.

.

Sunday, October 9, 2016

4, 5 மற்றும் 6வது அத்தியாயங்கள் – வைகுண்டர் வள்ளலார் ஒரு பார்வை ஒப்பாய்வு நூல்



ஆன்மநேய ஒருமைப்பாடும் , மனித நேயமும் –  நான்காம் அத்தியாயம்   

 நேயம் என்பது பிறரையும், பிற உயிர்களையும் நேசித்து அன்பு செலுத்துவது, மனித நேயம் என்பது ஒரு மனிதன் சக மனிதரிடம் காட்டுகின்ற அன்பாகும். ஆன்ம நேயம் என்பது ஆன்மா உள்ள எல்லா ஜீவராசிகளிடம் அணைத்து உயிர்களிடமும் காட்டும் அன்பாகும். ஓரறிவு படைத்த செடி, கொடி, பயிர் முதல் ஆறறிவு படைத்த மனிதன் வரை உயிர் உள்ள தாவரங்களான புல், பூண்டு, மரம், செடி, கொடிகள் முதல் புழு, பூச்சிகள், வண்டுகள், பறைவகள் விலங்குகள் மற்றும் மனிதர்கள் வரை உயிர்குலத்தின் மேல் காட்டும் அன்பாகும், மனித நேயத்தைவிட உயர்ந்தது ஆன்மநேயம். மனித நேயத்தையும் சேர்த்து உள்ளடக்கியதே ஆன்ம நேயமாகும். இந்த ஆன்ம நேயத்தையே வைகுண்டரும், வள்ளலாரும் போதிக்கின்றனர்.

“ ஆடு கிடா வெட்டிப் பலியிடாதே, சக உயிர்களிடத்தில் அன்புகாட்டு. அது தான் இறைவனை அடைய வழி “ என்கிற ஆன்ம நேய சிந்தனையை விதைத்தவர் வைகுண்டர். மேலும் இல்லறத்தை விட்டு துறவு மேற்கொண்டு இறைபணி புரிவதைவிட இல்லறத்தில் இருந்து கொண்டே இறைவன் திருவடி சேர சொல்கிறார். “ இல்லறத்தில் இருந்து தவம் செய். தர்மம் செய். தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம். இயலாதவர்களுக்கு முடிந்தவரை உதவி செய் “ இது தான் இறைவனுக்கு செய்யும் புனிதமான வழிபாடு என உணர்த்தியவர் அய்யா வைகுண்டர்.

                “ இன்று முதல் எல்லோரும்  
           ஒன்றுதான் புத்தியா இருங்கோ  
         அவனவன் தேடு முதல் அவனவன் வைத்து ஆண்டிருங்கோ  
              எவனெவனுக்கும் பதறியினி அலைய வேண்டாமே “

என்பது வைகுண்டரின் வாக்கு. எல்லோரும் ஏற்றத்தாழ்வு இன்றி ஒருவரை ஒருவர் சமமாக மதித்து எவருக்கும் அஞ்சாமல் வாழ வேண்டும் என்பதே அது.

                           அறிந்து பல ஜாதி முதல்
                         அன்பொன்னுக் குள்ளானால்
                            பிரிந்து மிக வாளாமல்
                         பெரியோராய் வாழ்ந்திருப்பார்

என்கிற வைகுண்டரின் வரிகள் ஜாதி வேற்றுமைகளைக் கடந்த மனிதநேயத்தையும், மனித குல ஒற்றுமையையும் வலியுறுத்துகிறது.

இவர் அமைத்த நிழல்தாங்கல்களில் தருமம் செய்வதும், அன்னதானம் வழங்குவதும் ஆகிய இரண்டு அறப்பணிகளோடு கல்வி கற்பிக்கும் கல்விக் கூடங்களாகவும் அவைகள் திகழ்ந்துள்ளன. இந்த செயல்கள் மூலம் ஒட்டுமொத்த  மனித குலத்தை மேம்படுத்தி ஒருமைப்பாட்டைக் காண வைகுண்டர் விழைந்தது தெரிகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அனைத்து உயிர்களின் நலன் வேண்டி பக்தி உலகில் ஆன்மிக உலகில் முதல் குரல் கொடுத்தவராக நான் அய்யா வைகுண்டரைப் பார்க்கிறேன்.   

                
நாற்பத்து இரண்டு ஆண்டுகளே இம்மண்ணில் மனித உருவில் நடமாடிய தெய்வமான அய்யா வள்ளலாரைவிட வயதில் பதின்மூன்று ஆண்டுகள் மூத்தவர் ஆவார். வள்ளலார் பிறந்த ஆண்டு 1823. வைகுண்டர் பிறந்த ஆண்டு 1809. ஆகவே வள்ளலார் வழிகோலிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வு தத்துவத்திற்கு ஒரு அடிக்கல்லை அவருக்கு முன்பே நாட்டியவர் வைகுண்டர். 

ஆன்மநேய ஒருமைப்பாட்டுணர்வை ஆன்மநேய ஒருமைப்பாட்டு உரிமையாக   மிக விளக்கமாகவும், ஆழமாகவும், உயிர் மூச்சாகவும் முழக்கமிட்டவர் வள்ளற்பெருமான். வள்ளலார் வலியுறுத்திய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை என்பது மாநில ஒற்றுமை, தேச ஒற்றுமை, உலக நாடுகள் ஒற்றுமை ஆகியவற்றைத் தாண்டிய அகில அண்ட ஒருமைப்பாடு எனில் மிகையில்லை.

“ எவ்வுலகும் அண்டங்கள் அத்தனையும் நான் காண
  இவ்வுலகில் எந்தை எனக்களித்தான்  - எவ்வுயிரும்
  சன்மார்க்க சங்கம்தனை அடையச் செய்வித்தே
  என் மார்க்கம் காண்பேன் இனி “

என்பது ஆறாந்திருமுறையில் 1510 ஆம் பாடலாக வருகின்ற திருஅருட்பா. அருட்பா அவ்வளவு எளிமைப் படுத்தப்பட்ட இனிய தேன்தமிழ்ப்பா. பிரபஞ்சத்தில் எத்தனை அண்டங்கள் உள்ளனவோ அவைகளில் நாம் வாழும் பூமியைப் போல் எத்தனைக் கிரகங்கள் இருந்தாலும் அதில் வாழும் உயிரினங்கள் இருப்பின் அவற்றையெல்லாம் ஒன்றிணைத்த ஒருமைப்பாடு வள்ளலாரின் ஒருமைப்பாடு. அந்த உயிர்த்தொகுதி அனைத்தையும் தனது சன்மார்க்க சங்கத்தின் தகுதிமிகு உறுப்பினர்கள் ஆக்கி இன்பம் கண்ட மார்க்கம் வள்ளலார் கண்ட மார்க்கமாம்.

இத்தகைய ஒருமைப்பாட்டை விஞ்சிய ஒருமைப்பாட்டை இனி உலகில் எவராலும் காட்ட இயலாது. அதைப்போல் வள்ளலாரின் இரக்கத்தைவிட இரங்கும் உள்ளம் இனி உலகில் உருவாக இயலாது.

   “ என் உயிர்தான் உயிர் இரக்கம்தான் ஒன்றதே இரண்டில்லை
     இரக்கம் ஒருவில் என் உயிர் ஒருவும் “

என்ற கருணையின் மறு உருவம் வள்ளற்பெருமானார் என்ன சொல்கிறார் என்றால் என்னுடைய உயிரும், இரக்கமும் வேறுவேறு அல்ல. இரண்டும் ஒன்றே: இரக்கம் என்னை விட்டு நீங்கின் என் உயிரும் என்னை விட்டு நீங்கும் என்ற இரக்கச்சிந்தனையாளர். 

    “ இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார் சுகம் வாய்ந்
      திடல் வேண்டும் எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும் “, 

என்பது அருட்பாவின் உயிர் மூச்சு, அறியாமை இருள் அகல வேண்டும். நம்மை அடுத்து வாழும் மக்களும், உயிர்க்குலமும் இன்பமுடன் வாழ வேண்டும். மேலும்

      “ அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள்புரிதல் வேண்டும்
         ஆருயிர்கட் கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும் “ 

என்பதே இறைவனிடம் வள்ளலார் வேண்டுவது. தனக்கு பொன்னோ, பொருளோ, வேறு செல்வமோ, இன்பமோ, முக்தியோ கேட்காமல் பிற உயிர்கள் அனைத்திற்கும் அன்பு செய்தல் வேண்டும் என்கிற இறை வழிபாடு வள்ளலார் கண்ட வழிபாடு. 

நூற்றுக்கணக்கான அருட்பாக்களில் வள்ளலாரின் ஆன்மநேயத்தையும், உயிரிரக்கத்தையும் பார்க்கலாம் என்பதால் நான் இதுகுறித்து மேலும் விவரிக்க வேண்டாம் எனக்கருதி அவருடைய சமரச சுத்த சன்மார்க்க சத்திய சிறு விண்ணப்பதை இவ்விடத்தில் பதிவு செய்துவிட்டு அடுத்த அத்தியாயம் செல்லலாம் என நினைக்கிறேன்.

எல்லாமுடையானுக்கு விண்ணப்பம் 

இது தொடங்கி எக்காலத்தும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடையாகிய சமயங்கள், மார்க்கங்கள் என்பவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும் வருணம் ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்திற் பற்றாத வண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்மநேய ஒருமைப்பாட்டுரிமை எங்களுக்குள் எக்காலத்தும் எவ்விடத்தும் எவ்விதத்தும் எவ்வளவும் விலகாமல் நிறைந்து விளங்கச் செய்வித்தருளல் வேண்டும். எல்லாமுமாகிய தனிப்பெருந்தலைமை அருட்பெருஞ்சோதி ஆண்டவரே, தேவரீர் நின் திருவருட்பெருங்கருணைக்கு வந்தனம், வந்தனம்.
                                         “ சிதம்பரம் இராமலிங்கம் “ 

வள்ளலார் வலியுறுத்தும் நான்கு வகை ஒழுக்கங்களை பார்ப்போம்.

1.  இந்திரிய ஒழுக்கம்: கண், காது, மூக்கு, வாய், மெய் இந்திரியங்களை
   நல்வழிப்படுத்துதல்.
2.  கரண ஒழுக்கம்: மனம் முதலிய அகக் கருவிகளை நல்வழிப்படுத்துவது.
3.    ஜீவ ஒழுக்கம்: மக்களுக்குள் எவ்வித பாகுபாடும் காட்டாமல் மக்கள்
   அனைவரையும் தன்னைப்போல் பாவித்தல். 
4.    ஆன்ம ஒழுக்கம்: எல்லா உயிர்களையும், எறும்பு முதல் யானை வரை
   தன்னைப் போல பாவித்து ஒழுகுதல்.

எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி ஒழுகும் உத்தமர்களின் உள்ளத்திலேயே தான் கடவுள் இருக்கிறார் என்பதும் அவர்கட்கு அடிக்கேவல் அதாவது குற்றேவல் புரிய அவர் உள்ளம் விழைகிறது என்றும் பகர்கிறார்.

அன்புருவாம் பரசிவமே என்று வள்ளலார் உரைக்கும் போது “ அன்பு மலர் எடுத்து அனுதினமும் பூசை செய்வீர்” என்கிறார் வைகுண்டர்.

“ நல்ல உள்ளங்கள்தான்  எனக்கு வைகுண்டம். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் நான் குடியிருக்கிறேன். நீ என்னை நெருங்க நெருங்க நான் உன்னை நெருங்குகிறேன் “ என்பது வைகுண்டரின் வாய்வழி தெய்வமொழி.  
         

சென்னை ராமலிங்கர் பணிமன்ற விழாவில் வள்ளலாரும், காந்தியடிகளும் என்ற தலைப்பில் நான் பேசியபோது, உடன் முனைவர். வ. செ. குழந்தைசாமி மற்றும் அருட்செல்வர் மறைந்த பொள்ளாச்சி நா. மகாலிங்கம் ஆகியோருடன்    


      ஒளி வழிபாடு – ஐந்தாம் அத்தியாயம்


இறைவனை ஒளிவடிவில் வழிபடச் சொன்னவர்கள் வைகுண்டரும் வள்ளலாரும். வைகுண்டருக்கும் முன்பே பல ஞானியர்கள் இறைவனை ஜோதியாகக் காட்டியுள்ளனர். ஒளிவழிபாட்டின் அவசியம் குறித்துக் காண்போம்.

திருமந்திரத்தில் இறைவனை ஒளிரூபமாகக் காட்டும் இடங்கள் பற்பல.

இறைவனை பரமன் என வர்ணிக்கும் திருமூலர், : பரமன் அனலாய்ப் பரந்து நிற்பவன் “ தழல்பிழம்பாய் நிற்பவன் “ “ ஆலிங்கனம் செய்து எழுந்த பரஞ்சுடர் “ “ சோதியதனில் பரந்தென்றும் தோன்றுமா “ என்று ஒளியாக, சுடராக, பிழம்பாக, சோதியாகக் காட்டுகிறார்.

“ ஒளியை அறியில் உருவும் ஒளியும்
  ஒளியும் உருவம் அறியில் உருவாம்
  ஒளியும் உருவம் அறியில் ஒளியே
  ஒளியும் உருக உடன் இருந்தானே ( 2581, திருமந்திரம்) 

என்று இறைவனை ஒளியாகவே திருமூலர் கூறுகிறார்.

தேவாரம் பாடிய மூவருள் ஞானசம்பந்தரின் பாடல்கள் திருக்கடைக்காப்பு, என பெயர் பெறும், அதில் 

 “ சுடர்விட்டுளன் எங்கள் சோதி
  சோதியந்தம் ஆயினாய் சோதியுள் ஓர் சோதி “

என்று ஆளுடைய பிள்ளையான தமிழ்ஞானசம்பந்தர் பாடுகிறார். 


தேவாரம் என்றாலே அது அப்பர் எனப்படும் நாவுக்கரசர் என்னும் ஆளுடைய அரசர் பாடியவையே. 

“ சோதி என்றாலும் சொல்லருள் செய்திடும் ஆதியான்
 அண்டத்தார்க்கும் அறிவொண்ணாத அப்பால் மிக சோதியான் “

என்று அப்பர் தேவாரம் உரைக்கிறது.

திருப்பாட்டு என்று அழைக்கப்படும் சுந்தரர் பாட்டிலும் இறைவனை நெருப்புருவமாகக் காட்டும் இடங்கள் உண்டு.

திருவாசகத்தில் பல பதிகங்களில் நிறைய இடங்களில் சோதி என்னும் சொல் பல்வேறு சோதிகளாக கையாளப்படுகிறது.

“ மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச் சுடரே”
“ சோதியனே துன்இருளே தோன்றாப் பெருமையனே “
“ தூண்டு சோதி தோற்றிய தொன்மையும் “
“ தூயமேனி சுடர் விடு சோதி “
“ அருக்கனில் ஜோதி அமைந்தோன் “
“ ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும் சோதியை “
“ கேழில் பரஞ்சோதி கேழில் பரங்கருணை “

என்று சொல்லிக்கொண்டே போகலாம். ஆளுடைய அடிகளான  மணிவாசக பெருந்தகை இறைமையை சோதியாகக் காட்டுவதைப்போல அவருக்குப் பின் சன்மார்க்கப்பயிரை தழைக்கச் செய்த தாயுமானவரும் இறைவனை “ அங்கிங்கு எனாதபடி எங்கும் பிரகாசமாய் விளங்குவது “ என்று ஒளியாக காட்டுகிறார்.

சைவத்தில் மட்டுமின்றி வைணவ உலகிலும் இறைவனை ஆழ்வார்கள் இறைஇன்பத்தில் ஆழ்ந்து பாடிய தமிழில் இறைமையை சுடர் ஆழியாக சோதியாக பாடுகிறார்கள்.

இந்து மதம் மட்டுமல்ல உலகின் பெரும்பான்மை மதம் ஆகிய கிறித்துவம் தன்னுடைய புனித நூலான விவிலியம் எனப்படும் பைபிளில் குறிப்பாக பழைய ஏற்பாட்டில் கடவுளை ஒளியாகவே உருவகப்படுத்தி காட்டியுள்ளது. ஆதி ஆகமத்தில் கடவுள் ஒளியைப்படைத்தான் எனவும் சங்கீதங்களில் கடவுள் ஒளியை ஆடையாக அணிந்துள்ளான் எனவும் காணப்படுகிறது.  புதிய ஏற்பாடும் ஒளியாகவே உருவகித்துள்ளது. கடவுளை விளக்க ஒளி உருவமே கையாளப்பட்டுள்ளது. விளக்கமாக தெரிந்துகொள்ள விரும்புவோர் மலாக்கிய ஆகமம், யாத்திராகமம்  3:2,  உப ஆகமம் 3312  சங்கீதங்கள் 17:15 இந்தப்பகுதிகளைக் காணவும்.

இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனிலும் 24  ஆவதாக வரும் நூர் அல்லது ஒளி என்ற அத்தியாயத்தில் இறைவனின் பண்புகள் ஒளியாகவே உருவகிக்கப்பட்டுள்ளது. “ ஆண்டவனின் பிரகாசமானது எங்கும் பரவியுள்ளது” எண்ணெய் எரிக்கப்படும் முன்னேரே அங்கு ஆண்டவன் ஒளியாய் உள்ளான். அல்லாஹ்வை நாடியவர்களை பிரகாசத்தின்பால் செலுத்துகிறான். உலகத்திற்கு அனுப்பப்பட்ட அனைத்து தூதர்களும் ஒளியாகவே உள்ளனர். அவர்கட்கு மேலான ஒளியாய் இருப்பவன் ஆண்டவன் மட்டுமே” என்கிற செய்திகள் திருக்குர் ஆனில் வருகின்றன.

சீக்கிய மதத்திலும் குரு கோவிந் சிங் இரவு பகல் என்று எல்லைகளைக் கடந்து அணைக்க முடியாத ஒளியாகிய கடவுள் ஆன்மாவில் பொதிந்துள்ளான் என்கிறார்.

இவ்வாறு உலகின் பெரும்பான்மையான அனைத்து மதங்களிலும் ஒளி இறைவனின் குறியீடாகக் காட்டப்படுகிறது என்பது உண்மை. ஒளியில்லாத பிரபஞ்சம், உலகம் இருட்டாவது போல் அறிவொளியில்லாத அருளொளியில்லாத மனித உள்ளங்கள் அறியாமையால் இருண்டுவிடும் என்பது உண்மை.

                         

இந்துக்கள் காட்டும் உருவவழிபாடுகளும் சில தத்துவங்களைக் காட்டும் குறியீடுகளே. ஓம் என்கிற பிரணவ மந்திரத்தின் உருவமான விநாயகர் உருவத்தின் விளக்கத்தை பல பக்கங்களில் பல நூல்களில் பக்தி இதழ்களில் நான் படித்துள்ளேன். விலங்கின் தலையும், தேவரின் உடலையும் மனிதனின் கால்களையும் கொண்டு விளங்கும் விநாயகரின் வயிறு இந்த உலகை அடக்கித் தன் வசகமாகக் கொண்டுள்ளது என்பர். அகன்ற பெரிய யானைக் காதுகள் பெரிதாகக் காட்டப்படுகிறது. ஏனெனில் பிறர் குறைகளைக் கேட்க வேண்டும் என்பதற்கு. இரண்டு தந்தங்களில் ஒன்று உடைந்திருக்கும். ஏன்? வியாசர் மகாபாரதம் எழுத முற்பட்டபொழுது எழுதுகோலுக்கு தன்னுடைய தந்தத்தில் ஒன்றை உடைத்துக் கொடுத்ததாக புராணம் சொல்லுவது அனைவருக்கும் உதவும் மனப்பான்மை எவருக்கும் வேண்டும் என்பதற்கே. அவ்வளவு பெரிய உருவம் சிறிய சுண்டெலி மீது அமர்ந்திருப்பது எதைக்காட்டுகிறது? இறை சக்தியிருப்பின் இறைவன் கருணையால் எதையும் தாங்கும் உறுதியும், உள்ளமும் பெறலாம் என்பதற்கு. விலங்குகளையும் அரவணைக்க வேண்டும் என்பதற்கே ஒவ்வொரு கடவுளுக்கும் ஒவ்வொரு வாகனங்கள் உள்ளன. அதில் சிவபெருமானின் காளை வாகனம் மிக முக்கியமானது. நிறைய தத்துவ விளக்கங்களை சைவ சித்தாந்த நூல்களைப் படித்து தெரிந்து கொள்ளலாம்.

உருவ வணக்கம் சில தத்துவத்தை விளக்க உருவாக்கப்பட்டது. மேலும் தொடக்க நிலையில் பக்தி மார்க்கத்தில் செல்லுபவர்கள் மனதால் ஒன்றைப் பற்றிக்கொள்ள ஒரு உருவம் தேவைப்படுகிறது. தியானம் செய்யும் போது உருவம் அவசியம் என்பார் வள்ளலார். அந்த உருவத்தைப் பற்றி தியானம் புரிபவர்களுக்கு பின்னர் உருவம் மறைந்து அருவமாகும் என்பார். ஆனாலும் இறைவன் உருவம், அரு உருவம், அருவம் என்ற மூன்று நிலைகளிலும் இருப்பவனே என்கிற உண்மையை விளக்க ஒளியைப் போன்று சிறந்த ஒன்று இருக்க முடியாது. உருவமாகச் சுடரைக் கொண்டதால் வெளிச்சத்தை அருவமாகக் கொள்ளலாம். உருவத்திற்கும் அருவத்திற்கும் இடையில் அரு உருவமாகவும் அதனைக் கொள்ளலாம். 

“ எச்சமயத்தவரும் வந்து இறைஞ்சா நிற்பர் “ என்று சிதம்பரம் எண்ணும் தில்லைத் தரிசனம் பற்றிப்பாடும் போது தாயுமானவர் பாடுவார். எச்சமயத்தினரும் ஏற்றுக்கொள்ளும் வெளி என்கிற அருவ நிலையில் இறைவனை சிதம்பர ரகசியமாக காட்டுவதால் சிதம்பம் எச்சமயத்தவருக்கும் பொது என்பார் தாயுமானவர்.

ஒளிவழிபாடு அனைத்து மதத்தாரும், சமயத்தாரும் ஏற்றுக்கொள்ளும் வழிபாடாகும். பஞ்ச பூதங்களே கடவுள் என்று கருதினால் பஞ்ச பூதங்களில் மையமாக நிற்பது நெருப்பே. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் ஆகிய ஐந்தில், நிலம் ஆகிய மண் அடர்த்தி மிகுந்தது. அதற்கடுத்த அடர்த்தி நீருக்குத்தான். அடுத்ததாக நெருப்பாகிய சுடரும் பின்பு காற்றும், வெளியும் என்று ஒன்றைவிட ஒன்று வரிசையாக அடர்த்தி குறைந்து விளங்குவதில் நெருப்பு மையமாக உள்ளது. 

மேலும் நிலம் ஆகிய மண் புவிஈர்ப்பு விசையால் மேலிருந்து கீழே விழும். அதைப்போன்றே நீரும். காற்று அழுத்தம் மிகுந்த பகுதியிலிருந்து குறைந்த பகுதிக்கு அனைத்து திசைகளிலும் செல்லும். வெளிக்கு திசையில்லை. நெருப்பு ஒன்று தான் கீழிருந்து மேல் எழும் பஞ்ச பூதத்தில் ஒன்றாகும். எரிந்துகொண்டிருக்கும் பொருளை எப்படிப்பிடித்தாலும் நெருப்பின் சுடர் மேல் நோக்கியே எழுந்து எரியும். கீழிருந்து மேலேறும் பண்பு பஞ்ச பூதங்களில் நெருப்புக்கு மட்டுமே உண்டு. அதைப்போல ஆன்மிகத்தில் கடவுளின் உண்மையைத் தேட விரும்புவோர் கீழிருந்து மேலேற வேண்டும். பால் உணர்வு மையமான மூலாதாரத்திலிருந்து குண்டலினியை நெற்றிப்புருவ மையமான ஆக்ஞை சக்கரத்திற்கு கொண்டுவருதல் வேண்டும். இது தான் மேலேறும் வழி மற்றவை கீழ்ச்செல்லும் வழி என்பார் வள்ளலார். வேறு வழியில் சிந்தித்தால் மனிதர்கள் விலங்குகளைப்போல வாழ்ந்த கால கட்டத்தில் கடவுளின் உண்மையைத் தேடத்தேட உள்ளத்தூய்மையும், வாய்மையும் உள்ளவர்களாக அறவழியில் மனிதராக வாழ்ந்து பிறகு யான், எனது என்கிற ஆணவ, அகங்காரங்களை ஒழித்து வாழுவதின் பயனே பிற உயிர்க்கு நன்மைபுரியவே என்று உணரும்போது தெய்வ நிலைக்கு சமமாகிறான். எல்லா உயிர்களையும் தம்மைப்போலவே பார்க்கும் மனப்பான்மையும் ஒரே ஆன்மாவின் பல்வேறு உருவங்களே மற்றைய உயிரினங்கள் என்று அறியும் போது கடவுள் நிலைக்கு உயர்ந்தவன் ஆகிறான். இதுதான் மேலேறும் வழி. நெருப்பு ஆகிய சுடர் அதை சுட்டிக்காட்டுகிறது. 

ஒளியானது புறத்தே சூரியனாக, சந்திரனாக, நட்சத்திரங்களாக, நெருப்பாக, விளக்காக விளங்கும்போது இருளை நீக்கி வெளிச்சம் தருகிறது. அதைப்போல உள்ளத்தின் அறியாமை இருளை நீக்கி அங்கே அன்பும், அறிவும் ஓங்கும் உள்ளொளியைப் பெருக்கவேண்டும்.

பஞ்ச பூதங்களில் நிலமாகிய மண் மாசுபடுகிறது. நீர் மாசுபடுகிறது. கடல்நீர் கூட தற்போது பெருகிவரும் தொழிற்கூடங்களாலும், அணுமின் உலைகளாலும், இரசாயனத் தொழிற்சாலைகளாலும், கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளாலும் மாசுபடுகிறது. காற்று மண்டலமே மாசுபட்டுக்கொண்டுள்ளது. ஆகாயம் கூட வெளிப்படும் புகைக் கழிவுகளால் வாயுக்களால் மாசுபடுகிறது. ஆனால் மாசுபடுத்த முடியாதது பஞ்ச பூதத்தில் நெருப்பு மட்டுமே. நெருப்பை அசுத்தம் அல்லது மாசு நெருங்கின் அதை எரித்துவிட்டு மாசின்றி, மலமின்றி நிற்கும் பண்பு அதன் தனிச்சிறப்பு. இறைவன் மலமில்லாதவன் என்பது போல நெருப்பும் மாசில்லாதது. 



ஏற்றப்படும் அகல்விளக்கில் பஞ்சபூத தரிசனங்களைக் காணலாம். அகல்விளக்கு மண்ணாகிய நிலத்திலிருந்து செய்யப்பட்டது. ஊற்றப்படும் எண்ணெய் நீரின் தன்மை கொண்டது. நின்று எரியும் சுடர் நெருப்பாகிறது. ஆக்சிஜன் ஆகிய வாயு இருந்தால்தான் சுடர் பிரகாசமாக எரியும். மேலே வெளி ஆகிய ஆகாயம் உள்ளதால் பஞ்ச பூதங்களையும் ஏற்றப்படும் அகல்விளக்கில் காணுவது ஒளி வழிபாட்டின் தனிச்சிறப்பாகிறது. இப்படி ஒளி வழிபாட்டின் மகத்துவத்தை விவரித்துக்கொண்டே போகலாம். 

இந்த ஒளி வழிபாட்டை வைகுண்டர் பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலாருக்கு முன்பாக வலியுறுத்துகிறார். ஒரு விளக்கை கண்ணாடியில் முன்பு ஏற்றி வைத்து அந்த ஒளியின் பிம்பத்தை கண்ணாடியில் தரிசனம் செய்தல் ஒளி வழிபாடாகிறது. கண்ணாடி மாசுப்பட்டிருந்தால் மங்கலாகத்தான் தெரியும். கண்ணாடியானது தூய்மையாக இருந்தால் ஒளியின் வெளிச்சம் நன்கு கண்ணுக்கும் புலப்படுகிறது. அதைப்போல மனதில் இருக்கும் மாசுகள் ஆகிய காமவெறி, கோபம், லோகம், மோகம், மதவெறி, மாற்சரியம், வெறுப்புகள், பொய்கள் முதலியன நீங்கி உள்ளம் குற்றமற்று இருப்பின் அங்கே தூயஆன்மாவை அல்லது தன்னை எளிதில் அறியலாம். 

ஒளி வழிபாடானது அனைவராலும் பின்பற்றக்கூடியது. காசுபணம் அதிகம் செலவழிக்கத்தேவையில்லை. மேலும் இதில் இடைத்தரகர்கள் அல்லது அர்ச்சகர்கள் என்பவர்களுக்கும் வேலையும் இல்லை. அதனாலேயே வைகுண்டர் இதனை அறிமுகப்படுத்த அவருக்கு பின்பு வள்ளலார் ஒளி வழிப்பாட்டிற்கென வடலூரில் சத்திய ஞான சபை கட்டி அதில் தைப்பூச ஜோதி தரிசனத்தை முதன்முதலில் 1872 ஆம் ஆண்டு காட்டினார். இப்போது ஆண்டுதோறும் தைப்பூச நன்னாளில் பலமுறை காலை முதல் மறுநாள் காலைவரை ஜோதி தரிசனமும் மாதந்தோறும் பூச நட்சத்திரத்தன்று இரவு ஜோதி தரிசனமும் காட்டப்படுகிறது. லட்சக்கணக்கில் மக்கள் வடலூர் வந்து வழிப்பட்டுக் கொண்டுள்ளனர். சாதி, மதம், சமயம், இனம், மொழி, நாடு அனைத்தையும் ஒன்றிணைக்கும் ஒரே வழிபாடாக ஜோதி வழிபாடு திகழ்வதால் இதனை வைகுண்டரும் வள்ளலாரும் நடைமுறைக்கு கொண்டுவந்தனர். 



  “ சாதி சமய சழக்கெல்லாம் அற்றது
    சன்மார்க்க ஞான சபை நிலை பெற்றது
    மேதினியில் சாகா வித்தையைக் கற்றது
    மெய்யருட் சோதி என் உள்ளத்தில் உற்றது “

என்று வள்ளலாரின் உள்ளத்தில் உற்ற அருட்ஜோதி அனுபவம் அருட்பாவில் பாடலாக வெளிவருகிறது. 

  “ இருளாமை உறல் வேண்டும் எனை அடுத்தார்
           சுகம் வாய்ந்திடல் வேண்டும் “
    எவ்வுயிரும் இன்படைதல் வேண்டும் “        
          இருட்பாடு நீங்கி ஒளி ஈந்தருளும் தெய்வம்
    எண்ணிய நான் எண்ணியவாறு எமக்கருளும் தெய்வம் “ 

ஆகிய அருட்பாவரிகள் உள்ளத்தின் அறியாமை இருள் அகல வேண்டும் என உணர்த்த எழுதப்பட்ட வரிகள்.

      “ கண் களிக்கப் புகை சிறிதும் காட்டாதே
               புருவக் கலை நடுவே விளங்கும் கற்பூர விளக்கே “

என்று நெற்றியில் புருவமத்தியில் தோன்றும் அனுபவத்தைப் பாடுகிறார். ஒளியையேக் கடவுளாகக் காட்டும் திருஅருட்பாக்கள் நூற்றுக்கணக்கில் உள்ளது. அருட்பெருஞ்சோதி அகவலிலும் அது விரிவாக, விளக்கமாக, நுணுக்கமாக, ஆழமாக விளக்கப்படுகிறது. 

ஆன்மிகத்தில் ஒளி வழிபாடு என்பது பகுத்தறிவாளர்களும் ஏற்றுக்கொள்ளும் மிகச் சிறந்த சீர்திருத்தம். அத்தகைய சீர்திருத்தத்தை வைகுண்டரும், வள்ளற்பெருமானாரும் பத்தொன்பதாம் நூற்றாண்டில் செய்திருக்கின்றனர்.

எல்லா மதங்களிலும் வழிபாட்டில் ஒளி முக்கியத்துவம் பெற்றுள்ளதை அனைவரும் அறிந்ததே. இஸ்லாமியர்கள் மூன்றாம் பிறையை ரமலான் நோன்பு நேரத்தில் முக்கிய நிகழ்வாக கொள்வதும், கிறித்துவ தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றுதலும், இந்துக்கள் கற்பூரம் ஏற்றுதலும், விளக்கு ஏற்றுதலும் ஒளியின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. 

திருவண்ணாமலை கார்த்திகை தீபமும், சபரிமலை மகரஜோதி தரிசனமும் இறைவனை ஜோதி ரூபமாக காட்டும் முக்கிய விழாக்கள். ஆன்ம சாதகர் பக்குவம் வரும்போது அனுபவமாக புருவமத்தியில் இந்த ஒளியைக் கண்டு பரவசமும் ஆனந்தமும் அடைகிறார். 

கருவறையில் சிலையை, விக்ரகத்தை பிரதிஷ்டை செய்து ஆகம முறையில் குடமுழுக்கு முதலியன  செய்து பூஜைகள், வழிபாடுகள் நடத்தும்போது சாதிவேற்றுமைகள் அங்கே உண்டாவது என்பது எளிதில் தள்ளமுடியாத உண்மை. கருவறைவரை ஒரு குறிப்பிட்ட குலத்தார் தான் நுழைய முடியும். ஒவ்வொரு குலத்தாருக்கும் ஒவ்வொரு எல்லை உள்ளக் காரணத்தாலேயே இந்துக்களின் கோயில்களில் பல பிரகாரங்கள் அல்லது சுற்றுகள் உள்ளதாக தந்தைபெரியார் கூறுவார். நந்தனாரின் வாழ்க்கை வரலாறே இந்த பாகுபாட்டை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இன்று பல மாறுதல்கள் உண்டானாலும் இன்னும் சில கோயில்களில் கருவறை வரை சில குலத்தினர் நுழைய அனுமதி கிடையாது. ஒளிவழிபாட்டில் சாதி, சமய, மத வேறுபாடுகள் களையப்பட்டு இறைவன் முன் அனைவரும் சமம் என்ற கொள்கை நிறுவப்படுகிறது. இதில் கற்பனைக் கதைகளுக்கு இடமில்லை.

சத்திய ஞான சபையில் வள்ளலார் கண்ட ஒளி வழிபாட்டைப் போலவே அய்யா வைகுண்டர் சாஸ்தான்கோயில் வினையில் நாராயணர்கோயில் என்ற கோயிலை உருவாக்கி அதில் கண்ணாடியின் முன்னே விளக்குச் சுடரை ஏற்றி வைத்தார். தீண்டத்தகாதவர்களாக கருதப்பட்ட அனைத்து மக்களையும் அவர் அமைந்த பதியினுள்ளே கோயிலுக்குள் அனுமதித்தார். உருவ வழிபாட்டிற்கு மாற்று ஏற்பாடாக அதனை விட எல்லாவகையிலும் உயர்ந்த மேல் நிலையான ஒளிவழிபாட்டை தமிழகத்தில் இந்த ஆன்மிகச் சுடர் கண்டது ஆன்மிகத்தில் புகுத்தப்பட்ட புதுமைப்புரட்சி. 

இன்றும் அய்யா நிறுவிய பதிகள், நிழல்தாங்கல்கள் எனப்படும் வழிபாட்டு, கல்வி கூடங்களில் அய்யா வழிபக்தர்கள் விளக்கையும் நிலைக்கண்ணாடியும் வைத்து வழிபடுகின்றனர். அய்யா வழி பக்தர்களின் வீடுகளிலும் விளக்கேற்றி வைத்து வணங்குவதாக சொல்கிறார்கள். 


                           சத்திய ஞானசபை – வடலூர்       



உயிர்ப்பலி தவிர்த்தல் / புலால் மறுத்தல்
ஆறாம் அத்தியாயம் 

அவிசொரிந்து ஆயிரம் வேட்டலின் ஒன்றன்
உயிர் செகுத்துண்ணாமை நன்று
                                                  என்கிறது திருக்குறள்.
வேள்வித்தீ வளர்த்து நெய்யும் பிறவும் இட்டு வேள்விகள் ஆயிரம் செய்வதைவிட ஒன்றன் உயிரைக் கொன்று உண்ணாமை மேலான செயலாகும் என்பது இத்திருக்குறளின் பொருளாகும்.

 உற்றநோய் நோன்றல் உயிர்க்குறுகண் செய்யாமை
 அற்றே தவத்திற் குரு.

என்பதும் நமது திருவள்ளுவர் வாய்மொழி. தனக்கு வந்த துன்பத்தைப் பொறுத்துக் கொள்ளுதலும் பிற உயிர்க்குத் துன்பந்தராமல் இருத்தலுமே மேலான வாழ்வு நெறி என்று அய்யன் திருவள்ளுவர் தவத்தின் இலக்கணத்தை சிறப்பாகக் காட்டுகிறார்.

வள்ளுவர் மிக உயர்ந்த ஆன்ம நேயச்சிந்தனைகளை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே காட்டிச் சென்றுள்ளார். மூடநம்பிக்கை இல்லாத கடவுள் வழிபாட்டை வள்ளுவர் காட்டியுள்ள காரணத்தாலேயே நாத்திகம் பேசுபவர்களும் ஏற்றுக் கொள்ளும் நூலாகத் திருக்குறள் திகழ்கிறது.

வள்ளுவருக்குப் பின்பு வள்ளலார் உயிரிரக்கச் சிந்தனைகளை மிக விரிவாகப் பேசுகிறார். ஆனாலும் வள்ளுவரும் வள்ளலாரும் வாழ்ந்த இந்த மண்ணில் இன்றும் கடவுளின் பெயரால் உயிர்களைப் பலியிடும் அறிவுக்குப் பொருந்தாத நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டுள்ளது.

கல்லில் இருக்கும் தேரைக்கும் உணவளிப்பான் இறைவன் என்பார். அனால் கல்லால் வடிக்கப்பட்ட விக்ரகத்திற்கு மந்திர சக்தியை ஏற்றி கடவுளாகக் காட்டுவோர் அந்த விக்ரகத்திற்கு படையலிட வாயில்லா ஜீவன்களை கருணையின்றி கொன்று பலியிடுவது ஆன்மநேயமற்ற மூடப்பழக்கம் என்பதை ஏற்க மறுக்கின்றார்.

இத்தகைய பக்தி என்பது காட்டுமிராண்டித்தனமானது எனில் இச்செயலை செய்பவர்களுக்கு கோபம் வரலாம். கடவுளின் பசியை மனிதன் போக்குவது என்பது அறியாமையின் உச்சக்கட்டம். கடவுளின் படைப்பே இந்த  பிரபஞ்சமும் உயிர்களும், உயிரற்ற  பொருட்களும். நம் அனைவருக்கும் அனைத்து உயிர்க்கும் தந்தை இறைவன் என்பது உண்மை எனில் அவனது படைப்பில் ஒன்றையே அவனுக்கு காணிக்கை என்ற பெயரில் பலியிட்டு கொல்வது அறிவுக்கு ஏற்ற செயலா என்பதை யோசிக்க வேண்டும்.

பயத்தால் வருவது பக்தி என்பார் பெரியார். பயத்தின் காரணமாக ஆறறிவு படைத்த மனிதன் கடவுளின் அருளைப் பெற அதன் படைப்பில் உண்டான சாதுவான பிராணிகளான கோழி, ஆடு முதலியவற்றை பலியிடும் வழக்கம் கண்டிக்கப்படவேண்டிய நிறுத்தப்படவேண்டிய கொடிய வழக்கு என்பதை உணருதல் அவசியம். பிற உயிர்களை அழிக்க மனிதனுக்கு உரிமையில்லை. கடவுளின் முன்பு அனைத்து உயிரினமும் சமம், எனில் ஆடுகளும், கோழிகளும் மட்டும் என்னபாவம் செய்தனவோ? சில இடங்களில் எருமை மாடுகளை மாரியம்மன் கோயில்களில் கொன்று நேர்த்திக்கடன் தீர்க்கும் வழக்கம் உள்ளது. சில அம்மன் கோயில்களில் மருளாளி என்பவன் ஆட்டின் கழுத்தைக் கடித்து அதன் இரத்தத்தை அப்படியே உறிஞ்சிக் குடிக்கும் அரக்க செயல்களை இன்றும் செய்து கொண்டிருக்கிறான். மனித சமுதாயம் இன்னும் முன்னேறாமல் நிற்கும் அவல நிலையை இது போன்ற நிகழ்சிகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஒரு தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் தனது சொந்த சகோதரனை தாய் கேட்டாள் என்று கூறி பலியிடுவார்களா? சிந்தித்துப்பார்த்தால் இந்த பகுத்தறிவுக்கு ஒத்துவராத செயலை எவரும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பாலும் சிறு தெய்வங்களுக்கே இதுபோன்று விலங்குகளைப் பலியிடும் வழக்கம் உள்ளது. இந்த சிறு தெய்வங்களை வீரன், முனிஸ்வரன், அய்யனார், சுடலை மாடன், கருப்பசாமி எனப் பல பேர்களில் அழைப்பர். இவைகளெல்லாம் தெய்வங்களா எனில் இல்லை. வாழ்ந்து இறந்த நமது முன்னோர்களே, சங்க காலங்களில் நடுகல் நடுவது என்ற செய்தி உள்ளது. இரண்டு மன்னர்கள் படைகொண்டு சண்டையிடும் போது அந்தப் போரில் படைத்தலைவன் அல்லது குறுநில மன்னன் நினைவாக அவன் இறந்த இடத்தில் கல் ஒன்றை நட்டு அதற்கு ஆண்டுதோறும் நினைவுநாளில் பூஜை, சடங்குகள் செய்வது வழக்கம். இப்படி இறந்துபோன வீரர்களின் நினைவு நாட்கள் அவர்களுக்கு பிடித்தமான உணவு வகைகளின் படையலோடு நடப்பது வழக்கமாக இருந்துள்ளது. அதன் நீட்சியாகவே இன்றும் இதுபோன்ற இடங்களில் தெய்வம் என்ற பெயரில் பீடி, சுருட்டு, கள், மாமிசம், சாராயம் என வைத்து படை,த்துவிட்டு இறுதியில் சடங்குகளை நிகழ்த்துபவர்களே அதனை உண்டு களிக்கின்றனர். இத்தகைய சிறு தெய்வ வழிபாட்டைக் கண்ட போது வள்ளலார் அஞ்சி நடுங்கியுள்ளார்.

நலிதரு சிறிய தெய்வ மென்றையோ நாட்டிலே பல பெயர் நாட்டிப்
பலிதர ஆடு பன்றிகுக் குடங்கள் பலிக்கடா முதலிய உயிரைப்
பொலிவுறக் கொண்டே போகவும் கண்டே புந்தி நொந்துள நடுக்குற்றேன்
கலியுறு சிறிய தெய்வ வெங்கோயில் கண்ட காலத்திலும் பயந்தேன்.
                                   275 ஆறாந்திருமுறை


இப்பாடலில் பலியிடும் கொடிய வழக்கைக் கண்டு வள்ளலார் அஞ்சி நடுங்கும் காட்சி கண்முன்னே விரிகிறது. இத்தகைய சகிக்க முடியாத செயல்கள் சிறு தெய்வ கோயில்களில் நிகழ்வதால் இத்தகைய கோயில்களைக் கண்ட போதெல்லாம் மிகவும் பயந்ததாகப் பாடுகிறார். உயிர்ப்பலிகளை புத்தர் முதல் காந்தி வரை மகான்கள் எவரும் ஏற்றுக்கொண்டதில்லை.

யாகங்கள் செய்யும் போது ஹோமங்கள் என்னும் தீக்குண்டங்கள் ஏற்படுத்தி அதில் ஆகுதி என்ற பெயரால் விலங்குகளை உயிரோடு இட்டு கொன்று அவைகளை மோட்சத்திற்கு அனுப்புவதாக ஒரு கூட்டம் உளறிக்கொண்டிருந்த வேளையில் அவர்களிடம் வாதம் செய்து பகுத்தறிவு ஒளியை வையகத்தில் முதன் முதலில் பரப்பியவர் புத்தர். 



வேத காலத்திலேயே பிராமணர்களால் இத்தகைய அர்த்தமற்ற கொடிய செயல்கள் நிகழ்த்தப்பட்டிருக்கிறது. “இந்து மதம் எங்கே போகிறது?” என்ற நூலில் அக்னி ஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் தரும் செய்திகளை அப்படியே தருகிறேன் “எங்கெங்கு காணினும் மூடப்பழக்க வழக்கங்கள். ஊரெல்லாம் ஒரே அக்னிப்புகை. அந்தப் புகையில் புறக்கண்களும் தெரியாமல் அக அறிவுக்கண்களும் தெரியாமல் குழம்பிக்கொண்டிருந்தனர் மக்கள்.

ஏன் அக்னிப்புகை?

பிராமணர்கள் சொன்னார்கள், “ஊரெல்லாம் நலமாக இருக்க நாமெல்லாம் வளமாக இருக்க அக்னி வளர்த்து அதில் பசுக்களை பலியிட வேண்டும். வேதம் பயின்ற நாங்கள் யாகம் நடத்துகிறோம். பிராணிகளையும் தட்சணைகளையும் கொடுத்து நீங்கள் புண்ணியம் பெறுங்கள்” என அக்னிப் புகைக்கிடையே அழுத்தமாய்ச் சொன்னார்கள்.

அந்தப் புகைக்கிடையே பிராமணர்கள் மந்திரம் சொல்லச் சொல்ல மக்கள் புரியாமல் கேட்டுக் கொண்டிருந்தனர். மக்கள் பேசியது பிராக்ருத மொழி என்பதால் சமஸ்கிருத மந்திரங்கள் அவர்களுக்கு புரியவில்லை. இந்த நிலையில் தான் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த புத்தர் மக்கள் பேசிய பிராக்ருத மொழியிலேயே கருத்துக்களை பரப்ப முடிவெடுத்தார்.

அப்பொழுதுதான் அசுவமேத யாகத்தின் கொடூரங்களையும், ஆபாசங்களையும் கண்கூடாக கண்டார் புத்தர். அதென்ன அசுவமேத யாகம்?

ராஜாக்கள் ஆண்குதிரை அவிழ்த்துவிட்டு அடித்து விரட்டி விடுவார்கள். அக்குதிரை எங்கெங்கு சென்றுவிட்டு வருகிறதோ அந்த எல்லைவரை போரிட்டு ஜெயித்துவிட்டு அந்த வெற்றியைக் கொண்டாடுவதற்கு நடத்தப்படும் யாகம்தான் அசுவமேத யாகம். ஓடிக்களைத்து வந்த அக்குதிரையை கட்டிப்போட்டுவிடுவார்கள். அக்குதிரையோடு ஒரு பெண் குதிரையை சேர்த்துவிடுவார்கள். இயற்கையின் உந்துதலாய் ஆண்குதிரையின் உறுப்பு நீண்டிருக்கும்போது அப்போது ஓரிரவு முழுவதும் சம்மந்தப்பட்ட ராஜாவீட்டுப் பெண்கள் முக்கியமாக ராணி, குதிரையின் உறுப்பைப் கையால் பிடித்துக்கொண்டிருக்க வேண்டும். இந்தக் கடமை முக்கியமாக ராணிக்குத்தான்.


“ அற்ப பேதயாக ஸ்லோகம்
 அஸ்வஸ்ய சத்ர சிஷ்நந்து
 பத்னி க்ராக்யம் ப்ரசக்க்ஷதே “    

என்கிறது ஸ்லோகம். அஸ்வருமாகிய குதிரையை ராஜாவின் பத்தினி ராணி வழிபட வேண்டிய முறையை விளக்குகிறது இந்த ஸ்லோகம். இரவு இந்தக் கடமை முடிந்ததும் மறுநாள் அந்த ஆண் குதிரையை அப்படியே அக்னியில் போட்டு சாம்பலாகும்வரை எரித்து விடுவார்கள். இதுதான் .அசுவமேதயாகம். மக்களைப் போலவே ராஜா குடும்பத்தினரும் பிராமணர்களின் மந்திர யாகத்துகுக் கட்டுப்பட்டு இருந்தார்கள். யாகம் முடிந்ததும் “ஏ... ராஜா இந்த யாகத்தை நல்லவிதமாக பூர்த்திசெய்தாகிவிட்டது இதற்காக பொன்னும் பொருளும் நீ தட்சணையாக கொடுத்தாய், அத்துடன் யாகத்தில் பங்கு கொண்ட உன் ராணியையும் நியதிப்படி நீ எங்களுக்கு தட்சணையாக்கிய பிறகு அழைத்துச் செல்ல வேண்டும்”, என்றார்களாம்.

இதையெல்லாம் பார்த்து வெகுண்ட புத்தர் “ மனித தருமம், ஜீவகாருண்யம், இரண்டையுமே பொசுக்கி யாகம் செய்கிறீர்களே ஏன் இப்படி?” என யாகம் நடந்த இடத்திற்கே போய் கேள்விகளாகக் கேட்டார்.

பிராமணர்கள் சொன்னார்கள் “குதிரைக்கு மோட்சம் கிடைக்கும், லோகத்துக்கு ஷேமம் கிடைக்கும்” என்று.

புத்தர் திரும்ப கேட்டார்.

“ஒன்றும் தெரியாமல் வளர்ந்து வாழ்ந்து சாகப்போகும் குதிரைக்கு மோட்சம் தருகிறீர்கள். எல்லாம் அறிந்த பிராமணனாகிய நீங்கள் மோட்சம் பெற வேண்டாமா? அந்த அக்னி குண்டத்தில் யாகம் நடத்தும் உங்களையும் தூக்கிப் போட்டால் உங்களுக்கும் மோட்சம் கிட்டும் அல்லவா? இந்தக் கேள்வியைக் கேட்ட பிராமணர்கள் திடுக்கிட்டுப் போனார்கள். யாகத்தைவிட பெருநெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு ” என்று அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் தன் நூலில் குறிப்பிடுகிறார்.

புத்தரைப் போலவே பலியிடும் இடங்களுக்கு நேரில் சென்று பலிகளைத் தடுத்து நிறுத்தியவர் அண்ணல் காந்தியடிகள்.

காந்தி எழுதிய சத்திய சோதனையில் இறுதி அத்தியாயத்தில் “சத்தியத்தைத் தரிசிப்பதற்குள்ள ஒரே மார்க்கம் அகிம்சைதான்” என்றும் “அகிம்சையைப் பூரணமாக அடைந்தால் மாத்திரமே சத்தியத்தின் பூரணமான சொரூபத்தையும் தரிசிக்க முடியும்”. “பிரபஞ்சம் அனைத்திலும் நிறைந்து நிற்பதான சத்திய சொரூபத்தை நேருக்கு நேராக ஒருவர் தரிசிக்க வேண்டுமாயின் மிகத்தாழ்ந்த உயிரையும் தன்னைப் போலவே நேசிக்க முடிந்தவராக அவர் இருக்க வேண்டும்”. என்றும் குறிப்பிட்டு இருக்கிறார்.அகிம்சை என்பது பிற உயிர்களுக்கு துன்பம் செய்யாமல் இருப்பது.

உண்மையான ஆன்மிகம் என்பது ஆன்மாவில் இறைவனை தரிசிப்பது. வள்ளலாரின் ஆன்ம ஒழுக்கம் அனைத்து உயரினமும் இறைவன் வாழும் ஆன்மாக்கள் என அறிந்து அவற்றிற்கு உதவி புரிய சொல்லுகிறது. இதனாலேயே “ஆடு கோழி முதலியவற்றை வெட்டி பலியிடாதே சக உயிர்களிடத்தில் அன்பு காட்டு. அதுதான் இறைவனை அடைய வழி”. என்று அய்யா வைகுண்டர் மக்களிடத்தில் போதனை செய்தார். நாடார் குலத்தில் பிறந்த அய்யா வைகுண்டர் தம்மோடு இருக்கின்ற அனைத்து தாழ்ந்த சாதியாகக் கருதப்பட்டவர்களுக்கு “உயிர் பலி வேண்டாம்” என்று அறிவுரை கூறியது ஆச்சரியம் மட்டுமல்ல, ஆன்மிகத்தில் மிக உயர்ந்த இடத்தை தொட்ட அய்யாவின் அருள் குணத்தை இது காட்டுகிறது. அய்யாவின் போதனையால் பலியிடும் வழக்கத்தை விட்டுவிட்டு மக்கள் அய்யாவின் வழிக்கு வந்தனர்.

“கோயில் வைத்து குருபூஜை செய்யார்கள்
பூவதுகள் போட்டு போற்றியே நில்லார்கள்
ஆடு கிடாய், கோழி, பன்றி, அறுத்து பலியிடார்கள்
மாடு மண்ணுருவை வணங்கித் திரியார்கள்”

என்று அன்று வாழ்ந்த மக்களிடம் அறவழியை அன்பு வழியை அகிம்சையை போதித்தார் அய்யா.

வைகுண்டரின் புரட்சிகரமான கருத்துக்கு மக்களிடையே வரவேற்பு இருந்ததைக் கண்டு அன்றைய திருவாங்கூர் மன்னன் வைகுண்டரை சிறையில் அடைத்தான். பல கொடுமைகளை வைகுண்டருக்கு இழைத்தான். வைகுண்ட சாமிகள் சிறையை விட்டு வெளிவந்த போது மக்கள் அவரை சிம்மாசனத்தில் வைத்து திருவனந்தபுரத்திலிருந்து பூவண்டன்தோப்புவரை அழைத்து வந்தார்கள். வரும் வழியில் குழித்துறை அருகில் ஓய்வு எடுத்துக்கொண்டனர். அப்போது ஓர் இரவில் ஒரு சிறு தெய்வ கோயிலில் பூஜை செய்ய பலியிட 21 ஆடுகள் கட்டிப் போடப்பட்டிருப்பதை வைகுண்டர் கவனித்தார். சம்மந்தப்பட்ட ஊர் மக்களிடம் அதுபற்றி கேட்டார். அவர்கள் அந்த 21 ஆடுகளும் சாமிக்கு பலியிட  கட்டிப்போடப்பட்டுருக்கின்றன என்றனர். உடனே வைகுண்டர் “உயிரை சாமிக்கு பலியிடுவது பாவம், அதனால் சாமிக்கு பலியிடும் சடங்கை நிறுத்திவிடுங்கள்” என்று சொன்னார். இதனால் ஊர்க்காரர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது. ஒரு கூட்டம் வைகுண்டர் சொன்னதே சரி என்று ஏற்றுக்கொள்ள இன்னொரு கூட்டம் “பலியிட்டே ஆகவேண்டும் இல்லையெனில் சாமிக்குத்தம் உண்டாகிவிடும்” என்றது. உடனே வைகுண்டர் ஒரு மாற்று வழி கண்டு பிடித்து 21 ஆடுகளுக்கு பதில் 21 மாவு உருண்டைகள் பிடித்து சாமிக்கு படையலிடுங்கள், சாமி ஏற்பார் என்றார். அந்தக் கூட்டமும் சம்மதித்து ஆடுகளை விடுதலை செய்தது.

வள்ளலார் வாழ்விலும் இதுபோன்ற நிகழ்வுகள் நடந்துள்ளன. ஆட்டை பலியிட ஒரு கூட்டம் ஆடுகளை கட்டிவைத்திருந்த இடத்தில் வள்ளலாரின் ஜீவகாருண்ய போதனையை எதிர்த்தனர். உடனே வள்ளலார் உங்களுக்கு பலியிட்டே ஆகவேண்டும் எனில் ஆடுகளுக்குப் பதில் என்னைப் பலியிடுங்கள் என்று கழுத்தைக் குனிந்து காட்ட, பலியிட நினைத்தோர் மனம் மாறி வள்ளலாரின் பேச்சை ஏற்றுக்கொண்டனர்.



ஆன்மிகத்தின் பெயரால் மக்களை ஏமாற்றி சுரண்டும் கூட்டமான போலி சாமியார்களையும், ஆன்மிக வியாபாரிகளையும் அய்யா கண்டித்துள்ளார். கடவுளின் உண்மையை அறியாது பூஜை, சடங்குகள் என்று பணத்தை அள்ளிக் கொட்டி பகட்டான விழாக்கள் நடத்துவதிலும் அய்யாவிற்கு உடன்பாடு இல்லை. காணிக்கை என்றும் கைக்கூலி என்றும் இடைத்தரகர்களுக்கு தந்து ஏமாறாமல் மக்கள் இருக்க அறிவுறுத்தினார்.

காணிக்கை வேண்டாதுங்கோ
கைக்கூலி கேளாதுங்கோ
மாணிக்க வைகுண்டம் வல்லாத்தான் கண்டிருங்கோ
பூஜை ஏறாதிருந்கோ
பெலிதீபம் ஏறாதுங்கோ
ஆசை வையாதுங்கோ
ஆவகடம் செய்யாதுங்கோ
ஞாய முறை தப்பி நன்றி மறவாதுங்கோ
மாய நினைவு மனதில் நினையாதுங்கோ
பொய்கண்ட தேரோட்டம் புணக்காரம் ஏராதுங்கோ
மோதிப் பேசாதுங்கோ மோகம் பாராட்டுதுங்கோ
ஆலத்தி கை விளக்கு ஆராட்டு பாராதுங்கோ
சாலத்தீ பாராதுங்கோ சகல பூ ஏராதுங்கோ
கொழுந்து மஞ்சன மாலை, குப்பையுடன் சந்தனமும்
விழுந்து நமஸ்காரம் முதல் வேண்டாமென்று சொல்லிடுங்கோ
கூட என்று உரையாதுங்கோ ஓம முறை ஏராதுங்கோ
தீபரணை காணாதுங்கோ திருநாளைப் பாராதுங்கோ 

என்பதுதான் அய்யா வைகுண்டர் நமக்குச் சொன்ன இறை வழிபாட்டு முறைகள். சுருங்கச் சொன்னால் வெளியே புறத்தில் இறைவனை தேடி அலைந்து பூஜைகள் செய்வதைவிட அன்புமயமாக ஆகி உனக்குள் சிவத்தை தேடி அமைதி கொள்வதே அய்யாவின் போதனை எனலாம்.
இயலாதவர்களுக்கு முடிந்த உதவியைச் செய்வதே உனக்குள் இருக்கும் இறைவனுக்கு செய்யும் புனிதமான வழிபாடு என உணர்த்தினார்.

நந்தன் நான் என்பான்.
நாரணுக்கோன் ராமன் என்பான்
முன் உதித்து வந்தவர்க்கொல்லாம்
முன் உதித்து வந்தேன் என்பான்
கண்ட கண்ட அற்புதங்கள்
காணக்கோடி செய்திடுவான்
இந்தப்பேரோ என்றிடுவீர்
சூட்சமம் அறியாமல் தொல்புவி மயங்கும் 

என்று மந்திரத்தின் பெயரால் மக்களிடம் பணம் பறிக்கும் கூட்டத்தைச் சாடுகிறார். அவர்களின் வாய்ஜாலத்தில் மயங்கும் மக்களை அஞ் ஞானத்திலிருந்து ஞானத்திற்கு கொண்டுவந்து கரை சேர்த்தார்.

“உண்டு பண்ணிவைத்த உட்பொருளைத் தேடாமல்
கண்டதெல்லாம் தெய்வமென கையெடுப்பன் சண்டாளர்”

என்று மிகவும் கடுமையாக கண்மூடித்தனங்களைக் கண்டிக்கிறார்.

“கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண் மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக”

என்று வள்ளலாரின் சிந்தனையை இவ்விடத்தில் நினைவு கூர்ந்து பார்க்க வேண்டும். கற்பனை உருவங்களேயே கடவுள் எனக் கூறிக்கொண்டு அந்த உருவங்களுக்கு பக்தியின் பெயரால் செய்யப்படும் அர்த்தமற்ற வீண் சடங்குகளை வள்ளலார் கண்மூடிவழக்கமெனக் கண்டிக்கிறார்.

அய்யா வைகுண்டரோ தன்னை இறைமகனாக்கி தனக்கு பூஜைகள், மரியாதைகள் செய்வதையும் விரும்பவில்லை. “ இறைவன் எங்கும் வியாபித்  திருக்கும் நிலையில், உன்னைப் புனிதப்படுத்திக்கொண்டு உனக்குள்ளேயே இறைவனைத் தேடாமல் கோயில், குளமென்று சுற்றாதே என்று கண்டனம் செய்கிறார். 

“ பொய்யில்லை, பிசாசில்லை, பில்லியின் வினைகளில்லை
  நோய்யில்லை, நோவுமில்லை, நொம்பலத் துன்பமில்லை
  தொய்யில்லை, இறைகளில்லை, சுறுட்டுமா ஞாலமில்லை
  மையில்லை, உலகத்தாரே வாழுமோர் நினைவாய் “ 

என்று புத்தர் வழியிலேயே சமுதாயத்தை சீர்படுத்த முற்பட்டார் வைகுண்டர்.

பேய், பிசாசு முதலியன இல்லை, பில்லி சூனியம் முதலியன இல்லை. சுகாதாரமான முறையில் உணவை உண்டு மாமிசம் தவிர்த்து வாழ்ந்தால் நோய்யில்லை, துன்பமில்லை, பூஜைகள் தேவையில்லை, சடங்குகள் தேவையில்லை, உயிர்ப்பலி இல்லை, ஜாதி, வர்ணமில்லை என்கிற உயர்ந்த கருத்துகளே வைகுண்டர் உலகத்திற்கு வழங்கிய சீரிய கருத்துக்களாம். வள்ளலாரின் கருத்துக்களும் இதைத்தான் வலியுறுத்துகின்றன. 

தேரோட்டம் கூட தேவையில்லலை என்று சொன்ன வைகுண்டர் பிறகு ஓரிடத்தில் தேரோட்டத்தை ஆதரிக்கின்றார். ஏன் எனில் பிற கோயில்களில் பிராமணர்களால் நடத்தப்படும் தேராட்டத்திற்கு சென்று தம்மக்கள் வேடிக்கை பார்த்து நிற்கிறார்களே என்று தேரோட்டம் நடத்த அனுமதி தந்தார். சாமித்தோப்பில் இப்போதும் ஆவணி, வைகாசி மாதங்களில் கொடியேற்றம் தொடங்கி பதினொராவது நாள் தேர்த்திருவிழா நடக்கும்.

உடலுழைப்பு இல்லாத ஒரு இனம் உடலால் வருந்தி உழைத்து வியர்வை சிந்தி உண்ணும் சாமானியர்களை பக்தியின் பெயரால் பொருளாதார ரீதியாக அட்டை போல உறிஞ்சிவதைக் கண்டு மனம் வருந்தினார். மோட்சம், நரகம் என்று சொல்லி பரிகாரம் தேட பூஜைகளைக் காட்டி பணம் பறிக்கும் கும்பலின் வசூல் வேட்டையைக் கண்டே வழிபாட்டில் எளிய முறையைக் கொண்டு வந்தார்.

அய்யா வைகுண்டரின் பூஜைமுறைகளில் சூடம் ஊதுபத்தி, சாம்பிராணி, சவ்வாது, சந்தனம், பூமாலைகள் என்பவைகள் கிடையாது. எளிய முறையில் பிச்சுப் பூவும், எலுமிச்சை பழமும் வைத்து செய்யப்படும் முறையை ஆதரித்தார். இம்முறையில் இடைத்தரகர்கள் என்பவர்கள் அறவே கிடையாது. பணிவிடைக்காரர்கள் மட்டுமே உண்டு. பள்ளியறையில் வைக்கப்படும் ஒளியையே மக்கள் வணங்குகிறார்கள். விளக்கின் எண்ணெய்க்கு என்று காசு கொடுக்கும் வழக்கம் உண்டு. அனால் காணிக்கை என்று எதையும் வசூலிப்பது இல்லை. 

வள்ளலார் வகுத்துத்தந்த வழிபாட்டு முறைகளும் எளியே முறையே. மொட்டையடித்தல், தீ மிதித்தல், தேர் இழுத்தல், தெப்பம் விடுதல் முதலிய எந்த நிகழ்வுகளும் வள்ளலாரின் வழியில் இல்லை. கற்பூரம் ஏற்றுவது கூட கூடாது. ஆனால் ஜோதியை வணங்கும் மக்களுக்காக ஜோதிக்கு இன்னொரு கற்பூர ஜோதி ஏற்றி தீபாராதனை காட்டுகின்றனர். உண்மையில் வள்ளலாரின் மார்க்கத்தில் இத்தகைய கற்பூர தீபாராதனை கூடவே கூடாது என்பதே சுத்தசன்மார்க்கத்தின் விருப்பமாகும். 

சத்தம் ஏதுமின்றி ஞான சபையில் மெல்லெனத் துதிப்பதே உண்மையான வழிபாடு. அருட்பெருஞ்சோதி அகவலை மெல்லிய குரலில் அல்லது மனதிற்குள் பாராயணம் செய்து அல்லது மகா மந்திரத்தை மனதுக்குள் சொல்லிக்கொண்டு உள்ளொளியைக் காண முற்படுவது வள்ளலார் கண்ட வழியாகும்.

தெய்வங்கள் பலபல சிந்தைசெய் வாரும்
           சேர்கதி பலபல செப்புகின் றாரும்
பொய்வந்த கலைபல புகன்றிடு வாரும்
           பொய்ச்சம யாதியை மெச்சுகின் றாரும்
மெய்வந்த திருவருள் விளக்கம்ஒன் றில்லார்
           மேல்வினை வறிகிலர் வீண்கழிக் கின்றார்
எய்வந்த துன்பொழித் தவர்க்கறி வருள்வீர்
           எனைப்பள்ளி எழுப்பிமெய் இன்பம்தந் தீரே
அருட்பா, ஆறாம் திருமுறை 961 

தெய்வங்களை நூற்றுக்கணக்கில் காட்டுகின்றதும், சொர்க்கம், நரகம் என்று இறந்த பின்பு சென்று சேரும் இடம் என்றும், இந்த உருவத்தெய்வங்களுக்கு பின்னணியில் பல கற்பனைக் கதைகளை கட்டிவிட்டு அதற்கு பல பூஜை முறைகளை செய்து வழிபடுவதும் உண்மை அறிவு விளக்கம் இல்லாதவர்கள் செய்யும் வேலை என்கிறார் வள்ளலார். இறைவனோ தூங்கிக்கிடந்த வள்ளலாரை எழுப்பி அவருக்கு உண்மை நெறியைக் காட்டியதாகப் பாடுகிறார். 

மற்ற கோயில்களில் செய்யப்படும் பூஜை முறைகள் சத்திய ஞான சபையில் இல்லை. சுத்த சன்மார்க்கத்தில் விபூதி என்கிற திருநீற்றுக்கும் இடமில்லை. திருநீறு பூசுவது கூட ஒரு சமயத்தின் அடையாளம் என்றுணரும் சுத்த சன்மார்க்கிகள் திருநீற்றையும் தவிர்ப்பர். வள்ளலார் காட்டும் கடவுள் எல்லா மதத்தாரும், சமயத்தாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய பொதுவான கடவுள்.

வள்ளலார் கடவுள் என்றது அன்பையும், அருளையும், அறிவையும், அவர் வார்த்தையிலே சொல்வதென்றால் “ கடவுளென்பது அன்பாம், அகிலமாம், அது உலகிலுள்ள எல்லாவற்றிலும் பரிபூரண சமாதானத்தையும், சமரச நிலையையும் ஏற்படுத்தி அவைகளை நிலை நிறுத்துகின்றது. 
“ அன்புருவாம் பரசிவமே “ என்பதே வள்ளலார் வாக்கு.

“ கொள்கைவினைக் கூட்டுறவால் கூட்டியபல் சமயக்
          கூட்டமும் அக் கூட்டத்தே கூவுகின்ற கலையும்
  கள்ளமுறும் அக்கலைகள் காட்டியபல் கதியும்
          காட்சிகளும் காட்சிதரு கடவுளரும் எல்லாம்
  பிள்ளைவினை யாட்டெனநன் கறிவித்திங் கெனையே
          பிள்ளைஎனக் கொண்டுபிள்ளைப் பெயரிட்ட பதியே

என்கிற அருட்பா மூடப்பழக்க வழக்கங்களையும், பலபல உருவ வணக்கத்தையும், புராண, இதிகாசக் கதைகளையும் கண்டிப்பதோடு, பல்வேறு உருவங்களைப் படைத்து அதற்கு அலங்காரம், படையல் தீபாராதனை முதலியன செய்வது பிள்ளை விளையாட்டுக்கு ஒப்பான செயல் என்கிறார் வள்ளலார்.

வள்ளலார் காட்டும் அருட்பெருஞ்சோதி சிவம் கருணையே வடிவான சிவமாகும். 

“ கருணையும் சிவமே பொருள் எனக் காணும்
            காட்சியும் பெறுக மற்றெல்லாம்
  மருள்நெறி என நீ எனக்கறிவித்த
            வண்ணமே பெற்றிருக்கின்றேன்
  இருள்நெறி மாயை வினைகளால் கலக்கம்
            எய்திய தென் செய்வோர் எந்தாய்
  தெருள் நிலை இன்றிக் கலங்கினேன் எனினும்
            சிறு நெறி பிடித்த தொன்றிலையே “ 

வள்ளலார் சிவத்தைக் கருணை வடிவாகக் கண்டார். மற்ற வடிவங்களை எல்லாம் மயக்கம் தரும் வடிவாகக் காண்கிறார். எந்நாளும் சிறு நெறிகளையும் அவைகள் காட்டும் தெய்வங்களையும் வழிபடவில்லை. வைகுண்டரும் வள்ளலாரும் உயிர்பலி தவிர்த்து வழிபட சொன்னதோடு, ஆடம்பர வீண் சடங்குகளையும், மூடநம்பிக்கைகளையும் எதிர்த்து குரல் கொடுத்ததைக் கண்டோம்.


புலால் மறுத்தல்

“ தன் ஊன் பெருக்கற்கு தான் பிறிது ஊன் உண்பான்
  எங்ஙனம் ஆளும் அருள் “

தன்னுடைய உடம்பை வளர்க்க இன்னொரு உயிரைக்கொன்று  அதன் உடலைத் தின்பவனுக்கு எவ்வாறு இறைவன் அருள் கிட்டும். எனக்கேட்கிறார் பொய்யா மொழிதந்த பொய்யில் புலவர்.

கொல்லான் புலாலை மறுத்தானைக் கை கூப்பி
எல்லா உயிரும் தொழும்

என்பது நம் தமிழ் மறை சொல்லும் உயர்ந்த அறநெறியாகும். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டு தன்னை அறிய முற்படும் துறவிகள், மகான்கள், ஞானிகள் தன் உயிரே போனாலும் இன்னொரு உயிரைக் கொன்று தின்ன மாட்டார்கள். அதைத்தான் திருக்குறளும்,

“ தன்னுயிர்  நீப்பினும் செய்யற்க தான்பிறிது
 இன்னுயிர் நீக்கும் வினை “ என்கிறது. 



நாம் எதை உண்கிறோமே அதனைப் பொறுத்துதான் நம்மனம் அமைகிறது. சைவ உணவு உண்பவர்கள் இயற்கையாகவே சாந்த குணம் உள்ளவராகவும், எளிதில் கோபப்படாதவராகவும், பொறுமை மிகுந்தவர்களாகவும் இருப்பர். நீண்ட நாள் நோயின்றி வாழுதற்கும் மாமிசம் தவிர்த்த உணவே சிறந்தது என்று நவீன விஞ்ஞானமும் கூறுகிறது. 

“ பொய்யை ஒழியாய், புலாலை விடாய், காளத்தி
  ஐயரை எண்ணாய், அறஞ்செய்யாய், வெய்ய
  சினமே ஒழியாய், திரு அய்ந்தெழுத்து ஓதாய்
  மனமே உனக்கென்ன மாண்பு “.  – பட்டினத்தார் 


மனம் மாண்புடன் இருந்தால் தான் இறைவன் திருவடி சித்திக்கும். அந்த மாண்புறு நெஞ்சம் பொய்யை விடவேண்டும். அதோடு புலாலையும் விட்டுவிட்டு, அறஞ்செய்து, சினம் ஒழித்து சிவயநம என்கிற ஐந்தெழுத்தை ஓத வேண்டும். அப்பொழுதுதான் முத்திநிலையை எட்டி இனிப் பிறவா நிலையை பெறலாம்.

மனித உடலின் அமைப்பு குறிப்பாக உணவு மண்டலமானது வாய் முதல் ஆசனவாய் வரையில் தாவர உணவு உண்ணும் வகையிலேயே இறைவனால் இயற்கையாக படைக்கப்பட்டுள்ளது என்பது தான் உண்மை. தாவர உணவே எளிதல் ஜீரணமாகும் உணவாகும். மலச்சிக்கலை உண்டு பண்ணாததும் தாவர உணவே.  
                              
நவீன மருத்துவத்தில் இரத்தக்கொதிப்பு  ( Blood Pressure ), மாரடைப்பு ( Myocardial Infarction ) இதய நாளங்களில் கொழுப்படைப்பு ( Artherosclerosis ) முதலியன அசைவ உணவு உண்பவர்களுக்கே அதிகம் வருகிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மை.

அசைவ உணவு வகைகள் சமையல் செய்கின்ற போது அதில் இயல்பாகவே அதிக காரம், மசாலா, எண்ணெய் முதலியன சேர்க்கப்படுவதால் வயிற்றுப்புண் ( Peptic Ulcer ) முதலிய நோய்களும், Obesity என்று சொல்லப்படும் உடற்பருமனும் உண்டாகும். எண்ணெய்யில் பொறித்த உணவு வகைகளால் Diabetes Mellites அதிகம் வர வாய்ப்புள்ளது. மேலும் மற்றும் குடல் பகுதியில் உண்டாகும் புற்று நோய்கள் மாமிச உணவு அதிகம் உண்பவர்களுக்கே வருகிறது.

ஒவ்வொரு மனிதனின் ஆன்மாவுக்கும், உள்ளத்திற்கும், உடம்பிற்கும் ஏற்ற உணவு சைவ உணவே என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது என்கிற காரணத்தால் நான் இது குறித்து மேலும் சொல்ல விரும்பவில்லை.

திருவள்ளுவரும், வள்ளலாரும் புலால் மறுத்தலை கடுமையாக வலியுறுத்தியுள்ளனர். இவர்கள் இருவரும் புலால் உண்பதை கண்டித்த அளவு எவரும் கண்டிக்கவில்லை.

வள்ளுவர் புலால் மறுத்தல் என்ற ஒரு அதிகாரமே செய்துள்ளார். சங்க காலத்தில் எந்த புலவரும் புலால் மறுத்தலை தீவிரமாக கூறவில்லை திருவள்ளுவரைத் தவிர. கபிலர் போன்ற அந்தண குலத்தைச் சேர்ந்த புலவர் பெருமக்கள் கூட புலால் உணவு உண்ட செய்தி சங்க இலக்கியத்தில் காணப்படுகிறது. அனால் திருவள்ளுவர் மட்டுமே புலால் மறுத்தலோடு கள்ளுண்ணாமையையும் சேர்த்து அறிவுரை கூறுகிறார்.



வள்ளலாரோ புலால் உண்பதை வைத்து மக்களை அகவினம், புறவினம் என்று இரண்டு இனங்களாகப் பிரிக்கிறார். அகவினத்தார் என்பவர்கள் புலாலை மறுத்துச் சைவ உணவை மட்டும் உண்பவர்கள். புறவினத்தார் என்பவர்கள் அசைவ உணவு உண்பவர்கள். புற இனத்தாராக இருந்தாலும் வள்ளலார் ஏற்படுத்தியுள்ள சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமசாலையில் அவர்களுக்கும் பசிப்பிணி நீக்க உணவு வழங்கப்படும். சத்திய ஞான சபையில் மட்டும் புலால் உண்பவர்கள உள்ளே நுழைய அனுமதி இல்லை. இது வள்ளலாரே செய்துள்ள ஏற்பாடு.

“ உயிர்க்கொலையும் புலைப்புசிப்பும் உடையவர்கள்
 உறவினத்தார் அல்லர் அவர் புறஇனத்தார், அவர்க்குப்
 பயிர்ப்புறும் ஓர் பசி தவிர்த்தல் மாத்திரமே புரிக.” 

என்பது வள்ளலாரின் வாக்கு.
மேலும்

மருவாணைப் பெண்ணாக்கி ஒரு கணத்தில்
         கண்விழித்து வயங்கும் அப்பெண்
உருவாணை உருவாக்கி இறந்தவரை
         எழுப்புகின்ற உறுவனேனும்
கருவாணையுற இரங்கா துயிருடம்பைக்
         கடிந்துண்ணுங் கருத்தனேல் எங்
குருவாணை  எமது சிவக் கொழுந்தாணை
          ஞானி எனக் கூறோணாதே

என்கிற ஒரு பாடல் போதும், வள்ளலார் எந்த அளவு சைவ உணவை வலியுறுத்தினார் என்பதற்கு. ஒரு பெண்ணை ஆணாக மாற்றும் சக்தியும் மீண்டும் அந்த ஆணை பெண்ணாக மாற்றும் ஆற்றல் உள்ளவராக இருந்தாலும், இறந்தவரையே எழுப்பக்கூடிய அருள் ஆற்றல் உள்ளவராக இருந்தாலும் தமது குருவான சிவக்கொழுந்து மீது ஆணையிட்டு சொல்கிறார் “ அவரை ஞானி என்று கூற முடியாது “ என்று. ஆகவே புலால் மறுத்தலை தனது மார்க்கத்தின் முக்கிய கொள்கையாகவே வள்ளலார் வைத்துள்ளார்.

வள்ளலாரைப் போலவே தன்னுடைய் சீடர்கள் அசைவ உணவை விடுத்து உண்ணச் சொன்னவர் வைகுண்டர். இதில் வைகுண்டரின் இந்த போதனை வியக்க வைக்கிறது, ஏனெனில் வள்ளலார் இயற்கையாகவே புலால் மறுத்து உண்ணும் குலமான கருணீகர் என்கிற மரபைச் சேர்ந்தவர். அவர் புலால் மறுக்கச் சொன்னதில் ஆச்சரியமில்லை. அனால் மாமிசம் உண்ணும் குலத்தில் உதித்த வைகுண்டர் தம்மக்களுக்கு அசைவம் விடுத்து உண்ணச் சொன்னது வியப்பும் ஆச்சரியமும் கலந்த ஒன்றே.

சம்பந்தி விருந்துகளை பல இடங்களில் நடத்தி எல்லா சாதியினரையும் ஒன்றாக அமர வைத்து உணவளிக்க ஏற்பாடு செய்தவர் வைகுண்டர்.

மக்கள் அவரவர் வீடுகளில் இருந்து சமையல் பொருட்களை எடுத்துவரவேண்டும். ஓரிடத்தில் அதனை சேர்த்து பொதுக்கிணறான முத்திரிக் கிணற்றில் நீரெடுத்து சமையல் செய்து அனைவரும் அய்யா வைகுண்டருடன் அமர்ந்து சாப்பிட்டனர். அகத்தூய்மையுடன் புறத்தூய்மையையும் வலியுறுத்தினார் வைகுண்டர். தினமும் குளித்து, தூய ஆடைகளை உடுக்கச் சொன்னார். துவையல்பந்தி என்கிற ஒருவித தவவாழ்க்கையை மக்களிடம் அறிமுகம் செய்து அவர்களை ஆன்மிகத்தில் முன்னேற்றினார். இந்த துவையல் பந்தியில் அசைவம் விடுத்து உண்ண வேண்டும். நேரத்துக்கு குளித்து பச்சரிசியும் சிறுமணிப்பயிறும் கொண்டு வேகவைத்த உணவையே உண்ண வேண்டும். அய்யா வழி பக்தர்கள் பெரும்பாலும் சைவ உணவையே உண்கின்றனர் என்கிறார், அய்யா வைகுண்டர் என்னும் நூலை எழுதிய வெ. நீலகண்டன்.

“ பண்டாரக்கிழவன் “ என்கிற புத்தகத்தில் அதனை எழுதிய திரு. கிருஷ்ணகோபால் கீழ்க்கண்டவாறு சொல்கிறார்.

நவீன உலகில் உடல் உழைப்பை மூலதனமாகக் கொண்டு இயங்கும் மக்களுக்கு அதிக கொழுப்பான அசைவ உணவு வகைகள் தேவையாக இருக்கிறது. அவர்கள் அடுத்தநாள் உழைப்புக்கான சக்தி தேவையை ஒட்டி அசைவ உணவு சாப்பிட வேண்டியவர்களாக இருக்கின்றார்கள். இப்படி இருக்கும்போது அய்யா வழியில் அசைவ உணவுக் கட்டுப்பாடு இவ்வளவு தீவிரமாக கடைபிடிக்க வேண்டியது ஏன் என்று ஆராய வேண்டி உள்ளது. சிறுதெய்வவழிபாட்டில்தான் சாதியம் கட்டமைக்கப்பட்டிருக்கிறது என்பதனை உணர்ந்த வைகுண்டசாமிகள் அவர்களின் பண்பாட்டுச் சடங்கான பலியிடுதலைக் கண்டிக்கிறார். ஆதலால் அசைவ உணவைச் சாப்பிட அனுமதிக்கும் போது பலியிடுதலையும் கண்டிக்க முடியாது என்பதை நுட்பமாக உணர்ந்து விலங்குகளை பலியிட்டு சமைத்து சாப்பிடும் பழக்கத்தை முற்றிலும் தவிர்த்திருக்கிறார்.

அறவினை யாதெனில் கொல்லாமை என்று பலபேர் பேசினார்கள். அது பேச்சளவில் தான் இருந்தது. பல சீர்திருத்தவாதிகள் உயிர்பலிக்கு எதிராக பேசினார்கள். அனால் வைகுண்ட சாமி மட்டும் பேச்சளவில் நிறுத்திக்கொள்ளாது நடைமுறைக்குள் கொண்டுவந்து முறைப்படுத்தியும் வைத்தார்.

“ ஆடுகிடாய் கோழி பன்றி ஆயனுக்கு வேண்டாங்காண்
  மேளதாளம் குரவை தொனி வேண்டாங்காண் ஆயனுக்கு

என்று வைகுண்டர் சாமிகள் கூற்றை எடுத்துக்காட்டும் இவர் மேலும் சொல்கிறார். “ காலரா அம்மை போன்ற கொடிய நோய்களுக்கு அந்த காலத்தில் முறையான மருந்துகள் கண்டுபிடிக்கவில்லை, மக்கள் உணவாகக் கொள்ளும் மாமிசத்திலிருந்து கூட நோய்கள் உற்பத்தியாகும் என்பதை உணர்ந்த அய்யா மாமிசம் சாப்பிடுவதை நிறுத்தச் சொன்னார். மூன்று வேளையும் குளித்து சுத்தமாக இருக்கச் சொன்னார். நோய்கள் பரவாமல் இருக்க சைவ உணவே சிறந்தது என்றார்.

இத்தகைய செய்திகளைப் படிக்கும்போது அடித்தட்டு மக்களின் அன்றாட உணவுப் பழக்கத்தையே மாற்றக்கூடிய  சக்தி படைத்தவராக அய்யா வைகுண்டர் விளங்குவது தெரிவதுடன் அவரது அருள் உள்ளத்தையும் உணர முடிகிறது.

தெய்வத்திடம் பக்தியும் பயமும் கொண்டிருந்த மக்களுக்கு அன்பையும், அருளையும் போதித்து உயர்ந்த சிந்தனையைக் கொண்ட சமுதாயத்தை உருவாக்கிய பெருமை அய்யாவைச் சேரும். 

                 ----------------------------------------------------------























































      




















1 comment:

  1. https://www.youtube.com/playlist?list=PLbb60V1ZcvrcTBIofmd4VPjmKZSVFgIr-

    ReplyDelete