வள்ளலாரும் பெரியாரும்
நூல் விவரம்:
நூலின் பெயர்: : வள்ளலாரும் பெரியாரும்
ஆசிரியர்: : மருத்துவர் ஜெய.இராஜமூர்த்தி.,M.B.,B.S.,D.C.H.,
உரிமை: : பதிப்பகத்தாருக்கே
முதல் பதிப்பு : 2008 (2200 பிரதிகள்)
இரண்டாம் பதிப்பு : 2014 (2000 பிரதிகள்)
மொத்த பக்கங்கள் : 172 பக்கங்கள்
மொழி : தமிழ்
விலை : ரூபாய் 120/=
வெளியிடுவோர் : தனஜோதி பதிப்பகம்,
கீழ வீதி, திருவெண்காடு,
சீர்காழி வட்டம், நாகை மாவட்டம்
செல் போன் # 94435 25600
ஒளி அச்சுக் கோப்பு : ரெயின்போ கிராஃபிக்ஸ், சென்னை – 5
அச்சிட்டோர் : வர்ணம் பிரிண்டர்ஸ், சென்னை – 5
“வள்ளல்
நேசன்” மருத்துவர்
ஜெய. இராஜமூர்த்தி,
தலைவர், வள்ளலார் தமிழ் மன்றம்,
திருவெண்காடு, சீர்காழி
வட்டம் – 609 114
நாகப்பட்டிணம் மாவட்டம்,
செல்: 9443525600
என்னுரை
ஆன்ம நேய அன்பர்களே!
அகங்கனிந்த நல்வணக்கம்.
திருவெண்காட்டின் குழந்தை நல மருத்துவரும், அரசு மருத்துவருமான
நான் பெற்றுள்ள நான்காவது புத்தகக் குழந்தை இது.
எனது ஊரில் வள்ளலார் தமிழ் மன்றம் தொடங்கி அதனுடைய தலைவராக இருந்து
கொண்டு பல்வேறு பணிகளுக்கு இடையில் மாதந்தோறும் கூட்டங்கள் நடத்திக் கொண்டு வருகிறேன்.
அதில் பல்துறை வித்தகர்களும், பெரும்பாலும் ஆசிரியர்களும், கல்லூரி பேராசிரியர்களும்
கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர். நாட்டில் நல்ல தமிழ் வளர வேண்டும். அதோடு மூடநம்பிக்கை
ஒழிந்த பரந்த மனப்பான்மை கொண்ட கடவுள் தொண்டு தேவை என்பதையும் கூட்டங்கள் தோறும் வலியுறுத்தி
வருகிறேன். அவ்வப்போது இது போன்ற நூல்களையும் தருவதற்கு தவறுவதில்லை.
தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களுக்குச் சென்று வள்ளலாரின் முற்போக்கு
சிந்தனைகளையும், தந்தை பெரியாரின் சீரிய தொண்டுகளையும், எண்ணங்களையும் பேச்சின் வாயிலாக
வாய்ப்பு கிடைக்கும் இடங்களில் எல்லாம் வழங்கி வருகிறேன். கல்லூரி விழாக்கள், பள்ளி
இலக்கிய மன்ற விழாக்கள் இவைகளில் நான் வள்ளலார்,
பெரியார் பற்றிய கருத்துக் கூறத் தவறியதில்லை.
வள்ளலார் மீதும், பெரியார் மீதும் எனக்குப் பலவருடங்களாகப் பற்று
உண்டு. மனிதன் மனிதனாக வாழ வேண்டும். சாதி, மதங்களின் பெயரால் சண்டையிட்டுக் கொண்டு
சமுதாயத்தில் வேற்றுமை விதைகளை விதைப்பவர்கள் மனம் மாறவேண்டும். நல்ல மனம் கொண்ட மனிதன்
எந்த மதத்தைப் பற்றியும் கவலைப்படத் தேவையில்லை. உலக மக்கள் அனைவரும் அன்பு மதத்தைத்
தழுவி நின்றால் நாடுகளுக்கிடையே போர்கள், மதத்தின் பெயரால் வன்முறைகள், குண்டு வெடிப்புச்
சம்பவங்கள் நடக்குமா?
இன்று நாட்டில் பல மனிதர்கள் தங்களை வளர்த்துக் கொள்ளவே தங்கள்
தெய்வங்களை வளர்க்கிறார்கள். மதவெறியைத் தூண்டுகிறார்கள். குழம்பிய குட்டையில் தன்னல
மீன்பிடிக்கும் அவர்கள் சிந்தனை செம்மையுற வேண்டும். எல்லையில்லா ஒன்றை ஓர் எல்லைக்குள்
அடக்குகின்ற குறுகிய எண்ணம் அழிய வேண்டும். அந்த குறிக்கோளுக்காக வள்ளலாரைப் பற்றியும்
பெரியாரைப் பற்றியும் நான் சொல்ல வேண்டிய கால கட்டம் இது.
இருவரையும் எப்படி ஒப்பீடு செய்யலாம்? இது பொருந்தாத ஒப்பீடு
என்று சிலர் எண்ணலாம். பெரியார் கடவுள் இல்லை என்று சொன்னவர். வள்ளலாரோ அருட்பெருஞ்சோதி
வழிபாட்டை வகுத்துத் தந்தவர். பெரியார் இறக்கும் வரை கோழிப்பிரியாணி உண்டு வாழ்ந்தார். வள்ளலார் புலாலை மறுக்கச் சொன்னார்.
என்னைப் பொறுத்தவரை சுத்த சைவமாக இருப்பவர்கள் அனைவரும் ஆன்மநேயம்
கொண்டவர்கள் என்று சொல்ல முடியாது. சிலர் சாப்பாடு தான் சைவம். அவர்கள் பேச்சில் அசைவம்
அவ்வப்போது வெளிப்படும். செயலிலும் மனிதநேயமற்ற செயல்கள் வெளிவரும்.
சில நேரங்களில் புலால் உண்ணாத சுத்த சைவர்கள் நயவஞ்சகமாகப் பேசி,
நாட்டில் வன்முறையைத் தூண்டுகிறார்கள். அதன் காரணமாக ஆயிரக்கணக்கானோர் மதச்சண்டையில்
மாயக் காரணமாகிறார்கள். புலால் உண்ணும் ஒருவர் அவர் உண்ணும் அந்த ஒரு உயிரின் அழிவுக்குத்
தானும் ஒரு காரணமே தவிர அவர் மட்டும் அதற்கு காரணம் இல்லை. இப்படிச் சொல்வதால் புலால்
உண்பதை நான் நியாயப்படுத்துவதாக நினைக்கக் கூடாது. புலால் மறுத்து வாழ்வதே சாலச்சிறந்தது.
அது உடல்நலம், உள்ள நலம், உயிர்நலம் அனைத்திற்கும் நல்லது என்பதில் ஐயமும் இல்லை.
பிறமனிதர்களை எடுத்தெறிந்து பேசுவார்கள். கோபத்தில் கடுஞ்சொற்களால்
அர்ச்சனை செய்வார்கள். பிறர் துன்பம் கண்டு இன்பமடைவர் சிலர். இவர்கள் உணவில் மட்டும்
சைவமாக இருந்து என்ன பயன்?
உலகத்திலேயே பயங்கரமான ஆயுதம் எது?
“நிலைகெட்டுப்போன நயவஞ்சகரின் நாக்கு தான் அது”
என்ற திரைப்பட பாடலுக்கு ஏற்ப நாக்கையே கொடிய ஆயுதமாகப் பயன்படுத்தும்
சைவப்பிரியர்கள் ஆன்மநேயம் உள்ளவர்களா? மனித நேயம் உள்ளவர்களா? தான் வாழ பிறரைக் கெடுக்கும்
சைவர்கள் மனித நேயம் உள்ளவர்களா? பெரியார் அசைவப்பிரியர் என்றாலும் மனித நேயத்தில்
இமயம். தன்னை விட மிகவும் வயதில் குறைந்தவர்களையும் கூட மரியாதையுடன் அழைக்கும் பண்பு
உள்ளவர். அவருடைய கோபத்தை தூண்டினாலும் எவரையும் நோக்கிச் சுடு சொற்கள் வீசாதவர். அப்படிப்பட்ட
பண்பின் குன்றான பெரியாரை நான் வணங்குகிறேன்.
கடவுளைப் பொறுத்தவரை இறைமை என்பது ஒரு அனுபவம். கடமையை ஒழுங்காகச்
செய்கின்ற, ஓயாத உழைப்புக்கு மதிப்பு தருகின்ற, பிற மனிதர்களுக்கு உதவுகின்ற, நல்ல
மனிதர்களுக்கு கடவுள் இருந்தால் என்ன? இல்லையென்றால் என்ன? மனிதன் தான் பிறந்த நோக்கத்தை
நிறைவேற்ற நேர்வழியில் நடப்பான் எனில் கடவுள் யார் என்று எண்ணிக் கொண்டு ஏன் காலத்தை
கழிக்க வேண்டும்? கடவுள் இல்லை என்றால் அதில் தவறு இல்லை. ஏனென்றால் கடவுளை ஒருவராலும்
காட்ட முடியாது. அதை உணரத்தான் முடியும். கடவுள் உண்டு என்றாலும் தவறில்லை. நாம் பார்க்கின்ற
அனைத்துமே இறைமையின் பிரதிபலிப்புகள்.
கடவுள், மதம், சாதி, புராணம், இதிகாசம் என்று பேசி மதப்பூசல்களை
வளர்ப்பதை விட்டு உழைப்பு, முயற்சி, தியாகம், தொண்டு, அன்பு, பரிவு, இரக்கம் என மானுடம் தழைக்க உதவுவோம். உண்மையில்
கடவுள் என்று ஒருவர் மனிதர் உருவில் இருந்தால் அவருக்கு கூட விருப்பம் நான் சொன்னவாறு
தான் இருக்க முடியும். அப்படி இருந்தால் தான் அவரும் கூட உண்மையான கடவுளாக இருக்க முடியும்.
அந்த சிந்தனைகள் வளரவே இந்த புத்தகம் வெளிவந்துள்ளது.
இந்த புத்தகம் எழுதுதற்கு எனக்கு தந்தை பெரியார் பற்றி பல நூல்கள்
தேவைப்பட்டன. அதற்கு பெருந்துணை புரிந்ததோடு அவ்வபோது நான் எழுதியுள்ளவைகளைத் தட்டச்சு
செய்து தந்த ஆசிரியர் திரு. மோ.கலைச்செல்வன் (இலக்கியா பிரிண்டர்ஸ்) திருவெண்காடு அவர்களுக்கும்,
எழுத்துப் பிழைகளைச் சரிசெய்தும், இந்நூலுக்கு அணிந்துரை வழங்கிப் பெருமை சேர்த்துள்ள
பூம்புகார்க் கல்லூரியில் ஒய்வுபெற்ற தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் திரு. த. தியாகராஜன்
அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். என்னுடைய இந்த முயற்சிக்கு துணைபுரிந்த, என்
ஆன்மிக தேடல்களுக்கு தடை ஏதும் போடாது, என் சிந்தனைகளுக்கு சிறை ஏதும் இடாது என் உணர்வுகளுக்கு
மதிப்பளித்து ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் என் அன்பு மனைவி திருமதி. ஹேமலதா இராஜமூர்த்தி அவர்களுக்கும்
நான் நன்றிகளை உரித்தாக்குகிறேன். எனது செயல்பாடுகளுக்கு உறுதுணை புரியும் திருவெண்காடு வள்ளலார்
மன்ற நிர்வாகிகள், உறுப்பினர்கள் அனைவரையும் நெஞ்சில் நிறுத்தக் கடமைப்
பட்டுள்ளேன்.
அன்புருவாம் பரசிவமே!
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு!...
இப்படிக்கு
மருத்துவர். ஜெய.இராஜமூர்த்தி
***************************************
பேராசிரியர், முனைவர் த.தியாகராஜன்
தமிழ்த்துறை தலைவர் – பூம்புகார்க் கல்லூரி
மேலையூர் – 609 107
அணிந்துரை
தெய்வநலம் திகழும் திருவெண்காட்டின், குழந்தை நல மருத்துவர்
திருவாளர் வள்ளல்நேசன்
ஜெய.இராஜமூர்த்தி அவர்களின் நான்காவது புத்தகக் குழந்தைதான் இந்த நல்ல நூல்.
முன்னைய தனது நூல்களில் ஒரு இராஜமுத்திரை பதித்திருப்பது போலவே இந்த நூலிலும் அவருக்கே
உரிய முத்திரை பதித்துள்ளார். மானுடம் தழைக்க உதவும் ஒரு ஆன்மநேய முத்திரை தான் அது.
பெரியாரும் – வள்ளலாரும் இருவெறு துருவங்கள். பெரியார் கடவுள் இல்லவே இல்லை என்று ஆர்ப்பரித்தவர்.
வள்ளலார் மதம்,சாதி, சமயம், சடங்குகள், ஆசாரங்கள், இதிகாசங்கள், புராணங்கள் என்று ஒவ்வொன்றையும்
விமர்சித்து ஒவ்வொன்றையும் துறந்த மதம் கடந்த அருளாளர், ஆன்மநேயத்தின் உயிர்ப்பைத்
தமது அருட்பாவின் அடிநாதமாக்கியவர்.
“இந்த இருவரையும் எப்படி ஒப்பீடு செய்யலாம்? இது பொருந்தாத ஒப்பீடு
என்று சிலர் எண்ணலாம்.” என்று தனதுரையில் இராஜமூர்த்தி அவர்கள் எழுதியிருப்பினும்,
ஓர் அரிய ஒப்பீட்டு நூலை வள்ளலாரியத்திலும் பெரியாரியத்திலும் தீவிரமாக ஆய்ந்து வழங்கியுள்ளார்.
1.அறிமுகம், 2. சாதி, மதம், சமயம் 3. கடவுள், 4. வேதம், புராணம், இதிகாசம்
5.சன்மார்க்கம் வென்றது 6. வள்ளலாருக்குப் பின் சன்மார்க்கம் எனும்
ஆறு நிலைகளில் வள்ளலாரையும், பெரியாரையும் ஒப்புநோக்கி உள்ளது இந்த நூல். வள்ளலாரியம்
குறித்த ஒப்பிலக்கியப் பார்வையில் வெளிவந்துள்ள நூல்களில் இது குறிப்பிடத்தக்க சிறந்த
நூல்.
தமிழக ஞானிகளில் வள்ளலாரைப் பற்றி – அவரது தனித்தன்மையைப் பற்றி
முதன் முதலில் வெளிப்படுத்தியவர் மகாகவி பாரதிதாசன். பொய் ஞான மத குரவர்களை வணங்கி
அறியாதவன் ஆதலின், வள்ளலாரைப் பற்றி அவனது மதிப்பீடு மிகச் சரியானதாக அமைந்துவிடுகிறது.
“உலகில் உள்ள மத பேதங்களை எல்லாம் வேருடன் களைந்து சர்வ சமய
சமரசக் கொள்கையை நிலைநாட்ட வேண்டுமானால் அதற்குத் தமிழ்நாடே சரியான களம். உலக முழுவதும்
மத விரோதங்கள் இல்லாமல் ஒரே தெய்வத்தை தொழுது உஜ்ஜீவிக்கும்படி செய்யவல்ல மகான்கள்
இப்போது தமிழ்நாட்டில் தோன்றியிருக்கிறார்கள். அதுபற்றியே பூமண்டலத்தில் புதிய விழிப்பு
தமிழகத்தே தொடங்கும் என்கிறோம். எம்மதமும் சம்மதம் என்றார் ராமலிங்க சுவாமி – பாரதி
பூமண்டலத்தில் விழிப்புக்குத் தமிழ்நாடு கண்விழித்துள்ளது. இந்தப்புதிய
ஆன்மிய வழிப்புக்கு இராமலிங்க சுவாமிகளின் தோற்றத்தை அடையாளம் காட்டுகிறான் பாரதி.
புதிய சமூக விழிப்புக்கு குரல் கொடுக்கிறவனே சிறந்த ஞானி. இந்த வகையில் மதமான பேய்
பிடியாதிருக்கக் குரல் கொடுத்த முதல் ஞானியும் வள்ளலாரே! அவரைப் பின் தொடர்ந்தே பல
ஆண்டுகட்குப் பிறகு நீதிக்கட்சி அதன்பின் சுயமரியாதை இயக்கம். பின் இவை இரண்டும் கலந்த
திராவிடக்கழகம். இவையாவும் புதிய சாதிகள் அற்ற சமுதாய விழிப்புக்கும் புதிய சமூக மறுமலர்ச்சிக்கும்
குரல் கொடுக்கின்றன. 19 ஆம் நூற்றாண்டில் வள்ளலார் தொடங்கிவைத்த புரட்சிக்குரல் 20
ஆம் நூற்றாண்டில் திராவிட இயக்க வரலாற்றில் போர்க்குரலாக மாறுகிறது. ஆத்திகத்துக்கு
அடிகொடுத்தார் வைதீகத்துக்கு வேட்டுவைத்தார் வள்ளலார் என்றால் – தந்தை பெரியார் பகுத்தறிவியக்கப்
பகலவனாய் மாறி வள்ளலாரைத் தொடர்ந்த ஒரு சமூக விழிப்பிற்கான மார்ஷல் ஆகிக் தளபதி ஆகித்
தமிழக சமூக அசைவியக்கத்துக்கே நாத்திகவழியில் களம் காண்கிறார். தேசிய விடுதலைக்குச்
சிப்பாய்கலகம் (1857 இல்) காரணம் ஆனது போல் பெரியாரின் பகுத்தறிவுப் புரட்சிக்கு வள்ளலாரின்
குரல். அது சன்மார்க்க வடிவில் திகழ்ந்த கலகக் குரலாக இருந்தாலும் பெரியாரிடம் திராவிடன்
குரலாக ஒலித்திருப்பதை உணர வேண்டும். மதப்பித்தர்கட்கு இதனால் அருட்பா மருட்பாவாகத்
தோன்றியபோது சுயமரியாதைச் சூரியன் பெரியாருக்கு அருட்பா நேசத்துக்குரியதானது. செழுமை
விரும்பிய சீர்திருத்தக்குரல்கள் தமிழ்நாட்டின் சமூக விழிப்புக்குக் குரல் கொடுப்பதில்
ஒன்று கலந்தன. பெரியாரியத்தில் சன்மார்க்கக் சங்கமம் வேகம் கொண்டுத்தாண்ட விதம் இந்த
நிலையில்தான்.
கடவுளைப் புரிந்து கொள்வதில் தடுமாறுகிற மதவாதிகள்போல் வள்ளலாரின்
சுத்த சன்மார்க்கத்தையும் தமது திரிபு விளக்கங்களால் தடுமாற வைக்கிறவர்கள் இங்கு இல்லாமல்
இல்லை. திருமூலர் – தாயுமானவர்-சித்தாந்திகள் எல்லோரும் கூறிய சன்மார்க்கம் வள்ளலாரிடம்
புதிய பரிணாமம் பெற்றது. சைவ வட்டத்திலும் சித்தாந்த வட்டத்துக்குள்ளும் சுற்றி வந்த
சன்மார்க்கத்துக்கு விடுதலை தந்து – மதம் கடந்த சன்மார்க்கத்தை ஆன்மநேய ஒருமைப்பாட்டுக்கு
– உலகின் உயிர்க்குல ஒருமைப்பாட்டுக்கு எத்துணையும் பேதமுறாமல் – கண்டார் வள்ளலார்.
ஒத்துப்போனால் மானுடம் சிரிப்புக்கு இடமாகும் என்று சாகாத மானுடத்திற்கான சாத்திரமாய்ச்
சுத்த சன்மார்க்கத்தைக் கண்டுபிடித்தார் வள்ளலார். 19 ஆம் நூற்றாண்டின் சுபானு ஆண்டு
(1823) சுத்த சன்மார்க்கம் அவதரித்த ஆண்டாகும்.
வாழையடி வாழை என ஆயிரக்கணக்கான ஆண்டுகளாய் வைதீகத்துக்குள்ளும்,
சித்தாந்த சிந்தனைகட்குள்ளும் மூச்சுத் திணறிய சன்மார்க்கத்துக்குச் சுபானு ஆண்டு விடுதலை
தந்தது. ஈரோட்டு பகலவனின் “விடுதலை” இதழ்களுக்குள் அடுத்த 20 ஆம் நூற்றாண்டில் சமூகப்
பொருளியல் அசைவியக்க நுட்பத்தோடு சுத்த சன்மார்க்கம் ஒரு சுனாமியாய்ப் புரண்டு தமிழகத்தை
உலுக்கியது. ஒரு சிறந்த சமூகத்துக்குள் சாதி, மத, இன வேறுபாடுகள் முற்றிலுமாகத் தொலைந்துபோக
வேண்டிய கட்டாயத்தில் ஒன்றே குலம் – ஒருவனே தேவன் – எனும் கோட்பாட்டுக்கு மனிதனை முதன்மைப்படுத்திய
பகுத்தறிவுக் குரலுக்கு சுத்த சன்மார்க்கம் அடிநாதமானதில் வள்ளலார் – பெரியார் பற்றிய
வரலாறுகள் – இவர்களோடு தென்னகத்தின் வரலாறுகள் யாவும் பின்னிக்கிடப்பதைத் திரு. இராஜமூர்த்தி
அவர்களின் இந்நூல் காட்ட முயன்றிருப்பது – இந்நூலுக்கான சிறப்பாகும்.
வள்ளலாரின் தனித்துவத்தையும், பெரியாரின் தனித்துவத்தையும் அவர்கள்
சார்ந்த வரலாறுகளோடு தனித்தனியாகவும் இணைந்து நோக்கியும் இந்நூல் மதிப்பீடு செய்திருக்கிறது.
கலையுரைத்த கற்பனைகள் – கண்மூடி வழக்கங்கள், மதங்கள் இதிகாச புராணங்கள் எல்லாம் ஏற்படுத்திய
– அத்துணையும் மண்மூடிப் போகப் பாடிய வள்ளலாரையும், கடவுளின் பெயரால் மானுடத்தைச் சமூகத்தை
நசுக்கிய அத்துணைக் கேடுகளையும் ஒழிப்பதற்குப் போராடிய பெரியாரையும் வேண்டிய தாவுகளைத்தந்து
– ஒப்பு நோக்கியுள்ளார் திரு. இராஜமூர்த்தி… மானுடத்தின் தன்மானத்தையும், சுயமரியாதையையும்
மீட்டுத்தருவதில் கடுமையாகப் போராடிய தன்மானப் போராளி – தந்தை பெரியார் 1929களில் சாதித்த
நிகழ்வுகளை இந்நூல் ஒவ்வொறு நிகழ்வாய்ச் சுட்டியுள்ளது. தீண்டாமைக் கொடுமை தீர நடத்திய
ஆலயப்பிரவேசம், பால்யவிவாகத்தடை, சுயமரியாதைத் திருமணங்கள், விதவை மறுமணம் பெண்களுக்கான
சம உரிமைச் சொத்துகள் என்று பெரியார் வாழுங்காலம் வரை நடத்திய அத்துணைச் சீர்திருத்தங்களிலும்.
ஒன்றுபட்ட மானுடத்துக்கான அறைகூவல்கள் நிகழ்ந்ததனை இந்நூல் தெளிவாக அங்கங்கேயும் திரைவிலக்கிக்
காட்டியுள்ளது. இதற்குள் மனித குலத்துக்கான ஜோதிதரிசனம் அங்கங்கேயும் தெரியும்.
“இராமலிங்கசாமி என்று சொல்லப்பட்ட
பெரியார்” என்று தந்தை பெரியாரே வள்ளலாரைப் பெரியார் என்று
அழைப்பார். சாதியும், சமயமும், மதமும் தவிர்த்தல், சாத்திரக்குப்பைகளை ஒழித்ததில் ஈ.வெ.ரா பெரியார் என்று
சொல்லப்படும் வள்ளலாரையும் சிறப்பாக நாம் காணவேண்டுமே! தயவும், கருணையும்,
சுத்த அறிவும் வள்ளலாருக்குக் கடவுளாவதைப்போலவே, பெரியாரும் தயை, சத்தியத்துக்குள்
கடவுளைக் காணுகிறார். ராஜமூர்த்தி கண்டு காட்டும் இரு பெரியார் தரிசனங்களும் பக்கத்துக்கு
பக்கம் இந்நூலில் காணப்படும்! ஜீவகாருண்யத்தையும், ஒழுக்கத்தையும், சமூக ஒருமைப்பாட்டையும்
உயர்ந்தாரும், தாழ்ந்தாரும் அற்ற ஒருசமயத்தையும் பெரியார் “திராவிட சமயம்” என்று சுட்டலாம்
என்றும், இதில் சிரமம் இருந்தால் சமரச சமயம் அல்லது ஜீவகாருண்ய சமயம் என்றும் கூறிக்கொள்ளலாம் என்றும்
வலியுறுத்துகிற, தந்தை பெரியாரின் பகுத்தறிவுத் தரிசனத்தை இந்நூல்களுக்குள் ராஜமூர்த்தி
காண்பிக்கிறார்.
ஓர் உண்மையான கடவுளை நினைப்பதற்கு ஒர் உண்மையான மானுடன் தேவைப்பட்டான்
வள்ளலாருக்கு. சுத்த சன்மார்க்கம் இதனால் மானுடம் தழுவியதாகிவிடுகிறது. அகத்தே கறுத்துப்
புறத்தே வெளுத்திருந்தவரைச் சகத்தே திருத்திய போராளி வள்ளலார். இதற்காக அவர் கண்டது
ஒரு புதிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுலகம். பெரியாருக்கோ “கடவுளை மற! மனிதனை நினை!” என்பது
உரத்த முழக்கமானது. பாவேந்தர் பெரியார் கண்ட உலகைப் “புதியதோர் உலகம் செய்வொம்!கெட்ட
போரிடும் உலகை வேரோடும் சய்ப்போம்” என்னும் ஒப்பற்ற மொழிகளால் வெளிப்படுத்துவார். ஆக
இரு பெரியார்களிடமும் மானுடம் வெல்கிறது! “எங்கெங்கு காணினும் மானுடமடா! என்பதில் வடலூர்ப்
பெரியாரும், ஈரோட்டு இராமலிங்கரும் ஒன்றாகிறார்கள். வள்ளலார் கண்ட சுத்த சன்மார்க்கத்தின்
நீட்சி சுயமரியாதைப் பேராறாக ஈரோட்டாரிடம் ஓடிவருகிறது. ஓர் ஆன்மீகவாதி வள்ளலாரின்
சுத்த சன்மார்க்கத்தைப் புரிந்து கொண்டதைவிட, ஒரு பகுத்தறிவுவாதி சுத்த சன்மார்க்கத்தின்
முழுவீச்சையும் கண்டு, தெளிந்த வரலாறுகள் இந்த நூலில் ஒலித்துக் கொண்டுள்ளன.
வள்ளல்நேசம் திரு.ஜெய.இராஜமூர்த்தி அவர்கள் வடலூரை அடிக்கடி
வெண்காட்டுக்கு அழைத்து வந்து காட்டுவதோடு, ஈரோட்டையும் நமது இதயத்துக்குள் கொண்டுவந்து
காட்டி விடுகிறார். சுத்தமான ஓர் ஆன்மிய இலக்கியத்தையும், சுத்தமான ஒரு திராவிட இலக்கியத்தையும்
இணைத்துக் கண்டசிறந்த ஓர் ஒப்புநோக்கு நூல் என்றால் இது புகழ்ச்சி இல்லை. சன்மார்க்கமும்
திராவிடமும் கைகுலுக்கி மகிழும் இந்த நூலைப்படித்து உணர்ந்து கொண்டதில் எல்லையற்ற மகிழ்ச்சி
அடைகிறேன். வள்ளல்நேசன் மருத்துவர் ஜெய.இராஜமூர்த்தி அவர்கள் இத்தகைய அற்புதமான நூல்களைத்
தொடர்ந்து தமிழகத்துக்கு தரவேண்டும். ஏனெனில் அவர்க்கும் வள்ளலாருக்கும் இசைந்த பொருத்தங்கள்
அப்படி!
-
பேராசிரியர் முனைவர் த. தியாகராசன்
உள்ளே……
அத்யாயங்கள்…..
1. அறிமுகம்
2. சாதி,மதம், சமயம்
3. கடவுள்
4. வேதம்,புராணம்,இதிகாசம்
5. சன்மார்க்கம் வென்றது
6. சன்மார்க்கம் தழைக்கட்டும்
*******************
அறிமுகம்
அத்யாயம் # 1
உலக சகோதரத்துவம்,
ஆன்மநேய ஒருமைப்பாடு இவற்றை அனைத்து மக்களிடமும் கொண்டுவர மண்ணில் அவதரித்தவர் வள்ளலார்.
1823 ஆம் ஆண்டு அக்டோபர் 5ம் நாள் தமிழ்நாட்டிலே சிதம்பரத்துக்கு அருகாமையில் மருதூர்
என்னும் சிற்றூரிலே ஒரு சாதாரணக் குடும்பத்திலே இந்தச் சன்மார்க்கச் சூரியன் தோன்றியது.
இராமையாப்பிள்ளை
சின்னம்மை தம்பதிகட்கு ஐந்தாவது மகனாக உதித்தவர் இந்த இராமலிங்கம் என்ற உயர்ந்த சிந்தனையாளர்.
கிராமக்கணக்கரான இவரது தந்தையார் இராமலிங்கம் சிறுவனாக இருக்கும் போதே இயற்கை எய்தினார். அதனால் இவரது குடும்பம் ஏழ்மை நிலைக்கு வந்த சூழ்நிலை
உண்டாயிற்று.
தமிழ் கற்றுக்
கொடுத்து தன் பிள்ளைகளை தரணியில் தலைதூக்கச் செய்யலாம் என நினைத்த தாயார் தன் மகன்
இராமலிங்கத்தை அவரது அண்ணன் சபாபதி பிள்ளையிடமிருந்து கல்வி கற்ற ஏற்பாடு செய்தார்.
காஞ்சிபுரம் சபாபதி முதலியார் என்பவரிடம் சில நாட்கள் இராமலிங்கம் கல்வி கற்றதாக வரலாறு
கூறுகின்றது. இவர் காலத்தில் பள்ளிகள் இருந்தன. குருகுலக் கல்விக் கூடங்கள் இருந்தன.
ஆனாலும் இவர் இவைகளில் சேர்ந்து முழுமனதோடு பயிலவில்லை. பள்ளியில் சென்று கற்ற அறிவை
விட இவருக்கு பட்டறிவாய் துளிர்விட்டது எனலாம். தனது அறிவினை நடைமுறை சிந்தனையோடு செலுத்தியவராய்
கோயில்களிலும் குளத்துக் கரையோரங்களிலும் தனிமையில் இனிமை கண்டவராய் இளம் வயதிலேயே
காணப்பட்டது நன்றாக தெரிகிறது.
பள்ளிக் கல்வியில்
நாட்டமில்லாத இராமலிங்கம் கேள்வியறிவில் சிறந்து விளங்கியவராகச் சிறுவயதிலேயே இலக்கணத்
தரம் வாய்ந்த பாடல்கள் புனையும் ஆற்றலையும் பெற்றிருந்தார்.
கல்வியறிவிலே நாட்டம்
கொள்ள வேண்டியவர் ஏட்டுக் கல்வியில் ஈடுபாடு கொள்ளாது ஆன்மீக சிந்தனையில் ஈடுபட்டவராய்
இளம்பிராயத்திலேயே கடவுள், ஆன்மா, அத்வைதம், சைவ சித்தாந்தம், சித்தர்கள் கொள்கை இவைகளில்
சிந்தனை செலுத்தியமை இவரது இளம் வயதுப் பாடல்களில் இருந்து புலப்படுகிறது.
இறைக் கொள்கையை
பொறுத்தவரை முதலில் முருகன் வழிபாடு தொடங்கி, திருவொற்றியூர் தியாகராஜர், திருமுல்லைவாயில்
மாசிலாமணி, வடிவுடை மாணிக்கம்மை எனப்போய் பின்னர் விநாயகர் தோத்திரம் உட்பட இராமனுக்கும்
பாடல்கள் செய்துள்ளார். சிதம்பரம் நடராஜர் மீது பற்று கொண்டவராக பலநூறு பாடல்கள் பாடி
பின்னர் இறுதி நாட்களில் இந்த உருவ வழிபாடுகளில் இருந்து விலகினார். பின்பு அகில உலக
மக்கள் அனைவரும் சாதி, மதம், சமயம், மொழி கடந்து வழிபடும் கடவுளாக அருட்பெருஞ்சோதி
ஆண்டவரை ஒளி உருவில் வழிபட்டதும், பிறரை வழிபடத் தூண்டியதும்தெரிகிறது. அருட்பெருஞ்சோதி
ஆண்டவருக்கு இவர் தரும் விளக்கம் மற்றும் பின்னாளில் இறைவன் மீது இவர் பாடிய பாட்டுகளைக்
கொண்டு எதை இறைமையாக இவர் காட்டுகிறார் எனப்பின்னர் பார்ப்போம்.
கடவுள் ஒன்றே என்பதும்
அதுவே அருட்பெருஞ்சோதி என்றும் அதனை ஒளி உருவில் ஒவ்வொறுவரும் அன்பின் மேலீட்டால் புருவமத்தியிலும்,
உள்ளத்திலும் காணவேண்டும் என்பதும் இவரது முடிவான கொள்கை. இந்த உண்மையான எளிய வழிபாடே
ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமைக்கு உகந்தது என்கிறார்.
இந்த ஆன்மநேயத்துக்குத்
தடையாக இருப்பவைகளான சாதி, மதம், சமயம், குலம், கோத்திரம் முதலியவற்றை அறவே விட்டொழிக்க
வேண்டும். அதோடு மட்டுமின்றி, சாதி, சமயம்,
மதங்களைப் பொய் என்றும் மதத்தை பேய் என்றும் வருணம், ஆச்சிரமம், ஆச்சாரம் முதலியவைகளை
எல்லாம் பிள்ளை விளையாட்டு எனவும், உலக மக்கள்
மத்தியில் ஒற்றுமை உணர்வை விதைக்காத உருவவழிபாடுகள், அவைகள் காட்டும் பல்லாயிரக்கணக்கான
உருவங்கள், அவைகள் மீது கட்டப்பட்டுள்ள கட்டுக்கதைகளையும் பிள்ளை விளையாட்டு என 19ம்
நூற்றாண்டில் இவர் கண்டிக்கிறார். ஒற்றுமை உணர்வுக்கும், உண்மைக்கும் புறம்பான வேதங்கள்,
புராணங்கள், இதிகாசங்கள் முதலியவைகள் மீது லட்சியம் வைக்கத் தேவையில்லை என்கிறார்.
இவைகளால் ஒரு பயனும் இல்லை என்றும் இவைகள் சூதாகச் சில்வற்றைச் சொல்ல வந்த பொய் புனைந்துரைகள்
எனவும் வள்ளலார் மிகவும் துணிந்து சனாதனக் கொள்கையின் வேரில் வென்னீர் ஊற்றுகிறார்.
அதன் அடிவேரை இன்றைக்கு நூற்று நாற்பது வருடங்களுக்கு முன்பு அசைத்துப் பிடுங்க முயன்றுள்ளார்.
கலையுரைத்த கற்பனையே நிலைஎனக்
கொண்டாடும்
கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப்
போக… (3768)
என்று கண்மூடித்தனமாக
மூடநம்பிக்கைகளை இந்த கருணையின் உருவம் கண்டித்துப் பேசுகிறது.
தெய்வத்தை வழிபடுவதற்கு
இடைத்தரகர்கள் தேவையில்லை என்கிறார். அந்த தெய்வத்தை வழிபட அதிகம் செலவழித்துப் பூஜைகள்,
சடங்குகள், சம்பிரதாயங்கள் முதலான மொட்டையடித்தல், காதுகுத்துதல், காவடி எடுத்தல்,
தீ மிதித்தல், தேர் இழுத்தல், போன்ற பக்குவமற்ற, பகுத்தறிவு சிந்தனை அற்ற, நாகரீகமற்ற
செயல்களையும் வள்ளலார் தேவையில்லை என்று துணிந்து சொல்கிறார்.
செத்தவர்களுக்கு
செய்யும் பித்ரு காரியங்களான கருமாதி, திதி முதலிய சடங்குகளைக் கூட வீணாகப் பயனின்றிச்
செய்யாமல் அந்த நாளில் அவர்களை (இறந்தவர்களை) நினைத்து ஏழைகளுக்கும், பசித்தவர்களுக்கும்
அன்னதானம் செய்ய வலியுறுத்துகிறார். ஜீவகாருண்யம் என அழைக்கப்படும் உயிர்நேயம் அதாவது
மனிதர் உட்பட உயிர் உள்ள அனைத்து உயிர்களிடமும் காட்டும் அன்பே உண்மைக் கடவுளை அடைய
வழி என்கிறார். எப்போதும் எல்லா உயிர்களிடத்தும் அன்பையும், கருணையும் பொழிந்து கொண்டு
தனிப்பெருங்கருணையராக விளங்கின் அவரே அருட்பெருஞ்சோதி இறைவராவார். இதனைக் கடவுள் நிலையறிந்து
அம்மயமாதல் என்று வள்ளலார் அழைக்கின்றார். இந்தத் தத்துவச் சிந்தனை நாத்திகர் உட்பட
உலகமக்கள் அனைவரும் ஏற்கும் மூடநம்பிக்கைக்கு இடமில்லாத உயர்ந்த கொள்கையாகும்.
தன்னுடைய வாழ்நாளில்
வள்ளலார் சத்விசாரம் என்று சொல்லப்படும் உண்மையை ஆராய்ந்து அறிதல், பரோபகாரம் என்று
அழைக்கப்படும் பிறர்க்கு உதவி செய்தல் இந்த இரண்டையும் இரண்டு கண்களாக வைத்துக் கடவுளைக்
காண அறிவுறுத்துகின்றார்.
ஒரு தத்துவவாதியாக,
ஆன்மிக விடிவெள்ளியாக, சமய ஆராய்ச்சியாளராக, சமஸ்கிருத பண்டிதராக, தமிழறிஞராக, உரைநடை
ஆசிரியராக, கவிஞராக, புலவராக, அருளைப் பொழியும் தனிபெருங்கருணையாளராக, ஓர் இறைக்கொள்கையினை
வலியுறுத்தி அந்த இறைமையையும் உள்ளொளொயாகக் காணச் சொன்ன உண்மை துறவியாக விளங்கினார்.
எளிமை, அடக்கம், பணிவு கொண்டு, ஆணவம் நீக்கி அன்பைத் தேக்கி நடமாடிய சிந்தனையாளராக,
சீர்திருத்தவாதியாக அறியாமை இருளில் சிக்கித்தவித்த சமுதாயத்தை அறிவுச்சுடர் ஏந்தி
நன்னெறிப்பாதை காட்டிய நடமாடும் தெய்வமாக வாழ்ந்தவரே திருவருட்பிரகாச வள்ளலார்.
மேற்கூறிய பன்முக
ஆற்றல் வாய்ந்தவராக விளங்கியதோடு மிகப்பெரிய சாதனையாளராகவும் திகழ்ந்தமை அவர்கண்ட சங்கம்,சாலை,
சபை ஆகியவற்றின் வாயிலாக விளங்கும், தன்னுடைய மார்க்கத்தை உலகெங்கிலும் பரப்புவதற்காக
1865 ஆம் ஆண்டில் சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் கண்டவர். பரோபகாரம் என்றழைக்கப்படும்
பிறர்க்கு உதவும் பண்பையும், பிறர்க்கு பசியாற்றும் கடவுள் தொண்டையும் செய்தற்கு ஒரு
சத்திய தருமச்சாலையினை 1867 ஆம் ஆண்டில் வடலூரில் ஏற்படுத்தியவர். ஒளிவழிபாட்டை யாவரும்
சகோதரத்துவத்துடன், ஒருமைப்பாட்டு உணர்வுடன் மேற்கொள்ள வடலூரில் 80 காணி நிலத்தில்
பல்லாயிரக்கணக்கானோர் சென்று நின்று வழிபடும் வகையில் ஒரு சமரச சுத்த சன்மார்க்க சத்திய
ஞான சபை என்னும் ஒரு சபையினைக் கட்டி அதில் அருட்பெருஞ்சோதியினை ஏற்றி வைத்தவர். அதன்
மூலம் அன்பையும், அறிவையும் மக்கள் சிந்தனைகளில் ஏற்றிவைக்கத் துடித்தவர்.
காமம், வெறி, கோபம்,
மோகம், மதம், மாற்சரியம், கொலை முதலான எழுவகை கூடாப் பண்புகளான, மன மாசுகளை ஒவ்வொன்றாக
அகற்றினால் உள்ளத்தில் அருட்பெருஞ்சோதி அனுபவத்தில் புலப்படும் என்கிறார். அதையே புறத்தில்
ஏழுதிரைகளாகக் காட்டி அவற்றை ஒவ்வொன்றாக நீக்கி இறுதியில் அருட்பெருஞ்சோதிக் கடவுளைச் சபையில் காட்டினார்.
இந்த ஏழுதிரைகளை நீக்கி ஜோதி காட்டும் ஜோதி தரிசனத்துக்கு இன்னும் ஆன்மீகரீதியாக நிறைய
விளக்கங்கள் சொல்லலாம். தன்னுடைய மார்க்கத்துக்கென்று ஒரு கொடியினையும், மந்திரத்தையும்
தந்தவர் அவர்.
அருள் இலக்கியமான
அருட்பாக்களைப் பாடித் தமிழ்கூறும் நல்லுலகிற்கு அருந்தொண்டாற்றியவர். தனது அனுபவங்களை
ஆயிரம் பாடல்களாக ஆறு திருமுறைகளாக்கிக் கொடுத்தவர். இது மகேசன் இலக்கியமாக மட்டும்
இல்லாமல் ஒரு மக்கள் இலக்கியமாகவும், இந்திரிய ஒழுக்கம்(ஐம்பொறி ஒழுக்கம்), கரண ஒழுக்கம்(மனத்தூய்மை)
என்கிற தனிமனித மேம்பாட்டுக்கான இரண்டு ஒழுக்கங்கள், ஜீவ ஒழுக்கம் என்னும் மனித சமுதாய
மேம்பாட்டிற்கான ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்னும் உயிர்க்குல நேயத்திற்கான ஒழுக்கம்
என நான்கு வகையான ஒழுக்கத்தை வலியுறுத்தும் இலக்கியமாகும். சரியை, கிரியை, யோகம், ஞானம்,
எனத் தொடக்கப் பக்தி நிலையில் இருந்து இறுதிநிலையான ஞானநிலைக்கு உயர்த்தும் இலக்கியமாகவும்,
பக்தியோகம், கர்மயோகம், ராஜயோகம், ஞானயோகம் எனப்படும் சற்புத்திரமார்க்கம், தாசமார்க்கம்,
சகமார்க்கம், சன்மார்க்கம் என்பவற்றை உணர்த்தி அதையும் தாண்டிய சமய, மதம் கடந்த சுத்தசன்மார்க்கம்
என்னும் வாழ்வியல் தத்துவத்தை வகையறுத்துக் காட்டும் இலக்கியமாகவும் உள்ளது.
பாடல்கள் எழுதும்
ஆற்றல் கொண்ட இலக்கண வல்லவரான வள்ளலார் உரைநடைகளிலும், தனது உபதேசங்களிலும் தனிமுத்திரையினைப்
பதித்து நிற்பவர். இவர் சிறந்த உரைநடையாசிரியர் என்பதற்கு இவர் படைத்துள்ள மனுமுறை
கண்டவாசகம் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்னும் இரண்டு நூல்களே தக்க சான்றாகும். இவர் சிறந்த
பேச்சாளராக இருந்திருக்க வேண்டும் என்பது இவர் தம் மாணாக்கர் மற்றும் மக்களுக்கு வழங்கியுள்ள
உபதேசங்களில் இருந்தும், வியாக்யானங்கள், பிரசங்கங்களில் இருந்தும் புலனாகின்றன.
இறைவம் மீது காட்டும்
பக்தி என்பது உயிர்க்குலத்திற்கு செய்யும் தொண்டே என்று மடைமாற்றம் செய்த பகுத்தறிவு
ஆன்மீகவாதி வள்ளலார். பக்தி இருந்தால் மட்டும் போதாது. சமுதாய இருள் நீக்க வேண்டும்.
அறியாமை இருட்டு அகல வேண்டும் என உணர்ந்து சமுதாயத்தில் சீர்திருத்தம் காணவிழைந்த முற்போக்கான
எண்ணங்கள் கொண்டவர். சீர்திருத்தங்களைப் பேசியவர் செயலில் இறங்கி அருந்தொண்டுகள் பலவற்றைச்
சமுதாயத்திற்கும், உயிர்க்குலத்திற்கும் புரிந்த தொண்டுள்ளம் படைத்தவராகவும் விளங்கினார்.
தன்னுடைய முற்போக்கு
எண்ணங்களால் சமுதாயத்தில் சிலரால், சனாதனத்தைப் போற்றிய பழமைவாதிகளால், வருணாசிரமம்
காக்க விழைந்த சில சுயநலக் கும்பலால் தூற்றப்பட்டவர். உருவ வணக்கத்தை எதிர்த்தாலும்,
சாதி, சமயச் சடங்குகளைப் புறந்தள்ளச் சொன்னதாலும் தனது சொந்த இனத்தின் எதிர்ப்பையே
பெற்றவர் என்கிறார் ம.பொ.சிவஞானம், தன்னுடைய “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” என்னும் நூலில்.
இவரது அருட்பாக்கள் அனைவராலும் பாடப்பெற்ற போதும், அந்த பாக்கள் இறைவன் சந்நிதிகளில்
ஒலித்த போதும் சிலர் அழுக்காறும், ஆத்திரமும் கொண்டு அவைகளை மருட்பாக்கள் எனத் தூற்றினர்.
அருட்பாவில் புரட்சிக்
கருத்துக்கள் புறப்பட்டு வந்ததால் பொறுக்க முடியாத சமயவாதிகள், சமயத்தை வைத்து வயிறு
வளர்க்கும் கூட்டத்தினர், மக்களை எப்பொழுதும் குழப்பக் குட்டையிலேயே ஆழ்த்தி அதன் பயனாய்ச்
சுகம் காணும் சோம்பேறிகள், மதவியாபாரிகள், வள்ளலாருக்கு எதிராக கண்டனக் குரல்கள் எழுப்பியதோடு
இராமலிங்கர் பாடிய பாடல்களின் தொகுப்புகள் அருட்பாக்கள் ஆகா எனக் கூக்குரலிட்டு நீதிமன்றத்திற்கும்
சென்றனர். ஆனாலும் நீதிமன்றத் தீர்ப்பு வள்ளலாருக்குச் சாதகமாகவே அமைந்துள்ளது. அருளியல்
உலகில் இவரது சீர்திருத்தங்கள் இன்றைய காலக்கட்டத்திற்கு மட்டுமல்லாமல் என்றென்றும் ஏற்புடையன. மதங்களின்
பெயரால், சமயங்களின் பெயரால் மக்கள் உனது தெய்வம், எனது தெய்வம் என்று பிரித்துப் பேசி
இந்த தெய்வமே உயர்ந்தது, மற்ற தெய்வம் தாழ்ந்தது என்று அவரவர் தெய்வங்களை மட்டும் உயர்த்திப்
பேசி வந்துள்ளனர். அதன் விளைவாக இன்றைக்கு சமயப் பூசல்களும் மதப்பூசல்களும் இன்னும்
சொல்லப்போனால் சாதிப்பூசல்களும் தலைவிரித்தாடிய வண்ணம் இருந்து கொண்டுள்ளது. அன்புருவான,
அறிவுருவமான கடவுள் ஒவ்வொறுவர் உள்ளத்திலும் உள்ளார் என்ற உயர்ந்த சிந்தனையை ஏற்றுக்
கொண்டால் இந்தச் சண்டை சச்சரவுகளுக்கு இடமிருக்காது. உயிர்க்குலம் ஒன்று அதற்கு கடவுளும்
ஒன்று என்ற உரத்த குரல் உலகெங்கிலும் ஒலிக்க வள்ளலாரது சுத்த சன்மார்க்கக் கொள்கை வளர
வேண்டும்.
அருளியல் ரீதியாக
சீர்திருத்தங்கள் செய்ததோடு உலகியல் ரீதியாகவும் வள்ளலார் சமுதாய முன்னேற்றத்திற்குக்
கூறிய அறிவுரைகள் வியக்கத் தக்கன.
கருணைஇலா ஆட்சி கடுகி ஒழிக
அருள் நயந்த நன்மார்க்கர் ஆள்க…
(5618)
என வள்ளலார் கூறியிருப்பதிலிருந்து
நாட்டில் நடைபெறும் ஆட்சி கருணையுள்ளம் கொண்டதாக இருக்க வேண்டும் என விழைவது தெரிகிறது.
அப்படி கருணைப்பண்பு இல்லாத ஆட்சி விரைந்து ஒழிய வேண்டும் என்று அவர் சாபமிடுகிறார்.
ஒத்தாரும் உயந்தாரும், தாழ்ந்தார்ம்
எவரும்
ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்த
வேண்டும்
என்ற உயர்ந்த சமத்துவ
சிந்தனையை வழங்கியுள்ள சமுதாய நலன் விழைந்த ஆன்மீகவாதியாக வள்ளலார் உள்ளார் என நினைக்கும்
போது ஒவ்வொறு தமிழனும்பெருமைப்படும் செய்தியாக இது உள்ளது. ஒத்தாரும் அதாவது செல்வத்தில்,
கல்வியில், அறிவில், சமுதாய அந்தஸ்தில் ஒத்து உள்ளவர்கள், அதில் உயர்ந்த நிலையில் உள்ளவர்கள்,
மற்றும் தாழ்ந்த நிலையில் உள்ளவர்கள் எல்லோரும் ஒருமையுளர் ஆகி, அதாவது ஒற்றுமை உணர்வோடு
ஒருவருக்கு ஒருவர் உதவிபுரிந்து வாழவேண்டும். இருப்பவர் இல்லாதவருக்குக் கொடுத்து உலகியல்
நடத்த வேண்டும் என ஒரு மகான் விரும்புகிறார் எனில் அவரே வள்ளலார்.
“எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல்
வேண்டும்
எவ்வுயிரும் இன்பமடைதல் வேண்டும்”
என்பதே இவரது முழக்கமாக
இருக்கிறது. திருஅருட்பாவின் எந்தப் பக்கம் புரட்டினாலும் நமக்கு புலப்படுவது அன்பு,
கருணை, தயவு, இரக்கம், பரிவு முதலிய பண்புகளோடு, அறியாமை இருள் அகல அறிவுச்சுடரை அகத்தில்
காணும் அருஞ்செய்திகளும் என்றால் அது மிகையில்லை.
தெய்வமணிமாலை என்னும்
பதிகமே வள்ளற்பெருமான் முதன் முதலில் பாடிய பதிகம். அதிலும் கூட மதிவேண்டும் நின் கருணை
நிதி வேண்டும் என்று இறைவனிடம் மதியை அதாவது நல்லறிவை வேண்டுகிறார். அதோடு நின்கருணை
நிதி வேண்டும் என்று இறைவனது கருணையை நிதியாக கேட்கிறார். அதையே பின்னாளில் பாடும்
போது
“இருளாமையறல் வேண்டும் எனை அடுத்தார்
சுகம்வாந்திடல் வேண்டும்
எவ்வுயிரும் இன்பமடைதல் வேண்டும்”
என்று பாடும் போது
இருளாமையுறல் என்கிற இருள் இல்லாமை உறல் அதாவது இருள் என்னும் அறியாமை இல்லாத நிலைமையான
அறிவுறுதல் என்றும் பொருள் தருகிறது. அதற்கடுத்த வரிகளில் அவருக்கே உரிய மனிதநேய, ஆன்மநேயச்
சிந்தனைகள் வெளிப்படுகின்றன.
இறுதி முழக்கமாம்
மகாமந்திரத்தை நாம் உற்று நோக்கும் போது கூட, இந்த அறிவு, அன்பு, ஆகிய இரண்டு பண்புகளே
அதில் முழக்கப்படுவது புரியும்.
“அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!”
என்பது வள்ளலார்
நமக்கு வழங்கியுள்ள மகா மந்திரம். இங்கே ஜோதி என்பது சுடர் அல்லது ஒளி என்னும் பொருளை
விட அறிவையே காட்டுகிறது. தன்னுடைய உரைநடையில் அதனைத் தெளிவாக அருட்பெருஞ்சோதி என்பதை
ஒப்பற்ற பெருந்தயவுடைய பேரறிவு எனப் பதம் பிரித்து விளக்கமளிக்கிறார் வள்ளலார். இந்த
ஒப்பற்ற பெருந்தயவுடைய பேரறிவோடு தனிபெருங்கருணை ஒவ்வொறு மனிதனிடமும் இருந்து விட்டால்
எல்லா மனிதர்களுமே வள்ளலார் ஆகலாம் அல்லது இறைநிலை அடையலாம். இதனை மனிதனாகப் பிறந்தவன்
ஏற்க மறுப்பான் எனில் அவன் மனிதனே இல்லை. இது தான் இறைமைப் பண்புகள் என்றால் பெரியார்
கூட அதனை மறுப்பவர் இல்லை. இதனைப் பின்னர் விரிவாக பார்ப்போம். இங்கு தான் வள்ளலாருக்கும்
பெரியாருக்கும் உள்ள அடிப்படை ஒற்றுமை புலப்படுகிறது.
மேற்சொன்ன இறைப்
பண்புகளே கடவுள் என்ற அற்புத சக்திக்கு உள்ளவை என்றால் அந்த அதீத குணங்களைத் தன்வயமாக்கினால்
ஒவ்வொறுவரும் கடவுள் நிலையை அடையலாம் என்பது வள்ளலார் கொள்கை. மனிதசக்திக்கு மிஞ்சிய
சக்தி உலகினில் எதுவும் இல்லை என்பது பெரியார் கூற்று. அந்த மனிதசக்தியிடம் மேற்சொன்ன
பண்புகள் இருப்பின் அவற்றை கடவுள் பண்புகளாகக் கொண்டால் அந்த பண்புள்ளவனுக்குக் கடவுள்
என்றால் என்ன தவறு.
திருவள்ளுவர் கூட
கடவுள் வாழ்த்தில் சில குணங்களைக் கொண்ட ஒன்றைக் கடவுள் என்பார். அதனை விரிக்கின் நிறைய
சொல்லலாம். ஏற்கனவே பலர் உரை எழுதியிருப்பதால் நல்ல உரைஒன்றைப் படித்தால் அது விளங்கும்.
அவர் கூறியிருக்கும் குணங்கள் ஒருவனுக்கு இருந்தால் அவன் கடவுளாகக் கருதப்பட வேண்டிய
மனிதனே. உதாரணமாகப் பொறிவாயில் ஐந்தவித்தான் எனில் ஐம்புலன்களும் ஆசைகளை விட்டொழிந்து
அறவழியில் செல்பவர் கடவுளுக்கு நிகரானவர். ஆகவே இத்தகைய பண்புடையவர்களை கடவுள் என வருணித்தால்
தந்தை பெரியாருக்கு மட்டுமல்ல, எந்த நாத்திகருக்கும் எப்படி கோபம் வரும்?
ஆகவே நாத்திகரும்,
ஆத்திகரும் ஏற்றுக் கொள்ளும் கடவுளைக் காட்டிய வள்ளற்பெருமானே தமிழ்நாட்டின் சமுதாய
சீர்திருத்தவாதிகளில் முன்னோடி என்கிறார் முண்டாசுக்கவிஞன் பாரதி. தன்னுடைய சுதேசமித்திரன்
பத்திரிக்கை தலையங்கத்தில் “இராமலிங்கரும், வ.வே.சு.ஐயர்
போன்றோரும் தமிழ்நாட்டின் புதிய விழிப்பிற்கு ஆதிகர்த்தராக விளங்கினார்கள்”
என்று பாரதி எழுதியுள்ளார்.
அருட்சமயத்தை,
தமிழ்வேதமகரிஷி என்று வள்ளலாரின் சமயத்தை அருட்சமயம் என்றும், அவரை தமிழ்வேதமான அருட்பா தந்த அருளாளர் என்றும் ஆனாலும் அவரை தமிழர் இன்னும்
முழுதும் அறியாதவராக உள்ளார் என்று மனம் நொந்து தன்னுடைய கவிதையில் பாடுகிறார் கவியோகி
சுத்தானந்த பாரதியார். சமீபத்தில் (2007 செப்டம்பர்) சென்னையில் நடைபெற்ற வள்ளலார்
தபால்தலை வெளியீட்டு விழாவில் பேசிய தமிழக நிதிஅமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் திராவிட
இயக்கத்திற்கு மட்டுமல்லாமல் தமிழ்நாட்டின் சீர்திருத்தவாதிகள் அனைவருக்கும் முன்னோடியாகத்
திகழ்பவர் வள்ளலார் என்று புகழாரம் சூட்டினார். “கடவுளை
மற, மனிதனை நினை” என்றார் பெரியார். கடவுளை மனிதகுலத்துக்கும் உயிர்குலத்துக்கும்
செய்யும் தொண்டின் மூலம் அடையச் சொன்னவர் வள்ளலார்.
கடவுளின் பெயரால்
யாகம், பூஜை, திருவிழாக்கள், சடங்குகள் நடத்தி பணவிரயம் செய்து அதனால் மனித நேயத்திற்கு
புறம்பாக நடைமுறையில் நடந்து வரும் கொடுஞ்செயல்களைக் கண்டு மனம் பொறுக்காத பெரியார்,
“கடவுளை மற, மனிதனை நினை” என்றார். வள்ளலாரோ
“சமுதாயத் தொண்டை
நினை, உயிர்க்குல தொண்டை நினை” அதுவே கடவுளின் நிலையை அடைய வழி என்றார். இங்கே
தான் இருவருக்கும் உள்ள ஒற்றுமையை உணர முடிகிறது.
வள்ளலார் தன்னுடைய
சனாதன எதிர்ப்புகளை அருட்பா மூலமும், உரைநடையின் மூலமும் பிரசங்கங்கள் மூலமும் செய்தார்.
பெரியாரோ சனாதன எதிர்ப்பைத் தன் தொண்டாகவே வாழ்நாளெல்லாம் தொடர்ந்தார். வைதீக எதிர்ப்பில்
வள்ளலார் மிதவாதி என்றால் தந்தை பெரியார் தீவிரவாதி எனலாம். இங்கே தீவிரவாதி என்றால்
வன்முறையாளர் என்று பொருள் அல்ல. பார்ப்பன எதிர்ப்பை பெரியார் செய்தாலும் நாகரீகமான
முறையில் அவர்கள் மீது எவர் கையும் படாதவகையில், எதிர்கருத்தைச் சொல்பவர்களுக்கும்
மதிப்பளித்து, மரியாதை அளித்துப் பேசும் வகையில் செய்தமையைப் பெரியாரிடம் காணும் போது
சிலிர்க்கின்றது.
வள்ளலாரைப் பொறுத்தவரையில்
இவ்வுலகில் ஏன் வருவிக்க உற்றார் என்பதற்கு அவரே அருட்பாவில் பாடியிருப்பது
அகத்தே கறுத்துப் புறத்துவெளுத்
அனைவரையும் திருத்த உலகர்
சகத்தே திருத்திச் சன்மார்க்க
சங்கத் தடைவித்திட அவரும்
இகத்தேபரத்தைப் பெற்றுமகிழ்ந்திடுதற்
கெந்தே எனை இந்த
உகத்தே இறைவன் வருவிக்க உற்றேன்
அருளைப் பெற்றேனே … (5485)
மனத்தூய்மையில்லாமல்
புறந்தூய்மையில் ஈடுபாடு கொண்டு அலையும் உலகர் அனைவரையும் வாழும் போது திருத்தி அருளுள்ளம்
கொண்டவர்களாக, உண்மைப் பொருளை உணர்ந்தவர்களாக ஆக்கவேண்டும். இந்த பூலோகத்தை அதாவது
பூமியைச் சொர்க்கலோகம் ஆக மாற்ற வேண்டும் என்று சொல்லவந்த வள்ளலார் இகத்தே பரத்தைப்
பெற்று மகிழ வேண்டும் என்கிறார். சன்மார்க்கச் சங்கத்து அடைவித்திட எனில் உண்மைநெறியை
உணர்ந்தவர்களாக உலக மக்களை ஆக்குதற்கு எனக்கொள்ளல் வேண்டும். சன்மார்க்கம் என்ற வடமொழிச்சொல்லை
சத்மார்க்கம் என்று பிரிக்க வேண்டும். சத் என்றால் உண்மை அல்லது மெய் என்று பொருள்.
மார்க்கம் என்றால் வழி அல்லது நெறி அல்லது கொள்கை என்று பொருள்.
உலகமக்கள் கடவுளைப்
பற்றிய உண்மைகளைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டும். சாதி, மத மோதல்களை விடுத்துச்
சமதர்மச் சிந்தனையோடு எதையும் அறிவுக்கண் கொண்டு பார்க்கிறவர்களாய் ஆக வேண்டும் என்பது
வள்ளலார் விழைவு.
வள்ளலார் தன்னுடைய
மார்க்கம் அறிவியலை அடிப்படையாகக் கொண்ட மார்க்கம் என்று அடிக்கடி வலியுறுத்தினார்
என்று அவருடைய முதன்மை மாணாக்கர் தொழுவூர் வேலாயுத முதலியார் பிரம்ம ஞானசபைக்கு அளித்த
வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.
மேலும் “நான் உண்மை சொல்லவந்தவன்
அன்றி பொய் சொல்ல வந்தவன் அல்ல” என்று பல இடங்களில் அருட்பாவில் பாடுகிறார்
வள்ளலார்.
…………………………………………………………………………………………………………..
சமரச சன்மார்க்கம்
மேவுக என்றுரைக்கின்றேன் மேதினியீர்
எனைத்தான்
வைதாலும் வைதிடுமின் வாழ்த்தெனக்
கொண்டிடுவேன்
மனங்கோணேன் மானமெலாம் போனவழி விடுத்தேன்
பொய்தான் ஓர் சிறிதெனினும் புகலேன்சத்தியமே
புகலுகின்றேன் நீவிர் எல்லாம்
புனிதமுறும் பொருட்டே….(5597)
என்று பாடுகிறார். சுத்த சன்மார்க்கச் சீர்திருத்தச் சிந்தனைகளை வழங்கிய காரணத்தால் வள்ளலார் தூற்றப்பட்டதை எண்ணி வருந்தியவராய் மானமெல்லாம் போன வழிவிடுத்தேன், என்னை வைதாலும் பரவாயில்லை ஆனாலும் கொஞ்சம் கூட பொய்சொல்லவில்லை உண்மையை மட்டும் சொல்கிறேன் என்கிறார். ஏன் எதற்காக என்று கேட்டால் உலக மக்கள் அனைவரும் ஒருவருக்கு ஒருவர் ஏற்றத்தாழ்வு இன்றி அனைவரும் புனிதமுறும் பொருட்டு என்று சாத்வீக நெறியில் சொல்கிறார்.
திராவிட சமுதாயத்தை
உலகத்தில் உள்ள சமுதாயத்தினரைப்போல் மானமும், பகுத்தறிவும் உள்ளவர்களாக ஆக்க வேண்டும்
என்பதே என் விருப்பம். இந்த பணியைச் செய்ய
எனக்குத் தகுதி இருக்கின்றதோ இல்லையோ அதனைச் செய்ய எவரும் முன்வராத காரணத்தினால் தான்
நான் அந்தப் பணியை என்மீது போட்டுக் கொண்டு அதே வேலையாய் இருப்பவன் என்கிறார்
தன்மானப் பேரொளி தந்தை பெரியார்.
இருவரின் சிந்தனையும்
சற்றேறக்குறைய ஒன்று தான். இருவர் நோக்கமும் ஒன்று தான். இவ்வுலகில் மனிதனுக்கு மனிதன்
வித்யாசம் இன்றி அனைவரும் மானத்தோடும் தூய சிந்தனையோடும் வாழவேண்டும் என்பதே அந்த நோக்கம்.
மதத்தின் பெயரால் கடவுளின் பெயரால் மனித சமுதாயத்தில் ஏற்றத்தாழ்வு கூடாது என்பதே இருவரின்
தீர்க்கமான முடிவு. இதற்காக இருவருமே சமுதாயத்தில் போரடி இருக்கின்றார்கள்.
வள்ளலார் தன்னுடைய
பாணியில் எழுத்தின் மூலமாகவும், பிரசங்கங்கள் மூலமாகவும், இந்த புரட்சி விதையினை பத்தொன்பதாம்
நூற்றாண்டில் பல எதிர்ப்புகளுக்கு இடையே ஊன்றியுள்ளார். வள்ளல் பெருமானின் உடன் இருந்தவர்கள்
கூட இவரது முற்போக்கு எண்ணங்களை ஏற்காதவர்களாய் அவரைவிட்டுப் பிரிந்து சென்றதாக வரலாறு
கூறுகிறது.
தந்தை பெரியார்
தன்னுடைய இனமானப் போருக்காகவும், சுயமரியாதை சுடர் கொளுத்தியதற்காகவும் கடுமையான போராட்டங்களைச்
சந்தித்தார். சில அறிவிலிகள் அவர் மீது செருப்பைக் கூட வீசி எறிந்த கொடுஞ்செயல்கள்
நடந்ததைக் கூட நாடறியும்.
வள்ளலாருக்கு இருந்த
பட்டறிவு தந்தை பெரியாருக்கும் இருந்தது. பெரியார் பள்ளிக்கூடம் சென்றும், கல்லூரி
சென்றும் பெரிய கல்வி எதையும் கற்கவில்லை. ஆனாலும் அவருக்கு இருந்த பட்டறிவையும் இயற்கையறிவையும்
கண்டு உலகமே வியக்கிறது.
1879 ஆம் ஆண்டு
செப்டம்பர் 17 ஆம் நாள் ஈரோட்டில் வெங்கடப்ப நாயக்கர், சின்னத்தாயம்மார் தம்பதிகளுக்கு
இரண்டாவது ஆண் மகனாகப் பிறந்தவர் தான் தந்தை பெரியார் என்னும் பகுத்தறிவு பகலவன்.
சிறுவயதில் குறும்புத்தனம்
மிக்கவராக மட்டுமின்றி முற்போக்குச் சிந்தனை உள்ளவராக எதனையும் அறிவுகொண்டு ஆராயும்
ஆற்றல் உள்ளவராக விளங்கியுள்ளார். சிறுவயதிலேயே சில வகுப்பு சாதியினரிடம் பழகக் கூடாது,
அப்படிப்பழகின் தீட்டு ஏற்ப்பட்டுவிடும் என்று பெற்றோரால் கண்டிக்கப்பட்டவர். அதனைப்
பொருட்படுத்தாது அந்தப் புழங்கக்கூடாத சாதியினர் எனப்பட்டவர்களின் வீடுகளுக்கும் சென்று
தண்ணீர் அருந்தியுள்ளனர். தின்பண்டங்கள் வாங்கி தின்றுள்ளனர்.
இளம் வயது முதற்கொண்டே
பிறர்படும் துன்பத்தைக் கண்டு மனம் வருந்தியவராயினும், துன்புறும் ஏழைகளுக்கு தம்மால்
முடிந்த உதவிகளைச் செய்யும் இரக்க சிந்தனை உள்ளவர்களாகவும் அநீதியைக் காணும் போது பொங்கி
எழும் போர்க்குணம் கொண்டவராயும் பெரியார் விளங்கியுள்ளார்.
எந்த செயலில் அவர்
ஈடுபட்டாலும் சமுதாய நற்செயலாக மட்டும் அது இருக்கும். அந்த நற்தொண்டுகளைச் செய்ய முற்படும்
போது நெஞ்சில் உறுதியோடு யாருக்கும் அஞ்சாத வீரத்தோடும் துணிவுடனும் செய்கின்ற மனத்திண்மை
வாய்த்தவராகவும் பெரியார் திகழ்ந்துள்ளார்.
வள்ளலார் 19ஆம்
நூற்றாண்டின் இணையற்ற மானுடப்பற்றாளர் என்றால் பெரியார் இருபதாம் நூற்றாண்டின் ஈடு
இணையற்ற மானுடநேயம் போற்றும் மாமனிதர் எனலாம். பெரியாருக்கு முன்பு தோன்றியப் பலப்
பகுத்தறிவுச் சிந்தனையாளர்கள் உண்டு. உலகெங்கிலும் பல பகுத்தறிவாளர்கள் தோன்றியுள்ளார்கள்.
பிரஞ்சு நாட்டில் தோன்றிய வால்டேர்,ரூசோ, அமரிக்காவின் இங்கர்சால், இவர்களுக்கு முன்பு
தோன்றிய சாக்ரடீஸ் என்று பலரைச் சொல்லலாம். இவர்களெல்லாம் தங்கள் வாழ்நாளில் தங்களின்
லட்சியங்களை அடைய முடியாதவர்களாய் ஏமாந்து தோற்றார்கள். வஞ்சகமாக மரணக்குழியில் தள்ளப்பட்டவர்கள்
உண்டு. ஆனால் தந்தை பெரியார் ஒருவர் தான் உலக சரித்திரத்திலேயே தான் கண்ட உண்மைகளை
மக்களுக்கு எடுத்துச் சொல்லி அதனை நம்பவைத்து தனக்கென்று ஒரு பெரும் கூட்டத்தைச் சேர்த்ததோடு
அதனை ஒரு இயக்கமாக மாற்றி அந்த இயக்கத்தைக் கொண்டு சமுதாயத்தைச் சீர்படுத்தியுள்ளார்
என்றால் அதில் எள்ளளவும் மிகையில்லை.
தன்னுடைய வாழ்நாளிலேயே
தான் விரும்பிய லட்சியத்தில் பலவற்றை சாதித்தார். உதாரணமாகச் சொல்லவேண்டுமானால் அரிசன
ஆலயப் பிரவேசம், பால்யவிவாகத் தடை, சுயமரியாதைத் திருமணம், விதவை மறுமணம் போன்றவற்றை
சொல்லிக் கொண்டே போகலாம். சமூக நீதி வேண்டிப் பெண்களுக்கு சொத்தில் சம உரிமை கோரிய
பெரியார் 1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடந்த சுயமரியாதை மாநாட்டில் அதைத் தீர்மானமாகக்
கொண்டு வந்தார். அது 1989 ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சியில் தமிழகத்தில் சட்டமாகக் கொண்டுவரப்பட்டது.
இப்படி எத்தனையோ பெரியாரது மறைவிற்குப் பிறகும் அவரது கனவுகள் ஒவ்வொன்றாக நனவாகிக்கொண்டே
வருகின்றன. இன்று எல்லா சாதியினரும் மிக உயர்ந்த பதவிகளில் அமர்ந்திருப்பது தந்தை பெரியார்
இட்டப் பிச்சை என்றே சொல்லலாம்.
தந்தை பெரியாரது
இடிமுழங்கும் பேச்சு அதே நேரத்தில் தெளிந்த ஆழ்ந்த எளிமையான பேச்சு, குடியரசு, விடுதலைப்
பத்திரிக்கைகளிலும் இன்னும் பல பத்திரிக்கைகள் வாயிலாகவும் வெளிவந்துள்ளது. அவர் எழுதிய
கட்டுரைகளும், அறிக்கைகளும் தமிழ்நாட்டில் புதிய எழுச்சியை உண்டாக்கின.
தந்தை பெரியாரின்
கொள்கைகள் என்ன?
சுருக்கமாகக் கூறின்.
1.
ஒரே உலகம்
2.
உலக மக்கள் எல்லாரும் ஒரு குடும்பத்தை சேர்ந்தவர்கள்
3.
உலக சொத்துகள், இன்ப துன்பங்கள் அந்த குடும்பத்தை சேர்ந்த எல்லா
மக்களுக்கும் பொதுவானவை.
4.
ஒவ்வொருவரும் அவர்களது சக்திக்கு ஏற்றபடி உழைத்தாக வேண்டும்
5.
உள்ளதை ஒவ்வொருவரும் அவர்களின் தேவைக்கு தகுந்தபடி அனுபவிக்கலாம்.
இவ்வாறு நாட்டின்
எல்லாத் துறைகளிலும்
1.
சமதருமமும்
2.
சம ஈவு
3.
சம உரிமை
4.
சம ஆட்சித் தன்மை
5.
சம நோக்கு
6.
சம நுகர்ச்சி
7.
சம அனுபவம்
இருக்க வேண்டும்.
இல்லை என்றால் ஏற்பட வேண்டும். அப்படி ஏற்படவில்லை
எனில் ஏற்படுத்தப்படல் வேண்டும் என்றார் பெரியார். இந்தக் கொள்கைகள் நிறைவேறுவதற்காகவே
பெரியார் வாழ்நாளெல்லாம் ஓய்வின்றி உழைத்தார்.
பாவேந்தன் பாடுகிறார்
தன்னுடைய கவிதையில் கீழ்கண்டவாறு.
“தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும்
மண்டைச் சுரப்பை உலகு தொழும்
மனக்குகையில் சிறுத்தை எழும்” அவர் தான் பெரியார்.
“வயதில் அறிவில் முதியார் – நாட்டின்
வாய்மைப் போருக்கு என்றும் இளையார்
உயர் எண்ணங்கள் மலரும் சோலை
ஓதும் இராமசாமி வாழ்க”
மேற்கூறிய புரட்சிக்
கவிஞரின் கவிதை வரிகள் தந்தை பெரியாரின் இயல்புகளையும் அறிவின் முதிர்ச்சியையும் தெள்ளத்
தெளிவாக எடுத்துக் காட்டும் அற்புத வரிகள்.
“ஆயிரம் ஆண்டெனும் மூதாட்டி அவள்
அணிந்திராத அணியாவார் அறிந்திராத அறிவாவார்
காணந்தோறும் இப்பெரிய தமிழ்நாடு
எதிர்பார்க்கும் தலைவராவார்
கழறவோ அவர் பெயர் தான் இராமசாமி”
இது புரட்சிக்கவிஞர்
குடியரசு இதழுக்கு எழுதியுள்ள வாழ்த்துச் செய்தி.
வள்ளுவர் வலியுறுத்திய
ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வை ஒத்த கருத்தை தந்தை பெரியார் தன்னுடைய குடியரசு வார ஏட்டினை
02.05.1925 அன்று தொடங்கும் போது அதன் உயர் நோக்கங்களாகத் தருகிறார். அவைகள் என்னென்ன
என உற்று நோக்கினால்
1.
மக்களுக்குள் சுயமரியாதையும், சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்கி
வளர வேண்டும்.
2.
உயர்வு தாழ்வு என்னும் உணர்ச்சியே நமது நாட்டில் வளர்ந்து வரும்
சாதிச்சண்டை என்னும் நெருப்புக்கு நெய்யாய் இருப்பதால் இவ்வுணர்ச்சி ஒழிந்து அனைத்துயிர்களும்
ஒன்றென்று எண்ணும் உண்மை மக்களிடம் வளர வேண்டும்
என்ற உயர்ந்த அகிலமானுட ஒருமைப்பாட்டுணர்வையும் உயிர்குல நேயத்தையும் நமக்கு உணர்த்துபவைகளாக
உள்ளன.
மேலும் மனிதன்
சாதி, மதம், கடவுள், இவற்றின் அடிப்படையில் வேறுபாடு காட்டாமல் இருக்க வேண்டும் என்பதை
சுயமரியாதை இயக்கத்தின் நோக்கங்களாகக் கீழ்கண்டவற்றைத் தன்னுடைய குடியரசு இதழில் அடிக்கடி
வலியுறுத்துகிறார்.
சமூக வாழ்வில்
ஒருவருக்கொருவர் எவ்வித உயர்வு தாழ்வும் இருக்கக் கூடாது. மனித சமூகம் பொருளாதாரத்
தன்மையில் ஏழை பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வுகள் இல்லாமல் எல்லாப் பொருளும் பூமியும்
எல்லாருக்கும் சமமாக இருத்தல் வேண்டும்.
மக்கள் சமூகத்தில்
ஆணுக்கும், பெண்ணுக்கும், எவ்வித வித்யாசமும் இல்லாமல் சகல துறைகளிலும் சமத்துவம் இருக்க
வேண்டும்.
மனித சமூகத்தில்
சாதி, மதம், தேசம், வறுமை, கடவுள், ஆகிய அபிமானங்களை அறவே ஒழித்து உலக மனித சமூக ஒற்றுமையே
நிலவ வேண்டும்.
உலகில் உழைப்பாளி
என்றும் முதலாளி என்றும் உயர்வு தாழ்வு இல்லாமல் சமூகத்தின் தேவைகளுக்கும் சகல மனிதர்களும்
பாடுபட்டு அவற்றின் பயனை சரிசமமாக அனுபவிக்க வேண்டும்.
ஒவ்வொறு மனிதனும்
எவற்றுக்கும் எவ்விதத்துக்கும் அடிமையாகாமல் அவரவர் அறிவு, ஆராய்ச்சி, சாட்சி, உணர்ச்சி,
ஆகியவைகளுக்கு இணங்கி நடக்கச் சர்வ சுதந்திரம் இருக்க வேண்டும்.
மேற்கூறிய பெரியாரின்
கொள்கைகளுக்காக 19ம் நூற்றாண்டிலேயே முதல் குரல் கொடுத்தவர் வள்ளலார். ஆண், பெண், சமத்துவத்தை அன்றைக்கே வலியுறுத்தியவராய்
ஆணிணுள், பெண்ணும் பெண்ணினுள்
ஆணும்
அண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி
என்று ஆண், பெண்
சமத்துவத்திற்காகப் பாடுகிறார். மேலும் பெண்ணுக்கும் பேதமின்றி அபேதமாய் படிப்பு, ஞானம்
முதலியவற்றைச் சொல்லிக் கொடுக்க வேண்டியது அவசியம் என்றவர் வள்ளலார்.
பெண்கள் தங்கள்
கணவர்மார் இறந்தால் தாலி வாங்குதல் வேண்டா போன்ற அதாவது தாலியைக் கூட அகற்ற வேண்டாம்
என்ற புரட்சிகரமான சீர்திருத்தக் கருத்தை முன்மொழிந்தவர் வள்ளலார்.
சமதர்ம சமுதாயம்
காணவேண்டி 1867 இல் வடலூரில் சத்திய தருமச்சாலை துவங்கினார். ஜீவகாருண்ய ஒழுக்கத்தின்
முக்கிய குறிக்கோளாகப் பசித்தவருக்கு அவர்கள் எந்த மதம், எந்த சாதி, எந்த குலம், கோத்திரம்,
எந்த தேசம், எந்த மொழி பேசுபவர்கள் என்று விசாரியாமல் யாவருக்கும் சமமாகச் சமபந்தி
போஜனம் போடச் சொன்னவர் வள்ளலார். அதை நடைமுறைப் படுத்தியவரும் வள்ளலாரே.
உலகப் பொதுமறையாம்
திருக்குறளை மிகவும் ஏற்றுப் போற்றியவர் வள்ளலார். திருக்குறளில் சில குறட்பாக்களின்
வரிகளைத் தன்னுடைய அருட்பாவில் அப்படியே எடுத்துக் கையாண்டவர் வள்ளலார். திருக்குறளை
அனைவரும் கற்க வேண்டும், திருக்குறளின் பெருமைகளை எவரும் உணர வேண்டும் என்ற நோக்கோடு
திருக்குறள் வகுப்பைச் சென்னையிலும், பின்னர் வடலூரிலும் தன்னுடைய முதன்மை மாணாக்கர்
தொழுவூர் வேலாயுத முதலியாரைக் கொண்டு நடத்தினார்.
இந்து சமயத்தின்
முக்கிய நூல்களான பகவத்கீதை, கம்பராமாயணம் முதலிய வைணவ நூல்களையும், பெரியபுராணம் முதலிய
சைவ நூல்களையும் மிகவும் கடுமையாக விமர்சித்த தந்தை பெரியார் திருக்குறளுக்கு மட்டும்
மதிப்பு தந்தவராய் திருவள்ளுவரை புகழ்கின்றார். திருக்குறளை அனைவரும் படிக்க வற்புறுத்துகிறார்.
படித்த பண்டிதர்களிடம் மட்டும் இருந்த திருக்குறளை சாதாரண மக்களும் படித்துணர வேண்டும்
என்ற நோக்கத்தில் 1948 ஆம் ஆண்டு திருக்குறள் மாநாட்டை திரு.வி.க அவர்களை கொண்டு நடத்தினார்.
தந்தை பெரியார் எந்த சமயத்தையும் சாராத திருக்குறளை, எந்த ஒரு உருவக் கடவுளையும் ஏற்காத
திருக்குறளை, உலக மக்கள் அனைவருக்கும் எக்காலத்துக்கும் ஏற்கக்கூடிய கருத்துகளை உள்ளடக்கிய
திருக்குறளை ஏற்றது வியப்பில்லை. “நினைச்சா ராமாயணங்கறான், நினைச்சா கந்தபுராணங்கறான்,
நினைச்சா பகவான் என்கிறான் வெங்காயம் என்கிறான். விநாயகர் புராணம் எதை எடுத்துப் பார்த்தாலும்
அசிங்கம், அதுதானே எல்லாத்திலேயும் மேலே நிக்குது” என்ற பெரியார் “திருவள்ளுவர் நல்ல
அறிவாளி மற்றும் ஆராய்ச்சியாளர். அந்த காலத்தில் மக்களிடம் பரவி இருந்த மூட எண்ணங்களோடு
போராடிய அறிஞர் என்ற அளவில் அவரை ஒத்துக்கொள்ள முடியும்” என்கிறார்.
மேலும் ஆயிரமாயிரம்
கம்பராமாயணம், பெரியபுராணம் பாடல்களை படிப்பதைக் காட்டிலும் ஒரு சில திருக்குறள்களைப்
பயின்று அதன் வழியில் வாழ்க்கையை நடத்துவது நல்லது என்கிறார் பெரியார்.
மேலும் திருக்குறள்
கருத்துகள் நன்கு நாடெங்கும் பரப்பப்படுதல் வேண்டும். கல்வி என்றாலே திருக்குறள், கல்வி
அறிவு என்றாலே திருக்குறள் அறிவு என்று கருதப்பட வேண்டும் எனவும் குறள் ஓர் அறிவுக்
களஞ்சியம், பகுத்தறிவு மணிகளால் கோர்க்கப்பட்ட நூல் என்று அதற்கு புகழாரம் சூட்டியவர்
தன்மானப் பேரொளி, சமூகநீதிக்காவலர் தந்தை பெரியார். எதை எடுத்துக் கொண்டாலும் அதில்
தன்னுடைய அறிவை உபயோகித்து , அந்தக் கருத்து ஏற்புடையதா இல்லையா என்று தீர்மானித்துத்
தேர்ந்து தெளிந்து மக்களிடம் துணிச்சலுடன் சொன்னவர் தந்தை பெரியார்.
பெரியார் வாழ்ந்த காலம் 94 ஆண்டுகள், 3 மாதங்கள், 9 நாட்கள். அதாவது
34,433 நாட்கள். இன்றைக்கு இருப்பது போன்ற வாகனவசதிகள், சாலை வசதிகள் இல்லாத நாட்களில்
தன்னுடைய சுயமரியாதைக் கொள்கைகளைப் பரப்ப சுமார் 8600 நாட்கள் சுற்றுப்பயணத்திலேயே
கழித்தவர் தான் எம் அறிவுலக ஆசான் தந்தை பெரியார். அவர் சுற்றுப்பயணம் செய்த தூரம்
சுழலும் பூமியின் சுற்றளவைப்போல் 33 மடங்கு என நினைக்கும் போது வியப்பளிக்கிறது. இவர்
பங்கு கொண்டு பேசியுள்ள நிகழ்ச்சிகள் 10,700 என எண்ணும் போது எண்ணத்தில் ஒரு மின்னல்
வெட்டுகிறது. அவருடைய சொற்பொழிவுகளை ஒலிநாடாவில் பதிவு செய்து ஓடவிட்டால் அவை 2 ஆண்டுகள்
5 மாதங்கள், 11 நாட்கள் என இரவு பகலாகத் தொடர்ந்து ஓடிக்கொண்டே இருக்கும். அவருக்கு
முன்பும் சரி பின்பும் சரி இதுவரை எந்த சிந்தனையாளரும் இவ்வளவு பேசியதும் இல்லை, சொற்பொழிவு
ஆற்றியதும் இல்லை எனலாம்.
தனது இறுதி மூச்சு
வரை உடல்நிலை சரியில்லாத போதும் கூட மூத்திரப்பையை ஒருவர் பிடித்துக் கொள்ளக் கோல்
ஊன்றியவராய் மேடையேறி சிம்மம் போல் கர்ஜனை செய்தவர். அவர் உருவத்தைப் பார்த்தாலே எவருக்கும்
சிலிர்ப்பு வரும். கண்புருவங்களில் அடர்ந்த வெள்ளைமுடி, சிங்கத்தின் பிடரியைக் கண்முன்
நிறுத்தும். அவரது வெண்ணிறத் தலைமுடி சிலிர்த்து இரண்டு பக்கமும் நிற்க கண்களில் இருந்து
புறப்படும் ஒரு அறிவு ஒளி, அடடா… அவர் தான் பகுத்தறிவு இமயம் தந்தை பெரியார்.
“வங்கத்து தாகூர் போல் தாடியுண்டு
பொங்குற்ற வேங்கைபோல் நிமிர்கின்ற பார்வையுண்டு
செங்குன்றத் தோற்ற உடல் உண்டு – வெண்
சங்கொத்த கண்களிலே விழியிரண்டும் கருவண்டு
அதில் சாகும் வரை ஒளியுண்டு”
“பம்பரமும் ஓய்வுபெறும் சுற்றியபின் இவரோ
படுகிழமாய்ப் போனப் பின்பும் பம்பரமாய் சுற்றி வந்தார்”
‘ஈரோடு, பேன் நிறைந்த தலையாக இருந்த
நிலை மாற்றி எழிலாக்க
ஈரோட்டுச் சீப்பொன்று இல்லாவிட்டால் இதற்குள்ளே
தமிழ்நாடு மொட்டையாய்ப் போயிருக்கும்”
“எரிமலையாய்ச் சுடுதனலாய்
இயற்கைக் கூத்தாய்
இன உணர்வுத் தீப்பந்தப் பேரொளியாய்
இழிவுகளை தீர்த்துக்கட்டும் கொடுவாளாய்
இறைவனுக்கே மறுப்பு சொன்ன இங்கர்சாலாய்
எப்போதும் பேசுகின்ற ஏதென்சு நகர் சாக்ரடீஸாய்
ஏன் என்று கேட்பதிலே வைர நெஞ்ச வால்டேராய்
எம் தந்தை பெரியாரும் வாழ்ந்திட்டார்
நம் சிந்தையணு ஒவ்வொன்றும் நிறைந்திட்டார்”
இவைகள் முத்தமிழ்
அறிஞர் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் தம்முடைய கவிதை வரிகளால் அவருடைய ஆசான் தந்தை
பெரியாருக்கு தந்த காணிக்கைகள்.
1929 ஆம் ஆண்டு
சுயமரியாதை இயக்கத்தின் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த செங்கற்பட்டு மாநாட்டின் தீர்மானங்கள்
சிலவற்றை மட்டும் பார்த்து விட்டு அடுத்த அத்தியாயம் செல்வோம். இவைகள் வள்ளலாரின் சன்மார்க்கக்
கொள்கைகளுடன் ஒத்துவரக் கூடியவைகள்.
மக்கள் பிறவியினால் உயர்வு தாழ்வு கூடாது.
மதம் வேதம் சாத்திரம் புராணங்களைப் பின்பற்றக்கூடாது
பிராமணர், சத்திரியர், சூத்திரர், பஞ்சமர் எனும் பிரிவுகள் கூடாது.
பொது சனங்கள், குளங்கள், கிணறுகள், கல்வி நிலையங்கள், சத்திரங்கள்,
கோயில்கள் முதலான எந்த இடத்திலும் தீண்டாமை முதலிய எந்த பாகுபாடும் கூடாது.
தீண்டாமையைக் கடைபிடிப்பவரை தண்டிக்கச் சட்டம் செய்ய வேண்டும்.
பெயர்களோடு சாதிப் பெயரைச் சேர்த்து எழுதக் கூடாது.
சாதி அல்லது சமயக் குறிகளை அணியக் கூடாது.
தீண்டத்தகாதவர் என்று சொல்லப்படுபவர்களுக்குப் புத்தகம், உணவு,
உடை, ஆகியவை இலவசமாகக் கொடுக்கப்பட வேண்டும்.
வள்ளலார் தன்னுடைய
சமரச வேதப் பாடசாலையில் சாதி வித்யாசமின்றி அனைவருக்கும் ஒன்றாக வேதக் கல்வியறிவைப்
புகட்ட முயன்றார். தமிழ், சமஸ்கிருதம், ஆங்கிலம் என்னும் மும்மொழிகளையும் போதிக்க விழைந்தவர்,
அவரவர் குடும்ப சூழ்நிலைக்கேற்றவாறு கல்வி கற்கும் காலத்தில் பொருளுதவியும் செய்ய முற்பட்டவர்.
மேலும் செங்கற்பட்டு
மாநாட்டு தீர்மானங்களாவன:
கோயில்களில் திருவிழாக்கள் கொண்டாடப்படுவதை நிறுத்த வேண்டும்
மக்களை அறிவு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபடுத்த வேண்டும்
மூடநம்பிக்கைகளைப் பரப்பும் எந்தப்பாடமும் பாடநூல்களில் இடம்பெறக்கூடாது.
வகுப்பு பேதம் காட்டும் எந்த உணவு விடுதிக்கும் அரசு உரிமம் வழங்கலாகாது.
தொடர்வண்டி நிலைய உணவு விடுதிகளில் கடைபிடிக்கப்படும் சாதிய, மத,
நிற வேற்றுமைகள் ஒதுக்கப்பட வேண்டும்.
அரசு சித்த மருத்துவத்தை ஆதரிக்கவும் செயற்படுத்தவும் வேண்டும்
(வள்ளலார் மிகச்சிறந்த சித்த மருத்துவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது)
வேலைக்கு தகுந்த கூலியும் தொழிலாளர்களுக்கு இலாபத்தில் பங்கும்
தரப்படல் வேண்டும்.
வேலையிட்டு கூலி குறைத்தேனோ? என்று
மனுமுறை கண்ட வாசகத்தில் வள்ளலார்
என்ன பாவம் செய்தேனோ? என்று பட்டியலிடும் போது இதனையும் சேர்த்து எழுதுகிறார்.
மேற்கூறிய பல ஒற்றுமைகள்
சன்மார்க்கச் சிற்பி வள்ளலார் வாழ்விலும், சமரச சமத்துவ சூரியன் தந்தை பெரியார் வாழ்விலும்
ஒத்துள்ளது தெரிகிறது.
“ஒரு மனிதன் மற்ற மனிதனைத் தன்னைப்போல
நினைத்து மனிதத்தன்மையுடன் நடத்த வேண்டும்” – பெரியார்
“வீடுதோறிரந்தும் பசியராது அயர்ந்த
வெற்றரைக் கண்டு உளம் பதைத்தேன்
நீடிய பிணியால் வருந்துகின்றோர்
என்
நேருறக் கண்டே உளந்துடித்தேன்
என்
நேருறக் கண்டே உளந்துடித்தேன்
ஈடின் மாணிகளாய் ஏழைகளாய்
நெஞ்சிளைத்தவர் தமைக்கண்டே இளைத்தேன்”
– வள்ளலார்
“உண்மையாகவே வாழ்வது என்பது
நினைக்கின்ற படியே சொல்வது
சொல்லுகின்றபடியே நடந்து கொள்வதும் ஆகும்” – பெரியார்
“பொய்யாத வாய்மைகளே புகன்றிடுதல்
வேண்டும்
புகன்றபடி புகன்றபடி புரிந்திடுதல்
வேண்டும் – வள்ளலார்
சாதி, மதம், சமயம்
அத்யாயம் # 2
“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச்
சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல்
அழகல்லவே – (5566)
என்று வரும் வள்ளலாரின்
அருட்பாவிலுள்ள இப்பாடலின் பொருள் விளக்கிச் சொல்லாமலே எல்லோருக்கும் எளிதில் புரியும்.
நான்கு வருணம்
என்னால் படைக்கப்பட்டிருக்கிறது என்று பகவத்கீதையில் கண்ணன் உபதேசிப்பதாக உள்ளது. ஆனால்
வள்ளலாரோ
“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எலாம் பிள்ளை
விளையாட்டே
மேல்வருணம் தோல் வருணம் கண்டறிவார்
இலைநீ …. (4174)
என்று தனது சீர்திருத்தத்தை
அருட்பாவில் காட்டி இந்தச் சமுதாயப் பாகுபாட்டை வன்மையாக கண்டிக்கிறார். அவர் கண்டிக்கும்
விதமே புதுமையாக உள்ளது. நால் வருணம் ஆசிரமம், ஆசாரம் என்று வகுக்கப்பட்டிருக்கும்
இந்த முறைகள் குழந்தைப் பருவத்தில் விளையாடும் சிறுபிள்ளை விளையாட்டைப் போன்றது என்று
சாடுகிறார். உலகில் உள்ள மக்களை மதங்களும் சமயங்களும் பெரும் குழுக்களாகத் தனித்தனியெ
பிரிக்கின்றது எனில் சாதிகள் அந்த பெரும் குழுக்களைச் சிறு சிறு குழுக்களாகப் பிரிக்கின்றன.
உலகில் உள்ள பெரும்பாலான மதங்களில் சாதிகள் என்னும் உட்பிரிவுகள் கிடையா. இந்து மதத்தில்
மட்டும் தான் நான்கு வருணமும் அந்த வருணத்திற்கு கீழ்ப் பல ஆயிரம் சாதிகளும் எனப் பகுக்கப்பட்டிருக்கிறது.
இஸ்லாமில் சில பிரிவுகள் இருந்தாலும்
பள்ளிவாசலுக்கு தொழுகைக்கு சென்று விட்டால் அனைவரும் சமமே.
இந்து மதத்தில்
சில தாழ்த்தப்பட்ட வகுப்பினர் ஆலயத்திற்குள் பிரவேசிக்கவே கூடாது என்னும் கொடிய நிலை
இருந்தது. அந்த சமுதாயக் கொடுமையை மகாத்மா காந்தி, தந்தை பெரியார், அம்பேத்கார் போன்றவர்கள்
போக்குதற்குப் பெரும் போராட்டங்களை நடத்தியது அனைவரும் அறிந்ததே. அந்த போராட்டத்தின்
விளைவாகவே இன்று நிலைமை நிறையவே மாறியுள்ளது.
மனித சமுதாயத்தின்
ஏற்றத்தாழ்வை ஏற்படுத்தும் இந்த சாதிப்பாகுபாட்டையும், வேறுபடுத்தும் மத, சமயப் பாகுபாட்டையும்
வள்ளற்பெருமான் பல இடங்களில் கண்டிக்கிறார்.
பிறப்பொக்கும்
எல்லா உயிர்க்கும் என்று
உலக பொதுமறையாம் திருக்குறள் பிறப்பால் அனைவரும் சமமே என்கிறது. ஆனால் நான்கு வருணங்களோ,
பிரம்மாவின் முகத்தில் பிறந்தவன், (பிராமணன்) தோளில் பிறந்தவன், (ஷத்ரியன்) தொடையில்
பிறந்தவன், (வைசியன்) காலில் பிறந்தவன் (சூத்திரன்) என்று வேறு வேறாகப் பிரித்துப்
பிறப்பால் வேற்றுமை கற்பிக்கிறது.
ஷத்திரியன்
அரசாள, வைசியன் வியாபாரம் செய்ய, சூத்திரன் உடலால் உழைத்து மற்ற மூவருக்கும் உதவி செய்து
வாழ வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் பிராமணனுக்கு என்று எந்த தொழிலும் வரையறுக்கப்படவில்லை.
இது தான் மனுதர்மம் அதாவது மனு என்னும் பிராமணர் எழுதி வைத்துள்ள நீதி.
ஒரு காலத்தில்
ஒன்பதாம் வகுப்புப் பாடப்புத்தகத்தில் படம் பார்த்து தெரிந்து கொள் என்று அச்சிடப்பட்டுக்
கற்பிக்கப்பட்ட பாடப்புத்தகம் கீழ்க்கண்டவாறு கூறுகிறது.
1
ஷத்திரியன்
– ராஜாவைப்போல் படம் – நாட்டை ஆள்பவன்
2.
வைசியன்
– ஒரு வியாபாரியைப் போல் படம் – வியாபாரம் செய்பவன்
3.
சூத்திரன்
– ஏர் உழுபவன் படம் – விவசாயம் மற்ற தொழில் செய்பவன்
4.
பிராமணன்
– பூணூல் அணிந்து ஒருவன் படம் – நல்லவன்
இதில் பிராமணனுக்கு
தொழிலாக நல்லவர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதை கொஞ்சம் சிந்திக்க வேண்டும். பிராமணன்
நல்லவன் என்றால் மற்ற மூன்று வருணத்தைச் சார்ந்தவர்கள் நல்லவர்கள் இல்லையா? எனும் கேள்வி
எழும். வேத நூலை ஆதாரமாகக் காட்டிப் பிராமணருக்கு இரண்டு முக்கியத் தொழிலைக் கூறுவர்.
1.
யஜனம்
அதாவது பண்ணுவது
2.
யாஜனம்
அதாவது பண்ணிவைப்பது
யாகத்தையும், ஹோமத்தையும்
பண்ணி, பண்ணி வைத்துத் தட்சணை பெறுவது அவர்களது தொழிலாகக் கூறப்படும். மேற்கூறிய இரண்டு
காரியம் செய்ய உடலுழைப்பு தேவையில்லை. இது சமுதாயத்தில் ஒரு ஏற்பாடாகச் செய்யப்பட்டு
அதன் விளைவாக இந்த நாடு பலவகையிலும் முன்னேற வகுக்கப்பட்டது என்றும், அவரவர் மூளைப்பலத்திற்கும்,
உடல் பலத்திற்கும் ஏற்பச் செய்யப்பட்டிருக்கும் பிரிவு என்றும் சில புரட்டு ஆன்மீகவாதிகள்
பேசுவதை நான் கேட்டிருக்கிறேன்.
என்னதான் சூத்திரன்
மூளைபலம் அல்லது அறிவாற்றல் உள்ளவனாக இருந்தாலும் அவன் மற்ற மூன்று வருணத்தால் செய்யும்
தொழிலை செய்யக்கூடாது என்றும், இன்னும் மேலும்
“சூத்திரன்
வேதம் படிக்க கூடாது. படித்தால் அவன் நாக்கை அறுக்க வேண்டும், வேதம் கேட்கக் கூடாது,
கேட்டால் அவன் காதில் ஈயத்தை காய்ச்சி ஊற்ற வேண்டும் எனவும் மனுதர்மம் கூறுகிறது.
ஒரு
பிராமணன் கொலை செய்து விட்டால் அவனுக்கு தலையில் மொட்டை அடித்தல் என்கிற அதிகபட்சத்
தண்டனை போதும் என்றும், ஒரு சூத்திரன் கொலை செய்து விட்டால் அவனை பதிலுக்கு கொல்ல வேண்டும்
எனவும் ஒரு குலத்துக்கு ஒரு நீதி காட்டியிருக்கின்ற மனுதர்மத்தின் அயோக்கிய தீர்ப்புக்கு
இன்றைய ஆன்மீக வியாபாரிகள் என்ன பதில் சொல்லப்போகிறார்கள்?
மதத்தையாவது ஒரு
வகையில் ஏற்றுக்கொண்டு விடலாம். ஆனால் மதத்திற்குள்ளேயே ஏற்ப்பட்டிருக்கும் சாதி இழிவுகளை
எவன் ஏற்றுக் கொள்வான்? ஒருவன் மதம் விட்டு மதம் மாறலாம். அதற்கு சட்டமும், சமுதாயமும்
கூட அங்கீகாரம் அளிக்கிறது. ஆனால் ஒருவன் சாதி விட்டுச் சாதி மாறமுடியாது. இந்த பிறவியில்
தாழ்த்தப்பட்டவன் என்றால் சாகும் வரை தாழ்த்தப்பட்டவன் தான். இந்த சாதிக் கொடுமைகளைக்
கண்டு பகுத்தறிவாளர்கள் எப்படி வாளாயிருப்பார்கள்?
மனிதரில் சிலரை
பஞ்சமன் என்றும், சூத்திரன் என்றும் தாசன் என்றும் அடிமைப்படுத்தும் கொடுங்காரியங்களை
அறிவுள்ள எவனாவது ஏற்பானா? அதனால் தான் வள்ளலார், பெரியார் போன்றவர்கள் இந்த கொடுஞ்செயலை
எதிர்த்தார்கள்.
மலத்திலே உழலும்
பன்றி, சொறிநாய், கழுதைகள் கூட அக்ரஹாரத்தில் உலாவ அனுமதிக்கும் அவர்கள் பஞ்சமர்கள்
அத்தெருவில் நடக்கக் கூடாது என்று விதித்திருக்கும் படுபாதகச் செயலைக்கண்டு மனிதரில்
புனிதர் வள்ளலாரும், தந்தை பெரியாரும் எதிர்த்தனர்.
மதங்களும், சமயங்களும்
மனித குல ஒருமைப்பாட்டுக்குக் குந்தகம் விளைவிக்கின்றன. சாதிப் பிரிவினைகள் இன்னும்
மேலும் வேற்றுமைத்தீக்கு எண்ணெய் வார்ப்பது போல உள்ளதால் மதங்களையும், சமயங்களையும்
சாதிகளையும் இவ்விருவரும் வெறுக்கின்றனர்.
“சாதியும் மதமும் சமயமும் தவிர்ந்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்”….
(4075)
என்று சாதியையும்,
மதத்தையும், சாத்திரக் குப்பைகளையும் தவிர்த்ததாக வள்ளலார் பாடுகிறார்.
சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி
என்று தன்னுடைய
அருட்பெருஞ்சோதி அகவலில் வள்ளற்பெருமான் அவைகளைப் பொய் என்கிறார். “மதம் என்னும் பேய்
பிடித்தாடுகின்றார் எல்லாம் மன்றிடத்தே வள்ளல் செய்யும் மாநடம் காண்குவாரோ?” என்று
கேட்கிறார்.
மதம் என்னும் பேய்
பிடித்திருப்பவர்களால் உள்ளத்தில் உள்ள இறைவனை உணர முடியாது என்பது இதன் பொருள். இளம்
வயதிலேயே “மதமான பேய்பிடியாதிருக்க
வேண்டும்” என்று பாடியவர் வள்ளலார்.
“மருளான பற்பல மார்க்கங்கள் எல்லாம்
வழிதுறை தெரியாமல் மண்மூடிப்போக”
என்று சமுதாய இருளை
உண்டாக்கும் இத்தகு கொள்கைகளை ஏற்கும் மார்க்கங்கள் எல்லாம் வழிதுறை தெரியாமல் மண்மூடிப்போக
வேண்டும் என சபிக்கிறார் வள்ளலார்.
அருட்பாவில் நூற்றுக்கணக்கான
இடங்களில் சாதிகளை, சமயங்களை மதங்களை அவர்
கண்டிதிருப்பதிலிருந்து அவர் எந்த அளவு இந்த பிரிவினைகளுக்காக வருந்தினார் என்பது புலப்படுகிறது
சாதியை இருட்சாதி எனவும் சாத்திரங்களை குப்பைகள் எனவும் அவர் கண்டனம் செய்வதிலிருந்து
ஒரு சமுதாய சீர்திருத்தவாதியாக அவரை 19ம் நூற்றாண்டிலேயே காணமுடிகிறது.
தொழில் ஒழுக்கம்
பற்றி சாதிகளும், தத்துவ ஒழுக்கம் பற்றிச் சமயங்களும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன என்று
சொல்லும் வள்ளலார் இந்த சாதிகளையும், சமயங்களையும் அறவே விட்டொழிக்க வேண்டும் என்கிறார்.
அப்படி விட்டொழித்தால் தான் ஒருமைப்பாட்டுணர்வு ஓங்கும் என்பது அவர் எண்ணம்.
“கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக்
காதலித் தொருமையில் கலந்தே
உள்ளவாறிந்த உலகெலாம் களிப்புற்
றோங்குதல் என்றுவந் துறுமோ
….(4078)
என்று வேட்கை கொள்கிறார்.
மக்கள் தங்கள்
மதங்களை, சாதிகளைக் காதலிப்பதை விட்டு விட்டு அருள்நெறியைக் காதலிக்க வேண்டும் என்கிறார்.
அப்படி உலக மக்கள் அனைவரும் அருள் நெறியைக் காதலித்தால் ஒருமை என்ற உயர்ந்த எண்ணம்
எல்லோர் மனங்களிலும் ஓங்கும் அன்றோ!
“குலத்திலே சமயக் குழியிலே நரகக்
குழியிலே குமைந்துவீண் பொழுது
நிலத்திலே போக்கி மயங்கிஏ மாந்து
நிற்கின்றார் நிற்க நான் உவந்து
…. (4729)
என்று வேதனையுடன்
அவர் எண்ணங்கள் வெளிப்படுகிறது.
குலங்கள், சமயங்கள்
என்கிற பிரிவுகள் மானுட சமுதாயத்தை நரகக்குழியிலே தள்ள வந்தவை என்கிறார். மக்கள் இந்த
உண்மையை உணராது இன்னும் ஏமாந்து நிற்கின்றார்கள். மனித சமுதாயம் இக்கொடுமையில் இன்னும்
உழலுவது நாம் காணும் காட்சியன்றோ! வள்ளலார் காலத்துக்கு முன்னும் அவர் காலத்திலும்,
அவருக்கு பின்னும் இன்று வரை இந்த மதச்சண்டைகள், சாதிச் சண்டைகள் தொடர்ந்தவாறே உள்ளது.
அந்த சண்டைகளின் வாயிலாக ஏராளமான விலை மதிப்பில்லா மனித உயிர்கள் பலியாகிக் கொண்டே
உள்ளன. இத்தகைய சண்டை சச்சரவுகள் நீங்க வேண்டும். இந்த சழங்குகள் ஒழிய வேண்டும். சாதிப்
பற்று, சமயப்பற்று, விலகி மக்கள் ஒருவர் உள்ளத்தை ஒருவர் பற்ற வேண்டும் என்பதும் அதனையும்
தாண்டி அனைத்து உயிர்குலத்தையும் அரவணைத்து வாழ வேண்டும் என்பதும் அவர் அவா. அவர் கனவு.
“மதித்த சமயமத வழக்கெல்லாம்
மாய்ந்தது
வருணாசிரமம் என்னும் மயக்கமும்
சாய்ந்தது”
என்று அவர் பாடுகின்றபோது
அவர் கனவுகள் பலித்துவிட்டதாகக் கற்பனையில் சஞ்சாரம் செய்கிறார். அந்த கனவுகள் பலித்தால்
அன்றி உலகம் உய்ய வழியே இல்லை.
“சாதி சமயச் சழக்கை விட்டேனடி
– அக்கச்சி
அருட்சோதியைக் கண்டேனடி அக்கச்சி”
என்பவையும் அருட்பா
வரிகளே. அருட்பெருஞ்சோதியான இறைதரிசனம் காண வேண்டுமானால் சாதி, சமய சழக்குகள் என்னும்
இழிவுகளை கலைதல் அவசியம்.
“இச்சாதி சமயவிகற் பங்களெலாம்
தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்கப் பொதுவடைதல்
வேண்டும்”
என்று வேண்டுகோள்
வைக்கிறார் அவர். உலகம் சமயம் தவிர்த்த சன்மார்க்க உலகமாதல் வேண்டும். பேருபதேசம் என்கிற
திருஅருட்பா உரைநடைப்பகுதியில் வள்ளலார் கூறும் கூற்றைக் கவனிப்போம். இது ஸ்ரீமுக வருடம்
ஐப்பசி மாதம் 7 ஆம் நாள் வடலூர் மேட்டுக்குப்பத்தில் சுத்த சன்மார்க்கக் கொடியை ஏற்றி
வைத்து வள்ளலார் ஆற்றிய உபதேசத்தின் ஒரு பகுதி.
“இங்குள்ள நீங்கள் எல்லாரும் இதுவரைக்கும்
இருந்தது போல் இனியும் வீண்காலம் கழித்துக் கொண்டிராதீர்கள்…” என்று ஆரம்பிக்கும் வள்ளலார் மேலும் தொடர்வது
“சைவம், வைணவம்
முதலிய சமயங்களிலும், வேதாந்தம்,சித்தாந்தம் முதலிய மதங்களிலும் லட்சியம் வைக்க வேண்டாம்.
அவற்றில் தெய்வத்தை பற்றி குழுவுக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச்
சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமானால் நமக்கு காலமில்லை. ஆதலால் அவற்றில் லட்சியம் வைக்க
வேண்டாம். ஏனனில் அவைகளிலும் அச்சமய மதங்களிலும் அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்
கூடுமேயல்லாது ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்று
கொள்கின்றதற்கு முடியாது. ஏனனில் நமக்கு காலமில்லை. மேலும் இவைகளுக்கெல்லாம் சாட்சி
நானேயிருக்கின்றேன். நான் முதலில் சைவ சமயத்தில் லட்சியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று
அளவு சொல்ல முடியாது. அது பட்டணத்துச் சாமிகளுக்கும், வேலாயுத முதலியாருக்கும் இன்னும்
சிலருக்கும் தெரியும். அந்த லட்சியம் இப்போது எப்படிப் போய்விட்டது பார்த்தீர்களா?
அப்படி லட்சியம் வைத்ததற்கு சாட்சி வேறே வேண்டியதில்லை. நான் சொல்லியிருக்கின்ற திருவருட்பாவில்
அடங்கியிருக்கின்ற ஸ்தோத்திரங்களே போதும். அந்த ஸ்தோத்திரங்களையும் மற்றவர்களுடைய ஸ்தோத்திரங்களையும்
சபைக்கு கொண்டு வந்தால் அவைகளே சாட்சி சொல்லிவிடும். ஏன் அவ்வளவு மிகுந்த அழுத்தம்
எனக்கு அப்போதிருந்ததென்றால் அப்போது எனக்கு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.
இப்போது ஆண்டவர்
என்னை ஏறாதநிலை மேலேற்றி இருக்கிறார். இப்போது எல்லாவற்றையும் விட்டுவிட்டதினால் வந்த
லாபம் இது. ஆதலால் நீங்களும் விட்டு விட்டீர்கள்களானால் என்னைப்போல் பெரிய லாபத்தை
பெறுவீர்கள். இதுவரைக்கும் விடாமல் வைத்துக் கொண்டிருந்தவர்கள் ஏதாவது லாபத்தைப் பெற்றுக்
கொண்டார்களா? பெற்றுக் கொள்ளவில்லை. நான் அப்படி அந்த சமயத்தில் வைத்திருந்த லட்சியமே
என்னை இந்த நிலையில் தூக்கிவிட்டதென்றாலோ அந்த லட்சியம் தூக்கிவிடவில்லை. என்னை இந்த
இடத்துக்கு தூக்கிவிட்டது யாதெனில்… என்னையேறா நிலை மிசையேற்றி விட்டது யாதெனில் தயவு…
தயவு என்னும் கருணை தான் என்னைத் தூக்கிவிட்டது.
அந்த தயவுக்கு
ஒருமை வரவேண்டும். அந்த ஒருமை இருந்தால் தான் தயவு வரும். தயவு வந்தால் தான் பெரிய
நிலைமேல் ஏறலாம். இப்போது என்னுடைய அறிவு அண்டங்களுக்கு அண்டங்கள் அப்பாலும் கடந்திருக்கிறது.
அது ஒருமையினாலேதான் வந்தது. நீங்களும் என்னைப் போல் ஒருமையுடனிருங்கள்” (பேருபதேசம்)
மேற்கண்ட உபதேசத்திலிருந்து
அவருடைய மனம் நமக்குத் தெரிகிறது. தெய்வங்கள் என்று ஒவ்வொறு சமயமும் குழு உக் குறியாக
ஒன்றைக் காட்டிக் கொண்டு உள்ளது. அதனையும் அந்தத் தெய்வங்களைக் காட்டும் சமயங்களையும்
பற்றுவதால் நாம் வாழ்வில் மிக உயர்ந்த நிலையை அடைய முடியாது. மேலும் அவைகள் ஒருமைக்கு
ஊறு விளைவித்து நம்மிடம் தயவு என்னும் குணம் வராமல் செய்கின்றன என்பது தெரிகிறது. கருணையும்
சிவமே பொருள் எனக்காணும் காட்சியும் பெறுக… என்கிற பாடல் வரிகளிலிருந்து கருணையே சிவம்,
அதைப்போல் சிவம் என்பது கருணை என்பதை வள்ளலார் நமக்கு உணர்த்துகிறார்.
வள்ளலார் வலியுறுத்தும்
ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை வரவேண்டுமானால் சமயங்கள், மதங்கள், வருணங்கள், சாதிகள் இல்லாத
சமுதாயம் உருவாக வேண்டும். ஏனென்றால் ஆன்மநேயத்திற்கும், மனித நேயத்திற்கும் இவைகள்
தடைகள் எனலாம்.
அவருடைய சுத்த
சன்மார்க்க சத்தியச் சிறு விண்ணப்பத்தில் எல்லாமுடைய அருட்பெருஞ்சோதி அற்புதக் கடவுளே!
இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கியத் தடையாகிய சமயங்கள், மதங்கள்,
மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம்
அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமான ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை
எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து
விளங்கச் செய்வித்தருளல் வேண்டும் என்கிற அறைகூவலை மானுட சமுதாயத்திற்கு விடுக்கின்றார்.
மேலும் சமரச சுத்த சன்மார்க்க சத்தியப் பெரு விண்ணப்பத்திலும்
“”சிறுபருவத்தில் ஜாதியாசாரம்
ஆசிரம ஆசாரம் என்னும் பொய்யுலக ஆசாரத்தை பொய்யென்று அறிவித்து அவைகளை அனுட்டியாமல்
தடை செய்வித்து அப்பருவம் ஏறுந்தோறும், ஏறுந்தோறும் எனதறிவை விளக்கஞ்செய்து செய்து
என்னை மேனிலையில் ஏற்றி ஏற்றி நிலைக்கவைத்து அருளினீர்” என்று எழுதுகிறார். இதிலிருந்து அடிகளாருக்குச் சிறுவயதிலேயே சாதி,
ஆசாரம் முதலியன இல்லை எனத் தெளிவாகத் தெரிகிறது. மேலும் அருட்பாவில் சிலவற்றைக் காண்போம்.
“பேருற்ற உலகிலுறு சமயமத நெறிஎலாம்
பேய்ப்பிடிப் புற்றபிச்சுப்
பிள்ளைவிளை யாட்டென உணர்ந்திடா
துயிர்கள் பல
பேதமுற் றங்கும் இங்கும்
பேருற் றிறந்துவீண் போயினார்”
– (3677)
என்று பாடுகிறார்
எவ்வளவு உண்மையான வாசகங்கள் இவை.
பேய்ப்பிடித்தாட்டுகின்ற
மதங்களால், இந்தப் பிள்ளை விளையாட்டுகளில் பலியாகும் மானுட உயிர்கள் கணக்கில்லாதவை.
மதப்போரில் இறந்து வீண்போனவர்கள் கோடிக்கணக்கில் இருக்கும். இதனைக் கண்டித்து நூற்றைம்பது
ஆண்டுகளுக்கு முன்பே அடுக்கடுக்காக ஆறாம் திருமுறையில் சீர்திருத்த சிந்தனை விதைகளைத்
தூவிச் சென்ற ஆன்மிகவாதி வள்ளலாரைப் பின்னாளில் வந்த தந்தை பெரியாரோடு ஒப்பிட வேண்டிய
காலகட்டம் இது.
உலகம் தோன்றிய
நாள் முதல் இதுவரை மண்ணில் பல சமயங்கள் பல காலகட்டங்களில் தோன்றியுள்ளன. இன்னும் தோன்றக்கூடும்.
தோன்றிய சமயங்களில் பல அழிந்து விட்டன. பல அழிந்து வருகின்றன. எவ்வளவு சமய நெறிகள்
தோன்றி மறைந்தன என எவருக்கும் தெரியாது.. மதங்கள் மனிதனைப் படைக்கவில்லை. மனிதனே மதங்களைப்
படைத்துள்ளான்.
அந்த மதங்கள் அனைத்தும்
தத்தம் கடவுளைக் காட்டிச் செல்வதோடு அந்தந்த மதங்களுக்கு என்று கொள்கைகள், மட்டுமில்லாது
மற்ற மதத்தைக் குறை கூறித்தான் வளர வேண்டியுள்ளது. இதனால் சமயப் போர்கள் ஏற்ப்பட்டன.
எண்ணாயிரம் சமணர்களை வாதில் வென்ற சம்பந்தர் கழுவேற்றிக் கொன்றார் என்பதற்கும் ஆதாரங்கள்
உண்டு. இயற்கைச் சீற்றங்களான புயல், வெள்ளம், மழை, இடி, பூகம்பம், சுனாமி, மின்னல்
முதலியவற்றால் கோடிக்கணக்கான மனிதர்கள் மாண்டார்கள் எனில் அதற்கு அடுத்து மதப்போர்களிலும்
கோடிக்கணக்கான மனிதர்கள் மாண்டுள்ளனர்.
ஒரு மதத்தில் ஏதோ
குறை இருக்கின்ற காரணத்தால் தான் அல்லது அதனைப் பின்பற்ற இயலாத காரணத்தால்தான் காலப்போக்கில்
அந்த மதத்திற்கு ஒரு மாற்று மதம் உருவாகியுள்ளது. இப்படியே இன்றைக்கு உலகில் பல மதங்களும்
சமயங்களும் உண்டாயிற்று.
“ஆறுகோடியாம் சமயங்கள்” என்று வள்ளலார் சுட்டிக்காட்டுவதிலிருந்து
கோடிக்கணக்கில் சமயங்கள் உள்ளன என்று தெரிகிறது.ஆன்மாவால் ஒன்றுபடும் அகில அண்ட ஆன்மநேய
ஒருமைப்பாட்டுணர்வுக்கும், அகில் உலக சகோதரத்துவத்திற்கும் வள்ளலாரின் சுத்த சன்மார்க்க
சங்கத்தை விட்டால் வேறு வழியில்லை. இவர் தந்த இந்த சுத்த சன்மார்க்க நெறியைச் செந்நெறி.
பொதுநெறி, கருணைநெறி, ஞானநெறி, தயவுநெறி என்று சொல்லிக் கொள்ளலாம். இப்படிப்பட்ட சாதிவேறுபாடு,
சமய வேறுபாடு இல்லாத உயிரை உயிராய் மதிக்கும், உயிருக்குள் உடவுளைக்காணச் செய்யும்
உயரிய நெறியைத் தந்தை பெரியார் எப்படி எதிர்ப்பார்?
அவர் ஏற்றத்தாழ்வுகளைக்
கற்பிக்கும் சனாதன இந்து சமயத்தையும் அது போன்று மற்ற சமயத்தில் உள்ள குறைகளையும் கண்டிக்கிறார்.
வள்ளலாரின் ஜீவகாருண்ய
சமயத்தைத் தந்தை பெரியார் மட்டுமல்ல, எவரும் எதிர்க்க முடியாது. அதனால் தான் பெரியாரும்,
வடலூர் சென்று வள்ளலார் கட்டிய சத்திய ஞான சபையைப் பார்த்துள்ளார்.
வள்ளலாரின் சத்திய
ஞானசபையைப் பார்க்க விழைந்த பெரியார் அங்குச் சென்றார்.
ஞானசபையின் முகப்பில்
எழுதியிருந்த “புலை,
கொலை தவிர்த்தவர்கள் மட்டும் உள்ளே வரவும்” என்று எழுதியிருந்த வரிகளைக்
கண்ணுற்ற பெரியார் உள்ளே செல்லாமல் நின்றுவிட்டார். அவருடன் வந்த இயக்கத் தொண்டர்கள்
எவ்வளவோ வலியுறுத்தியும் வள்ளலாரின் உணர்வுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனக் கூறியும்
உள்ளேச் செல்ல மறுத்து வெளியில் இருந்தவாறே ஞானசபையைப் பார்த்து வந்துள்ளார்.
பகுத்தறிவுப் பகலவன்
தந்தை பெரியார் சாதி, மதங்களைப் பற்றிக் கூறுகின்ற கூற்றுகளை ஆராய்வோம். “இந்தச் சாதியானது கடவுள், மதம், இவ்விரண்டையும் ஒட்டி எழுந்துள்ள
சாத்திரம், புராணம் ஆகிய எல்லாவற்றிலும் நிலை கொண்டு நிற்கிறது. இந்து மதக்கோயில்களின்
அமைப்பு சாதிவேருபாட்டைக் கோயில் உள்ளவரையிலும் நிலை நிறுத்தி வைக்கும்படி அமைக்கப்பட்டுள்ளது”
என்னும் பெரியார்.
“இந்துமதக் கோயில்களின் உள்ளே பல சுற்றுகள் இருக்கின்றன. கோயிலின்
உள்ளே கருவறை என்ற ஒன்று தனிக்கோயிலாக இருக்கின்றது.
இன்னின்ன்ன சாதியார் இன்னின்ன சுற்றுகளில் நின்று கும்பிடவேண்டும் என்பதற்காகச் சுற்றுகள்
உள்ளன. கருவறை பார்ப்பனப் புரோகிதர்களுக்கு உரிய இடம். பார்ப்பனச் சாதியாரும், சூத்திரரும்
இவ்வாறு கோயிலுக்குள்ளே நின்று சாமியை வழிபடுவர். இவர்களில் சேராத பஞ்சமர்கள் அதாவது
தாழ்த்தப்பட்டவர்கள் வெளியே நின்று கோபுரத்தைப் பார்த்துக் கும்பிட்டுவிட்டுச் “சாமி!
எனக்கு அடுத்த பிறவியில் உயர்ந்த சாதியாகப் பிறக்க வரங்கொடு” என்று வேண்டிக் கொண்டு
செல்ல வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டுள்ளது என்று பெரியார் கூறுகிறார். சாதிக் கொடுமைகளுக்கு முட்டுக் கொடுத்துக்
கொண்டிருக்கும் மதம், அந்த மதம் காட்டும் கடவுள் இவைகளை பெரியார் ஓயாது எதிர்த்தார்.
“A search in secret India” என்னும் வெளிநாட்டார்
எழுதிய நூலில் சங்கராச்சாரி கொடுத்த பேட்டி வெளியாகியிருக்கிறது.
அதில் எந்த விலை உயர்ந்த சோப்பு போட்டு குளித்தாலும் தாழ்த்தப்பட்டவனாகப்
பிறந்தவனின் தீட்டு நீங்காது என்று திருவாய் மலர்ந்துள்ளார். அவர் அளித்துள்ள
இப்பேட்டியே அவரது சாதிவெறியைக் காட்டுவதாக உள்ளது. (17.7.1981 விடுதலை)
ஒரே நாட்டு மக்கள்
பிறவியில் பல சாதிகளாகப் பிரிக்கப்பட்டிருப்பது இந்தியாவில் தான் இருக்கின்றதே தவிர
வேறு எங்கும் இல்லை என்னும் பெரியார், இதனால் மனிதரில் சிலர் எவ்வளவு கீழ்த்தரமாக நடத்தப்படுகின்றனர்
என்பதை எவரும் புரிந்து கொள்ளும் வகையில் பேசுகிறார்.
“சாதியின் கொடுமையால், நாற்றமெடுத்த மலத்தை விட மனிதன் கேவலப்படுத்தப்படுகிறான்.
இது உண்மை. வாய்ப்பேச்சாக நான் சொல்லவேயில்லை. எப்படி என்றால் எப்படி மல உபாதைக்கு
சென்றவன் எப்படி அந்த பாகத்தை மட்டும் ஒரு சொம்பு தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்கிறான்.
மலத்தை காலில் மிதித்துவிட்டால் அந்த காலை மட்டும் தண்ணீரை விட்டுக் கழுவிவிட்டால்
அந்த குற்றம் போய்விட்டதாகக் கருதப்படுகிறது. ஒரு மனிதனை மற்றொரு மனிதன் தொட்டுவிட்டால்
அவரைத் தொட்டால் ஏற்படும் தோஷம் தன்னுடைய உடலை உச்சி முதல் உள்ளங்கால் வரை குளிர நனையக்
குளித்தாலொழியப் போவதில்லை என்கிறார்கள். ஆகவே மலத்தினை விட மனிதன் எவ்வளவு கேவலமாக
நடத்தப்படுகிறான் என்பதை பாருங்கள். மனிதனை மனிதன் தொடுவதால் ஏற்படுகின்ற கெடுதலென்ன?
தோஷமென்ன? குற்றமென்ன? ஏதுமில்லை. ஆனால் பிறகு ஏன் தோஷம் கூறப்படுகிறது? ஒருவரை ஒருவர்
ஏமாற்றி வாழ்வதற்காகவே கூறப்படுகிறது. இதைவிட வேறு ரகசியம் இல்லை. (திராவிடன்
5.10.1929) என்ற பெரியாரின் எண்ணம் எவரையும் சிந்திக்க வைத்தது. சாதி உணர்வுகளுக்கு
அடிப்படை, மத உணர்வுகளுக்கு அடிப்படை கடவுள் உணர்ச்சி என்பதால் அதனை வேரோடு வேரடி மண்ணோடு
அழிக்க முனைந்த பெரியார் “கடவுளாவது வெங்காயமாவது” என்றார். அது ஒரு கற்பனை என்றார்.
குடியரசு நாளிதழில்
அவர் கொடுக்கும் விளக்கத்தைப் பர்ப்போம்.
மனிதனுக்கு கடவுள் உணர்ச்சி தோன்றிய காலந்தொட்டே இந்த நாட்டில்
மேல் சாதி, கீழ்சாதி உணர்ச்சி தோன்றிவிட்டது. கடவுள் பேராலேயே மேல்-கீழ் சாதி உணர்ச்சிகள்
காட்டப்பட்டிருக்கின்றன. இந்து மதம் என்பது
வைணவத்திலாவது, சைவத்திலாவது சாதிப்பிரிவு, உயர்வு தாழ்வு காணப்படாத கடவுள்களோ, அவதாரங்களோ,
திருவிளையாடல்களோ,கடவுள்களைக் காட்டிய பெரியோர்களோ, தத்துவம் புராணங்களோ இதிகாசங்களோ
ஏதாவது ஒன்றைக் காட்ட முடியுமோ? 64 நாயன்மார்களும் 64 சாதிக்காரர்களாய் பிறந்திருக்கிறார்கள்.
12 ஆழ்வார்களும் 12 சாதிக்காரர்களாகப் பிறந்திருக்கிறார்கள். இந்து மதத்திற்கு ஆதாரமான,
சட்டமான மனுதர்ம சாஸ்திரம் முதலியவைகளை எடுத்துக் கொண்டால் அவைகளில் அளவில்லாத சாதிகளும்,
அதற்கு தராதம்மியமும் காணப்படுவதை யாரும் மறுக்க முடியாது என்ற விளக்கத்தில் ஆதாரபூர்வமாக மக்களின்
பகுத்தறிவு உனர்ச்சியை தூண்டுகிறார்.
இப்படி இந்து மதத்தினை
கடுமையாக விமர்சித்து எழுதியிருக்கும் தந்தை பெரியார் எந்த மதம்? குடியரசு நாள்
18.1.1945ல் வந்த அவரது தலையங்கம் படித்தால் தெரியும்.
“இந்து மதத்தை விட்டு விட்டால் எங்களை என்ன மதம் என்று சொல்லிக்
கொள்வது? என்று கேட்கலாம். உங்களுக்கு துணிவு இருந்து நீங்கள் வேறு எந்த மதத்தின் பேரைச்
சொல்லிக் கொண்டால் சமுதாயத்தில் உங்களைத் தீண்டாமையும் இழிவும் அணுகாதோ அதைச் சொல்லுங்கள்.
அப்படிச் சொல்லிக் கொள்வதில் உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்குமானால் நீங்கள் திராவிடர்கள்
என்றும், திராவிட சமயத்தவர்கள் என்றும் சொல்லிக் கொள்ளலாம். அதிலும் கஷ்டமிருந்தால்
சமரச சமயத்தால் மனித சமுதாய ஜீவகாருண்ய சமயத்தார் என்று சொல்லிக் கொள்ளலாம். பொருள்
இல்லாததும், பித்தலாட்டமானதும், இழிவையும் அந்நிய ஆதிக்கத்தையும் சுரண்டலையும் தருவதுமான
ஒரு சுயநல கற்பனையான இந்து மதத்தின் பேரைச்சொல்லிக் கொள்வது என்பது வெட்கக்கேடான காரியமாகும்” என்று எழுதுகிறார். நன்றாக ஆராய்ந்து சிந்தித்து
நம்மை திராவிட சமயம் என்று சொல்லிக்கொள்ளலாம் என்று சொல்பவர் அதில் சிரமம் இருப்பின்
சமரச சமயம் அல்லது ஜீவகாருண்யச் சமயம் என சொல்லிக் கொள்ளலாம் என வலியுறுத்துகின்றார்.
சமரச சமயம் என்பதும் ஜீவகாருண்யச் சமயம் என்பதும் வள்ளலார் கண்ட பொது நெறி என்பது அனைவருக்கும்
தெரியும். வள்ளலாரைவிடச் சமரசத்தையும், ஜீவகாருண்யத்தையும் ஆழமாகவும், அழுத்தமாகவும்
வலியுறுத்தியவர்கள் உலகில் வள்ளலாருக்கு முன்பும், பின்பும் யாரும் இல்லை எனலாம். இனிவரப்போவதும்
இல்லை. தமிழ்த் தென்றல் திரு.வி.க அவர்கள் வள்ளலாரின் சமயத்தை ஜீவகாருண்ய சமயம் என
சுட்டிக் காட்டியதை இவ்விடத்தில் நினைவூட்ட ஆசைப்படுகிறேன். வள்ளலாரின் ஜீவகாருண்ய
சமயத்தில் தான் பொருள் உண்டு. அதாவது அன்பு, அறிவு என்கிற இரண்டு அகத்து உறுப்பு உண்டு. இம்மார்க்கத்தில் பித்தலாட்டம் இல்லை. எந்தப் பிரிவினையும்
இல்லை. அதனால் இழிவும் இல்லை. எவருடைய ஆதிக்கமும் இல்லை. சுரண்டலும் இல்லை. வள்ளலார்
காட்டியுள்ள இந்த நெறி பெரியாரும் மதிக்கும் கொள்கையாகவே உள்ளது. ஒருவருக்கொருவர் உயர்வு
தாழ்வு கற்பித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காகவும், சாதியை முற்றிலும் ஒழிக்க வேண்டும்
என்பதத்காகவும் தான் தந்தை பெரியார் தனது இறுதி மூச்சுவரை உழைத்தார். உயர்வு, தாழ்வு
நிலை எந்த இடத்தில் இருந்தாலும் எந்த மதத்தில்
இருந்தாலும் அவர் கண்டிக்கத் தவறியதில்லை. சாதி உட்பிரிவுகள் இந்து மதத்தில் அதிகமாகப்
புரையோடி விட்டதால் இந்து மதத்தை மட்டும் மிகவும் கடுமையாகத் தாக்குகிறார். இந்து மதத்தைப்
பற்றிப் பெரியார் அடிக்கடி கூறியது உலகத்தில் இந்து மதத்தில்
மத,வேத,சாஸ்திர, புராண, இதிகாச ஆதாரங்களில், மதக் கடவுள்களிடத்தில், மத சம்பந்தமான
கற்புக்கரசிகள் முதலிய பெண்களிடத்தில் காணும்படியான பொய், பித்தலாட்டம், ஏமாற்றம்,
விபச்சாரம், பலாத்காரம், ஆகிய காரியங்கள் நடப்புகள் வேறு மதத்தில், மத ஆதாரங்களில்
காணப்படுவதில்லை.”
“இந்து மதம் என்றால்
என்ன? எப்போது உண்டாயிற்று? அதன் பிரமாணம், தத்துவம், ஆதாரம், என்னவென்று யாரையும்
கேட்டுக் கொள்ள முடியாது. இந்து மதத்தின் பெயரால் மதம் என்று சொல்லிக் கொண்டு ஒருவருக்கொருவர்
சண்டை போடுகிறோம். உட்பிரிவுகளாகிய சைவ, வைணவ சமயங்களின் பெயரா ஒருவருக்கொருவர் சண்டையிடப்
பழக்கப்பட்டு இருக்கிறோம். இதில் ஒரு கடவுள் பெரிது, ஒரு கடவுள் சிறிது என்றும் ஒரு
கடவுள்காரர் மற்ற கடவுளை வணங்குதல் பாவம் என்றும் ஒரு மதத்துக்காரன் மற்ற மதத்துக்காரனை
பார்ப்பது பாவமென்றும், சண்டை இடுகிறோமேயல்லாமல் இந்து மதம் என்றால் என்ன என்பதை நம்மில்
ஒருவரும் அறிவதில்லை. இந்து மதம் எப்போது உண்டானது என்றால் அது அனாதிமதம், வேதகாலம்
தொட்டு இருக்கிறது என்கிறார்கள். வேதம் என்பது எப்போது யாரால் உண்டானது என்றால் அதுவும்
அனாதியானது கடவுளால் உண்டாக்கப்பட்டது என்கிறார்கள். அய்யோ! வேதம் என்பது கடவுளால் உண்டாக்கப்பட்டது
என்று சொல்லுகிறீரே! கடவுள் எல்லோருக்கும் சமமானவர் தானே. அதை நான் பார்க்கலாமா? என்றால்
ஆகா! மோசம் வந்துவிடும் நீ பார்க்கக் கூடாது, நீ சூத்திரன், அதைப் பார்த்தால் கண்ணைப்
பிடுங்கி விட வேண்டும், படித்தால் நாக்கை அறுத்துவிட வேண்டும், யாராவது கேட்டால் காதில்
ஈயத்தை காய்ச்சி ஊற்றவேண்டும் என்கிறார்கள்.”
“அது போகட்டும்
இந்த இந்துமதம் என்ற வார்த்தையாவது நமது தமிழ் நூல்களில் எதிலாகட்டும் எங்கேனும் இருக்கிறதா?
இல்லை. ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன் ஏற்படுத்தப்பட்ட தமிழ் நூல்கள் பல இருக்கின்றனவே,
அவற்றில் ஏதாகினும் எந்த இடத்திலாகிலும் இந்து மதம் என்கிற வார்த்தை பெயருக்காவது இருக்கிறதா
என்று பார்த்தால் இல்லை. இந்து மதத்தின் பெயரின் ரகசியமே நமக்கு தெரியவில்லை. இது எவ்வளவு
மானக்கேடான நிலையாக இருக்கிறது? இந்து என்கிற வார்த்தை பெரிஷியன் பாஷையில்தான் வழங்கப்படுகிறது.
அதற்கு அர்த்தம் என்னவென்றால் திருடன் என்பது பொருள். ஒரு சமயம் குறிப்பிடும் இந்து
என்கிற வார்த்தைக்குப் பொருள் அது இல்லையென்று வைத்துக் கொண்டாலும் ஆராய்ச்சியாளர்கள்
சிந்து நதிக்கரையில் ஆரியர்கள் முதன் முதல் நமது நாட்டில் குடியேறினவர்களாதலினால் அந்த
நதியின் பெயரால் அவர்கள் அழைக்கப்பட்டு “சிந்து” என்பது “இந்து”வாகி “இந்தியா” என்று மாறிவிட்டது என்று
சொல்கிறார்கள். அதற்கு ஆதாரமாக ஆங்கில அகராதிகளிலும் இந்து என்றால் சூரியன் என்றும்
இந்து மதம் என்றால் பார்ப்பன மதமென்றும் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆங்கில அகராதிதான்
அப்படி சொல்கிறது என்பதற்காக அதன் மீது நாம் குறை சொல்வதாக இருந்தாலும் ஆரியர்களாலேயே
எழுதப்பட்டதும், ஒப்புக் கொள்ளப்பட்டதும் ஆன வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, ஆகமம், இவைகளின்
பாஷியம், புராணம் என்பனவற்றில் ஒரு ஆதாரத்திலாவது இந்து, இந்துமதம் என்ற வார்த்தைகள்
கிடையவே கிடையாது என்று தந்தை பெரியார் கூறுகிறார். இதில் உண்மை உள்ள காரணத்தினாலேயே
ஆரியர் இனத்தில் பிறந்த அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அதனை தெளிவாகவும்,
விரிவாகவும் எழுதி உள்ளார். இதே செய்தியை தமிழக முதல்வர் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள்
ஒரு கூட்டத்தில் கூறியதால் இந்துமத அமைப்புகள் கடுமையாகக் கலைஞரை விமர்சனம் செய்தன.
இன்னும் சொல்லப்போனால் இந்து மதத்தில் உள்ள இந்தக் குறைபாடுகளைச் சுட்டிக்காட்டியே
அண்ணல் அம்பேத்காரும் புத்தமதத்தை தழுவிய வரலாறு அனைவருக்கும் தெரியும்.
எல்லா மதத்திலும்
உள்ள குறைகளை சுட்டிக் காட்டும் பெரியார் ஓரளவு ஏற்றுக் கொண்ட மதங்கள் புத்தமதமும்,
இஸ்லாமும் ஆகும். இதில் எந்த மதத்தைத் தழுவினாலும் ஒரு குறிப்பிட்ட மதத்துக்காரன் என்கிற
முத்திரையோடு மற்ற மதத்துக்காரணைக் குறை கூற நேர்வதால் மதங்களை தழுவாதப் பொதுமனிதனாக
வாழச் சொல்லுகிறார் பெரியார். நமது சமுதாயம் இனிமேலும் சாந்தியோடு வாழ வேண்டுமானால்
மதம் அற்ற ஒரு புது உலகத்தை நாம் சிருஷ்டிக்க வேண்டும் என்று விடுதலை இதழில் எழுதுகிறார்.
இதையே வள்ளலார்,
‘சாதிகுலம் என்றும் சமயமதம் என்றுமுப
நீதி இயல் ஆச்சிரம நீட்டென்றும்
– ஓதுகின்ற
பேயாட்டமெல்லாம் பிதிர்ந்தொழிந்த
வேபிறர்தம்
வாயாட்டம் தீர்ந்தனவே மற்று”
– (5508)
என்று இந்தச் சாதி
மத இழிவுகளைப் பேயாட்டம் என்று குறிப்பிட்டு பாடுவதோடு அவைகள் ஒழிந்து போகட்டும் என்று
பாடுகிறார்.
மனித சமுதாயத்தில்
சில குறிப்பிட்ட பிரிவினருக்கு ஏற்படும் இழிவு நீங்க வேண்டுமானால் மானத்தோடு மனிதன்
வாழவேண்டுமானால் ஏற்றத்தாழ்வு கற்பிக்கும் மதங்களை ஒழிக்க வேண்டும் என்றார் பெரியார்.
உங்களுக்கு ஒழுக்கம்
ஏற்பட வேண்டுமானால் நீங்கள் மனிதத்தன்மை பெற வேண்டுமானால் சாஸ்திர, புராண சம்பிரதாயங்களிலும்
மதங்களிலும் உங்களுக்குள்ள பற்றுதலை, பக்தியை நீங்கள் உடனே விட்டொழிக்க வேண்டும் என்று
மேலும் அவர் விடுதலை இதழில் எழுதுகிறார். வள்ளலார் சுட்டிக்காட்டியது போல் ஒருமைப்பாட்டு
உணர்வுக்கு ஊறு விளைவிக்கும் கொடிய ஆயுதமாக மதம் இருக்கின்ற காரணத்தால் அதனை நோக்கி
அக்னிக்கணைகளைப் பேச்சாலும் எழுத்தாலும் எடுத்து வீசியவர் ஈரோடு இராமசாமி என்னும் பேரறிவுப்
பெட்டகம்.
“ஒருவருக்கொருவர்
உயர்வு – தாழ்வு கற்பித்துக் கொடுமைப்படுத்தி ஒற்றுமை இல்லாமல் செய்திருப்பதற்கும்
மக்கள் பாடுபட்டுச் சம்பாதிக்கும் பொருள்கள் எல்லாம் நாட்டின் முன்னேற்றத்திற்குப்
பயன்படாமல் பாழாவதற்கும் மக்களின் அறிவு வளர்ச்சி கட்டுப்பட்டுக் கிடப்பதற்கும் சிறப்பாக
மக்களின் ஒழுக்கங்கள் குன்றி மக்களிடத்தில் மக்களுக்கு அன்பும் உபகாரமும் இல்லாமல்
இருப்பதற்கும் கடவுள் என்பதும் அதன் சமயமும் சமயாச்சாரிகள் என்பவர்களும் அவரது பாடல்களும்
நெறிகளுமே காரணம் என்பதை வலியுறுத்திக் கூறுகிறேன்” என்று பெரியார் சொல்வதிலிருந்து
நம் அறிவு வளர்ச்சிக்குப் பயன்படாமல் மதம் என்னும் குறுகிய அமைப்பில் கிடந்து உழலுவது
நியாயமா? என்று யோசிக்க வேண்டும்.
மதத்திற்கு அடிப்படைக்
கடவுள் கொள்கை ஆக இருப்பதால் மதத்தை எதிர்க்கும் பெரியார் கடவுளையும் எதிர்க்கத் துணிந்தார்.
கடவுள் என்று ஒட்டுமொத்தமாக சனாதனத்தின் வேரிலேயே வென்னீர் ஊற்றினார். கடவுள் இல்லை
என்ற இரண்டு வார்த்தையிலேயே கடவுளை ஒட்டிக் காட்டப்படும் மதம், சமயம், வேதம், சாஸ்திரம், ஸ்மிருதி, புராணம், இதிகாசம்
முதலியன எல்லாமே இல்லை என்றாகிவிடும் ஆணிவேரான கடவுளை அசைத்து வேரோடு பிடுங்கிவிட்டால்
மேலே நிற்கும் கிளைகளான மற்றவைகள் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என நினைத்துத்
தான் “கடவுள் இல்லை, கடவுள் இலை, கடவுள் இல்லவே
இல்லை” என அழுத்திச் சொன்னார். திரும்பத் திரும்பக் கூறினார். ஏன் அப்படி
அவருக்கு கடவுள் மீது வெறுப்பு? அதற்கான அவர் விளக்கத்தை நோக்கினால் அது விளங்கும்.
முதலில் சாதி வித்தியாசம்
என்கிற கொடுமைத்தன்மை என்பது இந்த நாட்டைவிட்டு ஒழிய வேண்டுமா? வேண்டாமா? என்ற முடிவு
தெரிந்து விட வேண்டும். இரண்டாவதாக ஒரு மனிதனுக்கு கீழோ மேலோ சாதி என்பது ஒன்றுமில்லை
என்ற முடிவுக்கு வந்தாக வேண்டும். அதற்கு மேல் சாதி வித்யாசத்திற்கு ஆதாரமாயுள்ளவைகளை
அடியோடு அழிக்க முயல வேண்டும். அப்படி செய்யாமல் உயர்வு தாழ்வைப் போக்கிவிடலாமென்று
கருதுதல் நுனிமரத்தில் நின்று கொண்டு அடிமரத்தை வெட்டுகிற மனிதனின் முட்டாள் செய்கையையே
ஒக்கும். சாதி ஆச்சாரம் என்பவை மதம் என்னும் மரத்தைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. சாதியை
மரத்திலிருந்து பிரித்து கொல்ல வேண்டும். இப்படி பிரிப்பதற்கு முடியாதவரையில் சாதியும்
மதமும் ஒன்றோடொன்று இறுகப் பின்னிக் கொண்டிருக்குமேயானால் அந்த இரண்டையும் வீழ்த்தியேயாக
வேண்டும். முன்னிருந்த அந்த உயர்ந்த சாதிக் கபடர்கள் அவ்வளவு தந்திரமாக ஒன்றை ஒன்று
பிரிக்க முடியாத வகையில் சாதியையும் மதத்தையும் பிணைத்துப் பின்னிக் கொண்டிருக்கும்படி
இறுகக் கட்டி வைத்திருக்கிறார்கள். ஆகையால் சாதியை அழிக்கத் தலைபடுகையில் மதமும் வெட்டப்படுகிறதே
என்று பயப்படாமல் சாதிமரத்தையும், மத மரத்தையும் சேர்த்து நெருப்பு வைத்து சாம்பலாக்க
வேண்டியது தடுக்க முடியாத அவசியமாகும். இதிலும் ஒரு சங்கடம் இருக்கிறது. அதாவது மதமானது
வேதம், புராணம் என்பவைகளுடன் கட்டிப் பிணைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த வேதம், புராணங்களில்
இருந்து மதத்தை பிரிக்க வேண்டும். இதிலும் பிரிக்க முடியாதபடி கட்டுப்பலமாக இருந்தால்,
இங்கும் இரண்டையும் சேர்த்து நெருப்பு வைக்க வேண்டியது தான். ஆனால் இந்த வேதம் கடவுளுடன்
சேர்த்து கட்டிவைக்கப்பட்டுருக்கிறது. இதிலும் பிரிக்க முடியாத பிணைப்பு இருந்தால்
அந்தக் கடவுள் என்பதன் நிலையிலும் கை வைத்துத் தான் ஆக வேண்டியிருக்கிறது. வேதத்தை
இழுத்தால் கடவுளுக்கும் அசைவு தான் கொடுக்கும். இதில் தான் பெருத்த சங்கடப்படக் கூடும்.
கடவுளை அசைப்பதா என்று பயப்படக்கூடாது. எனவே சாதி, மதம், வேதம், கடவுள் எல்லாவற்றையும்
ஒழித்துத்தான் ஆகவேண்டும். இவற்றில் ஒன்றைவிட்டு ஒன்றை பிரிக்க முடியாமல் எல்லாவற்றையும்
சேர்த்து கொளுத்தும் போது, உண்மையில் ஏதாவது சக்தி இருந்தால் அது அழியாது. இப்படி நாம்
சாதி வித்யாசத்தை ஒழிக்க முற்படுகையில் மதமென்பதும் ஒழிந்துபோகுமே என்றால் அந்த மதம்
நமக்கு வேண்டாம். அது இப்போதே அழிந்து போகட்டும். மதத்தை பொசுக்கும் போது வேதமும் பொசுங்கிப்
போவதாய் இருந்தால் அந்த வேதம் என்பதும் இப்போதே வெந்து போகட்டும். வேதத்தை ஓட்டும்
போது கடவுளும் ஓடிவிடுவாரென்றால் அந்த கடவுள் என்பதும் இந்த நிமிஷத்திலேயே ஓடிவிடட்டும்.
அப்பேர்ப்பட்டக் கடவுள் நமக்கு வேண்டவே வேண்டாம்” இப்படி பெரியார் தந்துள்ள விளக்கத்தை
படிக்கின் அவர் ஏன் கடவுளை மறுத்தார் என்பது நமக்குத் தெள்ளத் தெளிவாக விளங்குகிறது.
வள்ளலார் கடவுள்
என்ற ஒன்றை மட்டும் விட்டு விட்டு வைத்து மற்ற சாதி, சமயம், மதம் இவற்றை மிகவும் கடுமையாக
எதிர்த்தார். வேதம், புராணம், சாத்திரம், இதிகாசம் என்பவைகளில் உண்மையில்லை என மறுத்தார்.
அதாவது சாதி, சமயத்திடம் காட்டிய வேகத்தில் கொஞ்சம் குறைத்தே வேதத்தின் மீதும் புராணத்தின்
மீதும் வெறுப்பு காட்டினார். வள்ளலார் கடவுளை வெறுக்கவில்லை. வள்ளலார் கண்ட அந்தக்
கடவுள்களும் தந்தை பெரியார் சுட்டிக்காட்டும் கோயிலுக்குள் இருக்கும் கற்சிலைகள் அல்ல
என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அதை விரிவாக “கடவுள்” என்ற தலைப்பில் காண்போம். முன்னிருந்த அந்த உயர்ந்த சாதிக் கபடர்கள்
இவ்வாறு தந்திரமாக மேற்சொன்ன கடவுளையும், வேதத்தையும், புராணத்தையும், மதத்தையும்,
சாதியையும், ஒன்றோடொன்று பின்னி வைத்திருக்கின்றனர் என்றார் பெரியார். வள்ளலார் இதையே
தன்னுடைய பேருபதேசத்தில் தெய்வத்தின் உண்மைநிலை அறியாது அப்படியே கண்களை மூடிக்கொண்டு
உளறியிருக்கிறார்கள். ஆனால் ஆதியிலே இதை மறைத்தவன் வல்லவன்.அவன் மறைத்ததை இதுவரைக்கும்
ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன்
பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை. அவைகளில் ஏகதேச கர்மசித்திகளைக் கற்பனைகளாகச்
சொல்லி இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார். ஆனால் அந்த பூட்டை உடைக்க வந்தவர் தான்
வள்ளலார். அவர் கொஞ்சம் உடைத்தார். தந்தை பெரியார் உடைத்தது மட்டுமின்றி அதை இருந்த
இடம் தெரியாமல் நொறுக்கிவிட்டுச் சென்றார்.
கடவுள் ஒழிந்தால்தான்
சாதி பேதம் ஒழியும் என்று நினைத்தவர் பெரியார். சாதி பேதம் ஒழிந்தால் தான் வள்ளலார்
வலியுறுத்திய சமதர்ம சமுதாயம் அமையும். அந்த சமதர்ம சமுதாயத்தையே பெரியாரும் விரும்பினார்.
எல்லா வகையிலும் சமதர்ம சமுதாயம் காண விழைந்தவர்கள் வள்ளலாரும், பெரியாரும், அறிவால்
ஒழுக்கத்தால், செல்வத்தால், படிப்பால் அனைவரும் ஒரே நிலை அடைய விழைந்தவர்கள் இருவரும்.
நம் நாட்டிற்கு
இன்று முதலில் சாதி பேதங்கள் ஒழிந்து மக்கள் யாவரும் சமம் என்கிற சமதர்ம முயற்சியே
முதலில் செய்ய வேண்டியதாயிருக்கிறது. சாதி,பேதம், பிரிவு, ஆகியவை ஒழிந்தால் தான் சமூக
வாழ்க்கையில் சமதர்மமாய் வாழமுடியும். பொருளாதார பேதத்திற்கும் சமூக சாதிபேத முறைதான்
பெரிதும் காரணமாய், காவலாய் இருந்து வந்திருக்கின்றது. ஆகவே சமூக சமதர்மம் ஏற்பட ஆசைப்படுகிற
நாம் சாதி பேதத்தை ஒழிக்க வேண்டும் என்று கருதுகின்ற நாம், பொருளாதார சமதர்மத்துக்காகவே
பிறவி சாதியை ஒழிப்பதத்கு அதற்கு ஆதாரமான மதத்தையும் ஒழிக்க வேண்டும் என்று சொல்லுகின்றோம்.
மதத்தைப் பற்றியே மதத்தில் உள்ள ஏதாவது ஒரு கொள்கையைப் பற்றியோ பேசினாலும், அதை ஒழிக்க
வேண்டும் என்ரு சொன்னாலும் அதை நாத்திகம் என்று சொல்லிவிடுகின்றார்கள். அதனால் தான்
சமதர்மம் பேசுகின்ற யாரும் கண்டிப்பாய் நாத்திகர்களாகியே தீர வேண்டி இருக்கின்றது.
வள்ளலாரிடம் இருந்து
கடவுள் மறுப்பில் மட்டும் பெரியார் வேறுபட்டு நிற்கிறார். வேறுபட்டு நிற்பது மட்டுமல்ல
வீறு கொண்டு எழுந்து கடவுள் பற்றிய கதைகளையெல்லாம் தவிடுபொடி ஆக்கினார். மனிதனை சுயமாக
சிந்திக்க வைத்தார். பயத்தின் காரணமாக சிலர் மூடநம்பிக்கைகளில் மூழ்கும் முட்டாள்தனத்தைத்
தனது அறிவு சக்தியை ஒன்று திரட்டி எதிர்த்துப் போராடினார். அதில் அவர் வெற்றியும் கண்டுள்ளார்
என்று தான் சொல்லவேண்டும். அவரது கடவுள் மறுப்புப் பேச்சுகளைக்கேட்டால் பாமரனும் சிந்திப்பான்.
சிந்தித்துச் சிந்தித்துத் தன் மூளையால் ஒரு முடிவுக்கு வருவான். அப்படிப்பட்ட பேச்சுகள்
அவருடையவை. ஓர் எடுத்துக்காட்டு பார்ப்போம்.
“நாம் ஏதாவது காரியம்
செய்ய வேண்டும் என்றால் நம் மதத்தை கடவுளை, சாஸ்திர, புராண இதிகாசங்களை நெருப்புவைத்துக்
கொளுத்தத் தயாராக வேண்டும். கடவுள்களை எல்லாம் சிதறு தேங்காய் போடவேண்டும். எல்லாக்
கடவுள்களும் சாதியைக் காப்பாற்றும் கடவுள்கள். இது தவிர வேறு என்ன வேலை இந்த கடவுள்களுக்கு?
எதற்காக சுப்ரமணியம் வந்தார்? (சுப்ரமணியன் ஆறுமுகம் வந்த கதையை பிரித்து பிரித்து
அலசுவார், அதில் உள்ள புரட்டுகளை துணிவாகக் கூறுவார்) எதற்காக அவதாரம் எடுத்தார் விஷ்ணு?
விஷ்ணு கொன்ற அத்தனைப் பேரும் சாதிக்கு விரோதிகள், சாதியை ஒழித்தவர்கள். பார்பனர்களை
ஒழித்தவர்கள் – சாஸ்திர சம்பிரதாயங்களை அலட்சியம் செய்தவர்கள். அவர்களை ஒழிக்கத்தான்
இந்த அவதாரம். அந்த அவதாரத்திற்குக் காரணம் ஆரிய தர்மத்தைக் காப்பாற்ற அவதாரம் எடுத்தார்
கடவுள் என்பதைத் தவிர எந்தக் கடவுளாவது உலகத்தைக் காப்பாற்ற வந்திருக்கிறார்களா?” என்று
அவர் பேசும் போது ஒரு கணம் கேட்கும் எல்லோரையும் திகைக்க வைக்கிறது. அப்படியே சிந்திக்கவும்
வைக்கிறது. “அய்யாவின் பேச்சென்றால் அதிரசம் தின்பதுபோல் கழகத்தவர்க்கு! அணுகுண்டு
வெடித்ததைப் போல் கயவர்கட்கு!” என்ற கலைஞரின் கவிதை வரிகள் தான் இங்கு நினைவுக்கு வருகிறது.
இந்த அத்யாயத்தின் இறுதிப்பகுதிக்கு வருவோம். சாதி இரண்டொழிய வேறில்லை என்ற அவ்வையார்
இட்டார் பெரியோர், இடாதோர் இழிகுலத்தோர் என்றார்.
அவர் அந்த சாதி முறையை மிகக் கடுமையாகச் சாடவில்லை.
“சாதிகுலம் எனும் சுழிபட்டுத்
தடுமாறும்
ஆதமிலிநாயனை அல்லலறுத்தாட் கொண்டு”
என்றும்
“உவலைச் சமயங்கள் ஒவ்வாத சாத்திரமாம்
சவலைக் கடலுலனவாய்க் கிடந்து தடுமாறும்”
என்று சாதிக்குலத்தையும்,
சமயத்தையும் மேம்போக்காக சுட்டிக்காட்டி பாடிய மாணிக்கவாசகரும் கூடச் சாதியையும், மதத்தையும்
சமயத்தையும் கடுமையாகச் சாடவில்லை.
“சாத்திரம் பல சொல்லும் சழக்கர்கள்,
கோத்திரமும் குலமும்கொண்டு என் செய்குவீர்” என்றும்
“ஆவுரித்துத் தின்றுழலும் புலையரேனும்
கங்கைவார் சடைக்கரந்தார்க்கு அன்பராகில்
அவர் கண்டீர் யாம் வணங்கும் கடவுளாரே”
என்றும் அப்பர்
பாடியுள்ளார் என்று பெருமிதப்படுவார்கள் சைவர்கள். அதாவது மாட்டை வெட்டித் தோலுரித்துத்
தின்கிற புலையனாக இருந்தால் கூட பரவாயில்லை. அவனையும் நான் கடவுளாக ஏற்பேன் என்று சொல்லி
ஒரு நிபந்தனை போடுகிறார். சைவ சமயம் சுட்டிக்காட்டும் சைவ சமய அடையாளக் குறியான கங்கையை
சடையில் தரித்த பரமசிவனை வணங்கினால் புலையன் என்றாலும் நான் அவனைக் கடவுளாக ஏற்பேன்
என்கிறார். இங்கே சாதிவேற்றுமை நீக்கப்படும் வேகத்தை விட சமயப் பற்றின் வேகம் அதிகமாகத்
தெரிகிறது. ஆனால் வள்ளலாரின் அருட்பாவைப் படிக்கின் அவர் காட்டும் சமரசம் அவாஇ ஆன்மிகத்தின்
சிகரத்தில் கொண்டு வைக்கிறது.
எத்துணையும் பேதமுறா தெய்வுயிரும்
தம் உயிர்போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவர் அவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடம் என நான் தெரிந்தேன் அந்த
வித்தகர்தம் அடிக்கேவல் புரிந்திடஎன்
சிந்தைமிக விழைந்த தாலோ….. (
5297)
இப்பாடலின் பொருள்
விளக்காமலே புரியும். அணுவளவும் வேறுபாடு காட்டாது எல்லா உயிரையும் தன் உயிரைப்போல
எண்ணுகின்றவர், மனத்தால் அதை முழுமையாக ஏற்றுக் கொண்டவர் உள்ளத்தில் இறைவன் அறிவுருவமாய்
நடம் புரிகின்றான். அப்படிப்பட்ட உள்ளம் உடையவர் திருவடிகளுக்கு ஏவல் செய்ய நான் காத்துக்
கிடக்கிறேன் என்பது வள்ளலாரின் கூற்று. இறைவன் என்பவன் கைலாயத்தில் இருப்பதாகப் பலர்
சொன்னபோது அந்த இறைவன் தூய நெஞ்சினார் உள்ளத்தில் நடம்புரிவதாகக் காட்டியிருப்பது ஒரு
புரட்சியே.
வள்ளலாருக்கு முன்பு
பலர் சமய சன்மார்க்கம் பேசியிருக்கிறார்கள் தாயுமானவர் உட்பட. ஆனால் சாதியை, மதத்தைச்
சமயத்தை தவிர்த்த ஒரு சுத்த சன்மார்க்கத்தை உலகில் எவரும் சொன்னதில்லை வள்ளலாரைத்தவிர.
இது ஒரு பொதுநெறி, கருணை நெறி, இதில் கடவுளைக் காண்பது முக்கியமல்ல, கடவுளை உணர்வதும்,
கடவுளாகவே ஆவதும் தான் முக்கியம். இப்படிப்பட்ட உயர்ந்த சீர்திருத்தத்தை 19ஆம் நூற்றாண்டில்
ஆன்மிக உலகிலும் சமுதாயத்திலும் காட்டிச் சென்ற வள்ளலாரின் அடியொற்றியே பின்னாளில்
பாரதி, பாரதிதாசன் போன்ற புரட்சி கவிஞர்கள் பாடல்கள் செய்தனர்.
“சாதிகள் இல்லையடி பாப்பா
குலம் தாழ்ச்சி உயர்த்தி சொல்லல்
பாவம்” என்று… பாரதியும்
“இருட்டறையில் உள்ளதடா உலகம்
சாதி இருக்கின்ற தென்பானும்
இருக்கின்றானே” என்றும்
“இந்த மண்ணில் எண்ணிலா மதங்கள்
கந்தக வீட்டிற்குள்ளே கனலின்
கொள்ளிகள்” என்றும்
சாதியையும் மதத்தையும்
குறித்து பாவேந்தன் பாடுகின்றான். இராமலிங்க சாமிகள் செய்த புரட்சியை, பாரதி, பாரதிதாசன்
போன்ற கவிஞர்கள் மட்டுமின்றித் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற அரசியல் தலைவர்களும்
பின்னாளில் சீர்திருத்தங்களாகக் காட்டிச் சென்றனர்.
“துடுக்குமிகுக் கொண்டலையும்
துணிவு மிக்க ஆரியர் தாம்
அடுக்கு சொல் அண்ணாவால்
அலறித்தான் சாகுதடா” என்று
அண்ணாவைப் பற்றியும்
“பாராட்டி போற்றி வந்த
பழமைலோகம் ஈரோட்டு பூகம்பத்தால்
இடியுது பார்”
என்று தந்தை பெரியாரைப்
பற்றியும் கலைஞர் எழுதியிருக்கும் கவிதைகள் இங்கு நோக்கத்தக்கவை.
மதங்கள் சாதிகள்
கலைந்து வாழ்வோம் என்று இந்த அத்தியாயத்தை நிறைவு செய்யும் முன் மதங்கள் என்னென்ன செய்யும்
என்று பெரியார் சுட்டிக்காட்டியதை ஒருதரம் நினைவு படுத்திக் கொள்வோம்.
1.
மதமே மனிதனுடைய சுயமரியாதைக்கு விரோதி
2.
மதமே மனிதனுடைய சுதந்திரத்திற்கு விரோதி
3.
மதமே மனிதனுடைய அறிவு வளர்ச்சிக்கு விரோதி
4.
மதமே மனிதனுடைய சமூக சமதர்மத்துக்கு விரோதி
5.
மதமே கொடுங்கோலாட்சிக்கு உற்றதுணை
6.
மதமே முதலாளி வர்கத்திற்குக் காவல்
7.
மதமே சோம்பேரி வாழ்க்கைக்கு ஆதரவு
இப்போது புரிகிறதா
மதங்களின், சாதிகளின் கொடுமை எந்த அளவு உள்ளதென்று. அதனால் தான் சமதர்மம் காண விழைந்த
கம்யூனிஸ்ட்வாதி காரல்மார்க்ஸ் கூட மதத்தைப் போதைதரும் வஸ்து என்றார். ஆமாம் சொர்க்கம்,
நரகம் முதலிய இல்லாத கற்பனை செய்திகளைக் காட்டி அறியாத மக்களை எப்போதும் தன் கட்டுக்குள்
வைத்திருக்கும் ஒரு போதை தரும் பொருள் என்று மதத்தை கூறினார் காரல் மார்க்ஸ். அதனையும்
இவ்விடத்தில் சேர்ந்து சிந்திப்போம்.
“மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”
“பொறித்த மதம் சமயம் எல்லாம்
பொய் பொய்யே அவற்றில் புகுதாதீர்”
– வள்ளலார்
கடவுள்
(அத்யாயம் # 3)
கட + உள்
அதாவது உன் உள்ளே கடந்து சென்று உணரவேண்டியதே கடவுள் என்பர்.
இந்த உலகம் எப்படி
உண்டானது? முதல் உயிர் எப்படி தோன்றியது? மரணத்திற்குப் பிறகு மனிதனின் நிலை என்ன?
உயிர் என்ற ஒன்று என்ன ஆனது? அது இறப்புக்குப் பின் எங்கே சென்றது? உண்மையில் உயிர்
என்ற ஒன்று என்னது? உடம்பு முன்னம் வந்ததா? உயிர் முன்னம் வந்ததா? மறுபிறவி என்ற ஒன்று
உண்டா? சொர்க்கம், நரகம் என்பது உண்டா?
மறுபிறவி உண்டு
எனில் சொர்க்கம், நகரம் எப்படி வந்தது? மனிதனின் இன்ப துன்பத்திற்கு காரணம் அவன் செய்த
நல்வினை, தீவினைகளே என்பர். இப்பிறவியில் என்னதான் நல்ல காரியங்கள் செய்தாலும், தூய
மனதோடு இருந்தாலும் சிலர் வாழ்வில் துன்பத்திலேயே வருந்துகிறார்களே இதற்கு என்ன காரணம்
எனக்கேட்டால் அது பூர்வஜென்ம கர்மாவின் விளைவு என்பார்கள். ஆகவே ஒரு பிறவியில் ஒரு
மனிதன் அடையும் இன்பத்திற்கோ, துன்பத்திற்கோ அவனுடைய முந்தைய பிறவியில் அவன் செய்த
கர்மவினைகளே காரணம் என்பர்.
ஒரு மனிதன் ஒரு
பிறவியில் நல்ல காரியத்தை மட்டும் செய்யுமாறு கடவுள் அவனைப் படைக்கக் கூடாதா? ஒரு மனிதனை
அவனது செயல்களை வைத்தே அடுத்த பிறவியில் கடவுள் தண்டிக்கிறார் அல்லது தண்டனை கொடுக்கிறார்
என்றால் முதல் பிறவியில் மனிதன் துன்பபடுகிறானே அதற்கு என்ன காரணம் என்று பெரியாரைப்
போன்ற பகுத்தறிவுவாதிகள் கேட்டனர்.
நான் மேற்கேட்ட
பல வினாக்களுக்கு விடைதெரிந்து விட்டால் கடவுள் பற்றிய விவரம் எல்லோருக்கும் எளிமையாக
கிடைத்து விடும்.
கடவுள் என்பதை
இறைவன் என்றும், பரம்பொருள் என்றும், பதி என்றும்,
ஈஸ்வரன் என்றும் தெய்வம் என்றும் பலவிதமான சொற்களால் அழைப்பதுண்டு.
கடவுள் என்பது
யார்? என்பதற்கு மதங்கள் காட்டுகின்றவற்றை ஆராய்ந்தால் கீழ்க்கண்ட குணங்கள் கடவுளுக்கு
உள்ளதாகச் சொல்லப்படுவது பொதுவாகத் தெரிகிறது.
1.
அவர் ஆதியும், அந்தமும் இல்லாதவர் அல்லது இல்லாதது. அதாவது தொடக்கமும்,
முடிவும் இல்லாதது
2.
அது அனாதியானது. (இஸ்லாம் காட்டும் அல்லாவுக்கு மேற்சொன்ன பண்புகள்
காட்டப்படுகின்றன. அல்லா யாராலும் பிறப்பிக்கப்படவில்லை. யாரையும் பெறவுமில்லை)
3.
சுயம்புவானவர் (அதாவது தாந்தோன்றி)
4.
ஒர் உருவம் இல்லாதது. அருவமானது. உருவமானது. அரு உருவமானது. (இன்ன
வடிவம் என்று சொல்ல முடியாதது)
5.
பஞ்ச பூதங்கள் ஆகிய நீர்,நிலம்,நெருப்பு,காற்று,ஆகாயம்(வெளி) ஆகியவனாய்
இருப்பது. முக்கியமாக “வெளியே” இறைவன் என்று வலியுறுத்தும். மேற்கூறிய பஞ்சபூதங்கள்
மட்டுமின்றிச் சூரியன், சந்திரன், ஆன்மா சேர்ந்து இறைவன் அட்ட மூர்த்தங்களாய் உள்ளவன்.
அதாவது எட்டு வடிவமாய் உள்ளவன்.
6.
ஆன் ஆனவன், பெண் ஆனவன் மற்றும் ஆண், பெண் என்று பாலினம் காட்டமுடியாத
அலியானது இறைமை என்றும் கூறப்படுகிறது (ஆணாகி, பெண்ணாகி, அலியாகி நிற்பது)
7.
கடவுளுக்கு ஓர் ஊரும் இல்லை ஒரு பேரும் இல்லை. அதாவது பேர் இல்லாதவருக்கு
ஏற்பட்ட பேர்கள் மனிதன் தன்னைப்போல் வைத்துக் கொண்டது.(ஒரு நாமம் ஓர் உருவம் ஒன்றும்
இல்லாதவனுக்கு ஆயிரம் திருநாமம் நாம் பாடி தெள்ளேனம் கொட்டாமோ என்று மாணிக்கவாசகர்
பாடுவார்)
8.
ஒன்றாகி இருப்பது. பலவாக காணப்படுவது. (ஏகன், அநேகன் என்பார் மாணிக்கவாசகர்,
ஒன்றே பலவே என்பார் வள்ளலார்)
9.
எள்ளுக்குள் எண்ணெய் போல எங்குமாகி இருப்பது. பாலுக்குள் நெய்போல்
மறைந்து இருப்பது. உடம்புக்குள் உயிர்போல் ஒளிந்து இருப்பது.
10.
அனைத்து உயிர்களாகவும், ஜடப்பொருளாகவும் இருப்பது (பார்க்கின்ற
மலரூடு நீயே இருத்தி என்று பாடுவார் தாயுமானவர்)
11.
இதைத் தவிரச் சத்தியமாக உள்ளது, அதாவது மெய்ப்பொருளான உண்மையையே
தெய்வம் என்றும் கூறுவர்.
12.
ஒளிவடிவில் இருக்கக் கூடியவன்.
13.
அன்பே கடவுள், அன்பே சிவம்
14.
பந்தபாசம் இல்லாதவன், விருப்பு, வெறுப்பு இல்லாதவன், மலங்கள் இல்லாதவன்,
பற்றற்று இருப்பவன், உயிருக்கு உயிராக இருப்பவன், வரம்பில்லாத ஆற்றல் உடையவன், தூய
உடம்பினன், அனைத்தும் அறிந்த ஞானம் உள்ளவன் – ஒளிபொருந்திய அறிவுள்ளவன் (வாலறிவன் என்று
வள்ளுவம் பேசும்)
இப்படி இறைமைக்குப்
பல பண்புகளை இந்து மதங்களும் மற்ற மதங்களும் சுட்டிக் காட்டுகின்றன. உலகில் உள்ள பெரும்பாலான
மதங்கள் காட்டும் கடவுளுக்கு உருவம் இல்லை.
பல கடவுள்கள் ஆகிவிட்டார்கள். அதாவது பல நாடுகளில் பல கடவுள் வழிபடப்பட்டு
பிறகு அவைகளை விட்டு விட்டு வேறு கடவுள்களை வழிபட்டது தெரிகிறது. பேரறிஞர் அண்ணா எழுதியுள்ள
மாஜிக் கடவுள்கள் என்ற நூலைப் படித்தால் அது விளங்கும். இந்து மதத்தில் இறைவனுக்கு
உருவம் இல்லை என்று சொன்னாலும் நடைமுறையில் ஆயிரக்கணக்கான உருவங்களை கொண்டு வந்து புகுத்திவிட்டனர்.
பெருகிவரும் மக்கள்
தொகைபோல் கடவுள் தொகையும் பெருகியுள்ளது. ஒன்றே கடவுள், அதாவது ஒன்றே குலம், ஒருவனே
தேவன் என்ற நிலை மாறி ஓராயிரம் கடவுள் உருவங்கள் கற்பிக்கப்பட்டன. அவைகள் தோன்றியதற்கு
புராணங்களும் எழுதப்பட்டன. ஆக மனிதன் தான் பல கடவுள் உருவங்கள் தோன்ற காரணமாக இருந்திருக்கிறான்
என்பது தெரிகிறது. இந்தக் கடவுள் அல்லது இறைவன் எப்படி தோன்றியிருக்க முடியும் என பண்ணிப்
பார்த்தால் ஆதியில் மனிதர்கள் காட்டுமிராண்டித்தனமாக வாழ்ந்தவேளை மலைகளிலும், காடுகளிலும்
மிருகங்களை வேட்டையாடித் தின்று வாழ்ந்திருக்கிறார்கள். சிந்திக்கும் திறன் அதிகம்
இல்லாத மக்கள் சிக்கி முக்கிக் கல்லில் நெருப்பைக் கண்டதும் பயந்திருக்கிறார்கள். அதனைத்
தனக்கு மீறிய ஒரு சக்தி என நினைத்துப் பயத்தால் வணங்கியுள்ளனர். காட்டில் வாழும் பல
கொடிய பாம்பு போன்ற விலங்குகளையும் கண்டு பயந்திருக்கிறார்கள். இயற்கையைக் கண்டு அஞ்சிப்
புயலையும், மழையையும், இடியையும், மின்னலையும் கண்டு மிரண்ட மக்கள் இயற்கையை தெய்வமாக
நினைத்து வழிபட ஆரம்பித்துள்ளது தெரிகிறது. இப்படித் தொடங்கிய வழிபாடு காலப்போக்கில்
கட்டுக்கதைகளுக்கு ஆட்பட்ட கணக்கற்ற தெய்வங்களுக்கு வழிவகுத்தது எனலாம். இந்தக் கடவுள்
பற்றிச் சித்தர்கள் என்ன சொல்கிறார்கள் எனப் பார்ப்போம்.
சித்தர்கள் என்பவர்கள்
பகுத்தறிவு சிந்தனையாளர்கள். மெய்ஞ்ஞானத்தில் விஞ்ஞானம் கண்டவர்கள். சித்தர்கள் என்றால்
சித்தம் தெளிந்தவர்கள் என்று சொல்லலாம். அதாவது அறிவிலும் ஞானத்திலும் தெளிந்தவர்கள்.
சித்தத்தை சிவத்தின்பால் வைத்தவர்கள் என்றும் சொல்லலாம். கடவுளைத் தமக்குள்ளே கண்டு
தெளிந்தவர்கள். புறவழிபாட்டை நீக்கி அகப்பயணத்தில் முன்னேறி உள்ளொளி கண்டவர்கள். கடவுள்
எங்கோ வெளியில் இருப்பதாகத் தேடித்தேடி அலைபவர்கள் பக்தர்கள். அதனை எங்கும் வெளியில்
தேடாமல் தங்கள் உள்ளத்தில் உணர்ந்தவர்கள் சித்தர்கள்.
ஓடி ஓடி ஓடி ஓடி உட்கலந்த சோதியை
நாடி நாடி நாடி நாடி நாட்களும்
கழிந்து போய்
வாடி வாடி வாடி வாடி மாண்டு போன
மாந்தர்கள்
கோடி கோடி கோடி கோடி எண்ணிறந்த
கோடியே!
என்பார் சித்தர் சிவவாக்கியர்.
மனித தேகத்திலுள்ள
ஜோதியைக் கணாமல் நாடி வெளியில் தேடி, வாடி இறந்து போனவர்கள் கோடி கோடி என்கிறார். சித்தர்கள்
புருவமத்தியில் இறைவனைக் கண்டவர்கள். உடம்பின் ஆறு ஆதாரமான மூலாதாரம், சுவாதிஷ்டானம்,
அனாகதம், மணிப்பூரகம், விசுக்தி, ஆக்ஞை என்று சொல்லக்கூடியவற்றில் ஆக்ஞை என்னும் நெற்றிப்போட்டில்,
அனுபவபூர்வமாக தியானத்தினாலும், யோகத்தினாலும் ஒளிவடிவில் இறைவனைக் கண்டவர்கள் சித்தர்கள்.
மேலும் சித்தர்கள் சிறந்த சிந்தனையாளர்கள்.
உருவ வணக்கத்தை எதிர்த்தவர்கள். மனித நேயம் பேசிய புரட்சியாளர்கள். அவர்களுடைய பாடல்களை
ஆராய்ந்தால் இறைமை என்பது மனிதர்கள் தங்கள் உள்ளே கடந்து அடையத்தக்க அனுபவம் என்பது
புரியும்.
சில பாடல்கள் வருமாறு:
“ஆலமுண்ட கண்டனார் அகத்துள்ளே
இருக்கவே
காலனென்று சொல்லுவீர், கனாவிலும்
அஃதில்லையே” – சிவவாக்கியர்
“கோயிலாவது ஏதடா? குளங்களாவது
ஏதடா?
கோயிலும் குளங்களும் கும்பிடும்
குலாமரே
கோயிலும் மனத்துள்ளே குளங்களும்
மனத்துள்ளே!” – சிவவாக்கியர்
“செங்கலும், கருங்கலும் சிவந்த
சாதிலிங்கமும்
செம்பிலும் தராவிலும் சிவன் இருப்பன்
என்கிறீர்
உம்பதம் அறிந்துநீர் உம்மைநீர்
அறிந்தபின்
அம்பலம் நிறைந்த நாதர் ஆடல் பாடலாடுமே”
– சிவவாக்கியர்
“கோயில் பள்ளி ஏதடா குறித்து நின்றது
ஏதடா?
வாயினால் தொழுது நின்ற மந்திரங்கள்
ஏதடா?
ஞாயமான பள்ளியில் நன்மையாய் வணங்கினால்
காயமான பள்ளியில் காணலாம் இறையையே”
– சிவவாக்கியர்
நியாய உணர்வோடு
நன்மை செய்தால், உடம்பு என்ற கோயிலில் காணலாம் இறைமையை என்கிறார்.
அதுமட்டுமல்லாமல்
சித்தர்கள் சாதி, மத வேறுபாடுகளையும் கண்டித்தவர்கள். சாதிபேதம் பார்க்காதவர்கள்.
இதோ சிவவாக்கியர்
வாக்கியத்தையே காணலாம்.
“ஆதியாகி அண்டரண்டம் அப்புறத்தும்
அப்புறம்
சோதியாகி நின்றிலங்கு கருதிநாத
சோமனைப்
போதியாமல் தம்முளே பெற்றுணர்ந்த
ஞானிகள்
சாதி பேதம் என்பதொன்று சற்றுமில்லை
இல்லையே!”
அண்டங்கள் கடந்து
சோதியாய் விளங்கும் கடவுளை தம்முள்ளே கண்ட ஞானியர்கள் சாதிபேதம் பார்ப்பதில்லை என்கிறார்
அவர்.
உருவக் கடவுளரைக்
கண்ட மனிதர்கள் அதனை வைத்து சிறுபிள்ளைத்தனமான விளையாட்டுகளைத் தொடர்ந்து கொண்டுள்ளனர்.
தேர்த்திருவிழா என்று செம்பு உருவத்தை மேல் வைத்து வடம் பிடித்து இழுக்கின்றனர். ஊர்
ஒற்றுமைக்காக நடத்தப்படுவதே திருவிழா என்றால் நடைமுறையில் அதிலும் சாதி வெறி புகுந்தாட்டுவது
கண்கூடு. உதாரணமாகச் சொல்ல வேண்டுமானால் காரைக்குடிக்கு அருகாமையில் இருக்கும் கண்டதேவி
என்னும் ஊரில் நடக்கும் தேர் திருவிழாவில் அவ்வப்போது சாதிச் சண்டைகள் முற்றி சாதிக்கலவரமாவது
எல்லோரும் அறிந்ததே. ஒரு குறிப்பிட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் தேர் வடம் பிடிக்கக்
கூடாது என ஒரு குறிப்பிட்ட வகுப்பார் தடுப்பதால் அங்குச் சாதிமோதல் உருவாகும். அதைத்
தடுக்க அரசாங்கம் சில ஆண்டுகள் தேர்த் திருவிழாவையே ரத்து செய்தது. ஒருகால் திருவிழா
நடந்தால் ஆயிரக்கணக்கில் போலீஸ் பாதுகாப்பு போட்டு இவர்கள் காட்டும் கடவுளைத் தேர்மேல்
வைத்து இழுத்து வந்து நிலையில் நிறுத்துவார்கள். அதனல் லட்சக்கணக்கில் மக்களின் பணமும்,
பயனுள்ள நேரமும் வீணாகிறது.
இந்தத் தேர்த்திருவிழாவை
சித்தர் சிவவாக்கியர் வர்ணிப்பதை பாருங்கள்.
“ஊரிலுள்ள மனிதர்காள்
ஒரு மனதாய்க் கூடியே
தேரிலே வடத்தை விட்டுச் செம்பை
வைத்து இழுக்கிறீர்
ஆரினாலும் அறியொணாத ஆதிசித்த நாதனைப்
போரிலான மனிதர் பண்ணும் புரளி
பாரும் பாருமே”
இப்படி கடவுள் பேரால் செய்யும்
புரளிகள் நடைமுறை வாழ்வில் ஏராளம்.
“எள்ளகத்தில் எண்ணெய் போல் எங்குமாகி
எம்பிரான்
உள்ளகத்திலேயிருக்க ஊசலாடும் மூடர்காள்”
என்றும்
“சென்மம் சென்மம் தேடியும் தெளிவொனாத
செய்வனை
நன்மையாக உம்முளே நயந்துகாண வேண்டுமே”
என்றும்
பாடும் சிவவாக்கியரின் முக்கியப்
பாடல் ஒன்று அனைவரும் அறிந்தது.
“நட்டகல்லை தெய்வம் என்று நாலுபுட்பம்
சாத்தியே
சுற்றிவந்து முணமுணென்று சொல்லு
மந்திரம் ஏதடா
நட்டகல்லும் பேசுமோ நாதன் உள்
இருக்கையிலே
சுட்ட சட்டி சட்டுவம் கறிச்சுவை
அறியுமோ!”
மேற்கண்ட பாடலில்
உருவ வணக்கத்தை எவ்வாறு கண்டிக்கிறார் என்பது புரிகிறது.
அவ்வையாரில் மூன்றுபேர்
இருப்பதாகத் தமிழாராய்ச்சியாளர்கள் கூறுவர். அதில் ஒரு அவ்வையார் சித்தராகவே இருந்திருக்கிறார்.
மரணமில்லாப் பெருவாழ்வு பற்றி பாடுகிறார். முற்போக்கு சிந்தனைகள் முகிழ்க்கும் குறட்பாக்கள் 310 பாடியுள்ளார்.
அதில் உள்ளத்துள் ஒளிரும் உண்மையைத் தேடச் சொல்லுகிறார். அதில் சில குறட்பாக்களை நோக்கின்
அவை புரியும்.
உடம்பினைப் பெற்ற பயன் ஆவது எல்லாம்
உடம்பினில் உத்தமனைக் காண்
இதில் உத்தமன்
என்பது இறைவனைக் குறிக்கும்.
மாசற்ற கொள்கை மனத்தில் அடைந்தக்கால்
ஈசனைக் காட்டும் உடம்பு
என்ற குறள்களில்
குற்றமற்ற நெஞ்சத்தில் இறைவனைக் காணலாம் என்கிறார்.
உள்ளமே பீடம்; உணர்வே சிவனுருவைத்
தெள்ளியர் அர்ச்சிக்கும் ஆறு
என்னும் பாடலில்
உள்ளம் இறைவன் விளங்கும் பீடம். அந்த பீடத்தில் உணர்வாய் இறைவன் விளங்குவதாக கூறுகிறார்.
எள்ளகத்து எண்ணெய் இருந்ததனை ஒக்குமே
உள்ளகத்து ஈசன் ஒளி என்றும்
மெய்யகத்தில் உள்ளே விளங்கும்
சுடர் நோக்கில்
கையகத்தில் நெல்லிக்கனி என்றும்
கூறியுள்ளவை பற்றிச் சிந்தித்தால் உள்ளத்தில் தான் உண்மையான கடவுளைக் காண முடியும் என்கிறார்.
அடுத்து யாக்கை
நிலையாமையை மிகவும் விரிவாகப் பாடிய இரண்டாம் பட்டினத்தார் தன்னுடைய பாடல்களில் பல
இடங்களில் சடங்குகள், மந்திரம், வேதம், ஜெபங்களை எல்லாம் எள்ளி நகையாடுகிறார். உண்டென்று
இரு என்று சொன்னவர் தெய்வம் ஒன்னென்றிரு என
வலியுறுத்தினார். தன்னை அறிந்த பின் அறிந்து கொள்ள வேறு தெய்வமில்லை என்பது தான் சித்தர்களின்
சாரம். அதே சாரத்தை பட்டினத்தார் பாடல்களிலும் பார்க்க முடிகிறது.
நான் செல்லும்
சன்மார்க்கக் கூட்டங்களில் எல்லாம் அடிக்கடி கூறும் பட்டினத்தார் பாடலில் ஒன்று காண்போம்.
எட்டுதிசையும் பதினாறு கோணமும்
எங்கும் ஒன்றாய்
முட்டித் ததும்பி முளைத்தோங்கு
சோதியை மூடரெல்லாம்
கட்டிச் சுருட்டித் தம் கக்கத்தில்
வைப்பார், கருத்தில் வையார்
பட்டப்பகலை இரவென்று கூறிடும்
பாதகரே
அற்புதமான சந்தநயம்,
சாட்டையடி போல சிந்தனைகளைச் சொடுக்கி விடும் சிந்தனைகளைத் தூண்டிவிடும் கருத்து. உருவ
வணக்கத்திலேயே உழன்று கொண்டு கிடப்போருக்கு உயர்ந்த நிலையை உணர்த்தும் பாட்டு.
உலகெங்கும் காணும்
இடமெல்லாம் அறிவுருவாக விளங்கும் சோதியை மூடரெல்லாம் உருவப்படங்களாகக் காட்டி அதை சுருட்டிக்
கக்கத்தில் வைப்பார் எனக் கூறுகிறார். அந்தளவு அறிவு சிறியதாக விளங்குகிறது. ஆனால்
அறிவில் இறைவனைக் காண மறுக்கிறார்கள். அவர்களுக்கு ஓர் உதாரணம் கூறுகிறார். அவர்கள்
பட்ட பகலை இரவென்று கூறுவதாகச் சொல்லுகிறார். அறியாமை இருட்டிலே இருந்து கொண்டு அறிவு
விளக்கு கொண்டு ஆராய மறுக்கும் பக்தியாளர்களுக்கு இந்தப் பாட்டை பாடுகின்றார். தொடக்கக்
காலத்தில் ஒரு உருவம் வழிபாட்டுக்குத் தேவை என்றாலும் மனம் ஒருமைப்பட்ட பின்பு உருவம்
தேவையில்லை. படிநிலையில் இருந்து முடிநிலைக்கு வந்த பின்பு உருவத்தில் மட்டும் இறைவனைக்
காணாமல் உள்ளத்தில் காணும் உணர்வு வரவேண்டும்.
உடலுக்குள் நீ நின்று உலாவினதைக்
காணாமல்
கடல்மலை தோறும் திரிந்து கால்
அலுத்தேன் பூரணமே
என்று தன்னைத்தானே
கேட்டுக் கொள்வது போல் மற்றவர்களுக்கு உடலுக்குள் ஒளிந்திருக்கும் இறைமையை உணர்த்துகிறார்.
அண்டபிண்டம் எல்லாம் அணுவுக்கு
அணுவாய் நீ
கொண்டவடிவின் குறிப்பறியேன் பூரணமே
என்று இறைவனாக
அண்டத்திலும், பிண்டத்திலும் அணுவுக்குள்ளும் இருந்து இயக்கும் சக்தியை காட்டுகிறார்.
இப்படி சித்தர்களால்
இறைமை என்பது நமக்குள் உணரும் ஒன்றாக உணர்த்தப்பட்டதே அன்றி வேறல்ல. நமக்குள் உணரும்
ஆன்ம ஒளியை மற்ற உயிரினங்களிடம் கண்டால் அதுவே ஞானிக்கு அழகு. உயிருக்கு உயிராக இறைவன்
உள்ளான் என்பது தான் வள்ளலாரின் முடிந்த முடிவான கொள்கை. வள்ளலார் சரியை, கிரியை, யோகம்
முதலான படிநிலைகளைக் கடந்து ஞானத்தை எட்டியவர். சரியை என்னும் பக்தி செய்தவர். தோத்திரப்
பாடல் பாடுவது, இறைவனை வழிபட ஆலயம் தோறும் செல்வது சரியையில் அடங்கும். கிரியை என்பது
கோயிலில் தொண்டு செய்வது. அபிஷேகம், ஆராதனை செய்து இறைவனை வழிபடுவது. இறைவனுக்கு தொண்டு
செய்வது என்பது எல்லா உயிர்க்கும் தொண்டு செய்வது. யோகம் என்பது நமக்குள் இறைவன் ஒன்றுபட்டு
இருப்பதாக உணர்வது. ஒன்றுதல் என்பது யோகம். அடுத்த நிலை ஞான நிலை. இதில் தாமே இறைவனாக
இருக்கிறோம் என்பதை உணர்வது.
பாதி இரவில் எழுந்தருளிப் பாவியேனை
எழுப்பி அருட்
சோதி அளித்தென் உள்ளகத்தே சூழ்ந்து
கலந்து துலங்குகின்றாய்
நீதி நடஞ்செய் பேரின்ப நிதிநான்
பெற்ற நெடும்பேற்றை
ஓதி முடியா தென்போல் இவ்வுலகம்
பெறுதல் வேண்டுவனே …(3630) என்பது அருட்பா.
தனது உள்ளத்துக்
கலந்த ஒன்றாக இறைமையை உணர்த்தும் பாடல். இது வள்ளலார் தான் பெற்ற அனுபவம். அப்படி அவர்
உணர்ந்த அந்த இறை அனுபவத்தை இந்த உலகம் பெறுதல் வேண்டும் என்கிறார்.
தனது ஆரம்ப காலங்களில்
உருவ வணக்கத்தை ஏற்றுக் கொண்ட வள்ளற்பெருமான் இறுதி காலங்களில் அருவ வழிபாட்டை வலியுறுத்தினார்.
ஒளிவழிபாடு ஒன்றே உலக சமயங்களை இணைக்கும் உன்னத வழிபாடு என உணர்ந்து அதைப் போதித்தார்.
புறத்திலே காணும் ஒளியானது இருளைப் போக்குகிறது. அகத்திலே நாம் பெருக்கிக் கொள்ளும்
ஒளியான அருட்பெருஞ்சோதி ஒளி அறியாமையைப் போக்கும் அறிவொளி ஆகும். இந்த அறிவொளியை உள்ளத்திலும்,
புருவமத்தியிலும் ஒவ்வொறுவரும் உணர வேண்டியது. அதற்கு அவசியமானது தனிபெருங்கருணை ஆகும்.
“அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை, அருட்பெருஞ்ஜொதி”
எனும் மகாமந்திரத்தை
வள்ளலார் தந்தார். இதில் அவர் கூற்றுப்படி தயவு, கருணை, அருள் என்பவை ஒரு பொருளையே
குறிக்கும். ஆதலால் பெரிய தயவுடைய அறிவே பூரண இன்பமாம். அது ஒப்பற்ற பெருந்தயவுடைய
பேரறிவேயாம். ஆகவே கடவுளை மிகப்பெரிய அறிவாக அதுவும் பெரிய தயவுடைய பேரறிவாக வள்ளலார்
காட்டுகிறாரே அன்றிக் கல்லிலும், செம்பிலும், காட்டிலும், மேட்டிலும் இன்று மக்கள்
கூட்டம் கூட்டமாகக் காணும் உருவத்தில் அல்ல என்பதை உணர வேண்டும்.
மேலும் பேருபதேசத்தில்
வள்ளலார் கூறியிருப்பதை நோக்கின் அவர் உருவத்தை வணங்கவில்லை அல்லது மனிதர் உருவில்
கடவுளைக் காணவில்லை என விளங்கும்.
“வேதம் ஆகமம்,
புராணம், இதிகாசம் முதலிய கலைகள் எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால் அவைகளில்
ஒன்றிலாவது குழுவுக்குறியன்றித் தெய்வத்தை இன்னபடி என்றும் தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும்
கொஞ்ச மேலும் புறங்கவியச் சொல்லாமல், மண்ணைப்போட்டு மறைத்து விட்டார்கள். அணுமாத்திரமேனுந்
தெரிவிக்காமல் பிண்ட லட்சணத்தை அண்டத்தில் காட்டினார்கள். யாதெனில் கைலாசபதி என்றும்
வைகுண்டபதி என்றும் சத்தியலோகபதி என்றும் பெயரிட்டு இடம், வாகனம், ஆயுதம், வடிவம்,
ரூபம், முதலியவையும் ஒரு மனுஷ்யனுக்கு அமைப்பது போல் அமைத்து உண்மையாக இருப்பதாகச்
சொல்லியிருக்கின்றார்கள். தெய்வத்துக்குக் கை, கால் முதலியன இருக்குமா? என்று கேட்பவர்களுக்கு
பதில் சொல்லத் தெரியாது விழிக்கின்றார்கள்” என்று பேருபதேசத்தில் உருவக் கடவுள்களைப்
பற்றி வள்ளலார் கூறுகிறார். இதிலிருந்து மனித உருவ வடிவில் அவர் கடவுளைக் காட்டாதவர்
எனத் தெள்ளத் தெளிவாகப் புரிகிறது.
மேலும் வள்ளலார்
எவற்றையெல்லாம் கடவுளாகப் பார்க்கிறார் என்று பார்ப்போம்.
“கருணையும் சிவமே பொருள் எனக்
காணும்
காட்சியும் பெறுகமற் றெல்லாம்
மருள்நெறி எனநீ எனக்கறிவித்த
வண்ணமே பெற்றிருக்கின்றேன்”
…. (3503)
இப்பாடலில் கருணையே
சிவம் என்கிறர் வள்ளலார். திருமூலர் அன்பே சிவம் என்று சொன்னதை ஒருபடி மேலே போய் பிற
உயிரிடம் நாம் காட்டும் கருணையே சிவம் என்றவர் வள்ளலார்.
“ஊன்பெறும் உயிரும் உணர்ச்சியும்
அன்பும்
ஊக்கமும் உண்மையும் என்னைத்
தான்பெறு தாயும் தந்தையும் குருவும்
தனிப்பெருந் தெய்வமுந் தவமும்
வான்பெறு பொருளும் வாழ்வும்நற்றுணையும்
மக்களும் மனைவியும் உறவும்
நான்பெறு நண்பும் யாவும் நீ என்றே
நம்பினேன் கைவிடேல் எனையே ……
(3558)
மேற்கூறிய பாடலில்
உயிராக, உணர்வாக, அன்பாக, ஊக்கமாக, உண்மையாக, தாயாக, தந்தையாக, குருவாக, தவமாக, பொருளாக,
வாழ்வாக, நற்றுணையாக, மக்களாக, மனைவியாக, உறவாக, நண்பர்களாக இப்படி வரிசையாக அனைத்தையும்
சொல்லி இவைகளை இறைமையாகக் காட்டியவர் வள்ளலார். இறைவன் என்று தனியே எவரும் எங்கும்
அட்சி செலுத்தவில்லை. “காண்பன அனைத்தும் நேரே தெய்வம்” என்று பாரதி பாடினானே, அதைப்
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே பாடியவர் வள்ளலார்.
ஊடல்செய் மதமும் சமயமும் இவற்றில்
உற்றகற் பனைகளும் தவிர்த்தேன்….
(3637)
சச்சரவுக்கு இடமான
சமயமும், மதமும், அவைகள் கட்டிக்காட்டுகின்ற கற்பனைக் கடவுள்களையும் தவிர்த்தார்.
கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டியபல்
சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற
கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல்
கதியும்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும்
எல்லாம்
பிள்ளைவிளையாட்டெனநன் கறிவித்திங்
கெனையே
பிள்ளை எனக் கொண்டு பிள்ளைப் பெயரிட்ட
பதியே
தள்ளரிய மெய்யடியார் போற்றமணி
மன்றில்
தனிநடஞ்செய் அரசேஎன் சாற்றும்
அணிந்தருளே …. (4173)
கொள்ளை அடிக்கும்
எண்ணத்தோடு கூடிய செயலால் சிலர் ஒன்று கூடி அப்படிக் கூடியவர்கள் கூட்டிய சமயக் கூட்டத்தில்
காட்டுகின்ற சில கற்பனைக் கதைகளையும், புராணங்களையும், உருவக் கடவுள்களையும் எல்லாம்
பிள்ளை விளையாட்டு என்று கண்டிக்கிறார். எவரும் கடவுளின் உண்மை நிலை அறியாமல் பல கற்பனைக்
கதைகளில் மூழ்கி அவைகள் காட்டும் பல உருவ தெய்வங்களைக் கடவுள் என ஏற்பது, ஏதும் அறியாத
பருவத்தே விளையாடும் சிறுபிள்ளைத்தனமான விளையாட்டு என்கிறார். சற்றேறக்குறைய தந்தை
பெரியாரின் கருத்தும் இதனோடு ஒத்து வருகிறது. ஆனால் கடவுள் இல்லை என்று மறுக்கவில்லை
வள்ளலார். அந்த ஒரு கடவுள்
உள்ளத்தே உள்ள சிவம் என்பதும்
உயிர்களுக்குள் நிறைந்ததோர் உணர்வு என்பதும்
இதயத்தில் இருக்கின்ற
இரக்கம் என்பதும் வள்ளலார் கொள்கை. காந்தியடிகள் சுட்டிக்காட்டிய சத்தியமே கடவுள் என்னும்
கருத்திற்கேற்ப சத்தியமாந் தனித்தெய்வம் என்றவர்
கடவுள் இல்லை என மறுக்கும்
தமிழக முதல்வர் கலைஞர் கூட ஒரு பேட்டியில் கடவுள் எது? என்று கேட்டபோது உண்மையேக் கடவுள்
என்றது இங்கு நினைவுகூறத் தக்கது.
அன்பும் சிவமும்
இரண்டென்பர் அறிவிலார் என்று திருமூலர் அன்பைச் சிவமாகக் காட்டியது ஈண்டு நினைக்கத்தக்கது.
அந்த அன்பை இன்னும் கொஞ்சம் ஆழப்படுத்தி மற்ற உயிரினங்களின் மாட்டு நாம் காட்டும் கருணையே
சிவம் என்பது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.
“எல்லாவற்றிற்கும் மேலாக
நான் ஆனேன் தான் ஆனான் நானும்
தானும் ஆனான்” – (5410)
என்றும் “யானும்
நீயும் ஒன்றெனக் கலந்து கொண்ட ஒருமையை நினைக்கின்றேன்” என்றும் “அருட்ஜோதி ஆனேன் என்று
அறையப்பா முரசு” என்றும் பல இடங்களில் தானே
சிவத்தின் நிலைக்கு அதாவது கடவுள் நிலைக்கு வந்ததைச் சுட்டிக் காட்டுகிறார். நடராஜபதி
மாலை பதிகத்தில் இயற்கையின் கூறுகளே இறைவன் என்பதையும் பஞ்ச பூதங்களின் விளைவுகளே கடவுள்
என்பதையும் மிகவும் அற்புதமாக விரித்துப் பாடுகின்றார். இயற்கை உண்மையாய், இயற்கை அறிவாய்,
இயற்கை விளக்கமாய், இயற்கை இன்பமாய் உள்ளது இறைமை என அருட்பா வலியுறுத்துகிறது.இயற்கையின்
எழிலில் இறைமையைக் கண்ட வள்ளலார்
“கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்
வகை கிடைத்த
குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த
கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண்ணீரே
உகந்த தண்ணீரிடை மலர்ந்த சுகந்தமண
மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லிய பூங்காற்றே
மென்காற்றில் விளைசுகமே சுகத்தில்
உறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மளவாளா பொதுவில்
ஆடுகின்ற அரசேஎன் அலங்கள் அணிந்தருளே”
– (4091)
என்றெல்லாம் அழகுத்
தமிழால் இயற்கையையே இறைவனாக அனுபவித்துப் பாடுகிறார்.
அண்டப் பெருவெளியை
இயக்குகின்ற இயற்கை சக்தி எதுவோ அதையே வள்ளலார் தான் கூறும் கடவுளின் நிலையாக காட்டுகிறார்.
இத்துமதத்தில் தோன்றிய எந்த அருளாளர்களும் வள்ளலார் போல் இந்தக் கருத்தை துணிந்து கூறவில்லை.
அவர்கள் சைவம், வைணவம் என்ற நிலைக்குள் இருந்து கொண்டு தெய்வத்தை வள்ளலார் சொன்னது
போல் குழுவுக்குறியாக மட்டுமே காட்டினார். வள்ளலார் கண்ட சிவம், வள்ளலார் கண்ட திருவடி
நிலை அண்டப்பரப்பை ஆளும் இயற்கையின் நிலை என்பது பின்வரும் அருட்பாவை உற்று நோக்கினால்
புரியும்.
தடையுறாப் பிரமன் விண்டுருத் திரன்மா
யேச்சுரன் சதாசிவன் விந்து
நடையுறாப் பிரமம் உயர்பராசக்தி
நவில்பர சிவம் எனும் இவர்கள்
இடையறாத் திருச்சிற்றம்பலத் தாடும்
இடது காற் கடைவிரல் நகத்தின்
கடையறு துகள் என்றறிந்தனன் அதன்மேற்
கண்டனன் திருவடி நிலையே ……
(3925)
இந்தப் பாடல் வள்ளலாரின்
தனித்தன்மையை மட்டுமின்றி மிக உன்னதமான உயர்ந்த நிலையைக் காட்டுகிறது. அவரது மனம் இந்த
அண்டப்பரப்பை விட விசாலமானது. அதனால் தான் திருவடிநிலையை இப்படி உணர்த்துகிறார்.
திருச்சிற்றம்பலத்தாடும்
எனில் இந்தப்பொதுவெளியை இயக்கும் இயற்கை சக்தி. அப்படி உள்ள இயற்கையின் உருவம் மனித
உருவம் என வைத்தால் நம் சமயம் காட்டுகின்ற கடவுள்கள் ஆன பிரம்மன், விஷ்ணு, உருத்திரன்,
மயேச்சுரன், சதாசிவன், என்று கூறப்படும் இவர்கள் அந்த இயற்கையின் உருவத்தில், அதன்
இடது கால் கடைவிரலின் நகத்தின் சிறு துகள்கள் போன்றவர்கள் என சாற்றுகின்றார். இறைவனை
அன்பிலே பழுத்த தனிப்பழம் என்கிறார். அறிவிலே அறிவறிவென் கோ என்கிறார்.
புருவமத்தி அனுபவத்தை இறைமையாகக் கண்டு இன்புறுவதை
கண்களிக்கப் புகை சிறிதும் காட்டாதே
புருவக்
கலைநடுவே விளங்குகின்ற கற்பூர
விளக்கே
என்று பாடுவதன்
மூலம் அறிய முடியும்.
அகத்திலும் புறத்திலும்
நிகழும் அருள் அனுபவங்களை இறைமை இன்பமாக தரிசனம் செய்தவர்.
அன்புருவானர் இன்புற உள்ளே
அறிவுறுவாயினீர் வாரீர்
அருட்பெருஞ்ஜோதியீர் வாரீர் என்பதால்
அன்பு வயப்பட்ட
மனத்தில் அறிவாக ஒளிருவது இறைமை என்பது விளங்குகிறது. ஒன்றைச் சொல்லிப் பெரியாரின்
கடவுள் கொள்கைக்கு நுழையலாம்.
ஓதி உணர்வரும் ஜோதி – எல்லா
உயிர்கள் உள்ளும் ஒளிர்கின்ற ஜோதி
என்பதே வள்ளலாரின்
சித்தாந்தம். எந்த வகையான வேதங்களாலும் ஓதி உணரமுடியாது இறைவனை. அது எது? அது தான்
உயிருக்கு உயிராய் விளங்கும் அருட்பெருஞ்ஜோதி! உயிருக்கு உயிர் உண்டாகக் காரணம் எதுவோ
அதுவே இறைமை. அந்த உயிர்களைத் தன்னைப்போல் சமமாக வேறுபாடு இன்றி மதித்து அதன் துயர்
துடைப்பவன் எவனோ அவன் உள்ளமே இறைவன் வாழும் ஆலயம். வள்ளலார் உருவ வணக்கத்தை விட்டு
ஒளிவழிபாட்டை வலியுறுத்தினார். பக்குவம் பெற்றவர்கள் அகத்தில் அந்த ஒளியை உணர்தல் வேண்டும்.
அருட்பெருஞ்ஜோதி
என் அகத்தில் ஓங்கியது என்ற வள்ளலாரின் கூற்றால் அப்படி பக்குவம் வரும் வரை புறத்தே
ஒளியின் முன்பு வழிபாடு செய்யலாம். மூடநம்பிக்கை இல்லை. இடைத்தரகர் இல்லை. காசு பணம்
செலவழிக்க வேண்டியது இல்லை. சடங்கு, சம்பிரதாயம், பூஜை முதலியன தேவையில்லை. பரிகாரங்கள்
தேவையில்லை. புற வேடம் முக்கியம் இல்லை. அகத்தூய்மையே முக்கியம். அது அறிவின் வழிபட்ட
வழிபாடு. இது அன்பு வழிபட்ட வழிபாடு. இதை பெரியார் மறுக்கவில்லை.
கடவுளை ஏன் பெரியார்
இல்லை எனச் சொன்னார் என அவர் கூறும் காரணங்களைக் கொண்டே ஆராய்தல் சிறந்தது. உலகிலேயே
கடவுள் இல்லை என அறிவுபூர்வமாக தனது சிந்தனை சக்தியால் வெளிப்படுத்தி அதை பகுத்தறிவாளர்கள்
ஏற்றுக் கொள்ளச் செய்ய வைத்து இந்த சமுதாயத்தில் ஒரு மாபெரும் புரட்சியை ஏற்படுத்தியவர்
தந்தை பெரியார். கடவுள் மறுப்புக் கொள்கையை வெற்றிகரமாக இந்த நாட்டில் முன்மொழிந்ததோடு
அதைப் பின்பற்றி ஒரு கூட்டத்தையே நடக்கச் செய்த மிகப்பெரிய புரட்சிக்காரர் இவ்வுலகில்
ஒருவர் உண்டெனில் அது தந்தை பெரியாராக மட்டுமே இருக்க முடியும். பெரியார் கூட கடவுளை
மறுக்கும் முன் அதைப்பற்றி ஆராய்ச்சி செய்தவரே. ஈரோட்டில் புறப்பட்டுக் காசிவரை சென்று
கடவுளைத் தேடியவர்.
காசிவரை சென்றவர்
கடவுளின் பெயரால் நடத்தப்படும் பித்தலாட்டங்களையும், புரட்டுகளையும், போலிகளையும் கண்டு
தெளிவு பெற்றார். ஆன்ம ஈடேற்றத்திற்காக ஆன்மிகம் என்பதை விட ஆஸ்தியை பெருக்கிக் கொள்ளவேப்
பலர் ஆன்மிகம் எனும் போர்வையை போர்த்திக் கொண்டதை அவர் கண்கூடாகக் கண்டார். சமுதாயத்தில்
இருந்த ஏற்றத் தாழ்வுகளும், தீண்டாமைகளும் அடிப்படை மற்றும் ஆணிவேராக இருப்பது கடவுள்
என்னும் ஒரு பொருள் அல்லது வஸ்துதான் காரணம் எனக் கண்டவர் அதை அடியோடு அழித்து ஒழித்தால்
ஒழிய சமுதாய ஏற்றத் தாழ்வுகளைப் போக்க முடியாது எனத் துணிந்தவர்.
ஆன்மிகவாதிகள்
வழி நின்றே கடவுளைப் பற்றி சிந்தித்தார், பேசினார். தனது மனதுக்கும் அறிவுக்கும் எட்டிய
கருத்துகளை எவருக்கும் அஞ்சாமல் மிகத்துணிவுடன்
சொன்னவர் அவர். அதற்காக கல்லடிகள், சொல்லடிகளை இன்னும் சொல்லப்போனால் தன் மீது செருப்புகளை
வீசினாலும் அதைப் பொருட்படுத்தாமல் சமுதாயத் தொண்டிற்காகத் தாங்கிக் கொண்டார்.
அவர் பேச்சில்
அறிவு இருந்தது. அது ஆழமாகவும் இருந்தது. எவ்வளவு பெரிய புராணிகர்களாக இருந்தாலும்,
புராண சாஸ்திரங்கள், இதிகாசங்கள், வேதங்களில் ஊறியவர்களாக இருந்தாலும் அவர் எழுப்பிய
கேள்விகளுக்கு விடை சொல்ல முடியாமல் திணறினார். நேருக்கு நேராகக் கேள்விகள் கேட்டாலும்
பொறுமையாக பதில்கல் சொல்லும் ஆழ்ந்த அறிவாற்றல் அந்த பகுத்தறிவுச் சூரியனிடம் பிரகாசித்தது.
அவர் ஏன் நாத்திகம் பேசினார்?
அவர் கூற்றை நோக்குங்கள்.
“நாத்திகத்துக்கு பயந்தவனால் ஒன்றும் செய்யமுடியாது. அதிலும் சமதர்ம
கொள்கையை பரப்ப வேண்டுமானால் நாத்திகனால் தான் முடியும். புத்தரையும் நாத்திகன் என
சொன்னதற்கு காரணம் அவர் சமதர்ம கொள்கையைப் பரப்ப முயன்றதால் தான். எங்கு அறிவுக்கு
மரியாதை இல்லையோ சமத்துவத்துக்கு இடமில்லையோ, அங்கெல்லாம் இருந்து தான் நாத்திகம் முளைக்கின்றது”
இக்கூற்றுப்படிச்
சிந்தித்து பார்த்தால் சமத்துவம் பேசிய, சமதர்மத்தைப் போதித்த அறிவு வழிப்பட்ட உருவமற்ற
கடவுளைக் காட்டிய வள்ளலாரைக் கூட ஒரு கூட்டம் அன்றைக்கு நாத்திகவாதி என்று சொன்னது
நினைவுக்கு வருகிறது.
ஏன் கடவுளைப் பற்றி
பேசினார் பெரியார், அவரே சொல்கிறார்….
“மக்களுக்கு ஆத்திகம், நாத்திகம், என்பதத்கு பொருள் தெரிவதே
இல்லை. நாத்திகன் என்றால் கடவுள் இல்லை என்று சொல்லுகிறவன் அல்லன். நான் கடவுள் இல்லை
என்று சொல்கிறவன் அல்லன். இருக்கிறது என்று ஒப்புக்கொள்ளவும் இல்லை. என்னால் கடவுள்
என்பது என்ன? எப்படிப்பட்டது என்று புரிந்து கொள்ள இன்றைக்கும் முடியவில்லை. புரிந்து
கொண்டதாகக் கருதுபவரிடத்தில் எனக்கு ஏன் சண்டை வேண்டும்? நான் கண்டிப்பதெல்லாம் பேசுவதெல்லாம்
கடவுள்களைப் பற்றிய சேதியல்ல. போலிக் கடவுள்களால் மக்கள் சீரழிகிறார்களே என்பதே என்
கவலை. நாத்திகன் என்பதற்கு கடவுள் இல்லை என்பவன்
என்று பொருள் இல்லை. புராண இதிகாச வேதசாஸ்திரங்களை ஒப்புக்கொள்ளாதவர்களையே, அவற்றைப்
பகுத்தறிவு கொண்டு ஆராய்ந்து பார்ப்பவர்களையே, பார்ப்பனர்கள் நாத்திகர்கள் என்று குறிப்பிடுகிறார்கள்.(விடுதலை
26.09.1956) இதிலிருந்து ஒன்று புலப்படுகிறது. ஒரு கடவுள் என்று சொல்வதும்
அதுவும் போலிக்கடவுளாக இல்லாமல் அறிவுக்கு புலப்படும் அல்லது நமதறிவு உணரும் ஒன்றை
கடவுள் எனலாம் என்பதே” அவர் கூற்று. இது 1956ல் அவர் பேசியது. மேலும் இந்த சமுதாயத்தில்
சில தந்திரவாதிகள் புராணங்களை, வேதங்களை, இதிகாசங்களை அறிவு கொண்டு ஆராய்ந்தவர்களையும்
நாத்திகர்கள் என்றே சொல்லியுள்ளதும் தெரிகிறது. அந்த வகையில் வள்ளலாரையும் கூட அப்படித்தான்
சொல்லிப் பழி தூற்றியுள்ளனர்.
நாத்திகன் என்பதற்கு
பெரியார் தரும் விளக்கம் ஒருகணம் நம்மைச் சிந்திக்க வைக்கிறது. “நாத்திகன் என்றால் ஞானி அறிவாளி என்று தான் பெயர். கடவுள்
இல்லை என்பவர் என்று பொருள் அல்ல. ஞானி என்றால் முனிவர் என்பது அல்ல – ஞானம் உடையவன்.
அறிவு உடையவன் என்பது பொருள். எவன் ஒருவன் அறிவு கொண்டு எதையும் விவகாரம் பண்ணுகிறானோ
அவன் நாத்திகன் எனக் கூறப்படுகிறான்.”
‘ஆத்திகன் என்றால்
அறிவில் நம்பிக்கை வைக்காமல் சாஸ்திரம், புராணங்கள் முதலியவைகள அப்படியே ஒப்புக்கொண்டு,
ஆராயாமல் நடப்பவன் என்று பொருள்” அற்புதமான சிந்தைக்கு விருந்தளிக்கும் பெரியாரின்
கூற்று இது.
இந்தக் கூற்றைக்
கவனிக்கும் போது முனிவர்கள் என்று சொல்லப்படுபவர்கள் எல்லாம் ஞானிகள் அல்ல என விளக்குகிறது.
முனிவர்கள் எல்லாம் ஞானம் உடையவர்கள் அல்ல என்கிறார்.
ஒருநிலையில் நின்று
பார்த்தால் வள்ளலார் சொன்ன சரியை, கிரியை, யோகம், ஞானம் என்னும் நான்கு படிகளில் பெரியார்
ஞானத்தில் தெளிந்த நான்காவது படியில் நிற்பது தெரிகிறது. கடவுள் என்ற எண்ணம் அவருக்கு இல்லை என்பது அல்ல நம் கவலை.
கடவுள் போலியான கடவுளாக இருக்கக் கூடாது என்பதே பெரியாரின் கவலை. இந்துமதத்தில் பிறந்த
பெரியார் இந்து மதத்தில் உள்ள குற்றங்குறைகளை மட்டும் சாடவில்லை. உலகில் உள்ள அனைத்து
மதங்களிலும் உள்ள மூடப்பழக்க வழக்கங்களை, அறிவுக்கு பொருந்தாத கருத்துகளைக் கண்டிக்கத்
தவறியதில்லை. அதிலே இந்து மதத்தை மட்டும் கொஞ்சம் கடுமையாகச் சாடினார் ஏன் எனில் அவரே
சொல்கிறார்.
“பொதுவாக இந்துமதம் மக்கள் பிறவியில் உயர்வு – தாழ்வு என்பதைக்
கற்பிப்பதும், நெற்றியில் ஏதாவது குறிவைத்துக் கொள்வதும் பல சாமிகள் இருப்பதாக வணங்குவதும்,
என் சாமி பெரியது, உன்சாமி சிறியது என்று சண்டை போடுவதும், சாமிக்குப் பெண்டு, பிள்ளைகள்,
கூத்தியாள் முதலியவை கற்பிப்பதும் ஆகியவைகளைத் தவிர வேறொன்றும் இல்லை. இவைகளைப் பற்றி
ஆராய்வோமென்றால் இவை வேதத்தில் உள்ளவை என்றும் வேதம் தான் இந்துமதம் என்றும் சிலர்
சொல்லிவிடுகிறார்கள். சரி அந்த வேதத்தையாவது பார்க்கலாம் என்றால் அதை நீ கண்ணால் பார்த்தால்
கண்ணைக் குத்த வேண்டும், காதால் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்று
சொல்லி விடுகிறார்கள்.”
இவை குடியரசு நாளிதழில் 3.4.1927 அன்று வெளிவந்த அவரது எழுத்துகள்.
பொதுவாக உலகில்
தோன்றியுள்ள பெரும்பாலான மதங்கள் ஒரு இறைவனைக் காட்டும் போது இந்துமதம் மட்டும் பல்லாயிரக்கணக்கான
கடவுள்ககளைக் கற்பிப்பதும் ,அவற்றின் அவதாரத்திற்கும், பிறப்பிற்கும் கட்டுக்கதைகளைக்
கொண்டு நம்பும்படி சொல்வதும் பகுத்தறிவுக்கு ஏற்றதாக இல்லை. இந்த கற்பனைக்கதைகளை நம்பும்படி
பல பிரசங்கிகள் காசுக்காக, பணத்துக்காக நெற்றி வியர்வை நிலத்தில் சிந்த சொற்பொழிவு
நிகழ்த்தி மாலை, மரியாதையுடன் செல்வதை நானே பல இடங்களில் பார்த்து இருக்கிறேன். ஒன்றேகுலம்
என்றும் அன்பே சிவம் என்றும் கூறிக் கொண்டு நடைமுறையில் அதற்கு மாறாகப் பல ஆயிரக்கணக்கான
உருவங்களை நியாயப்படுத்திக் கற்பிப்பது எந்த வகையில் நியாயம்? இந்த புரட்டுகளையே அன்று
வள்ளலார் நாசுக்காகக் கண்டித்தார். தந்தை பெரியாரோ புரட்டிப்போட்டு அடித்தார் என்றால்
அது மிகையில்லை.
இவ்விடத்தில் “ஆயிரந்தெய்வங்கள் உண்டென்று தேடி அலையும் அறிவிலிகாள்” என்று பாரதியார் பாடியுள்ளதையும் நினைவு
கூறத்தக்கது.
தந்தை பெரியாரின்
பேச்சில் உப்பிருக்கும். ஆமாம் திராவிடன் இனமான உணர்வுக்கு உப்பிடும் கருத்துத்தெளிவு
இருக்கும். மடையர்களையும் கொஞ்சம் சிந்திக்க வைக்கும் பேச்சே பெரியாரின் பேச்சு. பெரியார்
என்ற பகுத்தறிவு எரிமலை வெடித்துச் சிதறியதால் இங்கு ஆதிக்க சக்திகளின் ஆணிவேரே ஆட்டம்
கண்டது. பெரியார் என்னும் பெரிய ஆற்றின் காட்டாற்று அறிவு வெள்ளத்தில் பழம் பஞ்சாங்கங்கள்,
சனாதனங்களின் அஸ்திவாரம் ஆடிப்போனது. உதிரத்தில் உணர்வு ஏற்றும் பேச்சு அவருடையது.
பாசிபடிந்த மனித மூளைகளில் அறிவென்னும் உப்புத்தாள் கொண்டு தேய்த்து தூய்மைப்படுத்தியவர்
பெரியார்.
அவர் வழிவந்த கலைஞர்
அவரது கருத்துகளை தன்னுடைய திரைப்பட வசனங்களில் திணித்தார். பராசக்தித் திரைப்படத்தில்
இறுதியில் வரும் நீதிமன்றக் காட்சியில் சிம்மக்குரலோன் சிவாஜி கணேசன் கலைஞர் வசனத்தை
முழங்குவார்.
அதில் “கோயிலில் குழப்பம்
விளைவித்தேன். கோயில் கூடாது என்பதத்காக அல்ல. கோயில் கொடியவர்களின் கூடாரம் ஆகிவிடக்கூடாது
என்பதத்காக. பூசாரியைத் தாக்கினேன், அவன் பக்தன் என்பதற்காக அல்ல. பக்தி பகல்வேஷயாய்
ஆகிவிடக்கூடாது என்பதற்காக” என்று வசனம் பேசுவார். இது கூடத் தந்தை பெரியாரின்
தாக்கமேயன்றி வேறில்லை.
கோயிலைக் கட்டியவன் சூத்திரன். அந்த கோயிலின் கருவறைக்குள் நுழைந்து
பக்தியின் பெயரால் பணம் சம்பாதிப்பவன் பார்ப்பான். இதைக் கண்டு சீறும் பெரியார் தமிழ்நாட்டில்
இருக்கும் பெரிய பெரிய கோயில்களை எல்லாம் கட்டி வைத்தது யார் – காணி நிலம் எந்த பார்ப்பானாவது
எந்த கோயிலுக்காவது எழுதி வைத்திருக்கிறானா? உன் சவுகரியத்திற்காகக் கோயில்களும், அக்ரஹாரங்களும்
கட்டிக் கொடுத்தூன் சுக வாழ்வுக்கு வழி தேடிக் கொடுத்தவர்கள் சூத்திரர்களா? என்று ஏன்
பார்ப்பானைக் கேட்கக்கூடாது? பார்ப்பான் உழுதால் பாவம் என்று எழுதிவைத்துக் கொண்டு
நிலத்தில் இறங்காமலேயே வாழ வழி வகுத்துக் கொண்டானே? உழுது அறுவடை செய்ததைத் தின்பது
மட்டும் புண்ணியமாகுமா? ஒருவன் உழைக்க அதன் பலனை மற்றவன் அடைய வேண்டும் என்று ஆண்டவன்
எழுதிவைத்தான் என்கிறானே இதுவா வேதம்?
இப்படிக் கேள்விக்கணைகளை
எழுப்பி மக்கள் மன்றம் முன்பு எழுச்சித் தீயை எழுப்பியவர் பெரியார். அவர் பேச்சில்
நெருப்பின் அலைவீசும். கடவுளைப் பார்த்து அதாவது கடவுள் என்று கற்பிக்கப்பட்டவைகளைப்
பார்த்து அவர் கேட்ட கேள்விகள் மனித சமுதாயத்தையே அவரை நோக்கி திரும்பிப் பார்க்க வைத்தன.
“நாம் கடவுளைக் கூட சும்மா விடவில்லையே? உனக்கேன் இவ்வளவு பெரிய
கோயில்கள்? கோபுரங்கள்? உனக்கேன் நாலுவேளை பூஜை? உனக்கேன் பெண்டாட்டிகள்? உனக்கேன்
கூத்திகள்? உனக்கேன் தங்கத்தாலும், வைரத்தாலும் நகைகள்? உனக்கேன் வேளாவேளைக்கு சோறு?
நீ சாப்பிடுகிறாயா? உனக்கென்று பொட்டு கட்டிக் கொள்ளும் தாசிகளைத்தான் நீ அனுபவிக்கிறாயா?
அய்யோ பாவம் அது இதையெல்லாம் கேட்டுக் கொண்டு தானே இருக்கிறது. அது கூட ஒன்றும் நம்மோடு
சண்டைக்கு வருவதில்லையே?”
இந்தப் பேச்சு
இந்த கேள்விகள் ஆத்திகர்களின் நெஞ்சத்தில் வெந்நீர் ஊற்றுவது போல் இருந்தாலும் அதில்
நியாயம் இருந்தது. ஒரு குறிப்பிட்ட குலப்பெண்களை தாசிகள்,
அதாவது தேவதாசிகள் என்று கோயிலுக்குப் பொட்டு கட்டி வைத்து அவர்களை அனுபவித்துக் கொண்டாட்டம்
போட்ட கூட்டத்தைப் பார்த்து மிகவும் கடுமையாகத் தன் கேள்விகளை முன் வைக்கிறார்.
ஏழைக் குழந்தைகள்
பசியால் பாலுக்காக அழுகின்றபோது கடவுளுக்கு ஏன் லிட்டர் கணக்கில் பாலாபிஷேகம்! அடுத்த
வேளை உணவுக்கு ஆளாய்ப் பறக்கும் சமுதாயத்தில் பசிப்பிணி என்னும் அரக்கன் ஏழைகள் வயிறை
எரியச்செய்து கொண்டிருக்கும் போது கடவுளுக்கு எதற்காகப் பஞ்சாமிர்த அபிஷேகம்? இதற்கு
பல காரணங்கள், தத்துவங்கள் கூறும், பக்கம் பக்கமாக நியாயங்கள் கூறும் புராணிகர்கள்,
புளுகர்கள் உண்டு. கடவுள் வழிபாடு என்பது ஏழைகளுக்கு, மற்ற உயிர்குலத்திற்கு செய்யும்
தொண்டே என்ற வள்ளலாரின் கொள்கை நிலைபெற்றால், ஜீவகாருண்யமே உண்மையான இறைவழிபாடு என்ற
வள்ளலாரின் கொள்கை விளங்கினால் இது போன்ற கேள்விகளுக்கு வேலை இல்லை.
திருமூலர் திருமந்திரம்
சொல்கிறது:
“படமாடற்கோயில் பகவற்கு ஒன்று
ஈயில்
நடமாடற்கோயில் நம்பர்க்கங்கு ஆகா”
நடமாடற் கோயில் நம்பர்க்கு ஒன்று
ஈயில்
படமாடற் கோயில்பகவற்கங்கு ஆமே”
அதாவது படமாடும்
கோயிலான கடவுள் குடியிருக்கும் கோயில்களுக்கு ஒன்று செய்தால் அது நடமாடும் கோயிலான
ஏழைகளுக்கு வந்து சேராது. ஆனால் நடமாடும் கோயில்களான ஏழைகளுக்கு ஒரு உதவி செய்தால்
அது படமாடும் கோயில் கடவுளுக்கு சென்று சேரும் என்கிறது திருமந்திரம். இதைப்புரிந்து
கொண்டு செய்தால் பெரியார் ஏன் கோபப்படப்போகிறார். அபிஷேகங்கள், ஆராதனைகள், இறைவனைக்
குளிர்விக்க என்று ஏன் செய்கிறார்கள்? ஏதாவது ஒன்றை எதிர்பார்த்து
எனக்கு இன்னதைக்கொடு, சுகத்தை கொடு, பணத்தைக்கொடு என்று பக்தியின் பெயரால் செய்து கொண்டுள்ளனர்.
பக்தியை விட ஒழுக்கம் மிக முக்கியம் என்பது பெரியாரின் கருத்து. பக்தி ஒருவனுக்கு இல்லாது
போனாலும் அதனால் எவருக்கும் எந்த தீமையும் இல்லை. ஆனால் சமுதாயத்தில் சில மக்களிடம்
ஒழுக்கக்கேடு விளைந்தால் அது ஒட்டுமொத்த சமுதாயத்தைப் பாதிக்கிறது. அதாவது பக்தி என்பது
தனிமனித சம்பந்தப்பட்டது. ஆனால் ஒழுக்கம் பிறரையும் பாதிப்பதால் பக்தியைவிட ஒழுக்கத்தை
தந்தை பெரியார் மிகவும் வலியுறுத்துகிறார். பிறருக்கு உதவிசெய்வதே மிகப்பெரிய அறம்
என்கிறார் அவர்.
நம் நாட்டின் எல்லா
கெட்ட காரியங்களுக்கும் நமது நாட்டுக் கடவுள்களே வழிகாட்டிகளாக இருப்பதாக குற்றம் சாட்டுகிறார்.
அதாவது சூது, வாது, வஞ்சகம், பொய், புரட்டு, திருட்டு, விபச்சாரம், குடி, கூத்தி, கொலை,
ஜீவ இம்சை முதலிய எந்தக் கெட்டப்பழக்கத்தை எடுத்துக்கொண்டாலும் சிலகடவுள்களின் இடத்தில்
இவை யாவும் மொத்தமாகவும், சில்லரையாகவும் இருப்பதாகவும் இதே குணங்கள் கடவுளுக்கு இருப்பதாக
நாமே திருவிழாக்கள் மூலமாக நடத்திக் காட்டிக்கொண்டு வருவதாகவும் குற்றம் சாட்டுகிறார்.
வள்ளலார் சொல்லும்
“எவ்வுலகும் ஓர் ஒழுக்கமுறல் வேண்டும்” என்னும் கருத்திற்கேற்பவே பெரியாரும் ஒழுக்கக்கேடான
செயல்களை கடவுளின்மேல் ஏற்றிக் காட்டியுள்ளதைச் சுட்டிக்காட்டி வாதம் செய்கிறார். வள்ளற்பெருமான்
சுட்டிக்காட்டும் தனிப்பெருங்கருணை குணம் கொண்ட கடவுளைத் தந்தை பெரியார் ஏற்கிறார்.
இதை அவரே சுட்டிக் காட்டுகிறார்.
“நமக்குக் கடவுள் என்பதெல்லாம்
நம் நடத்தையில் சத்தியம், நாணயம், தயவு, உபகாரஞ்செய்தல், துரோகம்செய்யாமல் இருத்தல்
ஆகியவைகளாகும்”
தனிப்பட்ட மனிதன்
உயர்நெறியில் வாழ்ந்து ஒப்பற்ற பெருந்தயவுடையப் பேரறிவாளனாகத் திகழ்வதே பூரண இன்பம்
என்று வள்ளலார் வலியுறுத்துவதையே ஈண்டு சிந்திக்கத்தக்கது.
தந்தை பெரியாரின்
கொள்கைகளின் மிகவும் தலையாய கொள்கையும், அவர் அடிக்கடி பொதுக்கூட்டங்களில் வலியுறுத்தி
பேசுவதும், தனது கட்டுரைகளில் குறித்து பேசுவதும் என்னவெனில்,
உள்ளதைப் பங்கிட்டு உண்பது, உழைப்பைப் பங்கிட்டு செய்வது என்ற நிலை
ஏற்பட்டால் கடவுளுக்கு வேலையோ அவசியமோ இருக்காது என்பதாகும். அவர் மேற்சொன்ன கூற்றுப்படி
எவன் வாழ்ந்தாலும் அவனே கடவுள் தன்மை உடையவன் ஆகிறான். உள்ளதை பங்கிட்டு ஏழைக்கு வழங்கி
உண்பவன் தனிப்பெருங்கருணையாளன். உழைத்து உண்ண வேண்டும் என நினைப்பவன் கடவுளுக்குப்
பயந்தவன் ஆகையால் இதுவே ஒருவகையில்
வழிபாடு ஆகிறது. வள்ளலார் சுட்டிக்காட்டும்
ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும்
எவரும்
ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்த
வேண்டும்
என்னும் சோஸலிச
சித்தாந்தத்தை தந்தை பெரியார் அவர் பாணியில் சொல்லியுள்ளார். 19ஆம் நூற்றாண்டில் ஜெர்மனியில்
கார்ல்மார்க்ஸ் வலியுறுத்திய கம்யூனிச சிந்தனையைத் தமிழகத்தில் வள்ளலாரும், பெரியாரும்
சொல்லத் தவறவில்லை.
கடவுளை அன்பும்,கருணையும்
ஒழுக்கமும் உள்ளதாக மட்டும் காட்டியிருந்தால் பெரியாருக்கு கடவுள் எதிர்ப்பில் வேலை
இருந்திருக்காது. ஆனால் கற்பிக்கப்பட்ட கடவுள்கள் கோடிக்கணக்கான மக்களை, ஆண்களை, பெண்களைக்
கொன்று குவித்ததாகவும், வெட்டி வீழ்த்திச் சித்திரவதை செய்து நாசமாக்கியதாகவும், விபச்சாரம்
செய்ததாகவும் நடப்பில் நடத்திக் காட்டிப் பரப்புகின்ற காரணத்தினால் இப்படிப் பட்டவர்களை
அயோக்கியர்கள் என்று திட்டுகிறார். அப்படிப்பட்ட கடவுள்களை கற்பித்தவனை முட்டாள் என்கிறார்.
இந்தக் கடவுள்களை வணங்குபவனைக் காட்டுமிராண்டி என்கிறார். அதனால் கடவுள் சுயம் அல்லது
அனாதி என்று நினைப்பவர்களுக்குப் பெரியார் மேல் கோபம் வருவதில் அர்த்தம் இருக்க முடியாது.
கடவுள் என்ற சொல்லே
தமிழ்ச்சொல் இல்லை என்றும் இங்கு சித்தரிக்கப்பட்டுள்ள கடவுள்கள் எல்லாம் வெளிநாட்டில்
இருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள கடவுள்கள் என்றும் பெரியார் கூறுகிறார். மேலும்
நமது கடவுள்களில் ஒன்று கூட ஒழுக்கமாய், யோக்கியமாய், நாணயமாய், போக்கில் பொறுப்புடன்
இருந்ததாகக் கடவுள் சம்பந்தப்பட்ட எந்த ஆதாரங்களிலும் காணமுடிவதில்லை என்பது அவரது
வாதம்.
கடனைப் பற்றிச்
சிந்தனை செய்து வாதம் செய்யும் பெரியார் சிந்தனையின் ஆழத்திற்கே சென்று ஆணித்தரமாகச்
சில கருத்துகளை விதைக்கிறார்.
கடவுள் நம்பிக்கை
என்பது தானக ஒரு மனிதனுக்கு வருவதில்லை. அது பிறரால் ஒருவனுக்குப் புகுத்தப்படுகிறது
அல்லது கற்பிக்கப்படுகிறது என்று தான் சொல்ல வேண்டும். ஏனனில் கடவுள் நம்பிக்கை உள்ள
மக்கள் எல்லோருமே ஒரே மாதிரியான கடவுளிடம் நம்பிக்கை கொண்டவர்கள் அல்லர். எப்படி எனில்
கடவுள் நம்பிக்கைக்காரர்கள் ஒரே மாதிரியான ஒரே பெயருள்ள, ஒரே மாதிரி குணங்கொண்ட கடவுள்
நம்பிக்கையாளர்களும் அல்லர். ஒரே மாதிரியான கடவுள் சக்தி, ஒரே மாதிரியான கடவுள் சொல்
என்ற நம்பிக்கை கொண்டவர்களுமல்லர். இதற்கு காரணம் என்னவெனில் கடவுள் நம்பிக்கை என்பது
இயற்கையாய் தானாக ஒருவனுக்குத் தோன்றாமல் மற்றவர் கற்பிப்பதால், சூழ்நிலையால் ஏற்படுவதால்தான்
இவை பற்றிய விஷயங்களில் ஒன்றுபோல் நம்பிக்கை கொள்ள முடிவதில்லை என சொல்கிறார்.
உலகெங்கும் மக்கள்
ஒன்று என்ற எண்ணம் வர வேண்டும். உலகத்தைப் பொது என்றும், உலகப்பொருள்கள் போக போக்கியங்கள்
யாவருக்கும் சமம் என்றும் மனிதன் எண்ண வேண்டும். இதற்கு கடவுள் குறுக்கிடாமல் இருந்தால்
கடவுளைப்பற்றிய வேலை நமக்கு இல்லை. அதைப் பற்றிய கவலையும் நமக்கில்லை என்று பெரியார்
அடிக்கடித் தன் பேச்சில் குறிப்பிடுகிறார்.
கடவுள் கொள்கையில்
பெரியாரின் முடிந்த முடிவு என்ன? அவர் பின்வருமாறு சொல்கிறார்.
“மனிதனுக்கு மிக அருமையான அறிவும், பகுத்தறிவும் சக்தியும், ஆழ்ந்து
சிந்திக்கும் தன்மையும், அனுபவத்திற்கு ஏற்ப நடக்கும் உரிமையும் இருக்கும் போது கடவுள்
எதற்கு என்பதை நல்லவண்ணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்தக் கடவுள் உணர்ச்சி இல்லாமல் இருந்ததால் தான் மனிதப்பண்பு,
மக்கள் யாவரையும் ஒன்று போல் கருதும் உணர்ச்சி, நேர்மை, நல்லதைப் போற்றவும், தீயதைக்
கண்டிக்கவுமாக துணிவு, யவரையும் ஒன்றுபோல் கருதச் செய்யும் பொதுத் தொண்டு உணர்ச்சியும்
ஏற்பட முடியும். இவை இன்று சுத்தமாய் இல்லாததற்குக் காரணம் இந்தக் கடவுள், மதம் என்கிற
உணர்ச்சி தான் என்பது எனது தாழ்மையான முடிந்த முடிவு.”
மேற்க்கண்ட பெரியாரின்
எண்ணம் நமக்கு வள்ளலாரின் ஒருமைப்பாட்டுணர்வை மனதில் நிறுத்துகிறது.
கள்ளவா தனையைக் களைந்தருள் நெறியைக்
காதலித் தொருமையில் கலந்தே
உள்ளவா றிந்த உலகெலாம் களிப்புற்
றோங்குதல் என்றுவந் துறுமோ”….
(4078)
என்னும் உயர்ந்த
சிந்தனையும்
பித்தெலாம் உடைய உலகர்தங் கலகப்
பிதற்றெலாம் என்றொழிந் திடுமோ
சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்தசன்
மார்க்க
சங்கம் என் றோங்குமோ…. (4076)
என்கிற வள்ளற்பெருமானின்
அகில உலக சகோதரத்துவத்தை, அகில உலக ஒருமைப்பாட்டுணர்வை பெரியாருக்கு முன்பாகவே நாம்
அருட்பாவில் வாயிலாக காண்கின்றோம்.
உள்ளபடி இயற்கையிலேயே
உள்ள ஒரு பொருளாக கடவுளை வள்ளலார் காட்டுகிறார். இயற்கை விளக்கமாக இயற்கை அறிவாக, இயற்கை
உண்மையாக, இயற்கை இன்பமாக இருப்பது இறைமை என்பதே வள்ளற் பெருமானின் கருத்தாகும்.
பேருபதேசத்தில்
வள்ளலார் கடவுள் நிலையை எப்படிக் காட்டினாரோ அதையே மிகவும் கடுமையாக சொல்கிறார் தந்தை
பெரியார்.
கடவுளுக்கு கண்,
மூக்கு, வாய், கை, கால், தலை, பெயர், ஆண்-பெண் தன்மை, பெண்சாதி, புருஷன், குழந்தை குட்டி,
தாய், தகப்பன் முதலியவைகளை கற்பித்து அதனிடத்தில் பக்தி செய்ய வேண்டும் என்றும், அதற்கு
கோயில் கட்டி கும்பாபிஷேகம் செய்து, தினம் பல வேளைகள் பூசை செய்ய வேண்டும் என்றும்
அச்சாமிகளுக்குள் கலியாணம் முதலியவை செய்வதோடும், தேவடியாள் வீட்டுக்கு கடவுள் சென்றார்,
கடவுள் இப்படி செய்தார் என்பதான திருவிளையாடல்கள் முதலியவை செய்து காட்ட வருஷா வருஷம்
உற்சவம் முதலியன செய்வதை மூட நம்பிகைகள் எனவும், அயோக்கியத்தனம் எனவும், வயிற்றுப்
பிழைப்புக்காகச் செய்யும் மோசடிப் பிரச்சாரம் எனவும் தீப்பொறி பறக்கப் பெரியார் பிரச்சாரம்
செய்தார். அதன் விளைவாக அவர் காலத்தில் சமுதாயத்தில் முழுமையான மாற்றம் ஏற்படாவிட்டாலும்
நல்ல மாற்றம் ஏற்ப்பட்டது. ஆனால் இன்று மீண்டும் பழைய குருட்டு நம்பிக்கைக்கு தான்
இந்த சமுதாயம் சென்று கொண்டுள்ளது என்பது மிகவும் வேதனையான விஷயம்.
ஒரு கடவுள் உண்டு
என்று எண்ணி அதுவும் அந்தக் கடவுள் ஒழுக்கமும், அன்பும், அருளும், கருணையும், நிறைந்து பொங்கும் காருண்யமூர்த்தி
என்று நினைத்து வணங்கினாலும் கூடச் சுயநலத்திற்காக
பிரார்தனை என்பது கூடாது. சுயநலம் பிரார்தனையில் இருப்பதால் தான் இன்று பிரார்தனை என்பதே
வியாபாரம் ஆகிவிட்டது.
வள்ளலார் சொல்கிறார்…..
“நீ இறைவனிடம் பிரார்தனை செய்யும்
போது நீ வாழ மட்டும் பிரார்தனை செய்யாதே. இந்த உலகம் நன்றாக வாழ பிரார்தனை செய். இந்த
உலகம் அதாவது இந்த உலகத்தில் உள்ள எல்லா உயிரினமும் இன்புற்று வாழும் போது நீயும் அதில்
அடங்குகிறாய்” எனும் வள்ளலார்
இது தான் சுத்த சன்மார்க்கப் பிரார்த்தனை என்கிறார்.
ஆனால் இன்று உலகில்
பிரார்த்தனை என்பது அதைச் செய்பவர்கள், செய்விப்பவர்கள் இவர்கள் மட்டுமே பயன் பெற வேண்டும்
என்ற நோக்குடன் ஆசை, ஆதுவும் பேராசை காரணமாக செய்யப்படுவதால் அது வியாபார நோக்காகிவிட்டது.
ஆகவே தான் இன்று
பெரும்பான்மையான மக்கள் செய்யும் பிரார்த்தனை பற்றிப் பெரியார் கூறும் போது,
இப்படிப்பட்ட பிரார்த்தனை என்பதற்கு வேறு வார்த்தையிலும் ஒரு மாற்றுப்
பெயர் சொல்ல வேண்டும் என்றால் பேராசை என்றூ தான் சொல்ல வேண்டும். பேராசை என்றால் தகுதிக்கு
மேல் விரும்புவது. படித்துப் பாஸ் செய்ய வேண்டியவன் பிரார்த்தனையால் பாஸ் செய்வது என்றார்.
பணம் வேண்டியவன் பிரார்தனையால் பணம் சம்பாதிக்க வேண்டும் என்றால் மோட்சத்துக்குப் போக
வேண்டும் என்கிறவன் பிரார்த்தனையால் மோட்சத்துக்கு போகவேண்டும் என்றால் இவைகளுக்கு
பேராசை என்று சொல்வதோடு வேலை செய்யாமல் கூலி கேட்கும் பெரும் சோம்பேறித்தனமும், மோசடியும்
என்றும் சொல்வது தான் மிகப் பொருத்தமாகும். பேராசையும், சோம்பேறித்தனமும் ஏமாற்றுத்
தன்மையும் இல்லாவிட்டால் பிரார்த்தனைக்கு இடமே இல்லை என்று கூறுகிறார் பெரியார்.
வள்ளலார் கூறும்
பிரார்த்தனையோ இந்த பிரார்த்தனையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட பிரார்த்தனை, சுத்த
சன்மார்க்கப் பிரார்த்தனை, தந்தை பெரியாரே இந்த சமுதாயத்தில் விரும்பும் ஒரு பிரார்த்தனை
என்பதை இங்கே சுட்டிக்காட்ட விரும்புகிறேன். பேராசை என்பதற்குப் பெரியார் தரும் விளக்கமும்
மிக மிக அற்புதம், பேராசை என்பது தகுதிக்கு மேல் விரும்புவது. உதாரணமாக….
1.
வேலை செய்யாமல் கூலி பெறுவது
2.
படித்து வெற்றியடைய வேண்டிய மாணாக்கன் படிக்காமல் பிரார்த்தனையால்
வெற்றியடைய எண்ணுவது.
3.
பணம் வேண்டியவன் அதனை அடைவதற்கு ஏற்ற வழியில் முறைப்படி முயற்சியோடு
செயல்படாமல் பிரார்த்தனையால் பணத்தை அடையப் பார்ப்பது.
4.
மோட்சத்துக்கு போக விரும்புபவன் அதற்கான நல்ல காரியங்களை செய்யாமல்
வெறும் பிரார்த்தனையால் அதனை அடைய எண்ணுவது.
இப்படி சாதாரண
மக்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துக்காட்டுகளோடு விளக்கம் காட்டுவதில்
பெரியாருக்கு நிகரான பேச்சாளர் உலகில் இல்லை.
எங்கு சென்றாலும்,
எவ்விடத்தில் பெரியார் பேசினாலும் யார் யார் எதிர்த்தாலும் தன்னுடைய கருத்துகளை அழுத்தம்
திருத்தமாகச் சொல்லாமல் விடமாட்டார். இதனால் தான் இவரைப் பெரியார் என்ற பட்டம் கொடுத்து
சிறப்பித்தார் மறைமலை அடிகளின் புதல்வியார் நீலாம்பிகை அம்மையார். இது ஒரு பெண்கள்
மாநாட்டில் அம்மையாரால் தரப்பட்ட சிறப்புமிக்க பட்டப் பெயர்.
கூட்டத்தில் பெரியார்
பேசுகின்றபோது யார் எழுந்து என்ன கேள்வி கேட்டாலும் அதற்கு தவறாமல் மரியாதையுடன் பதில்
தரும் மதி நுட்பமும், அனுபவமும் பெரியாரிடத்தில் இருந்தது. அதனால் தான் அவரை எவராலும்
அசைத்துப் பார்க்க முடியாமல் போனது.
ஒரு முறை லாகூரில்
ஒரு படிப்பகத்தில் தந்தை பெரியார் கடவுள் மறுப்பு பற்றி பேசும் போது ஒருவர் எழுந்து
நின்று,
உங்களுக்கு கடவுள் நம்பிக்கை
உண்டா? என்று கேட்டாராம்.
அதற்கு பெரியார் உடனே ஒரு பேப்பரையும், பேனாவையும் அவர் கையில் கொடுத்து நீங்கள் கேட்பது ரொம்ப சரி, எனக்கும் புரியவில்லை. கடவுள்
என்றால் என்ன? அதன் குணம் என்ன? அது எப்படிப்பட்டது என்பதை தெளிவாக எழுதிக் கொடுங்கள்.
அதன் பின் நான் ஒவ்வொன்றாக விளக்கம் கொடுக்கிறேன். அதிலிருந்து நீங்கள் புரிந்து கொள்ளலாம்
என்றாராம். கேள்வி கேட்டவர் எதுவும் செய்யாமல் விழித்துக் கொண்டு நின்றிருந்தாராம்.
அதைப் பார்த்து மற்றவர்கள் நீயாகப் போய் தானே மாட்டிக் கொண்டாய்? இப்போது அவர் கேட்கிறாரே
எழுதிக் கொடு என்று சொல்லியுள்ளனர்.
கேள்வி கேட்டவர்
என்ன செய்வார் பாவம்! என்ன எழுத முடியும் அவரால்! அவர் கடவுளைக் கண்டாரா? கடவுளோடு
பேசியுள்ளாரா? அவரது குணத்தை எப்படி சொல்லுவார். எதைக் கடவுள் என்பார்! முருகனையா,
பிள்ளையாரையா, சிவத்தையா, சக்தியையா அல்லது ஸ்ரீமுனிஸ்வரனையா, கருப்பனையா, காத்தாயியையா
அல்லது மதுரை வீரனையா எதைச் சொன்னாலும் அது பிறர் அவருக்குக் கடவுள் என்று காட்டப்பட்டதாகத்தான்
இருக்கும்.
கடவுளின் குணத்தை
இவர் எப்படி சொன்னாலும் அது பிறர் சொன்னதாகத்தான் இருக்கும். தேவாரம், திருவாசகம்,
திருஅருட்பா, திருமந்திரம், திருக்குறள் இவைகளில் கடவுளுக்கு என்ன குணங்கள் காட்டப்பட்டனவோ
அவைகளாகத்தான் இருக்குமே தவிர அது அவரது சொந்த அனுபவமாக நிச்சயமாக இருக்க முடியாது.
இது போன்று பல கட்டங்களில் தந்தை பெரியாரிடம் கேள்வி கேட்டவர்கள் உண்டு.
ஒருமுறை சிதம்பரத்தில்
கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது ஒரு தீட்சிதர் எழுந்து “அது சரி நாயக்கர்வாள்… கடவுளைக் கல் என்கிறீர்களே!
அதை எப்படி நாங்கள் ஏற்றுக் கொள்வது” என்று கேட்டாராம். உடனே பெரியாரின்
தொண்டர்கள் எழுந்து அவரைத் திட்டியுள்ளனர். உடனே பெரியார் திட்டியவர்களை அமரச்சொல்லி
அவரை கேட்க விடுங்கள். பதில் சொல்லி அவர் சந்தேகத்தைத் தீர்ப்பது நம் கடமை என்றாராம்.
நீங்கள் என்ன கேட்டீர்கள் என்று அந்த தீட்சிதரை மீண்டும் கேட்க, தீட்சிதரும் அதே கேள்வியைக்
கேட்க அதற்கு பெரியார் ஒரு கணம் யோசித்து உடனே தனது கைத்தடியை
எடுத்து உங்களுக்கு சந்தேகம் இருப்பின் என்னுடன் வாருங்கள் நான் வேண்டுமானால் தட்டிக்
காட்டுகிறேன் என்று சொன்னாராம். தீட்சிதர் விடவில்லை. உடனே அவர் அது கல்தான் இருந்தாலும்
மந்திரத்தால் நாங்கள் அதற்கு சக்தியை ஏற்றியிருக்கிறோம் அதனால் அது கடவுள்
தான் என்று பதில் சொல்லியுள்ளார். உடனே சுயமரியாதைக்காரர்கள் சிலருக்கு கோவம் வந்து
அந்த தீட்சிதரை அடிக்கப் போக, பெரியார் உடனே தடுத்து, அவர்களை அமரவைத்து தீட்சிதரைப்
பார்த்து “அந்த
கல்லுக்கு மந்திர சக்தியை ஏற்றி அதனை கடவுளாக்கி விட்டீர்கள்;நல்லது , நான் காட்டும்
ஒரு தாழ்த்தப்பட்டவனுக்கு மந்திர சக்தியை ஏற்றி அவரை ஏன் நீங்கள் பிராமணனாக மாற்றக்
கூடாது? ஒரு கல்லே மந்திர சக்தியால் கடவுள் ஆகும் போது அதே மந்திர சக்தியால் ஒரு தாழ்த்தப்பட்டவன்
ஏன் பிராமணன் ஆகக்கூடாது? எனக் கேட்டாராம். கேள்வி கேட்ட தீட்சிதரோ
நொந்துபோய் கூட்டத்தை விட்டு வெளியேறினார். இப்படி பல முறைகள் தந்தை பெரியார் கூட்டத்தில்
இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
ஒருவர் “இராமனை
திட்டுகிறீர்கள். உங்கள் பெயரே இராமசாமி தானே?’ என நக்கலாகக் கேட்க அதற்கு பெரியார்
ஆமாம் நீ கும்பிடும் ராமனுக்கும் நான் தான் சாமி என்று பதிலடி கொடுத்துள்ளார். இந்த
உடனடி சமயோஜித அறிவு பெரியார் போல வெகுசிலருக்கே வாய்க்கக் கூடியது. ஆய்க்கவுண்டன்
பட்டியில் 23.1.1938 அன்று ஆற்றிய சொற்பொழிவில் பெரியார் வள்ளலாரைக் குறிப்பிட்டு பேசியுள்ளார்.
அன்று பெரியாரின் அந்த பேச்சு எங்களது சமரச சுத்த சன்மார்க்க சங்கத்தாரின் சொற்பொழிவு
போலவே அமைந்துள்ளது.
வள்ளலார் “ஜீவகாருண்யம்
ஒன்றே நன்மார்க்கம் என்றும், ஜீவகாருண்யத்தால் மட்டுமே கடவுள் அருளைப்பெற முடியும்
என்றும் ஜீவகாருண்யம் அல்லாத மற்ற மார்க்கம் எல்லாம் துன்மார்க்கம் “ என்றும் தன்னுடைய
ஜீவகாருண்யஒழுக்கம் என்ற நூலில் வலியுறுத்துகின்றார். “ஜீவகாருண்யம் இல்லாது செய்யும்
செய்கைகள் மாயாஜால செய்கைகளே என்பதும், ஜீவகாருண்யம் இல்லாமல் கோயில்கள், திருத்தலங்கள், புண்ணிய யாத்திரைகள் செல்வது, யாகம்,
தபம், ஜெபம், பூசை முதலியன செய்தல் எதற்கும் பிரயோஜனம் இல்லாத செய்கைகள்” என்று வலியுறுத்துகிறார்.
சற்றேறக்குறைய
இதே கருத்தையே தந்தை பெரியார் அவர்கள் அன்று ஆய்க்கவுண்டன்பட்ட்டியில் பேசியுள்ளார்கள்.
“மனித சமுதாயம் ஒற்றுமையாக, ஒழுக்கத்துடன், சமத்துவத்துடன்,
மனிதநேயத்துடன் சாந்தியாய் இருக்க ஏதாவது ஒரு கடவுள் உணர்ச்சி மனிதனுக்கு வேண்டாமா
என்று கேட்கிறார்கள். வேண்டுமென்றே வைத்துக் கொள்வதானால், அப்படிப்பட்ட உணர்ச்சியானது
மக்கள் சமூகத்தில் ஒழுக்கம், ஒற்றுமை, சமத்துவம், சாந்தி அளிக்கிறதா என்பதை முதலில்
கவனிக்க வேண்டாமா? ஏனனில் அந்த உணர்ச்சி காரணமாக மனிதனின் வாழ்க்கையில் ஒழுக்கம் ஏற்படும்
எனச் சொல்லப்படுகிறதோ – வாழ்க்கையில் நீதி, அன்பு நிலவ மேற்படி உணர்ச்சி தூண்டுகோலாய்
இருக்கிறது என்றும் சொல்லப்படுகிறதோ அந்தக் கடவுள் உணர்ச்சிக்கும் அந்த உணர்வு கொண்ட
மனிதனின் நடத்தைக்கும் ஒருவித சம்பந்தமுமின்றி செய்துவிட்டனர். ஆயிரத்தில் அல்லது பத்தாயிரத்தில்
ஒருத்தராவது கடவுள் உணர்ச்சியின் அவசியத்துக்கு ஏற்றபடி அவர்களது வாழ்க்கையிலே நீதி,
நேர்மை, ஒற்றுமை அன்பு நிலவும்படி நடப்பதை நாம் பார்க்கின்றோமா? எவ்வளவு அக்கிரமம்
செய்த போதிலும் பிரார்த்தனை கடவுள் பெயர் உச்சரிப்பு புண்ணியதல யாத்திரை செய்த மாத்திரத்தில்
மன்னிப்பும் பாபவிமோசனமும் கிடைக்கும், ஏற்ப்பட்டு விடும் என்ற நம்பிக்கை ஏற்ப்பட்டு
அதனால் மக்களுக்கு அக்கிரமம் செய்யவே தைரியம் தருகிறதே அல்லாமல் யோக்கியனாக, அன்பாக
நடக்கக் கட்டாயப்படுத்துகிறதா? இன்று சிறையில் இருப்போரில் சமரசவாதிகளோ,, நாத்திகர்களோ
விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே இருப்பார்கள். மற்றையோர் யாவரும் கடவுள் உணர்ச்சியிலே
ஒருவித சந்தேகமும் கொள்ளாத ஆத்திகர்களே ஆவார்கள்
என்று அன்று அவரது பேச்சு அமைந்திருக்கிறது. அதே பேச்சில் அவர்
“இராமலிங்கசாமி என்று சொல்லப்பட்ட பெரியார் அறிவு தான்கடவுள் எனக்
கூறியதுடனன்றி சாதி, சமயம், மோட்சம், நரகம், கொடுக்கும் கடவுள்கள் எல்லாம் வெறும் பித்தலாட்டங்கள்
எனப் பச்சையாக சொல்லிவிட்டார். இவர்கள் எல்லாம் நாத்திகர்களா? என்று கேட்டுள்ளார்.
மனித நேயம் அல்லாத
ஆத்திகன் எல்லாம் நாத்திகனே. மனித நேயம், உயிரிரக்கம் உள்ள நாத்திகர்கள் எல்லாரும்
ஆத்திகர்களெ என்பது தான் என் கருத்து. ஒருவன் கடவுள் நம்பிக்கையின்றித் தன் வாழ்வில்
எவருக்கும் தீங்கிழைக்காமல் எல்லா உயிர்களிடத்தும் அன்பு காட்டினால் அவன் சொர்க்கம்,
நரகம் பற்றிக் கவலைப்படத் தேவையில்லை.
“உருவமற்ற கடவுளை, யாவரையும் ஒன்றுபோல் சிருஷ்டிக்கும் கடவுளை,
ஒழுக்கத்திற்கு கட்டுப்பட்ட கடவுளைப் பகுத்தறிவுக்கு ஏற்ற கடவுளை, காசு பணம் செலவு
செய்யாமல் வணங்கக் கூடிய கடவுளை, மூடநம்பிக்கைக்கு இடமில்லாத தன்மையில் யாரும் வணங்கலாம்,
நீதிக்கும், நேர்மைக்கும், அறிவுக்கும் , அன்புக்கும், கட்டுப்பட்ட எந்த மதத்தையும்
யாரும் தழுவலாம் என்று அன்றே கூறியிருக்கின்றேனே அதனால் தானே அன்று முதல் நாத்திகனாக்கப்பட்டேன்”. இது விடுதலை இதழில் 29.2.48 அன்று தந்தை
பெரியார் எழுதியது.
மேற்கூறிய தந்தை
பெரியார் காட்டும் கடவுளையும் வழிபாட்டையும் உள்ளபடியே இந்த உலகிற்கு காட்டியவர் வள்ளற்பெருமான்.
வள்ளலார் காட்டியுள்ள கடவுளை அருட்பெருஞ்ஜோதி உருவம், அரு உருவம், அருவம் என்று மூன்று
நிலைகளிலும் உள்ள கடவுளே. ஜோதிக்கு உருவம் ஏது? இந்த ஜோதி, உண்மையில் உள்ளொளியே! அறிவொளியே!
“அருட்பெருஞ்ஜோதி என் அகத்தில்
ஓங்கியது” என்பது வள்ளலாரின்
வாக்கு. உள்ளத்தில் ஒளிவிடும் அறியாமை இருள் அழிக்கும் அறிவை வள்ளலார் கடவுளாகக் காட்டினார்.
இதனைப் பெரியார் மறுக்கவில்லை, எதிர்க்கவில்லை. இக்கடவுள் யாரையும் ஒன்றுபோல் சிருஷ்டிக்கும்
கடவுள்.
எங்குலம் எம்மினம் என்பதொண்ணூற்றாறு
அங்குலம் என்றருள் அருட்பெருஞ்ஜொதி
என்பது அருட்பெருஞ்ஜோதி
அகவல்.
இதில் எல்லா மனிதனுக்கும்
உயரம் அவர்கள் கையால் எட்டுசாண் அல்லது தொன்ணூற்றாறு அங்குலமே. இதில் உயர்ந்தசாதி என்பதால்
உயரமாகவும், தாழ்ந்தசாதி என்பதால் குள்ளமாகவும் எந்த மனிதனும் வளருவதில்லை என்பதை வள்ளலார்
அறிவியல் ரீதியாக உணர்த்திக் காட்டுகிறார். எம்குலம், எம் இனம் என்பது இந்த ஒன்றுபட்ட
மானுட சமுதாயம் என்பதை மேற்க்கண்டவாறு காட்டியவர் வள்ளலார். மேலும் வடலூர் சத்திய ஞானசபை
ஜோதி தரிசனத்திலும் எவருக்கும் முக்கியத்துவம் கிடையாது. எந்த சாதியினரும், எந்த மதத்தினரும்,
எந்த சமயத்தினரும் எள்ளளவும் வேறுபாடு இன்றி ஞானசபை வரை சென்று ஜோதி தரிசனம் செய்யலாம்.
தாழ்ந்த சாதி என்று கூறப்படுபவராக இருந்தாலும் புலால் உண்ணாத அகவினத்தாராக இருந்தாலும்
ஞானசபையின் உள்ளே செல்லலாம். புலால் உண்ணும் பிராமணனாக இருந்தாலும் அவர் புற இனத்தார்.
அவருக்கு ஞானசபையின் உள்ளே செல்ல வள்ளலார் அனுமதி வழங்கவில்லை. புலால் உண்ணுபவர், உண்ணாதவர்
என்ற நிலையிலேயே மனித குலத்தை இரண்டாகப் பிரிக்கிறார்.
“கொல்லான் புலாலை மறுத்தானைக்
கைகூப்பி
எல்லா உயிரும் தொழும்”
“அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின்
ஒன்றன்
உயிர் செகுத்துண்ணாமை நன்று”
“தன் ஊன் பெருக்கற்குத் தான் பிறிது
ஊன் உண்பான்
எங்கனம் ஆளும் அருள்?”
என்னும் திருக்குறள்களை
இவ்விடத்தில் அறிந்து உணர்வது நல்லது. ஞானசபை அனைவரையும் ஒன்றாகக் காணும் இடம். அங்கு
மானுட குலத்தில் பேதம் இல்லை. நான்கு வருணப்பாகுபாடு இல்லை.
எவ்வுலகும் அண்டங்கள் அத்தனையும்
நான் காண
இவ்வுலகில் எந்தை எனக்களித்தான்
– எவ்வுயிரும்
சன்மார்க்க சங்கம் தனை அடையச்
செய்வித்தே
என்மார்க்கம் காண்பேன் இனி………………….
(5514)
என்ற வள்ளலாரின்
அருட்பாவை நோக்கினால் அவர் தன்னுடைய சன்மார்க்க சங்கத்தில் ஒவ்வொறு உயிரினத்தையும்
அங்கத்தினராக சேர்ந்திருப்பதை அறிய முடிகிறது. உயிரினத்தையே உறுப்பினராகச் சேர்த்து
சங்கம் கண்ட பெருமை மனுட வரலாற்றில் கருணாமூர்த்தியான வள்ளலாருக்கு மட்டுமே உண்டு.
இந்த இரக்கத்தின் எல்லையில் இவர் பக்கம் வருமளவு இன்னொரு மனிதன் இதுவரை பூமியில் பிறக்கவில்லை
என்பேன்.
அடுத்து, வள்ளலார்
காட்டும் கடவுள் ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்ட கடவுள்.
புண்படா உடம்பும் புரைபடா மனமும்
பொய்படா ஒழுக்கமும் பொருந்திக்
கண்படா திரவும் பகலும்நின் தனையே
கருத்தில்லைத் தேத்துதற் கிசைந்தேன்
– (3556)
என்கிறது அருட்பா.
இதில் வள்ளலார் காட்டியுள்ளது நான்கு வகை ஒழுக்க நெறிகள்.
இந்திரிய ஒழுக்கம், கரண ஒழுக்கம்,
ஜீவ ஒழுக்கம், ஆன்ம ஒழுக்கம் என்பன அவை. இந்திரிய ஒழுக்கம் என்பது ஐம்புலன்கலான மெய்,
வாய்,கண்,மூக்கு, செவி முதலியவற்றை அடக்கித் தக்க வழியில் செலுத்துதல். கரண ஒழுக்கம்
என்பது சுருக்கமாகச் சொன்னால் மனக் கட்டுப்பாடு.
ஜீவ ஒழுக்கம் என்பது மனிதனுக்கு
மனிதன் சாதி, மத மற்றும் எவ்வித வேறுபாடும் இன்றி அனைவரையும் ஒரு தாய் வயிற்றுப் பிள்ளையைப்
போல நினைத்துப் பழகுவது.
ஆன்ம ஒழுக்கம் என்பது மிகவும்
உயர்ந்த நிலை. உலகில் வள்ளலாரைத் தவிர எந்த ஞானியும் இது போன்ற ஒரு ஒழுக்கத்தை உலகிற்கு
வழங்கவில்லை.
உயிரினம் அனைத்தும் ஒரே ஆன்மாவிலிருந்து
தோன்றியதாக நினைத்து அனைத்துயிரையும் தம்முயிர் போல் எண்ணுவது.
மனிதர்களுக்கே
இப்படிப்பட்ட ஒழுக்க நெறிகள் காட்டியவர் வள்ளலார். இப்படிப்பட்ட ஒழுக்க நெறிகள் கையாண்டால்
மனிதன் கடவுள் நிலைக்கு உயரலாம் என்பது அவர் உபதேசம். அதுபோல் பகுத்தறிவுக்கு ஏற்ற
கடவுளை வள்ளலார் காட்டியுள்ளார்.
அவர் காட்டும்
கடவுளுக்கு கை, கால், முகம், போன்று மனிதனுக்கு இருப்பவை இல்லை.
மேலும் இந்த அருட்பெருஞ்ஜோதி
தரிசனம் பூசநாட்களிள் மட்டும் காணப்படுகிறது. தைப்பூசம் பூகோள் ரீதியாக மிக முக்கியமான நாள். வானில் சந்திரன் மேற்கே
மறைய கிழக்கே சூரிய உதயம் எழச் சந்திரனும், சூரியனும் முறையே இடப்பக்கமும், வலப்பக்கமும்
நமக்கு தெரிய நமது கண்களுக்கு நேரே ஜோதி தரிசனம் காணலாம். இது முச்சுடர்களான சந்திரன்,
சூரியன், ஆன்ம ஒளி இவைகளை அறிதல். இடகலையாகிய இடது சுவாசத்திற்கும், வலது கலையான வலது
சுவாசத்திற்கும் (சந்திரகலை, சூரியகலை) மத்தியில் சுழு முனையில் நெற்றிக்கண் அதாவது
புருவமத்தியில் ஆன்ம ஒளியை உணர்தல்.
இது அனுபவ பூர்வமாக உணரும் ஒரு பரவசநிலை. உள்ளபடியே ஓர் உண்மையை வெளிப்படையாக சொல்வதானால்
கடவுள் என்பதே ஒரு கற்பனைப்பொருள், அல்லது அனுபவம். அந்த அனுபவத்தை அல்லது கற்பனைப்
பொருளை கண்களுக்கு மத்தியில், கொண்டுவந்து நினைத்துப் பரவசப்படுவதே பேரின்பம். இதுதான்
சித்தர்கள் தங்களது அனுபவத்தால் கண்ட உண்மை. அடுத்ததாக வள்ளலார் காட்டியுள்ள கடவுளான
ஜோதி தரிசனம் காண காசு பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் இல்லை. வடலூரில் தேர்த்திருவிழா,
தெப்பத் திருவிழா, காவடி எடுப்பது, கரகம் சுமப்பது, தீ மிதிப்பது, அலகு குத்துவது போன்ற
மூட நம்பிக்கைகள் நிறைந்த ஆடம்பர விழாக்களே நடப்பது இல்லை. அபிஷேகம் இல்லை. ஆராதனை
இல்லை. அன்னதானம் மட்டும் அன்றாடம் நடக்கும்.
“அற்றார் அழி பசித் தீர்த்தல்
அஃதொருவன்
பெற்றான் பொருள் வைப்புழி”
என்பது திருக்குறள்.
உண்மையில் ஏழைகளுக்கும்,
பசித்தவர்களுக்கும் உணவிட்டு உண்ணுதலே நாம் பொருள் சேர்த்து வைக்கும் இடமாகும். அழிக்கின்ற
பசி, அழிக்கும் பசி, அழித்த பசி என்று முக்காலத்துக்கும் பொருந்தும் வினைத்தொகையால்
பசியை சுட்டிக்காட்டுகிறார் வள்ளுவர். அந்த அழிபசியை அழிக்கும் இடமாக வடலூர் விளங்குகிறது.
அதனையே உண்மையான இறைவழிபாடாகக் காட்டுகிறது. இங்குக் கடவுளை தரிசிக்க பூசாரி, அர்ச்சகர்
முதலிய இடைத்தரகர் தேவையில்லை. அர்ச்சனை கிடையாது. அதனால் அர்ச்சனை சீட்டுகள் விற்க்கப்படுவது
இல்லை. கடவுள் உண்மையை ஒவ்வொறுவரும் தங்கள் புருவமத்தியில் உணரவேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற
இடமாக வடலூர் அமைந்துள்ளது. வடலூர் ஞானசபையின் தத்துவத்தை தனிப்புத்தகமாகத்தான் எழுத
வேண்டும். மனித உடற்கூறு இயல் உண்மையின்படி ஞானசபையை வள்ளலார் கட்டியுள்ளார். அதை விளக்கி
எழுதினால் மிகவும் விரிவாக எழுத வேண்டும். அவ்வளவு உண்மைகளும் பொருளும் அதில் புதைந்துள்ளன.
ஆகவே தந்தை பெரியார் காட்டின மேற்கூறிய,
1. உருவமற்ற கடவுள்
2. அனைவரையும் ஒன்றாகப் பாவிக்கும் கடவுள்
3. ஒழுக்கமான கடவுள், பகுத்தறிவுள்ள கடவுள்
4. மூடநம்பிக்கையில்லாத கடவுள் வழிபாடு
5. காசு பணம் செலவழிக்க தேவையில்லாத இடம்
இவையனைத்தையும்
காண வேண்டுமாயின் வடலூர் வந்து சென்றால் அது சாத்தியமாகும்.
பெரியார் தனது
குடியரசு தலையங்கப் பகுதியில் பின்வரும் பாடலையும் மற்றும் சில அருட்பாக்களையும் பிரசுரித்து
கொள்கை விளக்கம் தந்துள்ளார்கள்.
அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி
அரும்பசி எவர்க்கும் ஆற்றி
மனத்துளே பேதாபேதம்
வஞ்சம் பொய் களவு சூது
சினத்தையும் தவிர்ப்பாகயாகில்
செய்தவம் வேறொன்றுண்டோ
உனக்கிது உறுதியான
உபதேசம் ஆகும் தானே
இது வள்ளலாரின்
அருட்பாவை ஒத்துள்ள பாடல். இது மனிதர்கள் அனைவரும் சமம் என்ற அவரது மனிதநேயக் கொள்கையையும்,
உயிர்க்குல நன்மையையும் போற்றுவதால் இதனை விரும்பி வெளியிட்டார்.
இது போன்றே
“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே”
“இருட்சாதித் தத்துவ சாத்திரக்
குப்பை”
“நால்வருணம், ஆசிரமம், ஆசாரம்” என்று தொடங்கும் அருட்பாக்களையும்
தன்னுடைய குடியரசு இதழின் தலையங்கத்தில் பதிப்பித்து வெளியிட்டுள்ளார்கள்.
கடவுள் இல்லை என்றவர்
தந்தை பெரியார். மனிதனே கடவுள் நிலைக்கு உயரவேண்டும் என்றவர் வள்ளலார்.
கடவுளைப் பரப்பியவன் அயோக்கியன் என்றார் தந்தை பெரியார். அன்பும், கருணையும் அறிவுமே கடவுள்
என வலியுறுத்தினார் வள்ளலார்.
கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி என்றார் பெரியார். காட்டுமிராண்டித்தனமான கடவுளை வணங்க வேண்டாம் எனச் சொன்னவர் வள்ளலார். மனித நேயம், ஆன்ம நேயம் கொண்ட
மனிதன் ஆத்திகனாக இருந்தால் என்ன? நாத்திகனாக இருந்தால் என்ன?
வேதம், புராணம், இதிகாசம்
(அத்யாயம் # 4)
வேதாக மங்களென்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாக மதத்தின் விளைவறியீர் –
சூதாகச்
சொன்னவலால் உண்மைவெளி தோன்ற உரைக்கவில்லை
என்ன பயனோ இவை…. (5516)
வேதங்கள், ஆகமங்கள்
என்று பேசிக்கொண்டு வீணாக வாதத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் உலகினரைப் பார்த்து
வள்ளலார் இவ்வாறு கேட்கிறார். வேதாகமத்தின் விளைவு அறியாமல் பேசுகிறீர், அவைகளில் சூதாகச்
சில சொல்லப்பட்டிருக்கிறதே ஒழிய உண்மை உரைக்கப்படவில்லை. இவைகளால் சமுதாயத்திற்கோ,
தனிமனிதனுக்கோ என்ன பயன் உள்ளது? என்று கேட்கிறார். வள்ளலாருக்கு முன்பு தோன்றியுள்ள
அருளாளர்கள் யாரும் சிந்தித்துக் கேட்காத வினா இது.
வள்ளலார் வேதங்களை
ஆராய்ந்து பார்த்து விட்டுத்தான் இந்த முடிவுக்கு வந்துள்ளார். மேலும்,
“சாத்திரங்கள் எல்லாம் தடுமாற்றம்
சொல்வதன்றி
நேத்திரங்கள் போற்க்காட்ட நேராவே”
என்று கூறுகிறார்.
சாத்திரங்கள் என்று சொல்லப்படுபவைகள் எல்லாம் தடுமாற்றத்தை வரவழைக்கும் வண்ணம் சொல்லப்படுவதன்றிக்
கண்களால் கண்டு உண்மையை உணரும் வண்ணம் வெளிப்படையாக அவைகளில் ஏதும் இல்லை என்பது வள்ளலாரின்
கருத்தாக உள்ளது.
வேதநெறி ஆகமத்தின் நெறிபராணங்கள்
விளிம்பு நெறி இதிகாசம் விதித்தநெறி
முழுதும்
ஓதுகின்ற சூதனைத்தும் உளவனைத்தும்
காட்டி
உள்ளதனை உள்ளபடி உணர உரைத்தனையே
….. (3767)
என்பதும் ஆறாம்
திருமுறைப்பாடல்.
வள்ளலார் வேதங்கள்,
ஆகமங்கள் மற்றும் இதிகாசங்கள் இவைகளைக் கற்றுத் தேர்ந்தவர். இவைகள் ஓதுகின்ற அல்லது
விளக்குகின்ற சூது அனைத்தும் அறிந்தவர். அனாலும் அருட்பெருஞ்ஜோதி என்னும் பேரறிவாள்
உள்ளதனை உள்ளபடி உணர்ந்தவர். வேதங்கள், ஆகமங்கள், இதிகாசங்கள் வழி நில்லாது உள்ளபடியே
அறிவு உணர்த்தும் வகையில் நடந்தவர் என அவரது பாடலின் மூலம் உணர முடிகிறது. மேலும் தன்னுடைய
பேருபதேசத்தில்
“நாம் முன் பார்த்தும்
கேட்டும் லட்சியம் வைத்துக் கொண்டிருந்த வேதம், ஆகமம், புராணம், இதிகாசம் முதலிய கலைகள்
எதனினும் லட்சியம் வைக்க வேண்டாம். ஏனென்றால் அவைகளில் ஒன்றிலாவது குழுவூக் குறியன்றித்
தெய்வத்தை இன்னபடி என்றும் தெய்வத்தினுடைய உண்மை இன்னதென்றும் கொஞ்சமேனும் புறங்கவியச்
சொல்லாமல், மண்ணைப் போட்டு மறைத்து விட்டார்கள்” என்று சொல்கிறார்.
இதிலிருந்து வள்ளலார்
வேதம், புராணம், இதிகாசம் போன்றவைகளில் லட்சியம் வைக்காதவராய், ஜீவகாருண்யத்தில் மட்டும் லட்சியம்
வைத்தவராய் விளங்கியது தெரிகிறது.
அருட்பாவில் ஓரிடத்தில்
அவரது எண்ண ஓட்டத்தை இவண் சுட்டிக்காட்ட விழைகிறேன்.
“இயல்வதோ கமங்கள் புராணங்கள் இதிகாசம்
இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
மயல் ஒருநூல் மாத்திரந்தான் சாலம்
என அறிந்தார்
மகனே நீ நூல் அனைத்தும் அருள்
ஒளியால் காண்க என எனக்கே
திருவுளம் பற்றிய ஞனதேசிக மாமணியே
“ – (4176)
என்று எழுதுகிறார்.
நூலணைத்தும் சாலம்
என அறிக என ஆண்டவர் அவரிடத்தும் உணர்த்தியதோடல்லாமல் செயல் அனைத்தையும் அருள் ஒளியால்
காண்க என்றும் அவர் உள்ளத்தில் அருட்பெருஞ்ஜோதி இறைவன் காட்டியதாகப் பாடுகிறார். இவ்விடத்தில்
நூல் அனைத்தும் எனக் கூறுவதை எந்த நூல்கள் என்று சிந்திக்க அவை புராணங்கள், இதிகாசங்கள்
என்று கொள்வதில் தவறில்லை என்றே நான் நினைக்கிறேன். ஆகவே வள்ளலார் சமயம், மதம், சாதி
முதலான மானுடப்பாகுபாடுகளை வெறுத்தார் என்று சொன்னால் இவைகளுக்கு அடிப்படையாக விளங்குகின்ற
வேதம், புராணம், இதிகாசங்கள் முதலியவற்றை மறுத்தார்
என்று சொல்லலாம்.
“அற்புதம் அற்புதமே – அருள்
அற்புதம் அற்புதமே
சிற்பதம் பொற்பதஞ் சீரே சிறந்தது
சித்தாடு கின்ற திருநாள் பிறந்தது
கற்பத செஞ்சக் கரிசு துறந்தது
கற்றபொய் நூல்கள் கணத்தே மறந்தது
– (4906)
இவ்விடத்துக் கற்ற
பொய் நூல்கள் என்பதை வேதாகமங்கள், புராண இதிகாசங்கள் என்று கொள்வதிலும் தவறில்லை என்றே
நான் நினைக்கிறேன். ஆகவே வள்ளலார்
வெறுத்தது - சமயங்கள், மதங்கள், சாதிகளை
மறுத்தது – வேதம், ஆகமம், புரணம்,
இதிகாசங்களை
ஏற்றது – அன்பை, அறிவை அடிப்படையாகக்
கொண்ட பரோபகாரத்தை, சத்விசாரத்தை எனலாம்.
அதாவது பிறர்க்கும்,
பிற உயிர்களுக்கும் உதவும் மனப்பான்மை கொண்டு
உதவுதல், சத்விசாரம் என்பது தன்னை அறியும் ஆய்வு. தன்னில் உள்ள இறைமையை ஆராயும் அறிவு.
ஜீவகாருண்ய ஒழுக்கத்தில்
அவருடைய கூற்றை நோக்குவோம்.
“புண்ணிய
பூமிகளை வலஞ்செய்தல், புண்ணிய தீர்த்தங்களிலாடல், புண்ணியதலங்களில் வசித்தல், புண்ணிய
மூர்த்திகளை தரிசித்தல்,தோத்திரஞ்செய்தல், ஜெபஞ்செய்தல், விரதஞ்செய்தல்,யாகஞ்செய்தல்,
பூசை செய்தல் முதலிய சரியை, கிரியைகளைச் செய்கின்ற விரதிகளும், பக்தர்களும், இருடிகளும்
உணவை நீக்கி உறக்கத்தை விட்டு விஷயசார்புகளைத் துறந்து, இந்திரியங்களை அடக்கி மனோலயஞ்
செய்து யோகத்தில் இருக்கின்ற யோகிகளும் அளவிறந்த சித்தியின்பங்களைப் பெற்ற சித்தர்களும்,
நித்தியா நித்தியங்களை அறிந்து எல்லாப் பற்றுகளையும் துறந்து பிரமானுபவத்தை பெற்ற ஞானிகளும்,
ஜீவகாருண்யம் என்கிற திறவுகோலைச் சம்பாதித்துக் கொள்ளாதவர்களானால் மோட்சமென்கிற வீட்டிற்கு
முன்னும் பின்னுமாக ஏறிச் சமீபத்திற் காத்திருந்து மீளவும் அத்திறவுகோலைச் சம்பாதிக்கத்
திரும்பிவார்களல்லது கதவைத் திறந்து உள்ளே புகுந்து இன்பத்தை அடைந்து வாழமாட்டார்களென்று
உண்மையாக அறிய வேண்டும். இதனால் அறிவு விளங்கிய சீவர்களுக்கெல்லாம் ஜீவகாருண்யமில்லாது
செய்யப்படுகின்ற செய்கைகள் எல்லாம் பிரயோஜனமில்லாத மாயாஜாலச் செய்கைகளே ஆகுமென்று அறிய
வேண்டும்.
புராணங்கள், இதிகாசங்கள்
இவைகளில் கூறப்பட்டுள்ள பகுத்தறிவுக்கு முரண்பட்டுள்ள கருத்துகளைத் தந்தை பெரியார்
அவர்கள் மிகவும் கடுமையாகச் சாடத் தவறுவதில்லை. புராணங்கள், இதிகாசங்கள் இவற்றை ஊன்றிப்
படித்தவர் தந்தை பெரியார். அவற்றை மிகவும் ஆழமாக அறிந்து வைத்திருப்பவர். இன்னும் சொல்லப்
போனால் திருமுருக கிருபானந்த வாரியாருக்குப்
புராண, இதிகாசங்களில் எவ்வளவு அறிவு இருந்ததோ அதற்குச் சற்றும் குறையாத வகையில் தந்தை
பெரியாருக்கும் அதில் பரிச்சயம் இருந்தது. புராண, இதிகாசங்களை நன்கு அலசி ஆராய்ந்த
பெரியார் அதில் திணிக்கப்பட்டுள்ள மூட நம்பிக்கைகளையும், அறிவுக்கு ஒவ்வாத கதைகளையும்,
மனிதர்களை மடையர்கள் ஆக்கி ஆரிய கலாச்சாரத்திற்கு வித்திடுகின்ற போதனகளையும் மிக மிக
வன்மையாகத் தனக்கே உரிய பாணியில் கண்டிக்கிறார். இதிகாசம், புராணம் இவற்றில் காட்டப்பட்டுள்ள
கடவுள்கள் எதுவுமே தமிழனுக்கு உரிய கடவுள்கள் கிடையாது என்பது அவரது கருத்து.
சரஸ்வதி, இலட்சுமி,
சிவன், விஷ்ணு, பிரம்மா, பிள்ளையார், அரங்கன், நடராசன், கந்தன், சுப்ரமணியன், இராமன்,
கிருஷ்ணன் எல்லாம் வடமொழிச் சொற்களே தவிர தமிழ்மொழி அல்ல என ஆதாரப்பூர்வமாகத் திட்டவட்டமாக
மறுக்கிறார். கருப்பண்ணன், காட்டேரி வேண்டுமானால் தமிழ்ப் பெயர்களாக இருக்கலாம். என்பவர்
முன்னர் கூறிய கடவுள்களை வடமொழிப் பெயர் கொண்ட கடவுள்கள் என்கிறார். கதைகளாவது நாணயம்,
நேர்மை, ஒழுக்கமுடையனவாக இல்லை என்கிறார்.
இராமன் பிறப்பைப்
பற்றிப் பல கூட்டங்களில் பெரியார் பேசுவார். அவன் பிறப்பைப் குறிப்பிடும் போது இராமன் எப்படி பிறந்தான் என்று இராமாயணத்தில் பார்த்தால்
அவன் தகப்பனுக்கு அவன் பிறக்கவில்லை. அவன் தகப்பன் பிள்ளை பெறுவதற்கு யாகம் செய்கிறான்.
அந்த யாகத்தில் இராமனின் தாய் ஒரு நாள் முழுவதும் வெட்டுண்டு இறந்த குதிரையை ஒட்டவைத்துக்
கொண்டு இருந்திருக்கிறார். அதில் உணர்ச்சி ஏற்பட்டுப் பார்ப்பானால் கர்ப்பம் ஏற்ப்பட்டுப்
பிறந்தவன் தான் இராமன் என்று அக்கதை எழுதியவன் எழுதி இருக்கிறான். அவன் மனைவி சீதை
தானே வலிய இராவணணோடு சென்று 3 மாத கர்ப்பமாகி அழைக்கப்பட்டு வந்திருக்கிறாள். இது தெரிந்த
இராமன் அவளைக் காட்டிற்கு அனுப்பி இருக்கிறான் என்று அதில் உள்ள இழிநிலைகளை
ஆதாரம் கொண்டு காட்டிப் பாமர மக்களுக்கும் படித்தவர்களுக்கும் விளக்கியவர் பெரியார்.
கிருஷ்ணன் பிறப்பையும், கந்தன் பிறப்பையும் பற்றி கூறும் பெரியார்,
“கிருஷ்ணன் கதை என்னவென்றால் தேவர்கள் எல்லாம் போய் உலகில் அதர்மம்
அதிகமாகிவிட்டது. இராட்சதர்கள் தொல்லை பொறுக்க முடியவில்லை, அதைப் போக்க வலிமையுள்ள
ஒருவனை எங்களுக்கு அளிக்க வேண்டும் என்று விஷ்ணுவைக் கேட்டார்களாம். உடனே விஷ்ணு என்ன
செய்தார் தெரியுமா? தன் மார்பில் இருந்து இரண்டு மயிரைப் பிடுங்கிக் கொடுத்தான். அந்த
மயிரில் ஒன்று கருப்பாம், ஒன்று வெள்ளையாம். கருப்பு மயிர் கிருஷ்ணனாகவும் வெள்ளை மயிர்
அவன் அண்ணனாகவும் ஆயின” என்று அபிதானகோசத்தில் (ஆராய்ச்சி நூல்) இருக்கிறது.
“கந்தன் பிறப்பு எப்படி என்று இராமாயணத்திலும், காஞ்சிப்புராணத்திலும்,
கந்த புராணத்திலும் இருக்கிறது. தேவர்கள் எல்லாம் போய் சிவபெருமானிடம் கேட்டார்களாம்.
சிவபெருமானே உலகத்தில் இராட்சதர் கொடுமை அதிகமாகிவிட்டது. அதைத்தாங்க எங்களால் முடியவில்லை.
அவர்களை அழிக்கக் கூடிய வல்லமையுள்ள ஒரு பிள்ளையைப்
பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டார்களாம். அதற்கிணங்கச் சிவபெருமான்
பார்வதியை திருமணம் செய்து கொண்டு அவளோடு கலவி செய்ய ஆரம்பித்தாராம். ஆயிரம் வருஷம்
சிவனும், பார்வதியும் தொடர்ந்து கலவி செய்து கொண்டு இருந்தார்களாம். ஆயிரம் வருஷம்
ஆகியும் பிள்ளை பிறக்காதது கண்டு தேவர்கள் இனிப்பிள்ளை பிறந்தால் இந்த உலகமே தாங்காது.
அவ்வளவு வலிமை உள்ளதாக இருக்கும். அது இந்த உலகத்தையே அழித்தாலும் அழித்துவிடும் என்று
பயந்து தேவர்கள் எல்லாம் சிவபெருமானிடம் சென்று கலவியை நிறுத்திக் கொள்ளும்படி வேண்டிக்
கொண்டார்களாம். அதற்கு சிவபெருமான் நீங்கள் சொல்வது போல நிறுத்திக் கொள்வதில் எனக்கு
ஆட்சேபனை இல்லை. நிறுத்தினால் அதிலிருந்து வரும் வீரியத்தை என்ன செய்வது என்று கேட்டாராம்.
உடனே தேவர்கள் அனைவரும் தங்கள் கைகளை ஏந்தி அதில் விடுமாறு சொன்னார்களாம். அதன்படியே
சிவபெருமான் எல்லாத் தேவர்கள் கைகளிலும் வீரியத்தை
விட்டு குடிக்க சொன்னாராம். தேவர்கள் அனைவரும் அதைக் குடித்தனராம். சிவபெருமான் தனது
மீதி வீரியத்தைக் கங்கையில் விட்டாராம். கங்கை அதைத் தாங்காமல் கொதிக்க ஆரம்பித்து
விட்டதாம். வீரியத்தை குடித்த தேவர்களுக்கு கர்ப்பம் ஏற்ப்பட்டு விட்டதாம். அவர்கள்
சிவபெருமானிடம் சென்று தங்கள் கர்ப்பம் தீர வழி கேட்டனராம். அவர் காஞ்சிபுரத்தில் இருக்கிற
சுரகதீஸ்வரர் குளத்தில் மூழ்கினால் உங்கள் கர்ப்பம் கலையும் என்று சொன்னாராம். அதன்படி
தேவர்கள் அதில் மூழ்கி தங்கள் கர்பத்தைக் கலைத்துக் கொண்டனராம். பூமியில் ஓடிய சிவவீரியமானது
ஆறு கிளைகளாக பிரிந்து ஓடியதால் ஆறு குழந்தைகள் ஆயினவாம். அதனை ஆறு பெண்கள் எடுத்து
பால் கொடுத்தனராம். ஆறுபேர்கள் பால் கொடுப்பது சிரமமாக இருக்கிறது என்று அந்த ஆறு குழந்தைகளையும்
ஒன்றாக சேர்த்து அணைத்தார்களாம். அதனால் உடல் ஒன்றாகவும் தலை ஆறாகவும் ஆயிற்றாம். அது
தான் ஆறுமுகம் பிறந்த கதை. ஸ்கலிதத்தில் இருந்து உதித்ததால் ஸ்கந்தன் என்று பெயர் உண்டாயிற்றாம்” இவ்வாறு பெரியார் கந்தன் பிறப்பு பற்றி
புராணம் காட்டியுள்ளதை கூறுவார்.
மேற்கூறிய ஸ்கந்தன்
ஆகிய சுப்ரமணியனைக் குறித்து வள்ளலார் பின்னாளில் உடம்பிலுள்ளே உள்ள அனுபவப் பொருளாகக்
காட்டுகிறார். இது ஆன்மீகத்தில் வள்ளலார் கண்ட சீர்திருத்தம். புராணங்கள் இப்படி சகட்டுமேனிக்கு
இஷ்டம்போல் அறிவுக்குப் பொருந்தாத கதைகளைக் கூசாமல் சொல்லுவதைக் கண்டு பொங்கி எழுந்தவர்
பெரியார். அதனை நாசூக்காகக் கண்டித்தவர் வள்ளலார்.
“கற்ற பொய் நூல்கள் கணத்தே மறந்தது”
என்று இது போன்ற
பொய்ப்புரட்டு நூல்களைப் பொய்நூல்கள் என்கிறார் வள்ளலார்.
“தெய்வங்கள் பலப்பல சிந்தை செய்வாரும்
“தெய்வங்கள் பலப்பல சிந்தை செய்வாரும்
சேர்கதி பலபல செப்புகின்றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
பொய்ச்சமய யாதியை மெச்சுகின்றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம் ஒன்றில்லார்
மேல்வினை வறிகிலார் வீண்கழிக்கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி
வருள்வீர்
எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பந்தந்தீரே”
– (4726)
மேல் காட்டியுள்
அருட்பாவின் கருத்தை சுருக்கமாகச் சொன்னால் தெய்வங்கள் பல உண்டு என்று நினைக்கின்றவரும்,
இறப்பிற்கு பிறகு சொர்க்கம் அல்லது நரகம் சென்று சேரலாம் என்று சொல்கின்றவரும், பொய்யில்
விளைந்த பலபல கதைகளை உரைப்பவர்களும், பொய்ச்சமயங்களை போற்றுகின்றாரும், உண்மையான கடவுள்
அருள்கிடைக்கப்பெறாதவர்கள் என்கிறார் வள்ளலார். அவர்கள் இதனால் வரும் பின் விளைவை அறியாமல்
காலத்தை வீண் கழித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லும் வள்ளலார் தான் தூக்கம்
கலைந்து உண்மை உணர்ந்ததாகப் பாடுகின்றார். மேலும் இந்த உண்மையைப் பொய்க்கதை சொல்லுகின்றவர்களும்
உணர்ந்து, அறிவில் தெளிவடைய வேண்டும் என்பதே வள்ளலாருடைய விழைவு.
இந்துக்கள் தங்கள்
வாழ்வில் கொண்டாடுகின்ற அனைத்துப் பண்டிகைகளுக்கும், விழாக்களுக்கும், பின்னாளில் கட்டிவிடப்பட்ட
கட்டுக்கதைகளை விளக்கமாக எடுத்துச் சொல்லி அதிலிருந்து மக்களை சிந்திக்க வைத்தார் பெரியார்.
தீபாவளிப் பண்டிகை, கார்த்திகை தீபம், சரஸ்வதி பூஜை, ஆயுத பூஜை, போன்ற விழாக்களுக்குச்
சொல்லப்படும் புராணக் கதைகளை எடுத்துக்கூறி அதிலிருந்தே பல கேள்விகளைக் கேட்டு மக்களை
விழிப்படையச் செய்வார். கும்பகோணத்தில் பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடக்கின்ற
மகாமகம் குறித்துத் தந்தை பெரியார் பேசிய பேச்சும், எழுத்தும் சுயமரியாதை கொண்ட ஒவ்வொறு
மனிதனையும் சிந்திக்க வைக்கும். அது குறித்து அவர் சொல்வதாவது,
“அதாவது காவிரி, கங்கை, யமுனை போன்ற சப்த நதிகள் என்று சொல்லப்படும்
நதிகளுக்குப் பெண் உருவம் உள்ளதாம். அவைகள் ஒரு சமயம் சிவனிடம் சென்று தங்கள் குறைகளை
முறையிட்டனவாம். அதாவது சிவனை நோக்கி உலகத்து மக்கள் அனைவரும் தங்கள் பாவத்தை கழுவுவதற்காக
எங்களிடம் வந்து குளித்து அதில் பாவத்தைக் கழுவிப் போகிறார்கள். அப்படிப்பட்ட பவங்கள்
எல்லாம் எங்களைச் சாருகிறது. ஆகவே நாங்கள் அவ்வளவு பேர்களுடைய பாவத்தையும் ஒன்றாகச்
சேர்த்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் அப்படிப்பட்ட பாவங்களைக் கழுவுவதற்கு ஏதாவது
இடம் வேண்டுமே என்று கேட்டார்களாம்.
அதற்கு சிவன் அவர்களுக்கென்று யோசனை செய்கையில் அவனுக்கு ஒருயுக்தி
தோன்றிச் சொன்னானாம். அதாவது 12 வருடங்களுக்கு ஒரு முறை கும்பகோணம் மகாமகம் குளத்தில்
நான் ஒரு தண்ணீர் விடுகிறேன். அந்த சமயம் நீங்கள் எல்லாரும் வந்து அதில் குளித்தீர்கள்
ஆனால் உங்கள் பாவமூட்டை எல்லாம் கரைந்து விடும். அப்பேர்ப்பட்ட சக்தி கொண்ட தண்ணீரை
விடுகின்றேன். தவறாமல் வாருங்கள் என்று சொன்னானாம். அதைக்கேட்ட அந்த நதிகள் சரி என்று
ஒப்புக் கொண்டனவாம். அந்த நதிகள் பெண் உருவம் கொண்டு 12 வருடத்திற்கு ஒரு முறை சிவன்
தனது சக்தி கொண்ட பாவ மூட்டைகளைக் கரைக்கவல்ல தண்ணீரை விடும் சமயம் பார்த்துக் கும்பகோணம்
சென்று அங்கே குளிக்கிறார்களாம். அந்த நாளைக்கு மகாமகம் என்று பெயராம். பார்ப்பனர்களுக்கு
அது சம்பந்தமாக ஒரு யுக்தி தோன்றியது. அந்த
நதிகள் குளிக்க வருகிற போது நம் மக்களும் குளித்தால் இவர்களுடைய பாவமும் போய்விடுகிறதாம்.
இங்கிருந்து கங்கை, யமுனைக்கு போவதை விடச் சமீபத்திலேயே சென்று அதுவும் பாவத்தை ஏற்றுக்
கொள்ளும் நதிகளே தாங்கள் 12 வருடமாகச் சேர்த்து வைத்திருந்த லட்சக்கணக்கானவர்களின்
பாவத்தை பாவ மூட்டையை எளிதாகக் கரைத்து விடலாம் என்ற எண்ணத்தின் மீது அங்கே செல்லுகின்றனர்.
ஆனால் அங்கே நடைபெறுவதை தான் ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த
குளத்தில் உள்ள தண்ணீரையெல்லாம் இறைத்து விட்டு முழங்கால் வரை மட்டும் தண்ணீர் இருக்கும்படி
செய்வார்கள். அதிலும் மேலுள்ள தெளிந்த நீரெல்லாம் இறைக்கப்பட்டு அடியில் கிடக்கும்
கும்பியும், நீரும் கலந்து கொழகொழவென்று இருக்கும். அதில் லட்சக்கணக்கான மக்கள் இறங்கியவுடன்
தண்ணீர் முழங்கால் அளவு இருந்து கொஞ்சம் கொஞ்சமாக இடுப்பு அளவு உயரும். காரணம் இவ்வளவு
மக்களும் இறங்கியவுடன் விஞ்ஞானத்தின்படி தண்ணீர் மேலே எழுகிறது. அப்போது அங்குள்ள முட்டாள்கள்
பார் தண்ணீர் முழங்கால் அளவு இருந்தது. இப்போது இடுப்பளவு வந்து விட்டது. ஈசன் நீரை
ஊற்றுகிறார் பார் என்று சொல்லுவார்கள். அது மட்டுமல்ல கும்பலாக நகருவதற்கு கூட இடமின்றி
குளத்துக்குள் நிற்கும் ஜனங்கள் நீண்ட நேரம் கரையேற முடியாது. ஒருவன் அக்குளத்தில்
முழுக்குப் போட்டு வருவதற்குள் அவன் உயிர் அவனிடத்தில் இல்லை. தண்ணீருக்குள் மூழ்கி
எழுந்திருப்பதற்கு முன் அடுத்தடுத்து வருகிறவன் போட்டு மிதித்து சட்னி ஆக்கினாலும்
கேட்பதற்கு ஆள் இல்லை. பெண்கள் அங்கு போய்
வருவதற்குள் நாலா பக்கமும் நசுக்கப்பட்டு முழி பிதுங்கி விடுவார்கள். கணவன் மனைவி கையைப்
பிடித்துக் கொண்டே வருகையில் கூட்டத்தில் கைப்பிடி
நழுவிவிடும். ஆளுக்கு ஆள் நாலா பக்கமும் நசுக்குகையில் அய்யோ நசுக்குகிறார்களே என்று
சப்தம் போட, காது பத்திரம், கழுத்து பத்திரம்
மற்றது போனால் பரவாயில்லை என்று கணவன் சொல்லிவிடுவான். அதற்குள் அந்தப் பெண் நரக வேதனை
என்று சொல்லுவார்களே அப்படிப்பட்ட வேதனையை
அனுபவித்து விடுவாள். தன் உடை கிழிந்து ரவிக்கை கிழிந்து, படாதபாடு பட்டு தப்பித்தோம்,
பிழைத்தோம் என்று கூட்டத்தை விலக்கிக் கொண்டு வருவதத்குள் கொஞ்சமான துன்பம் இல்லை.
அதற்குள் நாட்டுச் சோக்காளி மைனர்கள் எல்லாம் சீவி சிங்கரித்துக் கொண்டு திருவிழா பார்க்கப்போகும்
பெண்களை எல்லாம் ஒரு கை பார்த்து விடுவார்கள்.
பெண்கள் எத்தனை நாளைக்குத்தான் உள்ளே அடுப்பங்கரையில் இருக்க முடியும்? தங்கள் நகைகளைப் பிறர் மெச்சும் படி அணிய வேண்டாமா?
எத்தனை நாளைக்குப் பட்டுப் புடவையைபெட்டியில் வைத்து பூட்டி வைக்க முடியும்? அவைகளை
எல்லாம் அணிந்து கொண்டு நாலுபேர் கண்ணுக்குப் படும்படியாக போக வேண்டாமா? அதனால் தேர்விழாவை
ஒரு காரணமாக வைத்துக் கொண்டு போவது வழக்கமாகிவிட்டது.
இப்படி மகாமக குளத்தில் இறங்கிய மக்கள் ஒருவரை ஒருவர் ஒட்டிய உடல்போல்
நெருக்கமாக குளத்தில் இறங்கும் போது அவர்கள் கரையேறுவதற்குள் அவசரமாக சிறுநீர்க் கழிக்க
வேண்டுமென்றால் என்ன செய்ய முடியும்? கரையில் சென்றால் கூட காரியத்தைச் சாதித்துக்
கொள்ள முடியாது. மூலைக்கு மூலை போலீஸ் நிற்கும். ஆகவே லட்சம் பேருக்கு ஆளுக்கு ஒரு
அவுன்ஸ் மூத்திரம் விட்டாலும் குளத்தில் உள்ள நீரின் அளவு என்ன ஆகும்? முன்பு இடுப்பளவு
இருந்த தண்ணீர் மார்பளவுக்கு வருகிறது. மூத்திரம் நொங்கும் நுரையுமாக தண்ணீருடன் கலந்தவுடன்
தண்ணீர் குபுகுபு என்று கொப்பளம் கிளம்ப மேலே குமிழி தெரியும். அப்போது அந்த முட்டாள்கள்
பார் பார் தண்ணீர் மேலே பொங்குகிறது என்று கூச்சல் போடுவார்கள்.”
இப்படி மகாமகக்
குளத்தின் அசுத்தத்தைச் சுட்டிக் காட்டும் பெரியார் அதனால் அதில் உண்டாகும் சுகாதாரக்
கேடுகளையும் அடுக்கடுக்காய் ஒரு மருத்துவர் நிலையில் நின்று சொல்லுகிறார். அவர் சொல்லும் கருத்துகளை எவராலும் மறுக்க முடியாது.
அதில் லட்சக்கணக்கானவர்கள் (வியாதியஸ்தர்கள் உள்பட) குளிப்பதால் உண்டாகும் தொற்று நோய்ப்பட்டியலைப்
பெரியார் அறிவியல் பூர்வமாக எடுத்துக் காட்டுகிறார். இப்படி பல விழாக்களுக்கும் நடத்தப்படும்
பின்னணிக் கற்பனைக் கதைகளை எடுத்துக் கூறி அதில் உள்ள பொய்ப் புரட்டுகளை வெளியில் எடுத்துக்காட்டி
மக்கள் தம் எண்ணத்தில் ஒரு அறிவுப் பொறியைப் பற்றவைப்பார்.
வள்ளற்பெருமானும்
இது போன்ற செய்கைகளை ஏற்றதில்லை. அவருடைய அருட்பாவில் இது போன்ற அர்த்தமற்ற சடங்குகளையும்
ஆரவாரங்களையும் பல இடங்களில் கண்டித்து உள்ளார்கள். கங்கையிலே, காவிரியிலே நூறுமுறை
குளித்தாலும், கணக்கற்ற பல தெய்வங்கள் தேடிக் காடு மலைச் சுற்றினாலும், பசுவின் சாணத்தைத்
திருநீறாக்கி உண்டு பூசினாலும் நெஞ்சினிலே தயை இல்லாதவர்கள் சத்தியமாய்ப் பேரின்பம்
அடைய மாட்டார்கள் என்பது வள்ளலாரின் கொள்கை. ஆகவே புராணங்கள் காட்டுகின்ற புண்ணிய நீராடலை
இருவருமே ஏற்றதில்லை. வள்ளற்பெருமான் தன்னுடைய இறுதி காலங்களில் பெரிய புராணத்தையே
ஏற்காதவராய்ச் சில வார்த்தைகளைச் சொன்னதாக உரைநடையில் உள்ளவற்றை ஆய்வுக்கு உரிய ஒரு
கருத்தாக ஏற்கலாம். அல்லது பெரிய புராணத்தை அறிவுக்கு எட்டியவரையில் உண்மையை ஆராய்ந்து
ஏற்பதே பகுத்தறிவாளர்களுக்கு அழகாகும்.
வள்ளலார் பெரிய
புராணத்தில் வரும் 63 நாயன்மார்களும் தத்துவங்களே தவிர மனிதர்கள் அல்லர் என்ற சிந்தனைக்கு
உரிய கருத்தை ஏற்பதா? அல்லது தவிர்பதா? என்பது அவரவர் விருப்பம். ஆனால் ஏன் அவ்வாறு சொல்லியுள்ளார்கள் என்பதை ஆராய்தலில்
தவறு இல்லை.
தந்தை பெரியார்
பெரிய புராணத்தை வன்மையாகக் கண்டிக்கிறார். அதன் தோற்றம் பற்றிய கதைகளை விளக்கும் பெரியார்
அதில் உள்ள முரண்பாடுகளைப் பிரித்து பிரித்துக் காட்டுகிறார்கள். அவர் சொல்கிறார் சமயச்
சண்டையை உண்டாக்கும் நூல் பெரியபுராணம். கொலைச் செய்திகளையும், களவுச் செய்திகளையும்,
ஒழுக்கக் கேடான செய்திகளையும், பெண்களை அடிமைகளாக நடத்துவதையும் சைவத் தொண்டெனக் கூறும்
நூல் பெரியபுராணம் என்பது நமது அபிப்ராயம் என்கிறார். எவ்வளவு ஆழமான வார்த்தை. இதனைக்
கேட்ட சைவர்கள் நம்மீது ஒரே பாய்ச்சலாகப் பாயலாம். அதற்கு எல்லாம் நாம் அஞ்சப் போவதில்லை.
நாம் மேலே கூறிய அபிப்ராயங்களை நூலில் உள்ள சரிதங்களை ஆராயும் போது அங்காங்கே எடுத்துக்
காட்டுவோம்.”
அப்படி எடுத்துக்
காட்டும் பெரியாரின் விளக்கங்களில் இருந்து நாம் இரண்டு பேர் வரலாற்றை மட்டும் இங்கு
பார்ப்போம்.
இயற்பகை நாயனார்:
காவிரிப் பூம்பட்டிணத்தில் வணிகர் குலத்தில் இயற்பகையார் என்பவர்
ஒருவர் பிறந்திருந்தார். இவர் சிவனடியார்களுக்கும், சிவனடியார் போல் வருகின்ற பார்ப்பனர்களுக்கும்
அவர்கள் வேண்டியவற்றை இல்லை என்று சொல்லாமல் கொடுத்துதவினார். ஒருநாள் பரமசிவன் இவருடைய
கொடைத்தன்மையை ஆராய்ந்து அறிய நினைத்து ஒரு அயோக்கிய பிராமண வேடங்கொண்டு இவரிடம் வந்து
சேர்ந்தார். இயற்பகையாரும் அவரைக் கண்டு வணங்கித் தங்களுக்கு வேண்டியது எதுவாயினும்
அதைத் தருகிறேன் என்றார். அப்பிராமணரும் சிறிதும் மனம் கூசாது உனது மனைவியைக் கொடுக்க
வேண்டும் என்று கேட்டார். நாயனாரும் மிகிழ்ந்து தன் மனைவியிடம் சென்று உன்னை சிவப்பிராமணருக்கு
கொடுக்க இருக்கிறேன். நீ அவருடன் செல்ல வேண்டும் என்று சொன்னார். அப்பெண் அதைக் கேட்டவுடன்
சிறிது மனக்கலக்கமடைந்து பிறகு ஒப்புக்கொண்டு சிவப்பிராமணருடன் போகச் சம்மதித்தாள்.
அப்பெண்ணை இயற்பகையார் பிராமணருடன் கொண்டு வந்து விட்டு அழைத்துச் செல்லுமாறு வேண்டினார்.
சிவப்பிராமணர் நான் இப்பெண்ணை அழைத்துச் செல்வேனாயின் உனது சுற்றத்தாரால்
எனக்குத் தீங்குண்டானாலும் உண்டாகும். ஆதனால்
எனக்குத் துணையாக வந்து இவ்வூருக்கு அப்பால் விட்டு வரவேண்டும் என்றார். இயற்பகையார்
அதற்கு சம்மதித்து யுத்தகோலம் பூண்டு வாளாயுதத்துடன் புறப்பட்டார். பார்ப்பானால் முதலிலும், இயற்பகையார் மனைவி நடுவிலும், இயற்பகையார் பின்னும்
சென்று கொண்டிருந்தனர். இச்செய்தியைக் கேள்விப்பட்ட இயற்பகையாரின் சுற்றத்தார்கள் திரண்டு
வந்து வளைத்துக் கொண்டு அப்பெண்ணை விட்டுச் செல்லுமாறு பார்ப்பனரை வற்புறுத்தினர்.
அவர் அஞ்சினதைக் கண்டு தைரியங்கூறி இயற்பகையார் தனது சுற்றத்தார்களை விலகிச் செல்லுமாறு
கூறினார். அவர்கள் எங்கள் உயிர்போனாலும் இப்பெண்ணை மீட்டுக் கொண்டு தான் செல்வோம் என்று
சொல்லவே இயற்பகையிருக்கும் அவர்களுக்கும் சண்டை உண்டாயிற்று. இயற்பகையார் தனது வாளினால்
எல்லோரையும் கொன்றுவிடு பார்ப்பனருடன் புறப்பட்டார். திருச்சாய்க்காடு என்னும் இடத்தை
அடைந்தவுடன் பார்ப்பனர் இயற்பகையாரை நோக்கி இனித் நமக்கு துணை வேண்டாம் நாம் செல்லுகிறோம்
என்று கூறிவிட்டார். இயற்பகையாரும் பார்ப்பனருடன் தனது மனைவியை கூட்டியனுப்பி விட்டுச்
சிறிது தூரம் வந்தார். மீண்டும் பார்ப்பனர் தன்னையாரோ வந்து வளைத்துக் கொண்டதைப் போல
கூச்சலிட்டார். இயற்பகையார் மீண்டும் பார்ப்பனரும் மனைவியும் இருந்த இடத்துக்கு ஓடி
வந்தார். அதற்குள் பார்ப்பனர் காணாமற் போய்விட்டார். தனது மனைவி மட்டிலும் நின்று கொண்டிருந்தார்.
உடனே ஆகாயத்தில் பரமசிவன் காளை மாட்டின் மீது பார்வதியுடன் தோன்றி இயற்பகையாரை நோக்கி
நீயும் உன் மனைவியும் எனது உலகை அடைவீராக என்று கூறி மறைந்தார். சுந்தரமூர்த்தி நாயனார்
திருத்தொண்டத் தொகையில் இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் என ஒரு வரியினாற் கூறுகின்றார்.
இதனை நம்பியாண்டார் நம்பிகள் சிவன் தவவேதியனாய் வந்து வஞ்சகம் பேசி உன் மனைவியைக் கொடுவென்று
கேட்க இயற்பகையாரும் கொடுத்துப் புகழ்பெற்றார் என்னும் கருத்தடங்கிய ஒரு பாட்டில் குறிப்பிடுகின்றார்.
இதை விவரித்து சேக்கிழார் முப்பத்தைந்து பாடல்களில் கூறுகின்றார். பரமசிவன் இயற்பகையாரிடம்
வரும் போது கொண்ட வேடத்தைப் பற்றி கூறும் போது சேக்கிழார்
தூயநீறு பொன்மேனியில் விளங்கத்
தூர்த்த வேடமுந்தோன்ற வேதியராய்
மாயவண்ணமே கொண்டு தந்தொண்டர்
மாறாத வண்ணமுங் காட்டுவான் வந்தார்
என்று கூறுகின்றார்.
தூர்த்த வேடம் என்று கூறுவதனால் கெட்ட ஒழுக்கத்தில்
விருப்பமுடையவனைப்போல காணப்படும் வேடத்துடன் வந்தார் என்பது நமக்கு நன்கு தெரிகின்றது.
பரமசிவன் என்று சொல்லக்கூடிய கடவுள் இவ்வஞ்சக வேடத்துடன் சென்றாரென்றால் அவருடைய தகுதிக்கு
ஏற்றதாகுமா என்பதைச் சிறிது யோசிக்க வேண்டுகிறோம். பரமசிவன் பார்ப்பனச் சிவனடியாராக
வந்து உன் மனைவியைக் கொடு என்று கேட்டவுடன் இயற்பகையார் கொடுத்துவிட்டாராம். சிவனடியாரிலும்
பார்ப்பன சிவனடியார் என்று கூறியிருப்பதில் தான் சூழ்ச்சி இருக்கின்றது. பார்ப்பனர்கள்
பார்ப்பனர் அல்லாதவர்களிடம் எதைக் கேட்டாலும் கொடுக்க வேண்டும் அவ்வாறு கொடுப்பது பண்டைய
வழக்கம் என்பதையும் காட்டுகிறது.
அன்றியும் திருநீறு பூசிய பார்ப்பன் ஒருவன் வந்து அதிலும் ஒழுக்கம்
தூர்த்தப் பார்ப்பனன் ஒருவன் வந்து உன் மனைவியை எனக்குக் கொடு என்று கேட்டவுடன் ஒன்றும்
தடை சொல்லாமல் மகிழ்ச்சியோடு கொடுத்தானென்று கூறுவது எவ்வளவு பொருத்தமானது என்பதை சிறிது
ஆலோசிக்க வேண்டியது அவசியமாகும். உள்ளபடியே மானமுடைய ஒருவன் சிறிதும் தடையின்றி தன்
மனைவியையே வேற்றானுக்குக் கூட்டிக் கொடுக்க இசைவானா? பத்தி பெரிதா? மானம் பெரிதா? என்று
தான் கேட்கிறோம். அன்றியும் தன் மனைவியின் சம்மதத்தை அறியாமல் எப்படிக் கொடுக்க முடியும்?
பரமசிவனையும், பரமசிவன் அடியார்களையும் இடைவிடாமல் போற்றி வழிபடுகின்ற அன்பர்கள் எவரேனும்
தங்கள் மனைவிமார்களைச் சிவனடியார்களுக்கு கொடுக்கத்
தயாராக இருக்கின்றார்களா? ஏம் தம்மால் பெரிதும் போற்றப்படுகிற சேக்கிழாரும், பெரிய
புராணமும், சைவமதமும், பெரியவரென்று கொண்டாடும், இயற்பகையார் செய்ததைப் போல செய்ய சம்மதிப்பார்களா?
விதிமணங்குல மடந்தையின்றுனையும்
மெய்த்தவர்க்குநான் கொடுத்தனன் என்ன
மதுமலர்குழல் மனைவியார் கலங்கி
மனந்தெளிந்துபின் மற்றிது மொழிந்தார்
என்றதனால், இயற்பகையாரின்
மனைவி தன்னை ஒரு பார்பனருக்கு கொடுத்துவிட்ட செய்தியை கேட்டவுடன் மனக்கலக்கம்
அடைந்து தெளிந்தாள் என்று கூறப்படுகிறது. இதனால் அந்தப் பெண் அப்பார்பனப் பரதேசியுடன்
செல்லுவதற்கு சம்மதிக்கவில்லை என்று அறியலாம். பிறகு மனம் தெளிந்து சம்மதித்ததும் எதுபற்றி
என்றால் தான் மாட்டேன் என்று மறுத்தாலும் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார் என்ற எண்ணத்துடனேயாகும்.
இதிலிருந்து பெண்கள் அடிமைப்பட்டவர்கள் என்னும் கண்மூடிக்கொள்கையை பெரியபுராணம் வலியுறுத்துகிறது.
ஓர் ஆடவர் தன் மனைவியை அவள் விருப்பத்திற்கு மாறாக எப்படி நடத்தினாலும் அவற்றிற்கெல்லாம்
அவள் சம்மதித்து தான் ஆக வேண்டும் போலும். இதுவும் பெண்கள் உரிமையை தடுக்கும் மூடக்
கொள்கையன்றோ.
அன்றியும் தான் செய்த காரியம் மிகவும் அவமானமென்பதைத் தானறியாவிடினும்
தன் சுற்றத்தார்கள் அறிந்து கூறியும் உணராது இருந்ததுடன் அவர்களோடு எதிர்த்து சண்டை
செய்து அவர்களை எல்லாம் கொலை செய்து விட்டாராம். இதைவிடக் கொடுஞ்செயலும், அக்கிரமான
செயலும், வேறென்ன இருக்கிறது? தன் மனைவியை கூட்டிக் கொடுக்க வேண்டி தன் சுற்றத்தாரை
கொலை செய்வது தானா புண்ணியம்? இதுதானா சிவனடியார் செய்யும் திருத்தொண்டு? இது தானா
அன்பே சிவம் என்பதன் உட்பொருள்?
இயற்பகையார் கடைசியில் திருச்சாய்க்காடென்னுமிடத்தில் மனைவியயும்
சிவவேதியரையும் விட்டுப்பிரிந்து சிறிது தூரம் வந்தவுடன் மீண்டும் வேதியர் ஓலமிட இயற்பகையார்
திரும்பி ஓடிப்போய் பார்க்கும் போது சிவவேதியார் மறைந்து விட்டார் என்று கூறப்படுவதிலிருந்து சிவவேதியார் பரமசிவனாக இருந்தமையால் மறைந்து விட்டார்
என்று கூறுவதா? அல்லது நடந்த நிகழ்ச்சிகளைப் பார்த்ததனால் தன்னால் அப்பெண்ணை வைத்து
ஆளமுடியாது என்ற பயத்தினால் வேதியர் ஓடி ஒளிந்து கொண்டார் என்று கொள்வதா? என்பது விளங்கவில்லை.
பிறகு வழக்கம் போல சிவபெருமான் காளை மாட்டின்மேல் ஆகாயத்தில் தோன்றினார் என்று கூறப்படுவது
எவ்வளவு தூரம் உண்மை என்பதை அன்பர்கள் அறியக்கூடும்.
இக்கதையினால் பார்ப்பானுக்கு உயர்வும், பார்ப்பனன் எதைக் கேட்டாலும்
மற்றவர்கள் கொடுக்கவேண்டும் என்பதும், பார்ப்பனன் எவ்வளவு அயோக்கியனாக இருந்தாலும்
அவன் உயர்ந்தவன் என்பதும் பெண்கள் தமதெண்ணப்படி நடக்க உரிமை அற்றவர்கள் என்பதும் ஆடவர்களுக்கு
அடிமையாக இருந்து அவர்கள் கூறும் தகாத செயல்களையும் செய்யவேண்டும் என்பதுமான மூடக்
கொள்கைகள் எல்லாம் பெரியபுராணம் போதிக்கின்றதா? இல்லையா? என்று கேட்கின்றோம். இக்கதை நடந்திருக்குமாயின் தமிழர்க்கு இழிவை உண்டாக்குகின்ற
கதைகளில் இதைப்போன்ற கதை வேறொன்று இருக்கிறது என்று கூற முடியாதென்பதே நமது எண்ணமாகும்.
நந்தனார் சரித்திரம்:
சோழ மண்டலத்திலே மேற்கா நாட்டின் ஆதனூரிலே புலையர் குலத்திலே நந்தனார் என்னும் ஒருவர்
இருந்தாராம். அவர் பரமசிவனுடைய திருவடிகளை அன்றி மற்றொன்றையும் மறந்தும் நினையாதவராம்.
தமக்கு வெட்டிமைக்காக விடப்பட்டிருக்கின்ற மானியமென்னும் நிலத்தின் விளைவினால் ஜீவனம்
செய்து கொண்டு தாம் செய்யவேண்டிய தொழிலை நடத்துவாராம். சிவாலயங்கள் தோறும் பேரிகை முதலிய
ஒருமுகக் கருவிகளும் மத்தளம் முதலிய இருமுகக் கருவிகளும் தோலும் வாரும் வீணை முதலியவைகளுக்கு
நரம்பும், அர்ச்சனைக்கு கோரோசனையும் கொடுக்கின்றவராம். அவர் ஒரு நாள் திருப்புன்கூரிலே
போய் சுவாமி தரிசனம் செய்து திருப்பணி செய்வதற்கு விரும்பி அங்கே சென்று கோயில் வாயிலிலே
நின்று கொண்டு சுவாமியை நேரே தரிசித்துக் கும்பிட வேண்டுமென்று நினைத்தாராம். சுவாமியும்
அவர் விருப்பத்திற்கிணங்கிக் காட்சி கொடுத்தருளினாராம். ஒரு நாள் சிதம்பரத்திற்குப்
போக வேண்டும் என்ற ஆசை மேலிட்டவராய் நித்திரை கொள்ளாமல் இருந்தாராம். சிதம்பர ஸ்தலத்திற்கு
சென்றால் கோயிலுக்குள்ளே போகும் யோக்கிதை என் சாதிக்கு (பறையருக்கு) இல்லையே என்று
துக்கித்துப் போகாதொழிந்தாராம். பின்னும் நாளைக்குப் போவேன், நாளைக்குப் போவேன் என்று
சொல்லிக் கொண்டு அனேக நாட்களைக் கழித்து வந்தபடியால் அவருக்குத் திருநாளைப்போவார் என்னும்
பெயர் உண்டாயிற்றாம்.
ஒரு நாள் அவர் சிதம்பரத்தின் எல்லையை அடைந்து மதில் வாயினில் புகுந்து
அங்குள்ள பார்ப்பனர்களுடைய வீடுகளிலே ஓமம் செய்யப்படுதலைக் கண்டு போவதற்கஞ்சி அங்கேயே
விழுந்து கும்பிட்டு எல்லையை வலஞ்செய்து கொண்டு போனாராம்.
இப்படி உள்ளே போகக்கூடாமையை நினைத்து வருந்துகின்ற திருநாளைப்போவார்,
சபாநாயகரை எப்படி தரிசிக்கலாம்? இந்த இழிபிறப்பு இதற்குத் தடை செய்கிறதே என்று துக்கத்தோடு
நித்திரை செய்தாராம். சபாநாயகராகிய சிவன் அவருடைய வருத்தத்தை நீக்கத் திருவுளம் கொண்டு
அவருக்கு சொப்பனத்தில் தோன்றி நீ இந்தப் பிறப்பு
(பழைய தேகம்) நீங்கும்படி நெருப்பிலே மூழ்கி எழுந்து பிராமணர்களோடு நம்முடைய சன்னிதானத்துக்கு
வருவாய் என்று சொல்லிவிட்டுத் தில்லைவாழ் அந்தணர்களுக்கும் சொப்பனத்திலே தோன்றி அந்த
திருநாளைப்போவார் பொருட்டு நெருப்பை வளர்க்கும் படி ஆக்ஞாபித்து மறைந்தருளினாராம்.
அந்தணர்களும் விழித்தெழுந்து தென்புறத்து கோபுரவாசலுக்கு முன்னே ஒரு குழியில் நெருப்பை
வளர்த்து அதைத் திருநாளைப்போவாருக்குத் தெரிவித்தார்களாம். திருநாளைப்போவாரும் (நந்தனார்)
அந்த நெருப்புக் குழியை அடைந்து சபாநாயகனுடைய திருவடியை மனதிலே தியானம் பண்ணி அதை வலஞ்செய்து
கும்பிட்டு அதனுள்ளே புகுந்தாராம். புகுந்த நாயனார் அத்தேகத்தையொழித்துப் புண்ணியமாகிய
பிராமண முனி வடிவம் கொண்டு உபவீதத்தோடும், சடைமுடியோடும் எழுந்தாராம். அதை அந்தணர்கள்
கண்டு களிப்படைந்து திருநாளைப்போவருடன் சேர்ந்து போய் கனகசபையை அடந்தார்களாம். பின்பு
அவ்விடம் நந்தனாரைக் காணாமையால் அந்தணர்கள் ஆச்சர்யம் கொண்டு தோத்திரம் செய்தார்களாம். சபாநாயகனாகிய சிவன் தம்முடைய திருப்பாதங்களை நந்தனாருக்கு
கொடுத்து அருளினாராம். இங்ஙனம் சேக்கிழார் சுவாமிகள் நந்தனாரைப் பற்றி எழுதியுள்ளவைகளை
ஆராயப் புகுந்தால் ஞானநிலைக்குச் சிறிதும் ஆதாரமில்லாத ஆபாசக் கதையென்றே விளங்குகிறது.
தன்னிலையை தான் உணராத நந்தனாரை ஞானியென்று உலகம் கொள்வது எவ்விதமோ? பள்ளியிற் பயிலும்
சிறுவனும் சாதிபேதமென்பது உண்மையானதல்ல என்றும், தென்னாட்டுப் பண்டைய தமிழ் குடிமக்களையே
பறையரென்றும், சண்டாளரென்றும் இழித்துக் கூறுகின்றார்கள் என்பதும் இனிது அறியுமாறு
கிடக்க நந்தனார் தன்னை தாழ்ந்தவர் என்று கூறி இந்த இழிந்த பிறப்பாகிய பறைச்சென்மம்
சிவனாரைக் காணத் தடைசெய்கின்றதே என்று மனம் புண்பட்டது எதற்கு?
“முல்லைமலர் கம்பு நட்டு முக்காலுநீர்
தெளித்தால் மல்லிகைப் பூவாசம்
வருமோதாந் தொல்லுலகில் ஜோதி விந்துநாதத்
துளியிலுயிரா மவர்க்குச் சாதிகுல பேதமில்லை தான்”
என்னும் ஞானவெட்டியாருரையைத் திருநாளைப்போவார் அறியாமல் உளறியது
ஞானத்தாலா? அஞ்ஞானத்தாலா? இவர் தனது மனத்துக்குள் மலிந்து கிடக்கும் அழுக்கை நீக்கி,
மாசற்ற நிலையைக் காணல் விடுத்துத் தன்னைப் பாபசென்மமென்று வருத்தியது அறிவுடமையாகுமா?
“மனத்தகத் தழுக்கறாத
மௌனயோக ஞானிகள்
வனத்தகத் திருக்கினும்
மனத்தகத் தழுக்கறார்
மனத்தகத் தழுக்கறுத்த
மவுனயோக ஞானிகள்
முல்லைத்தடத் திருப்பினும்
பிறப்பறுத் திருப்பரே”
என்னுமான்றோர் தம் அறிவுரையை நந்தனார் சிறிதேனும் உணர்ந்திருப்பரேல்
“பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்கநெறி நின்றார்” என்னும் நன்னெறி பற்றி மனத்தகத்
தழுக்கை நீக்கி இருந்தவிடத்திலிருந்தே சாந்தநிலையாம் மன அமைதி பெற்றிருப்பரன்றோ?
இது நீத்துச் சிதம்பரம் போவேன். நாளைப்போவேன் நாளைப்போவேன் என்று
நழுவல் உரையாடி வந்ததேன்? சிதம்பரம் போனாலென்ன? பதம்பல பாடினாலென்ன? சித்தமிசை குடிகொண்ட
அறிவாநந்தமாம் செம்பொருள் கண்பதன்றோ சீரிய ஒழுக்கம்.
இன்னோரன்ன செம்முறைகள் சிறிதுமின்றி மாட்டுத்தோலும், நரம்பும்,
பேரிகை வீணை முதலியவைகளுக்குக் கொடுத்துக் கொண்டிருந்த நந்தனார் சிதம்பரம் நாளைப்போவேன்
நாளைப்போவேன் என்று ஏக்கமுற்றுக் கிடந்தது வீணல்லவா? சிதம்பரம் போன நந்தனார் நெருப்புக்குள்
மூழ்க தம்முடைய பறைத்தேகமெல்லாம் பொசுங்கிப் போய் புண்ணியமாகிய பிராமண முனி வடிவம்
கொண்டு எழுந்தது ஏன்? செந்தண்மையாம் சாந்தநிலையொன்றே அந்தணராதற்குரிய அறநிலையாம் என்று
அருமறை ஓத, வெந்தணல் மூழ்கி அந்தணராதல் வியப்பைத் தரும் ஒரு விபரீதக் கதையல்லவா?
“நெருப்பு நீருமும்முனே
நினைந்து கூறவல்லீரேல்
சுருக்கமற்ற ஜோதியைத்
தொடர்ந்து கூடலாகுமே
அறிவினோடு அண்டமா
யளவிடாத சோதியை
குணமதமாக்கி யும்முளே
குறித்திருக்கையில் முத்தியாம்”
என்னும் ஞானஜோதியை வளர்த்து அறிவின் பெருக்கடைதலை விட்டுக் கொடுந்தணல்
நெருப்புக்குள் மூழ்கியதென்ன? அங்ஙனம் நெருப்புக்குள் மூழ்கிய நந்தனார் புண்ணியமயமாகிய
பார்ப்பன வடிவம் கொண்டதேன்?பிராமண வடிவம் என்பது மனிதத் தன்மையில் இருந்து வேறுபட்டதோர்
வடிவமா? அந்தமில்லா வீடெய்துவதற்கு வெந்தணலுள் மூழ்கி அந்தண வடிவம் தான் கொளல் வேண்டுமோ?
சிவபெருமான் கிழப்பார்ப்பாணாக வடிவம் எடுத்தும் விஷ்ணு குள்ளப்பார்ப்பானாக வடிவெடுத்து
மாபலி சக்கரவர்த்தியிடம் சென்றதும் பிராமண வடிவின் சிறப்பைக் கற்பிட்தானோ? வேறு நாயுடு, நாடார், செட்டியார் முதலிய சாதியைப்போல
வடிவெடுத்தால் பிராமண மதத்திற்கு பங்கம் ஏற்ப்படுமோ? வேஷத்தினால் தான் பிராமண குலம்
உண்டாகிறது என்பது பார்ப்பன மதக்கொள்கையோ? வேறென்ன காரணம் பற்றி நந்தனாரை வெந்தணனிலுள்
மூழ்கச்செய்து அந்தணராக மாற்றி மோட்சம் கொடுத்தது என்பது சிறிதும் விளங்கவில்லை. இந்த
நந்தனார் அல்லாமல் இன்னும் ஒரு பறையனாகிய பெற்றான் சாம்பான் என்பவனுக்கு சிவபெருமான்
மோட்சம் கொடுக்கும்படி தில்லை மூவாயிரவருள் ஒருவரான சிவாச்சாரியார் என்பவருக்கு சிவபெருமான்
ஒரு சீட்டோலை எழுதி அனுப்பினாராம். அதைப்போலவே அவர் பெற்றான்சாம்பானுக்கு மோட்சம் கொடுத்துவிட
பெற்றான்சாம்பான் என்னும் பறையனுக்கு மோட்டம் கொடுத்துள்ள அதியம் மிகவும் வியக்கத்தக்கது.
பெற்றான்சாம்பான் செத்துக்கிடப்பதைக் கண்டு உமாபதி சிவாச்சாரியார் மீது கொலைக்குற்றம்
சுமத்தினார்களாம். அதற்கு அவர் “யான் கொன்றதல்ல, மோட்சம் கொடுத்தேன் என்று கூறி அதற்கு
திருஷ்டாந்தரமாக அங்கிருந்த ஒரு முள்ளிச்செடியை தீப்பற்றி எரியச்செய்து அம் முள்ளிச்செடிக்கு
மோட்சம் கொடுத்து கொலைக் குற்றத்தை நீக்கிக் கொண்டாராம்.
இங்ஙனம் பெற்றான்சாம்பானுக்கு சீட்டோலை மூலமாக மோட்சம் கொடுக்கச்
செய்த சிவனார் நந்தனாரை நெருப்பில் மூழ்கும் படி செய்தது எதற்காக? வேடிக்கைக்காக முள்ளிச்செடிக்கு
மோட்சமும், சீட்டோலையில் பெற்றான்சாம்பானுக்கு அளித்த மோட்சமும் நெருப்பிலே மூழ்கிய
நந்தனாருக்கு அளித்த மோட்சமும் ஒரேத் தன்மையா? அல்லது வெவ்வேறு தன்மையா? ஒன்றே ஆயின்
பெற்றான்சாம்பானுக்கு பூசிக்க புராணங்கள் ஏன் ஏற்ப்படுத்தவில்லை. நெருப்புக்குள் மூழ்கி
பார்ப்பன வடிவம் கொள்ளாவிட்டால் பறையன் மோட்சம் அடைய வேண்டின் சிவனாரிடம் சீட்டு வாங்க
வேண்டுமா? பறையன் பூசிக்கப்பட வேண்டின் நெருப்புக்குள் மூழ்கி பறைத்தேகம் பொசுங்கி
பார்ப்பானாக மாற வேண்டுமா? இவை இரண்டும் இல்லையேல் பறையர்க்கு பார்ப்பார மதம் பாஷாணம்
போலும். அந்தோ என்ன கொடுமை. முள்ளிச்செடிக்கு மோட்சம் வேடிக்கையாக கிடைத்திருக்க பறையருக்கு
பாதாளத்திலும் தாழ்ந்து கிடக்கிறதே. தோழர்களே இந்த கூற்றை நன்கு ஆராய்ந்து பார்ப்பன
கொடுமையை உணருங்கள். இது மட்டுமா? அனேகவித அழகான மோட்சங்கள் நமது வேறப்பார்ப்பன புராணங்களில்
மலிந்து கிடப்பதை ஆராய்வோம்.
சுலபனென்னும் ஒரு அரசன் இருந்தான். அவன் மனைவியின் பெயர் சுபத்திரை.
மதுசூதனன் என்னும் பிராமண யாசகன் அவ்வரசன் மனைக்குப் பிச்சை எடுக்க சென்றபோது அரசன்
அவனைக் கண்டு நகைக்க அதனால் அந்த பார்ப்பனன் அவ்வரசனை ரிஷபமாக ஆக சபித்தான். அச்சாபத்தை
அரசனின் மனைவி சுபத்திரை கோபித்து அந்த பிராமணனை கழுதையாகும்படி சபித்தாள். அப்பார்ப்பணன்
அவ்வரசியை பறைச்சி ஆகும் படி சபித்தான். இம்மூவருக்கும் சாபங்கள் பலித்து அவரவர் அந்தந்த
சொரூபத்தைப் பெற்று நகர்வீதிகள் தோரும் அலைந்து திரிந்து வாழ்ந்து வந்தனர். ஒருநாள்
அவ்வூரில் இடிமின்னலோடு கூடிய காற்று மழையாக இருந்ததால் அவ்வெருதும், கழுதையும், பறைச்சியும்
அங்கிருந்த வினாயகர் ஆலயத்துக்குள் புகுந்து ஒதுங்கி இருந்தனர். அந்த பறைச்சியின் தலைமீது
இருந்த புல்சுமையில் அங்கிருந்த கழுதையும், எருதும் பிடுங்கி தின்றதால் அவள் அவற்றை
அடிக்க அவை ஒன்றோடொன்று கடித்துக் கொண்டும், உதைத்துக்கொண்டும் கூச்சலிட அதைக்கேட்ட
ஆலய அர்ச்சகர்கள் ஓடோடி வந்து அவர்களை ஆலையத்தினின்று அப்புறப்படுத்துவான்வேண்டி துரத்தி
அடிக்க அம்மூவரும் காற்று மழைக்கு அஞ்சி ஆலயத்தின் உள்ளேயே சுற்றி சுற்றி வந்ததால்
அவ்வர்ச்சகர்கள் வெகுண்டு அவைகளை அடித்துக் கொன்றுவிட்டு வினாயகர் கடவுளுக்கு தீட்டாயின
என்று கும்பாபிஷேகம் செய்தனர். கழுதையும் எருதும் ஒன்றோடென்று சண்டையிட்ட போது அவைகளின்
வாயில் இருந்த புல் சிறிது தவறி வினாயகர் கடவுள் மீது விழுந்தது. அந்த வினாயகரானவர்
புல் விழுந்ததையே தனக்கு அர்ச்சனை செய்ததாகவும் அவற்றை துரத்தி அடிக்கும் போது சுற்றி
வந்ததையே வலம் வந்ததாகவும் தீட்டாகி விட்டதென்று பார்ப்பனர்கள் செய்த அபிஷேகத்தையே
கழுதை முதலியவைகள் செய்ததாகவும் வினாயக்கடவுள் நினைத்துக் கொண்டு கழுதைக்கும் எருதுக்கும்
பறைச்சிக்கும் மோட்சம் கொடுத்தார் என்று வினாயகர் புராணம் 25 வது தூர்வை மகத்துவப்
படலத்தில் எழுதப்பட்டிருப்பதை விபரமாகக் காணலாம். இந்த வினாயக் கடவுளின் மதியும் அர்ச்சகரின்
கொலையும் பற்றி எழுதப்புகுந்தால் கட்டுரை இன்னும் விரிவாகிவிடும் என்றஞ்சி மேல் செல்வோம்.
கஜேந்திரன் என்னும் யானைக்கும் வேதாரண்யம் என்னும் ஊரில் உள்ள சிவாலயத்தில் எண்ணைத்
திருடிய எலிக்கும் மோட்சம் கொடுத்ததையும் திருவிளையாடல் புராணம் 47ம் படலத்திலும் சிலந்திப்பூச்சிக்கும்,
பாம்புக்கும், யானைக்கும் சிவபெருமான் மோட்சம் கொடுத்தார் என்பதை சீகாளத்திப் புராணம்
முதலியவைகளிலும் விரிவாக எழுதப்பட்டிருக்கின்றன. இங்ஙனம் தாவர வர்கத்துக்கும், மிருக
வர்கத்துக்கும் மோட்சம் கொடுத்த சிவனார் நந்தனாரை வெந்தீயில் மூழ்கச்செய்து, அந்தணராக்கி
மோட்சம் கொடுத்தர் என்று சொல்வது பொறுக்கி எடுத்த முட்டாள்தனம் ஆகாதா? உயரிய தலப் பேரொழுக்கத்தையும்
மனத்தூய்மையையும் விளைத்து மாந்தர்க்கு இக்கதைகள் நன்மை உண்டாகும் எனக் கூறுவதற்கு
சிறிதேனும் நியாயம் உண்டா? பொறிகள் வழியே செல்லும் ஐம்புல வேட்கையாம் காமவெகுளி மயக்கங்களை
பற்றற நீக்கி மாசற்ற தெளிந்த மனத்தூய்மை அடைவதென்றோ முக்தி அடைவதற்கேதுவாம். நேரிய
ஒழுக்கமும், சீரிய ஞான நிலையும், சிறிதும் இன்றி கண்டவாரெல்லாம் கொண்டதே கோலமாய் மோட்சம்
பெற்றோர்களெனும் வழக்குறைப்போல் நந்தனார் என்னும் திருநாளைப்போவாரும் நெருப்பிலே மூழ்கி
அந்தணராய் மாறி மோட்சம் பெற்றார் என்பதும் பறையரை வஞ்சிக்கும் பகல்வேஷக் கதையேயாகும்.
நந்தனார் எனும் ஒரு பறையர் இருந்ததும் கிடையாது, நடராஜனைக்காண சிதம்பரம் சென்றதும்
கிடையாது. நந்தனார் என்னும் பௌத்தமதத்து அரசன் தென்னாட்டில் இருந்ததாக சரித்திர ஆதாரங்கள்
உண்டு. அவ்வரசனை வடவாரியார் தென்றிசை புகுந்தபோது சிதம்பரச் சூத்திரத்தால் கபடமாகக்
கொன்றுவிட்டு நடராஜர் மோட்சம் கொடுத்தார் எனும் கபடக் கதையை கட்டியிருக்கிறார்கள்.
நந்தன் என்னும் பெயர் பண்டை தமிழ்க் குடிமக்களாகிய பறையர் என்று சொல்லப்படுபவர்களுக்குள்
வழங்கப்பட்டு வந்த பெயர் அல்ல என்பதை நாம் அனுபவத்தால் நன்கு தெரிந்து கொள்ளலாம். இரேணியஸ்
என்பவர் சரித்திர ஆதாரப்படியும் டட் என்பவர் எழுதியுள்ள சரித்திர ஆதாரப்படியும் நந்தன்
என்னும் பௌத்த அரசன் இருந்தான் என்பது விளக்கமாகிறது. அன்றியும் மகதநாட்டு அரச வம்சத்தைச்
சேர்ந்த நந்தன் என்பவரும் அவன் தோழன்மார் ஐவரும் வெண்ணிறக்கலைகளால் நிரம்பப் பெற்ற
முழுமதிபோல் வலிய தவத்தானிரம்பப் பெற்ற குழுவினராய் விளங்கி பௌத்த சங்கத்தை நன்னினார்கள்
என்று சீவகசிந்தாமணி முத்தியிலம்பத்தில் கூறியுள்ளதைக் காணலாம். கபிலவஸ்துவின் அரசிலங்குமாரனாகிய
நந்தன் என்பவன் பௌத்த சமயத்தில் சேர்ந்து துறவுநிலையுற்று இருந்தான் என்பது அவுட்டன்பாக்
என்பவர் எழுதியுள்ள சரித்திரத்தால் விளக்கமாகிறது. இன்னாரென்ன அனேக சான்றுகளால் நந்தன்
என்னும் பெயர் பௌத்தர்களுக்கு பண்டை தொட்டு வழங்கி வந்த பெயராம் என்பதை உணரலாம். சேக்கிழார்
நந்தனைப் பற்றி கூறியுள்ள வெற்றுரைகள் அனைத்தும் புகழ்வனபோல பண்டைத் தமிழ் பெருங்குடிகளை
இகழ்ந்துரைத்த இன்னாதனவாம் என்பது பெரியபுராணத்தை துருவிக் காண்பவர் எவர்க்கும் இது
புலப்படாமல் போகாது. வடவாரியெனும் வஞ்சகப் பார்ப்பனர்களும் தென்றிசைப் புகுந்து தமிழ்
வேந்தர்களான சில காமியமுற்ற அரசரை தீய ஒழுக்கத்தால் மயக்கி பௌத்த விகாரங்களை தன்வயமாக்கிக்
கொண்டு அவர்கள் தம் கொள்கைகளை எதிரிடையாக இருந்த பௌத்தர்களையும் பௌத்த வேந்தர்களையும்
மிகைபடப் பழித்துக் கூறி புராணங்கள் எழுதி தங்களை சிறப்பித்துக் கொண்டார்கள். கவ்டேசமனுவின்
புத்திரர்களின் ஒருவனாகிய இரண்யவன்மன் காலத்தில் காசியில் இருந்த மூவாயிரவர் சிதம்பரம்
குடியேறி அனேக தந்திரம் கையாண்டு அக்கோயிலைக் கைப்பற்றி ஆதிகம் பெறுவராயினர். அவர்களே
தில்லை மூவாயிரவர் என்று பெரியபுராணம் கூறுகிறது. இச்சிதம்பரம் கோயிலைக் கைப்பற்றிக்
கொண்டது போலவே திருச்சி, காஞ்சி, மதுராபுரி,மாபலிபுரம்,நாகபுரம் முதலிய இடங்களில் இருந்த
சிறப்புற்ற பௌத்த விகாரங்களை எல்லாம் பார்ப்பனர்கள் கைப்பற்றிக் கொண்டுள்ளனர். காஞ்சிபுரத்தில்
உள்ள கோயிலானது தொடுக்கழற்கிள்ளியின் துணை இளங்கிள்ளியாகிய சோழராஜனால் கட்டப்பட்ட பௌத்த
விகாரம் ஆகும். அங்கு கோவலன் மகள் மணிமேகலை சென்று விழாவெடுத்து கொண்டாடி வந்தால் என்று
“பொற்கொடி முதூர்புரிசை வலங்கொண்டு
நடுநகரெல்லை நண்ணினளிழந்து
தொடுகழற்கிள்ளி துணை இளங்கிள்ளி
செம்பொன் மாட்சினைத்திரு மணிப்பாசடை
பைப்பூம் போதிப் பகவற்கியற்றிய
சேதிமம் தொழுது தென்மேற்காக
தாதணிம்பூம் பொழிற்றான் சென்றெய்தலும்
பாரக வீதியிற் பண்டையோரிழைத்த
கோமுகி என்னும் கொழுநீரிலஞ்சியோடு
மாமணிப் பல்லவம் வந்த தீங்கெனப்
பொய்கையும் பொழிலு புனையுமினென்று”
என்னும் மணிமேகலை கச்சிமாநகர் புக்க காதையில் காணக்கிடைக்கிறது.
மதுரையில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோயிலும் பௌத்த விகாரமேயாகும். (சிந்தாதேவியின்
கோவிலாம்) இவ்விகாரத்தின் அம்பலப்பீடிகையில் ஆபுத்திரன் தங்கியிருந்து பாத்திரமேந்தி
ஆதரவற்றோருக்கு உணவு ஆட்டி வதித்திருந்தான்.
“தக்கண மதுரைதான்சென்றெய்திச்
சிந்தாவளரின் செழுங்கலை நியமத்
தந்தின் மூன்றில் அம்பலப்பீடிகை
தங்கினன்”
என்று போதரும் ஆபத்திரன்றிறமறிவித்த காதையிற் காண்க. இன்னும் மாபலிபுரம்,
திருப்பாப்புலியூர், கிருஷ்ணா நதியோரம் இருக்கும் அமராவதி முதலிய இடங்களில் எல்லாம்
பழமை தங்கிய பௌத்த விகாரங்கள் புகழ்பெற்று இருந்ததென்பதை சரித்திரங்களிலும் சாசனங்களிலும்
அறிந்து கொள்ளலாம். பௌத்த விகாரமாக இருந்த திருப்பதி ஸ்தலமானது ஜைனர் கோயிலாக மாறி
இப்போது பார்ப்பனக் கோயிலாக இருந்து வருகிறது. அத்திருப்பதி கோயிலுக்கு எதிரில் நாளது
வரையில் காணக்கிடக்கும் ஜைன விக்ரத்தால் அறிந்து கொள்ளலாம். இங்ஙனமே அனேக பௌத்த விகாரங்கள்
பார்ப்பன ஆதிக்கமடையலாயின வென்பதற்கு திருமங்கையாழ்வார் சரித்திரமே சான்றுபகரும். நாகைக்
காட்டிலிருந்த பவுத்த விகாரத்துள் பொன்னாற் செய்த சிலை ரூபமொன்றிருப்பதை அறிந்த திருமங்கை
ஆழ்வார் தமது தோழர்களோடு அப்பொன்விகாரத்தை களவாடிக்கொண்டுபோய் விற்பனை செய்து ஸ்ரீரங்கத்தில்
விஷ்ணுவுக்கு விமானமும் கோயிலும் கட்டினார் என்றும் அக்கள ஒழுக்கத்தை விஷ்ணுவும் கண்டு
மகிழ்வடைந்தார் என்றும் நாலாயிரப் பிரபந்தத்தில் கூறப்பட்டுள்ளது. இன்னும் அனேக கணக்கற்ற
ஆதாரங்களினாலும் சாசனங்களினாலும் சரித்திரங்களாலும் இந்தியா வடங்கலும் புத்ததன்மமாம்
அருளற திகழ்ந்து விளங்கியதென்பது ஆரியராம் பார்ப்பனர் தங்கள் சுயநலத்திற்காக ஏற்ப்படுத்திக்
கொண்ட மும்மூர்த்திகளின் இந்து மதமானது புத்தமதத்தின் திரிபாகவே புதுக்கப்பட்டதோர்
வருணாசிரம மதமேயன்றி மனுக்களின் பொதுநலத்திற்காக ஏற்ப்பட்ட மார்க்கமன்றென்றும் பொருமையோடு
ஆராய்வோருக்கு இது விளங்காமல் போகாது. பெரிய புராணம் என்னும் திருத்தொண்டர் சரித்திரம்
பவுத்தர்கள் மீதுற்ற துவேஷத்தால் எழுந்த நூல் என்பதை நந்தனார் சரிதம் மூலம் ஆராயப்பட்டது.
தந்தை பெரியார்
ஒரு விஷயத்தைப் பற்றி பேசப்போகிறார் என்றால் அதைப்பற்றி நன்கு ஆராய்ந்து தெரிந்து கொண்டே
பேசுவார்கள். எழுதுவார்கள். அது தான் அவருடைய பலம். அப்படியே பெரிய புராணம் பற்றியும்
ஆய்வு செய்து அதில் உள்ள பொருந்தாத விஷயத்தை வெளிப்படையாகக் காட்டியுள்ளார்கள். அதைப்போல
இதிகாசங்களான இராமாயணம், பாரதம் குறித்தும் பெரியாரின் பேச்சுகளையும் எழுத்துக்களையும்
சுட்டிக்காட்டின் அது மிகவும் விரிவாகும்.
இராமாயணத்தை எதிர்பது ஏன்?
திராவிட மக்களை
ஆரிய வலையில் வீழச்செய்து அவர்களை தன்மானமும் பகுத்தறிவும் அற்றவர்களாக ஆக்கி மனிதத்தன்மையை
இழக்கச் செய்த ஆரிய பிரச்சாரக் கதைகளில் முதன்மையானவை இராமாயணமும் மகாபாரதமும் ஆகும்.
இராமாயணக் கதை தமிழனை இழிவுபடுத்துவது தவிர அதில் வேறு கருத்து இல்லை. தமிழ்நாட்டில்
இராமாயணத்தையோ இராமனையோ வைத்திருப்பதானது மனித சுயமரியாதைக்கும் இன சுயமரியாதைக்கும்,
தமிழ்நாடு சுயமரியாதைக்கும் இழிவு ஆனதாகும்.
சன்மார்க்கம் வென்றது!
(அத்யாயம் # 5)
வள்ளலார் காண விரும்பிய
சமத்துவ சமுதாயத்தை தந்தை பெரியார் காண விரும்பிய
சமத்துவ சமுதாயத்தை, டாக்டர் கலைஞர் அவர்கள் சமத்துவபுரங்கள் நிறுவியதன் மூலம் நிறைவேற்றி
உள்ளார்கள். சன்மார்க்கத்தின் அடிப்படை கருத்தான சமத்துவ சமுதாயம் என்பது மக்கள் எல்லோரும்
ஒன்றுபட்டு சாதிவேறுபாடு காட்டாது வாழ வேண்டும் என்பது. தந்தை பெரியார் இப்படி ஒரு
லட்சியத்தை தன் வாழ்நாள் முழுவதும் பேசிவந்தார்கள். அதனை அவர்களது கொள்கைகளை மதித்துப்
போற்றும் மாண்புமிகு தமிழக முதல்வர் சென்ற முறை ஆட்சியில் (2001 – 2006) இருந்த போது
மாவட்டம்தோரும் சமத்துவபுரங்களை நிறுவி அனைத்து சாதியினையும் ஒரே இடத்தில் குடியமர்த்தி
அவர்கள் ஒன்றுபட்டு சகோதர மனப்பான்மையுடன் வாழ வழிவகுத்தார்கள். எல்லா அடிப்படை வசதிகளையும்
செய்து தந்த கலைஞர் மரணம் நிகழ்ந்தாலும் எல்லா சாதியினரையும் ஒரே இடத்தில் தகனம் செய்யும்
வகையில் இடம் அமைத்துத் தந்து சாதிவேறுபாட்டை ஒழிக்க வகை செய்துள்ளார்கள். தமிழ்நாடெங்கிலும்
சமத்துவபுரங்கள் திறக்கப்பட்டு பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்னும் வான் புகழ்
வள்ளுவத்தின் கொள்கை நிலைநாட்டப்பட்டுள்ளது. வள்ளுவருக்கு கோட்டம் கட்டி சிறப்பித்த
கலைஞர் திருக்குறளுக்கு குறலோவியம் தீட்டியதுடன் எல்லா குறட்பாக்களும் எளிய உரையையும்
வழங்கியுள்ளார்கள். வான்புகழ் கொண்ட வள்ளுவம் என்ற தலைப்பில் அதன் சிறப்புகளை கவிநடையில்
ஆக்கியுள்ளார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக
உலகமே வியக்கும் வண்ணம்,அவரது திருவுருவச்சிலையை விண்முட்டும் வண்ணம் முக்கடல்
கூடும் கன்யாக்குமரியில் அமைத்து திருக்குறளுக்கும் பெருமை சேர்த்துள்ளார்கள். வள்ளற்
பெருமான் திருக்குறள் பெருமையை உணர்ந்து அதனை தன்னுடைய மாணாக்கரான தொழுவூர் வேலாயுத
முதலியாரைக் கொண்டு சென்னையிலும் வடலூரிலும் வகுப்புகளாக நடத்தியுள்ளார்கள். பல திருக்குறள்களை
அடி மாறாது தன்னுடைய திருவருட்பாவில் கையாண்டுள்ளார்கள்.
திருக்குறளின்
பெருமையை உணர்ந்தவர்கள் தமிழரின் இனமானத்தையும், சுயமரியாதையையும் விரும்பியவர்கள்
ஆவார்கள். அந்தப் பட்டியலில் முக்கிய பங்கு வகிக்கும் நூற்றுக் கணக்கானவர்களில் முக்கியமானவர்கள்
வள்ளலார், பெரியார் மற்றும் கலைஞர் ஆகியோர். கம்பராமாயணத்தில் ஆயிரக்கணக்கில் பாடல்களை
படித்து புரிந்து கொள்வதை விட ஒரே ஒரு திருக்குறளைப்படித்து அதை ஏற்று நட, அது உன்னை
மனிதனாக ஆக்கும் என்று பல இடங்களில் பெரியார் பேசியுள்ளார்.
வடலூரில் நடந்து வந்த சமய மத அடிப்படையிலான
பூஜைமுறைகள் ஒழிக்கப்பட்டு அங்கு சுத்த சன்மார்க்க முறைப்படி வழிபாடு நடத்த கலைஞர்
ஆட்சியில் தான் வழிவகை செய்யப்பட்டுள்ளது. சபாநாதஒளி சிவாச்சாரியார் என்பவர் நடத்தி
வந்த பிரதோஷ வழிபாடு,சிவலிங்க பூஜைகள் இவைகள் நீக்கப்பட்டு அங்கு சன்மார்க்க சங்கத்தார்
விரும்பிய வண்ணம் எந்த சமயத்தையும் சாராத வழிபாடு நடந்து கொண்டுள்ளது. அங்கு விபூதி
(திருநீரு) கொடுப்பது கற்பூரம் கொளுத்துவது முதலியன கூடாது. அப்படி செய்தால் அது வள்ளலாரின்
கொள்கைக்கு மாறான செயலாகும். அங்கு ஜோதி வழிபாட்டைத் தவிர பிற வழிபாடு கூடாது. பூஜைகள்
சடங்குகள் எதுவும் கூடாது.
வடலூர் சத்திய ஞானசபையில் சமயம் சார்ந்த
வழிபாட்டு முறைகளை ஒழித்து அதனை சுத்த சன்மார்க்க சங்கத்தார் வசம் ஒப்படைத்தமைக்கு
பெரிதும் காரணமானவர்கள் தொண்டர் குலப் பெருமாள் என்னும் வள்ளலார் தொண்டரும், குறிஞ்சிப்பாடி
திரு. சுப்ரமணியன் என்னும் சன்மார்க்கியும் ஆவார்கள். அவர்கள் தான் நீதிமன்றத்தை நாடி
அதன் மூலம் இந்துசமய அறநிலைய ஆணையர் கொண்டு விசாரணைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்து
சமய அறநிலைய ஆணையர் அவர்கள் இரண்டு தரப்பினரையும் (சபாநாதஒளி சிவாச்சாரியார் – மற்றும்
தொண்டர்குல பெருமாள், சுப்ரமணியன்) தீர விசாரித்து அற்புதமான தீர்ப்பை வழங்கியுள்ளார்கள்.
இரண்டு தரப்பினரும் தங்களுக்கு வழக்கறிஞர்களை நியமித்து வாதாடினார்கள். இறுதியில் வள்ளலார்
வெற்றி பெற்றார். அவரது கொள்கைப்படியே அங்கு வழிபாடு நடத்த ஆணையிடப்பட்டது. அது செயல்முறைப்படுத்தப்பட்டது.
இதற்கு தமிழக முதல்வருக்கும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.பெரியகருப்பன்
அவர்களுக்கும் ஆணையர் திரு.பிச்சாண்டி அவர்களுக்கும் சன்மார்க்க உலகினர் என்றென்றும்
நன்றிக்கடன் பட்டுள்ளனர். இந்தத் தீர்ப்பினை விரைவில் பெற அடியேனுடைய தலைமையின் கீழ் வடலூர்
ஞானசபைக்கு வெளியே ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட
சன்மார்க்க சங்கத்தினர் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். இது என் வாழ்நாளில் மறக்க முடியாத
நிகழ்வாகும்.
கலைஞரை மேடையில் வைத்துக் கொண்டு
ஒரு திருமண நிகழ்வில் நான் வள்ளலாரைப் போற்றி ஒரு கவிதை படித்தேன். கலைஞர் அவர்கள்
அந்த திருமண நிகழ்சியில் மணமக்களை வாழ்த்தும் போது வள்ளலார் காட்டிய வழிமுறையில் வாழுமாறு
வாழ்த்திப் பேசினார். இந்தத் திருமணம் சென்னையில் நடந்த என் நெருங்கிய
உறவினர் வீட்டுத் திருமணம்.
வள்ளலாரின் கொள்கைகளை முற்ப்போக்கு சிந்தனைகளை
பெரியாரின் சீர்திருத்தக் கருத்துகளை நான் சென்று பேசும் ஆன்மீக, இலக்கிய கூட்டங்களில்
தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். தன்னலத்தை மட்டும் கருத்தில் கொண்டு செய்யப்படும்
கடவுள் வழிபாடு மாறி எதுவிலும் ஒரு பொதுநோக்கு வேண்டும் என்ற வள்ளலாரின் எண்ணத்திற்கு
ஏற்ப இங்கே பிறருக்கு செய்யும் உதவியே கடவுள் வழிபாடு என்னும் நிலை வர வேண்டும். சாதி
வேறுபாடுகள் நீங்கி மக்கள் சகோதர மனப்பான்மையுடன் வாழ வேண்டும். கடவுளை ஒரு மனிதனாக
நின்று உணர வேண்டுமே தவிர இந்து, முஸ்லீம், கிருஸ்துவன் என்ற நிலையில் இருந்து கடவுளைக்
காணக்கூடாது.
வள்ளலாருக்கும்
பெரியாருக்கும் உள்ள ஒத்த கருத்துகளை இந்த புத்தகத்தில் தந்துள்ளேன். புராணம், இதிகாசம்,வேதம்
இவை குறித்து பெரியார் ஆற்றியிருக்கும் சொற்பொழிவுகளும், எழுதியிருக்கும் புத்தகங்களும்
ஏராளம். அவைகளையும் மக்கள் படித்து உண்மையை உணர வேண்டும். சன்மார்க்கத்தின் நீட்சியே
சுயமரியாதை இயக்கம் என்றால் அதில் அதிக அளவு உண்மை உள்ளது.
இங்குத் திரு.வி.கல்யாண
சுந்தரனார் கூற்றை நினைவூட்ட விரும்புகிறென். “சுயமரியாதை இயக்கத்திற்கு நாயக்கர்
(தந்தை பெரியார்) அவர்கள் தந்தையாவார்கள்).
நான் (திரு.வி.க.முதலியார்)
தாயாவேன். நாங்கள் இருவரும் மாயவரம் (தற்போது மயிலாடுதுறை) சமரச சுத்த சன்மார்க்கச்
சங்கக் கூட்டத்தில் சேர்ந்து பெற்ற பிள்ளையே சுயமரியாதையாகும்.
அக்குழந்தை தாயுடன்
வாழாது இதுகாறும்
தந்தையுடன் சேர்ந்து
வாழ்கிறது – அதன் வளர்ச்சியைக் கண்டு யான் பெருமகிழ்ச்சியடைகிறேன்.”
இது 1939ஆம் ஆண்டு
சாமிசிதம்பரனார் அவர்கள் எழுதிய தமிழர் தலைவர் என்ற நூலில் பக்கம் 153ல் உள்ளது.
1925 நவம்பர்
21,22ல் காங்கிரஸ் இயக்கத்தின் “தமிழ் மாகாண மாநாடு” காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இந்த
மாநாட்டில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களும் சமூக அந்தஸ்து பெறும் வகையில்
“வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானத்தை” பெரியார் கொண்டு வந்தார். ஆனால் மாநாட்டின்
தலைவராக இருந்த திரு.வி.க. தீர்மானத்தை நிராகரித்தார். உடனே கோபம் கொண்டு வெகுண்டெழுந்த பெரியார் காங்கிரசால் பார்ப்பனர்
அல்லாதோர் நன்மை பெற முடியாது அதனால் காங்கிரசை ஒழிப்பதே என் வேலை என்று கூறிவிட்டு
மாநாட்டை விட்டு வெளியேறினார். காங்கிரசை விட்டு வெளியேறி நீதிக்கட்சியின் தலைவராகி,
சுயமரியாதை இயக்கத்தோடு ஒன்றிணைந்து “திராவிடக் கழகத்தை” தோற்றுவித்தார். “சுயமரியாதை
இயக்கத்திற்குக் காஞ்சிபுரம் மாநாடே காரணம் என்றாலும் வள்ளலாரின் சன்மார்க்கமே அதன்
வித்து” என்கிறார் திரு.வி.க.
பெரியார் கடவுள்
நம்பிக்கை அதிகம் உள்ள வைதீகக் குடும்பத்தில் பிறந்தவர். படிப்படியாகவே பெரியார் இறைமறுப்பாளராக,
நாத்திகராக உருவெடுத்தார் என்பதே உண்மை. இதற்கு முக்கிய காரணம் பார்ப்பனீயமும் வருணாசிரமக்
கொள்கையும் என்றால் சரியாக இருக்கும். “ஒரு குலத்துக்கு ஒரு நீதி” வகுக்கும் வருணாசிரமக்
கொள்கையை வேரோடு சாய்க்கவே கடவுள் மறுப்புக்
கொள்கையைக் கையிலெடுத்தார் எனில் மிகையாகாது.
1925 ஆம் ஆண்டு
அவர் தொடங்கிய குடிஅரசு பத்திரிக்கையை வீரசைவ
மடாதிபதியான திருப்பாதிரிப்புலியூர் ஞானியாரடிகளைக் கொண்டு வெளியிட்டார். மேலும் அதில்
இப்பெரு முயற்சியில் இறங்கியுள்ள எமக்குப் போதிய அறிவையும் எல்லாம் வல்ல இறைவன் தந்து
அருள்பாலிப்பானாக என எழுதுகிறார். இதனால் தொடக்க காலத்தில் அவரது கடவுள் நம்பிக்கைப் புலப்படுகிறது. கடவுள் இல்லவே
இல்லை என மறுத்த தந்தை பெரியாரின் தொடக்க கால வாழ்வு பக்தியில் திளைத்த வாழ்வாகவே இருந்துள்ளது.
அதைப்போலவே வள்ளலாரும் தொடக்கத்தில் சைவத்தில் ஊறி பின்னர் அதனை விட்டு வெளியேறி சமயம்,
மதம் கடந்த சன்மார்க்கத்தை நிறுவுகிறார்.
வள்ளலாரின் கொள்கைகளை
ஆராய்ந்து நோக்கின் அதில் பெரியாரிசம், காந்தியிசம்(அஹிம்சை) கம்யூனிசம் ஆகியன இருக்கும்.
பெரியார் சுயமரியாதை இயக்கத்தை தொடங்கி பகுத்தறிவுப் பிரச்சாரம் செய்த போதும் கூட வள்ளலாரின்
அருட்பார்வை மேற்கோள் காட்டி பேசி வந்துள்ளார்.
ஆத்திகக் கூட்டத்தில் இருந்து வந்த பலத்த கண்டனங்களுக்குத் தமது குடியரசில் பெரியார் எழுதிய கட்டுரை அப்படியே கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
\\ சுயமரியாதைக்காரர்கள் கடவுள் இல்லை, சாதி,சமயம் இல்லை என்னும்
கயவர்கள், வேத சாஸ்திரங்களையும் இதிகாசப் புராணங்களையும் மறுக்கும் விவேகமற்றவர்கள்,
நாஸ்திகர்கள் என்று கூறும் ஆஸ்திகர்களே! சுயமரியாதைக்காரர்களைக் குறை கூறவும் வாயில்
வந்தவாறு திட்டவும் பழகிக் கொண்டிருக்கிறீர்களேயல்லாமல் உண்மை என்ன என்பதை ஒருபோதாவது
சிந்தித்தீர்களா? மக்களது உழைப்பின் பயனை உறிஞ்சுவதற்காகவே சாதியும் சமயமும் திராவிடர்களுக்கிடையே
புகுத்தப்பட்டன.
மக்களைத் தத்தம் நிலையை அறியவொட்டாமல் மிருகங்களாக்குவதே இதிகாசங்களும்
புராணங்களும் இழிநிலையில் வாழ வேண்டியதே இறைவனின் கட்டளையாகும் என எண்ணச் செய்வதே வேதங்களும்
சாஸ்திரங்களும் மக்கள் மானத்தை விட்டொழிந்து மண்ணுலகில் மெய்மறந்து வாழவேண்டுமென்பதற்காகப்
படைக்கப்பட்டது தான் விசித்திரமிக்க கடவுளர்கள். இவை சுயமரியாதைக்காரன் கூறுவது தான்.
இந்த மாதிரி சுயமரியாதைக்காரன் கூறுவது பொய்யா? உலகத்தில் யாராக இருந்தாலும் அனைவருக்கும்
அறிவுண்டு எனக் கூறுகிறவன் சுயமரியாதைக்காரன். அதனால் அறிவு பெற்று விளங்கும் ஆஸ்திகர்களே!
சிந்தியுங்கள்! நன்றாகச் சிந்தியுங்கள்!
“கொள்கைவினைக் கூட்டுறவால் கூட்டியபல்
சமயக்
கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற
கலையும்
கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல்
கதியும்
காட்சிகளும் காட்சிதரு கடவுளரும்
எல்லாம்
பிள்ளைவிளையாட்டென… பேசுகின்றவர்
யார் தெரியுமா?
“நால்வருணம் ஆசிரமம் ஆசாரம் முதலா
நவின்றகலைச் சரிதம் எல்லாம் பிள்ளை
விளையாட்டே”
என்பவர் யார்?
“இயல்வேதா கமங்கள் புராணங்கள்
இதிகாசம்
இவைமுதலா இந்திரசா லங்கடையா உரைப்பார்
மயல் ஒரு நூல் மாத்திரந்தான் சாலம்
என அறிந்தார்
மகனே நீ நூல் அனைத்தும் சாலம்
என அறிக”
என்று பறைசாற்றுபவர் யார் தெரியுமா?
“நான்முகர் நல் உருத்திரர்கள்
நாரண இந்திரர்கள்
நவில் அருகர் புத்தர் முதல் மதத்தலைவர்
எல்லாம்
வான்முகத்தில் தோன்றி அருள் ஒளிசிறிதே
அடைந்து
வானகத்தும் வையகத்தும் மனம்போனபடியெ
தேன்முகத்துண்டவர் எனவே விளையாடா
நின்று
“சிறுபிள்ளைக் கூட்டமென” என்று
செப்புகிறவர் யார் தெரியுமா?
“சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச்
சண்டையிலே
ஆதியிலே அபிமானித் தலைகின்ற உலகீர்
அலைந்தலைந்து வீணேநீர் அழிதல்
அழகலவே” என்றும்
உங்கள் மனநிலைக்கு மனமிரங்குபவர் யார் தெரியுமா?
இவ்வாறு கூறுகிறவர் சுயமரியாதைக் கவிஞரல்ல. ஆஸ்திகர்களாகிய உங்கள்
அன்புக்கும் மதிப்புக்கும் உரியவரான வடலூர் இராமலிங்க சுவாமிகள் ஆவார். இவர் இவ்வாறு
எழுதி வைத்திருக்கும் நூலைத் திருஅருட்பா எனச் செப்பி மாலையைச் சுற்றி மண்டியிட்டு
வணங்குகிறீர்கள். இக்கருத்தை எடுத்துக் கூறுகின்றவர்களை மருளர் என்றும் செப்பி, மண்
கல்லைவாரி எறிந்து மல்லுக்கு நிற்க வருகின்றீர்கள். இப்போது என்ன கூறுவீர்கள்? சுயமரியாதைக்காரர்கள்
கயவர்களா? விவேகமற்றவர்களா? புரட்டர்களா? நாஸ்திகர்களா? சுயமரியாதைக்காரர்களைக் குறைகூறும்
ஆஸ்திகர்களெ! உங்களின் உண்மையான நிலை என்ன? என்பதை நீங்களே சிந்தித்து முடிவு கட்டுங்கள்.
சைவ மெய்யன்பர்களே! நீங்களும் சிந்தியுங்கள். சிந்தித்து தெளிவடைய முடிகிறதா எனப் பாருங்கள்.
சுயமரியாதை இயக்கத்தார் கூறும் கருத்துகளைக் கண்டு கோபமடையும் வைதிகர்களே!
ஆஸ்திகரான இராமலிங்க அடிகளே இதே கருத்தை கூறியிருக்கிறாரே இதற்கு உங்களது பதில் என்ன?
//
என்பதே பெரியாரின்
கேள்வியாக இருந்தது.
வடநாட்டு அருளாளர்களைப்
போற்றுகின்ற தமிழனுக்கு நம் நாட்டு அருளாளர்களைப் பற்றிய அக்கறை இல்லாதது கண்டும் பெரியார்
வருந்துகிறார். தமிழனின் தன்மானத்தைத் தூண்டும் வகையில் பெரியார் பேச்சு அமைகிறது.
அங்கும் வள்ளலாரே அவருக்கு உதாரணத்துக்கு வருகிறார். ஏன் தம்பி இவ்வளவு வாநாட்டுப்
பற்று என்னும் தலைப்பில் குடியரசு இதழில் அவர் இவ்வாறு எழுதுகிறார்.
\\ “இராமகிருஷ்ணரைப் போற்றும் அன்பனே! சிந்தித்துப்பார். உன் இராமலிங்கம்
எந்தவிதத்தில் அவரைவிடத் தாழ்ந்தவர்? அவரை
எந்த வடநாட்டானும் போற்றக் கண்டுள்ளாயா? //
பெரியாரின் இப்படிப்பட்ட
கேள்விகளே பல கவிஞர்களுக்கு பாடுபொருளாக அமைந்தது என்பர். “குடியரசு
ஏட்டில் நான் எழுதுவதை அப்படியே கவிதையாக்கி நீ எழுதி வா” என்று பெரியார்
பாரதிதாசனுக்கு கூறியதாகவும் அவரும் அப்படியே வள்ளலாரைப் பாடலாக எழுதியதாகவும் ஒரு
கருத்து உண்டு. எனவே தான் பாரதிதாசனின் சீடரான சுரதாவும், பெரியாரின் கேள்வியை அடியொற்றி
“வங்கத்து ஞானிக்கு சிலைகள் இங்கே, வடலூரார் போன்றோருக்கு
சிலைகள் எங்கே!” என்று வினாத் தொடுத்தார்.
எல்லாவற்றிற்கும் மேலாகச் சுயமரியாதை இயக்கக் கருத்துகளின் வித்தான
அருட்பா – ஆறாம் திருமுறையிலிருந்து நூறுபாடல்களைத் திரட்டி 1935 ல் அதனைத் தனது குடிஅரசுப்
பதிப்பகத்தின் மூன்றாவது வெளியீடாகப் பெரியார் வெளியிட்டது சுயமரியாதை இயக்க வரலாற்றில்
மிக மிக முக்கியமான செய்தியாகும். “இராமலிங்க சுவாமிகள் பாடல் திரட்டு” என்னும் பெயரில்
இப்பாடலைத் தொகுத்தவர் சாமி.சிதம்பரனார். இக்கருத்துகள் மக்களைச் சென்றடைய வேண்டும்
என்னும் நோக்கில் குடியரசு பத்திரிக்கையின் சந்தாதாரர்களுக்கு முக்கால் விலைக்கு வழங்கிக்
கருத்துகளைப் பரப்பியிருக்கிறார் பெரியார் என்பது சன்மார்க்க வரலாறு, சுயமரியாதை வரலாறு
இரண்டிலுமே பதிவு செய்யப்பட வேண்டிய ஒன்றாகும்.
இதுகுறித்து குடிஅரசு
பத்திரிக்கையில் அவ்வப்போது விளம்பரமும் செய்துள்ளார் பெரியார். எனவேதான் “எழுத்தில்
முழங்கிய வடலூரார் கொள்கைகளைச் செயலில் செய்து காட்டியவர் பெரியார் என்று புகழாரம்
சூட்டுகிறார் திருக்குறள் வீ. முனுசாமி.
பெரியாரோடு இணைந்து
செயல்பட்ட திராவிடக்கழக முன்னோடிகளும் வள்ளலாரின்
கருத்துகளால் ஈர்க்கப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிடத்தக்க
சிலரில் கோவை சி.ஏ அய்யாமுத்து ஒருவர். காந்தி, ராஜாஜி மீது பற்று கொண்டவர் பின்பு
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கு தான் வந்ததற்குக் காரணம் இராமலிங்க சாமிகளே என
எழுதியுள்ளார் காந்தி தரிசனம் என்னும் நூலில்.
திராவிடக் கழகத்தின்
போர்வாள் என்று சொல்லத்தக்க அளவு செயல்வீரராக கருதப்பட்டவர் குத்தூசி குருசாமி அவர்கள்.
இவரும், தமது எழுத்துகளில் வள்ளலாரின் கருத்துகளை மேற்காட்டும் வழக்கத்தைக் கொண்டிருந்தார்.
1929 இல பட்டுக்கோட்டையில்
நடைபெற்ற சுயமரியாதைத் தொண்டர்கள் மாநாட்டின் தலைமை உரையில் அவர் பேசும் போது, “உலகிலேயே
மனித சமூகத்தின் வளர்ச்சிக்கும், முன்னேற்றத்துக்கும் தடையாயிருப்பது மதம் தான். முன்னேற்றத்தின்
முதல் படியில் காலை வைக்கும் போதே மதம் என்னும் பேய்தான் காலை இழுத்துத் தள்ளிவிடுகிறது.
இந்தப் பேயை எதிர்க்கத் துணிந்தவர்களுக்குத்தான் மேலே செல்லச் சாத்தியப்படும்” என்று
பேசியுள்ளார். இதில்வரும் மதம் என்னும் பேய் என்பது வள்ளலாரின் வாக்கு என்பதை அறியலாம்.
மேலும் காந்தியடிகள் சுட்டுக் கொல்லப்பட்டபோதும் மதவெறியைக் கண்டித்துக் கட்டுரை எழுதிய
குருசாமி அங்கும் அருட்பா வரிகளை அப்படியே எடுத்தாண்டுள்ளார். அவை…………………..
“மதம் மக்களுக்கு
அபின் என்ற அழையாத உண்மையை நெஞ்சில் எழுதிவிட வேண்டும், இனியாவது மதத்திற்காகவே மனிதன்
வாழ்கிறான் என்ற அற்ப புத்தியும் அறியாமையும் வெறிக்குணமும் மூடத்தனமும் மனித சமுதாயத்தை
விட்டு ஒழிய வேண்டும். மதன் என்னும் பேய் பிடியாதிருக்க வேண்டும்”
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம் உறவு வேண்டும்”
என்று தொடங்கும் வள்ளலாரின் தெய்வமணி மாலையில் வரும் இவ்வரிகள் குருசாமிக்குத் தொடர்ந்து
கைகொடுத்திருக்கிறது.
மதம் குறித்து
மட்டுமல்ல சாதிப்பற்றிப் பேசும்போது கூட அவர் வள்ளலாரை மறக்கவில்லை. 1930களில் ராமநாதபுரம்
மாவட்டம் சிவகங்கையில் சுயமரியாதைக் கூட்டத்தில் பேசும் போதுகூட எல்லோரும் ஒரு சாதி
என்றார் ராமலிங்க சுவாமி என்று மேற்கோள் காட்டிப் பேசியுள்ளார்.
சுயமரியாதை இயக்கத்தினர்
கண்டித்து ஒதுக்கிய சாதி, மதம், வேதம், புராணம், பெண்ணடிமை, பார்ப்பன எதிர்ப்பு என்று
எது குறித்து பேசும் போதும் அங்கு வள்ளலார் அவர்களுக்கு ஆதாரமாகிவிடுகிறார். குருசாமியும்
அதற்கு விலக்கல்லர்.
இவர்களை அடுத்து,சுயமரியாதை
இயக்கத்தின் முக்கிய நபராகக் கருதப்படுபவர் சாமி.சிதம்பரனார். மிகச்சிறந்த பேச்சாளராகவும்,
எழுத்தாளராகவும் பல நூல்களின் ஆசிரியராகவும் திகழ்ந்தவர். தமிழர் தலைவர் என்னும் பெயரில்
பெரியாரின் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர். சித்தர்களையும் வள்ளலாரையும் தமிழ்ப் பண்பாட்டில்
மீளவும் கொணர்ந்த பெருமை சிதம்பரனாரையே சாரும். வள்ளலார் காட்டும் வழி(1956), வடலூரார்
வாழ்மொழி (1959) ஆகிய இவரது இரு நூல்கள் வள்ளலாரின் மீது இவர் கொண்டிருந்த மதிப்புக்குச்
சான்று.
சாமி சிதம்பரனார்,
வள்ளலாரைச் சுயமரியாதை இயக்கத்தின் முன்னோடியாகவே அவதானிக்கிறார். இதற்குச் சான்றாக
அவர் எழுதிய ஒன்றைக் காட்டலாம்.
\\ ஒருவரை வணங்க ஆரம்பித்து விட்டால் பிறகு அவருடைய ஆராய்ச்சிகளைப்
பற்றி எண்ண மாட்டார்கள். அவருடைய சொற்களைப் பற்றி சிந்தனை செய்யவே மாட்டார்கள். அவரை
வணங்குவதனாலேயே தாங்கள் செய்த பாவங்கள் தீர்ந்துவிடும், தங்களுக்கு புண்ணியம் கிடைத்துவிடும்
என்று நினைத்து விடுவார்கள். இந்த உண்மையை வள்ளலார் நன்றாக உணர்ந்திருந்தார். ஆகையால்
தான் என்னை வணங்க வேண்டம். நான் கூறியவைகளை
படியுங்கள்! அதன்படி நடவுங்கள் என்றே கூறினார் வடலூரார் வாய்மொழி – சாமி.சிதம்பரனார்.
சுயமரியாதை இயக்கத்தில்
தன்னை இணைத்துக் கொண்டு தமது வெடிகுண்டு கவிதை வரிகளால் தமிழகத்தில் மிகப்பெரிய இனப்புரட்சியையும்
மொழிப்புரட்சியையும் ஏற்படுத்தியவர் பாவேந்தர் பாரதிதாசன். இவர் பற்றி எனது கவிதைவரிகள்
சில…
ஈரோட்டுச் சிங்கம்
இனமானத் தந்தை பெரியாருக்கும்
இணையற்ற என் தமிழுக்கும்
இணைந்து பிறந்த இனிய பிள்ளை!
அவனது தமிழ் தொண்டுக்கு இல்லை
எல்லை!
அவனோ வாசம் அற்றுப் போகாத தமிழ்
முல்லை.
தனித்தமிழ் இயக்கம் கண்டோரின்
செல்லத்தம்பி!
ஊர் தோறும் கவித்தேனை ஊட்டிய தமிழ்த்தும்பி!
எப்படிக்கும் முதற் படியாய்த்
தமிழ்
படிக்க வேண்டும் – வீழ்ந்த தமிழ்நாடு
தலைதூக்க தன் உயிர்தனையே தருவேன் என்றான்.
“கொலை வாளினை எடடா – மிகு
கொடியோர் செயல் அறவே” என்றான்.
அந்த கவிதையிலே..
இளைத்துக் கிடந்த தமிழன் எல்லாம்
எழுந்து நடந்தான்
கண் விழித்துப் பார்த்தான்.
விளக்கில் விழுந்த விட்டில் பூச்சிகளுக்கு
விடியலைக் காட்டிய கவிஞன் – அவன்
சொரணை அற்றுக் கிடந்தவனை எல்லாம்
பாட்டாலே
சொடுக்கி விட்ட சொல்லருவி…
புதைகுழிக்குப் போன தமிழனைப் பார்த்து
பதை பதைத்து பாட்டாலே வெளிக் கொணர்ந்தான்.
நரிகளின் வாலை நறுக்க
எரிமலையை கவிதைக்குள் அடைகாத்தான்
ஏழைகளாய் பிறந்திடினும் தவறு இல்லை
கோழைகளாய் பிறந்திடல் ஆகாதென்று
– இனிக்கும்
வாழைகளாய் இதமான கவிதை தந்தான்
அந்தக் கவிதைகளால் அன்றோ
மோழைகளாய்க் கிடந்தவன் எல்லாம்
முகம் தூக்கிப் பார்த்தான்
தன் மெய் வருத்தி மேதினியில்
தண்டமிழ் வளர்த்த தமிழ்ச்சான்றோன்
சீரிய மொழியாம் எம் தமிழில்
வீரிய சொல் எடுத்து
கூரிய வரிசெய்து சீறிய கவிஞன்
இருள் சூழ்ந்த தமிழகத்தில்
ஒரு கவிச்சூரியனாய் வந்துதித்தான்
இருண்ட வீடுகளில் குடும்ப விளக்கை
ஏற்றி வைத்த குவாயக் கவிஞன்
மண்ணுலகில் என்னுடல் விழும் முன்
என்னுயிர் தமிழுக்காக
இன்னுயிரையும் தருவேன் என்றான்.
மூவேந்தர் முத்தமிழைக் காப்பதற்கு
முனைப்புடன் பாண்டியன் பரிசு தந்தான்!
தமிழுக்கு தொண்டு செய்வோன்
சாவதில்லை என்றவனே!
தமிழை உடுத்தவனே – தமிழ் வாளைக்
கையில் எடுத்தவனே
ஆழி சூழ் உலகு உள்ளளவும்
அழியாது உன் புகழ்.
எண்ணத்தில் உதித்த
கன்னல் தமிழை ஏட்டில் வடித்தான்!
அதுவே சிலரது
கன்னத்தில் அறைந்தது போல் இருந்தது.
மந்திரம் என்பான் – மாந்திரீகம்
என்பான்
தந்திரமாய் தமிழன் தலையை தடவப்
பார்ப்பான்
சந்தியிலே நின்றிருந்த தமிழனின்
புந்தியிலே பெரும் மாற்றம் நிகழ
வைத்தான்
எழுதி வைத்த இலக்கியத்தில் – தமிழின்
எதிரிகளை அலைக்கழித்தான்
ஏமாந்த தமிழன் தலை எடுத்தான்..
கொல்லன் உலையிட்ட புழுவானார்
கோலேச்சிய ஆதிக்கத்தார்.
நடைபிணமாய் வாழ்ந்தவனுக்குச்
– சுயமரியாதை
உடையை உடுத்தி விட்டவன்.
பேடியாய் நின்றிருந்தான் நம் தமிழன்
ஓடி அவனை எழுப்புதற்கு
நாடியிலே நம் தமிழைக் கலந்து விட்டான்
– அவனைப்
பாடி நானும் பரவசம் அடைகின்றேன்.
கவிதை என்பது கடைச்சரக்கு அல்ல
அடுக்கி வைத்த ஏடுகளில் இருந்து
அனல் கிளம்ப வேண்டும் – பாவேந்தன்
கவிதை போல
கவிதைக்குள் இருந்து கனல் கிளம்ப
வேண்டும்!
பாவுக்குள் இருந்து அருள் வடிய
வேண்டும்
அருட் பாவைப்போல
சிந்திக்க வைப்பதற்கே எழுத்துக்களை
ஏட்டில்
சிந்த வேண்டும்.
அமிழ்தான அருந்தமிழ் விட்டு வேறு
மொழி பேசி
மகிழ்வான் தன்னை அவன் முகம் நோக்கி
உமிழ்ந்தாலும் தவறு இல்லை.
அரங்கத்தில் ஐம்பதுபேர் முன்னிலையில்
– தமிழகத்தில்
அயல் மொழி பேசி மகிழ்வானை
அற்பன் என்றே அலட்சியம் செய்ய
வேண்டும்.
அருந்தமிழ் மொழி தன்னை – நம் கண்ணின்
கருமணி போல் காத்து நிற்றல் –
நம்
பெரும்கடமை அன்றோ?
அழகிய மயில் ஒன்றின்
அங்கத்தை சிதைத்து
அழகு பார்ப்பது போல
பழகும் நம் தமிழில்
பல தவறு செய்தோரைப்
பாங்காக அவர் தடுக்க
தனித்தமிழ் இயக்கம் தன்னை ஆதரித்தார்.
தமிழை கெடுப்பவர்கள்
தீங்காக அதை உணர்ந்து திருந்த
வேண்டும்.
தமிழா….
உனது கைகள் வெடிகுண்டு ஏந்த வேண்டாம்
கவிதை வெடிகுண்டுகள் வெளி வரட்டும்
தோள்களில் துப்பாக்கி தொங்க வேண்டாம்
தூவல்கள் எல்லாம்
துப்பாக்கி ஆக்கி விடு!
சஞ்சீவி பர்வதத்தின் சாரலிலே
பகுத்தறிவு வாடையை வீச விட்டான்
இன்று… பகுத்தறிவு மீண்டும் படுகுழி
போனது.
பாடுபட்டு வளர்த்த பகுத்தறிவு
– மீண்டும்
பாழ்பட்டு போனது எதனாலே…?
தெய்வங்கள் ஆயிரம் கொண்டதும் இத்திருநாடு
தெருப்பிச்சைகள் பல்லாயிரம் கொண்டதும்
இத்திருநாடு.
ஆண்டுதோறும் ஐயப்ப பக்தர்கள்
அதிகரித்தே வருவது அன்னைத் தமிழ்நாடு
ஐயோ… அப்பா என்ற அவலக்குரல்
அதிகரிப்பதும் இந்தத் திருநாடு.
முப்பாலைப் போன்ற ஒரு நூலை
எப்பால் இனி நாம் காண இயலும்?
மழித்தலும், நீட்டலும் வேண்டா
உலகம்
பழித்தது ஒழித்து விடின் – என்றார்
இவனோ.. தாடியை வளர்த்துக் கொண்டான்.
காவியுடை கட்டிக் கொண்டான்
சாமி தேடிச் ‘சரணம்’ சொல்லிப்
புறப்பட்டான்.
கோயிலுக்கு போறவனே
கூக்குரல் எதற்காக!
ஆண்டவனை பார்ப்பதென்றால்
ஆர்பாட்டம் எதற்காக?
ஒரே இடத்தில் ஒரு கோடி பேர் திரண்டால்
ஒரு நொடியில் உயிர் போகும் மிதிபட்டால்
– இந்த
பகுத்தறிவு கூட இன்றிப்
படை எடுக்கின்றான்.
பரிதவித்து உயிர் விடுகின்றான்.
நான்முகன் என்பானும் உளனோ? நாயே
என்றான் பாவேந்தன்
பரம்பொருள் ஒன்று என்றே ஞானியர்
வகுத்தனர்
பொருள் சேர்க்கவே – பரம்
பொருள் என்று பல கடவுள் தேடுகின்றான்.
ஒரு முடிவுக்கும் வராமல் உயிரை
விடுகின்றான்.
மண்டை ஓட்டுக்குள் வெளியே
மயிரை மழித்து சுத்தம் செய்பவனே
ஓட்டுக்குள் அழுக்கை அகற்ற மறந்தாய்
முடிவே இல்லாதவன் இறை என்றால்
முடி எதற்கு காணிக்கை?
“தமிழ்ப் பாடல் சாதி மதம் மூட
எண்ணம்
தரும் பாட்டாய் இருப்பதிலும்
இல்லாமை நன்றி” என்றான் பாவேந்தன்
“ஒரு மதமும் வேண்டாம் தம்பி! உண்மையுடையார்க்கே
பெருமதம் என்னும் அந்த பேய் பிடிக்க
வேண்டாம்”
“ஒரு கடவுள் உண்டென்போம்
உருவ வழி ஒழிப்போம்” என்று
சமதர்ம சமுதாயத்துக்குச்
சத்தான கவிதை தந்தான்.
“ஏழையின் சிரிப்பில் இறைவனைக்
காண்போம்” என்றார் அண்ணா
இறைவனை அனுபவிக்க
ஏழையை இன்புவிக்க என்ற
வள்ளலாரின் கருத்தினை மறந்து போயினர்.
ஏழைகள் வயிறு என்றைக்கும் நிரம்பவில்லை
ஏழுமலையான் உண்டியல் எட்டு நிமிடத்துக்கு
ஏழுமுறை நிரம்புகிறது.
“உலகம் உண்ண உண்
உடுக்க உடுப்பாய் ; என்று
பாரெங்கும் மனித நேயத்தைப்
பாட்டால் பகர்ந்து சென்றார் பாவேந்தர்.
தமிழை தனக்கு ஏற்றபடி வளைத்தான்
அன்றித்
தான் என்றைக்கும் வளைந்ததில்லை.
எவனுக்கும் வளைந்ததில்லை.
அது பெரியார் என்ற பெரும்புயலிடம்
பெற்ற பாடம்.
“பெண்ணடிமை தீருமட்டும் பேசும்
இந்தத் திருநாட்டு
மண்ணடிமை தீருவது முயற் கொம்பே”
என்று
பெண்மையை உயர்த்திப் பெருமை பெற்றான்.
“சாதி ஒழித்திடல் ஒன்று
நல்ல தமிழ் வளர்த்திடல் மற்றொன்று
பாதியை வையம் மறந்தால் மற்ற
பாதி துலங்குதல் இல்லை” என்றார்.
ஆனால் இன்று…
சாதியிலே மதங்களிலே வெறி கொண்டு
வீதியிலே அலைகின்றான்
வீணில் பொழுது கழிக்கின்றான்
– யாரோ வகுத்த
சூதினிலே கருத்தை இழந்தான்!
ஆதியிலே சாதிகள் ஏதும் இல்லை
பாதியிலே வந்தவையே பாழான சாதிகள்
வேதியர் ஆயினும் வேறு குலத்தவர்
ஆயினும்
ஒன்றென்ற சொல் கேட்போம்.
சோதியாம் அருட்பெரும் சோதியிலே
அகம் களித்து வாழ்வோம்!
உணவில் மட்டும் உப்பைக் கலந்து
உண்டவனுக்கு
உணர்வில் உப்பை கலந்தான்
எழுதி வைத்த எழுத்தினிலே
தமிழன் எழுச்சி கண்டான். எத்தர்களோ
வீழ்ச்சி கண்டனர்.
புராணங்களைக் காட்டி
புளுகு மூட்டைகளை அள்ளி விட்ட
புரட்டு மனிதர்களைப் – பூகம்பப்
பாட்டால்
புரட்டி அடித்தான்.
சமுதாய ஏற்றத் தாழ்வைச் சமன் செய்ய
சவுக்கடி கவிதைகளால் சமர் செய்தான்!
பள்ளிக்குத்தான் ஆசிரியர் என்றாலும்
அள்ளித் தந்த பாட்டுகளால் அகிலம்
விழித்தது!
“துருக்கர், கிருத்துவர், சூழ் இந்துக்கள்
என்று இருப்பவர் தமிழரே என்பது
உணராது
சச்சரவு பட்ட தண்டமிழ்நாடு
மெச்சவும் காட்டுவோன் வேண்டும்
என்று
எண்ணி இராமலிங்கரை ஈன்றதன்றோ நம்
தமிழ்நாடு”
என்று வள்ளலாரைப் பாடுகின்றார்.
(மேலே கண்டது அடியேன் பாரதிதாசனைப்
பற்றி என் “நேசம் விரும்பும் நெருப்புக் பூக்கள்” என்னும் கவிதைத்தொகுப்பு புத்தகத்தில்
எழுதிய கவிதை)
இவரது வழியில்
வந்த கவிஞர் சுரதா பாரதிதாசனைப் பற்றிக் கூறும் போது இராமலிங்கர் தமது கடைசிக்காலத்தில்
எவ்வெவற்றை முன்மொழிந்தாரோ அதையேத்தான் இவர் வழிமொழிந்தார் என்கிறார்.
பாரதிதாசன் தந்தை
கனகசபைக்கும், வள்ளலாருக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. வள்ளலார் தொடங்கிய சன்மார்க்க
விவேக விருத்தி எனும் நூலுக்கு கனகசபை 4 அணா நிதி கொடுத்துள்ளார் என பாரதிதாசன் மகனார் மன்னர் மன்னன்
தெரிவிக்கிறார்.
சுயமரியாதை இயக்கத்தில்
தந்தை பெரியாரின் அடியொற்றி நடந்தவர்கள் பலர்
வள்ளலாரை மேற்கோள் காட்டி மேடைகளில் பேசுவதும் எழுதுவதும் வாடிக்கையாக இருந்தது. குறிப்பாக
பேரறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர், நீலாவதி அம்மையார், பேராசிரியர் அன்பழகன் போன்றோர்
அதில் மிக முக்கியமானோர். சுயமரியாதை இயக்கத்தின் மலர்ச்சிக்கு வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்
வேராகத் திகழ்கிறது என்பது முற்றிலும் உண்மை. இன்று தமிழ்நாடு மட்டுமல்ல அகில உலக அளவில்
சமுதாய சீர்திருத்தம் செய்த புரட்சியாளர்களின் வரலாற்றை எழுத முற்படின் அதில் வள்ளலார்
பெயரை நீக்கிவிட்டு எழுத யாராலும் முடியாது.
இதனை அடியொற்றியே
கோவையில் நடந்த (2010) உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டில் திராவிட இயக்கத்திற்கு “அருட்பா
தந்த கருத்துக் கொடைகள்” என்ற என்னுடைய கட்டுரையை எழுதி பேசினேன்.
இந்நூலுக்கு
2010ஆம் ஆண்டிற்கான சிறந்த ஒப்பாய்வு நூல் என்னும் விருது தமிழக அரசால் வழங்கப்பட்டிருப்பது
எனக்கு கிடைத்த பெருமையாகும்.
சுயமரியாதை இயக்கமே
நீதிக்கட்சியாகி திராவிடர் கழகமாகி, பின்பு பல பிரிவுகள் கொண்ட கட்சிகளாக உருவாகிவிட்டது.
இன்றைய நிலையில் சாதி உணர்வைத் தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் கட்சிகளை நினைத்தால்
மனம் குமுறுகிறது. சாதி அடிப்படையிலான கட்சிகளை மக்கள் புறக்கணிக்க வேண்டும். மத உணர்வைத்
தூண்டிவிட்டு அரசியல் நடத்தும் போக்கும் மாற வேண்டும். முதல்வர் கலைஞர் அவர்களின் பேச்சை
நிறைவு கூர்ந்து முடிக்கிறேன்.
“அருட்பெருஞ்ஜோதி
தான் ஆண்டவர்” என்று வள்ளலார் கூறினார். அதாவது சீர்திருத்தச் சமதர்மக் கருத்துகளை
மக்களிடம் பரப்ப வேண்டும். அவர் உருவாக்கிய சமரச சன்மார்க்கச் சங்கத்தின் கொடி மஞ்சள்,
வெள்ளை நிறம் கொண்டது. என்னைப்பார்த்தால் இரண்டு நிறங்களையும் பார்க்கலாம்” – கலைஞர்
பேச்சு (தினமணி 13.7.1999 பக்கம் 8)
“சாதியும் மதமும்
இருள்குப்பை. அதை உரமாக்க வேண்டும் என்று சொன்னவர் வள்ளலார். சாதி ஒழிய வேண்டும் என்று
எல்லோரும் கூறினாலும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பால் இட ஒதுக்கீட்டுக்காக சாதி தேவைப்படுகிறது.
ஒரு பிரிவினரைத் தாக்க, கொல்ல சாதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது சாதி என்பது
தொற்று நோயாகி, சாதிப்பெயரைச் சொல்லி நினைத்துப் பார்க்கமுடியாத வகையில் பல சாதிக்
கட்சிகள் ஏற்பட்டு வருகின்றன. அக் கட்சிகளின் தலைவர்கள் சாதியைச் சொல்லி தங்களுக்காகப்
பாடுபடுகிறார்கள். நிலமை இப்படி ஆகும் எனத் தெரிந்திருந்தால் பெரியார், அண்ணா, தியாகராயர்,
நாயர் போன்றவர்கள் இடஒதுக்கீட்டுக் கோரிக்கையை எழுப்பி இருக்க மாட்டார்கள்.”
- சமத்துவபுரம் கண்ட கலைஞர் பேச்சு. (தினமணி
13.07.1999 பக்கம் 8)
இன்றைய சீர்திருத்தவாதிகள்,
அரசியல்வாதிகள் செய்கின்ற எந்த சீர்திருத்தம் ஆனாலும் அதில் வள்ளலாரின் தாக்கம் நிச்சயம்
இருக்கும். வள்ளலாரின் 19ம் நூற்றாண்டின் கனவு இன்றைய ஆட்சியாளர்களின் வழியே செயல்பட்டு
வருகிறது. ஆலயங்களில் அன்னதானம் செய்யும் திட்டமும் இதில் அடங்கும். வரும்காலம் வள்ளலாரின் காலம் என்பதை
எண்ணி மகிழ்கிறேன்!
சன்மார்க்கம் தழைக்கட்டும்
(அத்யாயம் # 6)
சன்மார்க்கம் என்பது
உண்மையை அறிவது. சன்மார்க்கம் என்பது தொன்றுதொட்டு இருந்து வருவது. இயற்கைத்தொன்மையாம்
சன்மார்க்கம் என்பர் மறைமலை அடிகள்.
“எப்பொருள் யார்
யார் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பதறிவு”
என்பது நமது திருக்குறள்.
மெய்ப்பொருள் ஆனதை உணர்ந்து கொள்வதும் புரிந்து கொள்வதும் சன்மார்க்கம் ஆகும். அறிவினில்
அன்பினில் சிவத்தைக் காணச் சொன்னவர்கள் நம் முன்னோர்.
“அன்பும்
சிவமும் இரண்டென்பர் அறிவிலார்
அன்பே
சிவமாவதை யாரும் அறிகிலார்”
என்றும்
“ஒன்றே
குலமும்
ஒருவனே
தேவனும்”
என்றும் சன்மார்க்கம்
பேசியவர் திருமூலர்.
“ஒத்தறிவான்
உயிர் வாழ்வான் மற்றயான்
செத்தாருள்
வைக்கப்படும்”
என்று கூறிய திருக்குறள்
தொடங்கி அவருக்கு முன்பும் பின்பும் பல சித்தர்கள் தெளிவு பெற்று உரைத்த கருத்துகளே
சன்மார்க்கக் கொள்கைகளாகும்.
திருவள்ளுவருக்கு
முன்பே நமது தொல்காப்பியம்
“அறம்புரி
சுற்றமொடு கிழவனும் கிழத்தியும்
சிறந்தது
பயிற்றல் இறந்ததற் பயனே”
என்று மனிதநேயம்
பேசுகிறது.
“யாதும்
ஊரே யாவரும் கேளிர்” என்று
உலகம் தழுவிய மாந்தநேயத்தை வலியுறுத்தியவர்கள் தமிழ்ப்புலவர்கள்.
“அறத்தில்
அன்புநீ”, “தீயினுள் தென்றல் நீ”, “பூவினுள் நாற்றம் நீ”, “அனைத்தும் நீ” “அனைத்தின் உட்பொருளும் நீ”
என்றும் சங்க இலக்கியங்கள்
சன்மார்க்கத்திறகு ராஜபாட்டை போடுகிறது.
“வாழையடி
வாழை என வந்த திருக்கூட்ட மரபில்”
வந்தவரான வள்ளல் பெருமான், திருவள்ளுவர், திருமூலர், மாணிக்கவாசகர், தாயுமானவர் என்று
பட்டியலில் நீட்சியாக பரிணமித்தாலும் இதுவரை யாரும் காட்டாத சுத்த சன்மார்க்கம் என்ற
மிக உயர்ந்த கொள்கையை உலகிற்கு காட்டி சென்றவர்.
இதுவரை உலகில் தோன்றிய உயர்ந்த சிந்தனையாளர்களின் தெளிந்த கருத்துகள் இதில்
உள்ளடங்குகிறது.
“உன்னையே
நீ பார், உலகம் உன்னிடம்
தன்னை
அறி” என்று சொன்ன சாக்ரடீசின்
கருத்து முதல்
“பசிக்கின்ற
மனிதனுக்கு உணவே தெய்வம்” என்று
சொன்ன புத்தன் முதல்
“கடவுளை மற, மனிதனை நினை” என்று சொன்ன பெரியாரின் கருத்துகள் வரை மனித சமுதாயம் தள்ள
முடியாத சீரிய கருத்துகளை உள்வாங்கி விரிவுபடுத்தப்பட்டதே வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்.
இதுவரை உலகில் தோன்றியுள்ள அத்தனை மதங்களில் இருந்தும் வடிகட்டி சத்து மிக்க சாறாக்கி
நமக்கு வள்ளலார் சுத்தசன்மார்க்கம் என்ற புதுத் தத்துவத்தை, சித்தாந்தத்தை காட்டுகிறார்.
இதனுள் கிருத்துவம்
காட்டும் அன்பு, சமத்துவம், சமாதி வலியுறுத்தல், பிறர் குற்றம் விசாரியாது இருந்தல்,
வெள்ளாடை அணிதல், சடங்குகள் நீக்கிய அமைதியான வழிபாடு போன்ற கருத்துகளும் இஸ்லாம் காட்டும்
சமத்துவம், ஓரிறைக் கொள்கை, அமைதி போன்ற கொள்கைகளும் சமணமும் பவுத்தமும் காட்டும் உயிரிரக்கமும்,
கொல்லாமையும், கருணையும், ஜீவகாருண்யமும் உள்ளடக்கம்.
இந்து மதம் அறுவகை
சமயங்களாகப் பிளவு பட்டு சைவம், வைணவம், சாக்தம், சௌரம், கௌமாரம்,
காணாபத்யம் என்று பிரிந்து கிடந்ததை ஒன்றாக்கினார் ஆதிசங்கரர். ஆதிசங்கரர் வலியுறுத்திய
அத்வைத சிந்தனையான “இரண்டல்ல” என்ற சிந்தனையும் சைவ சித்தாந்தத்தின் தெளிவையும், வேதாந்தத்தின்
பிழிவும் சுத்த சன்மார்க்கத்தில் இடம்பிடித்துக் கொண்டுள்ளது.
இத்தகைய சமய, மத
நெறிகளின் சாரங்களை உள்வாங்கிய ஒரு புதிய வழிமுறையாக வாழ்வியல் தத்துவமாகச் சமயம்,
மதம், கடந்து விளங்கும் அறிவு வழிப்பட்ட அன்பு வழிப்பட்ட, நெறிகளின் தொகுப்பே சுத்தசன்மார்க்கம்.
இத்தகைய சுத்த
சன்மார்க்கத்தில் பெரியாரின் மனிதநேயச் சிந்தனைகளுக்கும்,மூடநம்பிக்கை எதிர்ப்புக்கும்,
பகுத்தறிவுக்கும் இடமுண்டு. வள்ளலாரின் தாக்கம் வள்ளலாருக்கு பிறகு வந்த கவிஞர்களுக்கும்
இருந்ததை மறுக்க இயலாது.
“ஆயிரந் தெய்வங்களுண்டென்று
தேடி
அலையுமறிவிலிகாள் – பல்
லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?”
என்று பல கடவுள்
வணக்கத்தைப் பாரதி சாடுகிறார்.
“சுத்த அறிவே சிவம்” என்று உரக்கக் கூறினார் பாரதி.
“தெய்வம் பலபலச் சொல்லிப்
– பகைத்
தீயை வளர்ப்பவர் மூடர்
உய்வதனைத்திலும் ஒன்றாய்
– எங்கும்
ஓர் பொருளானது தெய்வம்”
என்று பாடி வள்ளலாரின்
வாரிசாகவே பாரதி திகழ்ந்தான் என்கிறார் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம். எங்கும் எதிலும்
சிவத்தைக் காண்பர் சுத்த சன்மார்க்கியர். அதன் விளக்கம் பாரதி பாட்டில் ஒலிக்கிறது.
“காக்கைச் சிறகினிலே நந்தலாலா!
நின்றன்
கரியநிறத் தோன்றுதையே நந்தலாலா!
பார்க்கும் மரங்களெல்லாம்
நந்தலாலா! நின்றன்
பச்சை நிறந்தோன்றுதையே நந்தலாலா!
என்று காக்கையின்
சிறகிலும், பச்சை மரங்களிலும் இறைமையைத் தரிசித்தவர் பாரதி.
பாரதிக்குப் பின்வந்த
பாரதிதாசனும் கடுமையாகச் சன்மார்க்கக் கருத்துகளைப் பாடுகிறார்.
“தமிழொளியை மதங்களில் சாய்க்காமை வேண்டும்”
“ஒரு கடவுள் உண்டென்போம்
உருவ வழி ஒழிப்போம்”
என்றும் பாடியவன்
சீர்திருத்தச் சிந்தனைகளையும் வள்ளலார் வழியில் விதைக்கத் தவறவில்லை.
“மூடத்தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு, மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!”
“வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டாத விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!”
“புண்ணிற் சரம்விடுக்கும் பொய் மதத்தின் கூட்டத்தைக்
கண்ணிற் கனல் சிந்திக் கட்டழிக்க வந்தவளே!”
என்று வள்ளலாரின்
சித்தாந்தத்தை வழிமொழிகிறார் பாவேந்தன்.
இந்து சமயத்தில்
சீர்திருத்தம் பலகண்ட சுவாமி விவேகானந்தர் கூட சன்மார்க்கச் சிந்தனைகளைத் தன் பேச்சில்
காட்டிச் சென்றுள்ளார்.
இதோ அவருடைய பொன்மொழிகள்
சில….
“தூய்மையாக இருப்பதும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதும்தான் எல்லா
வழிபாடுகளின் சாரமாகும். ஏழைகளிடமும் பலவீனர்களிடமும், நோயாளிகளிடமும் சிவபெருமானைக்
காண்பவனே உண்மையில் சிவபெருமானை வழிபடுகிறான். சிவபெருமானை விக்கிரகத்தில் மட்டும்
காண்பவனுடைய வழிபாடு ஆரம்ப நிலையில் தான் இருக்கிறது.
“கடவுள் ஒவ்வொறு ஜீவனிலும் குடி கொண்டிருக்கிறார். இதைத் தவிரத்
தனியாக வேறு ஒரு கடவுள் இல்லை. இந்த உண்மையை எவ்வளவோ தவங்களுக்குப் பிறகு நான் புரிந்து
கொண்டிருக்கிறேன். மக்களுக்கு சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்கு சேவை செய்பவன் ஆகிறான்.”
இப்படி வள்ளலாருக்கு பிறகு வந்த விவேகானந்தர் காட்டியுள்ள சீர்திருத்தங்களை
19ம் நூற்றாண்டில் மிக மிகத் தெளிவாகவும் விரிவாகவும், துணிவுடனும் சொன்னவர் வள்ளலார்.
ஆன்மிகவாதிகளின்
சீர்திருத்தத்தோடு, கார்ல்மார்க்ஸ், தந்தை பெரியார் போன்ற நாத்திகவாதிகளின், சிந்தனையாளர்களின்,
புரட்சியாளர்களின் சீர்திருத்தங்களையும் கொண்டு திகழ்வதே வள்ளலாரின் சன்மார்க்கம்.
வள்ளலாரியத்தைப்
பிரித்தால் வருவது, காந்தியமும், கம்யூனிசமும், பெரியாரிசமும் என்பது உண்மையே. வள்ளலாருக்கு
பின்பு வந்த மகாத்மா காந்தி வள்ளலாரின் அடுத்த அவதாரம் என்ற சன்மார்க்கியர்கள் உண்டு.
அஹிம்சையும், சத்தியத்தையும் கடவுளாகக் காட்டிய காந்தியடிகள் வள்ளலாரின் ஜீவகாருண்ய
ஒழுக்கத்தில் நின்று வாழ்ந்து காட்டியவர்.
காந்தியத்தின்
அன்பும், அஹிம்சையும், கம்யூனிசத்தின் சமதர்மமும், பெரியாரிசத்தின் மூடநம்பிக்கை ஒழிப்பும்
வள்ளலாரிடம் உண்டு. காந்தியம் 19ம் நூற்றாண்டில் வள்ளலாரின் வழி வெளிப்பட்டு இருக்கிறது.
கார்ல்மார்க்ஸ் வாழ்ந்த காலமும் வள்ளலார் வாழ்ந்த காலமும் ஒன்றே. வள்ளலாரின் மதக் கண்டனங்கள்
ஜெர்மனியிலும், லண்டனிலும் வாழ்ந்த மார்க்ஸின் வாயிலாக வெளிவந்துள்ளன.
அத்தோடு சுயமரியாதை
இயக்கத்தின் முன்னோடியாகச் சுத்த சன்மார்க்கம் விளங்கியுள்ளது. வள்ளலார் காட்டியுள்ள
சன்மார்க்கத்தின் நீட்சியே சுயமரியாதை இயக்கம் எனில் அதில் மிகையில்லை. இக்கருத்தை
வள்ளலாரின் அருட்பாவிலும், பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனையிலும் தோய்ந்த சாமி.சிதம்பரனார்
போன்றவர்கள் நூல்களின் வாயிலாக நிறுவிச் சென்றுள்ளார்.
வள்ளலாரும், தந்தை
பெரியாரும் காட்டும் மதம், சமயம், தவிர்த்த மனிதநேயம் இன்றைய மிக அவசியமான ஒன்றாகும்.
நாட்டில் எங்கு பார்த்தாலும் குண்டு வெடிப்புகள், வன்முறைகள், தீவைப்பு சம்பவங்கள்
இவைகள் மதங்களைக் காக்க மனிதர்கள் செய்யும் வெறிச்செயல்கள். மதங்கள் மனிதர்களை நல்வழிப்படுத்தவே
ஏற்படுத்தப்பட்டன என்பதை மறந்து மனிதர் செய்யும் காட்டுமிராண்டித்தனமான செயல்கள் அழிய
வேண்டுமானால் வள்ளலாரின் கொள்கையும், பெரியாரின் கொள்கையும் நாட்டில் வேர்விட்டு வளர
வேண்டும்.
மனித சமுதாயத்தையே
ஒட்டுமொத்தமாக வன்முறையால் அழிந்த பின்பு இங்கு எந்த மதமும் கடவுளும் வாழப்போகிறது
என்று புரியவில்லை. இன்றைய சூழ்நிலையில் மானுட சமுதாயம் ஒன்றுபட்டு அன்பைப் பகிர்ந்து
கொண்டு வாழவேண்டும்.
வள்ளலாரின் சுத்தசன்மார்க்க
அன்பர்கள் இன்று உலகெங்கும் வாழ்ந்து வருகின்றனர். அசைவ உணவுப்பழக்கம் அதிகம் கொண்ட
அமெரிக்கா, ஐரோப்பா கண்டங்களில் கூட கணிசமான அளவு வள்ளலார் பக்தர்கள் வாழ்ந்து கொண்டுள்ளார்கள்.
குண்டுகளின் கோரத்தாண்டவத்தில் நாளும் தவிக்கும் இலங்கையிலும் சன்மார்க்க அன்பர்கள்
ஜீவகாருண்யத்தை வலியுறுத்தி வருகின்றனர்.
இன்றைய அரசியல்வாதிகளும்,
ஆன்மிகவாதிகளும் தங்கள் மேற்கோளுக்கு வள்ளலாரின் அருட்பாவைச் சொல்லி வருகின்றனர். சுத்தசன்மார்க்கம்
வளர்ந்து வரும் காலகட்டம் இது. இது ஒன்றே அகில உலக சகோதரத்துவத்தையும், ஆன்ம நேய ஒருமைப்பாட்டையும்
வலியுறுத்தும் மார்க்கம் ஆகும். பெரியாரின் ஆசைகள் வள்ளலாரின் வழியாக அவருக்கு முன்னரே
அருட்பாவின் வாயிலாக வெளிப்பட்டுள்ளன.
கீழ்க்கண்ட பெரியாரின்
பொன்மொழிகளில் பல வள்ளலாரின் வழியில் ஒலிப்பதை உணருங்கள்.
“மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு”
“பகுத்தறிவு நெறியே பண்பட்ட நெறி”
“விதியை நம்பி மதியை இழக்காதே”
“கல்வியும் அறிவும் பெறுவது மனிதம் மற்றவர்க்குத் தொல்லை கொடுக்காமல்
மனிதத் தன்மையோடு வாழவே”
“மாணவர்களை ஆசிரியர்கள் மதவாதிகளாக ஆக்கக் கூடாது”
“பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு அளவுக்கு மீறிய நாணயமும் கட்டுப்பாடும்,
உறுதியும், தியாக உணர்வும் வேண்டும்”
(கருணை
இல்லாத அரசதிகாரிகளை, கொடுமைக்குணம் கொண்ட சிற்றதிகாரக் கேடர்களை, பொய்யன்றி, உண்மை
சொல்லாதவர்களைக் கண்டபோதெல்லாம் பயந்ததாக வள்ளலார் அருட்பாவில் பாடுகிறார்)
“பகுத்தறிவின் எல்லை பொதுவுடமையாகும்”
(எதிலும்
ஒரு பொது நோக்கம் வேண்டும் என்பது வள்ளலார் விழைவு)
“பிறருக்குத் தொல்லை தராத வாழ்வே ஒழுக்க வாழ்வு”
“பிறக்கும் போது மனிதன் சாதி அடையாளத்தோடு பிறப்பதில்லை”
“திண்டாமை ஒழிய சாதி ஒழிய வேண்டும்”
“பெண்கள் மனிதனுக்கு சொத்தல்ல”
“சமூகநீதி பெறச் சமுதாயப்புரட்சி தேவை”
“மனிதத்தன்மையைக் காப்பதே என் வாழ்நாள் பணி”
“மூடநம்பிக்கையும் குருட்டுப் பழக்கமும் சமூகத்தின் முதல் பகைகள்”
“மக்களின் ஒழுக்கத்தையும் மதியையும் கெடுப்பது மது”
“களியர் எனக்களிக்கின்றீர், கருத்திருந்தும்
கருதீர்” என்று கள்ளுண்ணும் களியரைச் சாடிப் பல இடங்களில் வள்ளலார் பாடுகிறார்.
“புகைக்குடி, கஞ்சாக்குடி, முதலிய
கூடா ஒழுக்கங்கள்
மரணத்துக்கு தள்ளும் என்பது வள்ளலாரின்
கூற்று”
“பக்தி இல்லாவிட்டால் இழப்பு இல்லை. ஒழுக்கம் இல்லாவிட்டால் எல்லாமே
பாழ்”
(எல்லா
உயிர்களிடத்தும் கடவுள் வியாபித்திருத்தலை அறிதலே ஈசுவர பக்தியாகும் என்று சொல்லும்
வள்ளலார் நான்கு வகை ஒழுக்கங்களைக் கூறுவதையும் முன்பு கண்டோம்)
“பல பகுத்தறிவு மணிகளால் ஆன அறிவுக் களஞ்சியம் திருக்குறள்”
“ஒழுக்கக் குறைவுக்கும் மூட நம்பிக்கைக்கும் எப்படிப்பட்ட கலையும்
பயன்பட்டுவிடக் கூடாது”
“எண்ணங்களை வெளியிட எவருக்கும் உரிமை உண்டு. அதைத் தடுக்க எவருக்கும்
உரிமை இல்லை”
இப்படி வள்ளலார்
காண விழைந்த சமுதாயத்தை பெரியார் தனது முழக்கங்களாகக் முன்னிறுத்துகிறார்.
இப்படி பெரியாரிடத்தில் வள்ளலாரையும், வள்ளலாரிடத்தில்
பெரியாரையும் காணும் நாம் அவ்விரு பெரியாரின் வழிகளில் வாழ்வை நடத்துவது எதிர்காலத்துக்கு
உகந்ததாகும்.
மனிதனிடத்துக்
கடவுள் தன்மை வரவேண்டும்.
கடவுள்
தன்மை இல்லாதவன் எத்தனைக் கடவுளை வணங்கினாலும் அவன் நாத்திகவாதியே என்பது என் எண்ணமாகும்.
மனசாட்சியின்படி பிறருக்குத் துன்பம் இழைக்காமல் வாழ்பவனின் இதயம் கடவுள் குடியிருக்கும்
கோயிலாகும்.
மனம் நல்வழியில்
சென்றால் மதங்களைப் பற்றிய கவலை மனிதனுக்கு அவசியமில்லை.
மனிதனை
மனிதன் மதித்து வாழ்ந்தால் அவன் உண்மையான மனிதன். பிற உயிரையும் மதித்து வாழ்பவன் புனிதன்.
பிற உயிர்களிடத்தில் கடவுளைக் காண்பவன் ஞானி. தன்னில் கடவுளைக் கண்டவன் ஞானி. பெரியார்
கடவுளைப் பற்றிக் கவலைகொள்ளாத ஞானி. வள்ளலார் உயிரையெ கடவுளாகக் கண்ட ஞானி. இருவரின்
சமரசக் கொள்கைகளும் ஓங்கட்டும்.
மனித நேயம்
தழைக்கட்டும்
ஆன்மநேயம்
துளிர்விடட்டும்
“உலகினில் உயிர்களுக்கு உறும்
இடையூறெலாம்
விலக நீ அடைந்து விலக்குக; மகிழ்க
சுத்த சன்மார்க்கச் சுகநிலை பெறுக
உத்தமன் ஆகுக ஓங்குக”
(வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல்)
“வாழ்க்கையில் உள்ள பேத நிலையே கவலைகளுக்கெல்லாம் மூலகாரணம், பேதநிலையை
அகற்றி ஒப்புறவு நிலை காண்பதே பகுத்தறிவாளர் கடமையும் பொறுப்பும் ஆகும்” – தந்தை பெரியார்.
வாழ்க வள்ளலாரியமும், பெரியாரியமும்!
வளர்க அவர்கள் தம் புகழ்!
அன்புருவாம் பரசிவமே!
மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு!
நன்றி! வணக்கம்!
இதைப்படிக்கும் நண்பர்கள் இந்த என்னுடைய “வள்ளலாரும் பெரியாரும்” என்ற இந்த முழுப்புத்தகத்தின்
சுட்டியை (url) மற்றய நண்பர்களுக்கும் கொடுத்து படிக்க சொல்ல வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
-டாக்டர். ஜெய.ராஜமூர்த்தி
இருவேறு கொள்கைகளும் ஒரே நோக்கத்தையும் கொண்ட ஆளுமைகள் குறித்த வள்ளலாரும் பெரியாரும் என்ற தலைப்பே உங்கள் மீது மரியாதை கொள்ளச் செய்கிறது. முழுதும் படித்துவிட்டு பின் வருகிறேன்.
ReplyDeleteபல ஒப்பீட்டுப் புத்தகங்களைப் படித்துள்ளேன். இருப்பினும் இந்த ஒப்பீடு என்பது ஒரு வித்யாசமானது. ஒரேத்துறையில் இருப்பவர்களை ஒப்பிட்டு தான் பல புத்தகங்களும் வந்துள்ளன. அந்த குறிப்பிட்டத் துறையில் இவர் எப்படி, அவர் எப்படி அந்த இருவரையும் இணைக்கும் புள்ளி எது? என ஒப்பிடுவது மரபு. அது சுலபமும் கூட. ஆனால் இரு வேறு துருவங்கள் பற்றிய ஒப்பீடு இது. இருவரும் எங்கே இணைகின்றார்கள் என்பதை ஒரு ஆய்வாக தருகின்றது நூல். பல புது விஷயங்கள் நான் அறிந்து கொண்டேன் என்றே கூட சொல்லலாம். எழுத நிறைய இருக்கின்றது. பின்னர் எழுதுகின்றேன். அருமையான புத்தகம்!
ReplyDeleteAmazing Sir, its contents shows your hard-work and knowledge you obtained through it. Simply Great!!
ReplyDelete