என்னுரை
மரு. ஜெய. ராஜமூர்த்தி
தலைவர், வள்ளலார் தமிழ் மன்றம்
திருவெண்காடு - 609 114
நாகப்பட்டினம் மாவட்டம்
கைப்பேசி 9443525600
மின்னஞ்சல்: rajamoorthy2010@yahoo.in
அருட்பெருஞ்ஜோதி! அருட்பெருஞ்ஜோதி!
தனிப்பெருங்கருணை! அருட்பெருஞ்ஜோதி!
ஆன்மநேயம் கொண்ட உள்ளங்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நல்வணக்கம்!
அரசுப்பணியில் செம்பனார்கோயில் வட்டார மருத்துவ அலுவலராக பணியாற்றும் நான் திருவெண்காட்டில் மாலை நேரத்தில் குழந்தை நல மருத்துவத்தையும் இருபது ஆண்டுகளுக்கு மேலாக செய்து வருகிறேன்.
தொழில் சார்ந்த பணியில் தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருந்தாலும் சமுதாயப் பணியையும், தமிழ்ப்பணியையும் என்றும் மறந்ததில்லை. திருவெண்காடு வள்ளலார் தமிழ் மன்ற நிறுவனராகவும், தலைவராகவும் இருந்துகொண்டு தொடர்ந்து திங்கள்தோறும் கூட்டங்கள் நடத்த முயற்சி எடுத்துக் கொண்டு வருகிறேன். நல்ல உள்ளம் கொண்ட ஆன்றோர்கள், சான்றோர்கள், நண்பர்கள் ஒத்துழைப்புடன் மன்றம் சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
குடும்ப வாழ்வு, தொழில் வாழ்வு, சமுதாயப் பணி என்று சுழன்று கொன்டிருந்தாலும் என் எண்ணம் எதையோ ஒன்றை ஓயாமல் தேடிக்கொண்டிருக்கிறது என்பதே உண்மை.
முத்தர் மனமிருக்கும் மோனத்தே: வித்தகமாய்
காதி விளையாடி இருகை வீசி நடந்தாலும்
தாதி மனம் நீர்க்கு தான்.
இந்தப்பாடல் சித்தர் நெறியை என்னை எப்போதும் சிந்திக்க வைத்துக்கொண்டிருக்கும் பட்டினத்தார் பாடல்.
தலையில் நீர் சுமந்து வரும் பெண்கள் குடத்தை தலையில் சுமந்து வரும் போது விளையாடிக் கொண்டும், இருகை வீசிக்கொண்டும், ஊர்க்கதையை பேசிக்கொண்டும் சிரித்து சென்று கொண்டிருந்தாலும் அவர்களின் கவனம் முழுவதும் தலையில் உள்ள குடம் கீழே விழாதவாறு அதிலேயே குவிந்திருக்கும். அதைப்போலே எவ்வுளவு வேலைகள், குடும்பம், சொந்தம், நட்பு , வருமானம், நோயாளிகள் என்று என்னைச் சுற்றி எது இருப்பினும் என் எண்ணம் எல்லாம் சொல்லமுடியாத ஒரு உணர்வு நிலையை, என் உடல், மனம் கடந்து உள்ளிருக்கும் ஒன்றையே சுற்றி வருகிறது.
இறைமையின் உண்மையை உலகுக்கு பல ஞானியர் உணர்த்தி சென்றுவிட்டனர். சத்தாக, சித்தாக, ஆனந்தமாக என்றும் அழியாது இருந்து கொண்டிருக்கும் அந்த இருப்பையே சிவம் என்பர். அதனை இயற்கை உண்மையாக, இயற்கை விளக்கமாக, இயற்கை ஆனந்தமாக வள்ளலார் காட்டுவார். இரையின்பம் என்பது ஒருவர் வெளியில் தேடாமல் தமக்குள்ளே உள்ள ஒன்றை கண்டு அதிலே லயிக்கும் ஆனந்த அனுபவம் என்கிற உண்மையை வள்ளலாரே எனக்குப் புரியவைத்தார்.
வள்ளலாரை மேன்மேலும் படித்துக்கொண்டிருக்கும் நான் இதற்கு முன்பு எழுதியுள்ள நான்கு நூல்களிலும் அவரது கொள்கைகளையே மையமாக வைத்து எழுதியிருந்தேன். .இந்நிலையில் எனது நண்பர் டாக்டர். ப. சரவணன் எழுதியுள்ள "வாழையடி வாழையென" என்ற நூலைப் படித்த போது அதில் வைகுண்டர் சிந்தனைகள், வள்ளலாரின் சிந்தனைகளை ஒத்திருந்ததை காண நேரிட்டது. பிறகு வைகுண்டர் பற்றிய அறிய முற்பட்ட எனக்கு பல நூல்கள் உதவி புரிந்தன. உடனே வைகுண்டர், வள்ளலார் இருவரையும் ஒப்பாய்வு செய்து சிறிய அளவில் நூல் செய்ய விழைவு ஏற்பட்டது. அதன் விளைவே இந்நூல்.
பக்தி என்பது பிற உயிர்களை நேசிப்பது அல்லது மனஉருக்கம் என்பதை புரிய வைப்பது, சுயநலம் கடந்த காதல் பொதுநலன் வலியுறுத்தல், மூடநம்பிக்கைகளைக் களைதல், கண்மூடித்தனமான சடங்குகளைக் கைவிடுதல், உள்ளொளி பெருக்குதல், சாதி சமய வேறுபாடுகளைக் கடந்து அனைவரையும் நேசித்தல், பிறரை மதித்தல், எளியவர்க்கும் ஏழைக்கும் இரங்குதல், பிறர்க்கு உதவி செய்ய முடியாவிட்டாலும் துன்பம் வராது இருத்தல் இவைகளே எம் பேச்சிலும் எழுத்திலும் கருவாக இருக்கும். அதன் தொடர்ச்சியே இந்நூல்.
இந்நூலுக்கு நல்லதொரு அணிந்துரை நல்கியுள்ள பேராசிரியர் முனைவர். த. அகரமுதல்வன் அவர்களுக்கு என் நன்றி உரித்தாகுக. இந்நூலை எழுத பலவகையிலும் துணைபுரிந்த நண்பர் திருச்சி .ந. சத்யா என்கிற சத்தியமூர்த்திக்கும் என் நன்றிகள். எனது ஆன்மீக தேடல்களுக்கு தடையேதும் போடாது, எனது சிந்தனைகளுக்கு சிறை ஏதும் இடாது என் உணர்வுக்கு மதிப்பளித்து ஆக்கமும், ஊக்கமும் அளிக்கும் என் மனைவி ஹேமலதாவையும் இவ்விடத்தில் நினைவு கூற விரும்புகிறேன். அய்யா வைகுண்டர் நிறுவிய சாமித்தோப்பு, தலைமைப்பதி, முத்திரக்கிணறு, நிழல்தாங்கல்கள் உள்ளிட்ட புகைப்படங்களை நாகர்கோயிலில் இருந்து வரவழைத்துத்தந்த அன்புள்ளம் கொண்ட மருத்துவர் ம.அனுஷா தேவிக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்நூலை நல்லவகையில் தட்டச்சு செய்து தந்த ஆக்கூர் தம்பி இல்யாஸ் அவர்களுக்கும் எம் நன்றிகள் உரித்தாகுக.
அன்புருவோம் பரமசிவமே!
இப்படிக்கு
ஜெய. ராஜமூர்த்தி
No comments:
Post a Comment