புனிதர் வள்ளலாரின் புரட்சிப்பாதை
நூலின் பெயர் :புனிதர் வள்ளலாரின்
புரட்சிப்பாதை
ஆசிரியர் : டாக்டர்.
ஜெய.இராஜமூர்த்தி, M.B.,B.S.,D.C.H.,
மொழி :
தமிழ்
பதிப்பு
: டிசம்பர் 2008
பக்கங்கள் : 181
உரிமை : ஆசிரியருக்கு
அச்சிட்டோர் : சக்தி கிராபிக்ஸ்
ஆப்செட் : மணலூர் – 608 602, சிதம்பரம்
தொலைபேசி: 30278
வெளியிட்டோர்: தமிழருவி பதிப்பகம்
பழைய எண் 35, புதிய எண் 21
சாதுல்லா தெரு, தி.நகர்
சென்னை - 17
***
காணிக்கை
திரு. சா. ஜெயராமன், M.A.,B.Ed.,
ஓய்வு பெற்ற
தலைமை ஆசிரியர்
திருவெண்காடு
அன்னையை சிறிய வயதில் நான் இழந்தாலும் தன்
ஈடில்லா அன்பால் அந்த இடத்தையும் நிறைவு
செய்தவர்
தொட்டு அடிக்காமலேயே என்னைத்
தொலைநோக்குப் பார்வைக்குத் தூண்டிவிட்டவர்
கடுஞ்சொற்கள் கூறாமலேயே என்
கவனங்களுக்குக் கடிவாளம் போட்டவர்
குழந்தை மனமும், குதூகலச் சிரிப்பும்
இவரது உடன்பிறந்த குணாதிசயங்கள்
எவரையும் கவர்ந்திழுக்கும் இனிய பண்பாளர்
இவரை நான் தந்தையாக பெற்றது
இறைவன் திருவருளே என்றால் மிகையில்லை
எனது இனிய நண்பராகத் திகழும்
அருமைத் தந்தையாருக்கு இந்நூலைக்
காணிக்கையாக்கி மகிழ்கின்றேன்!
-
டாக்டர் ஜெய.இராஜமூர்த்தி
என்னுரை
வள்ளல்நேசன்
டாக்டர்.ஜெய.இராஜமூர்த்தி. M.B.,B.S.,D.C.H.,
(அரசு மருத்துவர் - குழந்தை நல மருத்துவர்),
செயலாளர்: திருவருட்பிரகாச
வள்ளலார் மன்றம்,
திருவெண்காடு.
அருட்பெருஞ்சோதி!
அருட்பெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை!
அருட்பெருஞ்சோதி!!
“அன்புருவாம் பரசிவமே”
திருவெண்காடு அரசு
ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவராகப் பணிபுரியும் எனக்குப் பிறந்த ஊரும், வளர்ந்த
ஊரும், வாழும் ஊரும் திருவெண்காடே. எனக்கு தமிழ் மீதும் வள்ளற்பெருமான் வடலூர் ஐயா
மீதும் ஏற்பட்ட அளவு கடந்த காதலின் வெளிப்பாடே இச்சிறு நூல்.
வடலூர் வள்ளலாரைப்
பற்றி எத்தனையோ தமிழறிஞர்கள் முனைவர் பட்டத்திற்காக ஆய்வு செய்து தங்கள் ஆய்வினை நூலாக்கி
தந்துள்ளார்கள். பல சன்மார்க்க அன்பர்கள் நூற்றுக்கணக்கில் நூல்களை எழுதி அச்சிட்டு
உள்ளனர். என் உள்ளத்தை வள்ளலாரிடம் பறிகொடுத்த இந்த சிறியவனுக்கும் வள்ளலார் பற்றி
எளிமையாகப் பாமரர்களும் உணர்ந்து கொள்ளும் வண்ணம் ஒரு நூல் எழுத வேண்டும் என்ற ஆவல்
வந்தது. பலபேர் எழுதி ஆய்வு செய்துள்ளதை நானும் என் கருத்துகளோடு சேர்ந்து இந்த “புனிதர்
வள்ளலாரின் புரட்சிப் பாதை”என்ற நூலாக்கித் தந்துள்ளேன். 1997 ஆம் ஆண்டிற்கு பிறகே
எனக்கு வடலூர் ஐயா மீது ஈடுபாடு வந்தது.
வள்ளலார் பெருமானாரின்
தூய அறிவு வாழ்க்கையும், ஆழ்ந்த ஆன்மீக அறிவும், அளவு கடந்த உயிர் இரக்கமும் தேர்ந்த
தெளிந்த தமிழறிவும், பல மேல்நாட்டுச் சிந்தனையாளர்களையும் விஞ்சி நிற்கும் முற்போக்குச்
சிந்தனைகளும் என்னை அவரிடத்தில் ஐக்கியமாக்கக் காரணங்களாக இருந்தன.
வள்ளலார் நெறிகளை
ஒல்லும் வகையெல்லாம் எடுத்துச் சொல்வதையே என் வாழ்நாளில் ஒரு கடமையாக கொண்டு உள்ளேன்.
அதற்கான தகுதியும் திறமையும் எனக்கு இருக்கின்றதா என்பது பற்றிக் கவலை இல்லை. அதை நிச்சயம்
ஒரு நாள் வரவழைத்துக் கொள்வேன் என்ற நம்பிக்கை இருக்கிறது. இயேசு கிருஸ்துவைப் போல்,
முகமது நபியைப் போல், வள்ளுவரைப்போல் புகழின் உச்சிக்குச் செல்ல வேண்டிய வள்ளலார் அவரைப்
பற்றி தெளிவாக உலகத்தார் தெரிந்து கொள்ளாத காரணத்தால் அந்த நிலையை எட்டவில்லை என்றாலும்
உலகம் ஒரு நாள் வள்ளலாரையும் அவரது சமரசசுத்த சன்மார்க்கத்தையும் இனம் கண்டு கொள்ளும்.
வள்ளற்பெருமானின்
ஆழ்ந்த தமிழ்ப் புலமையையும், இலக்கண, இலக்கிய அறிவையும் கண்ட சிலர் தமிழ்ப் படித்து
தெரிந்து கொள்ள, இலக்கணம் கற்க அவரைச் சுற்றி வந்துள்ளனர். சித்த மருத்துவத்தில் வள்ளலார்
கைதேர்ந்தவர்.
பல தீர்க்க முடியாத
நோய்களைக்கூட (தொழுநோய் முதற்கொண்டு –) தொழுநோய்க்கு அப்போது மருந்து வரவில்லை. வள்ளலார்
மூலிகைகளினால் குணப்படுத்தி இருக்கிறார். ஆகவே சித்த மருத்துவத்தை அறிந்து கொள்ள ஒரு
கூட்டத்தார் அவரைச் சுற்றி வந்துள்ளனர். இரசவாதக் கலை என்னும் பொன் செய்யும் வித்தையை
அவரிடம் இருந்து தெரிந்து கொள்ள ஒரு கூட்டத்தார் அவரை சுற்றி வந்துள்ளனர். ஆனால் வள்ளலாரோ
“இச்சையற்றவர்களுக்கே இது கை கூடும்” என சொல்லி யாருக்கும் அது பற்றிச் சொல்லவில்லை.
இந்த கூட்டமெல்லாம்
வள்ளலார் சாதி, மதம், சமயங்களைக் கண்டித்து பேச ஆரம்பித்தவுடன் அவரை விட்டு விலகிச்
சென்றுவிட்டதாக வரலாறு கூறுகிறது. இவர்கள் எல்லாம் தங்கள் சுயநலத்துக்காக வள்ளலாரை
சுற்றிவந்தனரே அன்றி அவருடைய உயர்ந்த நெறிகளான ஆன்மநேய ஒருமைப்பாட்டையும், உலக சகோதரத்துவத்தையும்,
சமரச நோக்கையும் ஏற்றுக் கொள்ளவில்லை எனத் தெரிகிறது. வள்ளலார் மறைவிற்குப் பின் அவருடைய
முதன்மை சீடரான தொழுவூர் வேலாயுத முதலியாரும் சன்மார்க்கக் கொள்கைகளை பரப்புவதில் ஆர்வம்
காட்டாது சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்த்துறை பேராசிரியராக வேலைக்கு அமர்ந்து விடுகிறார்.
வள்ளலாருக்குப்பின்
சன்மார்க்கம் பரவுவதில் ஏற்பட்ட சிக்கல் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக நீங்கி வருகிறது.
நிறைய இளைஞர்கள் வள்ளலாரின் சுத்தசன்மார்க்கத்தை ஏற்று அவர் வழியில் நடக்க ஆரம்பித்துவிட்டனர்.
பல வெளி நாட்டவர்களும் சுத்த சன்மார்க்கிகளாக ஆகிவிட்டனர்.
“வஞ்சகர் அஞ்சினர் வாய் மூடி சென்றனர்
வந்து திரும்பவும் வாயிலில் நின்றனர்
தஞ்சம் எமக்கருள் சாமிநீ என்றனர்
சன்மார்க்க சங்கத்தவர்களே வென்றனர்”
– திருவருட்பா
வஞ்சகர் எல்லாம்
அஞ்சி ஓடிவிட்டதாகவும் வாய்மூஉடிக் கொண்டு விட்டதாகவும், சன்மார்க்கத்தில் திரும்பவும்
வந்து தஞ்சம் புகுந்தனர் என்றும் இறுதியில் சுத்த சன்மார்க்கமே வென்றது என்றும் வள்ளலார்
பாடுகிறார். இது ஒரு நாள் நிச்சயம் நிறைவேறும். உலகம் முழுதும் சுத்த சன்மார்க்கத்தை
தழுவினால் அன்றி அதனை அல்லலிலிருந்து எவரும் மீட்க இயலாது. சாதி, மதம், சமயம் இல்லாத
பொதுவுடமைச் சமுதாயம் மலரும் நாள் வெகுதொலைவில் இல்லை. சுத்த சன்மார்க்கத்தை வலியுறுத்தவே
இந்நூலை எழுதி உள்ளேன்.
இந்நூலை சிறந்த
முறையில் அச்சிட்டு உள்ள சிதம்பரம் மணலூர் அருட்சோதி கிராபிக்ஸ் ஆப்செட் அச்சகத்தாருக்கும்
மிகச்சிறப்பான முறையில் அணிந்துரை நல்கியுள்ள சன்மார்க்கியர், அருட்பாமணி, முனைவர்,
கோ.சீராமன்,M.A.,B.Lit.,T.D.,P.hd., அவர்களுக்கும் மனமார்ந்த நன்றியினை காணிக்கையாக்குகின்றேன்.
வாழ்த்துரை வழங்கியுள்ள
என் நண்பர்களாகிய வே.இராஜசெல்வம், சி.இரவிச்சந்திரன், ஆகியோருக்கும் என் நன்றிகளைத்
தெரிவித்துக் கொள்கின்றேன்.
சமரச சுத்த சன்மார்க்கம்
என்னும் திருமாளிகை எழுப்ப இந்நூல் ஒரு சிறுகல்லாகப் பயன்படுமேயானால் எனக்கு எல்லையற்ற
மகிழ்ச்சி.
அன்புடன்
டாக்டர். ஜெய.இராஜமூர்த்தி.
திருவெண்காடு.
– நாகை மாவட்டம்
உள்ளுறை
1. வள்ளலார்
வரவும் நோக்கமும்
2. வள்ளலாரின்
ஆன்ம நேய ஒருமைப்பாடு
3. துறவின்
இலக்கணம்
4. அருட்பெருஞ்சோதி!
அருட்பெருஞ்சோதி!!தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!
5. சாதி,
மதம், சமயம் தவிர்த்தல்
6. புலால்
தவிர்த்தல்
7. பசிப்பிணி
மருத்துவர்
8. யார்
இறைவன்?
9. முற்போக்குச்
சிந்தனைகளும் செயல்பாடுகளும்
10. தேன்
எனத் தித்திக்கும் திருவருட்பா
11. வளமான
வாழ்வுக்கு வள்ளலார் வழங்கும் வழிமுறைகள்
திரு அருட்பிரகாச
வள்ளலார் வரலாற்றுக் குறிப்புகள்
இயற்பெயர்: இராமலிங்கம்
சிறப்புப் பெயர்: திருவருட்பிரகாச வள்ளலார்
பிறப்பு: 5.10.1823, புரட்டாசி 21, ஞாயிற்றுக்
கிழமை
பிறந்த ஊர்: மருதூர்(வடலூரில் இருந்து தென் 10
கி.மீ)
தந்தை: இராமையா – ஊர் கணக்கர்
தாய்: சின்னம்மை – எளிய வேளாளர் குடும்பம்
வாழ்ந்த இடங்கள்: பொன்னேரி,சென்னை,சிதம்பரம்,கருங்குழி,வடலூர்,
மேட்டுக்குப்பம்
கல்வி: ஓதாமல் உணர்ந்த கல்வி
இயற்றிய நூல்கள்: “சீவகாருண்ய ஒழுக்கம்”,”மனுமுறை கண்ட வாசகம்”,
“திருவருட்பா”, 6000 பாடல்கள்
6 – திருமுறைகள்
பதிப்பித்த நூல்கள்: ஒழுவிலொடுக்கம், தொண்டைமண்டல சதகம்,
சின்மய தீபிகை
துணைவியார்: தனக்கோடியம்மாள்
வாழ்ந்த காலம்: 1823 முதல் 1874 வரை 51 ஆண்டுகள்
சித்தி பெற்ற
இடம்,நாள்: சித்திவளாகம், 30.1.1874
ஸ்ரீமுக ஆண்டு தை 10, வெள்ளிக்கிழமை,
தைபூச நன்னாள், நள்ளிரவு 12 மணியளவில்
சிறிய
அறையில் திருக்காப்பிட்டுக் கொண்டு
சித்தி.
போதித்த அருள்
நெறிகள்: 1.கடவுள் ஒருவரே அவர் அருட்பெருஞ்சோதியர்.
2. சாதி,சமய,மத வேறுபாடு சிறிதும்
கூடாது.
3.மது,மாமிசம் உண்ணாதிருத்தல்
வேண்டும்
4.ஏழைகளின் பசி தவிர்த்தலாகிய
ஜீவகாருண்யமே
அன்புருவான இறைவனை அடையும் வழி.
5.உயிர்க்குலம் அனைத்தையும் அரவணைக்கும்
ஆன்மநேய ஒருமைப்பாட்டைக் கடைபிடிக்க
வேண்டும்.
6.தெய்வங்களின் பெயரால் உயிர்ப்பலி
கூடாது.
7.சிறுதெய்வ வழிபாடு தேவையில்லை.
8.ஆகமம் புராணம், வேதம், இதிகாசங்கள்
இவைகளில் இலட்சியம் வைக்க வேண்டாம்.
9.உயிர் இரக்கமே உண்மையான பிரார்தனை
ஆகும்
10.எல்லா உயிர்களும் இன்புற்று
வாழ்க.
நிறுவிய நிலையங்கள்: 1.சமரசசுத்த சன்மார்க்க சத்திய சங்கம் – 1865
2.சத்திய
தருமச்சாலை (23.5.1867) இன்றும் பசித்தவர்களுக்கு 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வருகிறது
3.சத்திய
ஞானசபை ( 25.1.1872) ஒளி வழிபாடு செய்ய
4.சித்திவளாகம்
– மேட்டுக்குப்பம்( 1870) இறுதிக்காலத்தில் வாழ்ந்த இடம்.
சன்மார்க்க சங்கத்திற்கென
மேற்பகுதி மஞ்சளும், கீழ்ப்பகுதி வெண்மையும் கொண்ட தனிக்கொடியை கண்டவர்.
வழங்கி அருளிய
மகாமந்திரம்:
அருட்பெருஞ்சோதி!
அருட்பெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை!
அருட்பெருஞ்சோதி!!
வள்ளலார் வரவும் நோக்கமும்
(அத்யாயம் 1)
உலக நாடுகளுக்கிடையே
நம்முடைய பாரத பூமி என்றைக்கும் ஆன்மீகம் தழைத்து ஓங்கும் புண்ணிய பூமி. நம்முடைய பாரதத்தில்
தண்டமிழ்நாடு என்று போற்றப்படும் வடவேங்கடம் முதல் தென்குமரி வரை உள்ள தமிழ் கூறும்
நல்லுலகம் பல அருளாளர்களை, சிந்தனையாளர்களை, சீர்திருத்தவாதிகளை, சித்தர்களை அவ்வப்போது
ஈன்று பெருமை பெற்றுள்ளது. திருமூலர் தோன்றி திருவள்ளுவர், பட்டினத்தடிகள், மாணிக்கவாசகர்,
தாயுமானவர் பின்பு வள்ளலார் என்று அந்த வரிசை நீண்டு கொண்டுள்ளது.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு
முன்பு உலகப்பொதுமறையாம் திருக்குறளைத் தந்த திருவள்ளுவரைப் பெற்ற போது தமிழகம் என்ன
பேரும் பெருமையும் பெற்றதோ அதே பெருமையையும் பேற்றையும் நம்முடைய திருவருட்பிரகாச வள்ளலாரை
வருவித்தபோது பெற்றது.
வள்ளலார் அருளாளர்கள்
வரிசையில் உதித்த பேரருளாளர். தொடக்கத்தில் சைவசமயத்தில் ஆழ்ந்த பற்றை வைத்து சைவத்தைப்போற்றி
நின்ற வள்ளலார் இறுதி நாட்களில் சமயம் என்ற கட்டுப்பாட்டை களையை அறுத்தெறிந்து விட்டு
வெளியே வந்து அகில அண்டத்தையும் தழுவிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டை முழங்கினார்.
மனிதன் மனிதனாக
வாழ்வது மட்டுமின்றி மனிதனும் இறைநிலையை அடைய வேண்டும் தன்னைப் போல் என்று வலியுறுத்தினார்.
கருணையால், அன்பால், இரக்கத்தால், அருளால் மனித மனம் பண்பட பண்பட அது மெருகேறுகிறது.
ஓரறிவு உயிரையும் மனிதன் தன்னைப்போல் மதித்து இறைவன் உறையும் ஆலயமாகக் கருதினால் மற்ற
உயிர்களுக்கும் நமக்கும் இடையே உருவாகும் பாகுபாடு அற்றுப் போய்விடுகிறது. அப்போது
மனிதனே “சுத்தசிவம்” என்று வழங்கப்படும் அருட்பெருஞ்சோதியாகிறான். அப்படி அருட்பெருஞ்சோதியானவரே
வடலூர் ஐயா வள்ளற்பெருமான்.
“சிவமே பொருளென்று தேற்றி
எனை சிவவெளிக்கேறும் சிகரத்தில்
ஏற்றி
சிவமாக்கிக் கொண்டது பாரீர்”
– திருஅருட்பா
“சிவமாக்கிக் கொண்டான் என்று ஊதூது
சங்கே
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே”
– திரு அருட்பா
மேலும் சிவம் என்பது
கருணையே என்னும் பொருளில் வள்ளலார் பாடுகிறார்.
“கருணையும் சிவமே பொருள் எனக்
காணும்
காட்சியும் பெறுக மற்றெல்லாம்
மருள்நெறி என நீ எனக்கறிவித்த
வண்ணமே
பெற்றிருக்கின்றேன்” – திரு அருட்பா
மேற்கண்ட அருட்பாக்களில்
வள்ளற்பெருமானார் கருணையே வடிவமான சிவமாகத் தான் ஆனதை வெளிப்படுத்துகிறார்.
புரட்சித் துறவி
மூட நம்பிக்கைகளை
எதிர்த்து, சமயச் சடங்குகளை சம்பிரதாயங்களைச் சாடி, போலித்தனமான ஆடம்பர வழிபாட்டு முறைகளைத்
தவிர்க்கச் சொல்லிப் பல முற்போக்குச் சிந்தனையான கருத்துகளை முழங்கியதால் எதிர்கால
உலகம் தன்னை அருளாளர்கள் வரிசையில் வைத்து எண்ணத் தவறிவிடுமோ என்று அவரே பின்வருமாறு
பாடுகின்றார்.
“வாழையடி வாழையென வந்திருக்கூட்ட
மரபினில் யானொருவன் அன்றோ”
வாழையடி வாழையெனத்
தோன்றிய அருளாளர்கள் வரிசையில் வள்ளற்பெருமானும் ஒருவர் என்றாலும் மற்ற அருளாளர்களுடன்
இவரை ஒப்பிட்டுப்பார்க்கும் போது வேறுபடுகின்றார். உயர்ந்து நிற்கின்றார். புதுயுகம்
காண விழைந்த புரட்சித் துறவியாகப் பரிமளிக்கின்றார்.
வள்ளலார் பிறந்த
ஆண்டு 1823. பிறந்ததிலிருந்து ஒன்பது ஆண்டுகள் வரை குழவிப்பருவத்தை கழித்ததுடன் 9ம்
வயது முதலே தான் இறைவனால் ஆட்கொள்ளப்பட்டார். அதற்கு அகச்சான்றுகளாக உள்ள அருட்பா வரிகள்
“என்னை ஆண்டாறு மூன்றாண்டில்
ஆண்டு கொண்ட அருட்கடலே”
“ஆறொடு மூன்றாண்டாவதிலே முன்னென்னை
ஆண்டாய்”
மனிதர்களிடையே
அணுவளவும் ஏற்றத்தாழ்வில்லாத சமரசத்தையும், அகில உலக சகோதரத்துவத்தையும் ஓரிறைக் கொள்கையையும்
வள்ளற்பெருமான் வலியுறுத்திய போது சமயவெறி சாதிவெறி பிடித்த சனாதனிகளால் வள்ளலார் தான்
வாழ்ந்த காலத்தில் பலத்த எதிர்ப்புகளைச் சந்தித்து உள்ளார்.
தமிழ் வளர்த்த
செம்மலை, சீவகாருண்ய சீலரை, கருணையே வடிவான கருணாநிதியை, தயவைக் கொண்டு தரணி வெற்ற
தயாநிதியை, அருட்பெருஞ்சோதி ஆண்டவரின் அன்புப்பிள்ளையை, வாடிய பயிரைக் கண்டு வாடிய
வள்ளலை நம் திருவருட்பிரகாச வள்ளலாரை சிலரது தூண்டுதல் பேரில் யாழ்ப்பாணம் ஆறுமுகநாவலர்
போன்ற தமிழ் அறிஞர்களே நீதிமன்றத்துக்கு இழுத்துக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்திய
கொடுமையை வரலாறு மன்னிக்காது. ஆனாலும் அந்த நிகழ்வுகள் எல்லாம் பெருமானாரின் புகழை
மேலும் உயர்த்தியதே அன்றிக் குறைக்கவில்லை.
“படமுடியாது இனித்துயரம் படமுடியாது
அரசே
பட்டதெல்லாம் போதும்” என்றும்
“பன்னிரெண்டாண்டு தொடங்கி இற்றைப்
பகலின் வரையுமே
படியில் பட்ட பாட்டை நினைக்கில்
கல்லும் கரையுமே”
என்று அவர் பாடியுள்ளதை
படிக்கின்றபோது அவர் பட்ட துயரங்களை நாம் உணர முடிகிறது.
வள்ளற்பெருமானார்
வாழ்ந்த காலத்திலேதான் வடக்கே ராமகிருஷ்ண பரமஹம்சரும், உடன்கட்டை ஏறுதல் என்ற கொடிய
வழக்கத்தை எதிர்த்து நின்று போராடி வெற்றிகண்ட ராஜாராம் மோகன்ராய் என்ற சீர்திருத்தவாதியும்
ஆரிய சமாஜம் கண்ட தயானந்த சரஸ்வதியும் வாழ்ந்தார்கள்.
மூட நம்பிக்கைகளை
ஒழித்ததில், முற்போக்குக் கருத்துகளை முழங்கியதில் ஆன்மீகத்தின் அடிமுடி வரை கண்டு
அருளியல் வாழ்வியல், உலகியலென்று அனைத்து நிலைகளிலும் தத்துவங்களை சரமாரியாக முகிழ்த்த
நம் வள்ளலாரை மேற்கண்ட ஞானிகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது எந்த நிலையிலும் இளைத்தவர்
அல்லர். வள்ளற்பெருமானாரின் ஆன்மீகம் அறிவியல் சிந்தனைகளை உள்ளடக்கியது. விஞ்ஞானத்தை
அடிப்படையாகக் கொண்டது.
ஆனாலும் வடக்கே
தோன்றிய அந்த ஞானிகளுக்குப்பின் அந்த இயக்கங்கள் வளர்ந்தன. இன்று ராமகிருஷ்ணரின் மடங்கள்
நாடெங்கிலும் அவரது கொள்கைகளை போதனைகளை முழங்கி வருகிறது. பகவான் ராமகிருஷ்ணருக்குக்
கிடைத்த சுவாமி விவேகானந்தரைப் போன்ற துடிப்புள்ள, துணிவுள்ள ஆழ்ந்த ஆன்மீக அறிவுள்ள
சீடர் வள்ளலாருக்கு கிடைக்காததும் சரிவர பரவாததற்கு காரணம்.
வள்ளலார் தான்
ஆரம்பித்த சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கத்தில் சேர்பவர்களுக்குச் சில வரைமுறைகளை
தகுதிகளை வரையறுத்துத் தந்திருந்தார். தன்னைப் போல் பிற உயிர்களை மதிக்கக் கூடியவர்களாகவும்,
சாதி, மதம், சமயம் தவிர்த்தவர்களாகவும், சீவகாருண்ய சிந்தனையும், ஆழ்ந்த இறைநம்பிக்கை
உள்ளவர்களாகவும், கொலை, புலை தவிர்த்தவர்களாகவும் சன்மார்க்க சங்கத்தார் திகழ வேண்டும்
என வள்ளலார் விழைந்தார்.
சுத்த சன்மார்க்க
நெறிகளை பரப்ப முற்படும் சன்மார்க்கிகள் ஒழுக்கத்தில் தன்னைப்போன்றே விளங்க வேண்டும்
என எண்ணினார். அதனால்தான் நானே “சன்மார்க்கம் நடத்துகின்றேன்” என்றார் வள்ளலார்.
ஆனால் அவர் அளவுக்குத்
தூய ஒழுக்கமும், சிவசிந்தனையும் கொண்டவர்களாக அவருக்கு பின்னால் இருந்தவர்கள் விளங்கினார்களார்
என்றால் ஐயமே. வள்ளலார் வாழ்ந்தபோதே ஒழுக்கக்கேடான விஷயங்களில் ஈடுபட்டதையும் அதைக்கண்டித்து
வள்ளலார் சுற்றறிக்கை விட்டதையும் அதற்கு ஆதாரமாக நாம் காணமுடிகின்றது.
இன்றைய உலகம் நம்
வள்ளலாரை நன்றாக உணர்த்துகிறது. இனி சமரச சுத்த சன்மார்க்கம் உலகெங்கிலும் பரவினால்
அன்றி உலகம் அமைதியைக் காணமுடியாது என்பது வெட்டவெளிச்சமாகி விட்டது. இரண்டு நாடுகளுக்கு
இடையே போர் மூளுவதற்கு மதவாதம் அடிப்படைக் காரணம் ஆகிவிட்டது நாம் அறிந்ததே. இன்று
அமரிக்காவிலும், தென் ஆப்பிரிக்காவிலும், இங்கிலாந்திலும், சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து,
போன்ற நாடுகளிலும் வள்ளலாருக்குப் பக்தர்கள் உள்ளனர். அவர்கள் புலால் உணவைக்கூட தவிர்த்து
வாழ்கிறார்கள் என எண்ணும் போது அது வள்ளலாருக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றியே. இனி
உலகம் முழுவதும் சுத்த சன்மார்க்கத்தைத் தழுவினால் அன்றி இன்றைக்கு ஏற்படும் பல உயிர்ப்பலிகளை
யாராலும் தடுக்க இயலாது என்பது கண்கூடு.
வள்ளலார் இந்த
உலகத்திற்கு இறைவனால் வருவிக்க உற்றவர். இறைவன் தன்னுடைய எண்ணங்களை அவ்வப்போது அந்தந்தக்
காலகட்டத்தில் ஞானிகளை உருவாக்கி அவர்கள் வாயிலாகவே வெளிப்படுத்துவான். அந்த வகையில்
சாதி சமய பூசல்களால், வருணாசிரமக் கொடுவழக்கால்,பசிப்பிணி பற்றிய சமுதாயமாய் விளங்கிய
தென்னிந்தியாவின் தமிழகத்தில் ஒரு சிறிய கிராமமான மருதூர் என்னும் சிற்றூரில் ஒரு எளிய
குடும்பத்தில் தத்துவஞானி. ஆன்மீக விடிவெள்ளி வடலூர் ஐயாவை இறைவன் வருவிக்க செய்தார்.
வள்ளலார் தான்
எழுதிய அருட்பெருஞ்சோதி அகவலின் இறுதியில் பின்வருமாறு எழுதுகின்றார்.
“உலகினில் உயிர்களுக்குறும் இடையூரெலாம்
விலக நீ அடைந்து விலக்குக மிகிழ்க
சுத்த சன்மார்க்க சுகநிலை பெறுக
உத்தமனாகுக! ஓங்குக!
-
அருட்பெருஞ்சோதி அகவல்
இது தான் வள்ளலாரியத்தின்
சாரம். உலகினில் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும். அவைகளுக்குத் துன்பம்
ஏற்படின் நாம் சென்று விலக்க வேண்டும். அப்படி விலக்க வேண்டுமாயின் அதற்கு முன்பு இறைவன்
எல்லா உயிர்களுக்குள்ளும் ஒளிரும் ஆன்ம ஜோதியாக உள்ளான். அந்த ஆன்மஜோதியே நம்முள்ளும்
ஒளிர்கிறது என்பதை உணர வேண்டும். எப்போது நாம் நம் உயிரைப் போன்ற பிற உயிர்களை எண்ணுகின்றோமோ
அப்போதே சுத்த சன்மார்க்கிகள் ஆகின்றோம். அப்படிப்பட்ட சுத்த சன்மார்க்கிகளுக்கு இறப்பு
இல்லை.
சன்மார்க்கத்தின்
முடிவு சாகாதிருத்தலே. மரணபயம் இன்றி இருத்தலே. அவர்களுடைய உடம்பு நிலத்தில் விழாது.
அது சுத்த தேகம், பிரணவ தேகம், பெற்று இறுதியில் ஞானதேகமாகி இறைநிலை அடைந்து விளங்கும்.
அதுவே வள்ளலார் சொன்ன மரணமில்லா பெருவாழ்வு. அத்தகைய மரணமில்லா பெருவாழ்வு வாழ்ந்தவர்
வடலூர் வள்ளற்பெருமான்.
இந்த உலகம் சுத்த
சன்மார்க்கிகள் உலகம் ஆக வேண்டும். மதத்தால், சமயத்தால், பணத்தால், மொழியால், அறிவால்
என்று பல்வேறுபட்ட பாகுபாடுகள் இல்லாமல் அண்டங்கள் அனைத்தையும் தழுவிய ஆன்மநேய ஒருமைப்பாட்டைப்
பின்பற்றி வள்ளலார் வழியில் வாழவேண்டும். அதற்காகவே வருவிக்க உற்றவர் வள்ளலார்.
ஒரு அருட்பாவை
கூர்ந்து நோக்குவோம்.
“அகத்தே கறுத்துப் புறத்தே
வெளுத்திருந்த உலகர் அனைவரையும்
சகத்தே திருத்தி சன்மார்க்க
சங்கடத்தைவித்திட அவரும்
இகத்தே பரத்தைப் பெற்று
மகிழ்ந்திடுதற்கென்றே எனை இந்த
உலகத்தே இறைவன் வருவிக்க
உற்றேன் அருளைப் பெற்றேனே”
-
திருஅருட்பா
என்று வள்ளலார்
பாடுவதை கவனியுங்கள்!
மனிதர்களுக்குள்
ஒற்றுமை காணத்துடித்த ஞானிகளை நாம் கண்டிருக்கின்றோம். ஆனால் ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு
பெற்ற மனிதன் வரை உலகில் இருக்கும் அனைத்தையும் தழுவிய ஆன்மநேய ஒருமைப்பாட்டை உலகில்
முதன் முதல் அறிமுகப்படுத்திய ஒரே ஒப்பற்ற ஞானி வள்ளற்பெருமான் ஒருவரே.
வள்ளலாரின் ஆன்மநேய ஒருமைப்பாடு
(அத்தியாயம் 2)
மனித நேயம் என்பது
மனிதன் மற்ற மனிதர்களிடம் காட்டுகின்ற அன்பு. ஆன்ம நேயம் என்பது உயிர் உள்ள இனங்களின்
மேல் காட்டுகின்ற அன்பாகும். ஆன்மா என்பதற்கு உயிர் என்று பொருள். வள்ளலார் மனித நேயத்தை
விஞ்சிய ஆன்ம நேயத்தைத் தொட்ட இறையருளாளர். ஜீவகாருண்யத்தின் உச்சியை, சிகரத்தை எட்டிப்பிடித்து
எவருமே அடைய முடியாத மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்தவர். உயிருள்ள ஜீவன்கள் அனைத்திடமும்
வள்ளலார் காட்டியுள்ள கருணை அளப்பரியது. எல்லையில்லாதது.
வள்ளலார் பிறந்து
வாழ்ந்த இந்த மண்ணில் இன்று மனித நேயமே வற்றிப்போனது வருந்தத்தக்கது. மனித நேயம் வற்றியதால்
இன்றைக்கு தண்ணீரைப் பார்க்காத நிலங்கள் கூட செந்நீருடன் உறவாடுகின்றன. தண்ணீருடன்
வாழ்வு நடத்த வேண்டிய மனித சமுதாயம் கண்ணீருடனேயே காலத்தை கழித்துக் கொண்டுள்ளது.
உடலுக்குள் ஓடும்
குருதி உயிரைக் காப்பதற்குப் பதில் சடலங்களுக்கு இடையே ஆறுபோல் ஓடுகிறதே ஏன்? எங்கு
பார்த்தாலும் கொலை! களவு! கற்பழிப்பு! வன்முறை! குண்டு வெடிப்பு! குத்துவெட்டு! போதும்
போதும்!
மனம் உள்ளவனே மனிதன்.
அந்த மனமும் நேயமுள்ள மனமாக இருந்தால் மானிட சமுதாயம் சீர்பெறும்! சிறப்புறும்! சிரிப்புடனே காலத்தை கழிக்கும்! மனங்களில்
நேயம் குன்றி விட்டாலோ இதற்கு எதிர்மறை தானே.
ஐந்தறிவு பெற்ற
காக்கைகள் கூடத் தனக்குக் கிடைத்த உணவைத் தன் கூட்டத்தைக் கூவி அழைத்து உண்ணத் தூண்டுகிறது.
ஆனால் சிந்திக்கும் திறன், கற்பனை சக்தி இவைகள் கொண்டே மனிதர்களின் நிலை என்ன? ஆறறிவு
பெற்ற மனிதர்களுக்கே பேசுகின்ற அற்புத ஆற்றல். ஆனாலும் வார்த்தைகளாலேயே ரணங்களை ஏற்படுத்தும்
பிறவிகளும் இருக்கின்றார்கள். இதற்கெல்லாம் காரணம் மனித நேயம் என்னும் மகரந்தத் தென்றல்
மனங்களிடமிருந்து வீசாததன்றோ?
“யாதும் ஊரே! யாவரும்
கேளிர்!” என்றான் புறநானூற்றுக் கவிஞன் கணியன் பூங்குன்றன். என்ன விசாலமான மனம். வானத்தின்
எல்லைக்கே சவால்விடும் மனித நேயம்! எல்லா ஊரும் நம் ஊரே. எல்லா மக்களும் நம் உறவினர்களே
என்று இருந்தால் பகைத்தீ மூளுமா? பணத்திற்காக பிணங்கள் ஊர்வலம் போகுமா?
தனக்காக மட்டும்
வாழ்பவன் சுயநலக்காரன். தனக்கும் தன் சுற்றத்தாருக்கும் வாழ்பவன் சாதாரண மனிதன். தனக்காகவும்
உலகோருக்காகவும் வாழ்பவன் மனிதரில் புனிதன். தன் சுகத்தை பொருட்படுத்தாது பிறர் நலம்,
பிற உயிர்களின் நலம் வேண்டி வாழ்பவனே மனிதரில் தெய்வம்! அப்படி மனிதரில் தெய்வமாக வாழ்ந்தவரே
நம் ஐயா வள்ளற் பெருமான்.
“அன்பும் சிவமும் இரண்டென்பர்
அறிவிலார்
அன்பே சிவமாவதை யாரும் அறிகிலார்”
என்கிறது திருமூலர் வழங்கிய திருமந்திரம்.
அன்பு தான் சிவம்.
சிவம் தான் அன்பு என்று வலியுறுத்திய திருமூலர் பசுவிற்கு கூட ஒரு பிடி புல்லை உணவாகத்
தந்து, நாம் உண்ணும் போது பசித்தவர்களுக்கு ஒரு கவளம் உணவு தரச் சொன்னார்.
ஏழைகளுக்கு செய்தால்
அது இறைவனுக்கு சென்று சேரும். இறைவனுக்கு செய்வது ஏழைகளைச் சென்று சேராது பாடுகிறார்
திருமூலர்.
“படமாடற் கோயில் பகவர்க்கங்கு
ஒன்று ஈயின்
நடமாடற் கோயில் நம்பர்க் கங்கு
ஆகா
நடமாடற் கோயில் நம்பர்க்கு ஒன்று
ஈயின்
பட மாடற் கோயிற் பகவர்க்கங்கு
ஆமே”
இப்படிப்பட்ட உயரிய
முற்போக்கான சிந்தனைகளைத் திருமந்திரம் தந்ததினாலேயே வள்ளற்பெருமானார் சாத்திரத்திற்குத்
திருமந்திரத்தை எடுத்துக் கொள்ளச் சொன்னார். உருவமற்ற சிவத்தைத் திருவாசகம் வலியுறுத்தியதால்
தோத்திரத்திற்குத் திருவாசகத்தை எடுத்துக் கொள்ளச் சொன்னார்.
புலிக்கு மான்
பகை உணவிற்காக! ஆமாம். தனக்குப் பசி இல்லை எனில் எந்தப்புலியும் மானைக் கொல்லாது. பூனைக்கும்
எலி பகை. உணவிற்காகவே. தனக்கு பசி இல்லை எனில் பூனை எலியைக் கொல்லாது. பருந்துக்கு
பாம்பு பகை இயற்கையாக. அது இயற்கையின் நியதி. பாம்புகளின் எண்ணிக்கையை குறைக்க பருந்து
பாம்பை கொல்வது இயற்கையின் விதி. ஆனால் மனிதனோடு மனிதன் பகை எதற்காக. கண்டிப்பாக இந்த
நிலை மாற வேண்டும். பிறரை மகிழ்வு படுத்துவதில் இன்பம் பெற வேண்டும். அதிலேயே இறை தரிசனத்தை
காண வேண்டும். அப்படிப்பட்ட இறைதரிசனத்தைக் கண்டு இன்புற்றவரே வள்ளலார்.
மதத்தின் பெயரால்,
சாதியின் பெயரால், மொழி, இனத்தின் பெயரால் ஏற்படும் வேறுபாடுகளைக் களைந்து மனிதர்கள்
அனைவருமே ஒரே இறைவனின் பிள்ளைகள் என்ற உயர்ந்த நோக்கம் நிலைபெற வேண்டும்.
அனைத்து மதங்களின்
அடிப்படைக் கொள்கையே அன்புள்ளமும், பிறருக்கு உதவுவதும் தானே. அயலானுக்கும் அன்பு காட்டு
என்றுதானே அனைத்து மத வேதங்களும் எடுத்துக் கூறுகின்றன.
மண்ணில் உலாவந்த
மதுர நிலா ஏசு கிறிஸ்துவின் மாலைச் சொற்பொழிவிலிருந்து ஒரு பகுதியை சுட்டிக்காட்டுகிறேன்.
“உங்கள் பகைவர்களுக்கும் நேசக்கரம்
நீட்டுங்கள். உங்களைப் பழிக்கின்றவர்களையும் ஆசீர்வதியுங்கள். உங்களைப் பகைக்கின்றவர்களுக்கும்
நன்மையே செய்யுங்கள். அப்படிச் செய்வீர்கள் ஆனால் பரமதந்தையான இறைவனுக்குப் பாத்திரமான
பிள்ளைகளாக இருப்பீர்கள்”
என்று சொல்கிறார். மனிதரில் தெய்வமாக வாழ்ந்து சிலுவையில் அறையப்பட்ட அந்தச் சீர்திருத்த
செம்மல்.
பாலைவங்கங்களுக்கு
மத்தியில் பூத்த பருவநிலா இஸ்லாம் என்னும் இனிய மார்க்கத்தை ஏற்படுத்திய மாபெரும் புரட்சியாளர்
இறைதூதர் முகமது நபி என்னும் நபிகள் நாயகம் (ஸல்) கூறும் அறிவுரை பற்றி சிந்திப்போம்.
“பக்கத்து வீட்டுக்காரன் பசியோடு
இருக்க நீ மட்டும் உண்ணாதே”
“உழைத்தவனின் வியர்வை உலரும் முன்பே
அவனுக்குரிய கூலியை கொடுத்து விடு”
இப்படி மனித நேயம்
வளர நபிகள் பெருமானார் நவின்றவைகள் ஏராளம்.
திருவள்ளுவரும்
மனித நேயம் தழைக்க வேண்டிய பல குறள்களை இயற்றியுள்ளார்.
மேற்சொன்ன ஞானிகள்
போன்றே பலரும் மனித நேயம் பற்றிச் சொல்லியுள்ளனர். பாடியுள்ளனர்.
ஆனால் நம் வள்ளற்பெருமானோ
“ஆன்மநேயம் பற்றியே சிந்தித்தவராக ஆன்ம நேய ஒருமைப்பாடு வேண்டிப் பல நூறு பாடல்களை
பாடியுள்ளார். அனைத்து உயிர்களையும் ஒரே குடும்பமாகக் கருதி அவைகளுக்குள்ளே ஒருமைப்பாட்டைக்
கருதுவது ஆன்மநேய ஒருமைப்பாடு. அதை அடிக்கடி வலியுறுத்தியவர் நம் வள்ளலார் ஒருவரே.
இராமலிங்கம் என்று
தொடக்கத்தில் அழைக்கப்பட்டவர் பின்னாளில் “திருவருட்பிரகாச வள்ளலார்” என்று அழைக்கப்பட்டாரே
அதற்கு என்ன காரணம்? கர்ணன் கவச குண்டலத்தோடு பிறந்தான் என்றால் நம் வள்ளலார் கருணையோடு
தயவோடு பிறந்ததினால் அன்றோ?
கருணை நெறி உற்றார்,
எக்காலமும் சாகாமல் ஓங்கும் ஒளிவடிவம் பெற்றார். ஈரமும் அன்பும் கொண்டு இன்னருள் பெற்றார்.
இறவாத சன்மார்க்கம் கண்டார்.
மறத்தமிழர் குடியினிலே
இரக்கத்திற்கு எவர் என்று கேட்டால் உலகம் உரக்கக் கூறுவது நம் வள்ளலாரைத்தானே!
வெண்பாவிற்கு புகழேந்தி!
விருத்தத்திற்கு கம்பன் என்றால் வருத்தத்திற்கு வள்ளலார் அன்றோ? பிற உயிர்கள் படும்
துன்பத்தைக் கண்டு காலமெல்லாம் கண்ணீர் விட்டவர் வள்ளலார். கண்ணீரையே மையமாக்கி 5818
பாடல்களை பாடியுள்ளார் அருட்பாக்களாக. ஆன்ம நேயம் தழைக்க தமிழை வெள்ளமென மக்கள் மனங்களிலே
பாய்ச்சினார்.
வள்ளலாரின் ஆன்மநேயம்
படிப்படியாக இளமைக்காலம் முதல் வளர்ந்து வந்துள்ளது. ஆறறிவு மனிதர்களின் துன்பங்களைக்
கண்டு வருந்தியவர் ஒரு நாளில் ஓரறிவு பயிர் வாடியதைக் கண்டு வாடியது ஆன்ம நேயத்தின்
முதிர்ச்சி.
ஏறுபடி
முதல்படியாக வள்ளலார்
தான் நன்றாக வாழ வேண்டும். தன் உடல் இறைவன் உறையும் கோயில் எனக் கொண்டு இறைவனிடம் இறைஞ்சுகிறார்.
“மதி வேண்டும் நின் கருணை நிதி
வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்”
இதற்கு அடுத்தபடியாகத்
தன்னைச் சுற்றியுள்ளவர்கள் நன்றாக வாழ வேண்டும். இன்புற்று வாழ வேண்டும் என வேண்டுகிறார்.
“எனை அடுத்தார் சுகம் வாய்ந்திடல்
வேண்டும்”
-
அருட்பா – 4088
இதற்கு அடுத்தபடியாக
மூன்றாவது படி உலகத்தில் வாழும் மாந்தர்களெல்லாம் நலம் பெற்று வாழ வேண்டும் என விழைவது.
“கருணையே வடிவாய்ப் பிறர்களுக்கடுத்த
கடுந்துயர் அச்சமாதிகளைத்
தருண நின் அருளால் தவித்தவர்க்கின்பம்
தரவும்”
-
அருட்பா – 3407
மக்கள் ஆறறிவு
படைத்தவர்கள். அவர்களை விட ஓரறிவு குறைந்து ஐந்தறிவு படைத்த விலங்கினங்கள் மீது காட்டும்
அன்பு நான்காவது படியாகும்.
“காணுறு பசுக்கள் கன்றுகள் ஆதி
கதறிய போதெல்லாம் பயந்தேன்”
-
அருட்பா – 2469
இதற்கு அடுத்த
ஐந்தாவது படி பறவைகள், ஊர்வன போன்ற உயிர்களிடம் காட்டும் அன்பாகும்.
“காக்கைகள் கூவக் கலங்கினேன் பருந்தின்
கடுங்குரல் கேட்டுளம் குலைந்தேன்”
“ஊக்கிய பாம்பைக் கண்ட போதுள்ளம்
ஒடுங்கினேன் நடுங்கினேன் எந்தாய்”
-
அருட்பா -3434
இதற்கு அடுத்த
படியான ஆறாவது படி சிறிய உயிரினங்களான புழுவுக்கும் மீனுக்கும் இரங்குகின்ற இரக்க உள்ளம்.
“துண்ணெனக் கொடியோர் பிறவுயிர்
கொல்லத்
தொடங்கிய போதெல்லாம் பயந்தேன்
கண்ணினால் ஐயோ பிறவுயிர் பதைக்கக்
கண்ட காலத்திலும் பதைத்தேன்
மண்ணில் வலையும் தூண்டிலும் கண்ணி
வகைகளும் கண்ட போதெல்லாம்
எண்ணி என் உள்ளம் நடுங்கிய நடுக்கம்
எந்தை நின் திருவுளம் அறியும்”
வள்ளற்பெருமானார்
தூண்டிலையும், கண்ணிகளையும் மீன் வலைகளையும் கண்டு கண்ணீர் சிந்துவது புலப்படுகிறது.
ஏனென்றால் அவைகள் பல உயிர்களைக் குடிக்கும் கருவிகள் என்பதால் இதையடுத்த ஏழாவது படி
ஓரறிவு உயிர்வாடும் போது வாடுவது.
“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்”
ஓரறிவு கொண்ட பயிர்
நீரின்றி வாடியபோதெல்லாம் வள்ளற்பெருமானின் உள்ளம் வாடியது என்றால் என்னே வள்ளலாரின்
இரக்க உள்ளம்.
எல்லா உயிர்களும்
தம்முயிர் என எண்ணுதல் எட்டாவது படியாகும்.
“எவ்வுயிர்த் திரளும் என்னுயிர்
எனவெ
எண்ணி நல் இன்புறச் செய்யவும்
வவ்வுயிர்களுக்கு வரும் இடையூற்றை
அகற்றியே அச்சம் நீக்கிடவும்”
-
அருட்பா 3403
இந்த எட்டு படிகளும் உயிரியல் தொடர்பின.
இதற்கடுத்த இரண்டு படிகள் இறையியல் பற்றின.
இதற்கடுத்த படியாவது அனத்துயிர்களும் இறை உளையுள் என எண்ணி அவைகளுக்குத் தொண்டு புரிந்து
வாழ்வதே இறைவழிபாடு என்று எண்ணுவது.
“எத்துணையும் பேதமுறா தெவ்வுயிரும்
தம்முயிர் போல் எண்ணி உள்ளே
ஒத்துரிமை உடையவராய் உவக்கின்றார்
யாவரவர் உளந்தான் சுத்த
சித்துருவாய் எம்பெருமான் நடம்புரியும்
இடமென நான் தெரிந்தேன் அந்த
வித்தகர் தம் அடிக்கேவல் புரிந்திட என்
சிந்தை மிக விழைந்ததாலோ”
எள்ளளவும் பேதமின்றி எவ்வுயிரையும் தம்முயிர்
போல் மதித்து உள்ளத்தால் ஒத்து மகிழ்கின்றார் எவரோ அவர் உள்ளத்திலே அறிவு வடிவமாக இறைவன்
நடனமாடுகிறான். அப்படிப்பட்டவரின் அடிகளுக்கு நான் ஏவல் செய்யக் காத்துக்கிடக்கிறேன்
என்கிறார் வள்ளலார். இப்பாடலே சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியத்தைப் பறைசாற்றும்
அற்புதமான பாடல்.
பத்தாவது படியாவது கருணை வடிவமான இறைவனோடு
ஒன்றி இரண்டறக் கலப்பது. அப்படிக் கலப்பதே மரணமில்லாப் பெருவாழ்வு.
“தலைவ நினைப்பிரியாத நிலைமையும் வேண்டுவனே”
“நானும் எந்தாயும் ஒன்றாக இனிதுறல் வேண்டுவனே”
“உச்சாதி அந்தமிலாத் திருவடியில் யானும் உடையாயும்
கலந்தோங்கும் ஒருமையும் வேண்டுவனே”
வள்ளலார் ஏறிநின்ற இப்பத்து படிகளையே குறிப்பிட்டு
“எட்டோடு இரண்டும் சேர்ந்து எண்ணாவும் அறியீர்
எத்துணைக் கொள்கின்றீர் பித்துலகீரே”
என்று உலகத்தினரைப் பார்த்து பாடுகின்றார்.
இந்த எட்டோடு இரண்டு என்பதற்கு இன்னும் பல
வகைகளில் பொருள் கூறலாம்.
எறுதற்கு அரிய இந்தப் பத்துபடிகளையும் தொட்டதனால்
தான் அவர் மரணமில்லாப் பெருவாழ்வை அடைந்தார் அருட்சோதி சிவமானார்.
“அருட்ஜோதி ஆனேன் என்று அறையப்பா முரசு
அருளாட்சி பெற்றேன் என்று அறையப்பா முரசு”
என்று தானே அருட்சோதி ஆனதாக முரசறைகிறார்.
“உயிருள்யாம் எம்முள் உயிர் இவை உணர்ந்தே
உயிர்நலம் பரவுக என்று உரைத்த மெய்ச்சிவமே”
“உயிர்தான் உயிர் இரக்கந்தான் ஒன்றல்லது இரண்டிலை
இரக்கம் ஒருவில் என் உயிர் ஒருவும்”
எனின் உயிரோடு சேர்ந்து உயிர் இரக்கம் பிரிக்க
முடியாத ஒன்றாகிவிட்டது. இரக்கம் என்னை விட்டு நீங்கினால் என் உயிர் என்னை விட்டுப்பிரியும்
என்று சொன்னவர் வள்ளலார் ஒருவரே!
வள்ளலார் கண்ட இந்த ஆன்மநேய ஒருமைப்பாட்டை
வள்ளலாருக்கு முன்பு எந்த ஞானியரும் கண்டதில்லை. அதனை மக்களுக்கு உணர்த்தியது இல்லை.
துறவிகள் இலக்கணம்
(அத்தியாயம் 3)
வள்ளற்பெருமான் வாழ்ந்த விதத்தை ஆராய்ந்து
நோக்கும் போது அவர் மாபெரும் துறவியாகத் துறவுக்கு உள்ள இலக்கணத்தோடு முற்றும் துறந்தவராகத்
தூய வாழ்வு வாழ்ந்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகின்றது. வள்ளலாருக்கு முன்பு பல
துறவிகள் வாழ்ந்துள்ளார்கள். அவர்கள் எல்லாரும் புரட்சி சிந்தனையுள்ள புரட்சியாளர்களாக
இருந்தார்களா என்றால் இல்லை. பல புரட்சியாளர்கள் வள்ளலாருக்கு முன்பு வாழ்ந்துள்ளார்கள்.
அவர்கள் எல்லாம் துறவிகளாக இருந்தார்களா என்றால் இல்லை. புரட்சி சிந்தனைகளோடு வாழ்ந்த
மாபெரும் துறவியான நம் வள்ளலாரைப் “புரட்சித் துறவி” என்று அழைப்பது சாலப்பொருந்தும்.
தன்னுடைய இன்பங்கள் அனைத்தையும் துறந்து
உலக இன்பத்தை விழைபவர்கள் உண்மையான துறவிகள். தன்னுடைய பற்றுகள் அனைத்தையும் விட்டு
விட்டு இறைவனுடைய பற்றை மட்டும் பற்றுவதே துறவிக்கு அழகு.
“பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு”
என்கிறது திருக்குறள். பற்றற்று இருக்கக்கூடியவன்
இறைவன். அவனுடைய திருவடிகளை நாம் பற்றினால் நம்முடைய ஆசைகள் அழிந்து போகும்.
“உலகினில் பிற நிலையைப் பற்றேன்
சிவானந்தப் பற்றே பற்றென பற்றினேன்”
என்று வள்ளலார் பாடுகிறார். மனதில் எந்த
சிற்றின்பங்களுக்கும் இடந்தராமல் சிவ சிந்தனையுடன் இருந்து அதிலேயே ஆனந்தத்தை காண்கிறார்.
தன்னை மதியாது இருத்தல், சினம் தவிர்த்தல்,
எவ்வுயிர்களிடத்தும் அன்பு கொண்டு ஒழுகுதல், எளிமையைப் பேணுதல், பிறர் குற்றம் காணாது
இருத்தல், எந்நேரமும் சிவ சிந்தனையோடு இருத்தல் இவைகளே ஒரு துறவிக்கு அணிகலன்களாகத்
திகழ்கின்றன. இவை அனைத்தும் வள்ளற் பெருமானிடம் நிறைந்து காணப்பட்டது என்றால் அது மிகையாகாது.
மேலும் நான், எனது என்று எண்ணுகின்ற மனோபாவம்
துறவிகளுக்கு அழகானது. நான், எனது என்கிற அகம்பாவம், செருக்கு நீக்கியவனே வானோர் எனப்படும்
தேவர்கள் வாழும் உலகில் புகுதற்குத் தகுதியானவர் என வள்ளுவர் கூறுகிறார்.
“யான் எனது என்னும் செருக்கறுப்பான் வானோர்க்கு
உயர்ந்த உலகம் புகும்”
வள்ளற் பெருமானார் இல்லறத்தில் நாட்டம் கொள்ளாது
துறவறத்தையே விரும்பினார். ஆனாலும் அவரது சகோதரி உண்ணாமலையம்மனின் வற்புறுத்தலின் பேரில்
அவரது மகளான தனக்கோட்டியை வள்ளற்பெருமானுக்கு கட்டாயத்திருமணம் செய்து வைத்து விடுகின்றனர்.
அந்தப் பெண்மணியுடன் வள்ளலார் உடல் ரீதியான உறவு எதுவும் வைத்துக்கொள்ளவில்லை என்பது
அவர் பாடல்கள் மூலமே விளங்குகின்றது.
“ஒருத்தியைக் கை தொடச்சார்ந்தேன்
தொட்டனன் அன்றிக் கலப்பிலேன்”
-
திருவருட்பா
பெண்ணாசையுடன்
மண்ணாசை, பொன்னாசை என்று மூவகை ஆசைகளையும் ஒழித்து வாழ்ந்து காட்டியவர் வள்ளலார். பெண்ணாசையைப்
பெருமானார் தவிர்த்து வாழ்ந்ததால் ஒட்டுமொத்த பெண் இனத்தையே வள்ளலார் வெறுத்தார் என்று
எவரும் சொல்ல இயலாது.
“மருவு பெண்ணாசையை மறக்கவே வேண்டும்
உனை மறவாதிருக்க வேண்டும்”
-
திருவருட்பா
மருவு பெண்ணாசையை
மறக்கவே வேண்டும் என்பதற்கு நான் மணக்கின்ற பெண் ஆசைகளைத் துறந்து வாழ வேண்டும் என்று
பாடியதாகப் பொருள் கொள்வாரும் உள்ளனர். பெண்கள் ஆசைகளைத் துறந்து வாழ்ந்தால் இல்லறம்
இன்பமுடன் திகழும் அன்றோ! ஆதலால் இந்தக் கருத்தும் ஏற்றுக் கொள்ளக் கூடியதே.
பணத்திலே பெருமானாருக்குத்
துளியும் ஆசை இருந்தது கிடையாது. தன்னிடம் தேவைக்கு அதிகமான பணம் இருந்தால் அதைக் கைவசம்
வைத்திராது கிணற்றிலும், குளத்திலும் எறிந்து விட்டதாகப் பாடுகின்றார்.
“பணத்திலே சிறிதும் ஆசையொன்றில்லை
நான்
படைத்த அப்பணங்களைப் பலகால்
கிணற்றிலே எறிந்தேன் குளத்திலும்
எறிந்தேன்
கேணியில் எறிந்தனன் எந்தாய்
குணத்திலே நீதான் கொடுக்கின்ற
பொருளை
எறிகிலேன் கொடுக்கின்றேன் பிறர்க்கே”
பணம், காசை வீசியெறிந்து
விட்டு இறைவன் தனக்கு வழங்கிய அருட்கொடையை மட்டும் பிறர்க்குத் தானமாக வழங்குவதாக கூறுகின்றார்.
இறைவனும் வள்ளலாருக்கு அருளை வாரி வாரி வழங்கினான். அதை அவர் அனைத்து உயிர்களுக்கும்
வாரி வழங்கினார்.
ஒருவனிடத்தில்
இருக்கின்ற செல்வங்களுள் மிக உயர்ந்த தலையாய செல்வம் அருட்செல்வம். அது கொடுக்கக் கொடுக்க
கூடிக் கொண்டே இருக்கும். மற்றை செல்வங்களான பொன், மண், பணம், முதலியன கொடுக்கக் கொடுக்கக்
குறையும். மேலும் அத்தகைய செல்வங்கள் கீழ்மக்களிடம் கூட இருக்கும். அதனால் தான் வள்ளுவரும்,
“அருட்செல்வம் செல்வத்துள் செல்வம்
பொருட்செல்வம்
பூரியார் கண்ணும் உள” என்கிறார்.
நம் நாட்டில் வள்ளலாருக்கு
முன்பே எத்தனையோ வள்ளல்கள் வாழ்ந்துள்ளார்கள். கடையெழு வள்ளல்கள், வாரி வழங்கும் வள்ளல்
குனம் கொண்ட மன்னர்களாக இருந்திருக்கிறார்கள். இதிகாசமான மகாபாரதம் என்ற கற்பனைக் கதையில்
கூட கர்ணன் ஒரு வள்ளலாக வாழ்ந்ததாகக் கூறுவார்கள். ஆனால் இவர்கள் எவருக்குமே வரலாற்றில்
“வள்ளலார்” என்ற பெயர் கிடைத்ததில்லை. ஏழைத்துறவியான வள்ளலாருக்கு அந்த பெயர் நிலைத்துள்ளது
எனில் அது அவர் பெற்ற அருட்செல்வத்தைப் பிறருக்கு வாரி வழங்கியதாலும், பசிப்பிணி நீக்குதற்குச்
செயல் அளவில் ஈடுபட்டதாலுமே.
இன்றைக்கு பட்டாடை
உடுத்திக் கொண்டும், பட்டு மெத்தையில் அமர்ந்து கொண்டும், மலர்களின் மேல் நடந்தும்
வருகின்ற துறவிகளைப் பார்க்கின்றோம். சிம்மாசனம் போன்ற இருக்கைகளில் அமர்ந்து கொண்டு
பாதங்களைத் தங்கத்தட்டில் வைக்கின்றனர். அவர்களுக்கு பாத பூஜைகளும் படு ஜோராய் நடக்கின்றது.
எளிமை அடக்கம்
எனக்கு வள்ளற்பெருமானிடம்
கவர்ந்த அம்சம் அவருடைய எளிமையும் அடக்கமுமே.
“உண்பது நாழி உடுப்பது இரண்டு
முழம்”
என்பதற்கிணங்க
உணவு உண்பதிலும், உடை உடுத்திக் கொள்வதிலும் அவர் அதிக கவனம் செலுத்தியவர் அல்லர்.
அவரிடம் இரண்டு வெள்ளாடைகளே இருந்ததாக அவரோடு வாழ்ந்தவர்கள் கூறியுள்ளார்கள்.
“காட்டுயர் அணைமேல் இருக்கவும்
பயந்தேன்
காலின் மேல் கால் வைக்கவும் பயந்தேன்
பாட்டயல் கேட்கப் பாடவும் பயந்தேன்
பஞ்சணை படுக்கவும் பயந்தேன்”
-
அருட்பா
பெரிய இருக்கைகளில்
அமரவும், காலின் மேல் கால் வைத்து அமரவும், பாட்டுப்பாடும் போது கூட அடுத்தவர் கேட்கும்
அளவு சத்தமாகப்பாட்டுப்பாடவும், மெத்தையில் படுத்து உறங்கவும் பயந்ததாகப் பெருமானே
கூறுகிறார். அப்படியே வாழ்ந்தும் உள்ளார்.
“தன்னைத்தானே உயர்த்திக்
கொள்பவர்கள் தாழ்த்தப்படுவார்கள். தன்னைத்தானே தாழ்த்திக் கொள்பவர்கள் உயர்த்தப்படுவார்கள்
என்பதே உலக இயற்கை. தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வதில் வள்ளலாரும் மிக மிக உயர்ந்து
நிற்கின்றார்.
“மதத்திலே அபிமானம் கொண்டு உழல்வேன்
வாட்டமே செய்யும் கூட்டத்தில்
பயில்வேன்
இதத்திலே ஒரு வார்த்தையும் புகலேன்
ஈயும் மொய்த்திடற்கு இசைவுறாது
உண்பேன்”
-
அருட்பா
“நாயினும் கடையேன் ஈயினும் இழிந்தேன்
ஆயினும் அருளிய அருட்பெருஞ்சோதி”
-
அருட்பெருஞ்சோதி அகவல்
“ஈயெனப் பறந்தேன் எறும்பென உழன்றேன்
எட்டியே எனமிகத் தழைந்தேன்”
ஈக்களுடனும் எறும்புகளுடனும்,
எதற்கும் உதவாமல் வளர்கின்ற எட்டியுடன் அவர் தன்னை ஒப்பிட்டுக் கொள்வது அவரது தன்னடக்கத்தையும்,
தன்னைத்தானே தாழ்த்திக் கொள்ளும் உயர்ந்த பண்பையும் காட்டுகிறது.
ஐம்புலன்களால்
(மெய், வாய், கண், மூக்கு, செவி) வருகின்ற அகப்பையை அடக்கி வாழுதலே தவம் செய்வோர்க்கு
அழகாகும். தன்னைத்தானே வருந்திக் கொண்டு நோன்பிருந்தும் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாமையும்
தவத்திரு இலக்கணம் என வள்ளுவர் கூறுகிறார்.
“உற்ற நோய் நோன்றல் உயிர்க்குறுகண்
செய்யாமை
அற்றே தவத்திரு உரு” – திருக்குறள்
அதைக் கடைபிடித்துக்
காட்டியவர் வள்ளலார்.
வள்ளலாரைப் பற்றி தொழுவூரார்
வள்ளலாரிடம் தனது
17 வது வயதில் சீடராக வந்து சேர்ந்தவர் தொழுவூர் வேலாயுத முதலியார். அவர் மிகப் பெரிய
தமிழறிஞர். வடமொழிப் புலமையும், தமிழ் இலக்கண அறிவும் வாய்க்கப் பெற்றவர். வள்ளற்பெருமானாரின்
தமிழறிவு பற்றிக் கேள்வியுற்று வள்ளலாரைச் சோதனை செய்து பார்க்க விரும்பினார் தொழுவூர்
வேலாயுதனார். தானே ஒரு பாடலை எழுதி எடுத்து வந்து வள்ளலாரிடம் காட்டி சங்ககாலப் பாடல்
ஒன்று என் கைக்கு கிடைத்துள்ளது அதன் பொருள் சொல்வீர் என்று பெருமானாரிடம் காட்டியுள்ளார்.
வள்ளலாரோ அந்தப் பாடலைப் படித்த மாத்திரத்திலேயே இது சங்ககாலப் பாடல் இல்லை. சங்ககாலப்பாடல்
எனில் இவ்வளவு இலக்கணப்பிழைகள் இருக்காது. இது யாரோ இலக்கணம் தெரியாத கற்றுக்குட்டி
எழுதியது என்றாராம். அன்றிலிருந்து வள்ளலாரிடம் தன்னை அர்பணித்துச் சீடரானவர் தொழுவூர்
வேலாயுத முதலியார். வள்ளலார் மறைவுக்கு பின் சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ் விரிவுரையாளராகப்
பணியாற்றினார்.
வள்ளலாருடன் இறுதி
வரை வாழ்ந்த தொழுவூரார் வள்ளலாரின் மறைவுக்குப் பின் பிரம்மஞான சபை என்ற அமைப்புக்குத்
தந்த வாக்குமூலத்தை நாம் பார்க்க வேண்டும். இந்த வாக்குமூலத்தை நன்றாக திரும்ப திரும்ப
படித்துப் பார்த்தால் வள்ளலார் யார்? எப்படிப்பட்டவர் என்பது விளங்கும். அந்த வாக்குமூலம்
வருமாறு:
“ஆரியர்களாலும்,
திராவிடர்களாலும் ஒப்பப் பாராட்டப்பெறும் அகத்தியர் முதலிய முனிவர்களின் நூல்களை ஓதாமலேயே
ஒப்புவிக்கும் ஆற்றலை அவர் ஒன்பதாம் வயதிலேயே பெற்றிருந்ததை பலர் நேரில் அறிவர். அவர்
யாரிடம் உபதேசம் பெற்றார் என்பதை ஒருவரும் அறியார். ஆயினும் சில காலத்துள் பல சீடர்கள்
அவரைச் சூழ்ந்தனர்.
அவர் ஒரு பெரிய
ரசவாதி. புலார் உண்பவர்களைப் புலால் உண்ணாதவர்களாக மாற்றும் ஒரு தனிசக்தி அவரிடம் இருந்ததைக்
கண்கூடாகக் கண்டோம். அதாவது பார்வை ஒன்றே ஒருவரது புலால் விருப்பத்தை ஒழிக்கப் போதுமானது.
பிறரது உள்ளத்தை ஊடுருவி அறியும் வியத்தகு ஆற்றல் அவரிடம் இருந்தது.
1855 ஆம் ஆண்டு
அவர் சென்னையை விட்டு சிதம்பரம் சென்றார். பின்னர் கருங்குழிக்கும், வடலூருக்கும் அங்கேயே
தங்கினார். அக்காலங்களில் பலமுறை தம்மைச் சூழந்தவர்களைப் பிரிந்து பிறர் கண்களுக்குப்
புலப்படா வண்ணம் மறைந்து போவார். நீண்ட காலம் அவ்வாறே பிறர் அறியா வண்ணம் இருப்பார்.
வலிமையுடையவர்.
மிக விரைந்து நடப்பார். நிமிர்ந்த தோற்றம். தெள்ளிய சிவந்த முகம். நேரான கூரிய மூக்கு,
ஒளிவீசும் பெருங்கண்கள். அவர் ஒய்வு கொள்வதே இல்லை. கடும் மரக்கறி உணவினர். இரண்டு
மூன்று நாட்களுக்கு ஒரு முறையே உண்பார். அதுவும் சில கவளங்களே. தொடர்ந்து இரண்டு மூன்று
மாதங்கள் உண்ணாது இருப்பார். அக்காலங்களில் சிறிது சர்க்கரை கலந்த வெந்நீரை அருந்துவார்.
அவர் சாதி வேற்றுமைகளைக் கண்டித்து பேசியதால் அனைவரது பெரும் பாராட்டுக்கு உரியவராக
இல்லை. ஆயினும் எல்லா சாதியினரும் பெருந்திரளாக அவரை சூழ்ந்திருந்தனர். உபதேசங்களைக்
கேட்டுப் பயன்பெற அவர்கள் வரவில்லை. சித்தாடல்களை கண்டு களிக்கவும் அவற்றின் பயனைப்
பெறவுமே வந்தார்கள். சித்தாடல்களில் அவர் வல்லவர். இயற்கைக்கு மேம்பட்ட எதையும் அவர்
ஒப்புவதில்லை. தமது மார்க்கம் அறிவியலை அடிப்படையாகக் கொண்டது என்று இடையறாது வற்புறுத்துவார்.
அவர் கூறியவற்றுள்
சில
“புலாலுணவு படிப்படியாகக்
கைவிடப்படும். சாதி சமய வேற்றுமைகள் இறுதியில் அழிந்து போகும். அகில உலக சகோதரத்துவம்
வரும். இந்தியாவில் அது நிலைநாட்டப்படும். அகில உலக சகோதரத்துவத்தின் அடிப்படையில்
வேதாந்தத்தின் உண்மைக் கருத்துகளைப் பரப்புவதற்குச் சமரச வேத சன்மார்க்கச் சங்கம் என்றொரு
சங்கத்தை 1865 ஆம் ஆண்டில் நிறுவினார். அது ஐந்தாறு ஆண்டுகளே நிலவிற்று. அக்காலத்தில்
பேரெண்ணிக்கையான ஏழைகளுக்குச் சங்க உறுப்பினர்கள் செலவில் அன்னதானம் செய்யப்பட்டது.
1873ம் ஆண்டு முற்பாதியில் மனித சகோதரத்துவத்தை மிகவும் வற்புறுத்தி போதித்து வந்தார்.
அவ்வாண்டு இறுதி மூன்று மாதத்தில் பேசுவதையும், உபதேசிப்பதையும் அறவே விடுத்து இடையறா
மௌனத்தில் ஆழ்ந்தார். 1874ம் ஆண்டு ஜனவரி மாத இறுதி நாட்களில் பேசத்தொடங்கித் தாம்
கூறிவரும் தீர்க்க தரிசனங்களை மீண்டும் கூறினார். அம்மாதம் 30ம் தேதி நாங்கள் மேட்டுக்குப்பத்தில்
எங்கள் குருவை கடைசியாகப் பார்த்தோம். சீடர்களிடம் அன்போடு விடைபெற்றபின் ஏற்பாடு செய்திருந்த
சிறு கட்டிடத்தின் தனி அறை ஒன்றில் நுழைந்து விரிப்பில் சயனித்துக் கொண்டார். அவரது
கட்டளைப்படி அறைக்கதவு பூட்டப்பட்டது. இருந்த ஒரே ஒரு துவாரமும் கவர் வைத்து அடைக்கப்பட்டது.
ஓராண்டுக்குப்பின் வெற்றறையாகவே இருந்தது. பின் ஒரு சமயம் தோன்றுவதாக உறுதியாக கூறியிருந்தார்.
எனினும் தோன்றும்காலம், இடம், சூழ்நிலைகளை தெரிவிக்கவில்லை. மேற்கூறிய செய்திகள் ஆயிரக்கணக்கானவர்களுக்கு
தெரிந்தவையே. இந்து மத சாத்திரங்களில் உள்ள ஆழ்ந்த நீதிகள் அகில உலக சகோதரத்துவம்,
உயிர் இரக்கம், அறம் இவற்றை பாமர மக்களுக்கும் விளக்கி உபதேசிப்பதே அவரது முழு வேலையாக
இருந்தது. ஆயினும் அவரைச் சூழ்ந்த பெரும் கூட்டத்தாரில் மிகச்சிலரே அவரது உபதேசங்களை
உணர்ந்ததைக் கண்டு பெரிதும் ஏமாற்றம் அடைந்தனர்.
இதிலிருந்து வள்ளற்பெருமானார்
தனது போதனைகளில் அகில உலக சகோதரத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்துள்ளதும்
மக்கள் அதை ஏற்காது விட்டதும் தெரிகின்றது. சாதி சமய வேறுபாடுகளை அவர் கண்டித்து பேசியதைப்
பெரும்பாலானோர் எற்றுக் கொள்ளாததும், அவரது சித்து விளையாட்டுகளை மட்டும் கண்டு பயன்
பெறவுமே அவரை சூழ்ந்து வந்ததும் நன்றாகத் தெரிகின்றது.
உண்மைத் துறவி
“நினைத்த போதெல்லாம் நின்னையே
நினைத்தேன்
நினைப்பற நின்ற போதெல்லாம்
எனைத்தனி ஆக்கி நின்னிடமே நின்றேன்
என் செயல் என்ன ஓர் செயலும்
தினைத்தனை எனினும் புரிந்திலேன்
எல்லாம்
சிவன் செயலாம் எனப் புரிந்தேன்”
-
திருவருட்பா
நினைத்த நினைப்பெல்லாம்
இறைவனைப் பற்றியே என்றும், தனியாக நினைப்பின்றி நின்ற போதும் இறைவனிடமே நின்றதாகவும்,
தக்காக எந்த சிறு செயலையும் செய்யாது எல்லாம் சிவன் செயல் எனப் புரிந்ததாகவும் பாடுகிறார்.
இதுவே உண்மை துறவிக்கு அழகு!
அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!
(அத்தியாயம் 4)
வரலாறு மனிதர்களை
படைப்பது வழக்கு. மனிதர்கள் வரலாற்றைப்படைப்பது எப்போதாவது நடைபெறக்கூடியது. அப்போது
மட்டும் அசாதாரண பிறப்புகள் மகான்களாகப் பிறந்து வாழ்வாங்கு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்து
நிற்பர். வருங்காலம் அப்படிப்பட்ட மகான்களை வணங்கி வரவேற்கும். வாழ்த்திப்பாடும். துதிக்கும்,
மண் இருக்கும் வரை மதி இருக்கும் வரை அந்த மகான்கள் மனங்களில் நிழலாடிக்கொண்டே இருப்பர்.
அவர்களுடைய போதனைகளும் வருங்கால உலகிற்கு வழிகாட்டிக் கொண்டே இருக்கும்.
மனிதர்கள் பிறக்கிறார்கள்
மகான்கள் பிறப்பெடுக்கிறார்கள். மனிதர்கள் இறக்கிறார்கள். மகான்கள் இறப்பது இல்லை.
இறவாத புகழை எய்துபவர்கள் இறப்பு அடைவதில்லை உலகம் சுழலும் வரை அவர்களது போதனைகள் மக்களிடம்
சுழன்று கொண்டே இருக்கும். அவர்களது நெறிகளும் கொள்கைகளும் உலக மக்கள் அனைவரும் பேரின்பப்
பெருவாழ்வு அடைய வழங்கப்பட்டவைகளாகவே இருக்கும். இம்மண்ணில் அப்படி வந்துதித்த பேரருளாளர்கள்
விரல் விட்டு எண்ணத்தக்கவர்களே. அவர்களில் ஒருவர் நம் தமிழ்த்திரு நாட்டில் வந்து உதித்துள்ளார்.
என்றால் தரணி வாழ் தமிழன் அனைவருக்கும் பெருமைதானே.
ஏக்கங்கள் மனிதனுக்கு
அதிகம் உண்டு. பணம் சேர்க்க வேண்டும். நிறைய சேர்க்க வேண்டும். கார், பங்களா என்று
சுகமாக வாழ வேண்டும் என்று நினைப்பது உண்டு. தான் வாழ வேண்டும் தன் குடும்பம் வாழ வேண்டும்
என்று எண்ணுவது உண்டு. அத்தோடு மட்டும் தன் எண்ணத்தை நிறுத்திக் கொண்டு சமுதாயத்தைப்
பற்றி சிந்திக்காதவர்களே அதிகம். அவர்கள் எல்லாம் தங்கள் வாழ்நாளுக்கு பிறகு அவர்கள்
புகழை நிலைநாட்ட எந்த சுவடுகளையும் விட்டுச் செல்வதில்லை. ஆனால் அருளாளர்கள், மகான்கள்,
தங்களை மறந்து உலக இன்பத்துக்காக வருந்துபவர்கள். தன் பசியையும் தூக்கத்தையும் உதறிவிட்டு
உலகம் வாழ விழைபவர்கள். பிற மனிதன் பசியால் வருந்தும் போது தான் பசித்ததாகிப் பிற உயிர்கள்
வேதனையில் துடிக்கும் போது தான் துன்புற்றதாகி இறைவனிடம் அழுது அழுது, ஏங்கி கண்ணீர்
விட்டு வேண்டியவர்கள் எத்தனை பேர்? நம் வள்ளலார் அழுகிறார். பிற உயிர்கள் நலத்திற்காக
இறைவனிடம் அழுகிறார்.
மனிதன் உணவினால்
உயிர் வாழ்கிறான். உடம்புக்குள் உயிர் இருக்கிறது. இந்த உடம்புக்கும் உயிருக்கும் உணவு
அவசியமாகிறது. ஆகவே உயிரைக்காக்க உணவு அவசியமாகிறது. மனிதன் உணவினால் உயிர் வாழலாம்.
ஆனால் உணவுக்காக பிற உயிரை எடுப்பது, கொல்வது என்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை.
உயிருக்குள் ஒளியாக ஒளிர்பவன் இறைவன். மனிதன் பிற உயிர்களை கொன்று திண்பது உயிருக்குள்
உயிராக ஒளிரும் இறைவனுக்கே சம்மதம் ஆகாது என்பதை உணர வேண்டும்.
இந்த உண்மையை எடுத்துச்
சொன்னவர்கள் சில மகான்கள். மகாவீரர், புத்தர், பின்பு திருவள்ளுவர் என்று சொல்லலாம்.
ஆனால் இந்த உண்மையை
மிகத்தெளிவாக விளக்கித் தன் வாழ்நாளில் ஒரு கூட்டத்தையே கடைபிடிக்கச் செய்து அதற்கென்று
ஒரு இயக்கத்தையே ஆரம்பித்தவர், இறைவனை உயிர்களுக்குள் காணச் சொன்னவர். உயிர்களுக்கு
செய்யும் தொண்டே உண்மையான இறைவழிபாடு என்று உயிர்க்குலம் காக்க விழைந்தவர் நம் வள்ளலார்
ஒருவரே.
“உயிரெல்லாம்நீ திருநடம் புரியும்
ஒரு
திருப்பொது என அறிந்தென்”
-
திருவருட்பா
அன்பு உள்ளவன்
முழு மனிதன். அதை அகத்து உறுப்பு என்று வள்ளுவர் சொல்லுகிறார். உடலில் உறுப்பு ஒன்று
இல்லை என்றால் ஊனமாகிறது. ஆகவே அன்பு என்ற அகத்து உறுப்பு இல்லை என்றாலும் அவன் ஊனமானவனே.
புறத்து உறுப்புகள் நன்றாக இருந்தும் அகத்து உறுப்பான அன்பில்லை என்றால் அவன் முழு
மனிதன் ஆக மாட்டான்.
அன்பு, இரக்கம்,
கருணை, தயவு, அருள் இவை அனைத்துமே சற்றேறக்குறைய ஒரு பொருளையே குறிக்கும். அன்பு பெருக்கெடுத்தால்
கருணையாக பொங்கி எழுகின்றது. ஒரு மனிதன் மற்ற மனிதரிடத்து இரக்கப்பட்டு காட்டுவது அன்பு.
அதுவே இன்னும் மேலோங்கி மற்ற விலங்கு, உயிரினத்தின் மீது வெளிப்பட்டால் கருணையாகிறது.
அந்த கருணையே பெரும் கருணையானால் எப்படி இருக்கும். அந்த பெருங்கருணையும் தனிப்பெரும்
கருணையானால் அவன் இரக்கத்தின் ஊற்றாகிறான். அதுவே இறைவனுடைய பண்பாகிறது. இறைவன் தனிப்பெருங்கருணையாளன்.
அல்லாவை பெருங்கருணையாளன் என்றே நபிகள் கூறுகிறார்.
அன்பு என்பது மனிதர்களிடம்
மட்டும் காணப்படுவது அன்று. அது விலங்குகளிடம் கூடக் காணப்படும் ஒரு பண்பு. தன் கன்றின்
மேல் அன்பில்லை என்றால் ஒரு பசு எப்படி அதற்கு பால் தரும். சில நேரங்களில் விலங்குகள்
கூட நேயத்தில் மனிதனை விஞ்சிவிடுகிறது. ஆமாம் கன்றை ஈன்ற பசு மடியில் நாய் பால் குடித்துள்ளது.
ஆட்டுக்குட்டிக்கு ஒரு நாய் தன் பாலைக்கொடுத்து நேசித்ததை சமீபத்தில் பத்திரிக்கையில்
பார்த்தேன். ஆகவே அந்த நேயமனப்பான்மை விலங்குகளுக்கும் உண்டு. விலங்குகள் மனிதர்களிடம்
இருந்து வித்யாசப்படுவது அறிவால் பகுத்தறியும் ஆற்றலே மனிதனை விலங்குக் கூட்டத்திலிருந்து
பிரிக்கிறது.
ஆகவே மனிதனுக்கு
அன்பு மட்டும் இருந்து அறிவு இல்லை என்றால் அது அழகாகாது. அறிவில்லாதவன், முட்டாளாகிறான்.
அறிவே மனிதனை சிந்தித்து செயல்பட வைக்கின்றது. அறிவுள்ளவன் அறிஞன். அந்த அறிவே பேரறிவு
ஆகின்ற போது பேரறிவாளன் ஆகிறான். பேரறிவு இன்னும்
மிகுதியானால் ஒப்பற்ற ஒளி பொருந்திய அறிவாளன் என்று சொல்லக்கூடிய வாலறிவன் அல்லது ஒப்பற்ற
பேரறிவாளன் ஆகிறான். அல்லாவை ஒப்பற்ற பேரறிவாளன் என்று நபிகள் கூறுகிறார்.
இறைவன் ஒப்பற்ற
பேரறிவாளன் இந்த பொருளிலேயே வள்ளுவரும்,
“கற்றதனால் ஆய பயன் என்கொல்
வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்” என்கிறார்.
இனி நாம் வள்ளலார்
தந்தருளிய மகாமந்திரமான
“அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!
தனிபெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!”
என்ற ஈரடி வாக்கியத்தை
நோக்குவோம். வள்ளற்பெருமானின் ஓரிறைக்கொள்கை இதில் நிலைநாட்டப்படுவதுடன் இறைவன் ஒளிமயமானவன்
என்பதைக் காட்டி ஒளிவழிபாட்டிற்கு இம்மந்திரத்தை தந்தருளியுள்ளார். இறைவனுடைய பண்புகள்
இதில் தெளிவாக உணர்த்தப்பட்டுள்ளது.
இம்மந்திரத்தை
இறைவனே தனக்குக் கொடுத்ததாகவும் அதை அப்படியே அன்பர்களுக்கு எடுத்துக் கொடுப்பதாகவும்
கூறுகிறார் வள்ளலார்.
ஒவ்வொறு சமயத்தாருக்கும்
ஒவ்வொறு மந்திரம் உண்டு. சைவத்திற்கு ஓம் நமச்சிவாய, வைணவத்திற்கு ஓம் நமோ நாராயணா.
அதே போன்று வள்ளலார் சுத்த சன்மார்க்கத்திற்கு தந்தருளிய மந்திரம் இந்த மகாமந்திரம்.
இது மந்திரமாக மட்டும் இல்லாமல் கோஷமாகவும் முழங்கப்படுகிறது. கோஷம் என்பது வெளிப்படையாக
சத்தமாக முழங்குவது. மந்திரம் என்பது மனதுக்குள் ஜெபிப்பது. உதாரணத்திற்கு சைவத்தில்
ஓம் நமச்சிவாய என்பது மந்திரம். அரகர நமப்பார்வதி பதையே அரகர மகாதேவா என்பது கோஷம்.
சைவ, வைணவத்தில் மந்திரம் வேறு கோஷம் வேறு. ஆனால் சுத்த சன்மார்க்கத்தில் மந்திரமும்,
கோஷமுமாக இந்த மகாமந்திரம் வள்ளலாரால் வழங்கப்பட்டுள்ளது.
இந்த மகாமந்திரத்திற்கு
பலர் பலவாறான பொருள் தந்துள்ளனர். எப்படி பொருள் சொன்னாலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய வகையிலேயே
ஞானிகள் வாக்கியங்களை வழங்குபவர். வள்ளலார் இறைவனை ஒப்பற்ற பெருந்தயவுடைய பேரறிவாளன்
என்கிறார். “அருட்பெருஞ்சோதி” என்ற சொல்லில் “ஜோதி” என்பது அறிவைக் குறிக்கிறது. பெருஞ்சோதி
என்பது பேரறிவு அருட்பெருஞ்சோதி என்பது ஒப்பற்ற பெருந்தயவுடைய பேரறிவைக் குறிக்கிறது.
இறைவன் ஒப்பற்ற பெருந்தயவுடைய பேரறிவாளன் என்பது இதில் தெள்ளத் தெளிவாக தெரிகிறது.
அவன் ஒளிமயமானவன்
என்று சொல்லும் போது ஜோதிமயமானவன் என்றும் சொல்லலாம். பெருஞ்சோதி என்பது மிகப்பெரிய
ஒளி. பொதுவாக ஜோதி என்பது சுடக்கூடியது. ஆனால் வள்ளலார் காட்டும் ஜோதிமயமான இறைவன்
சுடக்கூடியவன் அல்ல. அவன் “அருட்பெருஞ்சோதியானவன்” இவ்வெளி வெப்பம் தராமல் தண்மைதரும்
தண்ணொளி.
கருணைக் கதிர்களை
எங்கும் நீக்கமறப் பரப்பிக் கொண்டிருக்கும், வீசிக்கொண்டிருக்கும் இறையொளி! அருளொளி,
அதுவே “அருட்பெருஞ்சோதி” ஆகவே அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி என்பது பேரொளியாகத்
திகழக்கூடிய இறைவன் ஒப்பற்ற பெருந்தயவுடைய பேரறிவாளன் என்பதாகும்.
மேலும் ஒளியை உருவமாகக்
கொள்ளலாம். அது அருவமாகவும் திகழக்கூடியது. உரு அருவமாகவும் காட்சி அளிக்கக் கூடியது.
இறைவனும் இதேபோன்று உருவமாகவும், அருவமாகவும் அரு உருவமாகவும் இருக்கக் கூடியவனே.
“உருவராகியும், அருவினராகியும்
உருஅருவினராயும்
ஒருவரே உளார் கடவுள் கண்டறிமினோ”
– திருவருட்பா
திரும்பவும் மகாமந்திரத்தை
பார்ப்போம்.
“அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்சோதி”
இந்த மகாமந்திரத்தில்
ஏன் வள்ளலார் மூன்று முறை அருட்பெருஞ்சோதி என்கிறார் என்பதை சிந்திக்க வேண்டும். இரண்டு
முறை அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி! என்று சொல்லிவிட்டு பிறகு தனிபெருங்கருணையைச்
சொல்லி அருட்பெருஞ்சோதி என்கிறார்.
எனக்கு இதில் விளங்கும்
பொருளை நான் மற்றவர்கள் போலச் சொல்ல எனக்கும் உரிமை உண்டு. மகானின் ஒரு வாக்கியத்திற்கு
ஒருவர் ஒரு பொருள் சொல்கிறார் என்றால் அதே வாக்கியத்திற்கு இன்னொரு பொருளைச் சொல்ல
எவருக்கும் உரிமை உண்டு. அந்த வகையிலே எனக்கு
தெரிந்ததை நானும் சொல்கிறேன். மகாமந்திரத்தின் முதலாவது அருட்பெருஞ்சோதியின் அண்டத்தில்
விளங்கும் பெருஞ்சோதி! இந்த பெருஞ்சோதியின் ஒரு கூறே சூரியன். அப்பெருஞ்சோதியின் கூறுகளே
சந்திரன். நட்சத்திரங்கள் வள்ளலார் சொல்லுகின்ற இரண்டாவது அருட்பெருஞ்சோதி நாம் அகக்
கண்ணால் நமக்குள்ளே காணுகின்ற இறைஜோதி! இந்த ஒளியை சித்தர்கள் அகக்கண்ணால் கண்டு இறை
இன்பம் பெற்றார்கள். ஆகவே முதலாவது ஜோதி அண்டத்தில் விளங்கும் ஜோதி. இரண்டாவது ஜோதி
பிண்டத்தில் அதாவது நம் உடலின் உள் அகக்கண்ணால் காணும் ஜோதி!
இயற்கையிலேயே உடலில்
வெப்பம் உண்டு. அந்த வெப்பமே மனிதனை உயிரோடு இயக்குகிறது. உடலின் வெப்பம் இல்லையென்றால்
பிணமாகிறான். உயிர் பிரிந்ததும் மனித உடல் குளிர்ந்து வெப்பம் இழக்கிறது. நம்முள் ஆன்ம
ஒளியாகி இயங்கிக் கொண்டிருப்பது இறையொளியே.
அண்டத்தில் தெரியும்
ஒளிகளான சூரியன், சந்திரன், விண்மீன்கள் இல்லையென்றாலும் உலகம் அழியும். உயிரினங்கள்
வாழ முடியாது. அண்டத்திலும் நம் பிண்டத்திலும் இருந்து நம்மை இயக்குவது ஒளிமயமான இறைவனே.
இரண்டு முறை அருட்பெருஞ்சோதியைச்
சொன்னவர் பிறகு தனிப்பெருங்கருணையைச் சொல்லி மூன்றாவது முறையாக ஒரு அருட்பெருஞ்சோதி
சொல்கிறாரே! அது என்ன! தனிப்பெருங்கருணையான மிகப்பெரிய தயவு நம்முள் உருவானால் நாம்
உயிர்க்குலங்கள் அனைத்திலும் நமக்குள் கண்ட அதே இறையொளியைக் காணலாம். ஆகவே மூன்றாவதாகச்
சொன்ன அருட்பெருஞ்சோதி நம்மையன்றி மற்றவர்களிடமும்,
மற்ற உயிரினங்கள் அனைத்திலும் புலப்படும் இறையொளி. இந்த நிலையை எல்லோராலும் எட்ட முடியாது.
அதற்கு தனிப்பெருங்கருணை அவசியமாகிறது. அந்தத் தனிப்பெருங்கருணை நம்மிடம் இருந்தால்
வள்ளலாரைப் போன்று உயிர்க்குலங்கள் அனைத்திலும் இறைவனைக் கண்டு அவைகளுக்குத் தொண்டு
செய்யும் எண்ணம் வரும். அப்போது தான் அவர் பெற்ற அந்த மரணமில்லாப் பெருவாழ்வு நமக்கும்
கிட்டும். ஆகவே தனிப்பெருங்கருணை மனிதர்களிடம் வாய்க்கப் பெற்றால் மனிதன் இறைநிலையை
அடைகின்றான். ஒப்பற்ற பெருந்தயவுடைய பேரறிவும், தனிப்பெருங்கருணையும் எவனிடம் உள்ளதோ
அவன் சுத்த சிவம் ஆகிறான். இறைவனோடு இரண்டறக் கலந்து மரணமில்லா பெருவாழ்வை அடைவான்
என்பது திண்ணம்.
“கருணை நெறிஉற்றேன் எக்காலமும்
சாகாமல்
ஓங்கும் ஒளி வடிவம் பெற்றேன்”
“சிவமாக்கிக் கொண்டான் என்று ஊதூது
சங்கே
சிற்றம்பலத்தான் என்று ஊதூது சங்கே”
மேற்சொன்ன அருட்பாக்கள்
வள்ளலார் தானே ஒளிவடிவம் ஆனதாக பாடுகின்றார். சிவமானதாகவும் அருளாட்சி பெற்றதாகவும்
மரணத்தை தவிர்த்ததாகவும் பாடுகிறார். இந்த நிலையை எட்ட அவர் எடுத்துக் கொண்ட ஆயுதம்
என்ன? அன்பும் கருணையும் அதோடு சேர்ந்த தெளிந்த அறிவும் தானே அது. தெய்வம் எது என்று
தெளியவைத்த தூய அறிவு.
ஆகவே நாம் கடவுள்
நிலையறிய வேண்டும். அவன் அளவற்ற அன்பானவன். நிகரற்ற அறிவானவன் என்பதை உணர்ந்து நாமே
அந்நிலையை அடைதல் வேண்டும். அதனைத்தான் “கடவுள் நிலை அறிந்து அம்மயமாதல்” என்கிறார்
வள்ளலார்.
இவைகளை உணர்த்த
வந்த மகா மந்திரமே,
“அருட்பெருஞ்சோதி! அருட்பெருஞ்சோதி!!
தனிபெருங்கருணை! அருட்பெருஞ்சோதி!!”
சாதி, மதம், சமயம் தவிர்த்தல்
(அத்யாயம் 5)
ஒரே குடும்பமாக
வாழவேண்டிய மனித இனம் இன்று மதங்களைக் கொண்டும், சாதி சமயங்களைக் கொண்டும் பிரிவினை
பேசி வாழ்வது வேதனை தரும் ஒன்றாகும். இன்றைக்கு இந்திய திருநாட்டில் பாபர் மசூதி இடிப்பு,
இராமர் கோவில் கட்டும் திட்டம் என்ற மதங்களின் அடிப்படையில் அங்கங்கே தீவிரவாதங்கள்.
அதன் விளைவாக ஈடில்லாத ஆயிரக்கணக்கான மனிதச் சாவுகள் இவையெல்லாம் மனித நேயங்கொண்ட மனங்களால்
சகிக்க முடியாதவை.
மதங்களுக்கு இடையே
ஆன, சாதிகளுக்கு இடையேயான சண்டை, சச்சரவுகள் இன்று நேற்றல்ல, மதங்கள் சாதிகள் உருவான
காலத்திலிருந்தே இருந்து வந்துள்ளன. இஸ்லாமியர்கள் யூதர்களை, கிருஸ்துவர்களை கொன்றதும்
அவர்கள் இஸ்லாமியர்களை கொன்றதும், இஸ்லாம் தோன்றும் முன்பு அரேபியாவில் குறைஷிகள் இஸ்லாத்துக்கு
எதிராக கொலைகளை செய்ததும் ஏன் நம் நாட்டில் கூட இந்து மதத்தினர் பௌத்த ஜைன மதத்தை சேர்ந்த
ஆயிரக்கணக்கானவர்களைக் கழுவேற்றிக் கொன்றதும் மதங்களை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட
உயிர்க்கொலைகள், சமீபகாலங்களில் கூடத் தமிழ்நாட்டில் சாதிக்கலவரங்கள் அதன் விளைவாகச்
சிலை உடைப்புகள், குண்டு வெடிப்புகள், குண்டு வெடிப்புகள் என்று அந்த அநாகரிக சம்பவங்கள்
நடந்து கொண்டு தான் உள்ளன.
ஒரே இறைவன் மனிதனைப்
படைத்தான் என்றால் மனிதன் பல மதங்களைப் படைத்தான். அதோடு குழப்பங்களையும் குத்து வெட்டுகளையும்
உருவாக்கினான் மனிதன்.
இந்த மதங்களும்
சமயங்களும் அந்தந்த காலகட்டங்களில் மனிதர்களால் செம்மையாக வாழ்வு வாழவே ஏற்படுத்தப்பட்டது.
“சமைத்தல்” என்ற சொல்லில் இருந்து “சமயம்” வந்ததாகச் சொல்கிறார்கள். பச்சைக் கறி காய்களை,
அரிசியை அப்படியே உண்ண இயலாது. அதனை பக்குவமாக சமைத்தால், அதில் உப்பு, புளி, காரம்
என்று ருசிக்காக சேர்த்தால் அந்த உணவு உண்பதற்கு ஏற்றதாக இருக்கின்றது. அதே போன்று
மனிதனை பக்குவப்படுத்த, விலங்கு நிலையில் காட்டுமிராண்டிகளாக இருந்தவர்களை ஒரு நன்னெறிக்குக்
கொண்டு வர சமயம் கொண்டு வரப்பட்டது. ஆனால் இந்த குறிக்கோள் இன்று பயனற்றுப்போய் அதற்கு
நேர்மாறான விளைவுகளை ஏற்படுத்துவது நமக்கு வெள்ளிடைமலை.
பரினாம வளர்ச்சியில்
மனிதன் குரங்கிலிருந்து வந்தான் என்று டார்வின் பரிணாமக் கொள்கை அறிவியல் ரீதியாக எடுத்தியம்புகிறது.
குரங்குக்கு முன்பு மனிதன் இன்னும் பரிணாம வளர்ச்சி குன்றிய விலங்காக இருந்துள்ளான்.
குரங்கிலிருந்து
மனிதன் உருவானான் என்று சொல்லும் போது முதல் முதல் உண்டான மனிதன் எந்த மதத்தை சேர்ந்தவன்?
எந்த சாதியை சேர்ந்தவன்? அறிவியல் ரீதியாக மனிதர்கள் அனைவரும் ஹோமோஷேபியன்ஸ் என்ற இனத்தை
சேர்ந்தவர்களே. பேரினம் ஒன்றே சிற்றினம் மட்டுமே அந்தந்த தட்ப வெப்ப சூழ்நிலைக்கேற்றவாரு
வேறுபடுகிறது. குளிர்ப் பிரதேசத்தில் வாழ்பவன் அதற்குத்தக்க உடல் அமைப்போடு பிறக்கிறான்.
வெப்பப் பிரதேசத்தில் பிறப்பவன் அதற்கு ஏற்றவாறு உடல் அமைப்புடன் பிறக்கிறான். உலகின்
எந்த மூலையில் உள்ள ஒரு ஆண், உலகின் எந்த மூலையில் உள்ள எந்த ஒரு பெண்ணுடன் உடலுறவு
கொண்டாலும் இனப்பெருக்கம் கண்டிப்பாய் நடக்கும். இதற்கு மதமோ, சாதியோ என்ன தடை விதித்துள்ளது?
“ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்”
“நன்றே நினைமின்”
என்று ஒரே குலத்தையும்
ஒரே ஒரு இறைவனையும் திருமூலர் காட்டுகிறார்.
“இட்டார் பெரியோர், இடாதார் இழிகுலத்தோர்”
இந்த இரண்டு சாதிகளைத்
தவிர வேறு எதுவும் இல்லை என்கிறார் தமிழ்மூதாட்டி ஔவையார்.
உலகப் பொதுமறை
தந்த திருவள்ளுவப் பெருந்தகையும்
“பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்றே பறைசாற்றுகிறார்.
காற்று, சாதி,
மதம் பார்த்து வீசுவதில்லை. மழை சாதிமதம் பார்த்துப் பெய்வதில்லை. ஒரு குலத்துக்கு
மட்டும் சந்திரன் தெரிவதில்லை. நோயும் சாதி, மத, சமயம் பார்த்து மனிதர்களை தொற்றுவதில்லை.
மரணமும் அவ்வாறே…
“வரையில் உய்ர்குலம் என்றும் தாழ்குலம்
என்றும்
வகுக்கின்றீர் இருகுலமும் மாண்டிடக்
காண்கின்றீர்” – திருவருட்பா
உயர்குலம் என்றும்
தாழ்குலம் என்றும் நம்மை நாமே பிரித்துக் கொண்டாலும் இரண்டு குலமும் இறந்து போவது கண்கூடு
என்கிறார் வள்ளற்பெருமானார்.
வள்ளலார் தான்
வாழ்ந்த காலத்தில் இந்த மதசண்டைகள், சாதிச் சண்டைகள் அவரைச் சுற்றி எப்போதும் நடந்து
கொண்டே இருந்திருக்கிறது. ஒரு பக்கம் பட்டினிச்சாவுகள் இன்னொரு பக்கம் மதக்கலவரங்கள்
உயிரைக் குடித்த கொடுமை இவைகளைக் கண்டு வள்ளலார் கடுமையாக சாடுகிறார்.
“சாதியிலே மதங்களிலே சமயநெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே
ஆதியிலே அபிமானித்து அலைகின்ற
உலகீர்
அலைந்து அலைந்து வீணேநீர் அழிதல்
அழகல்லவே” – திருவருட்பா
இனியும் இது போன்று
மதம், சாதிகளைக் கூறிக்கொண்டு வீணே அழிதல் அழகாகாது என்கிறார்.
சாதி மதங்களை எதிர்த்து
மட்டுமல்ல. வள்ளலார் சாதி, மதம், சமயங்களைத் துறந்த புரட்சித்துறவி. வள்ளலாருக்கு முன்பு
எந்த ஞானியும் தான் சார்ந்திருந்த மதத்தை துறக்கவில்லை. சம்பந்தர், சுந்தரர், அப்பர்
போன்றோர் தாம் சார்ந்திருந்த சைவத்தின் உள் இருந்தே இறைநெறி காட்டினர்.
தாயுமானவர் சன்மார்க்கம்
தொடங்கி இருந்தாலும் அது வள்ளலாரின் சுத்த சன்மார்க்கமன்று. அது சமய சன்மார்க்கம்,
வேதாந்தம், சித்தாந்தம், இவைகளுக்கு இடையே உண்டான சன்மார்க்கம் வள்ளலாரின் சுத்த சன்மார்க்கம்
ஒன்றே சாதி, மத, சமயத் தடைகளை கடந்தது.
“சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தணந்தேன்”
“சாதியும் மதமும் சமயமும் பொய்யென
ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி”
இறைவன் தனக்குச்
சாதியும், மதமும், சமயமும் பொய் என்று உணர்த்தியதாக அருட்பெருஞ்சோதி அகவலில் குறிப்பிடுகிறார்.
மேலும்
“பொறித்த மதம்,
சமயம், எல்லாம்
பொய்பொய்யே அவற்றில்
புகுதாதீர்”
என்று சமய, மதங்களைப்
பொய் என்று துணிந்து அறிவித்த ஒரே ஒரு புரட்சியாளரும் துறவியுமானவர் திருவருட்பிரகாச
வள்ளற் பெருமானே!
“நால்வருணம் ஆச்சிரமம்
ஆச்சாரம் முதலாய்
நவின்ற கலைச்சரிதம்
எல்லாம் பிள்ளை விளையாட்டே
மேல் வருணம் தோல்
வருணம் கண்டிறிவார் இலைநீ”
என்று வருணங்களையும்
ஆச்சிரமம், ஆச்சாரங்களையும் பிள்ளை விளையாட்டு எனக் கண்டிக்கிறார்.
மதங்களையும் அவைகள்
கூறும் கற்பனைச் செய்திகளையும் தவிர்த்தவர் வள்ளலார்.
“ஊடல் செய் மதமும் அவற்றில்
உற்ற கற்பனைகளும் தவிர்த்தேன்”
– திருவருட்பா
மேலும் மதப்பாகுபாடு
சாதிப்பாகுபாடு பார்ப்பவர்களால் இறை இன்பத்தை உணர முடியாது. உள்ளத்தில் இறைவனின் திருநடனத்தை
காண இயலாது என்றும் சொல்கிறார்.
“மதம் என்னும் பேய் பிடித்து ஆடுகின்றார்
எல்லாம்
மன்றிடத்தே வள்ளல்செய்யும் மாநடம்
காண்குவரோ” – திருவருட்பா
வெற்றுக் கூச்சல்
“கூறுகின்ற சமயமெல்லாம் மதங்கள்
எல்லாம் பிடித்துக்
கூவுகின்றார் பலன் ஒன்றும் கண்டறியார்
வீணே
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார்
அவர்பால்
நீடுலகில் அழிந்துவிட நினைத்தேனோ
நிலைமேல்
ஏறுகின்ற திறம் விழைந்தேன் ஏற்றுவித்தாய்
ஆங்கே
இலங்கு திருக்கதவு திறந்து இன்னமுதம்
அளித்தே
தேறுகின்ற மெய்ஞான சித்தி உறப்புரிவாய்
சித்த சிகாமணியே என் திருநட நாயகனே”
– திருவருப்பா
பலவாறாகக் கூச்சல்
இட்டுக் கூவுகின்ற மதம், சமயம் இவைகளால் எந்த பலனும் யாரும் கண்டறியவில்லை. அவர்கள்
எல்லாம் செத்து சாம்பலாகி, மண்ணோடு மண்ணாய் நாறுகின்றார்கள். நானும் அப்படியே அழிந்து
விடுவேனோ? இல்லை. அதற்கு மேல் நிலையில் சென்று ஏற நினைத்தேன் ஏற்றுவித்தாய். அங்கே
அறிவுக்கதவைத் திறந்து உண்மையான பேறு பெறவைத்த என் நாயகனே என்கிறார்.
“பேருற்ற உலகிலுறு சமய மத நெறியெலாம்
பேய் பிடிப்புற்ற பிச்சுப்
பிள்ளை விளையாட்டென உணர்ந்திடா
துயிர்கள் பல
பேதமுற்றங்கும் இங்கும்
போருற்றிறந்து வீண் போயினர் இன்னும்
வீண்
போகாதபடி விரைந்தே
புனிதமுறு சுத்த சன்மார்க்க நெறிகாட்டி
மெய்ப்
பொருளினை உணர்த்தி எல்லாம்
ஏருற்ற சுகநிலை அடைந்திடப் புரிதி
நீ
என் பிள்ளை ஆதலாலே
இவ்வேலை புரிக என்றிட்டனம் மனதில்வே
றெண்ணற்க என்ற குருவே” – திருவருட்பா
3677
இந்த சமய மத நெறியெல்லாம்
பேய் பிடித்த பிள்ளையாட்டு என உணர்ந்திடாமல் மக்கள் அங்கும் இங்கும் பாகுபாடு காட்டி
போரிட்டு வீண் அழிகின்றனர். இன்னும் இதுபோன்று தொடர்ந்து அழிந்து போகாமல் விரைந்து
அனைவரையும் ஒருமைக்குள் கொண்டு வந்து சுகநிலை அடையச் செய்யவே எனக்கு இவ்வேலையைப் புரிக
என்றும் ‘நீ என் பிள்ளை” என்றும் இறைவன் வள்ளலாரையே சொன்னதாக பாடுகின்றார். இதைத் தவிர
மனதில் வேறு நினையாதே என்றும் இறைவன் சொன்னாராம்.
வள்ளலார் தம் திருவருட்பாவில்
அகில உலக சகோதரத்துவம் நிலைபெற வேண்டி பலநூறு பாடல்களை பாடியுள்ளார்கள்.
“ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும்
எவரும்
ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்தல்
வேண்டும்”
என்ற உயர்ந்த பொதுவுடமைக்
கொள்கையைத் தம் பாட்டில் வலியுறுத்துகிறார். அறிவாலும், பணத்தாலும், கல்வியாலும் ஒத்துள்ளவர்கள்.
அவைகளில் உயர்ந்து விளங்குவோர். அவைகளில் தாழ்ந்து விளங்குவோர் எவரும் “ஒருமையுளர்
ஆகி உலகியல்” நடத்த வேண்டும் என விழைந்த சமுதாய விஞ்ஞானியே வள்ளலார் மேற்சொன்ன இரண்டு
அடிகளில் சோசலிஸத்தையே உள்ளடக்கிய சமுதாயச் சீர்திருத்தத்தைச் சொன்ன ஞானி வடலூர் ஐயா.
இரத்ததானம் கொடுக்கும்
நேயமுள்ள மனிதர்களின் இரத்தம் மதம், சாதி பார்த்து சேருவதில்லை. கண்தானம் கொடுக்கும்
அன்பர்களின் கண்ணும் சாதி, மதம், சமயம் பார்த்து ஒளிதருவதில்லை. உடல் உறுப்புகளுக்கு
சாதி, மதம் இல்லாத போது அந்த உறுப்புகளா செய்யப்பட்ட மனிதனுக்குச் சாதியும், மதமும்
எங்கிருந்து சாதியும், மதமும், எங்கிருந்து என்பதை சிந்தித்து பார்க்க வேண்டும்.
வெங்கட்ராமனுக்கும்,
சீதாவுக்கும் பிறந்தால் இந்து ஆகிறான். ஜோசப்பிற்கும், மேரிக்கும் பிறந்தால் கிறித்துவன்
ஆகிறான். ரஹீமுக்கும், நூர்ஜஹானுக்கும் பிறந்தவன் இஸ்லாமாகிறான். எவனுக்கும் எந்த பெண்ணுக்கும்
பிறக்கும் மனிதன் மனித நேயமுமுள்ள மனிதன் ஆகிறான்? இது சமீபத்தில் நான் ஒரு பட்டிமன்றத்தில்
கேட்ட பேச்சு.
சாதி, சமய சழக்குகள்
எல்லாம் இருளை சமுதாயத்திற்கு தரக்கூடியது என்றும் அவைகளைப் புன்செய் நிலத்திற்கு எருவாக்கிப்
போட வேண்டும் எனவும் அந்த கண்மூடி வழக்கங்களையெல்லாம் ஆழமான குழிவெட்டி மண்ணைப் போட்டு
மூட வேண்டும் என்றும் வள்ளற்பெருமானார் சாடுகிறார்.
“இருட்சாதித் தத்துவச் சாத்திரக்
குப்பை
இருவாய்ப் புன்செயில் எருவாக்கிப்
போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாகச்
சிரம
வழக்கெலாம் குழிக்கொட்ட்டி மண்
மூடிப் போட்டு” – திருவருட்பா 4654
சாதி, மத வழக்கங்களை
இவ்வளவு கடுமையாக , ஆவேசமாகச் சாடிய ஞானியர் வள்ளற் பெருமானாருக்கு முன்பு எவரேனும்
உண்டோ? நிச்சயமாக இல்லை. அதனால் தான் அவர் புரட்சித்துறவியாகத் தென்படுகிறார். புரட்சியென்பது
உடையிலோ, நடையிலோ இல்லை. அவரவர்கள் சொல்லுகின்ற சொல்லிலும் செயலிலுமே உள்ளது.
அந்த உடையிலும்
வள்ளலார் மற்ற துறவிகளிடமிருந்து வேறுபடுகிறார். தூய்மைக்கு அடையாளமான வெள்ளாடையைப்
பெருமானார் தரித்திருப்பது அவருடைய புதுமையான நோக்கைக் காட்டுகிறது. காவி துறவிகளுக்குப்
பொருத்தம் ஆகாது என்கிறார் வள்ளலார். வெற்றிக்கு அடையாளமாக, வெண்மையை உடுத்துவதே துறவிக்கு
அழகு என்கிறார்.
சாதிப்பித்து,
இனப்பித்து உடைய உலகர்தம் கலகங்கள் எல்லாம் என்று ஒழிந்திடுமோ , உண்மையெல்லாம் சிவம்
ஒன்று என்று தெரிந்து சுத்த சன்மார்க்கம் இவ்வுலகில் என்று ஓங்குமோ என்று ஏக்கப் பெருமூச்சு
விடுகிறார்.
“பித்தெலாம் உடைய உலகார் தங் கலகப்
பிதற்தெலாம் என்று ஒழிந்திடுமோ
சத்தெலாம் ஒன்றென் றுணர்ந்த சன்மார்க்க
சங்கம் என்றாங்குமோ” – திருவருட்பா
4075
மக்கள் கள்ளம்
கபடம் இன்றி வாழ வேண்டும். மக்கள் அனைவரும் காதலிக்க வேண்டும். ஆமாம் அருள்நெறியை அனைவரும்
காதலித்து ஒருமை என்ற எண்ணத்தில் இவ்வுலகம் மகிழ்சியில் துள்ள வேண்டும் என்று பெருமானார்
ஆசைப்படுகிறார்.
“கள்ள வாதனையைக் களைந்து அருள்
நெறியைக்
காதலித்து ஒருமையில் கலந்தே
உள்ளவாறு இந்த உலகெலாம் களிப்புற்று
ஓங்குதல் என்று வந்து உறுமோ”
– திருவருட்பா 4078
“இச்சாதி சமய விகற்பங்களெலாம்
தவிர்த்தே
எவ்வுலகும் சன்மார்க்க பொதுவடைதல்
வேண்டும்” – திருவருட்பா
வள்ளற்பெருமானின்
எண்ணங்கள் பலித்தல் அன்றி இவ்வுகலம் இனி அமைதியை எதிர்பார்க்க முடியாது. இன்று அமெரிக்கா,
ஆப்கான் நாடுகளிடையே உருவான போரும் சரி, பாபர் மசூதி இடிப்பானாலும் சரி, காஷ்மீரில்
அன்றாடம் நடந்து வரும் குண்டு வெடிப்புகள் ஆனாலும் சரி அவைகளுக்கு எல்லாம் அடிப்படைக்
காரணமே மதவாதம் என்பதை நாம் மறக்க இயலாது. இன்்னும் எத்தனை விலைமதிக்க முடியாத மனித
உயிர்களை நாம் மதங்களுக்கு பலிதரப் போகிறோமோ! போதும் போதும்!இனிப் பெருமானாரின் சுத்த
சன்மார்க்கம் உலகெங்கிலும் பரவ வேண்டும். உலகம் அமைதிப் பூங்காவாகக் காட்சி அளிக்க
வேண்டும். பீரங்கிகளை பிடிப்பதற்கும், துப்பாக்கிகளை தூக்குவதற்கும் இனி கைகள் உயர
வேண்டாம். ஒரே கடவுளான அருட்பெருஞ்சோதியை, சுத்த சிவத்தைத் தொழுவதற்கு மட்டும் நம்
கைகள் உயர வேண்டும். நமது அறிவியல் கண்டுபிடிப்புகளை வைத்துக் கொண்டு குண்டு வெடிப்புகள்
நடத்த வேண்டாம். எல்லையை பாதுகாக்கக் கோடிக்
கணக்கில் செய்யும் செலவை மக்களிடம் அன்றாடத் தொல்லைகளை நீக்குதற்கும், பசி, பட்டினி
நீக்குதற்கும் செய்வோம். கைகுலுக்குவதற்காக மட்டுமே கைகலப்புகள் நடக்கட்டும்.
மனிதர்கள் தங்கள்
பெயருக்கு பின்னால் சாதிப் பெயர்களைச் சேர்த்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். சமய சின்னங்கள்
அணிவதில் அக்கறைக் காட்டுவதை நிறுத்தி அன்பை, அருளை நெஞ்சத்தில் இறுத்த நினைக்க வேண்டும்.
“ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர்தம் உறவு வேண்டும்…
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்”
இளமைப்பருவத்திலேயே
உலக இன்பங்களில் நாட்டத்தைச் செலவிடாது “மதங்களைப் பேய்” என்று வர்ணித்து அது தன்னைப்
பிடியாது இருக்க வேண்டும் என்கிறார். அப்படிப்பட்ட மாபெரும் புரட்சி சிந்தனையுள்ள துறவி
வள்ளலாருக்கு முன்பு எவரேனும் உண்டோ? அல்லது பின் தான் உண்டோ?
“பன்னெறிச் சமயங்கள் மதங்கள் என்றிடும்
ஓர்
பவநெறி இதுவரைப் பரவிய திதனால்
செந்நெறி அறிந்திலர் இறந்து இறந்து
உலகோர்
செறி இருள் அடைந்தனர் ஆதலின் இனி
நீ
புன்னெறி தவிர்தொரு பொதுநெறி எனும்வான்
புத்தமுது அருள்கின்ற சுத்த சன்மார்க்கத்
தன்னெறி செலுத்தக என்ற என் அரசே
தனி நடராஜ என் சற்குருமணியே”
– திருவருட்பா 3696
பலவகையான நெறிகளைக்
காட்டி மதங்கள், சமயங்கள் என்கிற தீய நெறிகள் இதுவரை உலகத்தில் பரவியது. அதனால் மக்கள்
வாழ்வு செம்மை அடையவில்லை. கலவரங்களால் இறந்து இறந்து அறியாமை இருளில் மூழ்கிக் கொண்டே
உள்ளனர். ஆகையால் அந்த சிறிய நெறிகளைத் தவிர்த்து உலக மக்கள் அனைவரையும் ஒன்றினைக்கும்
“பொது நெறி” ஆகிய சுத்தசன்மார்க்கத் தூய நெறி செலுத்தி உலகைக்காக்க என்று அருட்பெருஞ்சோதி
ஆகிய உள்ளத்தில் நடமாடும் தனிப்பெரும் கடவுள் வள்ளற் பெருமானாருக்குக் கட்டளை இட்டாராம்.
அந்தச் சுத்தசன்மார்க்க நெறி உலகத்திடை பரவ வேண்டும். அதற்கு “மதித்த சமய மத வழக்கெல்லாம்
மாய வேண்டும் வருணாசிரமம் என்னும் மயக்கம் நீங்க வேண்டும். கொதித்த லோகாச்சார கொதிப்பெல்லாம்
ஒழிய வேண்டும். கொலை, களவு, மற்றும் புலையும் அழிய வேண்டும் அதுவே வள்ளலாரின் விருப்பம்.
சத்திய ஞான சபை
வள்ளலார் மக்கள்
அனைவரும் ஒருமையுடன் வந்து வழிபட வடலூர் பெருவெளியில் ஒளிவழிபாட்டிற்கென அமைத்த சபையே
சத்திய ஞானசபை. 1872 ஆம் ஆண்டில் கட்டி முடிக்கப்பட்ட இதில் ஆண்டு தோறும் தைப்பூச நாள்
அன்று லட்சக்கணக்கான மக்களுக்கு ஜோதி தரிசனம் காட்டப்படுகிறது. மாதப்பூச நாட்களிலும்
ஆயிரக்கணக்கில் மக்கள் சென்று வள்ளலார் ஏற்றி வைத்த அருட்பெருஞ்சோதியைத் தரிசனம் செய்து
நலமுடன் வாழ்கின்றனர்.
வள்ளலார் தன் இறைவழிபாட்டிற்குக்
கட்டிய அமைப்புக்குச் சபை என பெயரிட்டது ஒரு புதுமை புரட்சியே. கோவில் என்று பெயரிடாது
சபை என பெயரிட்டதை நாம் கவனிக்க வேண்டும். சபை என்றால் பலதரப்பட்ட மக்கள் கூடும் இடம்.
இதுவோ “சத்திய ஞான சபை” . உண்மை அறிவை மக்களுக்கு வெளிப்படுத்தி உணர்த்திக் காட்டுகின்ற
சபை. இங்கே ஆண், பெண், வேறுபாடு இன்றி உயந்தோர், தாழ்ந்தோர், வேறுபாடு இன்றி, கற்றவர்,
கல்லாதோர் என்ற வேறுபாடு இன்றி, சாதி சமய பாகுபாடு இன்றி, இல்லறத்தார், துறவிகள் என்ற
வேறுபாடு இன்றி அனைவரும் ஒருமை உணர்வுடன், அருளொளியான இறைவனை வழிபடும் இடம். உடற்கூறியல்
தத்துவத்தின் அடிப்படையில் எண்கோண வடிவில் தாமரை மலர் போன்று வள்ளலார் அதை அமைத்துள்ள
விதம் கண்ணுக்கு விருந்தாகிறது. இதுவும் வள்ளற்பெருமானார் செய்த சாதனைகளில் ஒன்று.
“சத்திய ஞானசபை என்னுள் கண்டனன்
சன்மார்க்க சித்தியை யான் பெற்றுக்
கொண்டனன்
நித்திய ஞான நிறை யமுது உண்டனன்
நிந்தை உலகியற் சந்தையை விண்டனன்” - திருவருட்பா
நம் உடம்பே ஞானசபை.
இதற்குள் இருக்கும் ஆன்ம ஜோதியே இறைவன். அதனைப்
புறத்தில் காட்டவே சத்திய ஞானசபை வள்ளற்பெருமானால் கட்டப்பட்டது.
எல்லோரும் சத்தியஞானசபையை
கண்டு களியுங்கள். அருட்பெருஞ்சோதி ஆண்டவன் தரிசனம் பெறுங்கள். அங்கே ஒளிவீசிக் கொண்டு
இருக்கும் ஜோதி வள்ளற் பெருமானின் திருக்கரங்களால் எற்றி வைக்கப்பட்ட ஜோதி!
தொடரும்…….
மீதி பாகங்களான
புலால் தவிர்த்தல்,
பசிப்பிணி மருத்துவர், யார் இறைவன்?, முற்போக்குச் சிந்தனைகளும் செயல்பாடுகளும், தேன்
எனத் தித்திக்கும் திருவருட்பா, வளமான வாழ்வுக்கு வள்ளலார் வழங்கும் வழிமுறைகள்
ஆகியவைகள் இந்த வலைப்பூவில் அடுத்த பாகமாக தொடரும். அதே போல இந்த நூலின் அணிந்துரைகளும்
அடுத்த பாகத்தில் கடைசியில் வெளிவரும். இதைபடிக்கும் தோழர்கள் உங்கள் மேலான கருத்துகளை
பின்னூட்டம் வழியே தெரிவிப்பதோடு என் வலைப்பூவில் இதற்கு முன்னர் நாம் வெளியிட்டுள்ள
எம் கவிதைத்தொகுப்பு நூல்களையும் படித்து கருத்து தெரிவிக்கும்படியும் கேட்டுக்கொள்கின்றேன்.
நன்றி. வணக்கம்.
– டாக்டர்
ஜெய.இராஜமூர்த்தி.
டாக்டர். ஜெய.இராஜமூர்த்தி, M.B.,B.S.,D.C.H.,
ReplyDeleteநன்றி ஐயா,
தங்களுடைய சன்மார்க்க படைப்புகள் அனைத்தும் அற்புதான படைப்புகள் .
தங்களுடைய படைப்புகள் அனைத்தும் எல்லா சன்மார்க்கர்களுக்கும் பயனுடையதாக இருக்கட்டும் .
வாழ்க வாழ்க வளம்பெற வாழ்க !
Sir, Well Written, Kindly proceed further.
ReplyDelete(Dr.B.Vijayakumar, Gauhati University, Assam)