.

.

Friday, December 12, 2014

என் அம்பறாத்தூணியிலிருந்து...(கவிதைத் தொகுப்பு) (முழு புத்தகம்)



எனது அம்பறாத்தூணியிலிருந்து

(கவிதைத் தொகுப்பு) (முழு புத்தகமும்)




எழுதியவர்:  “வள்ளல் நேசன்”
 டாக்டர். ஜெய. ராஜமூர்த்தி M.B.,B.S., D.C.H.,

பதிப்பகம்: தமிழருவி பதிப்பகம்
பழைய எண் 35, புது எண் 21,
சாதுல்லா தெரு, தி.நகர், சென்னை – 600 017
முதல் பதிப்பு ஆண்டு: ஜூன் 2006


பதிப்புரை

எனது அம்பறாத்தூணியிலிருந்து….

இது ஒரு கவிதைத் தொகுப்பு.

கதவு-

கதவு என்றொரு கவிதை

கதவினை திறந்து உள்ளே சென்றேன். அங்கே இதயங்கள் பல துடித்துக் கொண்டிருந்தன.



இந்திய அன்னையின் மூத்த குடிமகன் அப்துல்கலாம், கல்விக்கண் திறந்த கர்மவீரர் காமராஜர், முத்தமிழ் வித்தகர் முதல்வர் மு.கருணாநிதி, இந்திய அன்னையை வாட்டி வதைத்த சுனாமி, வள்ளலார், இயேசுநாதர், நபிகள் நாயகம், என அனைவரையும் கண்டேன்.



எனது அம்பறாத்தூணி யை எனக்கு அறிமுகம் செய்தவர் திரு.வழுவூர் ரவி அவர்கள்.



எனது அப்பறாத்தூணியை வெளியிடுவதில் தமிழருவி பதிப்பகம் பெருமிதம் கொள்கிறது.


-    பதிப்பகத்தார்


அணிந்துரை

அன்புரைகளே அம்புகள்!



டாக்டர் ஔவை நடராஜன்
முன்னாள் துணை வேந்தர்
தமிழ்ப் பல்கலைகழகம் – தஞ்சாவூர்

வள்ளலார் நெறியில் தோய்ந்த நல்லறிஞர், அருமை நண்பர் டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி அவர்கள் மருத்துவக் கலைவாணர். எழுத்துக் கலையிலும், பேச்சுக் கலையிலும் வல்லவர். இனிய கவிதைகளைப் புனையும் கவியரசராகவும் மிளிர்கிறார். இவ்வாறு பன்முக ஆற்றல் வாய்ந்தோர் சிலரே. அறிவியல் ஆய்வில் திளைக்கும் வாழ்வில் உணர்வு பொங்கும் கவிதைகளையும் வரைவது இன்பம் தருகிறது.

கவிதை உள்ளத்தில் பிறப்பது; வெறுஞ்சொல்லடுக்கு அன்று. மலர்கள் எங்கும் பூக்கின்றன. எல்லார்க்கும் கிடைக்கின்றன. அதனை நார்கொண்டு தொடுக்கும் நுண் கலையாற்றல் சிலர்க்கே வாய்க்கிறது. அவருள்ளும் அக்கலையில் வித்தகம் காட்டுவார் மிகச்சிலர். அது போலவே எல்லோர்க்கும் தெரிந்த எளிய சொற்களைப் பாட்டாக எழிலுறத் தொடுக்கும் கலையாற்றல் உடையவரைக் கவியரசர் பாவலர் என்று நாம் பாராட்டுகிறோம்.

உள்ளத்தில் உள்ளது கவிதை; இன்ப

உருவெடுப்பது கவிதை

தெள்ளத் தெளிந்த தமிழில் உண்மை

தெரிந்துரைப்பது கவிதை


என்று ஒரு கவியரசரே இலக்கணம் வரையறை செய்தார். கவிதை பாட்டாகவும் இருக்கலாம். உரையாகவும் இருக்கலாம். காலங்காலமாக பாட்டில் பயின்ற கவிதை அண்மைக்காலமாக உரையிலும் தவழ்கிறது. இது கூட மேனாட்டாரும் பிறரும் காட்டிய வழி தான். பாரதியார் இதனை முதலில் முயன்றார். இசையிலும் தாளத்திலும் மனம் ஒன்றியதால் உரைக்கவிதைப் போக்கினின்று பின்னர் விலகினார். கவிதையியற்றுவதற்கு ஒரு திறம் வேண்டும். டாக்டர் ஜெய.ராஜமூர்த்தி இருவகையிலும் கவிதையாத்துள்ளார்.


வெல்லத்தின் சுவையையும் வெல்லும் பேச்சு

வெற்றியென்ற படிக்கட்டே உயிரின் மூச்சு


இது கலைஞரை புகழ்வதற்காக எழுதிய வரிகள் மட்டுமா; வருங்கால தலைமுறைக்கும் கற்பிக்கும் வாழ்க்கைப் பாடமாகும்.

துஞ்சுகின்ற மாந்தரெல்லாம் தூக்கம் நீக்கித்

தொல்லைதரும் சோம்பலையே தொலைத்தாய் இன்பம்

அஞ்சுகின்ற மனப்பான்மை அறவே விட்டே

அகிலத்தில் அறவழியை அமைத்தே வாழ்வோம்.

என்னும் அறிவுரை இளைஞர்களுக்குச் சொல்லப் படுகிறது. பாரதியார் பரம்பரையினர் இன்னும் வாழ்கிறார்கள். அந்த அணிவகுப்பில் நம் கவிஞர் இராஜமூர்த்தியும் முகவரியும் இடம் பெற்றுச் சிறப்படைகிறது. இவருடைய உரைக் கவிதைகள் நயத்தில் பாக்கவிதைகளோடு போட்டியிடுகின்றன.

இயேசுவே! ஆடுகளை நீங்கள் மேய்த்ததால் மேய்ப்பன் என்றார்கள். அதற்காக இங்கே சிலர் மக்களையே மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள். மக்களில் சிலரோ மேய்வதிலேயே குறியாக இருக்கிறார்கள். இத் தொடர்களை படிக்கும் போது நமது மக்கள் கூட்டத்தை கவிதையில் படமாக எடுத்திருக்கிறார். நட்சத்திரம் என்ற தலைப்பு உள்ளத்தை கவர்கிறது. மாறுமுகம் என்ற பாடல் நகையிழையோட நடைமுறை மக்களை கூட்டுகிறது. ஒரு பொருளைப் பற்றிய அடுக்கிய வருணனைகள் ஒன்றன்பின் ஒன்றாக வண்ணங்காட்டுகின்றன. கவிஞரை அடையாளம் காட்டுவதில் உவமைக்கு பெரும் பங்கு உண்டு.

நிலவுப்பெண் வானச்சுவரில் ஒட்டி வைத்த பொட்டுக்கள், வானத் திருவிழாவிற்கான வரிசையுறக் கட்டப்பட்ட சரக்குமிழ்கள் என்று புனைவதையெல்லாம் பாராட்டுகிறேன். எளிய தமிழில் எழிலார்ந்த சிந்தனைகளை, இனிய உவமைகளோடு எழுதும் கவிதை வன்மை கைவரப்பெற்ற நிலையில், நம் நண்பர் முடிந்தவரை அயற்சொற்களை நீக்குவது மேலும் கவிதைக்கு பொலிவேற்றும் என்று வேண்டுகிறேன். கவிஞர் டாக்டர் ஜெய.இராஜமூர்த்தி வள்ளற்பெருமானின் நேயர். ஆன்மநேயம் அவர் கவிதைகளில் பல நிலைகளில் ஒளிர்கிறது. சன்மார்க்க சாயல் பல தொடர்களில் இழைகிறது.

பாரிசு மாநகரில் நடந்த இராமலிங்கர் பணிமன்ற மாநாட்டு விழாவில் டாக்டர். இராஜமூர்த்தி ஆற்றிய உரை பலரைக் கவர்ந்தது. மேடை மின்னலாக அவர் ஒளிர்ந்தது இன்னும் என் கண்களில் தேங்கி நிற்கிறது.

அன்புரைகளையே தம் அம்புகளாகத் தொடுக்கும் இந்நூலுக்கு  “என் அம்பராத்தூணியிலிருந்து” என்று பெயரிட்டிருகிறார். அழகிய தொடர்களை அம்புகளென உருவகிப்பது தமிழ் மரபே. கவிஞன் வானை நோக்குபவன் அல்லன்; மண்ணை நோக்குபவன்.கவிஞர் மென்மேலும் தொடர்ந்து இனிய கவிதைகளை அள்ளி வழங்க வாழ்த்துகிறேன். தமிழ் மக்கள் இந்தப் பாடல் விருந்தைச் சுவைத்து மகிழ்வாராக என அன்போடழைக்கிறேன். தமிழ்மாமணியாகவும், மருத்துவ மாமணி திகழ்வதைத் தமிழுலகம் நன்றியோடு வரவேற்று மகிழும்.

அன்புள்ள



டாக்டர் ஔவை நடராஜன்

முன்னாள் துணை வேந்தர்

தமிழ் பல்கலைக் கழகம்

தஞ்சாவூர்.

 
 **********************




அணிந்துரை


முனைவர்.கி.செம்பியன், எம்.ஏ., பி.எச்.டி.,
முன்னைத் தமிழ்த்துறைத் தலைவர்
ஏ.வி.சி.கல்லூரி

“எனது அம்பறாத்தூணியிலிருந்து” என்று பெயரிய இக்கவிதைத் தொகுதியில், கவிஞர் தாம் சிந்தித்த புதிய பொருள்கள் பற்றிய கவிதைகள், தலைவர்களைப் போற்றுதல், நண்பர்களை வியத்தல், தமிழ்மொழியைப் பாராட்டுதல், கவியரங்கக் கவிதைகள்,இரங்கல் கவிதை எனப் பல வண்ணப் பூக்களைத் தொடுத்துக் கலம்பக மாலையாகத் தந்துள்ளார் பொருள் கதம்பத்தைப் போல வெண்பா, விருத்தம், புதுக்கவிதை, கவியரங்கக் கவிதை என யாப்புக் கதம்பமும் உண்டு. தொழிலால் மருத்துவரான இவருக்கு இத்தனை கவிதை வடிவங்களும் வசப்பட்டுள்ளன என்பது வியப்பு. ஸ்டெதஸ்கோப்பு வசப்படலாம். ஊசி வசப்படலாம். கத்திரிக்கோல் வசப்படலாம், வெண்பாவும் விருத்தமும் வசப்படுமா!

இவர் எம்.பி.,பி.எஸ்., டி.சி.எச்., மருத்துவர். மருத்துவர் கவிதை பாட முடியுமா? சங்க காலத்தில் மருத்துவன் தமோதரன் உண்டு! திருவள்ளுவர் “மருந்து” அதிகாரம் கண்டதுண்டு! சித்தர்கள் மருத்துவம் பாடியதுண்டு! அருட்கவிஞர் வள்ளலார் மருத்துவச் செய்திகள் சொன்னதுண்டு! மருத்துவருக்குச் சாதி இல்லை. ; சரி தான்; சாதி, மதம் இல்லை என்று பாடலாமா? கடவுள் உனக்குள் இருக்கின்றார் என்று கூறலாமா? பொய்ச் சாத்திரங்களைக் கண்மூடிப் பழக்கங்களை சாடலாமா? இவர் அருட்பெருஞ்சோதி இராமலிங்க வள்ளலாரின் தாசர். ஆமாம் இவர் ஒரு சுத்த சன்மார்க்க சங்க சமரசவாதி!

முதற்கண் கவிஞர் ஒரு தமிழ்ப்பித்தர்! தமிழைப் பாடுகையில் உனையன்றி வேறொன்றை விரும்பேன் என்றும் இத்தனை இலக்கியம் கொண்ட மொழியே, உன் மீது பித்தனாய் என்னையும் ஆக்கிய விழியே என்றும் உன்னை மட்டும் தான் இறுதிவரைக் காதலிப்பேன் என்றும் பாடுகின்றாரே!

“இதயம்” எனும் கவிதை ஒன்றே போதும் இவரை கவிஞர் வரிசையில் வைக்க!

தனக்காக மட்டும் துடிப்பது சுயநலக்காரன் இதயம்
ஊருக்காகத் துடிப்பது நல்ல மனிதன் இதயம்
உலகுக்காகத் துடிப்பது மகான்களின் இதயம்

இஃது ஒரு புதுமை விளக்கம். ஒரு வினாடிக்கு எத்தனை முறை துடிக்க வேண்டும்; அஃது இதயக் கணக்கு; மருத்துவக் கணக்கு; இஃதோ கவிதைக் கணக்கு.

“ஆறு” என்று தலைப்பிட்டு “தண்ணீர் வாக்கியம்” என்றார் கவிக்கோ அப்துல் ரகுமான். இவரோ முருகனுக்கு ஆறுமுகம் மனிதனுக்கு மாறுமுகம் என்கிறாரே! மனிதனில் கருத்தோட்டத்தையும் கவிதையின் கருத்தோற்றத்தையும் எதுகையின் ஆற்றல் பெருக்கையும் அறிந்துள்ளாரே!

நாவினால் சுட்ட வடு ஆறாது எனக் கண்டறிந்தார் சமூக விஞ்ஞானி வள்ளுவர். அதனால் தான் யா காவாராயினும்  நா காக்க எனக் கட்டளையிட்டார். கவிஞர் ஜெய.இராஜமூர்த்தி. மனிதனுக்கு கையில் மட்டும் ஆயுதம் இல்லை; வாய்ச்சொல்லிலும் ஆயுதம் உண்டு என வள்ளுவத்தை வழி மொழிகின்றார்.

அற்றால் அளவறிந்து உண்க அஃதுடம்பு
பெற்றான் நெடிதுய்க்கும் ஆறு

என்பது வள்ளுவர் கண்ட மருத்துவம்.

உணவு உடலை வளர்ப்பதற்கன்று
உயிரை வளர்ப்பதற்கு என்று எண்ணு
என்பது கவிஞரின் மருத்துவம்; மருத்துவரின் கவித்துவம். கவிஞர் சமூக மருத்துவராகிச் சாதிச் கரையான்களுக்கு சன்மார்க்கமே சிறந்த மருந்து எனப் பரிந்துரைக்கிறார்.

உன் மனம் வானம் போன்றது
நீயோ அதைச் சின்னத்திரை ஆக்கிக் கொண்டிருக்கிறாய்
என்பதில் கவிதை துடிக்கிறது. உயிர்க்கிறது.
மகாகவி பாரதியைப் பலரும் பலவண்ணம் புகழ்ந்தார்கள். அவற்றுள் இக் கவிஞரின் “வடிக்கும் கவிதையில் வானவில்லையே வளைக்கத் துணிந்தவன் என்பது ஒரு வண்ணம்! யார் அந்த நபிகள் நாயகம்?

நெருஞ்சி முட்களும்
அறிவு விருந்தளித்த
குறிஞ்சி மலர்

இந்த மலரில் எத்தனை வகையான மணம்! மலர் அறிவு விருந்தளிப்பது கவிதையில் தானே முடியும்.

பாவேந்தர் பாரதிதாசன் தமது அழகின் சிரிப்பில், இருள் என்னும் தலைப்பில் கவிதை கண்டார். அதுமுதல் இருளும் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த வரிசையில் கவிஞரின் இருள் வாரிசாகிறது. அதேபோல் கவிஞரின் தென்றல், பாவேந்தரின் பொதிகைமலை விட்டெழுந்து எனும் கவிதையை நினைக்கச் செய்கின்றது.

பெண்ணினத்தை வேதநாயகம் பிள்ளை தொடங்கி பாரதி பாரதிதாசன் என பலரும் தம்தம் பாங்கில் போற்றிப் புகழ்ந்தனர். அவர்கள் வழியில்

பெண்ணினமே முன்னேறு
உன் வெற்றிக்கு
விண்மீனைக் கொண்டுவந்து
உன் வீட்டு வாசற்படியில்
தோரணமாய்க் கட்டிவை

எனக் கவிஞர் பாடுவது ஏவுகணையின் வேகம்!

கலைஞர் கருணாநிதி அன்று குப்பைத்தொட்டி பேசுவது போல ஒரு சிறுகதை எழுதியிருந்தார். “அதிகம்” எனும் தலைப்பில் கவிஞர், “இந்த நாட்டில் குப்பைத்தொட்டியில் குப்பைகளை விட குழந்தைகள் அதிகம்” என்று சுட்டிக்காட்டுவது, அச்சிறுகதையை நினைக்கத் தூண்டும். இக் கவிதை மனிதநேயத்தின் மலர்ச்சி. அதே கவிதையில் “பள்ளிக் கூடங்களை விட
கோயில்கள் ஏராளம்” என்பது “பள்ளித்தலம் அனைத்தும் கோயில் செய்குவோம்” எனும் பாரதியின் வரியை எண்ணத்தூண்டும் எழுச்சி!

பெரியார் “மனிதனை நினை” என்றார். கவிஞரோ

மூச்சிறைக்க இவைகளை
தம்மீது தூக்கி ஓடும்
ஆறறிவு மனிதனே
அனைத்திற்கும் வாகனம்

என பெரியார் வழியைப் பேணியுள்ளார்.

தமிழிலே பயணக் கட்டுரைகள், நூல்கள் உண்டு. பயணத்தைப் பற்றிய கவிதை குறைவு. பாரிசு நகரம் பற்றிய கவிதைத் தமிழுக்கு புதிய வரவு.

எளிமை கண்டு இரங்குவாய் வா வா வா, கஞ்சி குடிப்பதிற்கிலார் அதன் காரணங்கள் இவையென்றும் அறிவுமிலார் – என்பன கவிஞர் பாரதியின் கவிதை வரிகள். கவிதை பெரிது; அஃது

எழையையும் சிந்திக்கிறது. அண்ணா ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டார். கவிஞர் எழையின் சிரிப்பில் தீபாவளி (தலைப்பு) யைக் காண்கிறார். இவரும் ஒரு மக்கள் கவிஞராகிறார்.

முயற்சி திருவினை ஆக்கும் என்பது வள்ளுவம் அது பழமொழி. வியர்வையை நம்பு விதியை உன் வசமாக்கலாம் இது கவிஞரின் புதுமொழி!

வெற்றிக்கொடி நாட்டு, கதவுகள் ஆகிய தலைப்பிலமைந்த கவிதைகள் முற்றிலும் புதுமைக் கவிகள். கவிஞராக நிறுவும் அடையாளங்கள். கலியுகக் கவிதையின் முரண்பாடுகள் சொல்லும் பொருள் மிக நன்று! கவலைப்படாதே சகோதரா இளைஞர்களுக்கு நம்பிக்கை ஊட்டும்!

நாடி பிடிக்கும் கைகள் சமூகத்தை நாடித், தமிழை நாடிப், பகுத்தறிவை நாடி, சமரசத்தை நாடி, பெண்ணியத்தை நாடி, நபிகளை நாடி, பாரதியை நாடி, வள்ளலாரை நாடிக், கலைஞரை நாடிப், பெரியாரை நாடித் தோழர்களை நாடித் தொண்டுள்ளங்களை நாடிக் கவித்துவத்தை நாடி அடைந்துள்ளன. கவிஞருக்கு வியப்பும் வாழ்த்தும் ஒருங்கே உரியனவாகட்டும்!  அவர் தம் பேனா முனை, அவர் கையாளும் ஊசி முனையிலும் கூரியதோ! அவர் தம் கவிதை மருத்துவம் வான்புகழ் எட்டட்டும்!


அன்புடன் 

 

கி.செம்பியன்
08.02.2006
செம்பனார்கோவில்
தரங்கை வட்டம். நாகை மாவட்டம்


“இசைக்கவிக்கோ, முத்தமிழ் வித்தகர், நாடகச் செம்மல், கவித்தென்றல்” வெங்கடேசபாரதி அவர்களின்….

அணிந்துரை

வயிற்றுக்குப் போடுவதே வாழ்வென்று நினைப்பவர் பலர். மனத்துக்கு கலை, இலக்கியம், இசை, கவிதை, என்று தேடுபவர் சிலர்! அந்தச் சிலருள் கவிஞர் வள்ளல் நேசன் – இராஜமூர்த்தி சிறந்து நிற்கிறார். இருப்பது வேறு. வாழ்வது வேறு, இரை தேடிப்பின் இனப்பெருக்கம் செய்வதை விலங்குகளும் பிற அஃறிணை உயிர்களும் வெகுவாகச் செய்கின்றன; அவை உலகில் இருக்கின்றன. வயிற்றுப் பசியோடு மனப்பசியும் உள்ளவர் மனிதர்; சிந்தனை செய்து திறமையோடு வாழ்பவர்கள் சிறந்த மனிதர்கள். வயிற்றுக்குப் போடுவதோடு மனத்துக்கும் தேடுவது வாழ்வாகிறது.

வள்ளல்நேசன் ஜெய.ராஜமூர்த்தி தலை சிறந்த மருத்துவர். தமிழில் சிறந்த எழுத்தாளர், பேச்சாளர், கவிஞர், கலையின்பம் தேடுபவர். மருத்துவப்பணி இல்லாத நேரங்களில் இலக்கியம் படிப்பவர், இலக்கியம் படைப்பவர்,மேடை ஏறினால் மென்மதுரத் தமிழ் குற்றால அருவியாகக் கொட்டும். செவிமடுப்போர் சிந்தனையைத் தட்டும்.

வள்ளல் நெசன் வள்ளல் பெருமான் வழியே வாழ்வாங்கு வாழ்ந்து கொண்டிருக்கிறார். பெருமானார் நன்னெறிகளைப் பேணிக் கொள்ளுவதும், பிறர்க்குச் சொல்லுவதும் பெருவாழ்வெனக் கருதித் தொண்டாற்றுகின்றார்.

புலவர்க்கு வெண்பா புலி என்று சொல்லுவார்கள். இன்று வெண்பா எழுதுவோரை விரல்விட்டு எண்ணிவிடலாம். ஒரு நல்ல கருத்தை அழுத்தமாக – ஆணித்தரமாகச் சொல்லுவதற்கு வெண்பா மட்டும்தான் சிறந்த யாப்புமுறை என்று கவிப்பேரரசு வைரமுத்து கூறியுள்ளார். தமிழில் சிறந்த நீதி நூல்கள் அறன் வலியுறுத்தும் அரிய இலக்கியங்கள்  அனைத்தும் வெண்பா யாப்பிலே அமைந்தவை. குறள் வெண்பாவான திருக்குறளே சான்றாகும். 

கவிஞர் வள்ளல் நேசன் மிக அருமையாக வெண்பாப் பாடக் கூடியவர். அதற்குச் சான்று இந்நூலிலுள்ள முதற்ப்பாடலே யாகும். எனது ஊர் என்னும் அந்த வெண்பா செப்பலோசையோடு சிறந்து நிற்கிறது.

வண்டுகள் மொய்க்கும் வகையில் மலர்க்கூட்டம்
மண்டுகிற சோலையூர்! மக்களெல்லாம் – கண்டுமகிழ்
தேரோடும் வீதியிலே தெய்வம் விளங்கிடுநல்
காரோடும் ஊர்திருவெண் காடு

இந்த வெண்பாவை படிக்கும் போது புகழேந்திப் புலவரின் நளவெண்பாவைப் படிக்கும் அழகுணர்வு தோன்றுகிறது. இது உண்மை வெறும் புகழ்ச்சியன்று.

நூலின் ஆறாவது பாடலில்
உலகெங்கும் அன்பையே ஊட்டு என்னும் ஈற்றடி பொருள் பொதிந்து தமிழின் புகழ் மலிந்து நிற்கிறது. உணவு என்னும் கவிதை மரபை மீறிய கவிதை. அதில் ஒரு மருத்துவராகவும், மணிக்கவிஞராகவும் அரிய கருத்தைப் புரிய வைக்கும் நடையில் கூறுகிறார்.

மனிதன் உண்ணும் உணவு என்றும்
மனிதனை உண்ணாதவைகளாக இருத்தல் நன்று
என்கிறார். அதாவது நச்சென்று கூறுகின்றார் எனலாம்.

எண்ணெயும் காரமும்
உன்னையே அழிக்கும்
உப்பும் சர்க்கரையும்
உடலுக்கு எமனாம்

இது ஆயுளைக் காக்கும் அகவற்பா; நடை அருமை! மருத்துவக் கவிஞர் மனதை அள்ளுகிறார். தமிழ்க்கவிதை வரி சவுக்கடியாக மாறுகின்றது. இதோ
இருட்டில் கிடைத்ததாம் இந்திய சுதந்திரம்
அதனால் தான் இன்னும்
திருட்டுக்கும் லட்சத்திற்கும்
தீர்வு காணப்பட வில்லையோ?

சட்டையை கழற்றி விழும் சவுக்கடி வரிகள்!

தமிழ் மீது கவிஞருக்குத் தனியான காதல், தணியாத காவல்
செந்தமிழ்ப் பாட்டில் சிந்தும் தேனே
சிந்தையில் உன்னை வைத்துக் களித்தேனே
என்கிறார்.

வள்ளல் நேசன் தமிழ்ப்பித்தனாகப் பேசுவதைப் பாருங்கள்!
தமிழே! நீ கனிச்சாற்றில் ஊறிய நற்கற்கண்டு
செவ்விய மொழியில் சிரிக்கும் வெண்ணிலா!
ஆணிப்பொன், அணிதிகழ் விளக்கு, ஊனில் ஊறிய உயிர்மூச்சு
மாணிக்கம், மரகதம், ஏணிப்படி, இதயத்துடிப்பு
என்கிறார். பாவேந்தன் பாரதிதாசனை நினைவூட்டுகிறார்.

இன்னல் வரும்போது பெண்ணினத்தை பொங்கி எழக் கூறுகின்றார்.
பெண்ணே உன்கையில் வளையல் அணிந்திடு
எனினும் யாருக்கும் வளையாது நிமிர்ந்திடு
இவை புதுமைப் பெண்ணுக்கு மதுகை தரும் வரிகள்.

தென்றலாய் நீயிருந்தாலும் பெண்மைக்குச் சோதனை என்றால் புயலாகப் புறப்படச் சொல்கிறார்.
பெண்கள் நினைத்தால் எதுவும் முடியும் என்று கூற வந்த கவிஞர்
விண்மீனைக் கொண்டுவந்து
வீட்டு வாயிற்படியில்
தோரணமாய் கட்டிவை
உன் விரலசைவில் விடியலைக் கொண்டுவா

என்கிறார்.
புதுக்கவிதை நடையில் புகழ் உச்சிக்கு போகின்றார்.
அதிகம் என்னும் தலைப்பிட்ட கவிதை என்னை அதிகம் பாதித்துவிட்டது. நீங்கள் படித்துப் பாருங்கள் அதிர்ந்து போவீர்கள்!

தானந்தரும் இரத்தத்தை விட
தலைதுண்டிப்பால் வெளிவரும் இரத்தம் அதிகம்.
நடைபாதையில் நடப்பவரைவிட அதில் நாளும்
வாழுகின்றவர்கள் அதிகம்.
கன்னியரின் திருமணத்தை விடக்
கற்பழிக்கப்படுபவர்கள் அதிகம்,
வரதட்சணை கொடுக்க வசதியின்றிக்
கல்யாணக் கனவிலெ காத்திருப்போர் அதிகம்

அம்மம்மா! நெஞ்சைப் பிழிந்தெடுக்கும் நிசமான வரிகள். எழுத்தாளர் விந்தன் கதையைப் படிக்கப் பயமாக இருக்கிறது என்று பேராசிரியர் கல்கி கூறியிருப்பது போல எனக்கு வள்ளல் நேசனின் இந்த வரிகளைப் படிக்கும் போது அச்ச உணர்வே அதிகமாகின்றது.

கொலைத்திருவிழா என்னும் கவிதையில் பக்தி என்னும் பெயரில் மக்களின் மடமைச் செயல்களை நகைச்சுவையோடு நையப் புடைக்கின்றார்.

இரண்டுகால் பிராணிகள்
நான்குகால் பிராணிகளை வெட்டி வீழ்த்தின
இதைவிட மடமையை எவ்விதம் சாட இயலும்?

தந்தை பெரியாரைக் காரணத்தோடு – இங்கர்சால் என்றும் சாக்ரடீஸ் என்றும் கூறுவது மிகவும் அருமை. வள்ளல் பெருமானின் வழியைச் சொல்லும் போது
சாதிமதம் தவிர்த்தாலே தரணி தன்னில்
சமாதானம் பறக்கு மன்றோ

என்னும் எண்சீர்விருத்த அடி நெஞ்சில் நிலைக்கிறது. மனிதனை வெற்றிக் கொடி நாட்ட அழைக்கும் கவிதையில்
குட்டையாகவே நீயிருந்து விட்டால்
இறைத்துத் தீர்த்து விடுவார்கள்
அதனால்
அளக்க முடியாத ஆழியாக ஆர்ப்பரி என்கிறார்
வைக்கோல் போர்களே!
எளிதில் ஏறமுடியாத
இமயமாகுங்கள்
இந்த வரிகள் மனிதர்க்கு வாழ்வு தரும் வைர வரிகள்.

மனிதா! வியர்வையை நம்பு
விதியையும் உன் வசமாக்கலாம்
இது உழைப்பின் மேன்மையை உலகுக்குக் காட்டும் ஒப்பற்ற வரிகள்.

ஆறிருக்கும் இடத்தினிலே சோறிருக்கும் – உயர்
அறிவிருக்கும் இடத்திலோ அனைத்துமிருக்கும்
இது முத்தாய்ப்பான இசையமைத்து பாடும் வரிகள்.

முந்துதமிழ் பேரறிஞர் கலைஞரைப் பற்றிப் பேசும் போது அறிய தலைவரை அழகு தமிழால் அழைக்கிறார்.

நீள்புகழால்  நிலைத்த மாறனைப்பற்றி எழுதும் போது
கலைஞரென்னும் முகத்துக்கே கண்ணாய் ஆகி
கழகமென்னும்  கண்களுக்கே இமையாய் ஆனார்
என்று உருவக அழகோடு மாறனை உயர்த்துகின்றார்.

கும்பகோணத்துக் கோர சம்பவத்தைக் கூறும் போது
கொள்ளிக்கட்டைகள் பிணத்தை எரிக்கலாம்
பிஞ்சுகளை எரிக்கலாமா?
என்று கேட்டுக் கவிதையைப் படிக்கும் விழிகளில் கண்ணீர் நிரம்பச் செய்கிறார்.

நர்சரிப் பள்ளியா – இல்லை
நாசப் பள்ளியா
துவக்கப் பள்ளியா  - இல்லை
துக்கப் பள்ளியா?

கவிதை நூலாகிய அம்பறாத்தூணியிலிருந்து வினா அம்புகள் வீறிட்டு எழுவதை பாருங்கள்.

தமிழைக் காதலியாக்கிக் கவிதை பாடும் போது
உன்னை மறக்கும் நாள் என்றால் – அது என்
உயிர் துறக்கும் நாளே என்னும் வரிகள்

திரைப்பட பாடலாய் செதுக்க வேண்டிய வரிகள். நெஞ்சுருக வைக்கும் நிகரில்லா வரிகள்.

தம்பி – கவிஞர் வள்ளல் நேசனின் அம்பறாத்தூணி என்னும் இக்கவிதை நூல் படித்துப் பயன்பெற வேண்டிய பைந்தமிழ் நூல் ஒரு மருத்துவர், மிகச்சிறந்த கவிஞராக விளங்குவதை நாம் பாராட்ட வேண்டும். கவிதைகளில் பெருமைமிகும் புதுச் சொற்கள் பிறந்து வந்துள்ளன.

புதுமைக் கருத்துகள் பூத்துக் குலுங்குகின்றன. வள்ளல்நேசன் ஜெய.இராஜமூர்த்தி முயன்றால் அழியாக் காப்பியமே ஆக்கித்தரலாம். வாழ்க தம்பியின் கவிதைத் தொண்டு.

உள்ளுந் தொறுமின்பம் ஊற்றெடுக்கும் வண்ணமுடன்
தெள்ளு தமிழ்க்கவிதை செய்துள்ளார் – வள்ளல்நேசன்!
இன்னும் பலநூல் இயற்றி உலகளவில்
மன்னுபுகழ் காண்பார் மகிழ்ந்து.

அன்புடன்

வெங்கடேசபாரதி
கம்பன்நகர்,
சீர்காழி
03.02.2006




என்னுரை

"வள்ளல் நேசன்"
மருத்துவர். ஜெய.இராஜமூர்த்தி M.B.,B.S.,D.C.H.,
திருவெண்காடு – 609 114
சீர்காழி வட்டம்

வணக்கம்!

“நேசம் விரும்பும் நெருப்புப் பூக்கள்” கவிதைத் தொகுப்பிற்குப் பின் புனிதர் வள்ளலாரின் புரட்சிப்பாதை என்ற உரைநடை நூலை எழுதி வெளியிட்டேன். அதன் பிறகு என் மனத்தோட்டத்தில் மலர்ந்த எண்ண மலர்களை தொடுத்து வெளியிடும் கவி மலர்ச்சரம் இந்த எனது அப்பறாத்தூணியிலிருந்து.

கவிதை வடிவிலே என் சிந்தனைகளை தாளிள் பதிவு செய்து கொண்டிருந்த எனக்கு யாப்பிலக்கணம் கற்றிக் கொடுத்து மரபுக்கவிதைகள் எழுதத் தூண்டியவர் சீர்காழி கம்பன் நகரைச் சேர்ந்த கவித்தென்றல் வெங்கடேசபாரதி ஆவார்.

அவர் தந்த ஊக்கத்தின் பயனாக சில விருத்தப்பாக்கள், வெண்பாக்கள், ஆசிரியப்பாக்கள் எழுத முயற்சி செய்தேன். அவைகளோடு சில புதுக்கவிதைகள், ஹைக்கூ பாணிக்கவிதைகள் எழுதி ஒன்றிணைத்து இந்த அம்பறாத்தூணியை கவி உலகிற்கு காணிக்கையாக்கியுள்ளேன்.

இன்றைக்கு நாட்டிலே நிலவி வரும் வெடிகுண்டு, வன்முறைக் கலாச்சாரம் ஒழிய வேண்டும், மூடநம்பிக்கைகள் அழிய வேண்டும். அதற்கு வள்ளலார் நெறிகள் தந்தை பெரியாரின் சமுதாய சீர்திருத்தம், சமுதாய சோசலிஷத் தத்துவத்தோடு கூடிய காந்திய சிந்தனைகளை மக்களிடையே இந்நாளில் பரப்ப வேண்டியுள்ளது அவசையமாகிறது.

என்னைச் சுற்றியுள்ள சமுதாயம், சாதி, மதக்கலவரத்தாலும் வன்செயல்களாலும், அர்த்தமற்ற சடங்கு சம்பிரதாயங்களாலும் கெட்டுச் சீரழிந்து போவதை கண்டு என்னால் வாளாயிருக்க முடியாது. பிறந்தான், இருந்தான், இறந்தான் என்பதன்று வாழ்க்கை.

இந்த சமுதாயத்திற்கு எதிர்காலத்திற்கு எதையாவது விதைத்து விட்டுச் செல்ல வேண்டும் என்பதும் அது தான் வாழ்வின் அர்த்தமாக இருக்க முடியும் என்பதும் என் எண்ணம். நாம் வாழ்ந்ததற்கான தடயங்கள் எந்த வகையிலாவது இங்கு பதிவுசெய்யப்பட்டிருக்க வேண்டும். அந்தத் தடயங்கள் எதிர்கால சந்ததியினரை நல்ல வழிக்கு இட்டுச் செல்ல வேண்டும்.

எனக்கு நோயாளிகளைப் பார்த்து மருத்துவம் செய்ய வேண்டும்.ஓய்வு நேரங்களில் புத்தகம் படிக்க வேண்டும். அல்லது எழுத வேண்டும். சன்மார்க்க கூட்டங்களுகுச் சென்று உண்மை ஆன்மீகம்  பற்றிய கருத்துக்களை எடுத்துக் கூற வேண்டும் என்பதையே தற்போது என்னுடைய வாழ்க்கை நடைமுறையாகக் கொண்டு உள்ளேன்.

அந்த வகையில் நான் பேசுதற்கும், எழுதுதற்கும் எனக்கு ஊக்கமளித்து வரும் என் தந்தையார் ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் திரு. எஸ். ஜெயராமன் அவர்களுக்கும், என் மனைவி ஆர்.ஹேமலதா அவர்களுக்கும் என் நன்றிகள் உரித்தாகுக.

இக்கவிதைத் தொகுப்புக்கு அணிந்துரை நல்கியுள்ள பேராசிரியர் முனைவர். திரு. கி.செம்பியன் அய்யா அவர்களுக்கும், கவித்தென்றல் வெங்கடேசபாரதி அவர்களுக்கும் என் நன்றி மலர்களை காணிக்கையாக்குகின்றேன். ஒற்றுப்பிழைகள் திருத்தி ஆர்வ நன்மொழிகள் வழங்கிவரும் மதிப்பிற்குரிய பேராசிரியர் முனைவர். தா.தியாகராஜன் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள். இந்நூலை ஒரு புத்தகமாக ஆக்க முனைந்த வழுவூர் ரவி அவர்களுக்கும், ஒளி அச்சுக்கோர்ப்பு செய்ய பெரும் உதவி புரிந்த இலக்கியா பிரிண்டர்ஸ் உரிமையாளர் திரு. கலைச்செல்வன், திருமதி. வெற்றிச்செல்வி, செல்வி.ராதா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இக்கவிதை நூலுக்கு ஆசியுரை வழங்கிப் பெருமை சேர்த்த முன்னைத் துணை வேந்தர் (தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகம்) முனைவர்.ஔவை.நடராஜன் அவர்களுக்கும், அச்சிட்டு வெளியிட்ட தமிழருவி பதிப்பகத்தாருக்கும் நன்றிகள்!

எல்லாம் செயல்கூடும் என்னாணை அம்பலத்தே
எல்லாம் வல்லான் தனையே ஏத்து

இப்படிக்கு

ஜெய.இராஜமூர்த்தி




 *********



இதயம் 



நெஞ்சமென்னும் மணிக்கூண்டில்
பேட்டரியின்றி இயங்கும் தசைக்கடிகாரம்.

உயிர் இருப்பதற்கான அடையாளமாக
ஒரே லயத்தில் இசைத்துக் கொண்டிருக்கும்
தாளவாத்தியம்.

இந்த வாத்தியம் முடங்கி விட்டால்
வீட்டு வாசலில் சங்கு ஊதப்படும்
அறிவிப்பு வாத்தியங்கள் அடிக்கப்படும்.

மின்சாரம் ஏதுமின்றி
உடம்பென்னும் வயலில்
செல்கள் என்னும் பயிர்களுக்கு
இரத்த நீரைப் பாய்ச்சிக் கொண்டிருக்கும்
அதிசய சாதனம்.

இதயமோ….
சுத்த இரத்தம் அசுத்த இரத்தத்தில்
கலக்காதிருக்க நான்கறையாகத் தடுக்கப்பட்டு
நித்தமும் இயங்குகிறது.

மனிதர்களோ
தங்களை நாலாயிரம் சாதிகளாகப்
பிரித்துக் கொண்டு சமுதாயத்தை
அசுத்தப்படுத்திக் கொண்டேயிருக்கிறார்கள்.

ஆண்டவன் இருக்கும் இடம் இதயமென்று
அருளாளர்கள் கூறுகின்றார்கள்.
ஆனாலும் அவரை வெளியே துரத்திவிட்டு
ஆண்டவரைத் தேடி நாளும் அலைகிறார்கள்.

சுருங்கிப்போன மனம் உள்ளவரிடமும்
இதயம் சுருங்கி விரிந்து கொண்டேயிருக்கிறது
விரிந்து கொடுக்க மனிதன் மட்டும்
மறுத்துக் கொண்டேயிருக்கிறான்.

இயற்கையிலே இதயம்
மென்மையாகவே படைக்கப்படுகிறது
சில மனிதர்களோ
அதைக் கல்லாக்கிக் கொண்டு
திரிகிறார்கள்.

உதிரத்தை தனக்குள் அனுப்பி
வெளியேற்றிக் கொண்டு
பரிசுத்தமாக இயங்குகிறது இதயம்.

,மனிதனோ சாதிமத மென்னும்
சாயத்தைக் கலந்து உதிரத்தைச்
சாயப்பட்டறையின் கழிவுநீர் ஆக்கத்
துடிக்கிறான்.

பதற்றமின்றி இதயம் சீராக ஓடினால்
வாழ்நாளும் சீராக ஓடும்
இதயம் வேகமாக ஓடினால்
வாழ்நாளும் வேகமாக ஓடும்.

இது தெரிந்திருந்தும் நாம்
கோபமென்னும் சாவிப்போட்டு அதனை
முடுக்கிவிட்டுக் கொண்டிருக்கிறோம்.

உடம்பின் நடுவில் மேலே உள்ள மூளை
பொதுவாகச் சிந்திக்க மறுக்கும் போது
உடம்பின் இடப்புறம் உள்ள இதயமோ
வலப்புறத்திற்காகவும் சேர்ந்தே துடிக்கிறது.

அதனால் தான் மூளை சுருக்கங்களுடனும்
இதயம் சுருக்கமற்றும் இருக்கிறதோ?

கையளவு இதயத்தில்
கடலளவு ஆசை வந்தால்
காலன் வந்து கட்டிப்பிடிக்கிறான்.

கையளவு இதயத்தில்
கடுகளவும் ஆசையில்லை எனில்
காலன் கொஞ்சம் எட்டிப்போகிறான்.

ஆசைகள் இல்லா விலங்குகள்
ஆனந்தமாக வாழ்கின்றன மாரடைப்பு ஏதுமின்றி
வாழ்நாளை பெரும்பாலும்
முழுமையாக்குகின்றன.

ஆசைகள் அதிகம் நெருங்கிடில்
மரணம் மனிதனை நெருங்குகிறது.

இதயம் இலேசானால்
வாழ்க்கைப் பயணம் இன்பமாகும்
இதயம் கனத்தால்
வாழ்க்கைப் பயணம் துன்பமாகும்.

வீசும் புயலுக்கு
ஆலமரம்தான் அஞ்சவேண்டுமே தவிர
அறுகம்புல் அஞ்சவேண்டியதில்லை.

இதயத்தில் ஈரம் இருப்பவர்கள்
பிறருக்காக கண்ணீர் சிந்துகிறார்கள்.

இதயத்தை இரும்பாக்கியவர்கள்
அடுத்தவன் இரத்தத்தில்
குளியல் நடத்துகிறார்கள்.

இதயங்களில் இருள் அகற்றி
அதில் அருளொளி எற்றினால்
இங்கே கோயில்கள் எதற்காக?

தனக்காக மட்டும் துடிப்பது சுயநலக்காரன் இதயம்
ஊருக்காக துடிப்பது நல்ல மனிதனின் இதயம்
உலகுக்காகத் துடிப்பது மகான்களின் இதயம்.

ஏழைகளின் இதயங்கள் கண்ணீரில் மிதக்கப்
பணக்காரன் இதயமோ பயத்தால் துடிக்கிறது.

பல அரசியல்வாதிகளின் இதயங்கள்
பதவிக்காக மட்டும் துடித்துக்கொண்டிருக்கிறது.

இதயத்துக்குள் சுயநலமென்னும்
உடைந்த கண்ணாடித் துண்டுகளைப் போட்டுச்
சுருக்குப்பை ஆக்குபவ்ர்கள்
பிறந்து இறக்கிறார்கள்.

இதயத்தை அருள்மணம் வீசும்
தாமரையாய் மலரச் செய்பவர்கள்
இறந்தாலும் நிலைக்கிறார்கள்.

உலகில் அறுநூறுகோடி மனித இதயங்கள்
சராசரியாக ஓடிக் கொண்டிருக்கின்றன
கோடானுகோடி இதயங்கள் ஓடி நின்றுவிட்டன.
கோடானுகோடி இதயங்கள் ஓடத் தயாராகிவிட்டன.

இதயத்தில் இரத்தத்தை மட்டும்
வைத்திருந்தவர்கள்
உண்டு, உடுத்து இருந்தார்கள்
அதில் அன்பைச் சுமந்தவர்கள்
அடுத்தவர்கள் இதயங்களிலும் நுழைகிறார்கள்.

அவர்கள் வாழ்ந்து மறைந்தாலும்
மரணமில்லா பெருவாழ்வை அடைவார்கள்.



மனம் விரியட்டும்


உன் உள்ளங்கையில் ஓடும் ரேகைகளையே
உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தால்
அண்ணாந்து கொஞ்சநேரம் அண்டவெளியைக்
காண்பது எப்போது?

உன் குழந்தையின் சிரிப்பை ரசிக்கும் நீ
பக்கத்து வீட்டுத் தோட்டத்தின்
பச்சைத்தாவரங்களில் சிரிக்கும்
பூக்குழந்தைகளைக் கண்டு ரசித்தது உண்டா?
அதில் சுறுசுறுவென அங்குமிங்கும் தாவும்
சின்னச்சிட்டுகளைக் கண்டு
சிலாகித்தது உண்டா?

உன் வீட்டுத் தோட்டத்து தேங்காய்களையே
எண்ணிக் கணக்குப் பார்த்துக் கொண்டிருந்தால்
இரவில் மின்னும் நட்சத்திரங்களை எண்ணி
மகிழ்வது எப்போது?

உன் மூச்சின் மீது பிரியம் வைக்கும் நீ
எவர் பங்கிலிருந்து அதை இழந்தோம்
என்று நினைத்தது உண்டா?

வானவில் உனக்காகக் காத்திருக்கும் போது
நீயோ சீரியல் பார்ப்பதே இன்பம் என்கிறாய்.

உன் நகத்தை மட்டும் நேசித்துக் கொண்டிருந்தால்
ஊர்வலம் போகும் மேகக் கூட்டத்தையும்
உற்சாகம் தரும் நிலவையும் நேசிப்பது எப்போது?

உன் மனம் வானம் போன்றது
நீயோ அதை சின்னத்திரை ஆக்கிக் கொண்டிருக்கிறாய்!



சமுதாயமே சற்றே சிந்தி!



சாதிக்கரையான்கள் உன் மூளையின்
செல்களைச் செல்லரித்துக் கொண்டேயிருக்கின்றன.
அதன்மீது சன்மார்க்க மருந்து தூவ
இன்னும் மனம் வரவில்லையா உனக்கு?

உன் அறிவை மதவாதிகளிடம்
தொலைத்து விட்டுச்
சுபிட்சத்தைத் தேடிக் கொண்டிருக்கிறாய்.
எவ்வளவு நாளைக்கு உன் மூளையை
அவர்கள் சலவை செய்வார்கள்?

உன் நெஞ்சத் தோட்டத்தில்
பொறாமை வன்முறை என்னும்
சப்பாத்திக் கள்ளிகளையே வளர்த்துக் கொண்டிருந்தால்
நேசமணம் வீசும்
வாசமலர்களை எப்போது நுகரப்போகிறாய்?

உன்னைச் சுற்றிலும் சமயப்புற்றுகள்
மானுடத்தை மறைத்துக் கொண்டிருப்பதால்
இங்கே இனக்கலவரம் என்னும் தீக்கு
எண்ணைவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உன்னை விடுதலை செய்துகொள்
சுதந்திரமாய் பிறந்தவன் நீ
குறியீடுகளை ஏன் சுமக்க வேண்டும்?

இன்னும் எத்தனை நாளைக்கு
உன் முகத்தை பிறர் வெள்ளையடிக்கக்
காட்டிக்கொண்டிருப்பாய் தூய நீருக்கு நிறம் உண்டோ!
தூய மனத்திற்கு மதம் உண்டோ!
என உன்மனம் வினவவில்லையா?

எந்த ஊரில் இருந்து பூமி ஊர் வந்தாய்?
எந்த ஊருக்குப் பாடையாத்திரை போவாய்?
அந்தந்த ஊர்களில் சாதிமதம் உண்டோ?
சாதிமதச் சான்றிதழ்கள் மறுமை உலகில் செல்லுபடியாகுமோ?

ஓடும் இந்தக்காலம் எந்த மதத்துடையது?
பஞ்ச பூதங்களைப் பாகப்பிரிவினை செய்ய முடியுமா?
அயோத்தியில் கோயில் கட்டினாலும்
மசூதி கட்டினாலும்
இறைவனைக் கைதொழ
உன்கைகள் இருக்க வேண்டும்,
இறைவனை நினைக்க நீ இருக்க
வேண்டும் என்பதை மறந்துவிடாதே!



வாழ்க அப்துல்கலாம்




புன்ணியனாய்ப் பிறப்பெடுத்த பெருமைமிகு அப்துல்கலாம்
புதியபாரதத்தை இவர் வழியில் சென்றால் ஆக்கலாம்
மனிதநேயத்தை இம்மாமனிதரிடம் காணலாம்
புனிதர் காந்தியாய் இவரையும் நாம் போற்றலாம்

அன்றாடம் உழைக்கின்ற அய்யா அப்துல்கலாம்
அறிவியலில் ஆக்கத்தை இவரால் பார்க்கலாம்
மாணவர்கள் முன்னேற இவர் வழியில் நடக்கலாம்
மதவெறி ஒழித்து நாமும் இவர்போல் நிற்கலாம்

ஏழைக்குடும்பம் தந்த எங்கள் ஏந்தலாம்
உழைப்பின் வழிநடக்கும் உண்மை கலாம்
நாடெங்கும் இவர் எண்ணம் விதைக்கலாம்
நற்பெயரை நாட்டினிலே என்றென்றும் நாட்டலாம்

முயற்சிக்கும் முனைப்புக்கும் பெயர்பெற்ற அப்துல்கலாம்
முன்னேற்றம் காண்பதற்கு எவரும் அறிவைக் கூர்தீட்டலாம்
விஞ்ஞானி என்றாலும் மெய்ஞானம் அறிந்த அப்துல்கலாம்
அஞ்ஞானம் நீக்கிவிட்டால் அமைதியின்பம் உணரலாம்.

ஏவுகணைகள் பல ஏற்றிவிட்ட எங்கள் கலாம்
தாவு குழந்தை கண்டால் தாவிவந்து கொஞ்சும் கலாம்
எளிமையுடன் வாழுகின்ற இதயம்கவர்  அப்துல்கலாம்
எல்லாரும் இவர்பேச்சால் பாரதத்தை உயர்த்தலாம்.



மாறுமுகம்




முருகனுக்கு ஆறுமுகம்
பிரம்மனுக்கு நான்குமுகம்
பிள்ளையாருக்கு யானை முகம்
தெய்வங்களுக்கு மட்டும் தான்
மாறுமுகங்கள் என்று எவன் சொன்னது?
மனிதனுக்கும் உண்டு
வேறு முகங்கள்
பொய் அழுகை, போலிச்சிரிப்பு கூடிய
நடிப்பு முகங்கள் எத்தனை! எத்தனை!



எனது ஊர்



வண்டுகள் மொய்க்கும் வகையில் மலர்க்கூட்டம்
மண்டுகிற சோலையூர் மக்களெலாம் – கண்டுமகிழ்
தேரோடும் வீதியிலே தெய்வம் விளங்கிடுதல்
காரோடும் ஊர்த்திருவெண் காடு


எனது குரு



பூ மணக்கும் நல்ல புகழ்மணக்கும் சொல்லாலே
நாமணக்கும் நற்றமிழ்ப்பா நல்கியஎம் – கோமகன்
அருளாளர் வள்ளல் அருட்ஜோதி போல
கருணையை எல்லார்க்கும் காட்டு

ஆயுதங்கள்



சிவனுக்கு சூலாயுதம்
முருகனுக்கு வேலாயுதம்
விஷ்ணுவுக்கு சக்ராயுதம்
இன்னும் உண்டு எண்ணற்ற
ஆயுதங்கள்.
கோடரி, அரிவாள்,
குத்தீட்டி,கூர்கத்திகள் என்று
எங்கள் பெண்தெய்வங்கள்
கைகளிலும் இவைகள் உண்டு.
மனிதன் இவைகளை தாண்டிவிட்டான்
மனிதனுக்கு கையில் மட்டும்
ஆயுதம் இல்லை
வாய்ச்சொல்லிலும்
ஆயுதம் உண்டு!


எளிமை பேணு


அடக்கத்தை வாழ்க்கையில் அன்றாடம் காத்து
மடமைதன்னை நீக்கிவாழ் மண்ணில் – திடமாய்க்
களிப்புடன் வாழ்ந்திடவே காலம் முழுதும்
எளிமையில் என்றும் இரு.


வன்முறை நீக்கு




அன்பினால் இன்பம் அனைவர்க்கும் ஓங்கிடவே
மன்பதையில் மானுடம் மாண்புறவே – என்றுமே
வன்முறை நீக்கி வரலாறு போற்றிடவே
நன்மையை நானிலத்தில் நாட்டு.


வள்ளலார் போல் கடவுளைக்கான்




ஊருக்கு செய்திடுவாய் ஊழியம் தோழனே
யாருக்கும் அஞ்சாத ஆண்மைகொள் – பாரில்
நடமிட்ட தெய்வமாம் வள்ளலார் போலெ
கடவுளையும் அன்புருவாய்க் காண்.


அன்பை ஊட்டு

வன்செயல் விட்டு வளமாக வாழலாம்
நன்மையை எல்லார்க்கும் நாட்டலாம் – என்றும்
கலகம் தவிர்த்திட்ட காசினியைக் காண
உலகெங்கும் அன்பையே ஊட்டு


செல்வம் சேர்

நித்தம் உழைப்பாயின் நிம்மதி நீபெறுவாய்
வித்து கிடந்தால் விருட்சமாகா – கத்தும்
குருவிகூட தன் உணவைத் தான் சேர்க்கும் நீயும்
செருக்கொழித்துச் செல்வத்தை சேர்


ஊருக்கு உதவு


குறள்காட்டும் பாதையிலே கூடு தினமும்
அறத்தை அணிகலனாய் ஆக்கு – மறத்தமிழா
பேருக்கும் போற்றுதலுக்கும் பேராசை கொள்ளாமல்
ஊருக்குத் தொண்டால் உதவு


புகை உனக்கு பகை

புகைப்பிடித்தல் நீக்கதுவே புற்றுநோயைச் சேர்க்கும்
பகையாகி உன்னுடலைப் பாழாக்கும் – மானிடா
புந்திக்குள் தீயவை நீக்கித் புதுத்தெம்பால்
சிந்தித்து நல்லவற்றைச் செய்.


வள்ளுவம் வளர்

பிறப்பொக்கும் எவ்வெவர்க்கும் என்றே உரைத்த
குறளைப்போல் நூல் உண்டோ கூறு – சிறுசிறகாய்
தள்ளாடும் வாழ்க்கைக்குத் தாங்குகோல் ஆகிடும்
வள்ளுவத்தைப் போற்றி வளர்.


அருட்பாப் படி


சினம்தவிர்க்க ஆசைவெல்ல சிற்றின்பம் போக்க
கனவிலும் காமநோய் நீக்க – மனமேநீ
அந்தியிலும் காலையிலும் அன்றாடம் வள்ளலாரின்
செந்தேன் அருட்பாவைத் தேடு



மன மடக்கு


யாக்கை அழியுமே யார்க்கும் உணர்ந்து நீ
நாக்கால் நயம்படப் பேசிடு – ஏக்கக்
கனவாய்க் கலைந்திடும் வானவில் வாழ்வில்
மனத்தை அடிக்கி மகிழ்


பரம்பொருள்



எங்கும் நிறைந்த இறையைத் தெளிந்திடு
திங்களாய் ஞாயிறாய் தென்றலாய் – பொங்கும்
கடல்நீராய்ப் பூமியாய்க் காற்றாய் விளங்கும்
கடவுள் தொழுதிடுவாய் கண்டு.


மது நீக்கு



அறிவைக் கெடுத்திடும் ஆண்மை அழிக்கும்
செறிவான நம்வாழ்வில் செல்வம் குறைக்கும்
தனிமையைக் கொண்டுவந்து தாழ்த்தும் விடமாய்
மனிதனைக் கொல்லும் மது.


வள்ளலார் வழி நட



உள்ளத்தில் அன்புடன் உண்மைச் செயலுடன்
கள்ளம் கபடம் கலைந்திடவே – தள்ளாமல்
வள்ளற் பெருமான் வழியில் நடைபோட்டால்
எள்ளளவும் இல்லை இடர்


மனித நேயம்


பெரும்கல்வி கற்ற பெரியோர் எனினும்
திருக்கோயில் சென்று தினம் வணங்கிக் – கர்வமுடன்
கோமானாய் வாழ்ந்தாலும் கொஞ்சம் இரக்கின்ற
மாமனித நேயமே மாண்பு


இதுதான் பாதை



எத்திக்கும் இன்பமுற என்றும் உலகோர்க்குத்
தித்திக்கும் தீஞ்சுவைப்பா செய்தவராம் – புத்தனாய்
அள்ளக் குறையாத அன்பு மொழிதந்த
வள்ளலார் பாதைக்கு வா.


தென்றலே வா…



மல்லிகையின் வாசம் சுமந்து மகிழ்வூட்டும்
மெல்லிய பூமியிலே புத்துணர்வே – சில்லென்றே
என்னோடு கொஞ்சும் உறவாட என் இல்லில்
தென்றலே நீதான் திரும்பு


கொல்லாதே



புத்தரைப் போற்றுப் புனிதராம் காந்தியை
நித்தமும் நெஞ்சில் நிறைத்திடு – தந்தையே
கொல்லாமை மேற்கொண்டு கூடும் வரையில் நீ
நல்லவற்றை நாளுமே நாடு.


******************


பாவுக்கு அதிபதி




நெருப்பு பிழம்புகளாய்
உருக்கும் பாட்டுகளால்
கருக்கினான் புரட்டுகளை!

ஈட்டியின் முனைகளாய்த்
தீட்டித் தந்தான்
ஏட்டில் கவிதைகள்!

வெள்ளையனை எதிர்க
வெடிகுண்டுத் தமிழை
வெறியுடன் வீசியவன்

முறுக்கு மீசை முகத்தினிலே
முன்னேற்றப்பாதை மனத்தினிலே
முகிழ்க்கும் புரட்சிப் பாட்டினிலே!

பாட்டில் சுவை தந்தான்
நாட்டில் வீரம் தந்தான்
ஏட்டில் எழுச்சி தந்தான்!

கறுப்புக் கோட்டை அணிந்தவன்
நொறுக்கும் பாட்டை வரை
யறுத்துத் தந்தவன்.

வடிக்கும் கவிதையில்
வானவில்லையே
வளைக்கத் துணிந்தவன்.

ஆரிய வழக்குகளைச்
சூரிய கதிர்களாய்ச்
சுட்டெ எரித்தவன்

சாதி அழுக்குகளைச்
சந்தப் பாட்டுத்
தீயில் எறித்தவன்.

தொடுக்கும் சொல்லால்
தோளைத் தட்டியவன்
துணிவை ஊட்டியவன்

பிறவிக் கவிஞன்
பெரிய சித்தன்
தமிழ் மீது பித்தன்.

எழுச்சிக் கவிஞன்
எழுத்தில் உயிரை
ஊட்டிய கவிஞன்.

எக்காலமும் அழியாத
எண்ணங்களை எழுத்தால்
எக்காளமிட்டவன் வாழ்க!


பாரத்ரத்னா காமராஜர்




விருதுநகர் தந்த வீரச்சிங்கம்
விருதுக்குப் பெயர் சேர்த்த கருப்புத்தங்கம்
பெயரில் மட்டும் காமம் கொண்டார்
செயலில் என்றும் கர்மம் கொண்டார்.

மதிய உணவுத்திட்டம் தந்து
புதிய சகாப்தம் புவியில் படைத்தார்
காட்சிக்கு எளியர் கடுஞ்சொல் நீக்கியே
ஆட்சியைப் புரிந்த அருமைத் தலைவர்.

கறைபடியாத கரத்தை உடையவர்
சிறைகள் பலதரம் ஏகிய செம்மல்
எளிமையை என்றும் ஏற்றுப் பெற்றவர்
ஏழையின் இதயத்தை தாங்கிப் பிடித்தவர்.

சொத்தாய்ப் புகழையே சேர்த்துவைத்தவர்
எத்தாலும் அழியாப் பெயரைப் பெற்றவர்
நித்தமும் எங்கள் நெஞ்சில் நிற்பவர்.

கல்வியால் கண்களைத் திறந்து வைத்தவர்
அல்லும் பகலும் அரும்பணிச் செய்தவர்
கள்ளுக்கடையை மூடிடச் சொன்னவர்.

பெரியார் மெச்சிய பச்சை தமிழர்
சரியாய் தமிழகம் ஆண்ட முதல்வர்
விரியும் உன்புகழ் விண்ணாய் நிச்சயமே.


புரட்சிச் சூரியன் அண்ணல் நபிகள் நாயகம் (ஸல்)





மறையாம் குரான் தந்த
இறைவன் ஒருவனே என
மண்ணில் முழக்கிய
மதிநிறை நபிபெருமான்.

மானுட ஒற்றுமைக்கு
மக்காவில் கூவிய
மகத்தான பூங்குயில்
மனித நேயச் சிற்பி.

பாலைவனப் பகுதியில்
பார்போற்ற வாழ்ந்த
பண்பாட்டுப் பெட்டகம்
பகுத்தறிவுச் சுடர்.

நெருஞ்சி முட்களுக்கும்
அறிவு விருந்தளித்த
குறிஞ்சி மலர்.
குணத்தின் குன்று.

அன்பைச் சுமந்த பூங்காற்று
அறிவைத் தெளிந்த நீரூற்று
அடிக்கடி சொன்ன கூற்று
இறைவன் ஒருவனையே போற்று

உருவ வணக்கத்தை
ஒழித்துக் கட்டிய
துருவ நட்சத்திரம்
தூய சிந்தனையாளர்.

அழிக்க வேண்டியவைகளை
அழிக்க முடிக்க
அழிக்க முனைந்தவர்களை
அழித்து ஒழித்தார்.

புரட்டு மனிதர்களின்
வறட்டு வாதங்களைப்
புறமுதுகிட்டோடச் செய்த
புரட்சி சூரியன்.

இல்லத்தில் இருந்து கொண்டே
புல்லொழுக்கத்தைப் போக்கியவர்!
அல்லாவின் பேரருளால்
நல்லொழுக்கத்தை நாட்டியவர்!

கொடுக்கச் சொன்ன கொடையாளர் பண்பை
உடுக்கச் சொன்ன உத்தமர் தீயவை
தடுக்கச் சொன்ன தகவாளர் – அன்பைத்
தொடுக்கச் சொன்ன அறிவாளர்.

அளவற்ற அருளாளன்
நிகரற்ற அன்புடையோன்
அல்லா தந்து நின்ற இறை தூதர்
இணையடியைப் போற்றுவோம்.


உணவு



உணவு உடலை வளர்ப்பதற்கன்று
உயிரை வளர்ப்பதற்கு என்று எண்ணு
மனிதன் உண்ணும் உணவு என்றும்
மனிதனை உண்ணாதவைகளாக இருத்தல் நன்று.

இயற்கை உணவில்
என்றும் உண்டு
இனிமையும் இன்பமும்
செயற்கை உணவுகள் தந்திடுமே
செரித்தலில் கோளாறும் செலவாய் மருந்துகளும்
விலங்குகளை உண்ணாமல்
விலங்குகள் போலே
பசித்தால் மட்டும் புசிப்பாய் – அதனால்
துலங்கும் அறிவும் ஆரோக்கியமும்.

எண்ணெயும் காரமும்
உன்னையே அழிக்கும்
உப்பும் சர்க்கரையும்
உடலுக்கு எமனாகும்.

கடையினில் வாங்கிக்
கண்டதை உண்ணாதே
எடையைக் குறைக்க
நடையைப் பயில்வாய்.

அருந்தும் நீரும் வெந்நீராகட்டும்
விருந்துக்கே சென்றாலும்
மருந்துபோல் உண்பாய்.


இருள்




வெளிச்சத்துக்கு தான் பலவகை
இருட்டில் ஒருவகையே
இருட்டு எப்போதும் இயற்கையானது
வெளிச்சத்திற்குத்தான் செயற்கையும் உண்டு.

இருட்டு நிறம் மாறாதது
வெளிச்சமோ நிறம் மாறுவது
இருட்டு என்பது நிரந்தரமானது
வெளிச்சம் வந்து போவது.

இருட்டு இருப்பதால் தான்
வெளிச்சத்துக்கும் மதிப்பு
இருட்டே இல்லை எனில்
வெளிச்சத்துக்கு விளக்கு ஏது?

மனிதர் தோன்றும் கருவறை இருட்டு
மனிதர் மறையும் கல்லறை இருட்டு
எனினும் இருட்டை மனிதர்கள் வெறுக்கிறார்கள்.
ஏனனில் திருட்டு துன்பத்தின் அடையாளம்.

புற இருளை விட
அக இருள் கொடுமையானது
புற இருளில் முகம் தெரியாது
அக இருளால் முகமே சிதைந்து போகும்.

புற இருளில் மனிதன் தெரிவதில்லை
அக இருளால் மனிதன் திருந்துவதில்லை.
இருள் குளுமையானது
வெளிச்சம் வெப்பமும் தருகிறது.

வெளிச்சம் ஓரிடத்திலிருந்து புறப்படுகிறது
இருள் இருந்த இடத்திலேயே இருக்கிறது
சிலர் கண்ணிருந்தும் இருட்டில் வாழக்
குருடரோ இருட்டுக்கே வாழ்க்கைப்படுகிறார்.

இருட்டில் கிடைத்ததாம்
இந்திய சுதந்திரம்
அதனால் தான் இன்னும்
திருட்டுக்கும் லஞ்சத்திற்கும்
தீர்வு காணப்படவில்லையோ?


தமிழுக்கு



செந்தமிழ்ப் பாட்டில் சிந்தும் தேனே
சிந்தையில் உன்னை வைத்துக் களித்தேனே!

காவியங்கள் பலதந்த கரும்பே!
கருத்துக் குவியல்களின் அரும்பே!
உனையன்றி வேறொன்றை விரும்பேன்!

கட்டுக் கதைகளாம் புராணங்களோடு
எட்டுத் தொகையையும் எமக்குத் தந்தாய்

முத்து முத்தாய் வார்த்தைகள் கோர்த்து
பத்துப்பாட்டைப் படைத்துத் தந்தாய்

எங்கள் தலைகள் என்றும் நிமிர
சங்க இலக்கியங்கள் பற்பல கொடுத்தாய்

உள்ளுவதையெல்லாம் உயர்வாய்க் கொள்ள
வள்ளுவர் தந்த வான்மறை உதவுமே
வித்தகர் திருமூலர் செய்த தந்திரம்
தத்துவங்கள் பற்பல சொல் திருமந்திரம்.

மாணிக்கவாசகர் எனும் அருளாளர்
மாணிக்கத் தமிழால் பதித்த வாசகம்
மண்ணில் தெய்வமாய்த் தந்த வாசகம்
தெய்வத்தின் குரலாய் ஒலிக்கும் வாசகம்
தேனெனெ இனிக்கும் தெள்ளிய வாசகம்
திரும்பப் பலமுறை படிக்கச் செய்து
இரும்பு மனதையும் இளகச் செய்யும்.

வள்ளலார் வடித்த வண்டமிழ்ப் பாக்கள்
கள்ளாய்ப் போதையை ஊட்டும் பாக்கள்
வில்லின் கணையாய் விடுக்கும் சொற்கள்
வீழ்த்தி எவரையும் அடிமை கொள்ளுமே
சொற்களால் வித்தைக் காட்டியப் பாக்கள்
சொக்கவைத்து அன்பை ஊட்டியப் பாக்கள்.

இத்தனை இலக்கியம் கொண்ட மொழியே உன்மீது
பித்தனாய் என்னையும் ஆக்கிய விழியே!

தனித்தியங்கும் ஆற்றல் உனக்குண்டு உன் மீது
கனிச்சாற்றில் ஊறிய நற்கற்கண்டு!

செவ்வியல் மொழியில் சேர்ந்த நிலவே – உன்
சிறப்புகளை அடுக்கினால் அவை பற்பலவே!

ஆணிப்பொன்னே அணிதிகழ் விளக்கே
ஊனில் ஊறிய உயிரே மூச்சே!

மாணிக்கமே! மரகதமே! எந்தன்
ஏணிப்படியே இதயத்துடிப்பே – வாழ்கவே!


அன்பு



அனைவரையும் ஒன்றிணைக்க அன்பே தேவை
அதன் வழியில் நாட்டிற்கு அளிப்போம் சேவை
மனையினிலே அன்பிருந்தால் மகிழ்ச்சி துள்ளும்
மற்றவரை நம்மோடு மனத்தால் சேர்க்கும்.
நனையட்டும் நாடெல்லாம் உயர்ந்த தொண்டால்
நல்லவராய் ஆட்சியாளர் நாட்டைக் காக்க
அணையட்டும் வன்முறைத்தீ அகிலம் எங்கும்!
அழியட்டும் இனவெறிகள் அடிவே ரோடு!


மகிழ்ச்சி வேண்டும்



எண்ணத்தில் என்றென்றும் ஏற்றம் வேண்டும்
எளியவனாய் இருப்பதிலே இன்பம் வேண்டும்.
கண்ணான கல்வியினை கற்று நாளும்
கண்ணியமாய் வாழ்ந்திருந்து காட்ட வேண்டும்.
விண்ணைப்போல் நமதறிவு விரிய வேண்டும்
வீண்சண்டை சச்சரவு விலக வேண்டும்
மண்ணாசை விலகியோடி மனிதர் எல்லாம்
மகத்தான வாழ்வினிலே மகிழ வேண்டும்.


இப்படி இரு



எண்ணத்தில் தூய்மையுடன் எந்த நாளும்
இருந்திட்டால் என்றென்றும் இன்பம் உண்டே
திண்ணிய நம் செயல்களிலே தீமை இன்றித்
தித்திக்கும் மொழிபேசித் திகழ்வோம் வாரீர்
விண்வெளியில் எல்லையைப்போல் உலகம் எங்கும்
விரியட்டும் மனிதநேயப் பண்பு வாழ்வில்
உண்பதற்கும் பிறவுயிரைக் கொல்லா தென்றும்
உயிர்க்குலத்தை காத்திட்டே இருத்தல் நன்றாம்!


தமிழுணர்வு தழைக்கட்டும்



தமிழிங்கே செம்மொழி ஆகும் வேளை
தமிழனுக்கு வெற்றியென்று முரசம் கொட்டு
அமிழ்தான தமிழுக்கு அழிவே இல்லை
அரிமாப்போல் சிலிர்த்தெழுந்து முரசம் கொட்டு
உமிழ்தீப்போல் மொழியுணர்வு உதிக்க வேண்டும்
உமியைப்போல் இருப்பவனா தமிழன் சொல்லு?
இமிழ்கடல்போல் இனமானம் தமிழர் வாழ்வில்
இமைப்போதும் வற்றாது எழும்ப வேண்டும்.


தோல்வியைக் கண்டு துவளாதே




வாழ்வென்றால் உயர்வுண்டு தாழ்வும் உண்டு
வருவதை நீ எதிர்கொண்டால் வானம் கையில்!
வீழ்வதிலே என்றைக்கும் வெட்கம் வேண்டாம்
வீழ்ந்த பின்பு எழாதவனே கோழை ஆவான்
சூழ்கின்ற பகைமுடிக்கச் சுடராய் நின்றால்
சுக்குநூறாய் ஆகிவிடும் சூழ்ச்சி உண்மை!
காழ்ப்புணர்வைக் கனவினிலும் தள்ளி வைத்தால்
காலமென்னும் ஏட்டினிலே கல்வெட்டாவாய்…


பெண்ணினமே பொங்கி எழு



கங்கையைப் பெண் என்பார்
காவிரியைத் தாய் என்பார்
பூமியையும் தேவி என்பார் – எனினும்
சமுதாயத்தில் பெண் எனிலோ
சராசரிக்கும் கீழ் மதிப்பார்
சக்தி கொண்டு பெண்ணினமே
சடங்குகளை தூக்கி எறி.

பெண்ணே உன் கையில்
வளையல்கள் அணிந்திடு
எனினும் யாருக்கும்
வளையாது நிமிர்ந்திடு.

அச்சமும் நாணமும் உனக்குத் தேவை எனினும்
எச்சில் மனிதரின் பாலியல் கொடுமைகளைத்
துச்சமென மதித்திடு துணிவோடு மிதித்திடு
மென்மையை இதயத்தில் வைத்திடு
வன்முறை உனக்கு நேர்ந்தால்
மன்பதையில் எரிமலைப்போல வெடித்திடு

அழகில் சந்திரன் என்றால்
அவதூறு என்றாலோ
சூரியனாய் சுட்டெரி.

தென்றலாய் நீயிருந்தாலும்
பெண்மைக்குச் சோதனை என்றால்
புயலாக நீ மாறு.

கருவளர உன்
கருப்பையில் இடம்கொடு
அதோடு
முன்னேற்றக் கருத்துகளுக்கு உன்
மூலையில் இடம்கொடு.

அடங்கிவாழ்
அடக்குமுறை என்றாலோ
அடக்கிவிட முற்படு.

கணினித் துறையிலும்
கப்பல் கட்டும் துறையிலும்
காலைப் பதித்து விடு.

கல்பனா சாவ்லாக்களாக நீ மாறு
கடல்நீர் முழுவதையும் உன்
கடைவாய்க்குள் அடைத்து விடு.

பெண்ணினமே முன்னேறு
உன் வெற்றிக்கு
விண்மீனைக் கொண்டுவந்து உன்
வீட்டு வாயிற்படியில்
தோரணமாய் கட்டிவை.

உன் விரலசைவில்
விடியலைக் கொண்டு வா.



அதிகம்




இந்த நாட்டில் தானம் தரும்
இரத்தத்தை விட
தலை துண்டிப்பால் வரும்
இரத்தம் அதிகம்.

இந்த நாட்டில் குப்பைத் தொட்டியில்
குப்பைகளை விட
குழந்தைகளே அதிகம்.

இந்த நாட்டின் நகரத்தில்
நடைபாதையில்
நடப்பவர்களை விட
நாளும் வாழுகின்றோர் அதிகம்.

இந்த நாட்டுக் கட்சி சிலவற்றில்
தொண்டர்களை விட
தலைவர்கள் அதிகம்.

நீதி மன்றத்தில்
சாட்சிகளை விட
வழக்குகள் அதிகம்.

கன்னிப்பெண்கள் திருமணத்தை விடக்
கற்பழிக்கப்படுபவர்கள் – வரதட்சணையின்றிக்
காத்திருப்போர் பட்டியலும் அதிகம்.

இங்கே பொதுநல சங்கங்களை விட
சாதிச் சங்கங்கள் ஏராளம்.

இங்கே மக்களை விட
மாக்கள் ஏராளம்.

ஏழைகள் வாழ்வில்
வாங்கிய கடனை விட
வட்டி ஏராளம்.

இங்கே அரசியல் வாதிகளில்
அநியாயவாதிகள் ஏராளம்.

ஆன்மீகவாதிகளில்
அயோக்கியர்கள் தான் ஏராளம்.

பள்ளிக்கூடங்களை விட
கோயில்கள் ஏராளம்.

பல நேரங்களில்
கிடைக்கும் தண்ணீரை விடக்
கண்ணீர் அதிகம்.
வாழ்க பாரதம்!


உண்மை வாகனம்




விஷ்ணுவுக்குக் கருடன் வாகனம்
அம்மனுக்கு சிம்மம் வாகனம்
அண்டங்காக்கை சனிக்கு வாகனம்
முந்தி வினாயகருக்கு சுண்டெலி வாகனம்
முருகனுக்கு மயில் வாகனம்
மூன்றுகண் சிவனுக்குக் காளை வாகனம்

மூச்சிறைக்க இவைகளைத்
தன்மீது தூக்கி சுமக்கும்
ஆறறிவு மனிதனே
அனைத்திற்கும் வாகனம்!


பேராசிரியர் த.அகரமுதல்வன் அவர்களுக்குப் பணி
ஓய்வு நாளில் அளித்த பாராட்டுக் கவிதை!

வெண்காட்டில் வந்துதித்த தமிழின் வேந்தே
விண்முட்டும் தமிழறிவாய் விளங்கும் சொத்தே
பண்பாட்டில் பிறர்போற்றப் பாங்காய் வாழ்ந்து
பக்திமணம் பரப்புகின்ற தமிழின் ஊற்றே
மண்காற்று உள்ளவரை மணியே உந்தன்
மட்டற்ற பெரும்புகழும் மணமாய் வீசும்
எண்ணத்தில் எம் தமிழை ஏந்தி நிற்கும்
எளியவரே இனியவரே என்றும் வாழி!

நற்றமிழில் இலக்கியங்கள் நல்லோர்ப் போற்ற
நறுந்தேனாய்க் கனிச்சாறாய் நாட்டிற்கீந்தாய்
சிற்றூரில் வாழ்ந்தாலும் சிறப்பு பெற்றாய்
சீர்மிகுந்த வெண்காடாய் செய்து விட்டாய்
கற்றோரும் மற்றோரும் போற்றும் வண்ணம்
கல்லூரிப் பணியினிலே கடமை செய்தாய்
உற்றாரும் உறவினரும் உம்மை வாழ்த்த
ஊரார்கள் வாழ்த்துகிறோம் உயர்ந்து வாழ்க!

அருள்மொழியின் அரசனாய் ஆன்றோர் மெச்ச
ஆன்மீகப் பயிர்வளர்க்கும் ஆசான் ஆனாய்
உருவாகும் மாணவர்கள் உன் தன் சொல்லால்
உயர்நோக்கம் கொண்டோராய் ஆவார் என்றும்
அருட்பாவில் வள்ளலாரின் அருளின் மாண்பை
அகிலத்தில் பரப்புகின்றாய் ஆய்வு செய்தே
கருணைத்தெய்வம் ராமலிங்கர் காட்டும் அன்பால்
கல்விமான்கள் பாராட்டக் குறளாய் வாழ்க!


இனிய பாரதத்திற்கு…..






நெஞ்சினிலே நேர்மைதனை நிலையே நாட்டி
நேசத்தால் அனைவருமே நெகிழ்ந்து வாழ்வோம்
பஞ்சங்கள் பட்டினிகள் பற்றா வண்ணம்
பாரதத்தை முன்னேற்றிப் பகைமை வெல்வோம்
துஞ்சுகின்ற மாந்தரெல்லாம் தூக்கம் நீக்கித்
தொல்லைதரும் சோம்பலையே தொலைத்தால் இன்பம்

அஞ்சுகின்ற மனப்பான்மை அறவே விட்டு
அகிலத்தில் அறவழியை அமைத்தே வாழ்வோம்.

உழைப்பதினால் உயருவதே உண்மை வெற்றி
உலகமெல்லாம் வாழட்டும் அகிம்சை பற்றிப்
பிழைப்பதற்கு குழந்தையிடம் வேலை வாங்கிப்
பிஞ்சுகளைக் கருகடிக்கும் பிழைகள் விட்டு
மழைபொழிய மரங்களையும் மண்ணில் நட்டு
மானிடர்கள் அனைவருமே மகிழ்ச்சி கொள்வோம்
தழைக்கின்ற அன்பினாலே தரணி எங்கும்
தளராது பணிசெய்தால் தவறா தென்போம்!


முத்தமிழ்ச் செம்மல் கோவையார் (பூம்புகார்த் தமிழ்ச்சங்கத் தலைவர்) நினைவு நாள் கவிதை

முத்தமிழின்  செம்மலென்றே பெயரைப் பெற்றீர்
மூச்சாக உயிர்த்தமிழை உள்ளி முத்தீர்
தித்திக்கும் தமிழ்வளர்க்க சங்கம் கண்டீர்
தீம்பாகாய்க் கவிதையினில் நூல்கள் தந்தீர்.
எத்திக்கும் தமிழ்மாண்பு எட்ட நீவிர்
எறும்பைப்போல் இறுதிவரை உழைத்தீர் அந்தோ!
வித்திருக்கும் கனியைப்போல் உந்தன் நெஞ்சில்
வீற்றிருக்கும் மொழிப்பற்று வீண்பேச் சில்லை.

பாவேந்தர் அடியொற்றிப் பாதை கண்டீர்
பைந்தமிழின் நூல்களையே சொந்தம் என்றீர்
நாவேந்தர் நீரென்றால் மிகையே இல்லை
நற்றமிழர் இலக்கணமும் நீங்கள் அன்றோ!
மூவேந்தர் தமிழ்காக்கப் பூம்புகாரில்
முனைப்புடனே சங்கத்தைத் தோற்றுவித்தீர்
பூவேந்தும் தமிழ்வரிகள் தந்ததாலே
பூமியிலே உங்களுக்குச் சாவே இல்லை.

கோவையாரே கொஞ்சுகின்ற தமிழின் ஊற்றே!
குன்றாத பகுத்தறிவுக் கொள்கைக் குன்றே!
நாவையும் உம் பேச்சையும்நம் தமிழுக் கென்றே
நாளெல்லாம் பயன்படுத்தி நடந்து சென்றீர்
தீவைத்தார் உமதுடலில் என்ற போது
தீயாக எரிந்ததுவே எந்தன் நெஞ்சே
நீவைத்த தமிழ்ச்சங்கம் நீங்கள் இன்றி
நீரின்றி வாடுகின்ற நிலமா யிற்றே!


உள்ளத்தை தூய்மையாக்கு




கள்ளத்தை காழ்ப்புணர்வை கலைந்தே நீயும்
கடவுளையும் உனக்குள்ளே கண்டு கொள்வாய்
உள்ளத்தை தூய்மையாக்கி உயர்ந்து நிற்பாய்
ஊரெல்லாம் உனதாக்கி உவகை கொள்வாய்
எள்ளிருக்கும் எண்ணெயைப் போல எங்கும்
இருப்பவனே இறைவனென்று புரிந்து வெல்வாய்
அள்ளுதற்குக் குறையாத ஆழி போலே
அன்பதனை அகத்தினிலே தேக்கி வாழ்வாய்.


இந்தியன் என்றால்….




இந்தியனாய்ப் பிறப்பதிலே என்றும் நெஞ்சில்
இறுமாந்தேப் பேரின்பம் எய்தல் வேண்டும்
எந்த நாளும் நம்முயிரும் இதயம் யாவும்
இந்த நாடே என்று சொல்லி இன்பம் காண்போம்
சொந்தங்கள் யாவருக்கும் நூறு கோடி
சுயநலத்தை விலக்கிவைத்து மகிழ்வோம் பாடி
வெந்த புண்ணில் வேல்பாய்ச்சும் வன்முறை செய்கை
வெடிகுண்டு கலாச்சாரம் ஒழித்தே வாழ்வோம்!


இது தான் அரசியல்



அரசியலில் நிலவுகின்ற  அற்பப் பேச்சும்
அநாகரீக செயல்யாவும் அகல வேண்டும்
சுரங்களிலே கறைபடியா கண்ணி யத்தார்
கடமைசெய்தெ பணியாற்றும் கட்சி வேண்டும்
உரமான நம்நெஞ்சில் ஒருமை என்னும்
உயர்வித்து வேரூன்றி வளர வேண்டும்
தரமான பொதுத்தொண்டால் நாட்டைத் தாங்கித்
தன்னலத்தை நீக்கியவன் தலைவன் ஆவான்.


இயேசுவே இதென்ன கொடுமை




பாவங்களை சுமப்பதற்காகப்
பாவிகள் சுமத்திய
பாரமான சிலுவையை
நீங்கள் சுமந்தீர்கள்
மக்களோ இன்னும்
அறியாமையை சுமந்து கொண்டு
ஆற்றில் துரும்பாய்
அலைக்கழிந்து கொண்டு இருக்கிறார்கள்.

முள் கிரீடத்தை
நீங்கள் சுமந்தீர்கள்
இங்கே பலர்
புதவிக்கிரீடம் வேண்டி
வேட்டியை அவிழ்த்து விட்டு
ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆடுகளை நீங்கள்
மேய்த்ததால் மேய்ப்பன் என்றார்கள்
அதற்காக இங்கே சிலர்
மக்களையே மேய்த்துக் கொண்டிருக்கிறார்கள்
மக்களில் சிலரோ மேய்வதிலேயே
குறியாய் இருக்கிறார்கள்.

உங்களிடம் இருந்த
பன்னிரண்டு சீடர்களில்
யூதாஸ் ஒருவனே
காட்டிக் கொடுத்தான்.

இங்கே இருக்கும்
இருவரில் ஒருவர்
அந்த வேலையை இன்னும்
செய்து கொண்டிருக்கிறார்கள்.

அற்புதச் செயலாக
5 அப்பம் 5000 பேருக்கு
பரிமாறப்பட்டது.
இங்கே
நூறுபேருக்குக் கிடைக்க
வேண்டியவைகளை
ஒருவனே எடுத்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறான்.

ஒரு கன்னத்தில் அறைந்தால்
மறு கன்னத்தைக் காட்டச் சொன்னீர்கள்
இப்போது அடிப்பவன்
இரண்டு கன்னத்திலும் சேர்த்தே அடிக்கிறான்
அல்லது அடுத்த கன்னத்தைக்
காட்டும் முன்னே அதில் அடிக்கிறான்.

இயேசுவே மீண்டும்
இங்குத் திரும்பாதீர்கள்
உங்களுக்காக இன்னுமொரு
சிலுவை தயாராகிக்கொண்டிருக்கிறது!


கொலைத் திருவிழா


அம்மனுக்கு அபிஷேகம்
அலங்காரம்
அள்ளித் தெளித்த விபூதிகளால் புறத்தே
மக்கள் வெள்ளையடிக்கப்பட்டனர்.

ஆரவாரத்திற்கு இடையே
அம்மன் கோயில் பூசாரி
கள்ளுண்டு களித்தவனாய்
ஆடிவந்தான்.

வேப்பிலை, தீச்சட்டி
விறு விறுப்புகளுக்கு இடையே
தீ தின்னப் போகிறவர்கள்
தீயைப் பக்குவமாகத் தாண்டி
நேர்த்திக் கடன் முடித்துக் கொண்டார்கள்.

அலங்கரிக்கப்பட்டு, மாலைகளோடு
அழகாய் பொட்டிட்ட
ஆடுகள் கொண்டுவரப்பட்டன.

இரண்டு கால் பிராணிகள்
நான்குகால் பிராணிகளை
வெட்டி வீழ்த்தின.

பேசா விலங்குகளைப்
பேசும் விலங்குகள் கண்கள்
கூசும் வாளால் அறுத்துத்
தங்கள் பாவங்களை
இரத்தச் சகதியில் கழுவிக் கொண்டன.

பக்த கோடிகள் பரவசமைடைந்தனர்
அம்மள் அருளால் ஆடி அரற்றினர்
ஆடுகள் அலறல் சப்தம்
அம்மனின் காதுகளுக்கு எட்டியது
பாவம் செய்யா ஜீவன்களுக்கு
ஏமாற்றமே கிட்டியது.

கோயில் களம்
கொலைக் களமானது
ஐந்தறிவை ஆறறிவு கொன்றது.
ஆறறிவில் ஓர் அறிவும்
சேர்த்துக் கொலை செய்யப்பட்டது.


பாரிசு நகரம்




பிரான்சின் தலைநகர் பாரிசு நகரம்
பெருமைப் பெற்ற பண்டைக் கலைகளைப்
பாரில் சிறந்து விளங்கும் நகரம்.

ஊரின் அழகோ உள்ளம் கவரும்
உன்னத சாலைகள் அகண்டே திகழும்.

கட்டுப் பாட்டுடன் மக்களைக் கொண்ட
கலப்படம் இல்லாத கடைகள் கண்டேன்.

மனிதர் அனைவரும் நேயம் கொண்டோர்
மண்ணின் மாண்பை மதிக்கும் மக்கள்
திண்ணிய நெஞ்சினர் தெளிந்த அறிவினர்.

ஊர்ந்து செல்லும் பேருந்து முதல்
ஊரில் எல்லாம் இயந்திர மயமே
ஒலியின்றிச் செல்லும் புகையற்ற வண்டிகள்
ஒய்யார மாய்செல் டிராம் கோச்சுகள்
எதைப்பார்த் தாலும் இயந்திர மயமே!

தானாய் திறந்து மூடும் கதவுகள்
பணத்தைப் போட்டுத் தக்க இடத்திற்குப்
பட்டனைத் தட்டினால் பயணச் சீட்டுகள்
பட்டென கையில் வந்து விழுமே!

சாலைகள் தெருக்களில் குப்பைகள் இல்லை
சாலையின் நடுவே கடைகள் இல்லை
கூச்சல் இல்லை கூட்டம் இல்லை
வெட்டிப்பேச்சு பேசுவோர் இல்லை
வீணாய்ப் பொழுதைக் கழிப்போர் இல்லை.

ஆயிரம் வாகனம் அணிவகுத்தாலும்
அடடா தெருவில் சப்தம் இல்லை
சில்லென ஓடும் சீன்நதிக் காட்சிகள்
சிந்தையிலே ஒரு சிலிர்ப்பைத் தருதே
உலக அதிசயம் ஈஃபில் கோபுரம்
உன்னத அழகில் என்னை மறந்தேன்.

விண்ணை எட்டக் கட்டப் பட்ட
வண்ணக் கோபுரம் இரும்புக் கோபுரம்
மேலே நின்று நகரைக் கண்டால்
மேனியின் உணர்வு மரத்துப் போகுதே!

பிரஞ்சுப் புரட்சியைச் சரித்திரம் மறக்கும்?
சுதந்திரம் சமத்துவம் வேண்டிய மக்கள்
ஆடம்பர ஆட்சியை அழித்து ஒழித்தனர்
மக்கள் ஆட்சியை மண்ணில் நாட்டினர்
கட்டடக் கலையில் சிற்பக் கலையில்
கண்கவர் விருந்து அளிக்கும் நகரம்.

நெப்போலியனை நினைத்துப்பார்த்தேன்
சிப்பாய் வாழ்க்கை தொடங்கிய வீரன்
எப்பாரும் போற்ற மன்னன் ஆனான்
மாவீரன் உலாவிய இந்த மண்ணை
மனதில் நினைத்தால் மகிழ்ச்சி பொங்குதே!


தென்றல்




ஆடை தீண்டி மகிழ்பவளே
ஆறு தாண்டி வருபவளெ
ஓடை தொட்டு நீ வந்தால்
உள்ளம் குளிரும் இன்பத்தில்
கோடை வெய்யில் வெப்பத்தில்
கொளுத்தும் பரிதிக் கொடுமையினில்
மேடை வீசும் பூங்காற்றாய்
மேனித் தொடுவாய் மென்பெண்ணே!

மலையைத் தழுவி வந்திடுவாய்
மகிழ்வை அள்ளித் தந்திடுவாய்
அலையை எழுப்பி கடல் மேலே
ஆடி அசைந்து வருபவளே
விலையாய் உனக்கோ எதுவுமில்லை
விண்ணில் முகிலைச் சுமப்பவளே
கலையை ரசிக்கும் கலைஞனாகக்
கரும்பே உன்னை ரசித்தேனே.

தடாகத் தின்மேல் ஆடுகின்ற
தாமரைப்பூ இதழ்தழுவி
விடாமல் அல்லிப் பூமேவி
முல்லை அரும்பு பலத்தொட்டு
அடாது நகர்ந்து சென்றே நீ
அருவி நீரில் சலசலத்துத்
தொடாது தொட்டுச் செல்லும் என்
காதல் கிளியே கட்டிக்கொள்.


தமிழ்



கண்ணே மணியே கற்கண்டே!
கவிஞர் மொழியின் உயிர்த்துளியே
கண்ணின் ஒளியே கனிப்பிழிவே
கன்னல் சாறே காய்நிலவே
பண்ணே மழையாய் தொட்டுப் பரந்தவளே
மண்ணின் மழையாய் வாழ்வளிக்கும்
மதியே எங்கள் மெய்யுணர்வே!

உயிராய் உணர்வாய் இருந்தே
உடலாய் மூச்சாய் ஆனவளே
பயிரைக் காணும் பாமரன்போல்
பறிப்பாய் மனதை உன்வசமே
மயிலை விடவும் நீ அழகு
மரணம் வரயில் நீ உறவு
பயிலப் பயில பால்சுவையாய்ப்
படிப்போர் நாவில் இனிப்பாயே.

அயர்வை நீக்கும் மருந்தானாய்
அறிவைக் கொடுக்கும் விருந்தானாய்
துயரைப் போக்கத் துணையானாய்
துணிவை ஊட்டும் தாயானாய்
வியக்க வைக்கும் இலக்கியங்கள்
விளைய வைத்த விரிபுனலே
மயக்கும் உந்தன் சொல்லழகால்
மணக்க வைத்த தமிழணங்கே!


தந்தை பெரியார்





கருப்பு சட்டை அணிந்த
கந்தகக் கனல் வீச்சு – அதிலே
வருணாசிரமம் தவிடுபொடியாச்சு.

மனுதர்ம சாஸ்திரத்தை
மணியிட வைத்த – இவரோர்
மானுட அஸ்திரம்.

வைக்கத்து வீரர் அவர்
அச்சத்தை நெஞ்சில் – சற்றும்
வைக்காத வீரர் அவர்.

வேதத்தை புராணத்தைப் பேச்சு
வெடிவைத்து தகர்த்தெரிந்த
வெண்தாடி வேந்தரவர்.

பேச்சினிலே இனமானம், என்றும்
மூச்சினிலே தன்மானம் – அறிவினிலோ
அவர் அகண்ட வானம்.

சாத்திரச் சகதிகளும்
கோத்திரக் குப்பைகளும் – ஐயாவின்
நாத்திக முழக்கத்தால் நரம்பொடிந்தன

தீண்டாமை தீப்பிணியை
ஆண்டான் அடிமைத்தனத்தை – அய்யாவே
கூண்டோடு காலி செய்தார்.

சிந்தனையில் பெரியார்
சிறந்த புகழுக்குரியார் – கொண்ட
கொள்கையில் சரியார் இவருக்கு
சரி – யார்?

உருவத்தில் குலையாத அரிமா
உணர்வில் குன்றாத எரிமலை – அதில்
உருக்குலைந்தது நரிகளின் ஊளை

தொண்ணூற்றேழு வயதிலும்
தொண்டில் இல்லை சலிப்பு – வாழ்க்கையே
துவளாத பேருழைப்பு.

எழுத்தில் சீர்திருத்தம் மொழிந்தார்
எண்ணத்தில் சீர்திருத்தம் தந்தார்
எளிமையின் சின்னமாய் வாழ்ந்தார்.

இங்கர்சாலாய் சாக்ரடீஸாய்
இங்குதித்த எங்கள் பெரியார்
என்றென்றும் வணக்கத்திற்குரியார்.


வள்ளலார் வழி நடப்போம்




மன்னுயிர்கள் பேணிநின்ற மாண்பின் ஊற்றாய்
மதங்களோடு சமயத்தை வதைத்த வள்ளல்
அன்பினாலே அருளினாலே அகிலம் காத்து
ஆன்மநேயம் தழைத்திடவெ அருட்பா ஈந்தார்
துன்பங்கொள் உயிர்களுக்குத் துயரைப் போக்கித்
துணைநின்று காத்திட்ட தூய சித்தர்
வன்கொலையும் வாழ்ந்திடவே வழியைச் சொன்னார்.

வழங்குவதில் இவரன்றோ உயர்ந்து நின்றார்
வாட்டுகின்ற பசிப்பிணியை விரட்டி வென்றார்
அழகுதமிழ்ச் சொல்லாலெ அருட்பா செய்து
அண்டத்தில் உயிர்க்குலத்தில் கடவுள் கண்டார்!
பழுதில்லாப் பணியாலே தருமச் சால
பார்போற்ற அமைந்திட்டே பெருமை பெற்றார்
முழுவீச்சாய்ச் சமத்துவத்தை முழக்கம் செய்து
முன்னேற்றப் பாதைக்கே ஒளியைத் தந்தார்!

இரக்கம் என் உயிராகும் என்று சொன்ன
இவரைப்போல் ஞானியர்கள் உலகில் உண்டோ
சுரக்கின்ற பக்தியினால் சிவத்தைப் போற்றி
சுயநலமே இல்லாத புனிதர் ஆனார்
வரலாற்றில் என்றென்னும் வள்ளல் ஆனார்
வாடிநின்ற பயிருக்கும் வாடி நின்றார்
மரம்போல இருப்பவர்கள் மனிதர் ஆகார்
மனதினிலே ஈவிரக்கம் கொண்டு வாழ்வோம்!

சாதிமதம் தவிர்த்தாலே தரணி தன்னில்
சமாதானப் புறாக்கள் பறக்கும் அன்றோ!
நீதியுடன் நேர்மைதனை நெஞ்சில் கொண்டால்
நித்தமிங்கே நிம்மதிதான் நினைவில் கொள்வீர்
மேதினில் யாவருமே சமமே என்று
மேன் மேலும் அன்புகாட்டி வாழ்தல் நன்று
சோதிதெய்வம் ராமலிங்கர் சொன்ன பாதை
சுகத்திற்கே வழிவகுக்கும் உண்மை காண்பீர்!


அக்டோபர் – 8




எனக்குப் பிறந்த நாள்
இருவர் இணைந்ததால் நான் ஒருவன்
செய்யப்பட்டேன்.
இருவர் இன்பத்தில் உண்டான துன்பம்
இரண்டிலிருந்து ஒன்றானேன்.
இறுதியில் ஒன்றுமில்லாது ஆவேன்.
பூஜ்ஜியத்தில் புறப்பட்ட நான் பூஜ்ஜியமாவேன்.
எலும்புத்துண்டுகள் கூட எத்தனைநாள் கிடக்கும்
சுடுகாட்டில் அது மக்கும் வரை மண்ணோடு மண்ணாக
பிறப்பு ஒரு எதார்த்த சம்பவம்
இறப்போ ஒரு நிச்சய சம்பவம்
வாழ்வோ கணநேர அனுபவம்
இன்று என்னையும் தாங்கி இந்த பூமி சுழல்கிறது.
என்றாவது ஒரு நாள் நானும் பூமியாவேன்
வானமாவேன்! காற்றாவேன்! தீ என்னைத் தின்றபிறகு
மனிதன் – ஒரு கனவுத் தொழிற்சாலை
ஆசைகளை ஏற்றி ஏற்றித் தாங்காது
விழுந்து நொறுங்கும் சதை மரம்.
பட்டுப் போணால் மரம் கூட பணமாமும்
கெட்டுப் போனால் இவ்வுடம்பு பிணமாகும்
இருக்கும் வரை கனவுகளோடு உறக்கம்
இறந்த பின்பு நிரந்தர உறக்கம்
நிம்மதி தரும் நித்திரை மரணம் ஒன்றே.
நம்மை அறியாதே நாம் மரணத்தை காதலிக்கின்றோம்
அதனால் தான்
நமக்கும் அதற்கும் நாளுக்கு நாள் இடைவெளி
குறைந்து வருகிறது.
மனிதன் எதிர்பார்க்காதது அது! ஆனாலும்
அது அவனை எதிர்பார்த்துக் கொண்டேயுள்ளது
நாற்பது வயது நேற்றுடன்.
நடப்பட்ட நாற்றும் நாற்பது நாளில் பயிராகும்
நாற்பது ஆண்டுகளில் நான் எதுவானேன்?
என்னை நானே ஏமாற்றிக் கொண்டதை தவிர!
கருப்பை என்னைக் கட்டாயப்படுத்தி
வெளியே தள்ளிய நாள் பிறந்த நாளாம்.
வெளியில் தள்ளப்பட்டாலும் உற்சாகக்
கொண்டாட்டம்
புத்தாடை! குதூகலம்!
பிறந்தவுடன் என் அழுகை கேட்டே
தாய் சிரித்தாள்! தந்தை சிரித்தார்.
இன்றைக்கும் அழுது கொண்டே இருக்கின்றேன்.

இருந்து பார்க்க தாயும் இல்லை
இன்றோ தந்தையும் சிரிக்கவில்லை
என்னைச் சுற்றிலும் ஏசு, வள்ளலார், வள்ளுவர்
படங்கள்!
நானும் ஒரு நாள் படமாவேன் – சில காலங்களுக்கு
மட்டும்!
என் மகன், பேரன் வீடுகளில்
அதுவரை படமாக பயணமாவேன்
இத்துடன் முடித்துக் கொள்கிறேன்
என்னைப் பார்க்க நோயாளி வந்துள்ளாராம்.


தீபாவளி




ஊரெல்லாம் தீப ஒளி.
உற்சாகமாகக் கொண்டாடினர்.

வாண வேடிக்கை, பட்டாசு, மத்தாப்பு சிதறல்கள்
இரவு கூட பகலாய் ஜொலித்தது.

மனித மனங்கள் மட்டும் கும்மிருட்டாய் இருந்தது.
இளமையில் இனித்த தீபாவளி
நடுத்தர வயதில் பாரமானது.
முதுமையில் எரிச்சலை உண்டு பண்ணுமோ?

நரகாசுரன் செத்த நாளாம்.
நரகாசுரர்களே கொண்டாடி மகிழ்கின்றனர்.

எண்ணெய்க் குளியலில் பாவங்களைக்
கழுவிக் கொண்டார்கள்.
அடுத்த தீபாவளியும் வரும் என்ற நம்பிக்கையில்.

புராணத்தின் புளுகுக்காகச் சிலரின்
பிராணன் வேகிறது.

விலைவாசி போல் ராக்கெட் சர்… சர்… என்று
மேலே ஏறியது.

ஆடி அடங்கும் வாழ்க்கையைப் போல
சங்கு சக்கரம் சுற்றி நின்றது.

எட்டும் வரை எட்டிப்பார்த்து விட்டுத்
தரையில் சிதறி விழுந்த புஸ்வானம்
அரசியல்வாதியின் வாக்குறுதியை
ஞாபகப்படுத்தியது.

கஷ்டப்பட்டு வாங்கிய லட்சுமி வெடி
எவ்வளவோ முயற்சித்தும் வெடிக்காது போனதால்
ஏழைச் சிறுவனை அந்த தீபாவளி பாதித்து விட்டது.

சுற்றங்களோடு கொண்டாடப்பட வேண்டிய தீபாவளி
சுவருக்குள் முடிந்தது டி.வி பெட்டி தந்த சிறப்பு
நிகழ்ச்சிகளால்.

இந்தியத் தொலைக்காட்சிகளில் முதன் முறையாக
என்ற வார்த்தைகளைக் கேட்டு கேட்டுப்
பல முறையாக இவர்கள் தீபாவளியையும்
பொங்கலையும் சரியாக கொண்டாடவில்லை.

கஷ்டப்பட்டு தமிழை உச்சரித்த
வடநாட்டு நடிகைகளின் பேட்டிகளோடு
தமிழன் தன் தீபாவளியை முடித்துக் கொண்டான்.
என்னை நானே கேட்கிறேன்
உண்மையாகவே தீபாவளி எப்போது வரும்?
ஏழைகள் எல்லாம் சிரிக்கும் நாளில்.


வெற்றிக்கொடி நாட்டு





மனிதா…
கடற்கரையில் கிடக்கின்ற
மணல்துகளாய் எவ்வளவு நாள் இருப்பாய்
கலங்கரை விளக்கமாக எப்போது
மாறப்போகிறாய்…

புல்வெளியில் சிறு
புற்களாகவே இருந்து விட்டால் போதுமா
அங்கே உயந்து நிற்கும்
விளக்கு கம்பமாக வேண்டாமா…

சில்லரைக் காசாக நீயிருந்தால்
அடிக்கடி கைமாறி
அல்லாடிக் கொண்டேயிருப்பாய்
எளிதில் மாற்றமுடியாத
ரூபாய் நோட்டுகளாகு.

தெருவோரத்து மதகுச்சுவராகவே
காலம் கழிந்தால்
உன் மீது ஏறி அமர்வார்கள்
காண்போர் கைதொழும்
கோபுரமாக நீ மாறு…

குட்டையாகவே இருந்துவிட்டால்
இறைத்துத் தீர்த்துவிடுவார்கள்
அளக்கமுடியாத கடலாக ஆர்ப்பரி

குவளை நீராக நீயிருந்தால்
கொப்பளித்துத் தீர்த்துவிடுவார்கள்
குதித்தோடும் கங்கையாகு

சாலையோரத்தில் கேட்பாரற்றுக்
கிடக்கும் கூழாங்கல்லா நீ?
மைல்கல் ஆக மாற வேண்டாமா?

சிலேட்டுக் குச்சிகளே!
தூரிகைகளாக நீங்கள் மாறுங்கள்!

வந்து போகும்
வரிவிளம்பரங்கள் அல்ல நீங்கள்
வரலாறு படைக்கும் இதிகாசமாகுங்கள்.

வைக்கோல் போர்களே!
எளிதில் ஏறமுடியாத
இமயமாகுங்கள்

இறந்து பிணமாகப்
பிறந்த சராசரி மனிதன் அல்ல நாம்
சரித்திரம் படைக்கப் பிறந்தவர்கள்.


கடவுள்

உண்மையை சொல்வாய் உன் பேரென்ன?
உண்மையே நீ என்றார் உத்தமர் காந்தி
உண்மை தான் நீ எனில் உருவங்கள் எதற்காக!

துருவங்கள் கடந்தவன் கடவுள் என்றால்
உருவில் உன்னைக் காண்பது கீழ்ப்படி
அருவாய் உன்னை நினைப்பது மேல்படி
தெருவில் உன்னைக் காண்பது கீழ்ப்படி
கருவிலும் உன்னை நினைப்பது மேல்படி

மலையில் உன்னை மகிழ்ந்து கண்டார்
சிலையில் உன்னை சிறப்பாய்க் கண்டார்
மலையில் பார்த்ததும் சிலையில் பார்த்ததும்
மதியில் மனிதர் பார்த்திட மறந்தார்
கல்லில் கண்டார் கனலில் கண்டார்
சொல்லில் பொருளில் கண்டிட மறந்தார்

வாகனம் கண்டார் வடமும் பிடித்தார்
வாய்மையில் உன்னை வைக்க மறந்தார்
தெருக்கள் தோறும் உனைக்குடி வைத்தார்
ஊர்கள் தோறும் கோயில்கள் கண்டார்
கோயில்கள் எழுப்பிடக் கோடிகள் ஆனது
கோடிகள் செலவழித்துக் கோடிதெய்வம் கண்டும்
கோடியில் நிற்கிறார் அன்பிலும் அறிவிலும்

உருவில் உன்னை வானம் என்பேன்
உணர்வும் தெளிவும் நீயே என்பேன்
காற்றின் இருப்பிடம் உன்னிடமாகும்
கடலில் விரிவெ உன் கருணையாகும்
நீராய் உலகைக் காப்பதும் நீயே
நெருப்பாய் மாறி அழிப்பதும் நீயே
உலகம் உனது ஆடல் அரங்கம்
நானும் உனது உடலில் அங்கம்

உயிராய் இருந்து அருவாய் ஆனாய்
உடலாய் மாறி உருவாய் ஆனாய்
சுடராய் எரிந்தால் உருவம் ஆவாய்
ஒளியாய் சென்றால் அருவாய் ஆவாய்

காண்பவை எல்லாம் கடவுள் என்றால்
காண்பவன் யாரோ? கண்ணொளி யாது?
காட்சியும் நீயே! காண்பவன் நீயே!
கண்ணும் நீயே! ஒளியும் நீயே!
என்னுடையதெல்லாம் உன்னுடையது எனில்
உன்னுடையதெல்லாம் என்னுடையதன்றோ!

என் உயிர் உன் உயிர் எனில்
பிற உயிர் எவ்வுயிராம்!
பிற உயிர் உன்னுயிரெனில்
எவ்வுயிரும் என்னுயிராகும்
எவ்வுயிரும் உன்னுயிராகும்
வள்ளலார் தந்த வழிமுறை இதுவே!


கவித்தென்றல் வெங்கடேசபாரதி


ஆழிநீரோ  அல்லதிது அருவி நீரோ
அணைநீரோ ஆர்ப்பரிக்கும் கங்கை ஆறோ
காழிவாழும் கவித்தென்றல் வெங்க டேசர்
கவிதையெல்லாம் கற்கண்டோ கரும்புச் சாறோ
ஏழிசையில் இவருக்குண் டினிய மோகம்
எந்நாளும் தமிழிலுண்டு தணியாத் தாகம்
வாழிநீவிர் பல்லாண்டு வாழ்த்துகின்றேன்
வளர் தமிழாய் வான் நிலவாய் வாழ்கவென்றே!

சங்ககாலப் புலவர்கள் வழிவந் தாரோ
சந்தத்தில் கவித்தேரின் மன்னர் தானோ
பொங்கிவரும் கவிவெள்ளம் புவியை வெல்லும்
பூந்தமிழின் படைப்புகளோ புகழைச் சொல்லும்
செங்கதிரோன் செகத்தினிலே சிறக்கும் வண்ணம்
செந்தமிழில் இவர்கவிதை இருக்கும் திண்ணம்
வெங்கடேச பாரதியின் கவிதை என்றால்
வெல்லமென இனித்திடுமே விரித்துப் பார்த்தால்

கருத்திருக்கும் கவிதையிலே கனிவிருக்கும்
கம்பன்போல் கற்பனையில் வளமிருக்கும்
பருவத்தில் பழுத்திருக்கும் பலாவைப் போலப்
பாட்டினிலே சுவையோட பண்பிருக்கும்
உருவத்தில் சிறந்திருக்கும் உலாவும் மானாய்
உருவாக்கும் நடையினிலே அழகிருக்கும்
விருத்தப்பா வஞ்சிப்பா கலிப்பா வெண்பா
வெங்கடேச பாரதிக்குச் சொந்த மப்பா

பூந்தென்றல் புறப்பட்டுப் போதல் போலே
பொங்கிவரும் காவிரியின் புனலைப் போலே
ஏந்திவரும் இவர்சொல்லை எண்ணிப் பார்த்தால்
இனித்திடுமே எவருக்கும் இதயம் எங்கும்!
காந்தக்கல் இரும்புத்தூள் கவர்தல் போலே
கவிஞரிவர்  கனித்தமிழோ நம்மை ஈர்க்கும்
மாந்தோப்பில் மண்டுகின்ற கிளிகள் போல
மாக்கவிஞர் மனதிலென்னும் தமிழிருக்கும்.

பூமணக்கும் சோலையிலே புகுந்து வந்து
புத்துணர்வை அளிக்கின்ற புரவி போல
பாமணக்கும் கவிதையிலே இன்பம் தந்து
பார்போற்ற விளங்கு புது பாரதி வாழ்க
நாமணக்கும் நல்ல நல்ல நறுந்தேன் பாட்டை
நயம் மிக்க மொழிநடையில் நமக்கு ஊட்டிக்
கோமகனாய் சிறக்கின்ற குணத்தின் குன்று
காழியிலே புகழ்சேர்க்கும் கவிஞர் வாழ்க!


கலியுகம்



மாடிவீட்டுத்
தொட்டித் தாவரம்
புஷ்டியாய் சிரிக்கிறது
ஏழை வீட்டுத்
தொட்டில் குழந்தை
பட்டினியில் அழுகிறது.

ஐந்து நட்சத்திர ஓட்டலில்
மதுக்கிண்ணங்களோடு
தலைவர்கள் லூட்டி
தெருவோரச் சுவரில்
தேர்தல் சின்னம் வரைவதில்
தொண்டர்களிடையே போட்டி

கற்பூரம் கொளுத்தி
கன்னத்தில் கைப்போட்டுக்கொண்டான்
பக்தன்
திருக்கோயில் உண்டியலை உடைத்து
வாயில் போட்டுக் கொண்டார்கள்
தர்மகர்த்தாக்கள்.

மடாதிபதியின் தரிசனம் பெறப்
பக்தர்கள் இடையே போட்டி
யார் மடாதிபதி என
உள்ளே ஒரு போட்டி

குருவி போல் சிறுகச் சிறுக
பணம் சேர்த்து சீட்டுக் கம்பனியில்
போட்டு வைத்தான்.
இலவு காத்த கிளியாகப்
பணம் போட்டவன்!
சிட்டாய்ப் பறந்தன
சீட்டுக் கம்பனிகள்!

இராவண லீலா உற்சவத்தில்
கிருஷ்ணர்கள் சல்லாபம் செய்ய
கோபிகைகளைத் தேடினார்கள்!


கவலைப்படாதே சகோதரா



புழுங்கிக் கிடக்கும்
விதைகள் தானடா தம்மை
விருட்சமாகத் தயார்படுத்திக் கொள்கின்றன.

அமுக்கப்படுகின்ற போது தானே
அனல் தீயாகப் புரட்சி வெடிக்கிறது.

காற்றழுத்தத் தாழ்வு மண்டலமே
கணநேரத்தில் வீசும்
கடும்புயலாக மாறுகிறது.

நிலம் அழுந்த அழுந்தத்தானே ஓர்
நிலையில் பூகம்பம் பிறக்கிறது.

அமுக்கப்பட்ட எரிபொருள்கள் தான்
அண்டத்தில் சீறிப்பாயும்
ராக்கெட்டுகளை மேலெழுப்புகிறது.

தேங்கியுள்ள நீர்
ஆவேசத்துடன் வெளிவரும் போது தான்
மின்சாரம் பிறக்கிறது.

அமுக்கப்பட்டதற்காக
நசுக்கப்பட்டதற்காக
வருந்தாதே

அது உன்னைப்
புதிய மனிதனாகப்
புடம் போட்டுக் கொண்டிருக்கிறது.

மரணமும், நோயும் பசிப்பிணியும்
இல்லை என்றால்
இங்கொருபுத்தன் தோன்றியிருப்பானா?

உனக்குக் குழிபறித்தார்கள்
என்பதற்காக வருந்தாதே
அதிலேயே உன்
அஸ்திவாரத்தைப் பலமாக்கக்
கற்றுக்கொள்.

உன்னை முதுகில் குத்தியவர்களுக்காக
வருந்தாதே-
உன் நேரில்வரப் பயந்தார்களே என
சந்தோஷப்பட்டுக்கொள்.

மனிதா…
உன் வியர்வையை நம்பு
விதியையும் உன் வசமாக்கலாம்.


அறிவிருக்கும் இடத்தில் அனைத்துமிருக்கும்



மலரிருக்கும் இடத்தினிலே மணமிருக்கும் – நல்ல
மனமிருக்கும் மனிதனிடம் மகிழ்விருக்கும்.

தமிழிருக்கும் இடத்தினிலே தகைமையிருக்கும் – சிரிப்புக்
குமிழிருக்கும் முகத்தினிலே குதூகலமிருக்கும்

நீரிருக்கும் நிலத்தினிலே விளைவிருக்கும் – அன்பு
வேர்விட்ட நெஞ்சமதில் அருளிருக்கும்

கானிருக்கும் பூமியிலே காரிருக்கும் – நெஞ்சம்
கனிந்திருக்கும் புனிதரிடம் கடவுளிருப்பார்

தழைத்திருக்கும் மரத்தடியில் நிழலிருக்கும் – ஓயா
உழைப்பிருக்கும் எவரிடமும் உயர்விருக்கும்

வண்டிருக்கும் மலர்களிலே தேனிருக்கும் –இரக்கம்
கொண்டிருக்கும் இதயங்களில் ஈரமிருக்கும்

மையிருக்கும் கண்களிலே அழகிருக்கும் – இனி
மையிருக்கும் சொல்லினிலே இதமிருக்கும்

ஆறிருக்கும் இடத்தினிலே சோறிருக்கும் – உயர்
அறிவிருக்கும் இடத்திலோ அனைத்துமிருக்கும்


கதவுகள்




சன்னல் கதவுகள் அரை மனிதர்கள்
வாசல் கதவுகள் முழு மனிதர்கள்

ஒற்றைக் கதவு காலமெல்லாம்
தனித்து இயங்கும் பிரம்மச்சாரி

இரட்டைக்கதவுகள் – அவ்வப்போது
கூடி மகிழும் தம்பதிகள்

கதவுகள்..
கால் இல்லாமலே
கால் வட்டம் சுழல்பவர்கள்

மனிதனைப் போலவே
மறுபக்கம் உள்ளவர்கள்
தாழ்ப்பாள் அணிகலன்களை
அணிந்து நிற்பவர்கள்

எத்தனை முறை
எத்தனைப் பேர்
இழுத்தாலும் தள்ளினாலும்
எதிர்ப்பைக் காட்டாத நீங்கள்
மிக்க பொறுமைசாலிகள்.
உண்மைகள் பல உங்களுக்குத்
தெரிந்திருந்தும் நீங்களோ
வெளியில் சொல்ல முடியாத
சாட்சிகள்.

அரசு அலுவலகங்களில்
நீங்கள் திறக்கப்படும் வேகத்தைவைத்தே
உள்ளே செல்லும் மனிதர்களின்
அரசியல் அந்தஸ்தை எடைபோட முடிவதால்
நீங்களும் குறி சொல்பவர்களே.

ஏழைகள் நாய் நரிகள் உள்ளே
நுழையாதிருக்க உங்களை
நிறுவுகிறார்கள்.

பணக்காரர்களோ…
மனிதர்களே உள்ளே
நுழையாதிருக்க உங்களை
நிறுத்துகிறார்கள்.

தட்டுங்கள் திறக்கப்படும்
என்றார் ஏசுநாதர்
எதைத்தட்டுவது என்று தெரியாமல்
பல பேர்
சோற்றுக்குக் கதவைத் தட்டுகிறார்கள்
சோற்றுத் தட்டுகளைத் தட்டுகிறார்கள்
வயிறுகளைத் தட்டுகிறார்கள்

பலபேரின் இதயக்கதவுகள் திறக்கப்படுவதேயில்லை
அறிவுக்கதவுகள் மூடப்பட்டே கிடக்கின்றன

பலபேர்
மனக் கதவுகளுக்குத் தாழ்ப்பாள்
போடுவது பற்றிச் சிந்திப்பதில்லை

இந்திய தேசத்தில்
சிறைக்கதவுகள் அடிக்கடி திறந்து
மூடப்படுகின்றன.

பள்ளிக்கூடக் கதவுகளும்
கல்லூரிக் கதவுகளும்
பணத்திற்கு வழிவிடுகின்றன.

தேர்தலுக்கு முன்பு
அரசியல்வாதிகள் வாக்காளர்
வீட்டுக்கதவுகளைத் தட்டித் தட்டிக்
கும்பிடுகின்றனர்

தேர்தலுக்குப் பின்னர்
வாக்காளர் அவர்கள்
வீட்டு வெளிக்கேட்டைத்
தட்டித் தட்டிப்பார்த்து
ஏமாந்து போகிறார்கள்.


இதுதாண்டா வாழ்வு


பிறந்து இறப்பதடா வாழ்க்கை
இறந்த பின்பும் வாழுவதே வாழ்க்கையடா

சாவதற்குப் பிறந்தவனா மனிதன்? – இல்லை
சாதிக்கப் பிறந்தவன் அன்றோ மனிதன்!

உண்பதும் உடுப்பதும் மட்டும் வாழ்க்கையில்லை
கொண்ட கொள்கையில் நிற்பதே வாழ்க்கையடா

உறங்கிக் கதைபேசிக் காசுபணத்திற்கு
இரங்கி அலைவது மட்டும் வாழ்க்கையில்லை.

உறவுகள் விரிவுபடுத்தடா மனிதா
இனப்பெருக்கம் செய்வதற்கு மட்டும்
இம்மண்ணில் தோன்றியவனா நீ?
எதிர்நீச்சல் போடப்பிறந்தவன் மறந்து விடாதே

நீராடிப் பட்டையிட்டால் மட்டும்
நிம்மதி வந்துடுமோ – மனிதா

போராடி வெற்றி கொள்ள வேண்டாமா
கோயில் நிதம் சுற்றி வந்து கும்பிட்டுக்
கோபுர தரிசனம் நாளும்
செய்து வாழ்வது மட்டும் அழகல்லடா
கொடுஞ்செயல் தவிர்த்து வாழடா
கூடி வாழக் கற்றுக்கொள்ளடா.


எனது ஆன்மீக வழிகாட்டி
{செம்பனார்கோவில் அருட்பா முரசு, அருளியல் செம்மல் திரு.எஸ்.எம்.பக்கிரிசாமி அவர்கள் படத்திறப்பு விழாவில் எனது இரங்கல் கவிதை}

செம்பொன்னார் கோயில்
சன்மார்க்கம் தழைத்தோங்க
வழிவிட்ட வாயில்
செம்பை சன்மார்க்கம் வேர்விட்ட புண்ணிய பூமி
செய்தவத்தால் இங்குப் பிறந்தார் எஸ்.எம்.பி.சாமி
செம்பைச் சன்மார்க்கச் சங்கத்தின் ஆணிவேரான
எஸ்.எம்.பி.சாமி ஆன்மா அடங்கியுள்ளது.

விழுதுகளை வேர்விட வைத்துவிட்டு
ஆணிவேர் அடங்கியுள்ளது.

ஆயுளின் பெரும்பகுதியை
அருட்பாவுக்கென்றே ஆட விட்டவர்.
ஆறாயிரம் அருட்பாக்களையும் ஓயாது
சிந்தையிலெ ஓட விட்டவர்
என்னைப்போல் பலபேரை
ஞானமார்க்கத்தை நாடவிட்டவர்

சன்மார்க்க உலகில் எல்லோருக்கும் இவர் அத்துப்படி
சாமி நடந்து வந்த பாதையோ வள்ளலாரின் பத்துப்படி.
இவர் பேச்சிலே சாதி மத சமயங்கள் ஓடுமடி
என்பும் தோலுமே உடலில் இருக்கும் என்றாலும்
அன்பும் அறிவுமெ அதனுள் இருக்கும்.

சமரசம் போற்றியே சமத்துவ ஞானி
சன்மார்க்கி பலருக்கு இவரே ஏணி
கல்லையும் கனியாக்கும்
சொல்லாற்றல் கொண்டவர்
அல்லும் பகலும்
ஆறாம் திருமுறையைக் கண்டவர்
சொல்லாலும் செயலாலும்
சிறுநெறியை வென்றவர்.

மூச்சுக்கு மூச்சு உயிர் இரக்கம்
முழு மூச்சாய் மூட நம்பிக்கை எதிர்ப்பு
பேச்சுக்கு பேச்சுப் புலால் மறுப்பு.

சிந்தனையில் எப்போதும் திருஅருட்பா
சிந்துகின்ற மொழியெல்லாம் தித்திக்குமப்பா.
செம்பனார்கோயில் எஸ்.எம்.பி.சாமி
அன்பையும் அறிவையும் பொழிந்த சாமி
அனைவர் கருத்துக்கும் ஆமாம் போடாத சாமி.

இவர் இருக்கும் இடத்தில் அருள் இருக்கும்
எவருக்கும் இவர் உரையில் தெருள் பிறக்கும்

அருளன்றி ஓரணுவும் அசையாது என்ற
அய்யா வள்ளலாரின் உயிர்க்கொள்கையே
அன்றாடம் இவர் சொல்லும் வேதமாகும்
மனித குலம் வாழ்வதற்கும் மன்பதை செழிப்பதற்கும்
தனிபெருங்கருணை அவசியம் என்பது இவர் வாதமாகும்.

உடல் இளைத்தாலும் தளராத உள்ளத்திலிருந்து
கடல் போல் பெருக்கெடுக்கும் அருள் வெள்ளம்.

லட்சத்தில் ஒருவர் கூட இவர் போல் இல்லை
லட்சியத்திலும் இவர்போல் யாருமில்லை

இவர் வீட்டுத் திண்ணை கூட
வள்ளலாரியம் பேசும்

அமர்ந்திருந்த ஆசனம் கூட
அருட்பாவையே உச்சரிக்கும்.

வள்ளலார் வாழ்ந்த நாள்களில் கூட
இப்படி ஒரு சீடரைக் கண்டிருக்கமாட்டார்.

இராமலிங்க சாமிக்குக் கிடைத்த
ஈடு இணையற்ற சாமி நம் சாமி
இனி எப்போது இவர்போல் காணுமிந்த பூமி.

நெஞ்சமெல்லாம் இராமலிங்கர்
நினைவெல்லாம் அருட்பா.

திருமந்திரம், திருவாசகம், திருக்குறள்
இவைகளில் இவர் மூளைக்குள் பதியாத
வரிகளே இல்லை.

தேகமோ தேய்ந்து தேய்ந்து மெலிதானது
வசீகரக் குரலோ மேலும் மேலும் வலிதானது.

அருட்பாக் கடலை நான் தூரநின்று பார்த்த போது
என் கைப்பிடித்து அதில் இறக்கி விட்டவர்.

பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் துவங்கினார்
இருபதாம் நூற்றாண்டிலிருந்து இருபத்து ஓராம் நூற்றாண்டிற்கு
சுத்த சன்மார்க்க பெற்றோரை இழுத்து வந்துள்ளார் சாமி.

என்னிடத்தில் என்றைக்கும் வற்றாத அன்பு உண்டு
எவராயினும் பரிவுகாட்டும் பண்பும் உண்டு.

அவர் உயிர் அடங்கினாலும்
உயர்ந்த எண்ணங்கள் அடங்கா.

எனக்குள் சாமியின் குரல்கள் ஒலித்துக் கொண்டிருக்கும்
அவைகளைச் சுமந்தவாறு என் பயணம் தொடரும்
அந்த எண்ணங்களுக்கு அழிவு ஏது?
எஸ்.எம்.பி.சாமிக்குத்தான் சாவு ஏது?

அதனால் தான் வள்ளலாரும்
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி என்றார்.

ஞானிகள் உடல் அடங்கினாலும்
உணர்வுகள் அடங்கா.
அது வாழையடி வாழையென வந்து
கொண்டிருக்கும்.
சுத்த சன்மார்க்கத்திற் கென்றே இவர் பிறந்தார்
சுயமரியாதை இழக்காது கடைசி வரை வாழ்ந்தார்
கிழமாக் கிழமாக அருட்பழுத்த
பழமானார்.

சன்மார்க்கம் என்ற நெடிய வரலாற்றில்
அசைக்க முடியாத மைல்கல் ஆனார்.

இவரது அறிவுத் தேடல்களுக்குச்
சத்திய ஞானசபையின் திருக்கதவுகள்
திறந்து விடப்பட்டன.

இவருக்கு நெற்றிக்கண் வடலூரில் திறக்கப்பட்டது
முற்றிய அருள்நிலையில் மூச்சுப்பிரிந்தது தைப்பூசத்தில்

வெற்றிக்கொடி நாட்டிவிட்டார் எங்கள் சாமி
விழிப்புணர்வு நிலையிலேயே வள்ளல் பெருமான்
திருவடியைச் சேர்ந்தார் பூச நன்னாலில்
வாழ்க அவர் புகழ்!


ஆறு



வளைந்தும் நெளிந்தும் ஓடும் ஆறே
வறட்சி நீங்க நீர் வழங்கும் ஆறே
களைத்த உழவர் வாழ்வினிலே
கவலை போக்கும் கருணைத்தாயே
திளைக்கும் மகிழ்வைத் தருகின்ற
தென்றல் காற்றின் பிறப்பிடமே
சளைத்துப் போகா உன் தொண்டால்
செகத்தை காக்கும் தண்நிதியே

அலைந்து அலைந்து ஓடினாலும்
அலுப்பே இன்றித் துள்ளுவாயே
உலையில் சோறு பொங்குதற்கும்
உதவும் ஆறே உயிர்த்துடிப்பே
மலையில் தோன்றி சலசலத்து
மண்ணைக் கிழிக்கும் மாமணியே
கலைகள் வளர்க்கும் நாகரீகம்
காலம் தோறும் தருவாயே

ஈடில்லாத ஈகையாலே
எங்கள் வாழ்வை உயர்த்திடுவாய்
ஒடிவந்து உதவிடுவாய்
ஒய்யா ரமாக நடந்திடுவாய்
வாடும் பயிர்கள் உனைக்கண்டால்
வாஞ்சையோடு வளர்ந்திடுமே
தேடும் செல்வம் தருகின்ற
தெய்வ அருளும் நீயன்றோ!


வள்ளுவத்தில் அரசியல்
(சீர்காழி – திருக்குறள் பண்பாட்டுப் பேரவையில் பாடிய கவிதை)

கரும்புத்தமிழே! நாளும் கருத்தில்
அரும்பும் தமிழே! மானமுள்ள தமிழன்
விரும்பும் தமிழே! அமுதான இன்பத்தைத்
தரும் அன்னைத் தமிழே! எங்கள்
உடல் தமிழே! உயிர்த்தமிழே!  உணர்வுத் தமிழே!
கடல் போன்று கவிதைகளில் பெருக்கெடுக்கும்
கன்னித்தமிழே! காவியத் தமிழே! மொழி உலகில்
முன்னிற்கும் மூத்த தமிழே! அடியேன்
சென்னியால் வணங்குகிறேன்! அதனால் வாழுகின்றேன்!

உள்ளுதொறும் உள்ளுதொறும்
உவப்பூட்டும் வள்ளுவரே!
வள்ளுவத்தை வடித்தெடுத்த
வான்புகழ் வள்ளுவரே!
அள்ளுகின்ற தமிழ்ச் சொல்லால்
தள்ளுவதற்கு முடியாத நூலைத் தந்த
வள்ளுவரை வணங்குகின்றேன்!

பண்பாடும் கவிஞர்களை அழைத்து வந்து
பண்பாட்டுப் பேரவையில் பாடவைத்து – இந்த
மண்போன்ற கவியரங்கை மாண்புற நடத்தும் என்
கண்போன்ற மூர்த்தியாம் சங்கர மூர்த்தியே!
என் போன்றோர்க்கும் வாய்ப்பளித்தமைக்கு
நன்றிகளை குவிக்கின்றேன்!

சீர்காழி மாநகரில் ஓர்
சீர்மிகு கவியரங்கம்
பார் போற்றும் வள்ளுவனுக்கு இந்த
ஊர் பெரியோர் நடத்தும் கவியரங்கம்
ஏர் பூட்டும் உழவன் முதல் அறிவைக்
கூர் தீட்டும் அறிஞர் வரை
யாருக்கும் விருந்தளித்த வள்ளுவனுக்குத்
கார்மேகம் போல் கவிமழை பொழியவந்த
கவிஞர் கூட்டத்தின் தலைமை கவிஞ!

ஊற்றெடுக்கும் நல்ல தமிழ் உமக்குச் சொந்தம்
காற்றடிக்கும் சோலையில் கவின் நிலவு தரும் சுகத்தை
ஆற்றுநீர் போல் அள்ளிவரும் உமது கவிதை வென்றுவிடும்
போற்றுதற்கு உரிய பெரும் புலவ!
மாற்றறியாத பொன் உனது தமிழ் நிலா!

தரமான செந்தமிழை நாளும்
தரத்துடிக்கும் இனமானக் கவிஞர்!
உரமான நெஞ்சினர்: உண்மைப் பேச்சினர்
கரம் சிவக்கும் மட்டும் உனக்கு கைகொடுக்க ஆசை
மரம் போன்ற தமிழனையும் உன் கவிதை – மான
உரம் போட்டு எழுப்பிவிடும் என்பதாலே!
இன்றைய கவிஞரில் நீயோர் பாரதி!
மலைகளில் நீ வேங்கடம் அதனால்
வேங்கடேச பாரதி என்ற பெயர் பெற்றாய்!
சங்கப் புலவர் வரிசையிலே
அங்கம் வருத்த தமிழ் வளர்க்கும்
சிங்கப் புலவரே! சீர்காழி என்னும்
சிங்கார ஊரின் கவிவேந்தே
தங்களின் கவர்ந்திழுக்கும் காந்தத் தமிழுக்குத்
தலை வணங்குகிறேன்!

பூம்புகார்க் கல்லூரியில் இருந்து வந்திருக்கும்
பூங்குயில்! தமிழ் கூவும் கருங்குயில்!
காவிரிக் கரையோரத்துக் கவிக்குயில்
பூவிரியும் சோலையோ மணம் தரும் – உன்
பாவிரியும் சபையோ மகிழ்ச்சி தரும்
தாவிவரும் தேன் தமிழுக்குச் சொந்தமான மேலையூரின்
தாகூரே! தண்டமிழால் வணங்குகின்றேன்!
மண்ணுலகில் எழுத்து இருக்கும் வரை
இருக்கப் போகும் மறத்தமிழர் நூல் திருக்குறள்!

வள்ளுவர்….

மனிதர் வாழ்வைச் சீர்படுத்திப்
புனிதனாக்க வந்த எழுத்துச் சிற்பி!
எண்ணங்களை மேம்படுத்த
கன்னல் தமிழில் கவியாத்த கவிச்சிகரம்!
இறைவன் இவனுக்கு அடியெடுத்துக் கொடுத்ததாக
சேதிகள் இல்லை
எனினும் இவன் தந்த ஈரடிகள் தாம்
உலகெங்கும் ஈட்டிகள் போல் பாய்ந்தன.

உள்ளத்தை உருக்குதற்கோ
ஊனை உருக்குதற்கோ
உருவான கதைகள் அல்ல!
உள்ளத்தை பண்படுத்த உணர்வுகளைச் செம்மைப் படுத்த
உருவான உன்னத இலக்கியமே திருக்குறள்.

புளுகை அள்ளிவிடும் புராணத்தையோ
புதுக்கரடி விடுகின்ற காப்பியமோ செய்யாது
புது உலகைக் காணக் குறள்செய்த வள்ளுவனுக்குப்
பூகோளம் உள்ளவரைப் புகழ்மாரிப் பெய்திடுவோம்!

திருக்குறள்….
மனிதரால் மனிதனுக்கு வழங்கப்பட்ட
கருத்துக் கருவூலம்
தரணியிலே தமிழனின் நிரந்தர முகவரி
தமிழுக்கோ உயிர்மூச்சு;
காலச்சக்கரம் சுழலும் வரை
கோலத் தமிழ் விடும் உயிர் மூச்சு!

தமிழர்கள் தாய்பாலை மறக்கலாம்
முப்பாலை மறத்தல் ஆகாது
எப்பாலவரும் என்றென்றும்
தப்பாமல் பருக வேண்டிய தமிழ்ப்பால்!

எழுத்துலகின் வள்ளுவன் செய்தது இமாலயச் சாதனை
இயம்பியதெல்லாம் வாழ்வுக்கு நல்ல போதனை
தவறி நடந்தாலோ நிச்சயம் உண்டு வேதனை

ஓராயிரம் கோடி மூளைகள்
ஒன்று சேர்ந்தாலும் இனியொரு
திருக்குறளை உண்டு பண்ண முடியாது!

திருக்குறள் தந்த கருத்துக்கள் ஏராளம்
இதை வைத்து வயிறு வளர்த்தவர்களும் ஏராளம்
பின்பற்றத்தான் எவனுமில்லை
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்றார்

இங்கே இருப்பாரோ
இறப்பார்க்கும் சுடுகாட்டில் இடஒதுக்கீடு செய்கின்றார்.
இனப்பற்று இருக்கலாம்; ஈனப்பற்று வேண்டாமே
மனம் ஒத்து வாழும் மனிதன் ஒன்று சேர்ந்தால்
மதப்பற்று என்ற ஒன்று எதற்காக?

வனம் செழிக்க உதவும் மாமழைப்போல் வாழ்க்கை
வளம் செழிக்க உதவுவது திருக்குறளே;
தினம் ஒரு திருக்குறள் படிப்போம்;
குணம் என்னும் குன்றேற அதுவேப் படிக்கட்டு.

முறைசெய்து காப்பாற்றும் மன்னவனே மக்கட்கு
இறை என்று வைக்கப்படும் – குறள்
இன்றோ
முறை தவறிக் கொள்ளை அடித்துக்
கறை படிந்த கரத்தோடே திரிகின்றார் – பிறர் மேல்
குறை சொல்லிக் கதறுகின்றார் பொது
மறை காட்டும் பாதை மறந்தார்

காட்சிக்கு எளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல்
மீக் கூறும் மன்னன் நிலம் என்றார்

காட்சிக்கு எளியவரை இன்று
காணுதலே அரிதானது – நீதிமன்ற
சாட்சிக் கூண்டினிலே ஏறுகின்றார்.
ஆட்சி இருக்கும் போது
ஆர்ப்பாட்டம் போடுகின்றார்.

கொடையும் அருளும்
கொள்கை தவறாத கோட்பாடும் கொண்டு
தடைபல வந்தாலும் தயவோடு
குடிகாக்கும் மன்னவனே வேந்தனுக்கு வேந்தன் என்றார்.

கற்றவனே பெருமைகள் அனைத்தையும்
பெற்றவன்; பெயரும் புகழும்
உற்றவன் என்று கல்விக்காகக் கழறுகின்றார்!

கேடில் விழுச்செல்வம் கல்வியினைத்
தேடிப்போய் எந்நாளும் கற்க வேண்டும்
பேடித்தனம் ஒழிதற்குக் கல்விவேண்டும்
கேடிகளை  திருத்துதற்கும் கல்வி வேண்டும்

கோடி கோடிப் பொருள் குவித்தாலும்
குடியை உயர்த்துதற்கும் கல்வி வேண்டும்
கல்வியே மனிதனுக்கு கண் ஆகும்
கல்வியே மனிதனுக்கு உயிராகும்
கல்வியே மனிதனுக்குக் கடமையாகும்
கற்றவழி நிற்பதே அவனுக்கும் பெருமையாகும்!

வாழ்வைச் செம்மையாக்குவது கல்வி
தாழ்வினைப் போக்குவதும் கல்வி
சூழ் இருள் என்னும் அறியாமை அகற்றிச்
சுடர் அறிவை ஏற்றுவதும் கல்வி
ஏழ் பிறப்புக்கும் இன்பம் தருவது கல்வி.

கல்லாத மக்கள் இனி நாட்டில்
இல்லாமல்  இருப்பதுவே நல்லதாகும்
பொல்லாத செய்கைகள் புறம் போக
எல்லாரும் கல்வியினைக் கற்க வேண்டும்
சோறு போட மட்டுமா கல்வி இல்லை
மாறுபாட்டை காட்டிடவும் கல்வி வேண்டும்.

செவிக்கு உணவு இல்லாத போது சிறிது
வயிற்றுக்கும் ஈயப்படும் என்றார்

வயிற்றுக்கு ஈந்து விட்டால்
வாக்குரிமை விற்கின்றார்.

கட்டுச் சோற்றுக்கும் பிரியாணிக்கும்
தட்டுக்கும் குடத்துக்கும் குத்துவிளக்கிற்கும்
ஓட்டுகளை இடுகின்றார்.

நுணங்கிய கேள்வியர் அல்லார் வணங்கிய
வாயினர் ஆதல் அரிது – குறள்

நுணங்கிய கேள்வியர் அல்லார்: அவரிடம்
வணங்கிய கையினராய்
நெற்றி நிலத்தில் பட
நெடுஞ்சாண் கிடையாக வீழ்கின்றார்!

தன் மானம் காக்க வேண்டிய தமிழன்
வருமானத்தை மட்டும் நினைத்து விட்டான்
நுண்மான் நுழைபுலம் இல்லானையும்
தன்சாதித் தலைவன் என்றால் தாங்குகின்றான்!

சிற்றினம் சேராதிருத்தலே
சிறப்புடைய தலைவனுக்கு அழகாகும்
முற்றிலும் கற்றவனே ஆயினும்
பெற்றிருக்கும் பொருள் பெரிதே ஆயினும்
சிற்றினம் சேர்வாராயின்
சீரழிந்து போவார் அன்றோ!

நார் மலரோடு சேர்ந்து நறுமணம் பெறுவதைப்போல்
நாடி நட்பு கொள்ளும் மனிதர்கள்
நல்ல மனிதர் ஆதல் வேண்டும்!

கனி இருக்க காய் கவர்வார்
நுனிக் கொம்பு ஏறி விழுவார் இவரெலாம்
நனிசிறந்த தலைவன் ஆகார்

பணிவுடன் பதவியில் இருந்து எதற்கும்
துணிவுடன் போராடும் தலைவனே
தனிப்பெரும் தலைவன் ஆவான்.
விழிகாக்கும் இமையைப் போல் – தாய்
மொழிகாக்க மன்னவன் முயலவேண்டும்.

தன் வலிமை பிறர் வலிமை என
வலி அறிந்து வெல்பவனே
வாகைப்பூ சூடுவான் வரலாற்றில்
கிலிபிடித்து ஓடுபவன் கோழை ஆவான்.

காலம் அறிந்து கடமையைச் செய்தால்
ஞாலத்தில் மன்னவனுக்குச் சிறப்புண்டு என்றார்.

கேட்டோர் பிணிக்கும் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாம் சொல் – குறள்

சொல்லுகின்ற சொல்லில் எதிர்களையும்
வெல்லுகின்ற திறமை வேண்டும் வார்த்தையால்
கொல்லுகின்ற இழிபண்பை விட வேண்டும்.

நாவண்மை மட்டும் இருந்தால் அழகாகாது
நாகரிகம் வேண்டும் பேச்சில்
இன்றைக்குச்
சட்டசபையில் மூக்குடைப்பு
சட்டைகள் கிழிப்பு
சரமாரி அடி உதைகள்
சகிக்க முடியாத வாய்ப்பேச்சு!

அகரம் தமிழுக்கு முதலெழுத்து என்றால்
அநாகரிகம் அரசியலுக்குத் தலையெழுத்தானது ஏன்?

உறுபசியும் ஓவாப்பிணியும் செருபகையும்
சேராது இயல்வது நாடு – குறள்

இன்று…
அரசியல்வாதிகளுக்கு ஓட்டுப்பசி
அதிகாரிகளுக்கு லஞ்சப்பசி
கட்சிக்காரனுக்கு பதவிப்பசி
மக்களுக்கு என்றென்றும் வயிற்றுப் பசி.

நாளுக்கொறு சாதிக்கட்சி
ஊருக்கொரு சாதித்தலைவன்
பேருக்குப் பின்பு படிப்பில்லாமலே பட்டம்
சாதியின் பெயராக..

வள்ளுவரே கடலுக்குள் உமக்கு வானுயரச்சிலை
நாட்டுக்குள் உம்மை நிறுத்தி வைத்தால்
நாளும் நடக்கும் கொடுமைகண்டு கண்ணீர் விடுவாய் என்றோ
கடலுக்குள் நிறுத்தி விட்டார்.

மன்னராட்சி நடந்த வேளையில்
எழுதப்பட்டு இருக்கலாம் திருக்குறள்
மக்களாட்சி நடக்கும் இன்றைக்கு
வள்ளுவர் திரும்ப வந்தால்
கையூட்டு, கட்சித்தாவல்,
கள்ளச்சாராயம், கட்டப்பஞ்சாயத்து என்று
அதிகாரங்கள் வகுக்க வேண்டியிருக்கும்.

ஆனைமுகத்தில் ஒரு கடவுள்
ஆறுமுகத்தில் ஒரு கடவுள்
பெருச்சாளி வாகனமாம்
இரண்டு பெண்டாட்டிக் காரனாம்
ஆணுக்கும் ஆணுக்கும் பிறந்தானாம் ஐயப்பன்
இறைவனை இப்படியும் காட்டுகின்றார்.

ஒருவனே தேவன் என்றால்
ஓராயிரம் உருவங்கள் வந்தது எப்படி?
ஓர் இறைவன் மனிதர்களைப் படைத்தான்
மனிதனோ பல்லாயிரம் கடவுள்களை பிரசவித்தான்.

மெய்ப்பொருள் உணராது
பரம்பொருள் தேடுகிறான்
வள்ளுவம் தந்த செம்பொருள்
உணராது சேர்க்கப் பொருள் வேண்டி
நேர்த்திக்கடன் செலுத்துகின்றான்.

செம்மறி ஆடுகளாகவே இருப்பதற்கும்
சிந்தனையற்றுக் கிடப்பதற்கும் பிறந்தவனா மனிதன்?
சீர்தூக்கிப் பார்க்க மறக்கின்றானே

அசரீரி அறைந்த வார்த்தைகள் அல்ல குறள்
அசல் மனிதன் ஆக்கித்தந்த அறிவு விருந்து
அந்த அறிவு விருந்தை அனைவரும் பருகிச்
செயல்பட்டால் அகிலத்தில் என்றும் இன்பமே!


சிலம்பில் ஞாயிறு
(இந்திர விழா – பூம்புகாரில் பாடிய கவிதை)



சிலம்பின் வரிகளில் சிந்திய தமிழே
உலகை வெல்லும் உயரிய மொழியே
எங்களின் உயிராய் இனிக்கும் தமிழே
திங்களின் அழகையும் வெல்பவள் நீயே!

தேனாய் அமுதாய் ஆனாய் தமிழே!
ஊனாய் உணர்வாய் விளங்கும் தமிழே!
வெங்கதிர் விரிக்கும் ஞாயிரைப்போல
மங்காப் புகழுடன் வாழ்க! வளர்க!

பெற்ற பெயர் தியாகராஜன்!
பேச்சினில் எழுத்தினில் தேன் தமிழ் ராஜன்!

பூம்புகார் தமிழ்ச்சங்க ராஜன்!
பூத்துக்குலுங்கும் பூந்தமிழ் ராஜன்!
கார்முகில் கொட்டும் கன மழைபோலே
கவிமழை கொட்டும் கவிஞரே வாழி!

செந்தமிழ் புரவலர் இராஜசேகரனார்
எம் தமிழ் மொழிக்கு சேவகனார்

கண்ணகிக் கோட்டம் கட்டிய தமிழர்
தண்தமிழ் பேசும் தகைசால் அறிஞர்

கண்ணெனப் போற்றும் சிலம்பின் மாண்பை
விண்ணுயர உயர்த்தும் வித்தகரே வாழி!

காப்பிய சிலம்பினில் கடவுள் வாழ்த்தில்லை
மங்கல வாழ்த்தினில் மாக்கவி இளங்கோ
திங்களை வாழ்த்தினார்! திங்களைப் போற்றினார்!

வானம் வழங்கும் அமிழ்தமாம் மழையை
வாயார வாழ்த்தினார் வான்கவி இளங்கோ!
புகழ்மலி புகாரின் சிறப்பைப்
பொதிகைத் தமிழால் போற்றினார் இளங்கோ!

இயற்கையை வணங்கும் இனிய பண்பாடே
பண்டையத் தமிழரின் அரிய பண்பாடு
கனிநிகர்க் கவிதைகளைக் கன்னித் தமிழுக்குத் தந்த
கவிஞர் இளங்கோ கவிஞரில் ஞாயிறு
நெஞ்சை அள்ளும் சிலம்பைத் தந்த
செஞ்சொல் கவியைச் சிரத்தால் வணங்குகிறேன்!

உரைசால் சிறப்பின் அரைசுவிழை திருவின்
பரதர் மலிந்த பயங்கெழு மாநகர்
முழங்குகடல் ஞாலம் முழுவதும் வரினும்
வழங்கத் தவா வளத்ததாகி
அரும்பொருள் தரூஉம் புகாருக்கு
அழகிய தமிழில் கவிதைப்பின்னி
அரியணை ஏற்ற ஆவலுடன் வந்திருக்கும்
அறிஞர் குழாமை அன்புடன் வணங்குகிறேன்.

காவிரி நாடன் திகிரிபோல் பொற்கோட்டு
மேருவலந் திரியும்
காய்கதிர்ச் செல்வனாம்
கதிரவனைப்பாடக் கவியரங்கில் நுழைகின்றேன்!

தேய்ந்து தேய்ந்து வளர்வது திங்கள்!
நேரம்பார்த்து வீசுவது தென்றல்!
கோடையில் இடி இடித்து ஓரிருநாள் பொழிந்துவிட்டுக்
கொட்டோ கொட்டென்று மாரிக்காலத்தில் கொட்டும் மழை!

இதிலே என்றைக்கும் இளைக்காமல் ஓயாமல்
இரவையும் பகலையும் மாறி மாறி
இருந்த இடத்தில் இருந்தே செய்பவன் ஞாயிறு ஒருவனே!
அதனால் தான் பகல் செய்வா ஞாயிறு என்றார் இளங்கோ

இந்திர விழவூரெடுத்த காதையிலே
உதயமால் வரை உச்சித் தோன்றி
உலகு விளங்கு அவிரொளி மலர் கதிர்ப்பரப்பி
எழும் ஞாயிறே
நிலமகள் உடுத்த இருட்டுப் போர்வையை
நீள்கைக் கதிர்களால் எடுத்துவிடும் ஞாயிறே

நீ…
புகையே இல்லாமல் என்றைக்கும் எரிந்து கொண்டிருக்கிறாய்
வதந்”தீ”யைப் போல
எரிய எரிய இருந்து கொண்டே இருக்கிறாய்
சா”தீ”யைப் போல

அண்டத்திலும் அகிலத்திலும்
என்றென்றும் வெளிச்சத்தின் ஆதாரம்!
பூமித்தாய்க்கேத் தாயானக் கனற்பிழம்பு
எரிவதற்குப் பொருளும் இன்றி
எண்ணெயும் இன்றி
என்றைக்கும் எரிந்து கொண்டே இருக்கிறாய்
ஏழைகளின் வயிறைப் போல!

உம் கதிர்கைகள் வெளிவந்தால் தான்
எம் உழவன் கைகள் ஏர் பிடிக்கும்.
வைகறைப் பொழுதில் உன் வரவுக்காகச்
சேவல்கள் கொக்கரிக்கும், காக்கைகள் கரையும்!
சிறு புள்ளினங்கள் சிறகு விரித்துக் கீச்சிடும்
அவைகளை ஏமாற்றாத அணையா விளக்கு நீ!

காலையில் கடல்தாயின் வயிற்றில் பிரசவிப்பு
மாலையில் நிலமகளின் வாய்க்குள் சென்றுறக்கம்
இரண்டுக்கும் இடைப்பட்ட வேளையில் இன்றைக்கும்
ஏழைகளுக்கு நீதானே நேரங்காட்டும் கடிகாரம்!

நிலமும், காற்றும்
நீரும், வெளியும் மாசுபடும்
நிலவுக்கும் களங்கம் உண்டு
களங்கப்படுத்த முடியாதவன்
கதிரவன் ஒருவன் தானே!

நெருப்புக் கோளமே உன்
இருப்பு ஒன்றுதானே நிரந்தரம்!
ஊழி முடிவில் ஒன்றுமில்லாது போனாலும்
உன் ஒளி இருக்கும்!
உனக்கு ஆதி ஏது? அந்தம் ஏது?
நீ அனாதி என்றால் நீயே அருட்பெருஞ்சோதி!

கவிஞர் தம் கற்பனையில்
கதிரவனே நீ ஆண் ஆவாய்
அரசன் ஆவாய்
ஆண்டவன் ஆவாய்
நீள்கதிர் ஞாயிறே உன்னை ஆணாக்கி
நிலவைப் பெண்ணாக்கி
நெடுவரிக் கவிதையாலே
நெஞ்சை நனைக்கின்றார் இளங்கோவடிகள்!

அந்த அமுதவரிகள் இதோ…
முதிர்கடல் ஞாலம் முழுவதும் விளங்கும்
கதிரொருங்கு இருந்தக் காட்சிபோலே

மனையறம் படுத்த காதையில்
நிலா முற்றத்தில் மாசாத்துவான் மகனும்
மாநாய்கன் மகளும்
ஞாயிறும் திங்களும் போல இருந்ததாக
நயம்பட உரைக்கின்றார்
நற்றமிழின் நாயகன் இளங்கோ!

கவிஞனுக்குச் சொத்து கற்பனை தானே!
கற்பனைச் சிறகை விரிக்கும் கவிஞனின்
கருத்துக்குக் கிடைக்கும் கவின்மிகு வரிகள்!

விரிகதிர் பரப்பி உலக முழுதாண்ட
ஒரு தணித் திகிரி உரவோற் காணேன் என
அந்தி மாலையில் நிலமகள் தன் கணவனான
அலர்கதிர் ஞாயிற்றைத் தேடுகின்றாள்!

நிலமகளுக்குக் கணவன் நீள்கதிர்ச் சூரியன் என தமிழ்க்
குலம் போற்றும் காப்பியப் புலவர் பாடுகின்றார்!
இருளைக் கிழிக்கக் கீழ்த்திசை வானில்
அரும்பெரும் சூரியன் ஒளிமுகம் காட்டும்
அற்புதக் காட்சியை அழகாய் காட்டும்
சிலம்பின் வரிகளோ சீர்மிகு வரிகள்!

உனக்கு நன்றி சொல்லி வணங்கிடவெ
உச்சிக்கிழான் கோட்டம் உனக்கமைத்து
மெச்சிப் புகழ்ந்தனர் பண்டைத் தமிழர்!
வாட்டங்கள் தனில் இருந்து மீள்வதற்கு
நாட்டமிகு பக்தியினால் நம் முன்னோர்

கோட்டங்கள் பல கண்டார் அதிலே உனக்கும்
கோட்டங்கள் பல அமைத்தார்.

அக்கினிப் பிழம்பே உன்
வக்கிரப் பார்வைதான் கோடையோ
மக்களை நீ காத்தாலும் உன்
உக்கிரத்தை மட்டும் இழந்து விடாதே
இழந்து விட்டால் உன்னை மனிதன்
மிதிக்கப்பார்ப்பான்
அன்றிலிருந்து இன்றுவரை உன்னை
நெருங்க முடியாததால் தானே உனக்குப் பெருமை.

பொற்கொல்லன் சூழ்ச்சியினால்
விற்புருவ நங்கை வேல்விழியாள் கண்ணகி
கற்பின் உருவம் பொற்புடைத் தெய்வம்
கணவனை இழந்தால் கண்ணீர் உகுத்தாள்
கள்வனோ என் கணவன் என
காய்கதிர்ச் செல்வனே கதிரவனே
உன்னைப் பார்த்து உரங்கக் கேட்டாள்
கள்வன் அல்லன்! கள்வன் அல்லன்
என்றது ஒரு குரல்.

தீயின் நாக்குகளால் தீயும் இவ்வூரென
திரும்பவும் சொன்னது அந்தக் குரல்!
சூரியனைச் சுட்டிக்காட்டி கேள்வியைக் கேட்டவள்
வீரத்தமிழ்ப்பெண் எங்கள் கண்ணகியன்றோ!

காப்பிய உலகின் சூரியனாய்க்
கவிஞர்கள் போற்றுவது சிலப்பதிகாரம்
மூப்பிலும் சிலம்பே முதன்மைக் காப்பியம்
யாப்பிலும் இதனுக்கிணை நூல்கள் உண்டோ
அந்தத் சிலம்பின் வரிகளை சிந்திப்போமே!

காய்கதிர்ச்செல்வனே கள்வனோ என் கணவன்
கள்வனோ அல்லன் கருங்கயல் கண் மாதராய்
ஒன்ளெரி உண்ணுமிங் வூரென்ற தொருகுரல்

மின்னனில் ஒளிபோல் சிந்தையுள் பாயும்
கன்னல் தமிழின் கவிதைவரிகள்
கண்ணிலும் நெஞ்சிலும் நிற்கும் வரிகள்

அண்டத்தில் ஞாயிறு ஒன்றே
அனைத்துயிர்க்கும் சிவம் ஒன்றே
அகிலத்தில் மக்கள் குலம் ஒன்றே
புற இருள் நீக்கும் பொலிவுச் சுடரே – மக்கள்
அக இருள் நீக்க அருள்வாயே

நிலைத்து நின்று நீ ஓரிடத்தில்
ஒளிவிட்டுக் கொண்டிருக்க – மக்கள்
மலைத்து நின்று புலம்புகின்றார் நீ நகர்வதாக
மாயைக்குள் இவ்வுலகம் மாய்ந்து கிடக்கும்
மகிமையை பாராயோ! அவர்களின்
மடமையை மாய்ப்பாயோ

நாத்திகவாதி உன்னை நெருப்புக் கோளம் என்பான்
ஆத்திகவாதி அக்கினிபகவான் என்பான்
மக்கள் உன்னைச் சூரியன் என்பார்

உண்மை ரகசியத்தை நீயே சொல்
திரி ஏதும் இன்றி அண்டப் பெரு வெளியில்
உன்னை ஏற்றி வைத்தவன் யார்?
பரமபிதாவா?அல்லாவா? பரமசிவனா?

தன்னை அறிந்தவன் உன்னில் தன்னைப் பார்க்கிறான்
தன்னில் உன்னைப் பார்க்கிறான்
கால வெள்ளத்தில் கரையாத
கனற் பிழம்பே அன்று

மன்னவன் தென்னவனின் அவசரத் தீர்ப்பால்
மாண்டான் கோவலன் மதுரையில் கொலையுண்டு

செய்தியைக் கேட்டதும் சீறினாள் கண்ணகி
செவ்வரியோடிய கண்கள் சிவக்கக்
செம்பொன் சிலம்பைக் கையில் ஏந்திப்
பத்தினிதெய்வம் பெண்குல விளக்கு
சித்திரை நிலவு செந்தமிழ்ப் பெண்ணாள்
சத்தியம் காக்கக் சடுதியாய் நடந்தாள்.
கூந்தல் விரியக் குவலயம் வியக்கக்
கூடல் நகரே குலுங்கிட நடந்தாள்

கையில் சிலம்பும் கண்களில் பிழம்பும்
கால்களில் விரையும் காட்டிடச் சென்றாள்

மண்ணில் எவரும் மதித்துப் போற்றும்
கண்ணகி வடித்த கண்ணீர் கண்டு
கலங்கினர் மக்கள் துவண்டனர் கோதையர்.
வளையாத செங்கோல் வளைந்த தென்று
வாயால் புலம்பினர் உடலால் வெம்பினர்.

சிலைவடிவான சேயிழை கண்ணகி
மலைமகள் அழகையும் மிஞ்சிய கண்ணகி
கொலைக்களம் தன்னில் உயிரை நீத்த
கோவலன் கண்டாள் கொடியென வீழ்ந்தாள்!
பசுந்தளிர் மேனியாள் பைந்தமிழ் மரபினாள்
விசும்பின் மழையென விம்மி அழுதாள்
இக்கொடுமைகண்டு செங்கதிர் ஞாயிறு
தன் கைகளை உள்ளே இழுத்தது

மாக்கடல் சூழ்ந்த மண்ணுலகை
மாலை இருளோ கவ்விக் கொண்டது என
மனதை உருக்கக் கவிமழைப் பொழிகிறார்

மன்னன் சேரனின் மதிநிறை இளவல்
என்ன கற்பனை! என்ன துயரம்

மல்லல் மாஞலம் இருளூட்டி மாமலைமேல்
செவ்வேன் கதிர் சுருங்கிச் செங்கதிரோன்
சென்றொளிப்பப்
புல்லென் மருள்மாலை பூங்கொடியாள் பூசலிட
ஒல்லென் ஒலி படைத்த தூர்

இந்தக் கவிதை வரிகள்
கல்மனத்தையும் கரைக்கும் வரிகள்
சிலம்பின் காவிய மேடையில்
ஞாயிறு முகம் காட்டிய இடமெல்லாம்
முத்திரை பதித்தவர் கவிக்கோ இளங்கோ

ஞாயிறு எனிலோ விடுமுறை
ஞாலத்தின் ஞாயிறே உனக்கு
விடுமுறை ஏது?
ஓய்வு இன்றி ஓயாது காய்ந்து கொண்டு
இருக்கும் நீ இருளில் கூட
எங்கோ ஒளிர்ந்து கொண்டேயிருக்கிறாய்!

எட்டி நின்று காய்பவனே! உன் வெந்தீயில்
முட்டி மோதிக்கொள்ளும் சாதிமதங்களைச்
சுட்டெரிக்க வேண்டுகிறேன்!
சுடர்கதிர் ஞாயிறே! வாழ்க!


பாவலர் மெச்சும் பௌர்ணமிக் கலைஞர்


அரசியல் வானில் அழியா வானவில்
அறிஞர் அண்ணா போற்றிய தமிழ்வில்
 பைந்தமிழ் மொழியை பாரதம் போற்ற
செம்மொழி வரிசையில் சேர்ந்தவர் கலைஞர்

தந்தை பெரியார் தன்மானத் தடத்தில்
தளராது நடக்கும் தலைவர் இவரே

தனிசுவை சொட்ட நற்றமிழ் பேசும்
கனித்தமிழ் முதல்மகன் கலைஞர் அன்றோ!

நலிந்து போகா தமிழகம் காக்கச்
சலியாது இன்றும் உழைக்கும் தலைவர்

அகவை எண்பதை எட்டிய போதும்
அயராது உழைக்கும் அருந்தமிழ்ப் புதல்வர்
தீப்பொறி பறக்கும் திரைப்பட வசனம்
தீமைகள் அகற்றும் தீந்தமிழ்க் கவிகள்
தீட்டும் கடிதங்கள் தெவிட்டா இலக்கியம்

குறளின் மாண்பைக் குவலயம் போற்ற
குமரியில் வள்ளுவர் சிலையினைக் கண்டவர்
குன்றா உழைப்பால் கோபுரம் ஆனவர்
கொள்கையைக் காக்கக் குருதியை தந்தவர்

தேக உழைப்பில் தேனியை மிஞ்சி
தேமதுரத் தமிழால் தேனை ஊட்டுவார்
பாரில் பிறந்த பைந்தமிழ்ச் சூரியன்
பாவலர் மெச்சும் பௌர்ணமிக் கலைஞர்

உழைப்பும் தொண்டும் உடுத்தும் அணிகலன்
உயர்வில் சிகரம் எட்டிய தமிழர்
கனலெனக் வைதைக் கக்கும் முரசம்
கன்னித் தமிழின் கவின்மிகு கலசம்

ஒல்காப் புகழ்தரும் தொல்காப்பியத்தில்
உலகம் வியக்கப் பூங்கா அமைத்து
இலக்கிய உலகில் இமயம் என்றே
எழுந்து நிற்கும் எங்கள் தலைவர்
இனியொரு தலைவர் இவர்போல் இங்கே
பிறப்பது என்பதுக் கேள்விக்குறியே!


அண்ணா வழியில் கலைஞர்

ஆற்றலின் பிறப்பிடம் அருந்தமிழ் அருவி
அண்ணா என்னும் சிந்தனைக் கருவி
நற்றமிழ் சாற்றை நாக்கினில் வடித்துச்
சொற்றமிழ் பேச்சால் சொக்க வைத்தார்

பழுத்துக் கொட்டும் கனிகள் போலே
எழுத்தில் விழுந்தன இலக்கியங்கள்
முன்னாள் இருந்த மூடப் பழக்கம்
அண்ணா வரவால் அரண்டு ஓடின!

சீமான் பிடியில் சிக்கிய தமிழகம்
கோமான் இவரால் விடுதலை பெற்றது
நாக்கின் அசைவினில் அடிமைத் தமிழர்
தூக்கம் கலைத்தார் துக்கம் ஒழித்தார்

முத்துக் குவியலாய் முகிழ்த்துக் கிளம்பும்
தத்துவக் கருத்தைத் தமிழில் தந்தார்
கத்தியை தீட்டிய மனிதரைத் திருத்திப்
புத்தியைத் தீட்ட வழியைச் சொன்னார்.

எரிமலைப் பெரியார் எண்ணம் காக்க
ஆரிய மாயையை அடித்து நொறுக்கினார்
இந்தி அரக்கன் நுழைந்த போது
முந்தி நின்று முத்தமிழ் காத்தார்.

மடமை கொண்ட மக்கள் மனத்தில்
கடமை கண்ணியம் கட்டுப்பாட்டை
உடமை ஆக்கி உயரச் செய்தார்

ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்
நன்றே சொல்லின் நலமே என்றார்
அண்ணல் காந்தியாய்த் தமிழகம் தன்னில்
அண்ணன் உதித்தார் அறத்தைப் போக்கினார்
அண்ணன் கண்ட அருமைக் கழகம்

அவரின் மறைவால் துவண்ட வேளை
கண்ணெனக் காக்கக் கலைஞர் வந்தார்
எண்ணிலா எதிர்ப்பும் வேதனை வந்தும்
மண்ணிலே இயக்கம் வளர்த்து வருகிறார்

இந்நாள் வரையில் கொள்கையைப் போற்றி
மெழுகாய் தேயும் மேதைக் கலைஞர்
மேலும் மேலும் வாழ்நாள் பெற்று
மேதினிப் போற்ற மேருவாய் வாழ்கவே!


புகழால் வாழ்வார் கலைஞர்

திருக்குவளைப் பெற்றெடுத்த தியாக தீபம்
திசையெட்டும் தமிழ்முழக்கும் மனிதத் தேனீ!
வரும் துன்பம் எதுவெனினும் எதிர்த்து நின்று
வாகையொன்றே வரலாற்றில் சூடும் வள்ளல்
அருந்தமிழில் ஆக்கிவைத்த அழகு நூல்கள்
அவர்பெயரை அகிலத்தில் அறைந்து நிற்கும்!
கருமேகம் கொட்டுகின்ற கணக்காய் என்றும்
கருத்துமழை கொட்டுகின்ற கலைஞர் வாழ்க!

நல்ல தமிழ் கலைஞரிடம் நாளும் கொஞ்சும்
நயமிக்க கவிதைகளோ நதியை விஞ்சும்
வெல்லத்தின் சுவையையும் வெல்லும் பேச்சு!
வெற்றியென்ற படிக்கட்டே வாழ்வின் மூச்சு!
சொல்லெல்லாம் தமிழினத்தின் மேன்மை காட்டும்
சுறுசுறுப்பைக் கழகத்தில் நாளும் ஊட்டும்
பொல்லாங்கு சொல்பவர்கள் புறத்தே ஓடப்
புவிதன்னில் நம் தலைவர் புகழால் வாழ்வார்!

சமத்துவத்தை நிலைநாட்ட புரமும் கண்டு
சாதிகளை ஒழிப்பதற்குச் சபதம் பூண்டார்
அமரர்நம் அண்ணாவின் உண்மைத்தம்பி
ஆற்றல்கள் பல கொண்ட கலைஞரன்றோ?
நமக்கு நாம் திட்டத்தை நாட்டில் காட்டி
நல்லாட்சி செய்திட தலைவர் வாழ்க!
தமக்குப்பின் கழகத்தைக் கட்டிக் காக்கத்
தளபதிகள் பலதந்த கலைஞர் வாழ்க!


நீள்புகழால் நிலைத்த மாறன் வாழ்க!

தாய்மொழியின் உயர்வுக்கே தன்னைத் தந்து
தமிழினத்தின் மேன்மைக்குத் தாகம் கொண்டார்
ஓய்வறியா உழைப்பினிலே உயர்வைப் பெற்று
உலகினிடைப் பாரதத்தை ஓங்கச் செய்தார்
ஆய்வறிஞர் மாறனென்றால் அதுவே உண்மை
அளப்பரிய செயல்களிலும் உண்டு திண்மை
பாய்மரமாய் கலைஞருக்குக் பக்கம் நின்றே
பாங்குடனே கழகத்தை நடத்திச் சென்றார்.

வியக்கவைக்கும் அறிவாற்றல் வாழ்வில் என்றும்
விறுவிறுப்பாய் தொண்டினிலே உயர்ந்தார் மாறன்
அயராத கழகத்தின் அரிய சிற்பி
அறிஞரான அண்ணாவின் அன்புத்தம்பி
நயமிக்க பேச்சாலே நல்லோர் போற்ற
நாடாளுமன்றத்தில் நற்பேர் பெற்றார்.
தயவுமிக்க தயாநிதியை நாட்டில் தந்து
தலைவர் தம் கலைஞருக்கு தலையாய் ஆனார்.

கலைஞரென்னும் முகத்துக்கே கண்ணாய் ஆகி
கழகமென்னும் கண்களுக்கே இமையாய் ஆனார்
கலையுலக வாழ்வினிலும் வசனம் தந்து
காலமெல்லாம் நம்நெஞ்சைக் கவர்ந்தார் அந்தோ
மலைபோலத் துன்பங்கள் மண்டிட்டாலும்
மதிபலத்தால் வெல்லுகின்ற மகிமைக் கொண்டார்
நிலைகுலையா உள்ளத்தால் மிசாவை வென்று
நீள்புகழால் நிலைத்து நின்ற நிமலன் வாழ்க!

ஓடாக உழைத்துழைத்து உயர்வு பெற்றே
ஒப்பற்ற நகர்வளத்தின் அமைச்சர் ஆனார்
வீடாக கொண்டதோ தலைவர் நெஞ்சம்
விண்முட்டத் தொழில்துறையை வளர்த்ததங்கம்
ஈடாக இவருக்கு எவரும் உண்டோ?
எந்நாளும் இவர்புகழைத் தோஹா சொல்லும்
நாடாளுமன்றத்தில் பெயரை நாட்டி
நற்றமிழர் புகழ்காத்த நல்லோன் வாழி!


வள்ளற் பெருமான்



அன்புபாதி அறிவுப்பாதி
சேர்ந்த தெய்வசக்தி
புயலை அடைகாத்த பூ
அருட்பாத் தென்றலை
அவனிக்குத்தந்த சூறாவளி

சிந்தித்துக் கொண்டே இருந்ததனால் சிலரால்
நிந்திக்கப் பெற்றார்.

மனிதனை மனிதனாக்கப் போதனை செய்தார்
மந்திகள் மத்தியில் அது எடுபடவில்லை.

இவரைப் புரிந்துகொள்ளவே ஒரு தகுதி
வேண்டும் என்கிற போது
பிந்தொடர்ந்து எவன்வருவான்?

விலங்குமனங்களை மாற்ற நினைத்தார்
அவைகள் உரசிக்கொள்ள மரத்தை தேடின.

நல்லதேனை நாய் நக்காது என்பது
இவருக்கு தெரியாமலா இருந்திருக்கும்.

பிணம் கொத்தும் கழுகுகளிடம்
குணம் என்னும் பாடம் சொன்னார்.

இவர் கருணையால் வானம் சிறுத்தது
இவர்பார்வை அண்டங்களை ஊடுருவியது.

பயிர்வாடியதால் இவர் வாடினார் இங்குள்ளவர்களோ
இவரையே வாடவைத்து வேடிக்கைப் பார்த்தார்.

புழுவுக்கும் பூச்சிக்கும் அழுதார் – சிலரோ இவர் மீதே
புழுதி வாரித் தூற்றினார்கள்.

ஆனாலும் தூற்றியவர்கள் வரலாற்றின் குப்பையில்
கிடக்கிறார்கள் தண்ணீரில் மிதக்கும்
செத்துப்போன கரப்பான் பூச்சிகள் போல.

தின்றதையே திரும்பத்திரும்ப வாயில் கக்கி
அசைபோடும் விலங்குகள்
அருட்பாவை மருட்பா என்று சொன்னதில்
ஆச்சர்யம் ஏதுமில்லை.

பூசைகள் பல செய்து
காசை உண்டியலில் போட்டுக்
கன்னத்தில் கைப் போட்டால் வாயில்
தோசைவரும் என நினைப்பவர்களுக்கு
மரணமில்லாப் பெருவாழ்வு – எதற்காக

வேட்டை நாய்களுக்கு வேதாந்தம் எதற்காக
சிறுமதியாளர்களுக்குச் சித்தாந்தம் ஏறுமா?

வள்ளலாரே என்னை மன்னியுங்கள்
உங்கள் போல் சினத்தை என்னால்
அடக்க முடியவில்லை.


வேண்டுதல்




காளியம்மனுக்கு காவடி எடுத்தாகிவிட்டது
மாரியம்மனுக்கும் மண்சோறு தின்றாகிவிட்டது
அங்காளம்மன் கோயிலில் அங்கப்பிரதட்சணம்
திருப்பத்தை எதிர்பார்த்துத் திருப்பதிக்கும்
படிவழியே ஏறித் திரும்பியாகிவிட்டது
தீ மிதித்திருவிழா வெற்றிகரமாய் முடிந்து
பழனிக்கும் பாதயாத்திரை
திருவண்ணாமலையில் கிரிவலம்
பிரதோஷம் எதையும் தவறவிடவில்லை
நந்தியின் கொம்புக்கிடையில் முட்டி மோதி
முந்திக்கொண்டு சிவதரிசனம் செய்து முடித்தாகிவிட்டது.

சங்கடத்திலும்
சங்கடஹர சதுர்த்தியை மறக்கவில்லை
கந்தைக்கும் வழியில்லை என்றாலும்
கந்த ஷஷ்டியை விடவில்லை
நவக்கிரக சுற்றுலாவில் அத்தனைக் கிரகங்களுக்கும்
அர்ச்சனை! சிறப்பு தரிசனம்! பரிவட்டம்!
வெறித்தனமாய்ப் பக்தி காட்டியும்

வெறுப்பே மிஞ்சியது
ஏன்?
எந்தக் கடவுளையும் இவன்
உருப்படியாய் நம்பவில்லை
ஏனென்றால் தன்னையே அவன் நம்பவில்லை
பலனை எதிர்பார்த்துப் பரிகாரங்கள்
செய்தான் பாவம்!
தனக்குள் இருக்கும் இறைமை இவனை
எட்டிப்பார்க்கவில்லை!


என் காதலி



உன்னை மட்டும்தான் இறுதிவரை காதலிப்பேன்
என்னை நீயும் உன்னை நானும் விடமுடியாது
என்னோடு பேசியதில்லை என்றாலும்
உன்னை சுவாசித்திருக்கிறேன்.
உன்னை எத்தனைமுறை எவ்வளவுபேர் சுவைத்தாலும்
அப்படியே இருக்கின்றாய் மேலும் மேலும் போதையைக்
கொடுத்துக் கொண்டு.

உன்னை அனுபவித்தவனுக்குத்தான்
நீ தரும் சுகம் புரியும்.
வயது ஆனாலும் உன் மேல்
வெறி ஏறிக்கொண்டேயிருக்கும்
வயது ஆக ஆகத்தானே உன்னை
மேன்மேலும் புரிந்து கொள்ள முடியும்.

உனக்குள்ளே நுழைந்துவிட்டால்
என்னை நான் மறக்கின்றேன்.
உன்னை மறக்கும் நாள் என்றால் அது
நான் உயிர்துறக்கும் நாளே.

எவ்வளவு புதையல்கள் உன்னிடம் – அப்பப்பா
இன்பச்சுரங்கம் – நீ எடுத்து முடிக்க
எத்தனை ஜென்மம் ஆனாலும் போதாது
உன்பெருமையை வானம் வியக்கப் பார்க்கிறது
கடல் உன்னைக்கண்டுக் காழ்புணர்ச்சி கொள்கிறது
உயிர்த்தமிழே நீயே என் உண்மைக்காதலி!


கும்பகோணத்தில் கோரச்சம்பவம்

(கும்பகோணம் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து)


மகாமகம் காணும் கும்பகோணம்
மகாசோகம் காணுகிறது

கோயில்களின் நகரம் அன்று
குழந்தைகளின் கொடூர நரகமானது.

அக்கினித் தேவன் கும்பகோணத்தில்
அக்கினி அரக்கன் ஆனான்

எதிர்காலக் கனவுகள்
இறந்தகாலத்தில் எரிந்துபோயின.

கோழிக்குஞ்சுகளை கூண்டில் அடைத்து
கொளுத்தியது போல் கொடிய சம்பவம்
கும்பகோணம் இந்தியத் தாயின்
கோரமான தீப்புண் ஆகிவிட்டது.

அரிச்சுவடி உச்சரித்த இடத்தினிலே
அவலக்குரல்கள் மரண ஓலங்கள்
பள்ளியின் கீற்றுக் கொட்டகை என்றும்
பாழ்துயரைக் கீறிவிட்ட கொட்டகை.

கொள்ளிக்கட்டைகள் பிணத்தை எரிக்கலாம்
பிஞ்சுகளை எரிக்கலாமா?

குருத்துகளைக் கொல்லன் உலையில் வைத்துக்
குருதி சுண்ட கருக்கிய இறைவா
பாவம் செய்தது யார்? குழந்தைகளா? நீயா?

அது என்ன நர்சரிப்பள்ளியா?
இல்லை நாசப்பள்ளியா?
துவக்கப்பள்ளியா? இல்லை
துக்கப்பள்ளியா?

கொழுந்து விட்டுஎரியும் தீக்குள்
கொழுந்துகள்! மனம் கொதிக்கிறது

குருவிக்குஞ்சுகளைக் கொளுத்தும் தீயில்
கூக்குரலிட கொளுத்திய இறைவா
உன் அநியாயத்தை இத்தோடு நிறுத்திவிடு
இல்லையெனில் உன் இருப்பைப் பற்றிய
அய்யப்பாடு அனைவருக்கும் வந்து விடும்

இறைவா…
புதியதோர் உலகம் படைக்கப்
புத்தக மூட்டைச் சுமந்து சென்ற
இளநாற்றுகளை இப்படி
விறகுக் கட்டையாக வேக வைத்தது
என்ன கொடுமை…

ஈசல் பூச்சிகளாகத் தெரிந்ததா
எங்கள் இதயங்கள் உனக்கு…
பால்வடியும் முகங்கள்
கரிக்கோல்களோடு கருகிய போது எங்கள்
இதயத்தில் தேள் கொட்டியது

காலையில் தானே அம்மா தந்தனுப்பினாள்
கன்னத்தில் அன்பு முத்தம்
மதியத்துக்குள் மரணத்தின் முத்தமா…

நெஞ்சில் வைத்து உச்சி முகர்ந்து
வாஞ்சையுடன் கொஞ்சி அனுப்பினாரே தந்தை – மதியம்
எஞ்சியிருந்தது வெந்து போன உடல் என்றால்
வெங்கொடுமை சாக்காடே – உனக்கு
யார் தீர்ப்பு வழங்குவது?

மனசாட்சி சில மனிதர்களிடம் தான் இருப்பது இல்லை
இறைவா உனக்குக் கூடவா?

ஐந்து நிமிடத்திற்குள் அவர்கள் வெந்து விட்டார்கள்
வாழ்நாளெல்லாம் நம்மை வேதனைத் தீயில்
வேக வைத்தார்கள்.

மழலை செல்வங்களே
நீங்கள் தீயில் கருகினீர்கள்
நாங்கள் தீயின்றி உருகிக் கொண்டிருக்கின்றோம்
உங்கள் நினைவாக…

தீ உங்கள் தளிர்மேனியைத் தின்றாலும்
துன்பத்தீ எங்கள் உணர்வுகளைத் தின்று கொண்டிருக்கிறது.
நிரந்தரத் தூக்கம் கொண்ட சின்னச் சிட்டுகளே எங்கள்
நித்திரைகளை நிரந்தரமாக கலைத்து விட்டீர்கள்!
துன்பத்தை உங்கள் பெற்றோர்களோடு நாங்களும்
பங்கு போட்டுக்கொள்கின்றோம். 


வடலூர்


வரலாற்றில் என்றென்றும் வாழும் ஊராம்
வள்ளலாரின் ஞானசபை திகழும் ஊராம்
பரஞானம் அபர ஞானம் காட்டி என்றும்
பைந்தமிழ் பெருமையை நாட்டும் ஊராம்
வரமெல்லாம் தருகின்ற வளம்சேர் நல்லூர்
வாழ்வினையே செம்மையாக்கும் வசந்த ஊரே!
தரமான உணவுதரும் தருமச் சாலை
தனைக்கொண்ட திருத்தலமாம் வடலூர் மண்ணே!

அருள் வாழ்வை நாடுகின்றோர் கூடும் ஊராம்
ஆன்மநேயம் போதித்த அருமை ஊரே!
இருள்நீக்கி மனங்களிலே இறைமைக் காட்டும்
இணையற்ற புனித இடம் இவ்வூர் ஒன்றே
தெருள்பெற்றுத் திளைத்திடவே வைக்கும் சொல்லில்
தேந்தமிழால் அருட்பாவை அளித்த ஊரே!
பொருள் சேர்க்கும் உலகினரே புகுந்து இங்கே
புண்ணியங்கள் பலபெற்றுப் புவியில் வாழ்க!

வாட்டுகின்ற பெரும்பசியை நீக்கும் இவ்வூர்
வான்மழையாம் பெருமானார் வாழ்ந்த ஊரே!
நாட்டினிலே இருக்கின்ற கோயில் கண்டீர்
நம் தலைவர் வள்ளலாரின் சோதி காண்பீர்
ஏட்டினிலே எழுதினாலும் அடங்கிடாது
எவ்வகையில் புகழ்ந்தாலும் நிறைத்திடாது
காட்டுகின்ற அருட்சோதி கருத்தில் கொண்டு
கருணையுள்ளம் மிகக்கொண்டு கனிவாய் வாழ்க!


நட்சத்திரம்


வானத்து வயலில்
நிலா உழவன்
தெளித்து வைத்த
விதைப் பூக்கள்

நிலவின் அழகைக் கண்டு
பறக்க மறந்த மின்மினிப்பூக்கள்

இருட்டுக் கடலிலிருந்து
எட்டிப்பார்க்கும் ஒளி முத்துக்கள்

இறைவன் விரித்த
வானவலையில் சிக்கிய
வைர மீன்கள்

பகலில் மேகப் பெண்கள்
பகட்டு ஊர்வலத்தில்
சிந்திய ஜரிகைப் பூக்கள்

நிலவுப் பெண்
வானச்சுவரில் ஒட்டிவைத்த
ஸ்டிக்கர் பொட்டுகள்

வானத்து திருவிழாவுக்கு
வரிசையின்றிக் கட்டப்பட்ட
சீரியல் பல்புகள்.


எது சன்மார்க்கம்?



அன்பினால் ஆருயிர் காப்பதும்
ஆண்டவனை அறிவால் அறிவதும்
இல்லறம் போற்றி ஈவதும்
ஈனம் தவிர்த்துத் தானமளிப்பதும்
உடலைப்பேணி உயிரை வளர்த்தலும்
உண்மையை பெறுவதும் தருவதும்
உரிமையைப் பெறுவதும் தருவதும்
ஊருணி நீராய் உதவுவதும்
ஊரெல்லாம் ஒன்றென உரைப்பதும்
எதிரிகள் என்பவர் இல்லையென்பதும்
எதையும் பொதுவாய் எண்ணி மகிழ்தலும்
எங்கும் எதிலும் இறைவனைக் காண்பதும்
எல்லா உயிரிலும் ஈசனைப் பார்ப்பதும்
ஏகன் இறைவன் என்று போற்றுதலும்
ஐயம் தவிர்த்து அருளாய் ஆவதும்
ஒன்றே தெய்வமதை உள்ளத்தில் வைத்தலும்
ஓதலின் நன்றே ஒழுக்கம் எனலும்
ஔவியம் தவிர்த்தலும் சுத்த சன்மார்க்கம்.


சுனாமி


ஆர்பரித்த கடல் அலையே உயிர்க்குலத்தின்
வேர்பரித்து நீ செல்லல் என்ன நியாயம்?
தண்ணீர்க்கடலே நாட்டுக்குள் நீ ஒரு
கண்ணீர்க்கடலை ஏன் தந்தாய்?

முந்நீரே உன் கோபத்தால்
செந்நீராம் எங்கள் இரத்தம்
வெந்நீராய் கொதித்தது உனக்குத் தெரியாதா?

கடல் இரைவது நியாயம்
இரையும் கேட்பது என்ன நியாயம்?
குறை எதுவும் இல்லாத கடலுக்கும் ஒரு
கறையை உண்டாக்கி நீ சென்றாய்

அல்லும் பகலும் ஆடிவரும் அலையே – நீ
கொல்லும் அலையாய் மாறியது பழியே
அள்ளும் அழகைத் தருகின்ற ஆழி நீரே
துள்ளிவரும் உன் அலைக் கைகள்
கொள்ளிவைக்கத் துடித்ததேனோ?

உனக்கும் நிலத்துக்கும் நடந்ததா யுத்தம்!
இதில் அப்பாவி மக்கள் மீது உனக்கென்ன குத்தம்?
உன் மீது வலையை விரித்தார்கள் என்று
எங்கள் மீது அலையை விரித்தாயோ!

விரிகடலே –
கரிகடலே – நீ
காலனாய் வந்த காழ்ப்புக் கடலானாய்.


சிவனுக்கு


விரிசடையான் வெள்விடையான் வேலைக் கொண்ட
வேலவனை ஈன்றெடுத்த வெண்காட்டீசன்
கரிமுகனைத் தந்து நிற்கும் கனற்பிழம்பான்
கனகசபையான் கர்மவினைக் கட்டறுப்பான்
எரிநுதலான் இன்பதுன்பம் ஏதும் இல்லான்
இணையடியை எண்ணுமன்பர் தம்மைக் காப்பான்
திரிபுரத்தை எரித்துவிட்டுத் திக்கு எட்டும்
திகழ்ந்திருக்கும் தேவர் தம் தலைவாப் போற்றி!


சிவத்துக்கு



அணுவாகி அணுக்கள்சேர் பொருள் ஆகி
அண்டமாகி அண்டத்தில் கோள்கள் ஆகி
பேணுகின்ற உயிராகி உண்மை ஆகி
பெற்றெடுத்த தாயாகி தந்தை ஆகி
நாணுகின்ற பெண்ணாகி ஆணும் ஆகி
நடுநிற்கும் அலியாகி அனைத்தும் ஆகி
காணுகின்ற காட்சியாகிக் கண்ணும் ஆகி
கண்களிலே ஒளியாகிக் காக்கும் தேவே!
முன்னது சமயம் (சிவன்)
பின்னது சன்மார்க்கம் (சிவம்)
முன்னது பக்தியின் அடையாளம்
பின்னது ஆன்மிகத்தின் அடையாளம்
முன்னது முதற்படி
பின்னது மேற்படி
முன்னது குறியீடு
பின்னது பொது.



பொய்வாழ்வு


கடவுளைக் கல்லில் மட்டும் காண்கின்றான்
பாலினைச் செம்பின் மீதே ஊற்றுகின்றான்

மனிதனை புறத்தில் எடைபோடுகிறான்
மனத்தினில் ஒட்டடை அடிக்க மறக்கின்றான்

பயனைக் கருதி சடங்குகள் செய்கிறான்
பணம் அதிகமிருந்தால் உண்டியலில் இடுகிறான்

உறவுகள் அழுதாலும் விலக்கி வைத்துப்
பிறருக்காகச் சம்பிரதாயம் புரிகின்றான்

பயத்தினால் மட்டுமே பக்தியைச் செய்கிறான்
சுயமாக எதையும் நினைக்க மறுக்கிறான்

ஆயுளில் ஆசைவைத்து அபிஷேகம் செய்கிறான்
தேயும் ஏழைக்குலம் திரும்பிப் பார்க்கிலான்

விளம்பரம் விரும்பியே உபயம் செய்கிறான்
வேஷத்திற்காகவே பட்டையும் போடுகிறான்
வேடிக்கை காட்டுதற்குக் காவியும் கட்டுகிறான்

காட்டப்பட்டவைகளிலேயே காலம் கழிக்கிறான்
கட்டி முடிப்பதில் கவனம் செலுத்துகிறான்
முட்டி மோதி அர்ச்சனை செய்கிறான்
முடிவு தேடும் முன்பே முடிந்து போகிறான்.


உதிரிப்பூக்கள்



வானம் அழுது கொண்டிருந்தது
வயிறு எரிகிறது என்பதற்காக
பிள்ளை அழுதது
அடுப்பு எரியவில்லை என்பதற்காகத்
தாயும் அழுதாள்…
குடித்து விட்டுத் தெருவில்
போதை தலைக்கேறி அழுது கொண்டிருந்தான்
குடும்பத்தலைவன் கடிப்பதற்கு
கறித்துண்டு இல்லை என்பதற்காக

சாதிக் கலவரத்தால்
தேர்த்திருவிழா நிறுத்தி வைக்கப்பட்ட
ஊரில் ஆண்டுதோறும்
சமபந்தி விருந்து ஜரூராய் நடந்தது.

வேலையில்லாப் பட்டதாரிகளுக்குத்
தொண்டர் பதவி தந்தார்கள்
சாதிக்கட்சி தலைவர்கள்

தாலி கட்டியதற்காக மனைவியிடம்
தனியாகக் கூலி கேட்டவன்
நாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க
லஞ்சம் கேட்ட நாடாளுமன்ற உறுப்பினன்

கன்னியாய் இருந்த போது
கனவுகளை சுமந்தாள்
மனைவியாக இருந்த போது
பிள்ளைகளைச் சுமந்தாள்
தாயாக இருந்த போது
வேதனைகளைச் சுமந்தாள்
பாட்டியான போதோ
அவளே சுமையானாள்.

தீயை மிதித்தான் கோயிலில்
சாமிவரம் வேண்டி
தாயை மிதித்தான் வீட்டில்
மனைவி வரம் வேண்டி

கடற்கரையோரமாய்
அலைகள் ரசித்தான்
அலைகளோ அவனை ருசித்தது… அடடா
சுனாமி.

ஜனநாயகத்தின் சுதந்தரம்
பணநாயகத்தில் முடிந்தது
நாடாளுமன்றத்தில் கேள்வி
கேட்கவும் லஞ்சம்

ஒருசாண் வயிற்றுக்குள்
உயிரையே சமாதிவைத்தாள்
வெள்ள நிவாரணம் வாங்கப் போனவள்
வெள்ள நிவாரணம் வாங்கப்போன
இடத்தில் சூறாவளி
மிதிபட்டு இறந்தவர்களின்
உறவினர்கள் விட்டப் பெருமூச்சு

ஜாதகம் பார்த்தார்கள் பொருத்தமாயிருந்தது
பெண் பார்த்தார்கள் பிடித்திருந்தது – இருந்தும்
எதிர்பார்த்ததினால் திருமணம் நின்றது.

கனவு இல்லத்தைக்கட்டி முடித்தான்
திறப்புவிழா செய்யப்படும் முன்பே
எழுப்பப்பட்டு விட்டான்.

தேர்தல் பிரச்சாரம் வாக்குறுதிகளால்
சூடு பிடித்ததில்
வாக்காளன் உருகிப் போனான்!


நன்றி . வணக்கம்!

3 comments:

  1. அற்புதம்... கவிதை ஒவ்வொன்றும் பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷங்கள்..!

    ReplyDelete
  2. டாக்டர் அவர்களின் ஆன்மீக சொற்பொழிவை நேரில் கேட்டேன் சில நாட்களுக்கு முன்பு சென்னையில் ! அவரின் பேச்சில் இனிமை தூய்மை என்று நம்மை மெய் மறக்க செய்த ஒன்று! அவரின் எழுத்து நடையிலும் இங்கே பார்க்கிறேன் அதே சுவை நயத்துடன் ! மிக இனிமை இந்த தொகுப்பு !

    ReplyDelete
  3. வள்ளல் நேசன், மருத்துவர் ஐயா அவர்களுக்கு வந்தனம்!

    எல்லாம் வல்ல அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரின் அற்புதக் கருணையால், தங்களைப் பற்றி எனது இளைய சகோதரர்மூலம் தெரிந்துக்கொண்டேன். தாங்கள் மருத்துவராக இருந்துக்கொண்டு வள்ளல் வழி நடப்பவர் என்று மட்டுமே எனக்குத் தங்களைப் பற்றி தெரிந்திருந்தது. ஆனால், தாங்கள் வள்ளல் வழியினை பாடுபவரும்கூட, என எனக்கு தற்போதுதான் தெரியவந்தது. இந்நூலில் உள்ள அனைத்து கவிதைகளும் அருள் நிறைந்துள்ளன. தொடருட்டும் உங்கள் கவிதை நடைகள்.

    எனது இளைய சகோதரர் மயிலாடுதுறையில் ஏ.வி.சி.கல்லூரியில் தாவரவியல் துறையில் பேராசிரியராக பணிபுரிகின்றார். அவரது பெயர் தி.ம.சதீஷ்கண்ணன். அவர் இன்று (13-12-2014) திரு.ஜெயமூர்த்தி என்ற அன்பர் மூலம் தங்களை தொடர்பு கொண்டதை அறிவீர்கள் என நினைக்கின்றேன்.

    வள்ளலாரின் அணுக்கத்தொண்டர் காரணப்பட்டு ச.மு.கந்தசாமிபிள்ளை அவர்கள் இயற்றிய "பிரபந்தத்திரட்டு" என்னும் நூலினை எங்கள் தந்தையார் திரு.அ.திருநாவுக்கரசு அவர்கள் பதிப்பித்துள்ளார்கள். அந்நூல் வருகின்ற மாதப்பூசத்தன்று (06-01-2015) வடலூரில் ஞானசபைக்கு அருகில் உள்ள "கருணீகர் இல்லத்தில்" வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

    வள்ளல் நேசன் என்ற முறையிலும், சன்மார்க்க வழியில் நடைபோடும் சன்மார்க்கி என்ற முறையிலும் தாங்கள் இந்நூலை வெளியிட்டு சிறப்பிக்க நாங்கள் பேரவா கொண்டுள்ளோம். எனவே தாங்கள் இதற்கு இணங்க, திருவருள் கூட்டுவிக்க வேண்டும் என இறைவனை வேண்டுகின்றோம்.

    இது சம்மதமாக திரு.ஜெயமூர்த்தி அவர்களையும் எனது சகோதரரையும் சந்தித்துப் பேச வருகின்ற திங்கள் கிழமை மாலை தாங்கள் நேரம் ஒதுக்கியுள்ளதையும் அறிகின்றேன். இந்நூலுக்கு தங்களிடமிருந்து இரண்டு பக்க அளவில் "அணிந்துரை" யும் வேண்டுகின்றோம்.

    காரணப்பட்டு ச.மு.க. அவர்களைப்பற்றி தெரிந்துக்கொள்ள கீழேஉள்ள இணைப்பை சொடுக்கவும்,

    http://www.vallalarr.blogspot.in/2014/02/blog-post.html
    http://www.vallalarr.blogspot.in/2013/05/blog-post_7440.html

    எனது தொடர்பு எண்: 9445545475
    எனது இளைய சகோதரர் தி.ம.சதீஷ்கண்ணன் தொடர்பு எண்: 8508604471

    நன்றி.

    அருட்பெருஞ்ஜோதி அடிமை
    தி.ம.இராமலிங்கம் - கடலூர்.

    ReplyDelete