15. வைகுண்டர், வள்ளலார் நிகழ்த்திய சில அற்புதங்கள்
தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம் அருகே
வேப்பங்காடு என்கிற சிறிய கிராமம் உள்ளது. இத்த ஊரில் வாழ்த்தவர்கள் பாலையா உமயபார்வதி
தம்பதியினர். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள் பிறந்த பிறகு கொஞ்ச நாட்களில் பாலையா இறந்துவிட்டார்.
கணவனை இழந்து உமயபார்வதி
வறுமையில் வாடினார். பிள்ளைகளின் அன்றாடப் பசியை போக்குவதே சிரமமாகிவிட்டது. உமயபார்வதிக்கும்
வயது ஏற குடும்ப பாரத்தை எண்ணிக் கண்ணிர் சிந்தினாள். இந்நிலையில் சாமித்தோப்பு
வைகுண்டர் பற்றி அறிந்து அய்யாவை பார்க்க புறப்பட்டார். தமது குழந்தைகளில் இருவரை
அழைத்துகொண்டு சாமித்தோப்பு நோக்கி புறப்பட்டாள். 50மைல் தூரத்தை மிகவும்
கஷ்டப்பட்டு நடந்து கடந்து கொண்டிருக்கையில் ஒரு சோதனை ஏற்பட்டது. இரண்டு
குடிகாரர்கள் உமயபார்வதியை வழி மறித்து அவரது காதுகளில் இருந்த காதணிகளைக் கழற்றி
தருமாறு மிரட்டினர். குடிகாரர்களின் மிரட்டலில் குழந்தைகள் அழவே பயந்துபோன உமயபார்வதி
கையில் இருந்த ஒரே சொத்து இவைகள் தான், அய்யாவைப் பார்க்கப் போகிறபோது இதற்கும்
இப்படி சோதனையா என நினைத்து அழது கொண்டே அவைகளை கழற்றி குடிகாரர்களிடம் கொடுத்து
விட்டாள். மனம் நொந்த நிலையில் எப்படியும் வைகுண்டரை சந்தித்து விட வேண்டும் என
எண்ணி சந்திக்கச் சென்று சந்தித்தும் விட்டாள். அய்யாவின் கருணை பொங்கும் முகத்தைக்
கண்டு கண்ணீர் சிந்தி தமது வறுமை நிலையையும் வரும் வழியில் நடந்த நிகழ்வுகளை சொல்லி
அழுதாள். அருகில் இருந்த திருமண்ணை எடுத்து அவளுக்கும் குழந்தைகளுக்கும்
நெற்றியில் நாமமிட்டு பிறகு முத்திரிக்கிணற்றில் குளித்துவிட்டு வருமாறு அய்யா பணித்தார்.
அவள் சென்ற நேரத்தில் ஒருவர் வேகமாக அய்யாவை நோக்கி ஓடிவந்தார். தன்னிடம் இருந்த
இரண்டு காதணிகளை அய்யாவின் காலடியில் வைத்துவிட்டு படப்படப்புடன் பேச ஆரம்பித்தார்.
“அய்யா இரண்டு
குடிகாரர்கள் என்னிடம் இந்த காதணிகளை கொடுத்துவிட்டு கடனாக ஒரு தொகை கேட்டார்கள்.
நானும் வாங்கி எனது பெட்டியில் ஒன்றில் வைத்துப் பூட்டினேன். பிறகு திறந்து
பார்த்தபோது இரண்டும் இரண்டு பாம்புகளாக தெரிந்தன. நான் பயந்து போய் அவர்களைத்
தேடிப் பிடித்து காதணிகள் பாம்புகளாக மாறியதை சொன்னேன். அவர்கள் நடந்த சம்பவத்தைக்
கூறினார்கள். பிறகு பெட்டியை மூடிவிட்டேன். தங்களை நினைத்து மீண்டும் பெட்டியை
இன்னொருமுறை திறந்து பார்த்தபோது பாம்புகளைக் காணவில்லை. காதணிகள் இரண்டும்
இருந்தன. தங்களிடம் ஒப்படைத்துவிட்டு திரும்பலாம் என ஓடிவந்தேன்” என கூறினார்.
புன்முறுவல் பூத்த அய்யா அந்த காதணிகளை வாங்கி முத்திரிக் கிணற்றில்
குளித்துவிட்டுத் திரும்பிய உமயபார்வதியிடம் எடுத்துக்கொடுத்தார். மகிழ்ச்சியும்,
ஆனந்தமும் ஆச்சரியமும் பொங்கியவள் அவைகளை
வாங்கித்தம் காதுகளில் அணிந்தார். அய்யாவின் பாதம் பட்ட மண்ணை எடுத்துக் கொண்டு தன்
சொந்த ஊருக்கு சென்றாள். நாட்கள் நகர நகர குடும்ப வறுமை நீங்கி இன்பமாக
வாழ்ந்தாள்.
சம்பவம் – 2
கன்னியாகுமரி
மாவட்டத்தில் வட்டவிளை என்கிற ஊரில் 70 வயதை கடந்த பாக்கியலெட்சுமி என்ற மூதாட்டி
வாழ்ந்துவந்தார். இவருக்கு வேலு என்கிற வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி மகனாக
இருந்தார். மூதாட்டியும் அவரது மகனும் இட்லி கடை வைத்து பிழைப்பு நடத்தி வந்தனர்.
ஒரு நாள் இட்லிக் கடையில் சாப்பிட்ட சிலர் பணம் தராமல் செல்ல அவர்களிடம் வேலு
பிடிவாதமாக பணம் கேட்க பதிலுக்கு வன்முறையைக் கையாண்ட அவர்கள் வேலுவை ரத்தக்காயம்
ஏற்படும் வகையில் பலமாக தாக்கிவிட்டுச் சென்றனர். இட்லிகடை நடத்திய
பாக்கியலெட்சுமி மிகவும் மனம் வருந்தி தமக்கு வந்த சோதனையை எண்ணி மனம்
புழுங்கினார். அப்போது அய்யாவின் பக்தர்கள் சிலர் பாக்கியலெட்சுமியைப் பார்த்து
“உன் மகனை அழைத்துக்கொண்டு அய்யாவிடம் செல். உன் துன்பங்கள் விலகும்” என்று சொல்ல அவ்வாறே
பாக்கியலெட்சுமி செய்தார்.
அய்யாவை சந்தித்தபோது
அவர்களைப்பார்த்த அய்யா உன் மகனை அடித்து விட்டார்களா? என்று சொல்லி மீண்டும்
வேலுவின் கன்னத்தில் ஒரு அறை விட்டார். பாக்கியலட்சுமியோ துன்பத்தைச் சொல்லி முறையிட
வந்த தமக்கு மீண்டும் சோதனை தரும்படி அய்யாவே அடிக்கிறாரே என பதைத்தாள்.
அய்யாவிடம் ஒரு அடி வாங்கிய அடுத்தகணமே வாய்பேசமுடியாத வேலு பேச
ஆரம்பித்துவிட்டான். மூதாட்டி அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. வேலுவை இட்லி
வியாபாரத்திற்கு பதில் கருப்பட்டி (பனை வெல்லம்) வியாபாரம் செய்யுமாறு அய்யா சொல்ல
அதற்கு பிறகு பெரிய வியாபாரி ஆனார் வேலு. அவரது பரம்பரையினர் நல்ல பொருளாதார
நிலையை பின்னர் அடைந்து மகிழ்வாக வாழ்ந்தனர்.
சம்பவம் – 3
கன்னியாகுமரி மாவட்டத்தில்
உள்ள தேவியோடு என்ற ஊரில் வாழ்ந்தவர் குட்டி ஆசாரி. தச்சு வேலை செய்து வருபவர்.
சின்னாடார் என்ற ஒருவர் தமது கலப்பையை சரிசெய்ய இவரிடம் வந்தார். சின்னாடார் உடம்பில் தோல் நோய் இருந்ததுடன்
தொடர்ந்து இருமிக் கொண்டே இருக்க ஆசாரி அதுபற்றி விசாரித்தார். பல இடங்களில்
சென்று நிறைய செலவு செய்தும் தம்முடைய நோய்கள் விலகவில்லை எனவும் தற்போது அய்யா
வைகுண்டரைப் பார்த்தபின்பு அவர்தந்த மருந்தை சாப்பிட்டுவர தாம் குணமாகி
வருவதாகவும் சின்னாடார் சொன்னார். இதைக்கேட்ட குட்டிஆசாரி கேலியாகச் சிரித்தார்.
சின்னாடார் சில
மாதங்களுக்குப் பிறகு எதிர்பாராத விதமாக குட்டி ஆசாரியை சந்தித்தார். தொழுநோயால் பாதிக்கப்பட்ட
ஆசாரி மிகவும் தமது உடல்நிலை குறித்து கவலையுடன் சின்னாடாரிடம் தெரிவித்தார். தாம்
அய்யா வைகுண்டரிடம் மருந்து சாப்பிட்டு பூரண குணமான செய்தியை குட்டி ஆசாரியிடம்
சொல்லி அவரையும் அய்யாவிடம் அழைத்துச்சென்றார் சின்னாடார். அய்யாவை தரிசிக்க உடன்
அவரது பாதங்களில் விழுந்து அழுதார் குட்டிஆசாரி. தமது தீராத நோயின் கொடுமையை
அய்யாவிடம் முறையிட்டு நீக்கி அருள வேண்டினார். ஆறுதல் சொன்ன அய்யா
முத்திரிக்கிணற்றில் நீரையெடுத்து அதனை குட்டிஆசாரி உடம்பில் தெளித்தார்.
குடிக்கவும் செய்தார். சாமித்தோப்பிலேயே சிலகாலம் தங்கியிருந்த குட்டிஆசாரிக்கு
நோய் பூரணமாக குணம் அடைந்தது. சாமித்தோப்பில் அய்யா தங்கியிருந்த அம்பலப்பதியில் 96
ஆரங்கள் கொண்ட தத்துவக் கொட்டகையை செய்தார் இந்த ஆசாரி என்கிற செய்தியும்
வரலாற்றில் காணப்படுகிறது.
சம்பவம் – 4
நாகர்கோயில் வடிவீஸ்வரத்தில்
வெங்கடாச்சலம் அய்யர் அவரது மனைவி இலட்சுமி ஆகியோருக்கு 6 குழந்தைகள் பிறந்தும்
ஒரு குழந்தைகூட உயிருடன் தங்கவில்லை. அய்யாவின் அற்புதம் பற்றி கேள்விப்பட்ட
வெங்கடாசலம் அய்யர் தன் மனைவியை அழைத்துக் கொண்டு சாமித்தோப்பிற்கு அய்யாவைப்
பார்க்கச் சென்றனர். ஆனால் லட்சுமிக்கோ அய்யாவின் மகத்தான சக்தி மீது நம்பிக்கை
இல்லை. ஆனால் லட்சுமியை சமாதானம் செய்து வெங்கடாசலம் அய்யர் சாமித்தோப்பிற்கு
கூட்டிச்சென்றார் .
அவர்களுக்கு திருமண்
தந்த அய்யா முத்திரிக் கிணற்றில் குளித்துவிட்டு வருமாறு கூறினார். இருவரும்
குளத்தில் குளித்தனர். குளித்த பின்பு துணியை உலர வைக்கும்போது அய்யரின் துணி
விரைவில் உலர்ந்து விட்டது. லட்சுமின் ஆடை
மட்டும் உலராது போனது. இதனால்
அய்யாவை சந்தேகப்பட்டதால் தான் இப்படி
ஆனதோ என்று எண்ணிய லட்சுமி அய்யாவிடம் தமது தவறை எண்ணி அழுதுவிட்டார். அதற்கு அய்யா சொன்னது.....
“மகளே சாதி
மதத்திற்கு அப்பாற்பட்டவன் நான். ஜாதிகள்,
மதங்கள் எல்லாம் மனிதனால் உருவாக்கப்பட்டவைகள்.
உன் ஆடை உலரும். உனது மனக்கவலையும்
தீரும் உனக்கு குழந்தை பாக்கியம்
கிட்டும்” என்று ஆசிர்வதித்தார்.
அய்யா சொன்னபடியே
அடுத்த ஆண்டே லட்சுமிக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து. பிராமண வகுப்பைச் சேர்ந்தவர்களாக
இருந்தாலும் தமது பிள்ளைக்கு முத்துக்குட்டி அய்யர் என்று பெயர் வைத்தார். பின்பு இரண்டாவதாக பிறந்த பிள்ளைக்கு ராஐமுடி
அய்யர் என்ற பெயரையும் அடுத்து மூன்றாவதாக பிறந்த பிள்ளைக்கு வெயில்தாய் என்றும்
பெயர் சூட்டி மகிழ்ந்தனர். அய்யா செய்த
அற்புதங்கள் ஏராளம். இதுபோன்ற நிறைய
அற்புதங்கள் அய்யா தம் வாழ்நாளில் நிகழ்த்திக் காட்டியுள்ளார். இறையருள் முழுவதும்
கிடைக்கப்பெற்ற அருளாளர்களால்தான் இதுபோன்ற அற்புதங்களை நிகழ்த்த முடியும். எடுத்துக்காட்டுக்கு ஒரு சிலவற்றை மட்டும்
சொல்லியுள்ளேன். இதைப்போல வள்ளலார்
நிகழ்த்தியுள்ள அற்புதங்களும் ஏராளம். ஒரு சிலவற்றை காண்போம்.
வள்ளலார் நிகழ்த்திய அற்புதங்கள்
1. அட்சய பாத்திரம், அமுத சுரபி
1867 ஆம் ஆண்டு வள்ளலார் தருமச்சாலையை
நிறுவி பசித்த நிலையில் வாடும் அன்பர்களுக்கு உணவு வழங்கிய செய்தியை முன்னமே
எழுதியிருந்தேன். தருமச்சாலைக்கு வள்ளலாரின் வழிநடந்த அன்பர்களும், பெருமான்மீது
பற்று வைத்திருந்த நல்ல உள்ளங்களும் தங்களால் இயன்ற உதவியை நெல் மணிகளாகவோ, அரிசியாகவோ,
மற்ற தானியங்களாகவோ அல்லது பணமாகவோ வழங்கிவந்தனர். இன்றும் கூட மாதம் பூசம்,
தைப்பூச நாட்களில் வள்ளலார் பக்தர்கள் வடலூரை சுற்றியிருக்கும் கிராமங்களிலிருந்து
அரிசியினையும் மற்ற தானியங்களையும் காணிக்கையாக அளித்து வள்ளலாரின் அருளையும்,
அருட்பெருஞ்சோதியாம் சிவத்தின் அருளையும் பெற்று இன்பவாழ்வு வாழ்கின்றனர். ஆண்டு
தோறும் தைப்பூசத்திற்கு தவறாமல் பன்னிரண்டு வருடங்களாக சென்று வடலூர் ஜோதி தரிசனம்
காணும் நான் கூட தருமச்சாலைக்கு அரிசியாகவோ, பணமாகவோ வழங்கி அந்த பெரும்
புண்ணியத்தில் பங்கு பெற்றோம் என மனநிறைவோடு திரும்புவேன். வள்ளலார் வாழ்ந்த
நாட்களில் தருமச்சாலை துவக்கப்பட்ட சில நாட்களில் ஒரு நாள் இரவு உணவு
தயாராகியிருந்தது.
இரவு உணவில் சோறு வடிக்கப்பட்டு தயார்நிலையில் இருந்தது. கொஞ்சம் பேர்
சாப்பிடக்கூடிய அளவில் தான் சோறு வடிக்கப்பட்டு இருந்தது. வேறு அரிசியும்
கையிருப்பு இல்லாத நிலையில் தருமச்சாலைக்கு நிறைய அன்பர்கள் வந்து சாப்பிட
அமர்ந்துவிட்டார்கள்.
தருமச்சாலை நிர்வாகத்தைக் கவனித்துக்கொண்டிருந்த சண்முகம் பிள்ளை என்ற
அன்பர் வள்ளற் பெருமானிடம் ஓடோடிவந்து சூழ்நிலையை எடுத்துரைக்க பெருமானோ “பிச்”
“இலைபோடும்” என்று கூறி உணவு பரிமாறிய இடத்திற்கு வந்துள்ளார். சோறு இருந்த
பாத்திரத்தை எடுத்து தமது திருக்கரங்களால் பரிமாறத் தொடங்கினார். எடுக்க எடுக்க
சோறு குறையாமல் பாத்திரத்தில் இருந்து வந்துகொண்டே இருக்க அருகில் இருந்த
அன்பர்கள் திகைத்து வாயடைத்து நின்று விட்டனர். சாப்பிட வந்திருந்த அன்பர்கள்
அனைவருக்கும் வயிறாற வள்ளலாரின் கரங்களால் சோறு வழங்கப்பட்டது. அட்சயபாத்திரம்
என்கிற பாத்திரம் குறித்து மணிமேகலைக் காப்பியத்தில் படித்திருக்கிறோம்.
வள்ளலாரின் கைபட்ட பாத்திரம் அட்சய பாத்திரமாக, அமுத சுரபியாக மாறியது மிகப்பெரிய
அற்புதமாக கருதப்படுகிறது. வள்ளலாரின் அற்புதங்களிலேயே மிக உயர்ந்த அற்புதம் இது. வள்ளலார்
அன்பர்கள் இதனை மறக்காமல் குறிப்பிடுவர்.
2. சாலைக்கு அரிசி வந்தது:
வள்ளலாரின் தருமச்சாலைக்கு வடலூரை சுற்றியிருக்கும் கிராமங்களில்
இருந்து விவசாயம் செய்வோர் அறுவடை நாட்களில் நெல்மணிகளை மூட்டைகளாக
மாட்டுவண்டிகளில் கொண்டுவந்து கொடுப்பர். தருமச்சாலையில் ஒருநாள் இருந்த
நெல்மணிகள் தீர்ந்துபோன நிலையில் மறுநாள் உணவுக்கு நெல் இல்லாமல் இருந்தது.
வள்ளலார் தனித்து அமர்ந்து தியானத்தில் இருந்த வேளை, தருமச்சாலையில் இருந்த அன்பர்
இந்த செய்தியை வள்ளலாருக்கு சொல்ல அதைப்பற்றி அலட்டிக் கொள்ளாத பெருமான் “நாளை
வரவேண்டியவை வரும். கவலை வேண்டாம்” என்று திருவாய் மலர்ந்துள்ளார்கள். வள்ளலார்
சொன்னது போலவே மறுநாள் திருத்துறையூரினின்று ஒரு பண்ணையார் மூன்று மாட்டு
வண்டிகளில் தருமச்சாலைக்கு தேவையான பொருள்களை அரிசியாகவும் மற்ற பொருள்களாகவும்
கொண்டு வந்து இறக்கியுள்ளார். கொண்டுவந்து
இறக்கிய பண்ணையார் “நேற்று இரவு பெருமான் என் கனவில் வந்து இந்த உத்தரவைப் பிறப்பித்தார்”
அதனால் உடனே எடுத்து வந்தேன் என்று சொல்லி பொருள்களை இறக்கிவைதுவிட்டுச்
சென்றுள்ளார்.
3. தொலைக்காட்சி:
ஆண்டுதோறும் சிதம்பரத்தில் ஆனித் திருமஞ்சனம் நிகழ்வும், ஆருத்ரா
தரிசனமும் வருடந்தோறும் நடக்கும் பிரசித்தி பெற்ற திருவிழாக்கள். வள்ளலார் தமது
அன்பர்களை அழைத்துக்கொண்டு சிதம்பரம் திருக்கோயில் சென்று இந்த நிகழ்ச்சிகளைக்
காண்பதும் தரிசிப்பதும் வழக்கம். ஒரு வருடம் ஆருத்ரா தரிசனம் பார்க்க வள்ளலார்
நாட்கள் நெருங்கியும் சிதம்பரம் கிளம்பவில்லை. வள்ளலாரின் அன்பர்களில் பலர்
வள்ளலார் வரும் மனநிலையில் இல்லை என்பதை புரிந்து கொண்டு சிதம்பரம் புறப்பட்டுச்
சென்றனர். இருந்த ஒரு சிலரும் வள்ளலாரை சிதம்பரம் புறப்பட கேட்டுக்கொண்டே
இருந்தபோது தருமச்சாலையில் ஒரு அறையில் திரையைக் கட்டச் சொன்னாராம். வள்ளலார் ஏன்
இப்படி செய்யச் சொல்கிறார் என்பதை புரியாமல் விழித்த அன்பர்களிடம் சிதம்பரத்தில்
நடக்கும் ஆருத்ரா தரிசனத்தை பார்க்க விரும்புவோர் இந்த திரையில்
பார்த்துக்கொள்ளுங்கள் என்று வள்ளலார் கூற அவ்வாறே அன்பர்கள் அவ்வறைக்குச் சென்று
திரையில் சிதம்பரத்து காட்சிகளை வடலூரில் இருந்தவாறே பார்த்துள்ளனர். தம் அருள்
ஆற்றலால் அன்பர்களுக்கு ஆருத்ரா தரிசனத்தைக் காட்டி மகிழ்விக்கச் செய்துள்ளார்கள்.
வள்ளலாரின் மிகப்பெரிய அற்புதமான இதுவும் இன்றுவரை வள்ளலாரின் பக்தர்கள் சொல்லி
பெருமையும், ஆச்சரியமும் படும் நிகழ்வு இது.
4.. இயற்கையும் வள்ளலாருக்கு இசைந்தது:
வள்ளலார் வடலூரில் வாழ்ந்த நாட்களில் பல்வேறு அன்பர்கள் வள்ளலாரை
தரிசிக்கவும் அவரது பிரசங்கத்தைக் கேட்கவும் கூடுவர். நாட்கள் நகர நகர
வள்ளற்பெருமானது புகழ் நாட்டில் பரவப்பரவ பல்லாயிரக்கணக்கில் மக்கள் வடலூர் நோக்கி
வந்து அவரது திருமுகத்தை தரிசிக்க ஆவல் கொண்டு வந்தவண்ணம் இருந்துள்ளனர். வடலூரின்
கூட்டம் அதிகரித்தபோது ஓய்வு வேண்டிய வள்ளலார் 1870ஆம் ஆண்டில் மேட்டுக்குப்பம் என்ற சிறிய கிராமத்திற்கு தம்
உறைவிடத்தை மாற்றிக்கொண்டார். வடலூரில் வாழ்ந்த போது கோடைப்பருவத்தில் சித்திரைத்
திங்களில் பலர் வள்ளலாரை சந்திக்க வந்தனர். மழையின்றி ஊர் வாடுவதையும், ஏரி,
குளம், கிணறுகளில் நீர் வற்றியுள்ள நிலையையும் சொல்லி வருந்தினர். உடனே வள்ளலார்
ஒரு செம்பு தண்ணீரைக் கொண்டு வந்து தமது பாதங்களில் ஊற்றும்படி கூறினார். அன்பர்கள்
அவ்வாறே செய்ததும் அன்றைக்கே நல்ல மழை பெய்தது. இவையெல்லாம் வள்ளலாரின்
பிரசித்திபெற்ற அற்புதச் செயல்கள்.
5. கள்வருக்கும் அருள்புரிந்த அற்புதம்:
கடலூர் மஞ்சக்குப்பம் நீதிமன்றத்தில் பணியாற்றிய இராமச்சந்திர
முதலியார் என்கிற அன்பர் வள்ளற்பெருமானை தம்மூருக்கு அழைத்துக்கொண்டு போக எண்ணினார். இருவரும்
மாட்டு வண்டியில் புறப்பட்டுச் சென்றனர். வண்டியில் இராமச்சந்திரமுதலியாரின்
உதவியாளர் ஒருவரும் வண்டியோட்டி ஒருவரும் என சென்று கொண்டிருந்த நிலையில் வண்டி
இரவு நேரத்தில் குள்ளஞ்சாவடி அருகே வந்தபோது திருடர்கள் இருவர் வண்டியை வழி
மறித்தனர். வண்டியில் இருந்தவர்களை இறங்குமாறு மிரட்டினர். பயந்துபோன
வண்டியோட்டியும், இராமச்சந்திர முதலியாரின் உதவியாளரும் முந்திரித்தோப்பிற்குள்
ஓடி ஒளிந்தனர். பெருமானுக்கு ஒன்றும் ஆகிவிடக்கூடாதே என்று எண்ணிய ராமச்சந்திர
முதலியார் வண்டியை விட்டு கீழே இறங்கினார். அவருடைய கையிலுருந்த வைர மோதிரத்தை கழற்றித்
தரும்படி மிரட்டினர். அதுவரை அமைதியாய் இருந்த வள்ளற் பெருமான் “அவசரமோ” என்று
கேட்டார். உடனே திருடர்கள் கையில் வைத்திருந்த தடியால் வள்ளலாரை அடிக்க ஓங்கினர்.
வள்ளலார் ‘பிச்’ என்று சொல்லி திருடர்களை உற்றுப்பார்க்க, அவர்களது ஓங்கிய கைகள்
செயலற்றுப் போய் அப்படியே நின்றுவிட்டன. கையை அசைக்கமுடியாமல் தவித்தனர். உடனே
தங்கள் செயலுக்கு வருந்தி வள்ளலாரிடம் மன்னிப்புக் கேட்க மனமிரங்கி பெருமான்
அவரகளது கைகளை பழைய நிலைக்குக் கொண்டு வந்தார். வள்ளலாரை வணங்கி விடைபெற்றவர்கள்
திருட்டுத் தொழிலையே விட்டுவிட்டு உழைத்து உண்பதாக வாக்குறுதி தந்திவிட்டுச்
சென்றனர். இப்படி வள்ளலார் வாழ்விலும் பற்பல அற்புதங்கள் நடந்துள்ளன. நான்
சிலவற்றை மட்டுமே இங்கு காட்டியுள்ளேன்.
இங்கு என்னுடைய வாழ்வில் நடந்த இரண்டு சம்பவங்களைக் குறித்துக் காட்ட
விரும்புகிறேன்.
சம்பவம்
1:
1999ஆம் ஆண்டுதான் எனக்கு வள்ளலார்
மீது ஈடுபாடு ஏற்பட்டது. வள்ளலாரின் வாழ்வையும், கொள்கைகளையும் படித்து அவர் மீது
கொண்ட பக்தியின் காரணமாக திருவெண்காட்டில் “திருஅருட்பிரகாச வள்ளலார் மன்றம்” என்ற
அமைப்பை ஏற்படுத்தினேன். அதில் பல பெரியவர்கள், பேராசிரியர்கள், ஆசிரியர்கள்
இணைந்து எமக்கு ஒத்துழைப்புத் தந்தனர். திருவெண்காட்டில் 2000 ஆம் ஆண்டு ஆகஸ்டு
மாதத்தில் ஒருநாள் திருவெண்காடு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில் மன்றம்
துவக்கப்பட்டது. தவத்திரு குங்கிலியம் பழ.சண்முகனார் அவர்கள், சன்மார்க்க கொடியை
உயர்த்தி மன்றத்தை துவக்கிவைத்தார்கள். திருவெண்காட்டிலேயே வசிக்கும் பிரபல
இலக்கிய ஆன்மிகப் பட்டிமன்ற பேச்சாளரும், எழுத்தாளருமாகத் திகழும் முனைவர்.த.அகரமுதல்வனார்,
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வணிகவியலில் பணியாற்றிய சுத்த சன்மார்க்க
எழுச்சிமிகு பேச்சாளர் முனைவர். நமச்சிவாயம், முதலானோரும் செந்தமிழ்ப்புரவலர்
“சைவப் பெருவெளியில் காலம்” என்னும் ஆய்வு நூலையும் மற்றும் பல நூல்கள் எழுதியுள்ள
இராஜசேகரனார் ஆகியோரும் கலந்து கொண்டு சிறப்பித்துக் கருத்துரைகள் வழங்கினர். நாங்கூரைச்
சேர்ந்த ஆன்மிகத்தில் ஈடுப்பட்டுக்கொண்ட எழுபது வயதைக்கடந்த முதியவர் திரு.
முருகேச முதலியார் அச்சமயம் எனக்கு அறிமுகமானார். வள்ளலார் மீது மிகுந்த பற்றுக்
கொண்டவர். பிறருக்கு உதவிசெய்யும் மனப்பான்மையும், தொண்டுள்ளமும் கொண்டவர். என்
மீது அன்பும் பாசமும் கொண்டவர். அவர் நாங்கூரில் வசித்துக் கொண்டிருந்தார். இந்த
நிலையில் புதுக்கோட்டை அருகே வாடிமனைப்பட்டி என்ற ஒரு ஊரில் என்னை வள்ளலாரின்
சுத்த சன்மார்க்கம் குறித்து பேச அழைத்திருந்தனர். என்னிடத்தில் வள்ளலாரின் ஆறாம்
திருமுறை புத்தகம் மட்டுமே இருந்தது. முதல் ஐந்து திருமுறைத் தொகுப்பு இல்லை.
எனக்கு ஐந்தாம் திருமுறை உள்ள புத்தகம் தேவைப்பட்டது. வள்ளலார் முருகன் மீது பாடிய
பாடல்கள் அதில் தான் இருந்தன. திருவெண்காட்டில் எவரிடமும் அது இல்லாத நேரத்தில்
என்னசெய்யலாம் என எனது கிளினிக்கில் ஒருநாள் மாலை நேரம் யோசித்துக்கொண்டிருந்தேன்.
வடலூரில் உள்ள புத்தகக் கடையில் தான் அது கிடைக்க வாய்ப்பு என்பதால் இதற்காக
வடலூர் செல்லவேண்டுமா என நினைத்து அமர்ந்திருந்த போது ஒரு ஆச்சரியம் நிகழ்ந்தது.
என்னைப்பார்க்க ஒரு முதியவர் வந்துள்ளார்
அனுப்பட்டுமா என என் கிளினிக்கில் வேலைபார்க்கும் பெண்மணி கேட்டார். நான் உள்ளே
அனுப்பச்சொன்னேன். சிரித்த முகத்தோடு நெற்றியில் திருநீறு குங்குமத்தோடு முருகேச
முதலியார் வந்து கைகுலுக்கினார். தோளில் ஒரு பை மாட்டியிருந்தார். என்னைப்
பார்த்து விட்டு போகவேண்டும் என உள்மனது சொல்லியதாக சொல்லி வள்ளலார் குறித்து
பேசிக்கொண்டிருந்தவர் “ தம்பி உங்களுக்கு ஒன்று தருவதற்காக எடுத்துவந்துள்ளேன்
வாங்கிக் கொள்ளுங்கள்” என்று தனது பையில் இருந்த பெரிய புத்தகம் ஒன்றை எடுத்தார்.
என்னால் நம்பவே முடியவில்லை. அவர்
கொண்டுவந்தது வள்ளலாரின் முதல் ஐந்து திருமுறைத் தொகுப்பு. “ இந்த புத்தகம்
இனி உங்களுக்கே வைத்துக்கொள்ளுங்கள் “ என்று கூறி தந்து விட்டு போனார். அவர் தந்த
அந்த புத்தகம் தான் இன்றளவும் எனக்கு மேடைகளில் பேசப்போகும் போது
பயன்பட்டுக்கொண்டுள்ளது. நான்கூட இதனை தற்செயலாக நடந்த நிகழ்வுதான் என எண்ணி என்
மனைவியிடம் கூறிவிட்டு விட்டேன். ஆனால் அதன் பிறகு நடந்த பல சம்பவங்கள் வள்ளலார்
மீது எனக்கு அரு பயத்தையே ஏற்படுத்திவிட்டது எனலாம். அதில் ஒன்றை மட்டும் சொல்லியே
ஆக வேண்டும்.
சம்பவம் 2 :
நாங்கூர்
முருகேச முதலியார் தற்போது உயிருடன் இல்லை. அவரது மறைவு எனக்குத் துயரைத்தந்தது.
மரணம் நிகழ்ந்த பிறகு அவரது இறுதி ஊர்வலம் புறப்படும் வரை அவரது இல்லத்திலேயே
வாசலில் அமர்ந்திருந்தேன். இவரது உறவுக்காரர் செம்பனார்க்கோயில் S.M. பக்கிரிசாமி என்கிற பழுத்த
சன்மார்க்க அன்பர். வள்ளலாரின் திருஅருட்பாவில் மூழ்கியவர். முருகேச முதலியாருக்கு
முன்பே எனக்கு அறிமுகமான நல்ல உள்ளம் படைத்தவர். எனது எல்லாநிலை
முன்னேற்றத்திற்கும் ஆசி வழங்கி வரும் நல்ல ஆன்மா. எனக்கு குரு என்கிற இடத்தில்
ஒருவரை வைக்க வேண்டும் எனில் அவரைத்தான் வைப்பேன். எங்கள் வீட்டு மாடியில் பலநாள்
இரவு ஒரு மணி கடந்து இரண்டு மணி வரை கூட திருஅருட்பா பற்றியும், வள்ளலார்,
மாணிக்கவாசகர், திருமூலர், திருவள்ளுவர், பட்டினத்தார், நாயன்மார்கள் என்று
பேசிக்கொண்டிருப்போம். எங்கள் இருவருக்கும் இடையே சில நேரம் வாதம் கூட நடைபெறுவது
உண்டு. அப்போது இருவரின் குரலும் ஓங்கி ஒலிக்கும் போது தூங்கிக் கொண்டிருக்கும்
எனது மனைவி வந்து “ ஏன் சண்டைப்போட்டுக்கொள்கிறீர்கள்”, இரவு நேரத்தில் அக்கம்
பக்கத்தில் தூங்குகிறவர்கள் நீங்கள் சண்டைபோடுவதாக நினைப்பார்கள். மெதுவாக
பேசுங்கள் என்று கூறிச்செல்வார். ஆனாலும் வாய்சண்டை அல்ல அது. பல விஷயங்களை,
செய்திகளை அந்த பெரியவர் S.M.P. சாமி அவர்களிடம் இருந்து
பெறுவதற்கு நானே ஏதாவது சந்தேகம் கிளப்புவேன். அவரிடம் இருந்து பாடல்கள் தங்கு
தடையின்றி வரும்.
வள்ளலாரிடம் சீடராக இருந்தவர் காரணப்பட்டு கந்தசாமி
என்ற சன்மார்க்க அன்பர். தமது இருபதாவது வயதிலேயே வள்ளலாரிடம் ஐக்கியமாகி அவரது
அணுக்கத் தொண்டராக சீடராகப் பல்லாண்டுகாலம் இருந்தவர். வள்ளலார் மறைவுக்குப்
பிறகும் பல ஆண்டுகள் வடலூரில் வாழ்ந்து சன்மார்க்கத் தொண்டுபுரிந்த சான்றோர். இந்த காரணப்பட்டு
கந்தசாமியிடம் பாடம் கேட்டவர், பொறையாறு சிதம்பர சுவாமிகள். பொறையாறு சிதம்பர
சுவாமிகளுக்கு வள்ளலார் குறித்த பல செய்திகளை காரணப்பட்டு கந்தசாமி செவிவழி
செய்தியாக சொல்லியுள்ளார்கள். இந்த பொறையாறு சிதம்பர சாமிகளிடம் பாடம் கேட்டவர்
திரு.S.M. பக்கிரிசாமி என்கிற S.M.P. சாமி அவர்கள். செம்பனார்கோவில் இவரது ஊர். S.M.P. சாமி வீட்டில் பல
வருடம் பொறையாறு சிதம்பர சாமிகள் தங்கி இருந்துள்ளார். ஒரு குருவாக இருந்து S.M.P. சாமிக்கு அருட்பா,
சுத்த சன்மார்க்கம், மரணமிலாப் பெருவாழ்வு என்று நிறைய பாடம் சொல்லித்தந்துள்ளார்.
வள்ளலார் நிகழ்த்திய பல அற்புதங்களை S.M.P. சாமியிடம் தமது குரு தெரிவித்ததாக சொல்லியுள்ளார்கள்.
அவைகளை S.M.P. சாமி என்னிடம் சொன்னார்கள். அவைகளில் சில எந்த புத்தங்களிலும் படிக்க
முடியாதவைகள்.
நானும் S.M.P. சாமி அவர்களும் பல சன்மார்க்க கூட்டங்களுக்கு சென்று 2000 லிருந்து 2004 ஆம் ஆண்டு வரை
பேசியுள்ளோம். 2001, 2002, 2003 ஆம் ஆண்டு தைப்பூசங்களில் மேட்டுக்குப்பத்தில் வீரையாபிள்ளை தோற்றுவித்த
சங்கமான சமரச வேத சன்மார்க்க சங்கத்தில் நாங்கள் இருவரும் பேசியுள்ளோம். சில
நேரங்களில் தமக்கு ஒதுக்கப்படும் நேரத்தையும் எனக்கு தந்து, “ இப்போது ஒரு
சன்மார்க்க இளம்புயல் வீசப்போகிறது நீங்கள் அவர் பேச்சைக் கேட்க வேண்டும்” என்று
சொல்லி எனக்கு பேச வழிவிட்டு என் எதிரே அமர்ந்து விடுவார். அப்படி ஒரு பழக்கம்
எங்கள் இருவருக்கும். அவரிடத்திலே நான் எனது கிளினிக்கிலே பல முறை
அளவளாவியுள்ளேன். அப்போது 2003 ஆம் ஆண்டு இறுதியில் என்னிடம் ஒன்று கூறினார்கள். நான் வள்ளலாரை நம்புவது உண்மை
எனில் என் உயிர் ஒரு பூச நாளில்தான் பிரியும் என்று கூறினார்கள். அப்போது உடல்நிலை
தளர்ந்த நிலையில் இருந்தார்கள். ஆனாலும் படுத்த படுக்கை ஆகிவிடாமல் இறுதிவரை கணீர்
குரலில் பேசி நன்றாக நடமாடிக் கொண்டிருந்தார்கள். 2004 ஆம் ஆண்டு தைப்பூசத்திற்கு
ஒருவாரத்திற்கு முன்பு இந்த ஆண்டு பூசத்திற்கு போகலாம் வருகிறீர்களா? சேர்ந்து
போகலாம் என்று கேட்டேன். “ தம்பி இந்த முறை நீ மட்டும் போய் நன்றாக வழக்கம் போல
சமரச வேத சன்மார்க்க சங்கத்திலும், சமரச சுத்த சன்மார்க்க சங்கத்திலும்
பேசிவிட்டுவா. சுத்த சன்மார்க்கத்தை வலியுறுத்தி பேசு. வள்ளலார் மற்ற அருளாளர்களிடமிருந்து
தனித்து நின்று வேறுபட்டவர், உயர்ந்தவர் என்பதை மட்டும் மறக்காமல் பேசு”
என்றார்கள். நானும் 2004 ஆம் ஆண்டு அதிகாலை பிப்ரவரி 5ஆம்
நாள் தைப்பூசத்திற்கு என் வீட்டில் இருந்து இரண்டு நண்பர்களுடன் எனது காரில்
புறப்பட்டேன். வடலூரில் ஜோதி தரிசனம் பார்த்து விட்டு மேட்டுக்குப்பத்தில் மாயவரம்
சுத்த சன்மார்க்க சங்கத்திலும், சமரச வேத சன்மார்க்க சங்கத்திலும் சொற்பொழிவு
நிகழ்த்திவிட்டு இரவு 7.30 மணி அளவில் வீடு திரும்பினேன். வீட்டிற்குள் நுழைந்தவுடன் என் மனைவி ஹேமலதா “
என்னங்க S.M.P. சாமி அய்யா அவர்களின் வீட்டில் இருந்து போனில் பேசினார்கள். மாலை அவர் உயிர்
பிரிந்ததாம்” என்று சொன்னபோது எனக்கு வெலவெலத்து விட்டது. கண்களில் இருந்து
கண்ணீர் ஊற்றெடுத்து என் உடல் எல்லாம் நனைந்தது. என் குருவாக விளங்கிய ஐயா 2004 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் நாள் குருவாரம்,
வியாழக்கிழமை, பெளர்ணமி திதி, தைப்பூசத்தன்று செம்பனார்கோவிலில் தனது வீட்டு
வாசலில் சாய்வு நாற்காலியில் அமர்ந்தவண்ணம் தெருவில் அக்கம் பக்கத்தில்
இருந்தவர்களை அழைத்து “ இன்று தைப்பூசம் என்னை இராமலிங்கசுவாமி அழைத்துப்போகும்
நேரம் வந்து விட்டது” என்று கூறியுள்ளார்கள். அன்று வடலூரில் மாலை ஜோதி தரிசனம்
காட்டிக்கொண்டிருத்த வேளை S.M.P. சாமி அவர்களின் உயிர் அடங்கி விட்டது. இது என்னை மிகவும் பாதித்த சம்பவம்.
மறுநாள் காலை அவர் வீட்டிற்கு சென்று அவரது பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்தினேன்.
இறந்து போனவர் மாதிரியே இல்லாமல் முகம் எப்போதும் காட்சி தரும் பொலிவுடனே திகழ்ந்தது.
இரண்டு அருட்பாவை அவர் உடலின் பக்கத்தில் நின்று மனதுக்குள் சொல்லிவிட்டு அவரது
அருமை மனைவிக்கு ஆறுதல் சொல்லி அடக்கம் செய்யும் வரை இருந்துவிட்டு வந்தேன். எனது
அம்பறாத்துணியிலிருந்து என்கிற கவிதைத் தொகுப்பில் அவரைப்பற்றி எழுதிய கவிதையை
பிரசுரம் செய்து வெளியிட்டேன். இன்றும் நான் சில முக்கிய சன்மார்க்க
கூட்டங்களுக்கு பேச செல்லும் முன்பு, குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், பிரான்சு
முதலிய இடங்களில் நடந்த மாநாட்டு நிகழ்வுகளில் பேசபோகும் முன்பு S.M.P. சாமியை மனதில்
நினைப்பேன். வள்ளலாரிடம் பாடம் கேட்டவர் காரணப்பட்டு கந்தசாமி. காரணப்பட்டு கந்தசாமியிடம்
பாடம் கேட்டவர் பொறையாறு சிதம்பர சாமிகள். அவரிடம் பாடம் கேட்டவர் S.M.P. சாமி. இவரிடம்
நான் பாடம் கேட்டுள்ளேன் என்பது எனக்கு
கிடைத்த பெருமை. இதுவும் ஒரு வாழையடி வாழை மரபுதானோ? அய்யா வைகுண்டர் பக்தர்கள்
இது போன்ற பல சம்பவங்களை தங்கள் வாழ்க்கையில் சந்தித்து இருப்பர்.
செம்பனார்கோவில் அருட்பா முரசு, அருளியற் செம்மல் திரு. எஸ். எம். பக்கிரிசாமி
அவர்களின் படத்திறப்பு விழாவில் எனது இரங்கல் கவிதை
செம்பொன்னார் கோயில்
சன்மார்க்கம் தழைத்தோங்க
வழிவிட்ட வாயில்
செம்பை சன்மார்க்கம் வேர் விட்ட புண்ணிய பூமி
செய்தவத்தால் இங்குப் பிறந்தார் எஸ். எம். பி. சாமி
செம்பைச் சன்மார்க்கச் சங்கத்தின் ஆணிவேரான
எஸ். எம். பி. சாமி ஆன்மா அடங்கியுள்ளது
விழுதுகளை வேர்விட வைத்துவிட்டு
ஆணிவேர் அடங்கியுள்ளது
ஆயுளின் பெரும்பகுதியை
அருட்பாவுக்கென்றே ஆட விட்டவர்.
ஆறாயிரம் அருட்பாக்களையும் ஓயாது
சிந்தையிலே ஓட விட்டவர்
என்னைப்போல பலபேரை
ஞானமார்க்கத்தில் நாடவிட்டவர்
சன்மார்க்க உலகில் எல்லோருக்கும் இவர் அத்துப்படி
சாமி நடந்து வந்த பாதையோ வள்ளலாரின் பத்துப்படி.
இவர் பேச்சிலே சாதி மத சமயங்கள் ஓடுமடி
என்பும் தோலுமே உடலில் இருக்கும் என்றாலும்
அன்பும் அறிவுமே அதனுள் இருக்கும்.
சமரசம் போற்றிய சமத்துவ ஞானி
சன்மார்க்கி பலருக்கும் இவரே ஏணி
கல்லையும் கனியாக்கும்
சொல்லாற்றல் கொண்டவர்
அல்லும் பகலும்
ஆறாம் திருமுறையைக் கண்டவர்
சொல்லாலும் செயலாலும்
சிறுநெறியை வென்றவர்
மூச்சுக்கு மூச்சு உயிர் இரக்கம்
முழு மூச்சாய் மூடநம்பிக்கை எதிர்ப்பு
பேச்சுக்குப் பேச்சுப் புலால் மறுப்பு.
சிந்தனையில் எப்போதும் திருஅருட்பா
சிந்துகின்ற மொழியெல்லாம் தித்திக்குமப்பா.
செம்பனார்கோயில் எஸ்.எம்.பி. சாமி
அன்பையும் அறிவையும் பொழிந்த சாமி
அனைவர் கருத்துக்கும் ஆமாம் போடாத சாமி
இவர் இருக்கும் இடத்தில் அருள் இருக்கும்
எவருக்கும் இவர் உரையில் தெருள் பிறக்கும்
அருளன்றி ஓரணுவும் அசையாது என்ற
அய்யா வள்ளலாரின் உயிர்க்கொள்கையை
அன்றாடம் இவர் சொல்லும் வேதமாகும்
மனித குலம் வாழ்வதற்கும் மன்பதை செழிப்பதற்கும்
தனிப்பெருங்கருணை அவசியம் என்பது இவர் வாதமாகும்
உடல் இளைத்தாலும் தளராத உள்ளத்திலிருந்து
கடல் போல பெருக்கெடுக்கும் அருள் வெள்ளம்
லட்சத்தில் ஒருவர் கூட இவர் போல் இல்லை
லட்சியத்தில் இவர் போல் யாருமில்லை
இவர் வீட்டு திண்ணை கூட
வள்ளலாரியம் பேசும்
அமர்ந்திருந்த ஆசனம் கூட
அருட்பாவையே உச்சரிக்கும்
வள்ளலார் வாழ்ந்த நாட்களில் கூட
இப்படி ஒரு சீடரைக் கண்டிருக்க மாட்டார்.
இராமலிங்க சாமிக்குக் கிடைத்த
ஈடு இணையற்ற சாமி நம் சாமி
இனி எப்போது இவர்போல காணுமிந்த பூமி.
நெஞ்சமெல்லாம் இராமலிங்கர்
நினைவெல்லாம் அருட்பா.
திருமந்திரம், திருவாசகம், திருக்குறள்
இவைகளில் இவர் மூளைக்குள் பதியாத
வரிகளே இல்லை.
தேகமோ தேய்ந்து தேய்ந்து மெலிதானது
வசீகரக் குரலோ மேலும் மேலும் வலிதானது.
அருட்பாக் கடலை நான் தூரநின்று பார்த்தபோது
என் கைப்பிடித்து அதில் இறக்கி விட்டவர்.
பத்தொன்பதாம் நூற்றாண்டில் வள்ளலார் துவக்கினார்
இருபதாம் நூற்றாண்டிலிருந்து இருபத்து ஓராம் நூற்றாண்டிற்கு
சுத்த சன்மார்க்க பொற்றோரை இழுத்துவந்துள்ளார் சாமி.
என்னிடத்தில் என்றைக்கும் வற்றாத அன்பு உண்டு.
எவராயினும் பரிவுகாட்டும் பண்பும் உண்டு.
அவர் உயிர் அடங்கினாலும்
உயர்ந்த எண்ணங்கள் அடங்கா.
எனக்குள் சாமியின் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கும்
அவைகளைச் சுமந்தவாறு என் பயணம் தொடரும்
அந்த எண்ணங்களுக்கு அழிவு ஏது?
எஸ். எம். பி. சாமிக்குத்தான் சாவு ஏது?
அதனால் தான் வள்ளலாரும்
என்மார்க்கம் இறவாத சன்மார்க்கம் தோழி என்றார்.
ஞானிகள் உடல் அடங்கினாலும்
உணர்வுகள் அடங்கா.
அது வாழையடி வாழையென வந்து
கொண்டிருக்கும்
சுத்த சன்மார்க்கத்திற் கென்றே இவர் பிறந்தார்
சுயமரியாதை இழக்காது கடைசிவரை வாழ்ந்தார்
கிழமாகக் கிழமாக அருட்பழுத்த
பழமானார்.
சன்மார்க்கம் என்ற நெடிய வரலாற்றில்
அசைக்க முடியாத மைல்கல் ஆனார்.
இவரது அறிவுத் தேடல்களுக்குச்
சத்திய ஞானசபையின் திருக்கதவுகள்
திறந்து விடப்பட்டன.
இவருக்கு நெற்றிக்கண் திறக்கப்பட்டது
முற்றிய அருள்நிலையில் மூச்சுப்பிரிந்தது தைப்பூசத்தில்
வெற்றிக்கொடி நாட்டிவிட்டார் எங்கள் சாமி
விழிப்புணர்வு நிலையிலேயே வள்ளல் பெருமான்
திருவடியை சேர்ந்தார் பூச நன்னாளில்
வாழ்க அவர் புகழ் !
=============================================================================
16. தத்துவக்
கொட்டகையும், சத்தியஞான சபையும்
சாமித்தோப்பு அம்பலப்பதியில் ஒரு குடத்திற்குள் 96 கைகள்
இணைதிருந்திருப்பது போன்ற ஒரு தத்துவக் கொட்டகையை உருவாக்கியுள்ளார் அய்யா
வைகுண்டர். ஆன்மிகப் பயணம் என்பது கடவுளை புறத்தே தேடுவதை விட அகத்தே தேடுவதே
உண்மையானது என்பதை உணர்த்தும் வகையில் இது அமைந்துள்ளது எனலாம்.
“எம்குலம் என் இனம் என்ப
தொண்ணூற்றாறு
அங்குலம் என்றருள்
அருட்பெருஞ்ஜோதி “.
என்பது வள்ளலாரின் அருட்பெருஞ்ஜோதி அகவல். எம்முடைய குலம், எம்முடைய
இனம் என்பது எல்லோருக்கும் ஒன்றான இந்த 96 தத்துவக் கூறுகளே என்பதே வள்ளலாரின்
தத்துவம். 96 அங்குலத்தை 96 விரற்கடை என்று சொல்லி எல்லோருக்கும் அவரவர் கையால்
எட்டு சாண்களே இருப்பர் என்றும் உயர்ந்த குலம் என்பதால் அதற்கு அதிகமாகவோ, தாழ்ந்த
குலம் என்பதால் அதற்கு குறைவாக இருக்கமாட்டார்கள் என்கிற சமத்துவத்தைக் காட்ட
சொல்லப்பட்டது என்றும் கருத்து சொல்வாரும் உண்டு. ஆனால் சைவசித்தாந்தம்
சுட்டிக்காட்டும் தத்துவங்களை தம் அருட்பாவிலும் அருட்பெருஞ்ஜோதி அகவலிலும்
வள்ளலார் சுட்டிக்காட்டத் தவறவில்லை என்பதை நினைவில் வைக்க வேண்டிய ஒன்று.
தத்துவம் அனைத்தும் தனித்தனி கடந்தோம்
தத்துவாதீத நிலைமேல்
சித்தியல் முழுதும் தெரிந்தனம்
அவைமேல் சிவநிலை
தெரிந்திட சென்றனம்
ஒத்த அந்நிலைக்கண் யானும்
எம் உணர்வும் ஒருங்குற
கரைந்து போயினோம்
அத்தகை உணர்ந்தோர் வழுத்த நின்று
ஓங்கும் அருட்பெருஞ்ஜோதி என் அரசே
என்று பாடுகிற பாடலில் தத்துவங்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கடந்து
சென்றதாகவும் சிவத்தை, மலமற்ற, ஆணவமற்ற, ஆன்ம சொரூபத்தை நெருங்கி அனுபவித்ததை
சிவநிலை அனுபவமாக வள்ளலார் காட்டுகிறார்.
96 தத்துவங்கள்:
சுத்த மாயா தத்துவம் (சிவ தத்துவம்) -5
சிவம்
சத்தி
சதாசிவம்
ஈசுவரம்
சுத்த வித்தை
அசுத்த மாயா தத்துவம் -7
காலம்
நியதி
கலை
வித்தை
அராகம்
புருடன்
மாயை
ஆன்ம தத்துவம் 24 அவை
1.மனம்
2.புத்தி அந்தக்கரணங்கள் –4
3. சித்தம்
4. அகங்காரம்
1.மெய்
2.வாய்
3. கண் ஞானேந்திரங்கள் – 5
4. மூக்கு
5. செவி
1.கை
2.கால்
3. வாய் கன்மேந்திரயங்கள் – 5
4.எருவாய்
5.கருவாய்
1.சுவை
2.ஒளி
3.ஊறு தன்மாத்திரைகள்
– 5
4.ஓசை
5.நாற்றம்
1.பிருதிவி
2.அப்பு
3.தேயு பஞ்சபூதங்கள்
– 5
4. வாயு
5.ஆகாயம்
மேற்கூறிய முப்பத்தாறு தத்துவங்களின்
காரியங்கள் அறுபது, அவற்றை தாத்துவீகங்கள் என்பர். இந்த அறுபதையும், முப்பத்தாறு
தத்துவங்களையும் பொதுவாக சேர்த்து தத்துவங்கள் 96 என்பர். தாதுவீகங்கள் அறுபது
வருமாறு...
96 தத்துவங்கள் குறித்து விளக்கம்
வேண்டுவோர் திருவாவடுதுறை ஆதினத்தின் வெளியீடான. சைவசித்தாந்த அடிப்படைக்
கொள்கைகள் (தடைகளும் விடைகளும்) என்ற நூலில் இருந்து படித்து தெரிந்து கொள்ளலாம்.
வள்ளலாரின் சத்தியஞான சபையே பல்வேறு
உடற்கூறு தத்துவத்தின் அடிப்படையில் எழுப்பப்பட்ட பொதுச்சபை என்பது அனைவரும்
அறிந்த ஒன்று. சத்திய ஞான சபையின் தத்துவங்களை அறிய விரும்புவோர் திண்டுக்கல் சரவணானந்தா எழுதியுள்ள சத்தியஞான சபை
– தத்துவ விளக்கம் என்ற நூலைப் படித்தால் மேற்கண்ட 96 தத்துவங்களை ஞான சபையில்
எந்த நிலையில் குறியீடாக வள்ளலார் காட்டியுள்ளார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.
சத்திய ஞானசபையில் ஒவ்வொரு ஆண்டும் தைப்பூச நாட்களிலும், மாதப்பூச
நாட்களிலும் ஏழு திரைகளை விலக்கி சோதி வழிபாடு நடந்துவருகிறது. ஒவ்வொரு
வண்ணத்திரைக்கும் ஒரு பொருள் உண்டு.அதாவது இந்த உலக வாழ்க்கையில் உழன்று கொண்டு
இருக்கிற நாம், இறைவனாகிய பேரறிவைக் கண்டறிய ஏழுவிதமான தடைகள் உள்ளன. அவையாவன....
கருப்புத்திரை - ஆணவம்
நீலத்திரை - உலக ஆசை
பச்சைத் திரை - மண், பொன், பெண் அல்லது ஆண் ஆசைகள்
செம்மைத்திரை - தீய எண்ணங்கள்,
இறைச்சிந்தனைத் தடுப்பு
பொன்மைத் திரை - நன்மை தீமைகளை சமமாகப் பாவிக்கும்
பக்குவம் இல்லாமை
வெண்மைத்திரை -
தேகம், போகம், சீவன் இந்த மூன்று
உரிமைகளையும் இறைவைனிடம்
ஒப்படைக்க இயலாமை
( அதாவது
தேக சுதந்திரம்,
போக சுதந்திரம்,
சீவசுதந்திரம்)
கலப்புத்திரை - மேல்கண்ட ஆறுதிரைகளின் எச்சங்கள்
இந்த ஏழுவித தடைகளையும் நாம் முயற்சி
செய்து நீக்கிவிட்டால், இறைவனாகிய பேரறிவைக் கண்டறிய முடியும், என்பது தான் இந்த
சோதி வழிபாட்டின் பொருள். நம்மை நாமே தூய்மைப்படுத்திக்கொள்வது தான் இதன்
குறிக்கோள்.
வைகுண்டசுவாமிகள் பூப்பதி, முட்டப்பதி,
அம்பலப்பதி, தாமரை குளம்பதி முதலிய இடங்களுக்கு சென்று பல்வேறு சமுதாய
சீர்திருத்தங்களை ஏற்படுத்தினார். 1851ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் தேதி
மண்ணுலகைவிட்டு மறைந்தார். வைகுண்டரின் தலைமைப் பதியாக இன்று சாமிதோப்பு
விளங்குகிறது.
இன்று அய்யா வைகுண்டசாமி வழிபாட்டு
ஆலயங்கள் இந்தியா முழுவதும் வேராயிரம் பெற்ற விழுதுகளாய் படர்ந்து பரவி வருகிறது.
புறவழித் தேடலை விட அகவழித் தேடலில்
இறைமையைக் கண்டு பேரானந்தம் அடைந்தவர்களாக வைகுண்டரும் வள்ளலாரும் விளங்கியது.
நமக்குக் கண்கூடாகத் தெரிகிறது. அருளியல் வாழ்வில் உள்ளொளியைப் பெருக்கி
ஆன்மிகப்படி நிலையில் மிக உயர்ந்த நிலையும், அடைந்தவர்களாக விளங்கியதுடன் சமுதாய
வாழ்வில் சாதி பேதமற்ற சமத்துவ சமுதாயத்தையும் உயிர்கள் அனைத்திற்கும் இன்பம்
வழங்கி இதம்புரியும் கோட்பாட்டை நிலைநிறுத்திய பெரியார்களாக இருவரும் பத்தொன்பதாம்
நூற்றாண்டில் திகழ்ந்துள்ளனர். இரண்டுபேர் செய்ததும் பக்தி உலகிலும் சரி, சமுதாய
வாழ்விலும் சரி எவரும் நினைத்துப்பார்க்க முடியாத புரட்சியே.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------வைகுண்டர்
வகுத்த அறங்கள்
1.வழிப்போக்கர்களுக்கு சத்திரங்கள்
கட்டி வைப்பது.
2.கல்வி கற்கும் ஏழைப் பிள்ளைகளுக்கு
உணவு வசதி அளிப்பது.
3.அறுவகை சமயத்தார்க்கும் உணவு
கொடுப்பது.
4.பசுவுக்கு புல்லும், வைக்கோலும்
கொடுப்பது.
5.சிறைச்சாலையில் துன்புறுவோர்க்கு
அன்னமிடுதல்.
6. வீடு தேடி வரும் ஏழைகளுக்கு பிச்சை
இடுதல்.
7.தின்பண்டம் கொடுப்பது.
8.அறநெறி மேற்கொண்டு வாழும்
துறவிகளுக்கு பசியமர்த்துவது.
9.அனாதை குழந்தைகளை எடுத்து வளர்ப்பது.
1௦.அனாதை பிணங்களை எடுத்து அடக்கம்
பண்ணுவது.
11. தாய்மை பேறுபெற்ற பெண்களுக்கு உதவி
செய்வது.
12. வாசனைப் பொருட்களை கொடுப்பது.
13. நோயாளிகளுக்கு மருந்துகள் கொடுத்து
உதவுவது.
14.துணிவெளுக்கும் தொழிலாளர்களுக்கு
உதவி செய்வது.
15. நாவிதர்களுக்கு உதவி செய்வது.
16. ஏழைப் பெண்களுக்கு பொன் தானம்
செய்வது.
17. ஏழைகளின் கண்நோய்க்கு
மருந்துகொடுத்து உதவுவது.
18. தலைக்கு எண்ணெய் கொடுப்பது.
19.திருமணம் ஆகாத ஏழைகளுக்கு திருமணம்
செய்து வைப்பது.
2௦. பிறர் துன்பம் தீர்ப்பது.
21. தண்ணீர் பந்தல் வைத்து உதவுவது.
22.மடம் கட்டி சமய அறிவை வளர்ப்பது.
23.சாலைகள் அமைத்துக் கொடுப்பது.
24. சோலைகளை உண்டாக்கி வைப்பது.
25.பசுமாடுகள் உடம்பைத்
தேய்த்துக்கொள்ள தூண்களை நிறுவுவது.
26.மிருங்களுக்கு உணவளிப்பது.
27.சுமைதாங்கி நிறுவுதல்
28. விலைகொடுத்து உயிரை காப்பாற்றுதல்.
29.கன்னிகாதானம் செய்து கொடுத்தல்.
3௦.குழைந்தைகளுக்கு பால் வழங்குதல்.
31.பார்வையற்றோருக்கு வழிதுணை புரிதல்.
32.துணிகள், ஆடைகள் தானம் செய்தல்.
மேற்கொண்ட அறங்களில் பெரும்பாலானவைகளை வள்ளலாரும்
வற்புறுத்தியுள்ளார். தெரிந்துகொள்ள விரும்புவோர் வள்ளலாரின் மனுமுறைகொண்ட வாசகம்
எனும் நூலில் தெரிந்துகொள்ளலாம்.
நிழல் தாங்கல்கள்
பகவான் வைகுண்ட சுவாமிகளின் அய்யா
வழியை பின்பற்றும் அன்பர்கள் தாங்கள் வழிபடும் தலங்களாக சாமித்தோப்பு பதி,
தாமரைக்குளம் பதி, பூப்பதி, அம்பலப்பதி, முட்டப்பதி ஆகிய ஐந்து பதிகளையும்
கருதுகிறார்கள். இந்த ஐந்து பதிகளிலும் முக்கிய பதியாக விளங்குவது சாமித்தோப்பு
பதியாகும். (பதி என்பது வைகுண்டர் ஆலயத்தைக் குறிக்கும்).
பெரும்பாலான “அய்யாவழி” அன்பர்கள்
ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் முதல் ஞாயிற்றுக்கிழமையில் இந்த பதிகளுக்கு சென்று
வழிபடுவதைத் தங்கள் கடமையாகக் கொண்டுள்ளனர்.
இந்த
ஐந்து பதிகளைத் தவிர பல நிழல்தாங்கல்களும் பல்வேறு இடங்களில் உள்ளன. (நிழல்
தாங்கல்கள் என்பது வைகுண்டர் ஆலயத்தின் சார்பு ஆலயங்களை குறிக்கும்). திருநெல்வேலி,
கன்னியாகுமரி, தூத்துக்குடி, மாவட்டங்களில் இந்த நிழல்தாங்கல்கள் ஏராளம் உள்ளன.
தற்போது சென்னை, கோவை, மதுரை உள்பட தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் பல நிழல்
தாங்கல்கள் உள்ளன. இந்த நிழல்தாங்கல்களை “இணத் தாங்கல்கள்” என்றும் அழைப்பார்கள்
கடம்பக்குளம், அகஸ்தீஸ்வரம், பாலூர்,
கண்டவிளை, செட்டிக்குடியிருப்பு, பாம்பன்குளம், வடலிவினை போன்ற இடங்களில் உள்ள
நிழல் தாங்கல்களை பகவான் வைகுண்ட சுவாமிகள் நேரில் சென்று நிறுவியதாக ஆதாரங்கள்
கூறுகின்றன. அந்த காலத்தில் மக்களின் உரிமைகள் மறுக்கப்பப்ட்டு, அடிமைகளாகவே
மக்களை நடத்தும் நிலை நிலவியது. எனவேதான் தனது சமுதாய சீர்திருத்த எண்ணங்களை
மக்கள் மத்தியில் பரப்ப உதவும் நன்னெறிக்கூடமாக நிழல்தாங்கல்களை அய்யா வைகுண்டர்
பயன்படுத்தினார்.
நிழல் தாங்கல்களில் உருவ வழிபாடு கிடையாது.எந்தவித சிலைகளும் கிடையாது.
மந்திரங்கள் கிடையாது. நிழல்தாங்கல்களில் “உம்பாஞ்சோறு” மிகவும் பிரபலமாக
கருதப்படுகிறது. உம்பாஞ்சோறு என கிராம மக்களால் அழைக்கப்படுவது “உண்பான்சோறு”
ஆகும். அதாவது பசித்திருப்போருக்கு தர்மமிட்டு அவர்கள் உண்பதற்காக வழங்கப்படும்
அன்னதானமே “உண்பான் சோறு” ஆகும்.
சாதி, சமய பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை கடந்து எல்லா மக்களும் இந்த “உண்பான்
சோறு” வழங்கப்படும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வது மிகவும் சிறப்பான ஒன்றாகும். இந்த
அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி இன்றும் எல்லா நிழல்தாங்கல்களிலும் நடைபெற்று
வருகிறது. ஆண்டுதோறும் குறைந்தபட்சம் ஒரு தடையாவது இந்த அன்னதான நிகழ்ச்சி
நடைபெறும். எல்லா பகுதிகளிலும் (நிழல்தாங்கல்களிலும்) பகவான் வைகுண்ட சுவாமிகள்
மக்களுக்கு போதித்த ‘உகப்படிப்பு’,’உச்சிப்படிப்பு’ போன்றவை வழிபாட்டில்
இடம்பெறுகின்றன. அருள்நூலில் இடம்பெற்றுள்ள உகப்படிப்பினை “யுகப்படிப்பு” என
அழைப்பார்கள். இதனை யுகப் பெருக்கு என்றும் குறிப்பிடுவார்கள். அதாவது இந்த
யுகத்திற்கு (காலம்) தேவையான வாழ்க்கை நெறிகளை பற்றியும் இந்த யுகத்தை ஆட்சி
செய்யும் பகவான் வைகுண்ட சுவாமிகள் பற்றியும், வைகுண்டர் தர்மபதி ஆட்சியை
உருவாக்குவதற்காக மேற்கொண்ட செயல்கள் பற்றியும் யுகப்படிப்பு தெளிவாகக்காட்டுகிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------------
அய்யா தனது வழியினருக்கு வகுத்த
விதிமுறைகள்
Ø பூஜை செய்யக்கூடாது
Ø பூசாரி வைத்துக்கொள்ளகூடாது.
Ø யாகம்,ஹோமம் கூடாது.
Ø மாயை உங்களை ஆளாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.
Ø எந்த தேர்த்திருவிழாக்களும் கூடாது.
Ø எந்த வழிபாடும் கூடாது.
Ø ஆரத்தி எடுப்பதும், ஏற்பதும் கூடாது.
Ø காணிக்கை பெறுவதும், கொடுப்பதும் கூடாது.
Ø மாலையிடுதல் கூடாது.
Ø யாரையும் உங்கள் காலில் விழ விடாதீர்கள்.
Ø லஞ்சத்தை ஏற்காதீர்கள்.
Ø ஆசைகளை துறந்துவிடுங்கள்.
Ø உண்மையாக இருங்கள்.
வள்ளலார் வகுத்துத் தந்த வழிபாட்டு
முறையும் இதுவே.
=============================================================================
.அய்யா வழி பக்தர்களின் அன்றாட
கடைமைகள்
அய்யா வழி மக்கள் தன் வாழ்வில் தினந்தோறும் பின்பற்ற வேண்டிய கடைமைகள் சில
வருமாறு:
1.
அதிகாலையில் துயிலெழுதல்.
2.
விழித்ததும் பல் தேய்த்து முகம் கழுவி, குளித்து விட்டு, நெற்றியில்
திருநாமம் அணிந்து 5 நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்து பின் 1 லிட்டர் தண்ணீர் பருக வேண்டும்.
3.
சற்று நேரம் அகிலத்திரட்டு மற்றும் அருள் நூல் படித்துவிட்டு பின்
பள்ளி, கல்லூரி பாடங்களை படிக்கவேண்டும்.
4.
தாய், தந்தையரை மதித்து நடக்கவேண்டும்.
5.
நம்மால் முடித்த வீட்டு வேலைகளை செய்து பெற்றோருக்கு உதவ வேண்டும்.
6.
நம்முடைய ஆடைகளை நாமே துவைத்து உடுத்துதல் வேண்டும்.
7.
கடமை தவறாமையும், காலந்தவறாமையும், மிகவும் முக்கியமானவை ஆகும்.
8.
நாம் வசிக்கும் இடம், படுக்கும் இடம், படிக்கும் இடம், அனைத்தையும்
சுத்தமாக வைக்க வேண்டும்.
9.
எல்லோரிடமும் அன்பாக நடந்திட வேண்டும்.
10.
ஒருபோதும் கோபங்கொள்ளக்கூடாது, கோள்வார்த்தைகள் பேசக் கூடாது.
11.
நம்மால் முடிந்த அளவுக்கு பிறருக்கு உதவிகள் செய்யவேண்டும்.
12.
பதிகள் மற்றும், தாங்கல்களில் கூட்டு வழிபாடு செய்ய வேண்டும்.
13.
நல்ல பழக்கங்களை கடைபிடிக்க வேண்டும்.
14.
நன்கு உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடல் ஆரோக்யத்தைப் பேண வேண்டும்.
15.
அன்பு, தர்மம், பொறுமை இவற்றைக் கடைப்பிடித்து வாழ்வின் வெற்றிப்படிகளை
எட்டிப்பிடிக்க வேண்டும். வள்ளலாரும் இதேபோன்ற அன்றாடக் கடமைகளை
சாதாரண நித்திய கரும விதிகளாகவும், பொது விதிகளாகவும் தமது உரைநடை நூலில் கூறியுள்ளார்.
புரட்சி என்னும் சொல் புரட்டு என்கிற
சொல்லிலிருந்து பிறந்ததாகக் கூறுவர். உலகில் மக்கள் மத்தியில் ஏற்கனவே இருந்த
நிலையை அடியோடு மாற்றி புரட்டிப்போட்டு புதியதொரு நிலையை எல்லோரும்
ஏற்றுக்கொள்ளும் ஏற்றத் தாழ்வற்ற நிலையை, மாற்றத்தைக் கொண்டு வருவதே புரட்சி
ஆகும். அப்படித்தான் பல கடவுள் உருவத்தை வைத்துக்கொண்டு பக்தி என்ற பெயரில்
பூஜைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள், திருவிழாக்கள் என்று கண் மூடித்தனமாக இருந்து
கொண்டிருந்த மக்களுக்கு ஆன்ம விழிப்பை ஏற்படுத்திய இவ்விரண்டு அருளாளர்களும்
மிகப்பெரிய புரட்சியாளர்களே. இவர்களுக்குப் பிறகே கேரளத்தில் நாராயண குரு தோன்றி
சமுதாய விடுதலைக்கு குரல் கொடுத்ததோடு மிகப்பெரிய மாற்றத்தையும் ஏற்படுத்தினார்.
நாத்திகரான தந்தைப்பெரியார் தோன்றி சமுதாய விடுதலைக்கு குரல் கொடுத்ததோடு
மிகப்பெரிய மாற்றதையும் ஏற்படுத்தினார். ஆகவே தமிழ்நாட்டில் இனவிடுதலை குறித்துப்
பேசுவோர் வைகுண்டரையும், வள்ளலாரையும் மறுத்தல் ஆகாது, கூடாது என்பதால் எவ்வளவோ
நூல்கள் இவ்விரண்டு பெரியாரையும் குறித்து வந்திருந்தாலும் அவைகளுடன் இன்னொன்றாக
இதனை எழுதியுள்ளேன். என்னுடைய இதற்கு முந்தைய நூலான “வள்ளலாரும் பெரியாரும்”
என்கிற நூல் தமிழக அரசின் விருதைப்பெற்றது. அதற்கு மக்களிடம் நல்ல வரவேற்பு
இருந்தது. நாத்திதகத்தையும், ஆத்திகத்தையும், அறிவு, அன்பு அடிப்படையில்
ஒன்றிணைத்து அதனை எழுதினேன். இப்போது தமிழகத்தின் தென்கோடியில் தோன்றிய ஞானஒளியாம்
வைகுண்டர் மற்றும் தமிழகத்தின் மையப்பகுதியில் பிறந்தாலும் தமிழ்நாட்டின்
வடக்குப்பகுதியில் வாழ்ந்து உலகமெங்கும் சன்மார்க்க ஒளியைப் பிரகாசமாகப் பரப்பிய
சுத்தசன்மார்க்க ஞாயிறையும் ஒன்றிணைத்து இந்நூலை ஆர்வத்தின் காரணமாகச்
செய்துள்ளேன். அய்யா வழி பக்தர்களும் வள்ளற்பெருமான் பக்தர்களும் பரந்த
மனப்பாங்கோடு ஏற்றுக்கொள்வர் என்ற நம்பிக்கையுடன் முடிக்கிறேன்.
அருட்பெருஞ்ஜோதி!
அருட்பெருஞ்ஜோதி!
தனிபெருங்கருணை!
அருட்பெருஞ்ஜோதி!
இந்த
நூல் நிறைவு பெற்றது!! நன்றி!!!
==========================================================================