முருகனுடன்
வைகுண்டரும், வள்ளலாரும்:
11 ஆம் அத்தியாயம்
வைகுண்டரின் வாழ்க்கையில் பெரும் திருப்பத்தை உண்டு பண்ணிய ஊர்
திருச்செந்தூர். முத்துக்குட்டிக்கு உடல்நிலை மோசமான நிலையில் அவரது தாயும்,
மனைவியும் தோளில் தொட்டில் கட்டித் தூக்கி திருச்செந்தூர் முருகனிடம் முறையிட
தூக்கிச்சென்ற வரலாற்றை முன்பே பார்த்தோம். திருச்செந்தூர் முருகன் அருளால்
முத்துக்குட்டி வைகுண்டராக அவதராம் எடுத்ததில் வைகுண்டரின் வாழ்வில் முருகன்
வழிபாடு முக்கியத்துவம் பெறுகிறது. வள்ளலாரின் தொடக்க வழிபாடும் முருக வழிபாடே.
சென்னை கந்தகோட்டத்தில்தான் தெய்வ மணிமாலை என்கிற முதல் பதிகத்தை வள்ளலார்
பாடுகிறார். இதனால் இளமையில் அவரது முதல் வழிபடுகடவுள் முருகனே என்பது
நிச்சயமாகிறது. இளமைக் காலத்தில் இறையின்பத்தில் நாட்டம் கொண்ட இராமலிங்கம்
முதலில் சென்று பாடிய தலம் முருகன் தலம். மேலும் சென்னையுல் ஏழு கிணறுப் பகுதியில்
அண்ணன் சபாபதிப்பிள்ளை, அண்ணியார் பாப்பாத்தி அம்மாளுடன் வாழ்ந்த போது மாடி
அறையில் கண்ணாடியில் திருத்தணி முருகனை தரிசனம் செய்ததாக வரலாறு கூறுகிறது. ஆகவே
வைகுண்டரின் வரலாற்றிலும் சரி, வள்ளலாரின் வரலாற்றிலும் சரி முருகக் கடவுள்
இவர்களோடு இணைந்துள்ளது தெரிகிறது.
திருத்தணி பதிகங்களில் பிரார்த்தனை மாலை என்கிற பதிகத்தில் வள்ளலாரே
முருகனுடைய திருவுருவை தன் அகத்திலே கண்டு மகிழ்ந்த அனுபவத்தை கீழ்கண்ட
அருட்பாவில் அழகாக காட்டுகிறார்.
“சீர்கொண்ட தெய்வ வதனங்கள் ஆறும் திகழ்கடப்பந்
தார்கொண்ட பன்னிரு தோள்களும் தாமரைத் தாள்களும்ஓர்
கூர்கொண்ட வேலும் மயிலும்நற் கோழிக் கொடியும்அருட்
கார்கொண்ட வண்மைத் தணிகா சலமும்என் கண்ணுற்றதே”.
கந்தர் சரணப் பத்து என்கின்ற பதிகத்தில் முருகக் கடவுளை
ஒளியாகவும், சிவமாகவும், கனியாகவும், அமுதாகவும், அறிவாகவும் காட்டும்
பாடல் ஒன்று மிக அற்புதம்.
அந்தப் பாடலின் அழகை இப்போது பார்ப்போம்....
“ஒளியுள் ஒளியே சரணம் சரணம்
ஒன்றே பலவே சரணம் சரணம்
தெளியும் தெருளே சரணம் சரணம்
சிவமே தவமே சரணம் சரணம்
அளியும் கனியே சரணம் சரணம்
அமுதே அறிவே சரணம் சரணம்
களியொன் றருள்வோய் சரணம் சரணம்
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
சமாதி வலியுறுத்தல்: 12ஆம் அத்தியாயம்
இறந்த பிறகு பிணத்தைப் புதைப்பது (சமாதி வைப்பது) அல்லது எரிப்பது என
இரண்டும் தொன்று தொட்டு இருந்து வந்தாலும் புதைப்பது என்பதே மிகப்பழமையானது.
புதைக்கும் பழக்கம், எரிக்கும் பழக்கம் குறித்து சங்க நூல்களில் காணப்படுகிறது.
சைவத்தில் ஒரு பிரிவினர் பிணத்தைப் புதைக்கும் வழக்கு இருந்துள்ளது. எரிக்கும்
பழக்கம் என்பது ஆரியர்களின் வருகைக்குப் பிறகே அதிகம் வந்துள்ளது.
உலகின் பெரும்பான்மையான மதமானது கிறிஸ்துவமதமாகும். உலகெங்கும்
அனைத்து நாடுகளிலும் கிறித்துவர்கள் வாழுகிறார்கள். அவர்களுக்கு பிணத்தை
புதைப்பதுதான் வழக்கமாக உள்ளது. இறந்தவர்களை சவப் பெட்டியில் வைத்து எரிக்காமல்
அடக்கம் செய்கின்றனர். பின்னர் சமாதி எழுப்பப்படுகிறது.
திருமூலர் வலியுறுத்துவது:
திருமூலர் ஞானிகளை எரிக்கக் கூடாது. சமாதி வைக்க வேண்டும் என்கிறார். இதற்காக
திருமந்திரத்தில் சமாதிக்கிரியை என்கிற அதிகாரமே செய்து எப்படி சமாதி வைப்பது
என்று விளக்குகிறார். வைகுண்டருக்கும், வள்ளலாருக்கும் முன்பு சமாதி வைத்தலை
வற்புறுத்தியது திருமூலரே. துறவிகள், ஞானிகள், மகான்கள் ஆகியோரை உயிர் அடங்கியதும்
எரித்தல் ஆகாது என்பது திருமூலர் கருத்து.
அந்தமில் ஞானிதன் ஆகம்தீயினில்
வெந்திடில் நாடெலாம் வெம்பும் தீயினில்
நொந்தது நாய்நரி நுகரின் நுண்செரு
வந்துநாய் நரிக்குணவாக்கும் வையகமே.
- 191௦
திருமந்திரம்
ஞானிகள் இறந்துபோன பின்பு உடலை தீயில் எரித்தால் நாடே தீயில் வேகும்.
வெந்து போகும். பிணத்தை நாய் நரிகள் உண்டுவிட்டால் நாட்டு மக்கள் போரினால் மாண்டு
நாய் நரிகளுக்கு உணவாவர்.
எண்ணிலா ஞானி உடல் எரிக்காவிடில்
அண்ணல்தம் கோயில் அழல்இட்ட தாங்கொக்கும்
மண்ணில் மழை விழா வையகம் பஞ்சமாம்
எண்ணரு மன்னர் இழப்பர் அரசே
- 1911
திருமந்திரம்
என்கிற பாடல் ஞானிகளின் உடல் எரிக்கப்படுவது கோயிலை எரிப்பதற்கு சமம்
என்கிறது. மேலும் பூமி மழையின்றி காயும், பஞ்சம், பட்டினி என்று நாட்டில் உண்டாகி
மன்னர் அரசாட்சியை இழப்பர்.
புண்ணியமாம் அவர் தம்மைப் புதைப்பது
நண்ணி அனல் கோக்கில் நாட்டில் அழிவாகும்
மண்ணில் அழியில் அலங்கார பங்கமாம்
மண்ணுல கெல்லாம் மயங்கும் அனல் மண்டியே
- 1912
ஞானிகளை புதைப்பதே புண்ணியம். எரித்தல் பாவம். எரித்தால் நாட்டிற்கு
அழிவு. சரியான முறையில் சமாதி செய்யாவிட்டால் நாட்டுவளம் குன்றும். மண்ணுலகுக்கு
அழிவு வரும் என்று திருமூலர் சொல்வதிலிருந்து ஞானிகள் உடலை எரித்தலால் உண்டாகும்
தீங்குகளை உணரலாம். சாத்திரத்திற்கு திருமந்திரத்தையும், தோத்திரத்திற்கு
திருவாசகத்தையும் எடுத்துக்காட்டும் வள்ளலார், திருமூலரின் சமாதி வைப்புக்கு
உடன்படுகிறார். இறந்தவர்கள் அனைவரையுமே எரிக்காது சமாதி செய்வது நல்லது என்பதே
வள்ளலார் விழைவு.
திருமூலரைப் பின்பற்றி சொன்னாரா அல்லது வள்ளலார் எடுத்த முடிவா என
தெரியவில்லை. சன்மார்க்க சங்கத்தின் அங்கத்தினர்கள் அனைவரையும் எரிக்கக்கூடாது,
புதைக்கவேண்டும் என சமாதி வைத்தலை வலியுறுத்தி வள்ளலார் சொல்கிறார். இது
வள்ளலாரின் கண்டிப்பான கட்டளையாகவே இருந்துள்ளது.
சமாதி வற்புறுத்தலுக்கென்று திருஅருட்பாவில் ஒரு பதிகமே பாடியுள்ளார்.
சில பாடல்களைப் பார்ப்போம்.
“பிறந்தவரை நீராட்டிப் பெருக வளர்த்
திடுகின்றீர் பேய ரேரீர்
இறந்தவரை சுடுகின்றீர் எவ்வணஞ்சம்
மதித்தீரோ இரவில் தூங்கி
மறந்தவரைத் தீ முட்ட வல்லீரால்
நும்மனத்தை வயிரம் ஆன
சிறந்தவரை எனப் புகழ் செய்துகொண்டீர்
ஏன் பிறந்து
திரிகின்றீரே.
- திருஅருட்பா
1562 ஆறாம் திருமுறை
இப்போது ஒரு திருக்குறளைக் காண்போம்.
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
- திருக்குறள்
உறங்குவது என்பது மரணம். உறங்கி விழித்து எழுவது என்பது பிறப்பு.
இரண்டும் இரவும் பகலும் போல மாறி மாறி வருவது. இரவின் அடுத்த பக்கம் பகல். பகலின்
அடுத்த பக்கம் இரவு. இரண்டும் சேர்ந்து நாள் ஆகிறது போல் வாழ்வு என்பது இறப்பும்
பிறப்பும் சேர்ந்ததே என்பதை ஏனோ நாம் ஒத்துக்கொள்வதில்லை. பிறக்கும் போது நீராட்டி
மகிழும் நாம் இறந்தபோது நீராட்டி எரித்து விடுவதை வள்ளலார் ஏற்கவில்லை.
அணங்கெழுபே ரோசையொடும் பறையோசை
பொங்கக்கோ ரணிகொண் டந்தோ
பிணங்கழுவி எடுத்துப்போய்ச் சுடுகின்றீர்
இனிச்சாகும் பிணங்களேநீர்
கணங்க ழுகுண் டாலும் ஒரு பயனுண்டே
என்னபயன் கண்டீர் சுட்ட
எணங்கெழும் சாம் பலைக்கண்டீர் அதுபுன் செய்
எருவுக்கும் இயலாதன்றே.
- 1563
ஆறாம் திருமறை
பறையோசை முழங்க பிணத்தை எடுத்துக் கொண்டுபோய் சுடுகாட்டில் சுடுகின்றீர்
உலகீர் அதனால் என்ன பயன் இனி சாகும் பிணங்களே, பிணத்தை கழுகுக்கிட்டாலும்
உணவாகுமே, எரித்த சாம்பல் புன்செய்க்கு கூட எருவாகாமல் பயனற்று போகிறதே என்கிறார்
வள்ளலார்.
குணம்புதைக்க உயிரடக்கம் கொண்டதுசுட்
டால் அதுதான் கொலையாம்
என்றே
வணம் புதைக்க வேண்டும் என வாய்தடிக்கச்
சொல்கின்றேன்.
- 1564 ஆறாம்
திருமறை
மனமும் உயிரும் அடங்கிய உடம்பான பிணத்தை சுடுவது கூட கொலை என்கிறார்.
நம்முடைய உடம்பில் உள்ள 96 தத்துவங்களில் மொத்தம் 1௦ வாயுக்கள் உள்ளன என சைவ
சித்தாந்தம் சொல்லும். அதில் தனஞ்ஜெயன் எனும் வாயு இறந்த பின் சில நாட்களுக்கு
உடம்பில் இருப்பதாகவும் எரிக்கும் போது அதுவும் சேர்த்து சுடப்படுவதாகவும் அதனால்
வள்ளலார் புதைக்க வலியுறுத்துகிறார் என்று சொல்பவர்களும் உண்டு.
மேலும் அட்டாங்க யோகத்தில் இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம், பிரத்தியாகாரம்,
தாரணை, தியானம், சமாதி என்று எட்டு நிலைகள் உள்ளன. திருமூலர் திருமந்திரத்திலேயே
இந்த அட்டாங்க யோகம் குறித்து விவரிக்கப்படுகிறது. இந்த யோக நிலையில் எட்டாவது
நிலையான சமாதி நிலைக்கு செல்லும் யோகிகள் இறந்தது போல் இருப்பர், ஆனால் சில
நாட்கள் கழித்து மீளவும் உணர்வு வந்து விழிப்புநிலை அடைவர். சம-ஆதி, அதாவது சமாதி
நிலைக்கு சென்றவர்களை இயற்கையும் தானும் ஒன்றுபட்டு ஆதி நிலையோடு ஒன்றியவர்களை
இறந்துவிட்டார்கள் என நினைத்து தவறுதலாக எரித்து விடவும் கூடாது. அதனால் வள்ளலார்
புதைக்க வேண்டும் என்று வலியுறுத்திகிறார்.
திருவண்ணாமலையில்
ஒரு மலைக்குகையில் இரமண மகரிஷி பல மாதங்கள் இப்படி சமாதி நிலையில் இருந்ததாக அவரது
வரலாறு கூறுகிறது. பார்ப்பதற்கு இறந்தவர்கள் போலே உணர்வற்று இருப்பர். அவர்களை
இறந்துவிட்டனர் என்று எரித்துவிடமுடியாது.
“பரன் அளிக்கும் தேகம் இது சுடுவதப
ராதம் எனப் பகர்கின்
றேன்நீர்
சிரம் நெளிக்கச் சுடுகின்றீர் செத்தவர்கள்
பற்பலரும் சித்த சாமி
உரனளிக்க எழுகின்ற திருநாள் வந்
தடுத்தனஈ துணர்ந்து
நல்லோர்
வரனளிக்கப் புதைந்தநிலை காணீரோ
கண்கெட்ட மாட்டி னீரே”.
இறந்தவர்கள் மீளவும் எழுந்து வருவார்கள் என்ற நம்பிக்கையுடன்
ஆரவாரமின்றி அமைதியாக இறந்தவர்களை சமாதி வைக்க வேண்டும் என்று வள்ளலார் கூறுவது
தெரிகிறது.
வைகுண்டர் வழியைப் பின்பற்றும் அய்யா வழி பக்தர்கள் இறந்தால் வடக்கு
முகமாக இருத்தி திருமண் நாமமிட்டு அருகில் விளக்கேற்றி வைப்பர். அடக்கம் செய்யும்
முன்பே 5 குடம் நீராட்டி, புத்தாடையால் உடம்பினை மூடி எடுத்துச் சென்று குழியில்
அடக்கம் செய்வதாக சொல்லப்படுகிறது. அடக்கம் செய்யும் போது “அய்யா சிவசிவசிவசிவ அரகரா
அரகரா, சிவசிவ, சிவசிவ, அரகரா அரகரா எனச் சொல்லி அடக்கம் செய்வார்களாம். தர்மயுகம்
மலரும் வரை புதைக்கப்பட்டவர் உள்ளே தவம் இருப்பதாக நம்ப வேண்டும் என இங்கே
சொல்லப்படுகிறது.
கருமாதி திதி
இந்த
சடங்குகளுக்கு பிறகு கருமாதி போன்ற சடங்குகளும், திதி போன்ற சடங்குகளும் அய்யா வழி
பக்தர்கள் செய்வதில்லை என்கின்றனர். வள்ளலாரும் கருமாதி, திதி போன்ற சடங்குகள்
தேவையில்லை என்று சொல்லி தவிர்க்கச் சொல்கிறார். வருடந்தோறும் நினைவு நாளன்று
அன்னதானம் வழங்குவது என்பதே சன்மார்க்கத்தில் வள்ளலார் வழியில் செய்து வரும்
நடைமுறை. வைகுண்டரும் வருடந்தோறும் குறிப்பிட்ட நாளில் ஏழைகளுக்கு தர்மம் செய்வதை
ஊக்குவிக்கிறார்.
தாலியை எடுப்பது கூடாது:
வள்ளலாரின்
வாழ்க்கை வரலாற்றைப் படித்தபோதுதான் என் வாழ்விலும் ஓர் திருப்பம் ஏற்பட்டது
எனலாம். ம.பொ.சிவஞானம் எழுதிய “வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு” என்ற நூலைப்படித்த
பின்பு வள்ளலார் மீது பற்றும் மதிப்பும் எனக்கு உண்டாயிற்று என்று சொல்லலாம்.
வள்ளலாரின் கொள்கைகள் எம்மை மிகவும் கவர்ந்தது.
“கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம்
மண்மூடிப்கோக”
என்ற வரிகள் என் உள்ளத்தை அவர்பால் ஈர்த்தது.
“எய்வகைசார் மதங்களிலே பொய்வகைச்சாத் திரங்கள்
எடுத்துரைத்தே
எமதுதெய்வம் எமதுதெய்வம் என்று
கைவகையே கதறுகின்றீர் தெய்வம்ஒன்றென் றறியீர்
கரிபிடித்துக்
கலகமிட்ட பெரியரினும் பெரியீர்
ஐவகைய பூதவுடம் பழிந்திடல்என் புரிவீர்
அழியுடம்பை அழியாமை
ஆக்கும்வகை அறியீர்
உய்வகை என் தனித்தந்தை வருகின்ற தருணம்
உற்றதிவண்
உற்றிடுவீர் பெற்றிடுவீர் உவப்பே”.
- 1477
ஆறாந்திருமுறை
என்ற வரிகளும்.
“இருட்சாதித் தத்துவச் சாத்திரக் குப்பை
இருவாய்ப்புப் புன்செயில்
எருவாக்கிப் போட்டு
மருட்சாதி சமயங்கள் மதங்களாச் சிரம
வழக்கெலாம் குழிக்கொட்டி மண்மூடிப் போட்டுத்
தெருட்சாறும் சுத்தசன் மார்க்கநன் னீதி
சிறந்து விளங்கஓர்
சிற்சபை காட்டும்
அருட்ஜோதி வீதியில் ஆடச்செய் தீரே
அருட்பெருஞ் ஜோதிஎன்
ஆண்டவர் நீரே”.
என்கிற வரிகளும் மேலும் மேலும் அவரை நோக்கி என்னை காந்தம் நோக்கி
நகரும் இரும்புத் தூள் போல் ஈர்த்தது எனலாம்.
வள்ளலாரின் உரைநடைப்
பகுதியைப் படித்தபோது கண்ட ஒரு செய்தி என்னை ஆச்சர்யப்படவைத்தது.
அந்தச் செய்தி “கணவன்
இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டா” என்ற சீர்திருத்த முற்போக்கு சிந்தனையை
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே வள்ளலார் சொன்னது ஆகும்.
வள்ளலாரின் உரைநடைப்
பகுதியைப் படித்தபோது கண்ட ஒரு செய்தி என்னை ஆச்சர்யப்படவைத்தது.
அந்தச் செய்தி “கணவன்
இறந்தால் மனைவி தாலி வாங்குதல் வேண்டா” என்ற சீர்திருத்த முற்போக்கு சிந்தனையை
பத்தொன்பதாம் நூற்றாண்டிலேயே வள்ளலார் சொன்னது ஆகும்.
இளவயது பெண்களே என்றாலும் கணவனை இழந்த பெண்கள் அந்நாட்களில் மட்டுமல்ல
இப்போதும் கூட தாலி அணிதல் கூடாது. அது மட்டுமா? பூ வைத்துக்கொள்ளவும், பொட்டு
வைத்துக்கொள்ளவும் இந்தச் சமுதாயம் தடைகள் போட்டு வைத்துள்ளது. கைம்பெண் அல்லது
விதவைக்கோலம் என்பது சமுதாயத்தில் கொடுமையாக நடத்தப்பட்டதை நாம் நன்கறிவோம்.
வீட்டில் நடக்கும் நல்ல காரியங்களுக்கு அவர்களை அழைப்பது இல்லை. அழைத்தாலும்
அவர்களுக்கு உரிய மரியாதையும், கௌரவமும் கிடைப்பது இல்லை. இன்னும் சொல்லப்போனால்
சுபகாரியங்கள் நடத்தும்போது கைம்பெண்கள் கண்மறைவாக நிற்க வேண்டும் என்பதும்
எல்லோருக்கும் முன்னே வரக்கூடாது என்றும் பலவிதமான கட்டுப்பாடுகள், கொடுமைகள்.
இந்த நிலையைக் கண்ட வள்ளற்பெருமான் கணவன் இறந்துவிட்டால் மனைவி தாலியை எடுக்க
வேண்டாம் என்று சொன்னது சமுதாயத்தில் மிகப்பெரிய புரட்சி. அவர்கள் கைம்பெண் கோலம்
தவிர்த்துப் பூவும், பொட்டும் வைத்துக்கொள்ளவே வள்ளலார் விழைகிறார்.
வள்ளலாரைப் போலவே வைகுண்டரும், கணவனை இழந்தால் மனைவி தாலியைக் கழட்ட
வேண்டியதில்லை எனக் சொன்னது அய்யா வழி சமூகத்தில் இன்றளவும்
கடைப்பிடிக்கப்படுகிறது. விதவை என்பதே கூடாத ஒன்று. கணவன் இறந்தாலும் மனைவி
இறுதிவரை தாலியைச் சுமக்கலாம். இந்த முற்போக்கு மனித நேயச் சிந்தனையை
வைகுண்டரிடமும் வள்ளலாரிடமும் கண்டபோது எமக்கு இருவரையும் ஒப்பீடு செய்து
நூல்செய்ய வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது.
சாமித்தோப்பு கருவறை
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
சித்தமருத்துவம், மூலிகை மருத்துவம் -
13 ஆம் அத்தியாயம்
வைகுண்டருக்கு தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் அறிவு இருந்துள்ளது.
அவர்காலத்தில் பல நாட்பட்ட நோய்களுக்குக்கூட மூலிகைகளைக் கொண்டும், திருமண்
மற்றும் மூலிகைக் கலந்த தண்ணீரைக் கொண்டும் மருத்துவம் செய்து
குணப்படுத்தியுள்ளார். அவர் வாழ்ந்த இடத்திற்கு அருகாமையில் இருந்த மருந்துவாழ்
மலையில் இருந்து கிடைத்த மூலிகைகளைக் கொண்டு பலருக்கு பலவகையான நோய்கள்
தீர்த்தருளியுள்ளார். தோலில் ஏற்படும் பல்வேறு வகையான நோய்களுக்கும், தொழுநோய்
உட்பட பல சரும நோய்களுக்கும் வைத்தியம் செய்து குணமாக்கியதை அவர் வரலாறு
கூறுகிறது. மனநோய் கொண்ட சிலரையும் அய்யா சரி செய்துள்ளார். முத்திரிக்கிணற்றில்
குளிக்க சொல்லி பலரை அறிவுறுத்த அவர்கள் முத்திரிக் கிணற்றில் நீராடி தங்கள்
நோய்களை நீக்கி திரும்பியுள்ளனர்.
முத்திரிக்கிணறு - சாமித்தோப்பு
ஒரு சம்பவத்தை இவ்விடம் பார்ப்போம்.
கன்னியாக்குமரி மாவட்டத்தில் உள்ள கொன்னக் குழிவினை என்ற ஊரைச் சேர்ந்தவர் 60 வயதான பொன்முத்து. இந்த பொன்முத்துக்கு 5 மகள்கள்.
ஏழைக்குடும்பம் ஆகையால் ஒருவருக்கும் திருமணம் செய்ய முடியாது தவித்த நிலையில் 32
வயதான முதல் பெண் கோவில்பிள்ளைக்கு வரன் வந்தது. மாப்பிள்ளை நல்ல
வசதியான இடம். அனால் அவருக்கு தீராத நோய் இருந்துள்ளது. கோயில்பிள்ளையை ஏழ்மையின்
காரணமாக அந்த வசதியான மாப்பிள்ளைக்கு திருமணம் செய்துவைத்துவிட்டார், அவளது தாய்
பொன்முத்து. திருமணம் முடிந்த சில நாட்களிலேயே உடம்பு முடியாமல் படுத்த படுக்கை
ஆகிவிட்டார் புதுமாப்பிள்ளை. கோவில்பிள்ளையின் தாய் அழுது புரண்டாள். அப்போது
அய்யா வைகுண்டரின் மகிமைபற்றித் தெரிந்து கொண்டு சாமித்தோப்பு சென்று வைகுண்டரிடம்
முறையிட்டார். அய்யா தண்ணீர் இருந்த ஒரு மண்கலசத்தில் கொஞ்சம் திருமண் இட்டு அதை
அவளிடம் கொடுத்தார். இந்த புனித நீரை கோயில்பிள்ளை தன் கணவருக்கு நித்தம்
கொடுத்துவர அவள் கணவன் குணம் பெற்றதாக “ அய்யா வைகுண்டர் வரலாறும் அற்புதங்களும் “
என்ற நூலில் நெல்லை விவேகானந்தா சுட்டிக்காட்டுகிறார். ஆகவே மூலிகைகள் பலவற்றின்
மருத்துவ குணம் அய்யாவுக்கு தெரிந்துகொள்வதுடன் தன்னுடைய அருளாற்றல் கொண்டு பல
நோய்களுக்கு தீர்வு கண்டுள்ளதைக் காண முடிகிறது.
தமிழகத்தில் மிகப்
பழமையான மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் வள்ளலாருக்கு மிகுந்த அறிவு
இருந்திருக்கிறது. தமிழகத்தில் தோன்றிய பெரும்பாலான சித்தர்கள் மருத்துவர்களாக
இருந்துள்ளனர். பசிப்பிணி மருத்துவராக விளங்கிய வள்ளலார் உடற்பிணிக்கும்
மருத்துவம் செய்த மருத்துவராக விளங்கியுள்ளார். வள்ளலார் கருங்குழியில் வாழ்ந்த
காலத்திலும் வடலூரில் வாழ்ந்த காலத்திலும் பல அன்பர்கள் தங்களுடைய நோய்கள்
குறித்து வள்ளலாரிடம் முறையிட அவைகளை மூலிகைகள் கொண்டும், திருநீறு அளித்தும் தமது
அருளாற்றலின் வலிமையால் குணப்படுத்தியுள்ளார்.
உரைநடைப்பகுதியில் மூலிகைக் குணங்கள் அட்டவணைப் பகுதியில் 485 வகையான மூலிகைகளின்
குணங்களைக் குறித்துத் தந்துள்ளார்கள். இப்பொழுது டெங்குக் காய்ச்சலுக்கு
பயன்படுத்தச் சொல்லும் நில வேம்பு குறித்து எழுதும் போது அதில் நில வேம்பை சுராரி,
சூதநாசி, வாயுகரிரி என்று குறிப்பிட்டு எழுதுகிறார். கரிசாலை என்கிற
கரிசலாங்கண்ணியைப் பற்றிச் சொல்லும் போது பாண்டுமர்த்தினி, சஷய மர்த்தினி, வசீகரி
என்று குறிப்பிடுகிறார்.
கரிசாலங்கண்ணியைக் குறித்து அதிகம் சொல்கிறார்
மேலும் தூதுவளையிலை, முசுமுசுக்கையிலை, துளசி, கண்டங்கத்திரி இவைகள் வள்ளலாரின்
மூலிகை வைத்தியத்தில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் பொன்னாங்கண்ணி, வில்வம்,
சீந்தில், புளியாரை, வல்லாரை, நன்னாரி, கடுக்காய், மிளகு, அருகம்வேர் முதலியன இடம்
பெறுகிறது. மிளகாயைவிட மிளகிற்கும், சீரகத்திற்கும் முக்கியத்துவம் தருகிறார்.
மேலும் நித்திய கரும விதி, பொதுவிதி, சிறப்பு விதி இவைகளில் அன்றாடம் உடம்பைப் பேண
செய்யவேண்டியவைகள் குறித்து விளக்கமாக தந்துள்ளார்.
வள்ளலார் பல அன்பர்களுக்கு எழுதிய கடிதங்களின்
மூலம் கிடைக்கப்பெற்று அச்சில் வெளிவந்துள்ளது. அவைகள் திருமுகங்கள் என உரைநடைப்பகுதியில்
அச்சேறியுள்ளது. தமது நண்பர் இரத்தின முதலியாருக்கு எழுதிய கடிதங்களே அதிகம். பல
கடிதங்களில் மருத்துவ யோசனையையும் சம்பந்தப்பட்ட நபருக்கு வழங்கி எழுதுகிறார்.
இறுக்கம் இரத்தின முதலியாருக்கு உடம்பு சரியில்லை என்பதை வேறுநபர் எழுதிய கடிதம்
மூலம் அறிந்த வள்ளலார் இரத்தின முதலியாருக்கு உடனே ஒரு கடிதம் எழுதுகிறார். அதில்
நண்பரின் உடல்நிலை சரியில்லை என்பதை அறிந்து தாம்பட்ட வேதனையையும் அதற்கான
வைத்தியத்தையும் கடிதத்தில் சொல்கிறார். அந்த கடிதம் முழுதும் கிழே காண்போம்.
திருமுகம்: 23: சிவாயநம
என்பார்க்கு அபாயம் இல்லை.
20/09/1864
அன்பு, அறிவு, ஒழுக்கம் முதலிய நற்குணங்கள்
வாய்ந்து நம்மிடத்து உள்ளன்பு வைத்த சிரஞ்சீவி இரத்தின முதலியார்க்கு சிவ
கடாட்சத்தினால் தீர்க்காயுளும் திட தேகமும் சகல சம்பத்தும் மேல்மேலுமுண்டாவதாக.
தங்கள் சுபசரித்திரங்களை அடிக்கடி கேட்க
விரும்புகிறேன். தங்களுக்கு இருமலால் தேகம் அபக்குவமாக இருக்கிறதாகத் தபாலில்
எனக்குத் தெரிவித்தார். அவர் தெரிவித்தது தொடங்கி என் நினைப்பெல்லாம் தங்களிடமாகவே
இருக்கிறது. நித்திரை பிடிக்கிறதுமில்லை. நான் தொடங்கிய காரியங்கள் ஒன்றும்
நடக்கிறதுமில்லை. மனம் அலைபாய்ந்து கொண்டேயிருக்கிறது உடனே புறப்படுவேன்.
இவ்விடத்தில் ஒரு தடை நேரிட்டு இருக்கின்றது. அது இன்னும் பதினைந்து
தினத்தில்விடும். அதற்கு மேல் பிரயாணப்படுகிறேன். தாங்கள் நமது சாமி அவர்களைக் கொண்டு
உபசாந்தி செய்துக் கொண்டு அதிக உழைப்பெடுத்துக் கொள்ளாமல் சாக்கிரதையாக
வரவேண்டும். கடினமான அவுஷதங்களைக் கொள்ள வேண்டாம்.
முசுமுசுக்கை சமூலங்கொண்டு வந்து பசும்பாலில்
ஊறவைத்து உலர்த்தி இடித்துச் சூரணமாக வைத்துக் கொண்டு நித்தியம் காலையில் தேயிலைத்
தண்ணீர் காய்ச்சி சாப்பிடுவது போல சலத்தில் போட்டு சுண்ட வைத்து பசும்பால்
சர்க்கரை மிளகுப்பொடி கலந்து கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிட்டு வரவேண்டும்.
உத்தியோகம் தடையிருந்தால் அதை விடுவித்து தேகத்தைப் பக்குவப்படுத்திக்
கொள்ளுங்கள். தேகம் பக்குவமான பின்பு சிவானுக்கிரகத்தால் உத்தியோகம் சம்பாதித்துக்
கொள்ளலாம். அது பரியந்தம் கடன் பட்டாவது ஜீவனம் செய்யலாம். அது குறித்து அஞ்ச
வேண்டாம். மேற்குறித்தபடி நான் அவசியம் வருகிறேன். நமது மெய்யன்பர் வேலு
முதலியார்க்கும் நான் வருவது நிச்சயமென்பது குறிக்க வேண்டும். இந்தக் கடிதம்
கண்டவுடன் தங்கள் தேக நிலையை தபாலில் தெரிவிக்கவேண்டும். இல்லாவிட்டால் என் மனம்
சஞ்சலித்துக் கொண்டேயிருக்கும். ஆதலில் தெரிவிக்கவேண்டும். தாங்கள் சிவாயநமவென்று
சிந்தித்திருப்பார்க்கு அபாயமொரு நாளுமில்லை என்பதை சத்தியமாகக் கடை பிடிக்க
வேண்டும்.
புரட்டாசி 6 தங்கள்
உண்மையுள்ள
சிதம்பரம் இராமலிங்கம்
இக்கடிதம் மூலம் வள்ளலார் தம் அன்பர்க்கு
வழங்கிய மருத்துவ ஆலோசனையும் நமக்குத் தெரிகிறது.
வேட்டவலம் என்கிற ஊரில் அப்பாசாமி பண்டாரியார்
என்கிற பெரிய ஜமீன்தார் வாழ்ந்து வந்தார். அவருடைய இரண்டு மனைவிகளுக்கும் உடல்
நிலை சரியில்லாமல் இருந்தது. ஒரு மனைவிக்கு பிரம்மராக்ஷஸமும் இன்னொரு மனைவிக்கு
மகோதரம் என்கிற நீண்டநாளைய நோயும் இருந்தது. ஒன்று மனம் சம்மந்தப்பட்ட நோய்,
இன்னொன்று தோல் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட நோய். பல மருத்துவர்களிடம் காண்பித்து
குணப்படுத்த முடியாத ஜமீன்தார் என்ன செய்வது என்று தெரியாமல் நொந்து போயிருந்தார்.
தங்களுடைய குலதெய்வம் காளி தேவிக்கு ஆடுகளையும், கோழிகளையும் பலியிட்டுப் பரிகாரம்
செய்து அந்த நோய்களிலிருந்து விடுவித்துக்கொள்ளலாம் என்று முடிவெடுத்திருந்தார்
ஜமீன்தார் அப்பாசாமி பண்டாரியார். இவ்வேளையில் வள்ளலாரின் மகிமைகள் அற்புதங்கள்
குறித்து கேள்விப்பட்ட ஜமீன்தார் தம் இல்லத்திற்கு வள்ளலார் எழுந்தருள விருப்பம்
கொண்டு அழைப்பு விடுத்தார். வள்ளலாரும் ஜமீன்தார் வீட்டுக்கு வருகைதர ஒப்புதல்
தந்து வரத் தயாரானார். வள்ளலாரின் வருகையை ஆவலுடன் எதிர்பார்த்த ஜமீன்தார்
வள்ளலார் வரும் வேளை தம்வீட்டில் இரண்டு நாற்காலிகளைப் போட்டுவைத்து அதில் ஒரு
குறிப்பிட்ட நாற்காலியில் வள்ளலார் அமர்ந்தால் வள்ளலார் இறையருள் கிடைத்த அருளாளர்
என்று முடிவு செய்திருந்தார். வீட்டிற்கு வருகைதந்த வள்ளலாரும் ஜமீன்தார்
அப்பாசாமி பண்டாரியிடம் தாங்கள் நான் அமர வேண்டும் என்று எதிர்பார்த்த
நாற்காலியிலேயே அமர்கிறேன் என்றுச் சொல்லி அமர்ந்தார். அப்பாசாமி பண்டாரியார்
பயத்தால் உடல் நடுங்கிப்போய் வள்ளற்பெருமான் திருவடிகளில் விழுந்து வணங்கினார்.
கொஞ்சநேரம் அளவளாவிய பின் தம்முடைய மனைவியரின் உடல்நிலை குறித்து வருந்திக்கூற
அவர்களை அழைத்து வருமாறு வள்ளலார் கூறினார்.
வள்ளலார், ஜமீன்தார் முதல் மனைவியிடம் சற்று
நேரம் பேசி பிறகு திருநீற்றைத் தந்து பூசிக்கொள்ள சொன்னார். முதல் மனைவியின் மனம்
சம்மந்தமான நோய் விலகியது. இரண்டாவது மனைவிக்கும் திருநீற்றுடன் மருந்துகள் தந்து
சில நாட்கள் சாப்பிட்டு வரச்சொல்ல நோய் குணமானது. பின்னர் வள்ளலார், ஜமீன்தார் பலி
கொடுக்கும் எண்ணத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த ஆடுகளையும், அடைத்து
வைக்கப்பட்டிருந்த கோழிகளையும் விடுவிக்கச்சொல்லி ஜமீன்தாரின் மனதை மாற்றினார்.
ஜமீன்தாரும் மனம் மாறி அன்றிலிருந்து பலியிடும் வழக்கத்தை ஒழித்ததோடு புலால்
மறுத்து உணவு உட்கொண்டதோடு வள்ளலாரின் அன்பிற்கு உரியவராக மாறினார். இதனால்
வள்ளலார் ஒரு மிகச் சிறந்த சித்த மருத்துவராக விளங்கியது தெரிகிறது.
வள்ளலார் சொல்லுகின்ற சில மருத்துவக்
குறிப்புகளைப் பார்ப்போம்.
காலையில் சூரியோதய மானவுடன் தூதுவளை,
பொன்னாங்கண்ணி, வில்வம், சீந்தல், பொற்றலைக் கையாந்தகரை, புளியாரை, வல்லாரை,
நன்னாரி, கடுக்காய், மிளகு, அருகம்வேர் இவைகளில் யாதேனும் ஒன்றைப் பசும்பாலிற்
சுத்தி செய்து சூரணமாக்கிக் கொண்டு சர்க்கரையிற் கலந்தாவது அல்லது சூரணமாகவாவது
பசும்பாலில் அனுபானித்தாவது சிறிது சிறிதாக உண்ணுதல்.
பதார்த்தங்களில் புளி மற்றும் மிளகாய் சிறிதே
சேர்க்கவேண்டும். மிளகு சீரகம் அதிகமாகவே சேர்த்தல் வேண்டும். கடுகு சேர்ப்பது
அவசியமல்ல. உப்பு குறைவாகவே சேர்த்துக்கொள்ளல் வேண்டும். அன்றி, எந்த வகையிலும்
உப்பு மிகுதியாகக் கொள்ளாமல் உபாயமாகக் கொள்ளுவது தேகம் நீடிப்பதற்கு ஏதுவாம்.
தாளிப்பில் பசு வெண்ணெய் நேரிட்டால் தாளிக்க வேண்டும். நேராத பட்சத்தில் நல்லெண்ணெய்
சிறிது சேர்க்கவுங் கூடும். வெங்காயம், வெள்ளைப்பூண்டு சிறிதே சேர்க்க வேண்டும்.
கத்தரிக்காய், வாழைக்காய், அவரைக்காய், முருங்கைக்காய், பீர்க்கங்காய்,
கலியாணப்பூசணிக்காய், புடலங்காய், தூதுளங்காய், கொத்தவரைக்காய், இவைகளை பதார்த்தஞ்
செய்தல் வேண்டும். இவற்றினுள் முருங்கை, கத்தரி, தூதுளை, பேயன் வாழைக்காய் இவைகளை
அடுத்தடுத்து கறிசெய்து கொள்ளலாம். மற்றவைகளை ஏகதேசத்தில் ( எப்போதாவது ) செய்து
கொள்ளலாம்.
பகலில் எந்த வகையிலும் நித்திரை ஆகாது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------------
சந்தித்த சோதனைகள்: 14 ஆம் அத்தியாயம்
சமுதாயத்தில்
அடித்தட்டு மக்களிடம் ஒரு எழுச்சியை அய்யா வைகுண்டர் ஏற்படுத்திய காரணத்தால்
பொறுத்துக்கொள்ள முடியாத அன்றைய சமஸ்தான மன்னர் தம் படைவீரர்களை அனுப்பி வைகுண்டரை
இழுத்துவரச் செய்ததோடு சாட்டையைக் கொண்டும் அடித்த கொடுமையான நிகழ்வு நடந்துள்ளது.
சங்கலிகளால் பிணைத்து வைகுண்டரை தெருவில் இழுத்துச் சென்று அவமானப் படுத்தியுள்ளனர்
மனிதாபிமானம் இல்லாதவர்கள். சாதியினைச் சொல்லி அடித்து இழுத்துச் சென்றதை அய்யாவே
அகிலத்திரட்டில் பாடுகிறார்.
கைது செய்யப்பட்டு சிறையில் பாம்பு, தேள் இருந்த கொட்டடியில் அடைக்கப்பட்டார்.
திருவனந்தபுரத்தில் சிங்காரத்தோப்பில் சிறையில் வைக்கப்பட்டார். அய்யாவுக்கு
விஷப்பால் தரப்பட்டது. பட்டினிப்போட்டனர். எதற்கும் அஞ்சாமல் சாகாமல் இருந்த
அய்யாவை மன்னர் தீயிட்டுக் கொளுத்த ஆணையிட்டார். தீயிலும் இறங்கி நடந்து வந்தார்
வைகுண்டர் எதற்கும் கலங்காத வைகுண்டரை கடைசியாக பல நாட்கள் பட்டினி கிடந்த
புலியோடு சேர்த்து கூண்டில் அடைந்தார். புலியும் வைகுண்டரை எதுவும் செய்யாமல்
அய்யாவின் பார்வையில் மயங்கி மண்டியிட்டது. எதற்கும் அஞ்சாத வைகுண்டரின்
செயலையும், அற்புதங்களையும் கண்ட மன்னர் சுவாசித் திருநாள் 112நாள்
சிறைவாசத்திற்குப் பிறகு விடுதலை செய்ய உத்தரவிட்டார். நான் சுருக்கமாக அவர் பட்ட
சோதனைகளை சொல்லியுள்ளேன்.
இதைப்போல வள்ளலார் பட்ட அவமானங்களும் அதிகம். சாதி, மதம் இல்லை என்று
சொன்னதால் தன் சொந்த சாதிக்காரர்களாலேயே அவமதிக்கப்பட்டார். அக்காலத்தில்
வள்ளலாரைப் பைத்தியக்காரன், மொட்டை பாப்பாத்தி என்றெல்லாம் ஏளனம் செய்துள்ளனர்.
யாழ்பாணம் ஆறுமுக நாவலரை தூண்டிவிட்டு வள்ளலாரின் அருட்பா அருட்பா அல்ல, அது
மருட்பா, என்று நீதிமன்றத்தில் வழக்கும், ஆறுமுக நாவலரை தூற்றிப் பேசியதாக
வழக்கும் போட்டு கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்திற்கு வள்ளலாரை வரவழைத்து
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தியுள்ளனர். இந்த அருட்பா மருட்பா போர் குறித்து
பலரும் அறிந்ததே என்பதால் நான் விளக்கமாகக் கூறவில்லை.
=================================================================
அருமை, இவ்வரப்பணி வாழ்க
ReplyDelete