அணிந்துரை
பேராசிரியர் முனைவர். த.அகரமுதல்வன், M.A.. M.Phil.. Ph.D..
பாருக்குள்ளே நல்ல நாடாகத் திகழ்ந்த பாரதத் திருநாடு, சாதி மத பேதங்களால் தாழ்வுற்று அன்னியர் ஆட்சியால் அடிமைப்பட்டு, 18,19 ஆம் நூற்றாண்டுகளில் மடமை இருள் மண்டிக்கிடந்து. வறுமையிலும் அறியாமையிலும் நலிவுற்றழிந்த நாட்டைத் திருத்த வந்த தீரர் பலர். அவர்களுள் சாதனை புரிந்து சரித்திரம் படைத்தவர்கள் இவர்கள்:
1. இராசாராம் மோகன்ராய் (1774 - 1833)
2. வைகுண்டர் (1809 - 1851)
3. வள்ளலார் (1823 - 1874)
4. தயானந்த சரஸ்வதி (1824 - 1883)
5. இராமகிருஷ்ண பரமஹம்சர் (1836 - 1886)
6. நாராயண குரு (1854 - 1928)
. 7. விவேகானந்தர் (1863 - 1921)8. மஹாத்மா காந்தி (1869 - 1948)
9. மகாகவி பாரதி (1882 - 1921)
இவர்கள் அனைவரும் பிறப்பால் இந்துக்கள்: சிறப்பால் சர்வமத சமரசம் பேசிய ஞானியர்: இவர்கள் வாழ்ந்த மடமை இருள் மண்டிக் கிடந்த காலம்: இவர்களோ அவ்வடர்ந்த இருளை அடர வைத்த சீர்திருத்தவாதிகள். இவர்கள் அனைவரும் கடவுள் உண்டு என்பதை ஒத்துக் கொண்டவர்கள்: ஆனால் கடவுளின் பெயரால் மலிந்திருந்த பொய்மைச் சடங்குகளைப் பொசுக்கியவர்கள். ஆதலின் அடிப்படைப் கொள்கையில் ஒற்றுமைக் கொண்ட இவர்களை ஒப்பிட்டு ஆய்வது சமூக வளர்ச்சிக்கு பயனளிக்கும். இவர்களிடயே உள்ள சிறு சிறு வேற்றுமைகள் இவர்கள் வாழ்ந்த காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்றவை எனக் கொண்டவை. அவை இவர்களின் தனித்தன்மைகள்.
இச்சமூக ஆன்மீகவாதிகளில் வைகுண்டரையும் வள்ளலாரையும் ஒப்புநோக்கி இந்நூலை உருவாக்கியுள்ளார் மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி அவர்கள்
" ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளாகி
உலகியல் நட.த்த வேண்டும்".
என்ற கொள்கையுடன் புதிய சமுதாயம் உதயமாக உழைத்த வள்ளலார்க்கு 14 ஆண்டுகளுக்கு முன்தோன்றி "தாழக் கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம்" என்று, அடிமைகளாக நடத்தப்பெற்ற பதினெட்டு சாதியினரின் முன்னேற்றத்திற்கு பாடுபட்ட வைகுண்டருடன் ஒப்பிட்டு நோக்கும் போது, வைகுண்டரின் தாக்கமும் செல்வாக்கும் ( Impact and Influence ) எந்த அளவிற்கு வள்ளலாரிடம் இருந்தது என்பதை அறியலாம். வைகுண்டரிடம் இல்லாத சில கொள்கைகளை வள்ளலாரிடம் காணும் போது வள்ளலாரின் தனித்தன்மைகளை அறியலாம்.
ஒப்பாய்வு என்பது உயர்வு தாழ்வு காண்பதற்கு அன்று: ஒப்பிடப்படும் இருவரின் ஒற்றுமைகளை கொண்டு உவக்கவும்: வேற்றுமைகளைக் கண்டு அதற்கான காரணங்ளை ஆய்தற்கும் ஆகும்.
இந்த அடிப்படையில் இந்நூல்லாசிரியர் மருத்துவர் ஜெய. ராஜமூர்த்தி அவர்கள் இருவரைப் பற்றிய தரவுகளைத் திரட்டி ஒப்பிட்டு நோக்கியுள்ளார்கள்.
வைகுண்டரும் வள்ளாரும் " ஒரு தெய்வ வழிபாட்டினர் " என்பதும், சிறு தெய்வ வழிப்பாட்டை ஏற்காதவர்கள் என்பதும் இருவருமே ஒளிவழிபாட்டினை முடிந்த முடிபாகக் காட்டினர் என்பதும் வியத்தகு ஒற்றுமைகள். வைகுண்டரிடமிருந்து வள்ளலார் ஒளி வழிபாட்டைப் பெற்றாரா? அல்லது தமிழகத்தில் தொன்மைக் காலத்தில் இருந்து தமிழர்கள் செய்துவந்த ஒளி வழிபாட்டினை மேற்கொண்டு, அதற்கே முதன்மையும், முழுமையும் தந்தாரா? என்பதை மேலும், அறிஞர்கள் ஆய்வு செய்ய வேண்டும். தமிழரின் தொன்மையமான வழிபாட்டுச் சின்னமான சிவலிங்கமே சுடரின் கல்வடிவம் என அறிஞர் சிலர் சொல்லி இருக்கின்றர். அருவுருவமான இவ்வொளி வழிப்பாடு எல்லாருக்கும் இயன்றதும் ஏற்றதுமாகும்.ஓரறிவு உயிர் முதல் ஆறறிவு உயிர் வரை அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செய்வதே வள்ளலாரின் பெரு விருப்பமாகவும், விண்ணப்பமாகவும் இருப்பதை அறிவோம்.
" அப்பா நான் வேண்டுதல் கேட்டு
அருள் புரிதல் வேண்டும்
ஆயிர்கட்கு எல்லாம் நான்
அன்பு செயல் வேண்டும் "
என்பதில் வள்ளலாரின் உயர் கொள்கையான ஜீவ காருண்ய ஒழுக்கம் எனும் உயிர் இரக்கத்தையும் அதற்கென அவர் வேண்டிய வரத்தையும் காணலாம். இவ்வுயிர் இரக்கக் கொள்கையே வைகுண்டர் மக்களின் துயர் துடைக்கத் தூண்டுகோலாக இருந்துள்ளது.
"அறிந்து பல ஜாதி முதல்
அன்பொன்னுக்கு உள்ளானால்
பிரிந்துமிக வாடாமல்
பெரியோராய் வாழ்ந்திருப்பார்"
எனும் வைகுண்டரின் எளிய அவரின் உயிர் இரக்கமும், அன்பினால் ஒன்றுபட்டால் உயர்வாக வாழலாம் எனும் தருக்கமும் புலனாகிறது. அய்யா ஆலயங்களில் (பதிவுகள், நிழல், தாங்கல்கள்) இன்றும் விளக்கு வழிபாடு நடைபெறுவதாக நூலாசிரியர் குறிப்பிடுகிறார்.
உயிர்ப்பலியைத் தவிர்ப்பதிலும் புலால் மறுப்பதிலும் வைகுண்டருக்கும் வள்ளலார்க்கும் அமைந்திருந்த ஒற்றுமையை நூலாசிரியர் எடுத்துக்காட்டியுள்ளார். வைகுண்டர் பாமரர்க்கு புரியும் பைந்தமிழில்
"ஆடு கிடாய் கோழி, பன்றி
அறுத்துப் பலியிடார்கள்"
எனப் பாடுவதும், வள்ளலார்
"நலிதரு சிறிய தெய்வமென் றையோ
நாட்டில் பலபெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள்
பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே
புந்திநொத் துளநடுக் குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில்
கண்டகா லத்திலும் பயந்தேன்".
என்று உள்ளமுறுகிப் பாடுவதைப் படிக்கிறபோதே கண்களில் நீர் பனிக்கிறதே.
வைகுண்டரும் வள்ளலாரும் பலியிடக் கொண்டு சென்ற ஆடுகளைக் காப்பாற்றிய நிகழ்வொற்றுமையை ஜெய. ராஜமூர்த்தி எடுத்துக்காட்டிள்ளார். கௌதம புத்தரின் வரலாற்றிலும் இதே நிகழ்வுண்டு.
வைகுண்டரும் வள்ளலாரும் பசிப்பணி தீர்க்கும் மருத்துவராகவும் உடற்பிணி போக்கும் மருத்துவருக்கும் திகழ்ந்துள்ள ஒற்றுமையும் இந்நூலில் காட்டப் பெற்றுள்ளது.
திருமூலர் வழியில் வைகுண்டரும் வள்ளலாரும் இறந்தவரை சமாதி வைப்பதை வழியுறுத்துகின்றனர்.
வைகுண்டர் தத்துவக் கொட்டகை அமைத்தார். வள்ளலார் சத்திய ஞான சபை அமைத்தார். வைகுண்டரின் இயக்கப் பெயர் அன்புக் கொடி இயக்கம். வள்ளலாரின் இயக்கம் சமரச சுத்த சன்மார்க்க சங்கம். இப்படி இருவரும் கொடியும், இயக்கமும், சங்கமமும், சபையும் நிறுவித் தத்தம் கொள்கையைப் பரப்பியுள்ளனர்.
இருவருக்கும் அமைந்த காலமும் களமும் பற்றிப் காணும்போது, காலம் கிட்டத்தட்ட ஒன்று தான். களந்தான் வேறுபடுகிறது. வள்ளலார் மருதூர், சென்னை, கருங்குழி, வடலூர், மேட்டுக்குப்பம் ஆகிய பகுதிகளில் வாழ்ந்தவர். இவருக்கு எதிர்ப்பு சிறிது இருந்தது. ஆனால் எதிர்த்தோரும் கற்றறிந்த சமயச் சான்றோர். ஆனால் வைகுண்டருக்கு அமைந்த களமோ மிகக் கொடுமையானது. அவர் வாழ்ந்த இன்றைய கன்னியாகுமரி மாவட்டம், அவர் காலத்தில் திருவிதாங்கூர் அரசர் கையில் அவதிப்பட்டுக்கொண்டிருந்தது. அறியாமையும், வறுமையும், சாதிக்கொடுமையும்,தீண்டாமையும், மூடத்தனங்களும், முடைநாற்றம் வீசும் பகுதியாக அது அழுகிக் கிடந்தது. வைகுண்டர் பிறந்த சான்றோர் குலம் பேசும் வழக்கில் சாணர் எனப்பட்டது. 63 நாயன்மார்களில் ஒருவராகிய ஏனாதிநாத நாயனார் பிறந்த சான்றோர் குலத்தில் பிறந்த ஆணுக்குத் தலைவரியும் பெண்ணுக்கு முலை வரியும் உண்டு! முலைவரி கட்ட முடியாத ஒரு பெண் தன் இரு மார்பகங்களையும் அறுத்தெடுத்து வரி வசூலிக்க வந்தவரின் தட்டில் வைத்த கொடுமையை இன்று நினைத்தாலும் இரத்தம் கொதிக்கிறது. இந்தக் கொடியவர்கள் மத்தியில் ஐயா வைகுண்டர் "அன்புக் கொடியைத்" தூக்கிப் பிடிக்க எத்துணை வேதனைகளுக்கு ஆட்பட்டிருக்க வேண்டும் என்று எண்ணிப் பாருங்கள்! அய்யாவுக்கு அமைந்த களம் உலைக் களமா? இல்லை! இல்லை! அதனினும் கொடிய கொலைக்களம்.
இருவருக்கும் பின்னர் அவர்களின் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இருவருக்கும் அன்பர்கள் பெருகி வருகின்றனர். எனினும் வைகுண்டரின் புகழ் தமிழகத்தின் தென்கோடியில் மட்டுமே தேங்கிக் கிடக்கிறது. அண்மையில் வசந்த் தொலைக்காட்சி அவர் வரலாற்றை இளங்காலையில் ஒளிபரப்புக்கிறது. மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மா அவர்களின் தமிழக அரசும் ஆராதனை அன்று விடுமுறை அறிவித்துச் சிறப்பித்துள்ளது. வள்ளற் பெருமானின் புகழ் தமிழகம் முழுவதும் பரவி வருகின்றது.அருட்செல்வர் நா.மகாலிங்கம் போன்றோரின் பணியால் அருட்பா மொழி பெயர்ப்பாகிப் பிறமாநிலங்களிலும், அயல் நாடுகளிலும் மெல்லிய பூங்காற்றாக வீசத் தொடங்கியுள்ளது.
மருத்துவர் ஜெய.ராஜமூர்த்தி போன்றோரின் எழுத்தாலும், பேச்சாலும் சன்மார்க்க சீலர்களான வைகுண்டரின் கொள்கைகளும், வள்ளலாரின் கொள்கைகளும் உலகமெங்கும் பரவ வேண்டும். ஜெய.ராஜமூர்த்தி எழுச்சிமிக்கப் பேச்சாளர். எளிமையாக எழுத வல்லவர் - எனவே இவர் தொடர்ந்து பணிசெய்து சன்மார்க்க நெறி பரப்ப அருட்பெருஞ்சோதி ஆண்டவர் அருள்புரிய வேண்டுவோம்.
இடம் : திருவெண்காடு அன்பன்
நாள் : 04.03.2013. த.அகரமுதல்வன்
(சாமித்தோப்பு ஐயா வைகுண்டபதியின்
181-ஆவது ஆராதனை தினம்)
சிவசிவ சிவசிவ அரகரா அரகரா!
சிவசிவ சிவசிவ அரகரா அரகரா!
- வைகுண்டர்
அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
-வள்ளலார்
No comments:
Post a Comment