.

.

Tuesday, October 18, 2016

7,8,9 &10ஆம் அத்தியாயங்கள் - வைகுண்டர் வள்ளலார் ஒரு பார்வை ஒப்பாய்வு நூல்


           அன்னதானம் – ஏழாம் அத்தியாயம் 

தானங்களில் மிக உயர்ந்த தானம் அன்னதானம். எத்தனையோ தானங்கள் உள்ளன. இரத்த தானம், உடைகள் தானம், கண் தானம், உழைப்பவர்களுக்கு சில சாதனங்களை வழங்கும் தானம் என சொன்னாலும் இதில் ஆன்மிக ரீதியாக அன்ன தானத்திற்கு ஈடான தானங்கள் இல்லை என்றே கூறலாம். இரத்த தானம், கண் தானங்களும் உயர்ந்த தானங்களே எனினும் நடைமுறையில் எளிதில் செயல்படுத்துவது கடினம். ஆனால் அன்னதானத்திற்கோ செயல்படுத்துதல் கடினமல்ல. இரத்த தானம் ஒரு முறை வழங்கிவிட்டால் குறைந்த பட்சம் மூன்றுமாதங்களுக்கு திரும்ப வழங்கமுடியாது. கண்தானம் இறந்த பிறகே தரமுடியும். இரண்டு கண்களை இரண்டு நபருக்கு வழங்கலாம்.

ஆனால் அன்னதானத்தை அன்றாடம் செயல்படுத்த முடியும். நாட்டில் பசியால் வாடும் மக்கள் இன்றளவும் நம்மைச்சுற்றி ஆயிரக்கணக்கில் இருந்துகொண்டு உள்ளனர். அவர்களுக்கு பசிக்கும் வேளையில் ஒரு வேளை உணவைத் தந்து அந்த பசியின் வேதனைகளிலிருந்து அவர்களை மீட்டு அவர்கள் முகத்தில் காணும் மகிழ்ச்சியில் இறைவனைத் தரிசிக்க முடியும் அதனால்தான் “ஏழையின் சிரிப்பில் இறைவனை காணலாம்” என்கிறார் பேரறிஞர் அண்ணா. “யாவர்க்குமாம் உண்ணும்போது ஒரு கைப்பிடி” என்கிறார் திருமூலர். “யார்க்கும் இடுமின் அவரிவர் என்று எண்ணன்மின்” என்றும் சொல்லும் திருமூலர் ஒரு ஞானியின் ஒருவேளை வயிற்றுப் பசியை நீக்கும் புண்ணியச் செயலுக்கு ஈடான செயல் வேறு இல்லை என்பார்.

“ஆற்றுவார் ஆற்றல் பசியாற்றல் அப்பசியை
மாற்றுவார் ஆற்றலின் பின்” 

என்கிறது தமிழ் வேதம். இரண்டு நபர்களில் ஒருவர் பசிப்பிணியை பொறுத்துக்கொள்ளும் தவவலிமை மிக்கவர். இன்னொருவர் பசியென்று வரும் ஏழைகளுக்கும் இல்லாதவர்களுக்கும் இரங்கி உணவு தருபவர். இவர்கள் இருவரில் எவருடைய ஆற்றல் உயர்ந்தது எனில் பிறர் பசியை போக்கும் இரக்கமுடைய உள்ளம் உள்ளவரின் ஆற்றல் என்கிறது இந்த குறள். நமது தவவலிமையால் நமது பசியை பொறுத்துக்கொள்வதை விட பிறரது பசியைப் போக்கும் அறச்செயல் மிக உயர்ந்த ஈடுஇணையற்ற செயலாகும்.
மேலும்
“அற்றார் அழிபசி தீர்த்தல் அஃதொருவன்
பெற்றான் பொருள்வைப் புழி.

என்றும் திருக்குறள் நமக்கு சுட்டிக் காட்டுகிறது. அழிபசியான அதாவது அழித்த பசி, அழிக்கும் பசி, அழித்துக்கொண்டிருக்கின்ற பசி என்று வினைத்தொகையில் கூறப்பட்டுள்ளது. இதை தீர்க்க செலவு செய்யும் உயர்ந்த அறமே நம்பொருளை சேர்த்துவைக்கும் உண்மையான இடம் என்பது இதன் பொருள். நினைத்துப் பார்த்தால் நாம் வாழும் காலத்தில் வங்கிகளில் சேமித்து வைத்திருக்கும் பணமோ, பணத்தைக் கொட்டி வாங்கிய நிலமோ, ஆசையாக சேர்த்துவைத்த தங்க, வைர நகைகளோ நம்முடன் தொடர்ந்து வராது. உடலை விட்டு உயிர் பிரியும்போது நம்முடைய அறத்தின் பயனே நம்மைத் தொடரும்.

“பிறக்கும் போது கொண்டு வந்ததில்லை; பிறந்து மண்மேல்
இறக்கும் போது கொண்டு போவதில்லை; இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியாது
இறக்கும் குலாமருக்கு ஏன் சொல்லுவேன் கச்சி ஏகம்பனே
-    என்கிறார் பட்டினத்தார்.

“அத்தமும் வாழ்வும் அகத்துமட்டே; விழி அம்பொழுக
மெத்திய மாதவரும் வீதி மட்டே; விம்மி விம்மி இரு
கைத் தலைமேல் வைத்து அழுமைந்தரும் சுடுகாடு மட்டே;
பற்றித்தொடரும் இருவினைப் புண்ணிய பாவமுமே”.

என்று பட்டினத்துபிள்ளையார் நமக்குப் பாடம் சொல்கிறார்.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் பல நாயன்மார்கள் குறிப்பாக சிறப்புலி நாயனார், மானக்கஞ்சாறர் அமர்நீதி போன்ற நாயன்மார்கள் சிவனடியார்களின் பசியைப் போக்க அன்னம் பாலித்து முக்தியை பெற்றவர்கள்.

“சோறு” என்ற சொல்லுக்கே முக்தி என்ற பொருளும் உண்டு என்கின்றனர். முக்தியடைய சோறு இடுவதும் ஒரு வழியாகும். சோறு இட்டு சோறு அடைந்தனர் என்றனர் நம் முன்னோர். ஆனாலும் முக்திபெற வேண்டும் என்ற எண்ணத்துடனோ இன்றி இயற்கையாக இயல்பாக உதவுவதுதான் முக்திக்கு வழி வகுக்கும்.
அதனால் தான்

“கேடும் ஆக்கமும் கெட்ட திருவினார்
ஓடும் செம்பொன்னும் ஒக்கவே நோக்குவார்
கூடும் அன்பினில் கும்பிடலே அன்றி
வீடும் வேண்டா விறலின் விளங்கினார்

என்பார் சேக்கிழார். அன்பு கொண்ட நெஞ்சத்தோடு பிறர்க்கு உதவி இறைவனை வணங்கும் பெரியோர் வீடுபேற்றைக்கூட எண்ணாதவர்கள் என்பது இதற்கு பொருளாகும்.

நமது தமிழ் மண்ணில் வாழ்ந்த வள்ளல்கள் கூட அப்படிப்பட்ட மனம் பெற்றவர்களாகவே வாழ்ந்துள்ளனர். 

“இம்மைக்கு செய்தது மறுமைக்கு ஆம் எனும்
அறவினை வணிகன் ஆய் அல்லன்” 

என்பதிலிருந்து மறுமையில் சொர்க்கம் அல்லது வீடு பேற்றை பெற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அறச்செயல் புரியாமல் அதுவே சான்றோர் செல்லும் வழியும் நெறியும் என்று உணர்ந்து நல்லது செய்தல் வேண்டும். அப்படி பிறர்க்கு உதவிடும் செயலிலேயே மகத்தான செயல் அன்னதானம் எனில் மிகையில்லை.

கை இல்லாமல் வாழ்பவர்கள் உண்டு. கால் இல்லாமல் இருப்பவர்களும் உண்டு. கண் இன்றி, கேட்கும் திறன் இன்றி, உடலின் பிற உறுப்புகள் புறத்தே இல்லாமல் வாழும் மனிதர்கள் ஆனாலும் வயிறு இல்லாமல் வாழும் மனிதர்கள் இருக்க முடியாது. ஞானியே எனினும், மகான்கள், துறவிகள் எனினும் அந்த வயிற்றுக்குச் சோறு இன்றி வாழுபவர்களும் இருக்க முடியாது.

மனிதனின் கருவறையில் சிசுவுக்கு உணவு ஊட்டம் தாயின் நஞ்சுக்கொடி வழி கிடைக்கிறது. பிறந்தது முதல் இறக்கும் வரை வயிற்றுக்கு உணவு தேவைப்படுகிறது. அரசன் முதல் ஆண்டி வரை உணவின்றி வாழ இயலாது. இறைவனை நினைப்பதற்கும் கூட நமக்கு பசி இருக்கக் கூடாது. ஏனெனில் பசி என்கிற உணர்வு கடுமையாக ஏற்படும் வேளை இறைவனைப்பற்றி எவரும் எண்ண முடியாது. அதனால் தான் புத்தரும் கூட

“பசித்தவனுக்கு உணவு தந்து அந்த பசியிலிருந்து ஒருவரை வெளிக்கொண்டுவா. பின்பு அவருடைய அறிவைத் தூண்டு” என்கிறார்.
பசித்தவனுக்கு உணவே தெய்வம் என்பது உண்மையும் கூட. பசியின் கொடுமையை உணர்ந்தே அவ்வையாரும்

“மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவம் உயர்ச்சி தாளாண்மை தேனின்
கசிவந்த சொல்லியர்மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்”.

என்று பாடுகிறார். மனிதருக்கு பசி என்கிற உணர்வு வந்துவிட்டால் மேற்கூறிய பத்தும் நம்மை விட்டு போய்விடும் என்பதை உணர்ந்ததாலேயே வைகுண்டரும், வள்ளலாரும் அன்னதானத்தை வலியுறுத்தி சொல்லியுள்ளனர்.



ஏழைகளின் பசிதவிர்த்தல் ஆகிய அறப்பணி மற்றும், புலால் மறுத்தல் என்கிற இரண்டையும் வலியுறுத்தி வள்ளலார் எழுதியுள்ள உரைநடை நூல் ஜீவகாருண்ய ஒழுக்கமாகும்.. ஏட்டளவில் எழுதி வைத்ததோடு மட்டுமின்றி பசியை போக்கும் மகத்தான செயலில் ஈடுபட்ட வள்ளலார் 1867 ஆம் ஆண்டு மே மாதம் 23ஆம் தேதியன்று சமரச சுத்த சன்மார்க்க சத்திய தருமச் சாலையை நிறுவி அன்னம் பாலிக்கத் தொடங்கினார். அன்று மூட்டப்பட்ட நெருப்பு இன்று வரை அணையாது பசி என்று வந்த, வருகிற அனைவருக்கும் உணவு வழங்கி வருகிறது. பசித்தோர் வந்து உணவு உண்ணும் வரை வள்ளற்பெருமானார் திருக்கரங்களால் ஏற்றப்பட்ட அடுப்பில் தயார் செய்யப்பட்ட உணவு வழங்கப்படும். ஏழைகளின் வயிறு எரியாமல், காயாமல் இருக்க வள்ளலார் ஏற்படுத்தியுள்ள இந்த தருமச்சாலையை ஜீவகாருண்ய அறப்பணியில் உலக சரித்திரத்தில் ஒரு மைல்கல் எனலாம். “ஜீவகாருண்ய ஒழுக்கமே கடவுள் வழிபாடு” என்ற வள்ளலாரின் நெறியை செயல்படுத்தும் நிறுவனம் சத்திய தருமச்சாலை.

பசியின் கொடுமையிலிருந்து மக்களை விடுவிப்பது வள்ளலாரின் தலையாயப் பணியில் ஒன்றாக இருந்தது ஏன்? அவர் சொல்கிறார். 

“ஜீவர்களுக்கு பசி அதிகரித்த காலத்தில்
ஜீவ அறிவு விளக்கமில்லாமல் மங்குகிறது
அது மங்கவே அறிவுக்கறிவாகிய கடவுள் விளக்கம் மறைபடுகின்றது.
அது மறையவே புருட தத்துவம் சோர்ந்து விடுகிறது
அது சோரவே பிரகிருதி தத்துவம் மழுங்குகின்றது
அது மழுங்கவே குணங்களெல்லாம் பேதப்படுகின்றன
மனம் தடுமாறி சிதறுகின்றது
புத்தி கெடுகின்றது
சித்தம் கலங்குகிறது
அகங்காரம் அழிகின்றது
பிராணன் சுழல்கின்றது
பூதங்களெல்லாம் புழுங்குகின்றன
வாத பித்த சிலேத்துமங்கள் நிலை மாறுகின்றன
கண் பஞ்சடைந்து குழி விழுந்து போகின்றது
காது கும்பென்று செவிடு படுகின்றது
நா உலர்ந்து வறளுகின்றது
நாசி குழைந்து அழல்கின்றது
தோல் மெலிந்து ஸ்மரணை கெடுகின்றது
கை கால் சோர்ந்து துவளுகின்றன
வாக்கு தொனி மாறிக் குளறுகின்றது
பற்கள் தளருகின்றன
மலசல வழி வெதும்புகிறது
மேனி கருகுகின்றது
ரோமம் வெறிக்கின்றது
நரம்புகள் குழைந்து நைகின்றன.
நாடிகள் கட்டு விட்டுக் குழைகின்றன
எலும்புகள் கருகி மூட்டுகள் நெக்குவிடுகின்றன
இருதயம் வேகின்றது
மூளை சுருங்குகின்றது
சுக்கிலம் (விந்து) வெதும்பி வற்றுகின்றது
ஈரல் கரைகிறது
இரத்தமும் சலமும் சுவறுகின்றது
மாமிசம் குழைந்து தன்மை கெடுகின்றது 
வயிறு பகீரென்று எரிகின்றது
தாப சோபங்கள் மென்மேலும் உண்டாகின்றன.

இவ்வாறு மனதிலும் உடலிலும் ஏற்படும் மாற்றங்கள் உயிரிழந்து விடுவதற்கான நிலைக்கு மிக அருகில் தள்ளிக் கொண்டு செல்கிறது என்று பசியைக் குறித்து வள்ளலார் குறிப்பிடுகிறார். 

பசியின் கொடுமையை வள்ளலார் வர்ணனை செய்த அளவிற்கு வேறு எந்த மகானும், ஞானியும் செய்ததில்லை என துணிந்து சொல்வேன். தெரிந்துகொள்ள வேண்டுமெனில் ஜீவகாருண்ய ஒழுக்கம் என்ற நூலைப் படித்து தெரிந்து கொள்ளவும். உதரணத்திற்கு எது ஜீவகாருண்யம் என்று வள்ளலார் சொல்வதில் சிலவற்றைக் காண்போம்.

“பசி என்கிற நெருப்பானது ஏழைகள் தேகத்தினுள் பற்றி எரிகின்ற போது ஆகாரத்தால் அவிக்கின்றதுதான் ஜீவகாருண்யம். பசி என்பிற விவுக்காற்றானது ஏழைகள் அறிவாகிய விளக்கை அவிக்கின்ற தருணத்தில் ஆகாரங்கொடுத்து அவியாமல் ஏற்றுகின்றதே ஜீவகாருண்யம். பசி என்கிற புலியானது ஏழை உயிர்களைப் பாய்ந்து கொள்ளத் தொடங்குந் தருணத்தில் அப்புலியைக் கொன்று அவ்வுயிரை இரட்சிப்பதே ஜீவகாருண்யம்”.

“பசி என்கிற விஷம் தலைக்கேற ஜீவர் மயங்குந் தருணத்தில் ஆகாரத்தால் அவ்விஷத்தை இறக்கி மயக்கந் தெளிய செய்வதே ஜீவகாருண்யம்”.

“பசி என்கிற கொடுமையான தேள் வயிற்றிற் புகுந்து கொட்டுகின்றபோது கடுப்பேறிக் கலங்குகின்ற  ஏழைகளுக்கு ஆகாரத்தால் அக்கடுப்பை மாற்றிக் கலக்கத்தை தீர்ப்பதே ஜீவகாருண்யம். நேற்று இராப்பகல் முழுதும் நம்மை அரைப்பங்கு கொன்று தின்ற பசியென்கிற பாவி இன்றும் வருமே, இதற்கு என் செய்வோம் என்று ஏக்கங்கொள்கின்ற ஏழைச்சீவர்களது ஏக்கத்தை நீக்குவதுதான் ஜீவகாருண்யம்”.

“வெயிலேறிப் போகின்றதே இனி பசியென்கிற வேதனை வந்து சம்பவிக்குமே இந்த விதிவசத்திற்கு என்ன செய்வது? என்று தேனில் விழுந்த ஈயைப் போல திகைக்கின்ற ஏழைச்சீவர்களுடைய திகைப்பை நீக்குவதுதான் ஜீவகாருண்யம்”.

“இருட்டிப் போகின்றதே இனி ஆகாரங்குறித்து  எங்கே போவோம் யாரைக் கேட்போம், என்ன செய்வோம் என்ற விசாரத்தில் அழுந்திய ஏழைச்சீவர்களது விசாரத்தை மாற்றுவதே ஜீவகாருண்யம்”. என்று ஜீவகாருண்யத்திற்கு பல்வேறு விளக்கங்களை அடுக்கிக்கொண்டே போகிறார் வள்ளலார்.

அதனால்தான் “ பசியினால் வருந்துகின்றவர்கள் எந்தத் தேசத்தாராயினும், எந்த சமயத்தாராயினும், எந்தச் சாதியினராயினும், எந்தச் செய்கையினராயினும் அவர்கள் தேசஒழுக்கம், சமயஒழுக்கம், சாதிஒழுக்கம், செய்கை ஒழுக்கம் முதலானவைகளை போதித்து விசாரியாமல் எல்லாச் சீவர்களிடத்தும் கடவுள் விளக்கம் பொதுவாக விளங்குவதை அறிந்து பொதுவாகப் பார்த்து அவரவர் ஒழுக்கத்திற்குத்தக்கபடி அவர்கள் பசியை நிவர்த்திப்பதே ஜீவகாருண்யம் என்று அழுத்தமான முக்கியத்துவத்தைத் தந்து விளக்குகிறார் வள்ளலார்.

மனிதருக்கு மூன்று வகையான முக்கிய வேதனைகள் உண்டு. ஒன்று ஜனன வேதனை. மனிதர்கள் பிறப்பெடுக்கும் போது பிரசவிக்கின்ற தாய் அனுபவிக்கின்ற வேதனை. அடிவயிற்றின் வலி உச்சகட்டமாக இருக்கும் வேளையில் கருப்பை சுருங்கி பிள்ளைப்பேற்றின் போது தாய்படும் அவதி ஜனன வேதனை. இரண்டாவது மரண வேதனை. உயிர் போகும் போது சிலர் அனுபவிக்கும் வலியின் வேதனை. உடல் உறுப்புகள் செயலிழந்து சுவாசம் தடைபட்டு மூச்சுத்திணறி அல்லது இதயத்தில் பெரும் வலியை உணர்ந்து இறக்கும் தருவாயில் அனுபவிப்பது மரண வேதனை. இன்னொன்று நரக வேதனை. இது வாழும்போதே சிலர் பல்வேறு காரணங்களுக்காக வருந்தி படும் வேதனை அல்லது இறந்த பின்பு நரகத்தில் கிடைக்கும் என்று சொல்லப்படுவது. எப்படியாகினும் இந்த ஜனன வேதனை, மரண வேதனை, நரக வேதனை மூன்று வேதனைகளுங்கூடி முடிந்த வேதனையே பசிவேதனை என்று வள்ளலார் சொல்கிறார். இம்மூன்று வேதனைகளையும் ஒருங்கே ஒருவன் கடும்பசி வரும் வேளையில் அனுபவிப்பதாக சொல்லும் வள்ளலார் இன்பம் என்பது பசி நீங்க தரும் ஆகாரத்தினால் உண்டாகும் இன்பமே என்கிறார். 

      எவ்வளளோ திருஅருட்பாக்கள் பசிக் கொடுமை பற்றியும் அதற்கு வள்ளலார் பட்ட துன்பம் பற்றியும் நமக்கு வழங்கப்பட்டுள்ளன எனினும் இரண்டு அருட்பாக்களை மட்டுமே சுட்டிக் காட்டிவிட்டு வைகுண்டர் குறித்து சொல்ல விழைகிறேன்.

 எட்டரும் பொருளே திருச்சிற்றம் பலத்தே
           இலகிய இறைவனே உலகில்
   பட்டினி உற்றோர் பசித்தனர் களையால்
           பரதவிக்கின்றனர்  என்றே
   ஒட்டிய பிறரால் கேட்டபோதெல்லாம்
           உளம் பகீர் என நடுக்குற்றேன்  
   இட்ட இவ்வுலகில் பசி எனில் எந்தாய் 
           என்ணுளம் நடுங்குவதியல்பே “ 


மக்களின் உலகினில் பசியால் அவதிப்படுவதைப்பார்த்து மட்டும் அல்ல, பிற மனிதர்களால் எடுத்துச் சொல்லக் கேட்ட பொழுதும் கூட வள்ளலாரின் திருவுள்ளம் பகீர் என நடுங்கி வருந்தியதை நமக்கு இப்பாடலின் மூலம் உணர்த்துகிறார்.

“ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன்
 என்ற வள்ளலாரின் அருட்பா தமிழ் கூறும் நல்லுலகில் அனைத்து மேடைப்பேச்சாளர்களாலும் எடுத்து ஆளப்படும் மேற்கூற்று. இதற்கு அடுத்த அடி பலபேருக்குத் தெரியாது. இதற்கு அடுத்து அவர் சொல்வது 

பசியினால் இளைத்தே வீடு தோறிரந்தும்
பசியறா தயர்ந்த வெற்றரைக் கண்டு
உளம் பதைத்தேன்” என்கிற செய்திதான்

பசியால் உடல் மெலிந்து இளைத்து காணப்படும் ஏழைகள், உடல் நலம் குன்றியவர்கள், பிச்சையெடுத்து உணவு உண்ணும் நிலையில் உள்ளோர்கள் வீடுதோறும் சென்று பிச்சை எடுத்தும் அவர்களின் பசியடங்காத நிலைகண்டு உள்ளம் பதைத்ததாகப்பாடுகிறார்.

“ பட்டோடே பணியோடே திரிகின்றீர் தெருவில்
           பசியோடே வந்தாரைப் பார்க்கவும் நேரீர் “

பட்டாடை உடுத்திக் கொண்டும், உயர்ந்த பதவியில் இருந்து கொண்டு வாழ்வை கழித்துக் கொண்டிருந்தாலும் பசி என்று வந்தவர்களின் துயர் நீக்க உதவும் எண்ணமின்றி இருக்கின்றீர்களே என்று வாடுகிறார்.

“ பட்டினி கிடப்பாரை பார்க்கவும் நேரீர்
           பழங்கஞ்சி ஆயினும் வழங்கவும் நினையீர் “

என்று கூறும் வள்ளலார் எத்தனை பாவங்களை நாள்தோறும் செய்கின்றீர் என்று உலகைப் பார்த்து கேட்கிறார் தமது அருட்பாவில். வள்ளலாருக்கு முன்பு உருவமற்ற ஒளி வழிபாட்டை நிறுவிய வைகுண்டர் தாம் ஏற்படுத்திய நிழல் தாங்கல்களில் கல்வி கற்றுத்தரும் செயலோடு அன்னதானம் செய்வதையும் ஊக்குவித்தார். இத்தகைய நிழல் தாங்கல்கள் செட்டிக்குடியிருப்பு, அகஸ்தீஸ்வரம், பாலூர், கண்டவிளை, வடலிவிளை முதலிய இடங்களில் நிறுவப்பட்டன.

சக மனிதர்களிடம் ஈவும் இரக்கமும் கொண்டு உதவி செய்து அவர்களின் பசியையும் துயரையும் போக்கி வாழுதலே இறைவனை தரிசிக்கும் வழி என்று போதனை செய்தார்.

“ இரப்போர் முகம் பார்த்து ஈவதுவே நன்றாகும்
           பரப்போரைக் கைக்கோர்த்து பரிவதுமே நன்றாகும்
  உள்ளவனுக்கு ஒன்று இல்லாதவனுக்கு ஒன்று
           என்று ஓரங்கள் சொல்லாதே “

என்பது வைகுண்டர் வையகத்திற்கு வழங்கிய உயர்ந்த நெறியாக விளங்கியது.

“ தாழக்கிடப்பாரைத் தற்காப்பதே தர்மம் “
“ தருமம் பெரிது தாங்கியிடு என் மகனே “
“ பசுவை அடைத்து பட்டினிகள் போடாதே “
“ எளியோரைக் கண்டால் ஈந்து இரங்கிடு நீ “


என்பவை அய்யா வைகுண்டரின் அறவழிச் சிந்தனையும் போதனைகளும் ஆகும்.

இன்றும் அய்யா வழி பக்தர்கள் அய்யா வழி கோயிலுக்கு வரும்போது தங்களால் முடிந்தவரை அன்னதானம் செய்கிறார்கள். பிரசாதமாக வழங்கப்படும் சாதமும் வித்தியாசமாக இருக்கும். சிறுபயிறு, வற்றல், பச்சரிசி கொண்டு செய்யப்படும் நித்தப்பால், பச்சரிசி கொண்டு செய்யப்படும் தவனக் கஞ்சி, அரிசி, மிளகாய், வாழைக்காய், கத்தரி, பூசணிக்காய், இளவங்காய் கொண்டு செய்யப்படும் கூட்டாஞ்சோறான உம்மான்சாதம் ஆகியவையே இந்த கோயில்களில் பிரசாதமாக வழங்கப்பட்டு வருகிறது.

“ கைகட்டி வாய்பொத்தி நிற்பாரைக் கண்டு
           கைகொட்டிச் சிரிக்கின்றீர் கருணை ஒன்று இல்லீர் “ 


என்று ஏழைகளைப் பார்த்து இரக்கமற்று ஆணவச்சிரிப்பு சிரித்து எள்ளி நகையாடும் கூட்டத்தை கருணை இல்லாத கூட்டம் என்பார் வள்ளலார்.
வைகுண்டரோ, உன்னைவிட எளியோனைக் காணும்போது அவனை எள்ளி நகையாடாதே, அவன் மீது இரக்கம் கொள். முடிந்தால் உதவு. இந்த உலகத்தில் நிலைத்து இருக்கப்போவது பணம் அல்ல. நீ செய்த தருமம் தான் என்று நமக்கு பாடம் புகட்டுகிறார். அய்யா வழியில் அன்புக்கொடி இயக்கத்தின் பொறுப்பை ஏற்று நடத்தும் பாலபிரஜாபதி அடிகளால் சாமித்தோப்பில் முந்திரிக் கிணற்றுக்கு அருகே அனைத்து நாட்களிலும் அன்னதானம் செய்து கொண்டு உள்ளதாக அங்கு சென்றுவரும் பக்தர்கள் தெரிவிக்கின்றனர்.   



'அன்புக்கொடி இயக்கம், சன்மார்க்க சங்கம்
எட்டாம் அத்தியாயம்   

வைகுண்டர் தம்முடைய கொள்கைகளையும், போதனைகளையும் பரப்புதற்கு ஒரு அமைப்பை ஏற்படுத்தினார் என்றும் அதன் பெயர் அன்புக்கொடி இயக்கம் என்றும் கூறுகின்றார். தன்னுடனே இருந்த தமது கொள்கை வழி நடந்த சிவனாண்டி, பண்டாரம், அர்ஜுனன், சுப்பையா, அரிகோபாலன் ஆகியோரை தனது சீடர்களாக்கி அவர்களுக்கு பயிற்சியையும் அளித்து இயக்கத்தின் கொள்கைகளை அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் முழுதும் பரப்பியதாக “ அய்யா வைகுண்டர் “ என்னும் நூலில் திரு. வே. நீலகண்டன் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

மேலும் அன்புக்கொடி இயக்கத்தை நிறுவி தனிக்கொடியும் வைத்து மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தியதையும் சுட்டிக்காட்டுகிறார் இவர்.

ஆன்மிக உலகில் தமது கொள்கைகளைப் பரப்ப முதன் முதலில் ஒரு சங்கம் கண்டவர் புத்தர், வள்ளலார் 1865ல் சன்மார்க்க சங்கத்தை ஏற்படுத்தினார். 2500 ஆண்டுகளுக்கு முன்பே தமது நெறிகளைப் பரப்புதற்கு புத்தர் சங்கத்தை தொடங்கியது போல வள்ளலாரும், வைகுண்டரும் அமைப்பு ரீதியான சங்கத்தையும், இயக்கமும் தோற்றுவித்தனர் எனலாம். வள்ளலார் தமது சங்கத்திற்கு சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்று பெயரிட்டார்.

சமரசம் என்பது எல்லா நிலைகளிலும் மனித சமுதாயத்தில் சமமான நோக்கு வேண்டும் என்பதற்காக ஏற்படுத்திய அடைமொழி. சுத்தம் என்பது எல்லாவற்றிற்கும் மேலானது என்பதோடு மட்டுமன்றி சமய, மதக்கலப்பில்லாதது என்பதைக் காட்ட ஏற்படுத்திய சொல்லடைவு. சன்மார்க்கம் என்பது சத் + மார்க்கம் என்று பிரித்து உண்மை நெறியை அல்லது உண்மை வழியைக் காட்டும்.

சன்மார்க்கம் என்பதிலேயே ஒரு ‘ சத் ‘ இருந்தும் திருப்தி அடையாத வள்ளலார் வெளி உலகிற்கு என்றும் நிலைத்து நிற்கும் சத்தியமாம் மெய்யை வலியுறுத்த ‘ சத்தியம் ‘ என்ற அடைமொழியையும் இணைத்து சமரச சுத்த சன்மார்க்க சத்திய சங்கம் என்ற அமைப்பை உண்டாக்கினர். இன்று உலகின் பல நாடுகளில் வள்ளலாரின் சன்மார்க்க அமைப்புகள் பல்வேறு பெயர்களில் இயங்கி வருகின்றன. அருட்பெருஞ்சோதி மன்றம் அருட்ஜோதி மன்றம், அருட்பா மன்றம், சன்மார்க்க சங்கம், சமரச சுத்த சத்திய சன்மார்க்க சங்கம், இராமலிங்கர் பணி மன்றம், அருட்பெருஞ்சோதி அகல் விளக்கு மன்றம் என்று பல்வேறு பெயர்களில் வள்ளலாரின் இயக்க அமைப்புகள் உலகெங்கிலும் இயங்கி வருகிறது. சங்கத்தின் நோக்கம் வள்ளலாரின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் உலகெங்கும் வாழும் மக்களிடையே பரப்புதல் ஆகும். இதைப் போலவே தம்முடைய தேர்ந்தெடுத்த சீடர்களைக் கொண்டு அய்யா வைகுண்டர் தம் மக்களுக்கு எடுத்துச் சொல்லிய அறக்கருத்துக்களை பரப்ப அன்புக் கொடி இயக்கம் கண்டார்.   

சன்மார்க்கக் கொடியும், அன்புக்கொடியும் 
 ஒன்பதாம் அத்தியாயம் 



இந்நாளில் அரசியல் கட்சிகளுக்கு பல்வேறு வண்ணக்கொடிகள் பல்வேறு சின்னங்களுடன் இருப்பது போல் ஆன்மிக உலகிலும் கொடிகள் உண்டு. குறிப்பிட்ட கடவுளை வணங்கும் கூட்டத்தாருக்கென்று தனித்தனிக் கொடிகள் உண்டு. சிவனை வணங்கும் சைவசமயம் ரிஷபக் கொடியை தமக்கு அடையாளமாக வைத்துள்ளது. காளையை தமது சின்னமாகக் காட்டுவது சைவ சமயம். அதைப்போல திருமாலை வணங்கும் வைணவர்கள் வைத்திருப்பது கருடக்கொடி, வைணவ உலகில் கருடனை பெரிய திருவடி என்றும், ஆஞ்சநேயரை சிறிய திருவடி என்றும் குறிப்பால் உணர்த்துவர். அந்த பெரிய திருவடியான கருடாழ்வரை குறித்துக்காட்டும் கருடக்கொடி வைணவத்திற்கு உரியது. முருகனை வழிபடுவோர் கொண்டிருப்பது சேவற்கொடி. ஆறுவகையான அந்தங்கள் இறைவனை சென்றடைய வழிகாட்டுகின்றன. அவை நாதாந்தம், கலாந்தம், யோகாந்தம், போதாந்தம், வேதாந்தம், சித்தாந்தம் என்பது. இதில் நாதத்தின் அடையாளமான சேவலைக் கொண்ட கொடி முருக வழிபாட்டிற்குரியது. விந்து அல்லது ஒளிக்கு அடையாளமாக முருகனுக்கு மயிலை வாகனமாகப் படைத்திருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது. தெய்வங்களுக்கு கொடி உள்ளதுபோல வள்ளலாரின் சன்மார்க்க சங்கத்திற்கு ஒரு கொடி உண்டு. இந்தக் கொடி வள்ளலாரின் அனுபவத்தில் வந்த கொடியாகும். இந்தக் கொடியின் மேற்புறம் மஞ்சள் நிறம், கீழ்புறம் வெள்ளை நிறம். இந்த சன்மார்க்கக் கொடியை வள்ளலார் தம் இறுதிக்காலத்தில் வாழ்ந்த இடமான மேட்டுக்குப்பம் சித்திவளாகத்தில் ஸ்ரீமுக வருடம் ஐப்பசி மாதம் 7 ஆம் நாள் ஏற்றி வைத்து ஒரு பேருபதேசத்தை வழங்கினார்கள். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியங்கள், அதற்கான தடைகள் தெய்வத்தின் உண்மை நிலை முதலிய செய்திகளை இந்த பேருபதேசத்தில் வழங்கினார்கள். தமது சன்மார்க்கக் கொடிக்கென்று சிற்சத்தி துதி என்று ஒரு பதிகமே பாடி அதில் பத்து பாடல்களை செய்து சமர்பித்துள்ளார்கள். “ ஜோதிக்கொடியே, ஆனந்தக் கொடியே, ஜோதியுருப்பாதிக் கொடியே ஜோதிவலப்பாகக் கொடியே, எனை ஈன்ற ஆதிக்கொடியே, உலகுகட்டி ஆளுங்கொடியே, சன்மார்க்க நீதிக்கொடியே, சிவகாம நிமலக் கொடியே, அருளுகவே “ என்கிற முதற்பாடலில் தமது சன்மார்க்கக் கொடியை உலகுகட்டி ஆளும் கொடியாக வர்ணனை செய்து பாடுகிறார். 

“ வெறிக்கும் சமயக் குழியில் விழ விரைந்தேன் தன்னை விழாதவகை மறிக்கும் ஒரு பேரறிவளித்த வள்ளற் கொடியே, மனக் கொடியைச் செறிக்கும் பெரியர் உனத்தோங்கும் தெய்வக்கொடியே, சிவஞானம் குறிக்கும் கொடியே, ஆனந்தக்கொடியே அடியேற்கு அருள்கவே”, 
என்கிற பாடலில் சமயக்குழி என்கிற வெறிபிடித்த நிலையில் தாம் விழாமல் தம்மை தடுத்து பேரறிவை அளித்த கொடி என்று போற்றுவதையும், சிவஞானத்தை தாம் பெற்றதற்கு அடையாளமாகவும் அதனை அனைவரும் பெறவைக்கவும் கொடியைப் போற்றிப்பாடுகிறார்.

வைகுண்டரோ தம்முடைய இயக்கத்தை “ அன்புக்கொடி “ இயக்கம் என்று அழைக்கிறார். வைகுண்டர் வாழ்ந்த சாமித்தோப்பு தலைமைப் பதியில் திருவிழாக் காலங்களில் கொடியேற்றம் நடைபெறுவதுண்டு. காவிநிறக் கொடியை ஏற்றுவதாக சொன்னாலும் தாமரையின் மீது எரிகின்ற சுடரை தமது இயக்கத்தின் அடையாள சின்னமாக காட்டுகிறார் வைகுண்டர். ஒரு சிலர் இந்த தாமரை மலரும் எரியும் தீபச்சுடரும் வைகுண்டர் காட்டியது அல்ல என்றும் பின்னாளில் வந்தவர்கள் ஏற்படுத்திக் கொண்டது என்றும் சொல்கிறார்கள்.

இந்த சின்னத்தில் தாமரை மலரும் அதன் மேல் எரியும் தீபச்சுடரும் காட்டப்பட்டாலும் மேலே உள்ளது நெற்றியில் இடும் திருமண்ணைக் குறிப்பதாகவும் சொல்கிறார்கள்.

கீழேக்காட்டப்பட்டுள்ள தாமரைமலர் ஆன்மிகத்தின் சின்னமாக புத்தர்காலம் தொட்டே காட்டப்படுகிறது.


மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

என்கிற கடவுள் வாழ்த்து திருக்குறளில் உள்ளமாகிய கமலத்தில் அதாவது தாமரைமலர் போன்ற உருவத்தின் திருவடியை சேர்ந்தவர்கள் முக்தி நிலை பெற்று இனிபிறவா நிலை அடைவார்கள் என்பதைக் காட்டுகிறது. தாமரை மலர் சேற்றில் மலர்கிறது. சேறு என்பது அசுத்தத்தின் அடையாளம். அந்த அசுத்தத்தில் மலர்ந்த தாமரையே தூய்மைத்தன்மையுடன் அனைவரையும் கவர்ந்து இழுக்கும் வசீகரிப்புடன் காட்சிதந்து பிறருக்கு இன்பம் தருகிறது. அதைப்போல மனிதர்கள் தம்மிடம் உள்ள வெறுப்பை, பொறாமையை, கோபத்தை, பயத்தைம் காழ்ப்புணர்ச்சியையெல்லாம் அகற்றிவிட்டு அன்பும், கருணையும், சாந்தமும், உயர் குணங்களும் பெற்று பிற உயிர்களுக்கு இன்பம் தர வேண்டும். இதை உணர்த்தவே சேற்றில் மலர்ந்த அதாவது அசுத்தத்தில் உண்டாகி அதன் பாதிப்பின்றி சுத்தமலராக தாமரை மாறி நமக்கு உணர்த்துகிறது.

மேலே தாமரை மேல் நோக்கி மட்டும் மலரும் பூ என்பதிலும் ஆன்மிகத்தில் மேல்நோக்கி வளர்ந்து வெளியோடு கலத்தல் என்பது முக்கியமாக ஆயிரம் இதழ் மலர்ந்த தாமரையாக ஞானம் பெற்றோரின் ஏழாம் நிலையை அதாவது சகஸ்ரத்தை சுட்டிக் காட்டுவது உண்டு. அதனால் தான் ஞானம் பெற்ற புத்தர் தாமரைமலர் மீதும், கல்விக்கடவுளாக காட்டப்படும் சரஸ்வதி வெள்ளைத்தாமரை மலரின் மீதும், லட்சுமி செந்தாமரை மலரின் மீதும் இருப்பதாகக் காட்டப்படுகிறது. வள்ளலாரின் சத்திய ஞான சபையை உற்று நோக்கில் ஒரு தாமரையை கவிழ்த்து வைத்தது போன்ற காட்சியைக் காண முடியும். ஆகவே இந்த தாமரை சின்னம் வைகுண்டருக்கும், வள்ளலாருக்கும் ஆன்ம சாதகன் கொள்ள வேண்டிய சின்னமாக இருந்துள்ளது.

                                                   
  

   சைவ வைணவ ஒன்றிணைப்பு :
  பத்தாம் அத்தியாயம்  

வைகுண்டர் காலத்திலும் வள்ளலார் காலத்திலும் இந்து மதத்திலேயே சைவம், வைணவம் என்று இரண்டு பிரிவுகளாக பிரிந்து இரு தரப்பினருக்கும் இடையே பெரும் போராட்டமே நடைபெற்றுள்ளதை வரலாற்றைப் படிக்கும் போது அறிய முடிகிறது. சைவத்திலும் கூட வேதாந்தம், சித்தாந்தம் என இரண்டு பிரிவுகள், வைணவத்திலும் வடகலை, தென்கலை என்று இரண்டு பிரிவுகள்.

அய்யா வைகுண்டரின் அவதாரத்தையும், அவர் வழிபாட்டு முறைகளையும் பார்க்கும் போது சைவ, வைணவ ஒன்றிணைப்பைக் காண முடிகிறது. எப்படி எனில் தம்மை திருமாலின் அவதாரமாகக் கூறும் வைகுண்டர் திரு மண்ணை நெற்றியில் இடும் வழக்கத்தை வைத்துள்ளார். திருமண் அல்லது திருநாமம் வைணவத்தில் நெற்றியில் செங்குத்தாக இடப்படுவது. திருநீறு படுக்கை வாட்டில் இடப்படுவது. திருமாலின் அவதாரமாகக் கருதப்படும் வைகுண்டர் நெற்றியில் திருமண் இடுவதில் வைணவத்தின் அடையாளமும், தமது அருள் நூலில் சாட்டு நீட்டோலையாக பாடுகின்ற பாடலில் சிவனின் அடையாளமும் காட்டப்படுகிறது.

அந்த சாட்டு நீட்டோலையின் ஒரு பகுதியை பார்ப்போம்.
“ திருச்சம்பதியில் புக்கித் தீர்த்த கரையில் செல்ல
  திரை வந்து இழுத்ததையோ சிவனே அய்யா....
  அலைவாய் கரையில் இருந்து தலைமேலே கைவைத்து
  அம்மை அழுததை என்ன சொல்வேன் சிவனே அய்யா
  கடலிலே போனமகன் இன்னும் வரக் காணோமென்று
  கதறியழுதான் அம்மை சிவனே அய்யா....
  கடலும் முழுங்கிட துறவர் வணங்கியெனைக்
  கட்டியங்கே போனாரே சிவனே அய்யா...
  பாற்கடலில் எங்கள் அய்யா நாராயணம் 
  பள்ளி கொள்ளும் இடம் சென்றேன் சிவனே அய்யா...  
இப்படி நீளுகின்ற கட்டு நீட்டோலையைக் கவனித்தால் சிவனை சாட்சி போல் வைத்து நாராயணனிடம் சென்றதாகப் பாடுவது தெரிகிறது. சிவலிங்க வழிபாட்டின் அடையாளமாகவே விளக்கில் எரியும் சுடரைச் சொல்பவர்கள் உண்டு. சிவலிங்கம் என்பது சைவசித்தாந்தத்தில் சதாசிவத் திருமேனியாக அதாவது அருஉருவத் திருமேனியாகக் காட்டப்படும். இந்த சிவலிங்கத்தில் அடையாளமாகவே சுடரை வணங்க அய்யா வலியுறுத்துவதில் சிவமதத்தின் கோட்பாடும் உள்வாங்கப்பட்டுள்ளது.

வைகுண்டரைப் போலவே வள்ளலாரிடமும் வைணவ, சிவ ஒன்றிணைப்பைக் காண முடியும். தமது “ இராமலிங்கம்” என்ற பெயரிலேயே “ இராம” என்கிற வைணவ அடையாளமும் சைவ அடையாளமான சிவலிங்கமும் வருகிறது. இராமேஸ்வரத்தில் இராமர் வழிபட்ட லிங்கத்தையே  “இராமலிங்கம்” என்று சொன்னாலும் எப்படியோ சைவ, வைணவ சமயங்கள் இணைகின்றது. தமது திருமுறையில் ஆரம்ப காலகட்டங்களில் “இராமநாமபதிகம்” பாடியுள்ள வள்ளலாரே “ நமச்சிவாயத்தை நான் மறவேனே” என்று பாடுவதும் இங்கு நினைவு கூறத்தக்கது. பின்னாளில் சைவம், வைணவம் முதலான சமயங்களில் லட்சியம் வைக்க வேண்டாம் என்று சொன்னவரும் வள்ளலார் தான். இது ஆன்மிகத்தில் அவரது முன்னேறிய நிலையைக்காட்டுகிறது.
             



ராமலிங்கம் எனப் பெற்றோர் அவருக்குப் பெயரிட்டனர். சென்னையில் வாழ்ந்தபோது அவருடைய புகழ் பரவத்தொடங்கியபோது ராமலிங்கஅடிகள் என அழைக்கப்பட்டார். அதற்குப் பிறகு பக்தி உலகில் அவருடைய தேன்தமிழ் அருட்பாக்கள் வெளிவந்தபோது அனைவராலும் ராமலிங்க சுவாமிகள் என அழைக்கப்பட்டார். சென்னையிலிருந்து சிதம்பரத்திற்கு அடுத்த கருங்குழிக்கு வந்து சன்மார்க்கப் பாடல்களை பாடிய பிறகு வள்ளலார் என்று உலகத்தினரால் அழைக்கப்பட்டார். பிறகு சாதி, குலம், சமயம், மதங்களைக் கடந்து சுத்தசன்மார்க்கத்தை முழங்கியபோது திருவருட்பிரகாச வள்ளலார் என்று வரலாற்றில் அழியாத இடம் பிடித்தார்.