழுவி
நன்றாய்த் துடைத்து
அகத்தை கழுவத்
தியானம் பழகு!
சுகத்தை வேண்டி
வாரம் ஒரு முறை
நகத்தை வெட்ட மறந்து
விடாதே!
தேனீரும் காபியும்
குடிக்கும் பழக்கம்
தேகத்தை கெடுக்கும்
உனக்கு வேண்டாம்.
நேற்றைய பள்ளிப்
பாடத்தை எடுத்துச்
சற்று நேரம் படிப்பாய்
தம்பீ!
படித்ததை ஒரு கணம்
எண்ணிப் பார்த்து
மடித்து அழகாய்
எடுத்து வைத்துக்
குளித்து விட்டுச்
சீருடை அணிந்தே
சிற்றுண்டி உண்டு
சிரமம் இன்றிப்
பள்ளிக்குப் போவாய்
சின்னத்தம்பீ!
பாங்குடன் பயில்வாய்
அன்புத்தம்பீ!
***********************
நிலவே நீ வெண்மை!
என் ஐயன் வள்ளலாரும்
வெண்மை! உடையில் உள்ளத்தில்
நிலவே உன் வெண்மையிலும்
ஒரு களங்கம் உண்டு!
அதை உன்னால் துடைக்க
முடியாது!
என் ஐயனுக்கு ஏற்பட்ட
களங்கத்தை
அவரே துடைத்தெறிந்தார்!
நிலவே – நீயோ பூமியைச்சுற்றி
வருகிறாய்
ஆனால் என் ஐயனைச்சுற்றி
எத்தனைபேர் வந்தார்கள்!
நிலவே நீ தேய்வாய்!
என் ஐயன் புகழ்
ஒருநாளும் தேயாது – அது வளரும்!
வளர்ந்து கொண்டே
இருக்கும்!
உன் எல்லையை தாண்டியும்
வளரும்!
பிள்ளைக்கு சோறு
ஊட்ட நீ ஒரு
காட்சிப் பொருள்
அன்றி
யாருக்காவது சோறு
ஊட்டியது உண்டா?
சோர்ந்திருந்த
எத்தனை ஏழைக்கு
என் ஐயன் சோறு
ஊட்டினார்!
இன்னும் ஊட்டிக்
கொண்டு இருக்கின்றார்!
நிலவே – நீ குளிரை
பொழிவாய்!
என் ஐயனைப்போல்
அருளைப் பொழிய முடியுமா உன்னால்
நிலவே – நீ இருளில்
ஒளியை சிந்துவாய்!
இருண்ட சமுதாயத்தில்
ஒரு அருட்பாவை
உன்னால் சிந்த
முடியுமா?
ஒரே ஒரு புண்ணியம்
மட்டுமே நீ தேடிக்கொண்டாய்
என் ஐயனை நானே
பார்த்ததில்லை
நீ பார்த்துவிட்டாய்!
நிலவே உன்னால்
நெருப்பை தொடமுடியாது..
என் ஐயனுக்கு நெருப்பும்
நீரும் ஒன்றே!
உனக்கு பெருமையில்லை!
என் ஐயனோடு
உன்னை ஒப்பிட்டால்!
*********************************
*********************************
மதுவை
மற
மதுவை குடித்தால்
–
மண்டை கிறுகிறுக்கும்
சண்டை உனையிழுக்கும்!
மதியோ மாறும்
சதியோ நிறைவேறும்
நடை விலகும்
உடையும் விலகும்
குடல் வேகும்
குடும்பம் நோகும்
ஈரல் வீங்கும்
வேலைகள் தூங்கும்
சுற்றம் பாழ்படும்
குற்றம் வேர்விடும்
நாக்கு குளறும்
வாக்கு மாறும்
போக்கு மாறும்
குடும்பம் அழும்
ஊர் சிரிக்கும்
கண்கள் கலங்கும்
கருமணி சுருங்கும்
பெண்கள் விலகுவர்
நாடி ஒடுங்கும்
நரம்பு தளரும்
பெருமை வீழும்
சிறுமை சூழும்
காசு குறையும்
மாசு கூடும்
தொண்டை எரியும்
தொல்லைகள் பெருகும்
தொடக்கத்தில் மது
உனக்கு அடிமை
இறுதியில் அதற்கு
நீ அடிமை!
வாழ்க்கையைத் துரத்திப்
பிடித்து
மரணத்தைத் தொடும்
முன் –
மனதைத் தேற்றி
மதுவை மற!...
பாட்டில்கள் காலியாகும்
போது
பாக்கெட்டும் காலியாகும்;
நாளையும் குடிக்க
மனது துடிக்கும்
நாளையை நினைத்துக்
குழந்தைகள் துடிக்கும்!
மதுவை மறந்து மறுபிறப்பு
எடு!
மனிதனை மிருகமாக்கும்
மதுவினை விடு!
*************************
*************************
உண்மைகள்
முயலுக்கு கொம்பு
முளைக்க முடியாது
முயலாமல் செல்வம்
ஈட்ட முடியாது
முயலாமல் ஈட்டிய
செல்வம் என்றால்
முழுமையான இன்பம்
தராது!
கடலுக்கு மேலே
கட்டை வண்டி போகாது
உடலை வருத்தாத
உடற்பயிற்சி கிடையாது
உடற்பயிற்சி இல்லாத
உடம்பால் உனக்கு
ஊறே விளையும் அன்றி
சுகம் விளையாது!
மரம் இல்லாமல்
மழை பொழியாது
மழை இல்லாமல் பயிர்
விளையாது
பயிர் விளையாமல்
பசி அடங்காது
மழை பெய்திடவே
மரத்தை காத்திடு!
சினம் இல்லாதவன்
மனிதரில் தெய்வம்!
பணம் இல்லாதவன்
மனிதரில் ஏழை!
குணம் இல்லாதவன்
மனிதனே இல்லை
வனம் இல்லாததும்
நாடே இல்லை.
மக்கள் தொகையினைக்
கட்டுப்படுத்திச்
சிக்கன வாழ்வில்
சிறந்தே வாழ்வோம்
எக்கணமும் பொய்,
புலால் தவிர்த்துத்
திக்குகள் போற்ற
வாழ்வோம் வாரீர்!
***************************************
***************************************
தமிழ்வழிக்
கல்வி அவசியமே
தமிழ்வழிக் கல்வியை
தடுக்கும் மிடியன்
தாயை வெறுக்கும்
தரங்கெட்ட கொடியன்!
கொடுமை கொண்டு
சீறும் போதும்
கோபம் கொண்டு எதிர்க்கும்
போதும்
கொட்டும் மொழி
அவனவன் தாய்மொழிதான்!
எண்ணங்கள் ஊறும்
போதும் கற்பனையின் போதும்
கண்டிப்பாய் அவனவன்
தாய்மொழிதானே வரும்!
ஆங்கில அறிவும்
இருக்க வேண்டும்
ஆனால் தமிழை இன்னும்
பெருக்க வேண்டும்!
அறிவியலின் அனைத்துத்
துறையிலும்
செறிவான தமிழைச்
சேர்க்க வேண்டும்!
மேல்நிலைப்பள்ளி
வரை பாடங்கள் அனைத்தையும்
மேலான தமிழில்
பயின்றவன் நான்!
தமிழனுக்கு பிறந்த
தமிழர்கள்
தமிழ்வழிக் கல்வியை
தடுக்கக்கூடாது.
வேற்று மொழிகளை
உடைபோல் கருதி
வேண்டும் இடங்களில்
மட்டும் பயன்படுத்து!
தமிழை நமது உடல்
போல் கருது!
உடலில் இருக்கும்
உயிர்போல் கருதிக்
கடல்போல் கன்னித்
தமிழைப் பெருக்கிக்
காலம் எல்லாம்
காத்து நிற்போம்!
***************************************
***************************************
ஆதியில் தோன்றிய
மனிதன் ஒருவனால்
ஆயிரம் லட்சம்
கோடி என்றே
மீதி மனிதனும்
பிறந்தான்! அதனால்
ஆதிபகவன் என்றே
சொல்கின்றார் (குறள் 1)
வாழும் உலகினில்
அறிவை வளர்த்து
வானம் போன்ற ஒப்பிலா
அறிவால்
சூழும் மடமையை
மதியென்னும் ஒளியால்
வீழும்படிச் செய்பவன்
வாலறிவன்! என்றார். (குறள் 2)
இன்னும் சொல்கின்றார்
… …
பணிவோடு பண்புகள்,
அன்பால் நிறைந்து
மனிதர்கள் மனதில்
புகுந்தவன் தெய்வம்! (குறள் 3)
விருப்பங்களை நாடி
ஓடாமலும்
வெறுப்பது என்பது
இல்லாமலும்
விருட்சமாய் வாழும்
மனிதனே தெய்வம்! (குறள் 4)
நன்மைகள் கண்டு
இன்புறமாட்டார்
தீமைகள் கண்டு
துன்புறமாட்டார்
உண்மையில் அவர்
தான் மனிதரில் தெய்வம்! (குறள் 5)
ஐம்பொறி அடக்கக்
கற்றவன் எவனோ
ஐயமில்லை அவன்
தான் உண்மையில் தெய்வம் (குறள் 6)
ஓங்கிய மாண்பால்
ஒழுகும் குணத்தால் தனக்கு
ஒப்பு எதுவும்
எங்கும் இல்லாதவன் தெய்வம்! (குறள் 7)
அறவழி நிற்கும்
சான்றோர் எவரோ
மறுக்காதே அவரும்
மதிப்பால் தெய்வம்! (குறள் 8)
எவ்வகை நல்குணம்
இங்கே உண்டோ
அவ்வகைக் குணங்களைத்
தம்மிடம் கொண்டவன் தெய்வம்! (குறள் 9)
மேலே காட்டிய பண்புகள்
அனைத்தையும்
தன்பால் கொண்டவன்
தாளை வணங்கினால்
தடையின்றி வாழ்க்கைக்
கடலைத்
தனித்தனி மனிதனும்
துணிவாய்க் கடக்கலாம் (குறள் 10)
இன்னும் காட்டுகிறார்….
யான், எனது என்னும்,
வீண் அகம்பாவத்தை,
ஆணவத்தை
அடியோடு களைந்து
எறிந்தவனே
அளவிலாப் புகழுக்கு
உரிய தேவன் என
அர்த்தமாவான் தெரிந்திடுவீர்
தெளிவான அறிவால்! (குறள் 346)
பற்றற்று இருப்பவனின்
பற்றுகளை நாம்
பற்றின் நம் பற்றுகள்
விலகும்! (குறள் 350)
குறைகள் எதுவும்
இல்லாமல் நாட்டைக்காத்து
முறையுடன் ஆட்சியைச்
செய்யும் மன்னவனே
இறைவன் என்று மதிக்கப்படுவான்! (குறள் 388)
தெய்வம் செய்யும்
என்று வாளா இருப்பதை விட
மெய்யை வருத்தி
முயற்சிகள் செய்யின்
கைமேல் பலன் கண்டிப்பாக
கிட்டும் என்பதும்
பொய்யில் புலவர்
புகன்ற வார்த்தை! (குறள் 619)
பிச்சை எடுத்து
வாழும் நிலை வந்தால்
நிச்சயம் உலகைப்
படைத்தவனும் என்ன… …
சர்ச்சைக்கு உள்ளனவாக
இருந்தாலும் அழியட்டும்! (குறள் 1062)
அகத்தில் உணரும்
உணர்வுகளை
முகக்குறி கொண்டே
மொழிவோம் ஆயின்
செகத்தில் அவனும்
தெய்வத்திற்கு நிகரே! என்பதும்
செந்நாப்போதர்
செப்பிய வாக்கு.. (குறள் 702)
அறநெறியில் நின்று
எப்போதும்
பிறழாத வகையில்
வாழ்வாங்கு வாழ்ந்து
பிறரும் போற்ற
வாழும் மனிதன்
வானத்தில் வாழும்
தெய்வத்திற்கு சமமே!... (குறள் 50)
வான்மறை வள்ளுவர்
கூறும் மொழிகளை
ஏன் மறந்து எங்கெங்கோ
அலைகின்றீர்?
****************************************
****************************************
தமிழன்
காக்கும் ஒருமைப்பாடு
காவிரியில் தண்ணீர்
விட
கர்நாடகம் மறுக்கிறது
தாவி வந்த இந்தியோ
இங்கே
தழைத்து விட துடிக்கிறது.
தமிழுக்கு வடக்கே
இடமில்லை என்று
தலைநகர் டெல்லி
மறுக்கின்றது.
“விவாஹ சுபமுகூர்த்த”
மாக்கித் திருமணத்தில்
விளங்காத மொழியில்
உளறுகின்றனர்.
புதுமனைப் ப்குவிழாவைக்
“கிரஹப்பிரவேசம்”
என்றே வடமொழியில்
கீச்சிடுகின்றார்!
தரைமீது இருப்பதும்
தமிழ்நாட்டில் இருப்பதும்
தெய்வமாகக் கோயிலாகத்
தமிழனுக்குத் தெரியாது.
ஆண்டவனைக்காண ஆந்திரா
செல்வார்
ஐயப்பன் என்றே
கேரளா செல்வார்
இப்படியாவது
ஒருமைப்பாட்டை
ஓங்கி வளர்க்கும்
தமிழா நீ வாழ்க!
***************************
***************************
இருபத்து
ஓராம் நூற்றாண்டே! வருக!
இருபத்து ஓராம்
நூற்றாண்டே
இனிதே வருவாய்!
இருகரம் கூப்பி
இன்முகத்தோடு வரவேற்கின்றேன்!
உன்னிடம் சில கேள்விகள்…
…
சாதியை இனியாவது
ஒழிப்பாயா – அல்லது
சாதியைக் கொண்டே
என்னையும் அழிப்பாயா?
காவிரியில் நீர்
தவறாமல் வருமா! அல்லது
காய்ந்த நிலம்
பார்த்து விடும்
கண்ணீரே காவிரியாய்
ஆகுமா?
தமிழன் எல்லாம்
தமிழை படிப்பானா – அல்லது
தமிழ் தெரிந்திருந்தும்
தெரியாது என்று நடிப்பானா?
இதயத்தை இறையருளால்
நிரப்பி இங்கே
இனச்சண்டை ஓயுமா?
அல்லது
இகத்தையே அழிக்கும்
அணுகுண்டு வெடித்து
இவ்வுலகம் அழியுமா?
மந்திரிகள் எல்லாம்
மக்களில் ஒருவர் என்று
மனதுக்குள் நினைப்பாரோ!
அல்லது
மண்டைக் கனம் கொண்டு
மண்ணை வளைத்துச்
சொத்தைச் சேர்க்க
மனதுக்குள் எண்ணுவாரோ?
******************************
******************************
வள்ளலாரும்
பெரியாரும்
கடவுளைக் கற்பித்தவன்
முட்டாள் என்றார் பெரியார்!
கடவுள் நிலைக்கு
மனிதன் வளரக் கற்பித்தார் வள்ளலார்!
கடவுளை பரப்பியவன்
அயோக்கியன் என்றார் பெரியார்!
கருணையே கடவுள்
என்று பரப்பியவர் வள்ளலார்!
கடவுளை வணங்குபவன்
காட்டுமிராண்டி என்றார் பெரியார்!
காட்டுமிராண்டித்தனமாகக்
கடவுளை வணங்கக்கூடாது என்றவர் வள்ளலார்!
காட்டுமிராண்டித்தனமாகக்
கடவுளை காணக்கூடாது என்றவர் வள்ளலார்!
ஏட்டிக்கு போட்டியாக
சொல்லவில்லை;
கூட்டிக்கழித்து
சிந்தித்து பாருங்கள்;
கருணை இல்லாதது
கடவுளே இல்லை!
கருணையை தவிர கடவுளும்
இல்லை!
ஆத்திகத்துக்கும்
நாத்திகத்துக்கும் பாலம் போட்ட
ஆன்மீகப் பகுத்தறிவு
ஐயா வடலூர் ஐயா!
**************************************
புதுக்கவிஞன்
எதுவும் புரியாமல்
எழுது!
எவருக்கும் புரியாமல்
எழுது!
எதுகை, மோனை இன்றி
எழுது!
எதிரில் இருப்பவரை
குழப்பு!
இயன்றவரை இங்கிலீஷ்
கலந்து எழுது!
நீயே தலைசிறந்த
புதுக்கவிஞன்!
***********************************
***********************************
{தலைமை ஆசிரியர்
திரு.ப.அகோரமூர்த்தி, எம்.ஏ., பி.எஸ்.சி.,எம்.எட்., அவர்களுக்கு 15.3.99) அன்று பணி
ஓய்வு பாராட்டு விழாவில் டாக்டர்.ஜெய.இராஜமூர்த்தி, எம்.பி.,பி.எஸ்., டி.சி.எச். எழுதிப்
படித்த கவிதை}
ஆலமரத்தைப் பற்றி
பாட
ஒரு அருகம்புல்
வந்துள்ளது.
ஆலமரம்: அகோரமூர்த்தி
அருகம்புல்: இராஜமூர்த்தி
கதிரவனின் பெருமையை
இந்தக்
கைவிளக்கு காட்ட
வந்துள்ளது.
கதிரவன்: அகோரமூர்த்தி
கைவிளக்கு: இராஜமூர்த்தி
என் உதிரத்தில்
கலந்து உயர்ந்த உத்தமனே! உன்னை
அதிரசத் தமிழால்
அள்ளி வாழ்த்துகின்றேன்.
கண்ணான கல்வியினை
எந்நாளும் தந்தவரே! தமிழ்ப்
பண்ணால் உன்னை
வாழ்த்துகின்றேன்! பணிவுடன்
நின்னை இதயத்தில்
வைத்து ஏந்துகிறேன்!
துஞ்சாமல் கல்வியினைத்
துவளாமல் தந்தவரே!
பஞ்சாட்சரம் என்னும்
பண்புடையோன் மகனே!
நெஞ்சார வாழ்த்துகிறேன்
அடியேன்!
எஞ்ஞான்றும் வளமோடு
வாழ்ந்திடுவாய் நீயே!
பள்ளியின் ஆணிவேரே!
என்னைக்
கரை சேர்த்த தோணி
நீரே!
கால் நூற்றாண்டுகாலம்
உயர்நிலைப் பள்ளியில்
கால்கடுக்க உழைத்தவரே!
ஆல் போல் நினது
புகழ் அகிலமெல்லாம் பரவட்டும்.
பயனில சொல் பாராட்டுவானைப்
பதர் என்பேன்.
உன்னைப் பாராட்டாதவனையும்
பதர் என்பேன்.
பூவினத்தில் ஒரு
ரோஜா!
தமிழுக்கு ஒரு
திருக்குறள்!
வள்ளல்களில் ஒரு
வள்ளலார்!
ஆசிரியருக்குள்
ஓர் அகோரமூர்த்தி!
ஆடவர் பள்ளியினை
தாங்குகின்ற தூண் ஆனாய்!
அதற்குள்ளே அகவை
ஐம்பத்து எட்டு எட்டுபவராய் ஏன் ஆனாய்!
என் உள்ளத்தில்
குடிகொண்ட சூரியனே!
தண்ணிலவின் வெண்மையிலும்
கறை உண்டு.
தன்னலமில்லா உன்
உழைப்பில் குறையே இல்லை!
எப்போதும் உனக்குண்டு
சுறுசுறுப்பு!
எறும்புக்கு கூட
உன்னைக் கண்டால் வரும் கிறுகிறுப்பு!
தேனீக்கள் மாநாடு
போட்டால் உன்னையே தலைவனாக்கும்
உழைப்பையும் சுறுசுறுப்பையும்
உன்னிடத்தில் அவை கற்க வேண்டும்!
உன்னைப்போல் உழைக்க
வேறுயார் உண்டு?
உண்மையைச் சொன்னால்
இதைச் சொல்ல எனக்கு பெருமையுண்டு!
ஆர்த்து எழும்
கடல் கூட சிறிது நேரம் ஓய்வெடுக்கும்!
வேர்த்து விடும்
உன் உடல் ஓய்வு எடுத்ததுண்டா?
பத்தாம் வகுப்பில்
மக்கான மாணவனின் மண்டையையும்
மத்தாக கடைந்தெடுப்பாய்!
வெத்தாகப் போனவன்
யாருமில்லை
சொத்தாக எங்களுக்கு
நீ கிடைத்தாய்!
சத்தாக பள்ளிக்கே
புகழை சேர்த்தாய்!
கல்வி வானில் அழியாத
வானவில்லே!
பள்ளியின் சரித்திரத்தில்
முதல் மைல்கல்லே!
பல்கலைகழகம் பள்ளிக்குத்
தலைமை ஏற்றதுண்டா?
அகோரமூர்த்தி என்னும்
பல்கலைகழகம் ஆடவர் பள்ளிக்கு தலைமை ஏற்றது
குற்றால அருவிபோல்
அறிவுரைகளைக் கொட்டுகின்ற கோமானே!
வற்றாத ஜீவநதியே!
நீ வற்றிய வாய்க்காலையும் வளப்படுத்தி விட்டாய்!
நீங்கள் பகலில்
பள்ளியில் காயும் முழு நிலவு!
இரவிலும் பள்ளிக்கு
வரும் இதமான சூரியன்!
காலம் பொன் போன்றது!
ஓயாமல் சுழலுவதால்
ஞாலனும் உன் போன்றது!
நித்திய ஒழுக்கத்தை
நித்தமும் போதித்த
சத்திய சாயியின்
சித்திய சீடனே!
வெற்றுக்குடம்
காற்றில் ஆடும்!
குறை குடம் கூத்தாடும்
நீங்கள்
சப்தம் எழுப்பாத
நிறைகுடம்!
மொத்தத்தில் தலைக்கனம்
இல்லாத தலைமை ஆசிரியர் நீங்கள்!
அமிழ்தாய் இனிக்கும்
– அருந்
தமிழ் போல் வாழ்க!
********************************************
********************************************
உலகை உன் ஊராக்கு
உலகை சுற்றியுள்ள
கடல்களை சேர்த்து
உனது ஊர்க்குளமாக்கு!
உலகோர் அனைவரும்
உன் குடும்பம்
என்று ஒன்றி வாழு!
அன்னையும் தந்தையும்
சேர்த்து தந்த
அற்புத உடல் உன்னிடம்
இருக்க
உழைத்து சேர்த்த
பணத்தில் வாங்கிய
உடையை உடுத்தி
மானம் மறைக்க – பின்னர்
உடலுக்கு மேலே
சமயக்குறி எதற்கு?
பெற்றோர் இட்ட
பெயர் இருக்க
பெயருக்கு பின்னே
சாதிகள் எதற்கு?
படித்து வாங்கிய
பட்டம் நீ பெற்றது!
பாழாய்ப்போன சாதிப்பட்டம்
எவன் கொடுத்தது?
என் கண்ணுக்கு
சாதியும் மதமும்
ஒன்றாய்த் தெரியுது.
மதத்தின் தலைவன்
மாவட்ட அளவு என்றால்
சாதியின் தலைவன்
– வட்ட அளவு!
மனிதனைத் தனித்தனிக்
கூட்டமாய்ப் பிரித்துக் காட்டும்
பிணியான மதமும்
சாதியும்
இனியாவது நம்முடன்
ஒட்டாமல் பார்த்து
ஒன்றாய்ச் சேர்ந்து
நன்றாய் வாழ்வோம்
ஒன்று… ஒன்று…
ஒருமையில் ஒன்று!
**************************************
**************************************
விந்தை
உலகம்
விந்தை உலகமடா
இந்த உலகம்! இதில்
எந்தையும் தாயும்
எனக்கு நிரந்தரமோ?
சந்தைக்கூட்டம்
இதனைச் சாவு பிரிக்கும்
கந்தையும் வருமோ
கடைசி வரையில் – இதில்
சிந்தையை தெளிவாக்கிச்
சிரித்து வாழ்வோம்!
தற்கால ஜனங்களே!
எதிர்கால பிணங்களே!
ஆண்டவனைத் தேடி
அங்கும் இங்கும்
அலையும் மனங்களே!
நீங்கள்
பிறக்கும் போது
பிள்ளைகள்
வளரும் போது வாலிபர்கள்
திருமணமானதும்
மனைவி – கணவன்கள்!
பிள்ளைகள் பெற்றால்
தந்தைகள்!
பேரனைப் பெற்றால்
தாத்தாக்கள்!
மூச்சுக்காற்று
மூக்கில் போய் வரும் வரை
எத்தனை வேடங்கள்?
மூச்சுக்காற்று
நின்றபின்பு மாயும் ஜடங்கள்!
கணக்கும் ஜடங்கள்!
உன் இறுதி ஊர்வலத்தை
நீயே பார்க்க நேர்ந்தால்
உனக்கு அறிவு தெளியும்
– அகிலம் புலப்படும்.
ஒரே அடியாகச் செத்துப்
போனவன் சராசரி மனிதன்
செத்த பின்னும்
வாழுபவனே உயர்ந்த மனிதன்.
செத்த பின்பும்
வாழ்வதற்கு இன்றைக்கே
உன் வேலையைத் துவங்கு!
**********************************
என்ன
பிறப்பு இந்த பிறப்பு
இருப்பவன் கடவுளுக்கு
விரதம்
இல்லாதவன் பட்டினியால்
என்றைக்கும் விரதம்!
பணக்காரன் சுகரால்
(sugar)
டயட்டில் இருப்பான்.
ஏழையோ சுருண்டு
டயர்டாய் இருப்பான்!
இருப்பவனுக்கோ
இரத்தக் கொதிப்பு!
இல்லாதவனுக்கோ
இதயக் கொதிப்பு!
இருப்பவனுக்குத்
தூக்கத்திற்கும் மாத்திரை!
இல்லாதவனுக்கு
ஏக்கமே மாத்திரை!
இருப்பவனுக்கு
ஸ்காட்ச் (Scotch) விஸ்கி!
இல்லாதவனுக்கு
காய்ச்சிய சாராயம்!
எண்ணெயுடன் நெய்யை
சேர்த்து
உண்ண எவ்வளவோ ஆசை
எங்கே செல்வார்!
கொழுப்பினாலே
எண்ணம் தடுக்குது
என்ன செய்வார்!
ஏழையின் உழைப்பே
பணக்காரன் கொழுப்பு!
“கேன்சர்” என்றும்
“எய்ட்ஸ்” என்றும்
“அல்சர்” என்றும்
“அலர்ஜி” என்றும்
எத்துணை நோய்கள்
இந்த உடம்பில்!
அதிகம் சிரித்தல்
ஆஸ்துமா வரும்!
அதிகம் அழுதால்
“B.P” ஏறும்!
சும்மா இருந்தால்
மனிதன் இல்லை!
அதிகம் தூங்கினால்
உடம்பு பெருக்கும்!
தூங்காமல் இருந்தால்
உள்ளம் சிதறும்!
சீ! என்ன பிறப்பு?
இந்த பிறப்பு?
இதனைத் தவிர்ப்பதே
சாலச் சிறப்பு!
**************************
**************************
பூஜைகள்
போதும்
ஆண்டுக்கு ஆண்டு
சரஸ்வதி பூஜை இங்குண்டு
ஆயிரத்தில் படிப்பறிவு
எத்தனை பேருக்கு உண்டு!
ஆண்டுக்கு ஆண்டு
ஆயுத பூஜை
ஆடம்பரமாய் நடப்பதுண்டு!
மூடிக்கிடக்கும்
ஆலைகளைத்
தொழிற்சாலைகளைத்
திறக்க என்ன வழி உண்டு?
வீடுதோறும் லட்சுமி
படத்துக்கு பஞ்சம் இல்லை!
தனலெட்சுமி, யோகலெட்சுமி,
சந்தான லெட்சுமி,
பாக்கிய லெட்சுமி என்ற
பெயர்களுக்கும்
பஞ்சம் இல்லை – ஆனால்
இந்தியாவே இன்னும்
ஏழை நாடாகத்தான்
இருக்கின்றது!
பூஜைகள் போதும்
இதயத்தை சுத்தப்படுத்தி
அறிவு சோதியை அதில்
ஏற்று!
இமயம் கூட அப்போது
உன்
இதயத்துக்குள்
அடங்கும்!
**********************
தமிழுக்காகத்தான்
நான்
பாராட்டி, சீராட்டி
என்னைத்
தொட்டிலில் இட்டு
தாலாட்டி
நல் அறிவமுதை எனக்கூட்டி
எனக்குள் வேர்விட்டுக்
கிளைத்த தமிழே!
கூர் ஈட்டி கொண்டெ
என் உடலைக் கிழித்தாலும்
மார்காட்டிப் பார்மீது
உன் புகழைப்
பாடாதிருக்க மாட்டேன்
பைந்தமிழே!
என் நரம்புகளில்
நர்த்தனம் இடும் தமிழே!
செல்கள் ஒவ்வொன்றிலும்
சொல்லாய் மலர்ந்த
தமிழே!
பன்மொழிப்பாவலன்
பாரதி வழி வந்த
நுண்மாண் நுழைப்புலக்கவி
பாவேந்தன்
பாட்டிலும்,உடலிலும்,
உயிரிலும் உலாவிய தமிழே!
வான்புகழ் வள்ளலார்
வடித்தெடுத்த
தேந்தமிழே!
வளர்கலை பலவும்
உன்னது நல் தமிழே!
திக்கெட்டும் நம்
தமிழர் வெல்தமிழே!
திகட்டாத தெள்
அமுதத்தமிழே!
நெடுநல்வாடை தந்த
நெடுந்தமிழே!
குறுந்தொகை தந்த
நறுந்தமிழே!
என்பு முதல் சதையெல்லாம்
ஏறி நிற்கும்
பண்புத் தமிழே
– என்
ஊன் தமிழே! உணர்வு
தமிழே!
தமிழனுக்கு சொரணை
இன்னும்
ஏன் வரவில்லை என்
தமிழே!
கோன்முதல் குடிவரை
கொள்ளை கொண்ட
கோலத்தமிழே!
மங்காத தொல்காப்பியன்
முதல்
சங்கதமிழ்ச் சான்றோர்
வழியில்
சிங்கத் தமிழர்
கலைஞர் கையில்
தங்கத்தமிழாய்
ஜொலிக்கும் தமிழே!
எங்கும் எதிலும்
என்றும் இருக்கும்
எங்கள் தமிழே!
இனிய தமிழே! இன்பத் தமிழே!
அள்ளக் குறையாத
அமுதத்தமிழே!
உள்ளத்தில் குடிகொண்ட
அழகுத்தமிழே!
உண்ணத்திகட்டாத
கன்னித்தமிழே!
எண்ணத்தில் நிலைத்து
நிற்கும்
கன்னல் தமிழே!
மெல்லத்தமிழ் இங்கே
சாகும் என்றார்
வெல்லத்தமிழே!
என்
செல்லத் தமிழே!
தன்மானம் உள்ள
ஒரு தமிழன்
தரணியில் இருக்கும்
வரை
தமிழே உனக்குச்
சாவும் இல்லை!
தாழ்வும் இல்லை!
என்னையும் ஏந்திநிற்கும்
– என்
அன்னைத் தமிழே!
உன்னை வணங்குகின்றேன்
உளமாற வாழ்த்துகின்றேன்!
இவ்வுலகில் ஒருவன்
மட்டும் உயிரோடு
இருந்தாலும் அவனுடன்
நாம் தமிழும்
இருக்க வேண்டும்.
அந்த ஒருவனும்
நம் தமிழுக்காகச்
சாகாமலே இருக்க
வேண்டும்!
தமிழ் என்பது மொழி
மட்டும் அல்ல! நமக்கு
நம் இரு கண் விழி!
திக்கின்றி நாம்
அலைந்தாலும்
தெருவெல்லாம் சுற்றியே
திரிந்தாலும்
அச்சு வேறு ஆணிவேறு
ஆனாலும்
சுக்கு நூறாகி
மண்டை சிதறினாலும்
முக்கால மொழியாம்
நம் தமிழை
எக்காலும் மறவாது
நாம் இருக்க வேண்டும்!
அத்திப் பழுத்து
அவனிக்கு ஆவதென்ன?
எட்டி காய்த்தால்
எவருக்கு என்ன பயன்?
கொட்டி கிளைத்தால்
குவலயம் செழிக்குமோ?
ஒதியன் வளர்ந்து
ஊருக்கு ஆவதென்ன?
தமிழைப் படிக்காமல்
, தமிழை வளர்க்காமல்
தமிழன் இருந்து
ஆவதென்ன?
மனிதனுக்குத் தலைபோலத்
தலைக்கு மூளைபோல
மரத்திற்கு வேர்போலத்
தமிழனுக்குத் தமிழ் என்று
தமிழர் எல்லாம்
உலாவும் தமிழை
உலகெங்கும் உலாவரச்செய்ய
ஒவ்வொறு தமிழனுக்கும்
உணர்வு வேண்டும்!
********************************************
********************************************
யார்
தான் கடவுள் – தேடிப்பாரு
பட்டை போட்டால்
போதும்
பரமசிவன் பக்கத்தில்
இடம் உண்டு என்று
துட்டைக் கேட்டு
இறைவனை துதிபாடும் கூட்டம்!
போதும் போதும்
உங்கள் ஆட்டம்!
மொட்டை போடுவதும்
பட்டை தீட்டுவதும்
கொட்டைகள் அணிவதும்
இறைவழிபாடா?
இறையுணர்வு இல்லாத
உனக்கு
இறைவன் எதற்காக!
சாத்திரங்கள் படித்தது
போதும் ஞானிகளின்
சரித்திரங்களை
புரட்டிப் பார்!
தலபுராணம் கேட்டு
வாய் பிளப்பவனே! மகான்களின்
சுயபுராணத்தை திரும்பிப்பார்!
பிள்ளை பிறப்பதற்கு
யாகம் நடத்துவது என்றால்
கணவன் எதற்காக?
மண்டை ஓட்டுக்கு
வெளியே
மயிரை மழித்து
சுத்தம் செய்வதை விட்டு விட்டு
மூளையை சுத்தம்
செய் – முழுமனிதன் ஆவாய் நீ!
ஒரு கடவுள் உண்டென்று
அவரை
உள் மனதில் கண்டு
எல்லோரும் வாழ
வேண்டும்!
ஆன்மநேய ஒருமைப்பாட்டை
ஆழிசூழ் அவனிக்கு
அறைந்து சென்ற
அருட்பாவின் ஆறாம்
திருமுறையை
ஆராய்ந்து பார்!
இயற்கையே கடவுள்
என்றும்
இரக்கமே கடவுள்
என்றும்
அறிவே கடவுள் என்றும்
ஆழ்மனதில் புரிய
வைப்பார்
அருள்பிரகச வள்ளலார்!
கணக்கற்ற தெய்வங்கள்
பல கண்டோம்
பிணக்கன்றோ அதனாலே
கொண்டோம்
கண்டதெல்லாம் கல்லில்
வடித்த சிலையெல்லாம்
கடவுள் என்று காலம்
எல்லாம் வழிபட்டோம் – என்ன பயன்
கணக்கின்றி கலவரங்கள்
கண்கூடாய் காணுகின்றோம்!
தனிப்பெரும் கருணையாம்
அருட்பெரும்ஜோதியே
கடவுள் என்றால்
தகாத செயல் எல்லாம்
தரணியிலே நடந்திடுமா?
மகாமகம் கண்டது
போதும்
புதிய யுகம் காணப்
புறப்படு மனிதா!
புனித நீர் ஆடியது
போதும்
புதிய மனிதனாய்ப்
புறப்படு மனிதா!
மதம் மாறும் மனிதா
மனம் மாறினாயா?
மதங்களை கை கழுவி
மனிதநேயத்தைப்
பிடித்துக்கொள்!
பணத்தை வைத்துக்கொண்டு
பரமனைத் தேடுபவனே
மனத்தை வசப்படுத்து
மகேசன் நீயே!
உனக்காக மட்டும்
வாழாமல்
ஊருக்காகவும் நீ
வாழும் போது
உள்ளத்தை பண்படுத்தி
உண்மையை பேசும் போதும்
உலகின் ஒண்பொருளான்
உன்னிடத்தில் தென்படுவான்!
அவனைப் பிடித்துக்கொள்
– ஐக்கியமாகு!
“அன்புருவாம் பரமசிவமே”…!
***************************************
***************************************
புது
உலகம் பிறக்கட்டும்
சடங்குகளை சம்பிரதாயங்களைச்
சனாதனத்தைச் சாகடித்த
புத்தன் மீதே
பித்தன் என்றே
புன்மொழி மொழிந்தனர்
புளுகைச்சொல்லி
வயிற்றை வளர்த்த
புல்லறிவு மக்கள்!
புனிதர் ஏசுவைக்
கொடுங்கோல் யூதர்கள்
கொண்டுபோய்ச் சிலுவையில்
கொடூரமாய் அறைந்தனர்
இஸ்லாம் தந்த இறைதூதர்
நபியை
பொல்லாக் கூட்டம்
ஒன்றாய்ச்சேர்த்துக்
கல்லால் அடித்துச்
சொல்லால் அடித்துக்
கடும்பழி தீர்த்ததை
கண்டோம் அன்றோ?
அன்பால் அகிம்சையால்
அகிலம் வென்ற அண்ணல்
காந்தியை
மகாத்மா என்ற மனித
தெய்வத்தை
மதவெறி பிடித்தவன்
மாய்த்தான் குண்டால்
ஏதென்ஸின் சாக்ரடீஸ்
முதல்
இங்கர்சால், எம்
பெரியார் வரை
எவரையும் அழிக்கத்
துணிந்த உலகம்-
தனிப்பெரும் கருணையாம்
அருட்பெரும் ஜோதியே
கடவுள் என்றதால்
அருட்பாவையே மருட்பா
என்று
மக்களில் சிலபேர்
தூற்றினர்.
மனிதனை மனிதனாய்
மாற்ற முனைந்த
மனிதரில் புனிதர்
எவரையும்
மன்பதை மக்கள்
ஒன்றாய்ச் சேர்த்து
நல்வழி காட்டிய
நல்லவன் என்று
பொன்மொழி தூவிப்
போற்றியது உண்டோ?
சூடு, சொரணை சொந்த
புத்தி இல்லா
ஆடு,மாடு, கூட்டம்
போல் வாழும்
கேடுகெட்ட உலகம்
இது
இதன் புல் பூண்டு
கூட
கூண்டோடு அழிந்து
ஒரு
புதிய உலகம் பிறக்கட்டும்!
*********************************
*********************************
தும்பி
விடு தூது
வண்ணம் கலந்த
கண்ணாடிச் சிறகால்
முன்னாடிப் பறக்கும்
சின்னத்தும்பி!
தலைக்கு மேலே அங்கும்
இங்கும்
அலைபோல் பறக்கும்
சின்னத்தும்பி!
சின்னச் சிறகை
மெல்ல அசைத்துச்
சிலிர்த்துப் பறக்கும்
சின்னத்தும்பி!
வளைந்து பறக்கும்
அழகுத்தும்பி!
வானில் பறக்கும்
வண்ணத்தும்பி!
பொல்லாச் சிறுவர்
உன்னைப் பிடித்து
நீண்ட வாலில் நூலைக்கட்டிக்
கொல்லாமல் கொல்லுவார்
ஐயோ தும்பி!
கண்டால் அந்தச்
செயலை இனிமேல்
கண்டிப்பேன் உண்மை!
எந்தன் தும்பி!
எங்கும் பறக்கும்
சின்னத்தும்பி!
எனக்கோர் உதவி
செய்வாய் தும்பி!
ஐயன் வள்ளலாரை
எங்கே பார்த்தாலும்
உங்கள் வழியில்
நடப்பதற்கும்
இங்கேயும் சிலபேர்
இருப்பதாகச் சொல்லி
என்னிடம் சேர்ப்பாய்
அருமைத்தும்பி!
வள்ளல் இங்கே திரும்பவும்
வந்தால்
உன்னையும் என்னையும்
உயிர்கள் அனைத்தையும்
ஒன்றாய்ச் சேர்ந்து
வாரி அணைத்து
அருளைப் பொழிவர்!
ஆமாம் தும்பி!
********************************
********************************
தமிழ்க் கடலையே
தான் எழுதிய
ஏட்டுப் பெட்டிக்குள்
எப்படி அடைத்தார்?
பாட்டுக்கென்றே
இவர் பிறந்தாரா?
சங்ககாலப் புலவர்
எல்லாம்
அங்கம் குளிரத்
தமிழைப் பொழிய
வள்ளலாராய் இங்கே
வந்தாரா?
ஆறாயிரம் பாட்டை
அடுக்கி வைத்தார்
ஆறாய்த் தமிழை
ஓட விட்டார்!
இறைவனே வந்து இவரிடம்
கொட்டிய
பாட்டு மழையை அணையாய்க்
கட்டி
அருட்பா என்றே
காட்டினாரே!
அமுதுடன் பாலைக்
குழைத்து வைத்து
அருட்பா என்றே
ஊட்டினாரே!
நெய்ய்யுடன் தேனைச்
சேர்த்து வைத்து
மெய்யை உருக்கப்
பாடினாரே!
பொய்யுடன் புரட்டைப்
போக்க வைக்க
மெய்யான கடவுளைக்
காட்டினாரே!
ஐய்யோ அதனைக் கையில்
எடுக்கத்
தமிழர் இன்னும்
மறுக்கிறாரே!
வெள்ளுடை துறவியின்
வெல்லத் தமிழை
வெல்லும் புலவர்
உலகினில் உண்டோ!
கள்ளுண்ட மனிதர்
காணும் சுகத்தை
அள்ளும் தமிழாய்த்
தந்தவர் அவரே!
முள்ளாய் நெஞ்சில்
மண்டிய பிணக்கைச்
சொல்லால் எடுக்கத்
துணிந்தவர் ஐயா!
பித்தேறி நின்றிருந்த
மனிதரிடம்
சுத்த அறிவே தெய்வம்
என்று காட்டி
வித்தாக சமரசத்தை
நெஞ்சில் ஊன்றி
சத்தான சன்மார்க்கம்
தழைக்க விடவே
கொத்தாக அருட்பா
தந்தார் தமிழால்!
அருட்பா என்ற அற்புதப்
பாவை
அமுதப்பாவை அழகுப்பாவை
அனைவரும் படித்தே
அகத்தினில் வைப்போம்!
அருட்பா புகழ்
ஒங்குக! வள்ளல் மலரடி வாழ்க!
****************************************
****************************************
அண்டத்தில் இழுத்து
விடும் மூச்சு
அனைவருக்கும் பொது
என இருக்கப் பிணமாகும்
பிண்டங்கள் நமக்குள்ளே
பிரிவினைகள் எதற்காக?
மதம் இல்லாமல்
மனிதனால் வாழ முடியும்!
மனிதன் இல்லாமல்
மதத்தால் வாழ முடியாது!
மரம் வளர்த்தால்
மழையில் முடியும்!
மதம் வளர்த்தால்
பிழையில் முடியும்!
சமயத்திற்குத்
தகுந்தாற்போல் ஆக்கப்பட்டவை சமயங்கள்
சமயத்தால் சமுதாயத்தில்
சஞ்சலங்கள் வரும்
போது
சமயத்தை உதறிவிடு!
பொய்யை ஒழித்துப் புலாலை மறுத்து
மெய்யைப் போற்று
மேன்மை உனக்குண்டு!
சூழ்ந்து வரும்
உனது பகைக்குக் காரணம் நீயே
ஆழ்ந்து சிந்தித்து
ஆராய்ந்து பார் தெரியும்!
பகையை ஒழி பலசாலி
நீயே!
நேர்மையை உள்ளிருத்தி
நெஞ்சத்தை திறந்துவை!
இறையுணர்வு உன்னிடம்
குறையின்றி இருந்திட்டால்
இறைவன் என்பவன்
நீயாய் இருப்பாய்!
தமிழுக்கு வறட்சி
இல்லாத துறவி
மனிதனை மனிதன்
பிரிக்கும் மதங்களை
மிரட்சி கொள்ள
எதிர்த்த
புரட்சித் துறவி
வடலூர் ஐயா வார்த்தையில்
வாழ்வோம்!
ஒருவனுக்கு ஒரு
தந்தை
ஓர் உடலுக்கு ஒர்
உயிர்!
உருவாக்கியவன்
ஒருவன் தானே!
ஒன்றைப் பலவாய்க்
காட்டுவது பசுங்
கன்றை யானை என்பது
போலத்தானே!
“அன்பாலே அறிவாலே
ஆடேடி பந்து
அருட்பெருஞ்சோதி
கண்டு ஆடேடி பந்து”
“ஒருவரே உளார்
கடவுள் கண்டறிமின்!”
எனும்
வள்ளலார் தந்த
உயிர்த்தமிழை அறிமன்!
உயர் கருத்தை கேண்மின்!
****************************
****************************
தமிழே
மன்னித்துக் கொள்
எங்கெ இலவசம் என்றே
போவான்!
ஆபர் (Offer) கேட்டு
ஆளாய்ப் பறப்பான்
பேண்ட்டுக்கு இலவசம்
‘சட்டை’ என்பான்!
பேஸ்ட்டுக்கு இலவசம்
‘பிரஷ்’ என்பான்!
ஆனால்…
இழுத்து விடும்
சிகரெட்டிற்கு
இன்னல் தரும் புற்றுநோய்
பெறுவான்
இதனை ஏனோ மனிதன்
மறந்தான்!
காசைக்கொடுத்து
வேசியிடம்
காணும் சுகத்திற்கு
இலவசம்
உயிரைப் பறிக்கும்
எய்ட்ஸ்
என்று ஏனோ மறந்தான்?
தூங்குகின்ற தமிழா…
வாழ்நாள் எல்லாம்
நீ காணும்
கனவு மட்டுமே உனக்கு
இலவசம்
பிறப்புக்கும்
இலவசம் ஒன்று உண்டு
இறப்பு என்ற உத்திரவாதம்..
இதை
மறவாமல் மனதில்
இருத்தி
மனிதனாய் வாழும்
வகையைத் தேடு!
********************************************
ஒன்றாய்க் கூடி
ஒரே கடவுளை வணங்கி
நன்றாய் இவ்வுலகோர்
வாழும் நாள் எந்நாளோ?
அழுக்காறு நீக்கி
அடுத்தவன் பசியினால்
அயரும் வேளை அன்னம்
இட்டு அவனை
அனைவரும் அன்பாய்த்
தவழும் நாள் எந்நாளோ?
வள்ளுவரும் வள்ளலாரும்
வகுத்துவைத்த
வாழ்வாங்கு வாழும்
வழியில்
காழ்ப்புணர்வு
நீங்கி மக்கள்
களிப்புற்றுக்
கரையேறும் நாள் எந்நாளோ?
மதியில் உயர் மனிதன்
முதல்
மரம் செடி கொடி
வரை
நதி முதல் காற்று,
மலை, கடல் வரை
படைத்து பரம்பொருள்
என்றால் அதனை
மனிதர் உருவில்
காண்பது மனதிற்குப் பொருத்தம் ஆமோ?
எங்கும் எவற்றிலும்
என்றும் இருக்கும்
இயற்கையில் உள்ள
ஒரு பொருளாம்
உருவமும் இல்லா
அருவமும் இல்லா இறைவனை
அன்பின் உருவமாய்
அறிவின் விளக்கமாய்
அகத்தில் காணும்
நாள் எந்நாளோ?
கன்னித்தமிழாம்
கற்கண்டு மொழியின்
தன்னிகர் இல்லாத்
தனிப்பெரும் வேந்தனை
முன்னிருத்த மூட
வழக்கை முழுமூச்சாய் எதிர்த்தவனை
தமிழன் மறந்த தரணி
உணர்ந்த
தத்துவ ஞானியைத்
தனிப்பெரும் கருணையைச்
சென்னியால் வணங்கிச்
செகத்தோர்
சிறக்கும் நாள்
எந்நாளோ?
வையகமே வடலூர்
வந்து வள்ளலின் ஜோதியை
வழிபட்டு உய்யும்
நாள் எந்நாளோ?
நாலாறு மாதத்தில்
செய்யப்பட்ட
நாறும் உடல் வீழும்
முன்னே
நாயகன் இராமலிங்கர்
நல்வார்த்தை கேண்மின்!
நன்மையுடன் நல்ல
வரம் நீர் பெறுவீர்!
கடமையை செய்து
கண்ணியம் காத்து
உழைப்பால் உயர்ந்து
உணவை உண்டு
உலகோர் அனைவரும்
ஒன்றே என்று
உள்ளங்கள் எல்லாம்
நினைக்கும் நாள் எந்நாளோ?
அருட்பெரும்ஜோதி!
தனிப்பெரும்கருணையை
அந்நாளில் காண்பீர்!
அவனியோரே!
*********************************************
நிறைவு! நன்றி!! வணக்கம்!!!
நிறைவு! நன்றி!! வணக்கம்!!!
அணிந்துரை
முனைவர் த.தியாகராசன், பி.எச்.டி
தமிழ்த்துறை,
பூம்புகார் கல்லூரி,
மேலையூர் – 609 107
கவிஞர், இனிய நண்பர்,
டாக்டர் .செ.இராஜமூர்த்தி, எம்.பி.பி.எஸ்., டி.சி.எச்., அவர்கள் மருத்துவத்துறையில்
பணியாற்றிக் கொண்டே, மகத்தான கவிதைத்துறையிலும் அதன் சிகரத்தை எட்டிக் கலசம் வைத்துள்ளார்.
“நேசம் விரும்பும் நெருப்புப் பூக்கள்” இவருடைய முதல் கவிதைத் தொகுப்பு. இவரது வண்ணக்
கனவுகளை, இதில் வாரி அணைத்துக் கொள்ள வானவில் வளைந்து கொடுக்கிறது. இமயம் எழுந்து வந்து
இவர் இதயத்தில் அமர்ந்து கொள்கிறது!
நேற்றையும் இன்றையும்
எந்த நெஞ்சு இணைத்து வைக்கிறதோ அது உயர்ந்த கவிதை நெஞ்சம்! நாளைக்கு பதியம் போடுகிற
போது அது மேலும் உயர்ந்து விடுகிறது. இராஜமூர்த்தி சென்ற நூற்றாண்டுகளோடும் பழகியுள்ளார்.
வரும் மில்லினியத்துக்கும் வாய்க்காலை கீறுகிறார். இருபத்தோராம் நூற்றாண்டுக்கு முகவரி
தருகிற கவிதைக்காதல் இராஜமூர்த்தியிடம் காணப்படுகிறது.
அரும்புகள் போதுகளாக
வேண்டும்! போதுகள் மலர்களாதல் வேண்டும். தலைமுறை வளர்ச்சியை இனம் காட்டிக் கொள்கிற
வேகம் ஒரு மெய்யான கவிஞனுக்கு வேண்டும். இங்கு என்ன நடக்கிறது? “வளரும் வீறு”, “காலத்தை
வெற்றிகொள்ளும் திறம்”, ஒரு புதிய சமூகத்துக்கும் ஒரு படிக்கட்டையாவது தான் கட்டித்தர
வேண்டும் என்னும் வெறி கொண்டிருத்தல், முதலானவை நைந்து கிடக்கின்றன. கவிஞன் தன் மூச்சிலிருந்து
சமூகத்துக்குச் சங்கீத சுரங்களை தரவேண்டும். துருத்திக் காற்றிடம் கடன் வாங்கிப் புதிய
சமூகத்துக்குச் சுரம் போட முடியாது.
இது புதிய மில்லினியத்தின்
பொன் வாசலை உன்னதமான தமிழ் இலக்கியத்துக்குத் திறந்து விடுகிற தருணம்! வரலாறுகளில்
தற்போது வழுவமைதி சகித்துக் கொள்வதற்கு உரியது அன்று. மானுடத்தின் எல்லையில்லாத பன்முக ஆற்றலைப் – பரப்பைப் – புதிய சமூகத்துக்கு
வழங்குகிற கவிஞர் கூட்டம் தற்போது தேவை. இந்தத் தருணத்தில் இராஜமூர்த்தியின் கவிதைப்பிரவேசம்
மகிழ்ச்சி தருகிறது.
ஏறக்குறைய ஐம்பது
கவிதைகள் தாம்! இவற்றில் பல, “மேடைகளில்” வீசிய மெல்லிய பூங்காற்றுகள். கவியரங்கச்
சாரலில் கைகோர்த்து வந்த கனலின் எழுச்சிகள்!
“கவிதை என்பது
கடைச் சரக்கு அல்ல
அடுக்கி வைத்த
ஏடுகளில் இருந்து
அனல் கிளம்ப வேண்டும்…
பாவேந்தன் கவிதை போல!
பாவுக்குள் இருந்து
அருள் வடிய வேண்டும்
அருட்பாவைப் போல”
…
என்று கவிதைக்கு
பரிபூரண இலட்சணங்களைத் தேர்ந்து கொண்டு அதன்படி பாடிய மோகமும், வேகமும், இவரிடம் தெரிகின்றன.
கனலும். அருட்புனலும் இல்லாதவைகள் கவிதைகளே இல்லை! இந்தக் கவிதைத் தரிசனங்களோடு, இராஜமூர்த்தி
தாம் வாழும் காலத்தையும், தமக்கு முன்பிருந்த காலத்தில் வாழ்ந்த அரசியல் ஞானிகள், ஆன்மீக
ஞானிகள் வாழ்வையும் தமது காலத்துத் தலைவர்களின் வாழ்வையும் தரிசிக்கிறார். அவர்களைப்
பற்றிய தமது எண்ணங்களை இதில் தந்திருக்கிறார்.
வெறுங்கனவுகளில்
மட்டுமே நீந்தாமல், சராசரியான காதலை மட்டுமே பாடாமல் – அழகான இயற்கையை மட்டுமே பாடாமல்
சமூக உணர்வுகளோடு, முற்போக்கு எண்ணங்களோடு மனிதனை- வாழ்க்கையை – சமூகத்தை பாடியுள்ளார்
பூம்புகார்த் தமிழ்ச்சங்கத்தின் இந்த தும்பி
சமூக மலர்களில்
தேனெடுத்துள்ளது. மகத்தான அரசியல் ஞானிகள் வாழ்வைத் தரிசித்து வரலாறுகளை எடுத்துள்ளது.
வள்ளல் பெருமான் போன்ற ஆன்மீக ஞானிகளின் தரிசனத்தில் கலந்து மூழ்கி, தெய்வீக சமூகத்தை
– சாதி – மத- சனாதன சடங்குகள் அற்ற சன்மார்க்க வாழ்வைக் கண்டு காட்டியுள்ளது.
கோபாலபுரத்துக்
குறலோவியம், மாண்பமை தமிழ் இனப்பரிதி டாக்டர் கலைஞர் கருணாநிதியார் இவரை “வள்ளல் நேசன்”
என்று இனம் கண்டு வாழ்த்தியிருப்பது முற்றிலும் பொருந்தும்! வான் கலந்த மாணிக்கவாசகரின்
திருவாசகத்தில் ஊன் கலந்து உயிர் கலந்து வள்ளலார் பாடிய அருட்பாவில் சன்மார்க்கம் வீற்றிருக்கிறது.
அருட்பாவெனும் சன்மார்க்கத்தில் இராஜமூர்த்தி ஊன் கலந்து, உயிர் கலந்து வாழ்கின்றார்.
இன்றைய இந்த இளைய தொழுவூர் வேலாயுதத்தை அவரது சன்மார்க்கக் காதலை இத்தொகுப்பிலே அங்கங்கும்
காண்கிறோம்.
வேற்றுமையில் ஒற்றுமை
காண்கின்றவன் தான் இந்தியன். இது அவனுக்குப் புதுப்பெயர். ஆன்மீக மொழியில் – அருட்பாத்
தளத்தில் இருந்து பழைய மொழியில் கூறினால் “சுத்த சன்மார்க்கி”. இந்த சுத்த சன்மார்க்கிக்கு
மதம் கிடையாது. இந்த இந்தியனுக்கு சாதி கிடையாது. . இந்த அருட்பாக் காதலனுக்குச் சனாதன
தர்மங்கள்- புராணங்கள் – சமயங்கள் எதுவுமே கிடையாது. இவனுக்கு வேண்டியது எல்லாம் மதச்சார்பான
மனிதன்.! சாதி குலம் தவிர்த்த மனிதன். கருணை உள்ளமுடைய மனிதன். உலகை நேசிக்கும் மனிதன்!
தனக்குள்ளே தெய்வீகத்தை
தரிசிக்கிற மனிதன்! மரணமில்லா வாழ்வை மண்ணுகுப், புதிய ஞானமாக்கித் தருகின்ற மனிதன்!
சாதி குலம் தவிர்த்த மனிதன்!இந்தப் பின்னணியில் இராஜமூர்த்தி எல்லாவற்றையும் அணுகுகிறார்.
எல்லாரையும் பாடுகிறார். பெரியாரையும் பாடுகிறார், வள்ளலாரையும் பாடுகிறார். அண்ணாவை
பாடுகிறார், கலைஞரை பாடுகிறார். நேருவைப் பாடுகிறார். காந்தி அண்ணலை பாடுகிறார். எம்
ஜி ஆரைப் பாடுகிறார். வேறுபாடுகள் வெவ்வேறு கொள்கைகள் நிறைந்த இவர்களிடம் ஒர் “ஒருமை”
காண்கின்றார்.
“இவர் தான் இராஜமூர்த்தி”
“சொல் புதிது!
பொருள் புதிது! சுவை புதிது! சோதி மிக்க நவ கவிதை” என்ற பாரதியின் கவிதா மண்டலத்துக்கு
இராஜமூர்த்தி ஓர் இளைய விழுது! “வாழையடி வாழையென” கனலும், அருளும் தேடும், ஒரு கூட்டத்துக்கு
வேண்டிடும் கவிஞன்! வள்ளலாருக்குப் பின் பாரதி உயிர்த் தொகுதிகளிடம் உறவுக்குக் குரல்
கொடுத்தான். தற்போது இராஜமூர்த்தி வள்ளல் நேசனாய் ஒரு தடம் காட்டுகிறார். தான் எந்தப்பக்கம்?
ஒரு கவிஞனின் குரல் அவனை அடையாளம் காட்டும்:
“உங்கள் தூவல்
முனையில் இருந்து
உருவாகும் எழுத்துக்
குண்டுகள்
உலாவரும் மதப்பேய்களை
சுட்டு வீழ்த்தட்டும்”
“இருகுவளை முறை
இன்னும் இருப்பதைக் கேட்டால்
இதயம் உனக்கு வெடிக்க
வில்லையா”
“உலகம் என்ற வயலில்
ஆன்மநேய வித்திடு
கலகம் என்கிற களையைப்
பிடுங்கி எறி”
“வண்ணத்தை வெளுக்காமல்
ஏன்
உடையை மட்டும்
சலவை செய்கிறாய்”
“மொத்தத்தில் ஆத்திகமும்
நாத்திகமும்
தேவையில்லை! மனிதநேயம்
கொண்ட மனிதனே தேவை”
“ஏழையின் வயிற்றை
முன்னர் நிரப்பு
இறைவன் உண்டியலை
பின்னர் நிரப்பு”
“முன்னேற வேண்டும்
முதுகில் குத்தாமல்”
“உலகை உன் ஊராக்கு!
உலகை சுற்றியுள்ள
கடல்களை சேர்த்து
உனது ஊர்க்குளமாக்கு”
“பூஜைகள் போதும்!
இதயத்தை சுத்தப்படுத்தி
அறிவு சோதியை அதில்
ஏற்று”
“மதம் மாறும் மனிதா?மனம்
மாறினாயா?”
இந்த சில வரிகளிலேயே
இராஜமூர்த்தியின் முகவரிகள் தெரியும்! கனலையும், புனலையும் சுமந்த வரிகள் இவை! வள்ளலாரியத்து
வாச வரிகள் இவை. ஒருபுறம் நெருப்புப் பூக்கள்! இன்னொறு புறம் நிலவுப் பூக்கள்! இவற்றிடையே
நமது இதயப்பூக்கள்!
அண்ணல் காந்தியிடம்
“எனக்கு சபரி மலையை விட உனது
சபர்மதி ஆசிரமமே
உயர்வு!”
என இராஜமூர்த்தி
பேசும் போதும்,
நேருவிடம் “நீ
மனிதன் இல்லை மகத்தான வரலாறு
மண்ணுலகில் வந்துதித்த
மகர ஜோதி”
உன் பேச்சு! ஜனநாயகத்தின்
மூச்சு”
என்று பாடும் போதும்,
“கண்ணப்ப நாயனாரை
விட என் கண்ணுக்குக்
கலைஞரே உயர்வானவர்”
என்று கலைஞரை பாடும் போதும் இராஜமூர்த்தியை அறிந்து கொள்ள முடியும்.
நெஞ்சுக்கு பிரியமான
தமிழ்நதி இவரது கவிதைகளில் பொங்கி வழிந்து புறப்பட்டு உலாவரும்! சன்மார்க்கம் சந்தனத்
தென்றலாய் அசைந்து வரும்!
வடலூரின் குயில்
ஒன்று உடலூர் இருந்து உயிர் ஊர் வரை இசைத்ததை வெண்காட்டுக் குயில் இதில் விளாசித் தள்ளியிருக்கிறது.
கவிஞர் டாக்டர்.இராஜமூர்த்திக்கு எமது இனிய வாழ்த்துகள்!
*************************
அணிந்துரை
அ.கல்யாணசுந்தரம்.
எம்.ஏ., எம்.எட்.,
பொறுப்பு தலைமை
ஆசிரியர்,
சு.சு.தி ஆண்கள்
உயர்நிலைப் பள்ளி,
திருவெண்காடு.
திருவெண்காடு அரசு
மருத்துவமனை மருத்துவர், டாக்டர். ஜெ.இராஜமூர்த்தி. எம்.பி.,பி.எஸ்., டி.சி.எச்., வாடிய
பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வடலூர் மனித வள்ளலின் நேசன்.
ஜெயராமன் – தனஜோதி
இவர் தம் பெற்றோர். இவர் பிறந்த ஊர் பூம்புகார் சார்ந்த புகழ் மலி திருவெண்காடு.
திருவெண்காடு பகுதியில்
பள்ளி படிப்பை முடித்து எண்பதுகளில் சென்னையில் மருத்துவம் பயின்ற இவர் ஒரு நன் மாணாக்கர்.
குழந்தைகள் நல மருத்துவத்தை நுணிகிக் கற்று கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக குழந்தைகள்
நல சேவை செய்து வரும் இவர் தொண்டில் ஒரு தாயுமானவர்.
பல நாடுகளுக்கு
மருத்துவராகச் சென்றுவர எப்போதும் வாப்பிருந்தும் அதனை விடுத்து கிராமங்களின் மண்வாசம்
சுமந்து நல்ல மனவாசம் கொண்டு சுகமளிக்கும் இவர் இளங்காற்று. நற்றமிழ்த்தேனீ.
குத்துவதற்கு குண்டூசி
கூடத் தயங்கும் புத்துலகத்திணை தன் எழுத்து உளிகளால் நேர்த்தியாக செதுக்கும் யுகம்
பாடியான இவர் தமிழ் வானம்பாடிகளுக்கு ஒரு புதிய வரவு!
அரசியல் புயலுக்கு
ஆட்படாமல் தமிழ் அருட்பெருஞ்சோதியின் புவியீர்ப்பில் மையம் கொண்டுள்ள இவர் நல்லதொரு
சிந்தனையாளர். எடுப்பான பேச்சாளர்.இனிய பண்பாளர்.
பூம்புகார்த் தமிழ்ச்சங்கத்தின்
இந்த இளம் கவிஞரின் உலாவரும் “நெருப்புச் சிறகுகளை” நம் கரங்கள் தழுவும் போது நெஞ்சில்
தமிழ் மணக்கும்.
இப்படிக்கு
அ.கல்யாணசுந்தரம்
nice
ReplyDelete